11/26/2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)

ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!

11 comments:

நசரேயன் said...

நல்ல விளக்கம்

Unknown said...

நாடறிய வேண்டிய விளக்கம். நன்றி.

க.பாலாசி said...

ரொம்ப நன்றி..விளக்கத்துக்கு..

அண்ணாக்கவுத்துக் கொத்த நாங்க முள்ளுவாங்கின்னு சொல்லுவோம். ஆனா அரைநாண் கயிறுல அதை கோர்த்திருந்து நான் பார்த்ததில்ல.. ஆனா இன்னமும் கிராமங்கள்ல வீட்டுக்கு வீடு இருக்கு.

vasu balaji said...

இம்புட்டு இருக்கா இதுக்கு:)

Mahi_Granny said...

நன்றி நவிலும் நாளுக்கு நன்றி. இடருய்தி தெரிந்து கொண்டதற்காக

a said...

appadiyanne...

தெய்வசுகந்தி said...

அழகா விளக்கம் சொல்லிட்டீங்க!!

வருண் said...

நண்பர்களில்தான் எத்தனை வகை! :)

தாராபுரத்தான் said...

வந்துட்டாரு நம்ம பழமைபேசி.
பேனா நிப்பு..இதைத்தான் எதிர்பார்த்தேன்.

☼ வெயிலான் said...

காக்கா பொன் பத்தி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கேன் மணியண்ணே! - காக்கா பொன்

யசோதா.பத்மநாதன் said...

ஆஹா! என்ன அருமையான விளக்கம் என் அன்புக்குரிய இடருய்தியாரே!

என்னுடய விண்ணப்பத்தை நினைவில் வைத்து அதற்காக ஒரு பதிவில் விளக்கம் தந்த உங்கள் அன்புக்கு என் வந்தனம்.மகிழ்ச்சியும் நன்றியுணர்வுமாய் நிறைகிறேன்.

உங்களை நான் இனி என் இடருய்தியாரே என்று தான் அழைக்கப் போகிறேன்.

அழகான விளக்கத்துக்கு நன்றி!

என் கணணி திருத்தத்துக்குப் போய் இன்று தான் கரம் கிட்டியது அதனால் தான் இத்தனை தாமதம்.

நன்றி சகோதரா!

உங்கள் அழகான இந்தப் பதிவு என் வலைப்பூவை ஒரு வாரத்துக்கு அலங்கரிக்கும்.