அதனால்தானோ என்னவோ, மெத்தப் படித்த அறிவாளிகளும் சரி, அறிவாளிகளால் நடத்தப்படும் ஊட்கங்களும் சரி, சாமான்யர்களை வெகுவாக தன் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி ஆட்டுவித்து, உலகெங்கும் தத்தம் கைவரிசையைக் காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு சாமான்யனும் இவற்றைத் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். குறிப்பாக எமக்கு அவசியமாகப்படுகிறது. அதனால் விழைந்ததே இன்றைய நமது ஆக்கம்.
பழைமைவாதிகள், இருக்கும் நிலையே பெரிது எனக் கருதுவோர். அவர்களை மிகுந்து சொல்வதானால் அடிப்படைவாதிகள் என்றும் குறிப்பிடலாம். புதுமையையோ, மாற்றத்தையோ இவர்களிடம் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இராது. அடிப்படையை மறந்து செயல்படுவதும், சில பல நேரங்களில் உசிதமாக இராது. பிற்போக்காகவும் இருக்கும். எனவே, ஆய்ந்து செயல்படுதல் அவசியமாகப்படுகிறது.
எமக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தையே இதற்குச் சான்றாக எடுத்துக் கூற விரும்புகிறேன். ஒரு பதிவர். பெரும்பாலும் வக்கிரங்களையே முதலீடாகக் கொண்டு எழுதி வருபவர். எனது அண்ணன் பதிவர் ஒருவரோடு அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, ”அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் ஒரு நல்லவன் அன்று” எனக் கடுமையாக அந்த வக்கிரப் பதிவர் குறித்துச் சொல்கிறேன். “பழமை, நீங்களே இப்படிப் பிற்போக்காகப் பேசலாமா? அப்படியான முகம் கொண்டவர்கள் எல்லாமே தீயவர்களா?” என இயல்பாக வினவினார். ஆயிரம் சம்மட்டிகள் ஒரு சேரத் தாக்கியது போல் உணர்ந்தேன். அது ஒரு பிற்போக்கான செயல்தான்!
நாம் எழுதும் பழந்தமிழ்ச் சொற்களைக் கண்டு மிகவும் கீழாக எண்ணுவோரும் உண்டு. அச்சொற்கள்தானே அடிப்படை? எனது தாய்வழி உறவினர் ஒருவர் அமெரிக்கா வந்திருக்கிறார். அவரைச் சந்திக்கும் வேளையில் , “என்ன பழமை? உங்கள் தாய்வழிப் பாட்டன் குடும்பம் எல்லாம் பெரிய பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். நீ இப்படித் தமிழ், தமிழ்ச்சங்கம் என இருக்கிறாயே?” என வினவினார். இன்றைக்கு, தமிழொடு ஒன்றி இருப்பவர்கள் கீழானவர் எனும் எண்ணம் மேட்டுக்குடியில் இருந்து வருவதைத்தான் இது குறிப்பிடுகிறது! நான் பழைமைவாதியா அல்லது அவர்கள் பழைமைவாதியா எனத் தெரியவில்லை?!
பற்றாளி(Enthusiastic)? இயற்கையில் ஒவ்வொரு மானுடமும், யாதோ ஒன்றின் மீது பற்றுக் கொண்டுதான் இருந்தாக வேண்டும். இல்லாவிடில், இந்தத் தரணியில் எதுவுமியங்காது. அப்படியாக, ஒருவனுக்கு பழந்தமிழ் விளையாட்டில் பற்றிருந்தால், பழந்தமிழ்க் கலையில் பற்றிருந்தால், அவன் விருப்பப்படி செய்யட்டுமே? ஏதோ புதுமையில் தாமொரு சக்ரவர்த்தி என நினைத்துக் கொண்டு அப் பற்றாளனை ஏகடியம் பேசுவதும் எள்ளி நகையாடுவதும் தம்மைப் பிற்போக்குக்குள் தள்ளிவிடுகிறது என உணர்வதில்லை எவரும்.
பற்றாளர்கள், தான் கொண்ட பற்றுக்கு பெருமை சேர்ப்பவராக இருத்தல் மிக முக்கியமானது.. அதீத பற்று என்பது ஒருவிதமான அறிவுமயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. அதைத்தான் தமிழ், மருட்சி என்ச் சொல்கிறது.
நண்பர் பொற்செழியன் மிக அருமையாகச் சொல்வார். “பழமை, தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டியது நம் கடமையும் பொறுப்பும் கூட. ஆனால், அதுவே கதியெனக் கிடந்தால் மற்றன மறைந்து நம் ஆற்றலானது ஒரு குறுக்கில் சுருங்கிவிடும். எனவே, உடற்பயிற்சி, பிடித்த தமிழ்க்கலைகள், பிறநாட்டு அம்சங்கள் எனப் பலதையும் கற்றுத் தேர்ச்சி கொள்ள வேண்டும் நாம்!” என்பார்.
பற்றாளன் தன்னைப் பேணுவது இன்றியமையாதது. அல்லாவிடில், மருளனாகிப் போய் தான் பற்றுக் கொண்ட அதற்கே சிறுமையளிக்கக் கூடிய நிலை வரக்கூடும்.
மருளாளி(Fanatic)? அதீதப் பற்றானது அறிவுக்கு மயக்கமளித்து, சிந்தனையைச் சீர் குலைக்கும். மாற்றுக் கருத்துகளை செவிமடுக்கவே மனம் அனுமதிக்காது. தான் கொண்டதே கொள்கை, சொல்வதே வேதம், தனக்குச் சரியென்று தோன்றுவதே மெய் என்றெல்லாம் பல எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இங்கேதான் பற்றாளர்கள் மிக மிக அவதானமாக இருத்தல் வேண்டும். உங்கள் கொள்கை மற்றும் பற்றுக்கு மாறானவர் உம்மை, “நீர் ஒரு மருளாளி, மருளாளி!!” எனச் சொல்லியே மருளாட்சிக்குள் தள்ள முற்படுவர். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், உடனடியாக அங்கிருந்து அகலுவது நலம் பயக்கும்.
எமக்கு மிகவும் வேண்டிய அன்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சீமான் அவர்கள் மீது பற்றுக் கொண்டிருந்தால் நாம் அதைக் குறை கூறலாகாது. ஆனால், அவரோ, சீமானின் கூட்டங்கள் மற்றும் சொல்வீச்சுகளைக் கேட்பதே வேலை என இருப்பதாக அவர்தம் குடும்பத்தார் கூறுகிறார்கள். அவரது செயலானது, அவர் மருளாட்சியில் இருக்கிறாரோ என நினைக்கவே தோன்றுகிறது.
குறிப்பாக, இன்னொன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சென்ற வார ஈறின் போது, ஒரு சில காணொலிகளைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. உரைவீச்சு என்கிற முறையில், அவர்கள் ஆற்றிய உரையில் மருளாட்சி கொடி கட்டிப் பறந்தது. ”வெட்டுவோம்; அதைச் செய்வோம்’ இதைச் செய்வோம்” என ஏகத்துக்குமாக. கிட்டத்தட்ட தீவிரவாதமாகவே தெரிந்தது.
தீவிரவாதி(Extremist)?? மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு, மனதளவில் செயல்படுவதுதான் தீவிரவாதம் என்பது. தமிங்கிலம் பாவிப்பவன் எவனானலும் மடையன் என நான் சொல்ல முற்பட்டால், நானும் ஒரு தீவிரவாதியே.
”நான் வாழ்ந்த ஊரில் தேசாய்களும், குப்தாக்களுமாக இருக்கிறார்கள். மண்ணை விற்று நிலமற்றவர்களாக நாம் இருக்கலாமா? இங்கே அமெரிக்காவில் இருக்கும் நாமாவது நம் தாயகத்து நிலங்களை விற்காது இருக்க வேண்டும்!” என ஒரு கூட்டத்தில் பேசி இருந்தேன். என்னை ஒரு தீவிரவாதி என்று விளித்துப் பெருமை தேடிக்கொண்டோர் சிலர். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?? தமிழ்ப் பற்றினை வசைபாடுவதில் அதீதப் பற்றுள்ளவர்கள். இன்னும் மேலே போய், கீழ்த்தரமான செயல்களைச் செய்து கொண்டிருப்பவர்தாம் அவர்கள்.
தமிங்கிலத்தில் பேசுவோர் எவரையும் நான் குறை கூறுவது கிடையாது. கிரந்தம் பாவிப்போரை நான் கிஞ்சித்தும் இடித்துரைப்பது கிடையாது. இயன்ற அளவு தமிழ் பாவிக்க முயலும் என்னை, அடுத்தவர் பெயரை எழுதும் போது மட்டும் கிரந்தம் பாவிக்கும் என்னை, தனித்தமிழ்த் தீவிரவாதி எனச் சொல்லி தீவிரவாதச் செயலுக்கு ஆட்படும் அவர்களை நாம் என்ன சொல்வது?!
மூன்று பேரையும் பார்ப்பனர்கள் தூக்கிலிடத் தவிக்கிறார்கள் என வசைபாட முயன்றார் நண்பர் ஒருவர். ”அப்படியானால் இராம்ஜெத்மலானி?” எனக் கேட்டதுமே, தீவிரத்தில் இருந்து விடுபடலானார் அவர்.
எப்படியாவது மூன்று பேரும் காப்பாற்றப்பட வேண்டும் என உருகிக் கண்ணீர் வடிக்கும் தொனியில் குழுமமொன்றில் எழுதுகிறார் ஒருவர். மாற்றுக் கருத்துக் கொண்டவராயினும், அவரது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது இவரது கடமை. ஆனால் இவரோ, நாகரிக மொழியில் மனதைக் கசக்கி மகிழ்கிறார். என்ன சொல்வது?! தீவிரவாதமும் பயங்கரவாதமும் உயிர்ப்பிக்கப்படுவது இவர்களால்தானே?!
பயங்கரவாதி(Terrorist)?? இதற்கு இலக்கணம் காணுவது மிகவும் கடினம். சமூக விரோதச் செயல்கள மூலம் தீவிரவாதத்தைத் திணிப்பது எனப் பொதுவாகச் சொல்லலாம். அதே வேளையில், பறிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்படாத மனித உரிமைகளுக்காக இடம் பெறும் போராட்டத்தைப் பயங்கரவாதம் எனச் சொல்ல ஐக்கிய நாடுகள் சபையானது அனுமதிப்பது இல்லை. எனக்குத் தெரிந்து பல பயங்கரவாதச் செயல்கள் உலகில் நடந்திருக்கிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு, நாளிதழ் அலுவலகம் எரிப்பு என்பதெலாம் பயங்கரவாதமே.
ஆக,பழைமைவாதி(Fundamentalist), பற்றாளி(Enthusiastic), மருளாளி(Fanatic), தீவிரவாதி(Extremist), பயங்கரவாதி(Terrorist) ஆகியோருக்குள் நிகழும் மாற்றங்கள், நூலிழையில் ஒரு நிலையிலிருந்து தன்னை மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியன. அவற்றுள் நமக்கான தெரிவைத் தேர்ந்து எடுப்பது நாமே. சில இடங்களில் நாம் நம்மைக் கட்டுப்படுத்துவது அவசியம். சில இடங்களில் சிலவற்றைப் புற்ந்தள்ளுவது உசிதம். சில இடங்களில் சிலவற்றை நிராகரிப்பது கட்டாயம்.
உம்மை நீயே தீர்மானிக்கிறாய்! உமக்குள் எவரையும் கிஞ்சித்தேனும் அனுமதியாதே!!
3 comments:
மிகத் தெளிவான அருமையான கருத்துகள். நன்றி பழமை. படிக்கவே ஆறுதலாயிருக்கிறது.
//நான் பழைமைவாதியா அல்லது அவர்கள் பழைமைவாதியா எனத் தெரியவில்லை?!//
நீங்க பழமை, பழைமைவாதி அல்ல. அவங்க சுயமாக சிந்திக்க மறுத்து (மறந்து?) சுயமற்று இருப்பதை சிறந்தது என்று மயக்கத்தில் இருப்பவர்கள். இவங்க பழைமைவாதி கணக்கில் வருவார்களா என தெரியவில்லை.
வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com/
Post a Comment