9/06/2011

மாணாக்கரின் பக்குவாபக்குவ நிலைகள்

உயர்தர மாணாக்கன் - அன்னப் பறவையும் பசுமாடும் போன்றவன்.

உயர்தர மாணாக்கனின் அறிவானது, அன்னப் பறவையின் ஆற்றல் கொண்டதாய், நீர் கலந்த பாலில் நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உட்கொள்ளும் அன்னப் பறவை போல், நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றனவற்றைப் புறந்தள்ளுவதாய் அமைந்திருக்கும்.

வயிறாறப் புசித்த உணவைத் தனிமையில் படுத்து அசை போட்டு செறிமானம் செய்து கொள்வதோடு, அற்பமான புல்லைத் தின்று அருமையான பாலைத் தரும் பசுவைப் போல், ஆசிரியனிடம் கற்றதை மனதால் ஆய்ந்து பயின்று, பயின்றது பிறருக்கும் உதவும் வகையில் கற்றுக் கொடுக்கும் வல்லமை கொண்டவனே உயர்தர மாணவர் ஆவார்.

நடுத்தர மாணாக்கன் - மண்ணும் கிளியும் போன்றவன்

உழவன் இட்ட உரத்திற்குத் தக்கபடி பயனளிக்கும் நிலம் போலவும், சொல்லிக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்லும் கிளி போலவும் ஆசிரியன் கற்பித்த அளவில் தன்னறிவை விளக்கிக் கொள்பவன் நடுத்தர மாணாக்கன்.

அடித்தர மாணாக்கன் - ஓட்டைக் குடமும் வெள்ளாடும் போன்றவன்

நீரால் நிரப்பப்பட்ட ஓட்டைக் குடமானது ஒரு வினாடியில் நீர் யாவையும் ஒழுகவிட்டு வெற்றுக் குடமாவது போலவும், ஓரிடத்தில் நின்று மேயத் தெரியாமால் பற்பல செடிகளிலுக்கும் சென்று வாய் வைத்துத் திரியும் வெள்ளாடு போலவும், ஆசிரியனிடம் இருந்து கற்றதை எல்லாம் உடனுக்குடன் மறந்து விட்டு, ஆசிரியனைக் குறை கூறி விட்டுப் பல ஆசிரியர்களிடம் சென்று பலதையும் கேட்டு விதண்டாவாதம் செய்து காலத்தை வீண் செய்யும் பழக்கமுள்ள மாணவனே அடித்தர மாணவன் ஆவான்.

கீழ்த்தர மாணாக்கன் - எருமையும் பன்னாடையும் போன்றவன்

தெளிநீர் நிறைந்த குளத்தில் நீராடச் சென்ற எருமையானது, நீரைக் கலக்கிச் சேற்றினைப் பூசிக் கொள்வதோடு நில்லாமல் அந்நீரை மற்றவ்ருக்கும் பயன்பட விடாது செய்தல் போலவும், தான் உயிர்த்த இடத்தில் உற்பத்தியாகும் சுவையுறு மதுவைத் தேக்காது, அதிற்கிடக்கும் செத்தை குப்பைகளையே தன்னிடத்தில் இருத்திக் கொள்ளும் ப்ன்னாடை போலவும், ஆசிரியனின் அறிவையும் குழப்பி, சூழ்நிலைக் காரணங்களால் அவர் கூறியதில் இருந்த அல்லாதனவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொள்பவனே கீழ்த்தர மாணவன் ஆவான்.

மூலம்: http://pollachinasan.com/ebook3/3300/pdf/TM3276.pdf

No comments: