8/07/2011

எழிலாட்டமிடும் ஊசல்கள்

ஆர்வர்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தினரின் படைப்புகளில் ஒன்றான ஒத்திசை அலைகளினூடாய்க் கிடைக்கப் பெறும் எழிலார்ந்த காட்சியின் விவரணக் கட்டுரைதான் நமது இன்றைய இடுகையாகும். நல்லதொரு தகவலை நம்மோடு பகர்ந்து கொண்டு சக பதிவர் சித்ரா அவர்களுக்கு நன்றி!

பதினைந்து தனி ஊசல்கள், தனித்தனியாக தன் நீளம் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஒத்திசைவோடு இயங்கி, எவ்வாறெல்லாம் நிலையலை, இயங்கு அலை, வளையலை, நெகிழடி, கண்டபதம் ஆகியனவற்றைத் தருகிறது என்பதைக் காண்பிக்கும் வகையில் இப்படைப்பானது படைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு முழு சுழற்சியின் காலம் அறுபது விநாடிகள் கொண்டதாக இருக்கிறது. இந்த அற்பது விநாடிகளில் ஐம்பத்து ஒரு முறை தனி அலைவுகள் தரக்கூடிய வகையில், அதிக நீளம் கொண்ட தனி ஊசலின் நீளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக அடுத்த நீளம் குறைந்த தனி ஊசலில் தனி அலைவுகள் ஐம்பத்து இரண்டாக இருக்கும். இப்படி, நீளத்தில் குறைந்த அடுத்தடுத்த தனி ஊசல்களின் தனி அலைவுகள் ஒவ்வொன்றாக அதிகரிக்கப்பட்டு, கடை ஊசலான பதினைந்தாவது ஊசலின் தனி அலைவுகள் அறுபத்து ஐந்தாக இருக்கும்.

ஆட்டத்தின் துவக்கத்தில் ஒத்திசைவுடன் ஆடத்துவங்கிய தனி ஊசல்கள், மேற்கூறிய தன்னமைப்பினால் தன் அசைவில் தனித்தனியாக இயங்கத் துவங்கும். இடையில் ஒருங்கிணைந்த நிலையலை, இயங்கு அலை, வளையலை, நெகிழடி, கண்டபதம் எனச் சகலதையும் அளித்துவிட்டு, மீண்டும் அறுபதாவது விநாடியில் ஒத்திசைவுக்கு வந்து சேரும்.

4 comments:

ஓலை said...

Wow. Beautiful.

vasu balaji said...

ஆகா! அழகு!!

ஈரோடு கதிர் said...

பிரமாதம்!

dondu(#11168674346665545885) said...

நான் முதலாமாண்டு இஞ்சினீயரிங் படிக்கையில் இதே ஒத்திசைவு பாடத்தில், இரு சம நீளமுள்ள தனி ஊசல்களில் ஒன்று ஆடினால் இன்னொன்றும் தானே ஆடும் என்பதை நிரூபிக்க ஆசிரியர் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு ஊசல் ஆட மாட்டேன் என்றது. பிறகு முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த முருகேசன் எனக்கு விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

“அது ஒண்ணுமில்லடா, ஆசிரியர் தன் பாட்டுக்கு வாயால் ஊத நானும் எதிர்புறத்திலிருந்து அவருக்கு உதவ எண்ணி ஊத, ரெண்டும் கேன்சலாகிப் போச்சு” என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்