இவற்றுக்கு யாராவது விதி விலக்கு உண்டா இவ்வுலகில்? எத்தகையவராயினும், எதோ ஒரு சூழலில், ஏதோ ஒன்றுக்கு இரையாகித்தானே போகிறோம் நாம்?
உடன் இருப்பவர்கள், உடனிருந்து அத்தகைய ஒவ்வாத செயலின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றிவிட்டால், இரையானவர் பாக்கியசாலி ஆகிவிடுகிறார். நேர்மாறாக, வியந்தோதலில் அகப்பட்டு அகக்கண் மறைபட்டுப் போனாலோ, நிலைமை மேலும் அகோர முகமெடுத்துத் தாண்டவமாடும்.
கடந்த காலங்களில் எல்லாம், அறிவியல் வளர்ச்சியானது அவ்வளவு விரைவாக ஊடோடிச் செல்வனவாக இல்லாமல் இருந்தது. அதுவே மனித குலத்தின் தவறுகளின் வீரியத்தைக் குறைத்து, கட்டுக்குள் வைத்திருந்தது என்று சொன்னால், அது மிகையானதாக இருக்க முடியாது.
ஆனால், இன்றைக்கு? எந்தவொரு ஊடகமானாலும், அதன் வலிமை அளப்பரியது. கண்ணிமையானது சட்டென தப்படிப்பதற்குள்ளாகவே, உதிர்த்த சொற்கள் பாரெங்கும் வியாபிக்கிறது. உதிர்த்தது, உதிர்த்ததுதான். திரும்பப் பெறல் என்பதே கிடையாது அவற்றுக்கு!
அதே வேளையில், விரைவாகச் சென்று சேர்ப்பவன் வெற்றிசாலி என்றும் போதிக்கும் இவ்வுலகம். விளைவு? விரைவு... விரைவு.... எதிலும் விரைவு... வாழ்க்கையையே விரைவாக்கி, விரயமும் ஆக்கத் தயங்குவதில்லை கணங்கள்!
Stick to the basics; Think simple! அண்டை வீட்டு அண்ணனுக்கு வணக்கம் சொல்லத் தயங்குகிறோம். அலாசுகாவிலும், அடிலெய்டிலும் இருக்கும் முகமறியா மனிதனுக்கு வாழ்த்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம். கூடவே, எங்கோ, எவனோ, என்னவோ கத்திக் கொண்டிருக்கும் ஒருவனைச் சொற்களாலே கொலையும் செய்கிறோம். அவனது அந்தரங்கம் அலசுகிறோம்... அனாயசமாய்ச் சூறையாடி, இணையப் பெருவெளியில் பரம்படிக்கிறோம்.
பண்டைக் காலத்திலெல்லாம், பாராளும் மன்னனே ஆனாலும் உயரப் படியேறிச் சென்றுதான் அமுது பருக வேண்டும். ஏனப்படி? எதுவும், எளிதாகக் கிடைக்கும் தருணத்தில் உதாசினப்படுத்தப்படும் என்பது அவர்களது நம்பிக்கை. நவீனயுக புருசர்கள், கட்டுடைக்கப் பிறந்த மகான்கள்! இதை எல்லாம் கட்டுடைப்பதுதானே அவர்கள்தம் முதல் பணி?
கணினியைக் கையாள்பவன் எல்லாம் அறிவாளி; அக்கணினியில் அவன் செய்வதெல்லாமே சிற்ப வேலை!! வாங்கிக் கொடு கணினியை... ஆவதென்ன? எவரையும், எளிதில் வீழ்த்திவிட முடியும் எம்மால்! அகம், உயரப் பறக்கிறது!
இது இப்படி இருக்க... எவை எல்லாம் அந்தரங்கம்? யாருக்குத் தெரியும்? இந்தா பிடி... எனது பிறந்த தேதி! என் குழந்தையின் அழகைப் பார்.... என்னைப் பார்... என்னழகைப் பார்.. என்னவரைப் பார்.. பட்டியல் நைல் நதியின் நீளத்தையும் மிஞ்சும்.
அலைபேசியில் பிடி, நகர் காட்சி... முடிந்தால் என்னையும் பார்... அவனையும் பார்... இதோ அவளையும் பார்... எல்லையே இல்லை! விபரீதம் உணரும் மட்டும், விளையாட்டுக்கு எல்லையே இல்லை!
தருண்! நேற்று வரையிலும், அன்பான மாணவன்... பண்பான மாணவன்... கல்வியில் முதலிடத்து மாணவன்... ஊருக்கே வழிகாட்டியாய் இருந்த நம்மாணவன். இன்றைக்கு??
உலகமே அவனை ஒருவிதமாய்த்தானே பார்க்கிறது? பதினெட்டு வயதிற்குள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே, சோரம் போய்விட்டதுதான் காலக் கொடுமை!
விளையாட்டு... இணையப் பெருவெளியின் கட்டற்ற சுதந்திரம்... விளைவு? எந்த இணையத்தில் விளையாடினான் எனச் சொல்லப்படுகிறதோ, அதே இணையத்தில் எண்ணற்ற செய்திகள் அவன் பெயர் தாங்கி.... அவனது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி!
சக மாணவனின் அந்தரங்கத்தை, இணையத்தில் ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு... சக மாணவன், அருகிலிருந்த வாசிங்டன் பாலத்தில் இருந்து, ஃகட்சன் ஆற்றில் குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள, பிரச்சினையின் தாக்கம் பெருமளவில்! அவனைச் சார்ந்த பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரும் பெரும் சோகத்தில்!
குமுகாயம், மின்னாடல், மடலாடல், சிட்டாடல், உசிலாடல், வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் என நாளும் நாளும் வசதிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே, நாம் வெளிக்காட்டும் அகச்சுவடுகளும் தடம் பதித்துக் கொண்டே வருகின்றன.
இத்தனைக்கும் இடையே, கல்விச் சாலைகளுக்குச் சென்று, இணையப் பாவனை பழகி, தமிழ் வளர்க்க வாரீர் எனப் பறை சாட்டுகிறார் ஒரு கூட்டம்...
கோவை என்றாலே, அன்பு வளர்ப்பதும்... பண்பு வளர்ப்பதும்... விருந்தோம்பல் வளர்ப்பதும்.. கோவன், அந்த இளங்கோவன் காட்டிய வழியில் அறம் வளர்ப்பதும்தான்...
அவ்வழியில், மின்வெளிக் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்திடல் வேண்டும் எனச் சொன்னாயே, என்தம்பி, சஞ்சய் காந்தி? நடத்திடும் காலமெப்போ??
இம்மணித்துளியில் கூட, எங்கோ ஒரு தமிழன், தனது அறியாமையினால் அகப்பட்டுக் கொண்டிருப்பானாய் இருக்கும்...
இம்மணித்துளியில் கூட, எங்கோ, எவனோ ஒரு தமிழன், வியந்தோதலின் பொருட்டுச் சோரம் போய்க் கொண்டிருப்பானாய் இருக்கும்...
10 comments:
பழமை, காந்தி ஜெயந்தியில் சஞ்சய் காந்திக்கு அழைப்பா? பதிவின் நோக்கம் பதிவர்களின் மனதைத் தொடும் என நம்புகிறேன். நிச்சயம் இந்த (பதிவர்) சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கலை... அனைவரும் கற்க வேண்டும்.
நானும் படித்தேன்.. நல்ல இடுகை அண்ணா..
ம்ம்ம் படித்தேன்...
நீங்க கோவைக்கு போகணுமுன்னு காத்து இருக்காரோ என்னவோ ?
மிக வேதனையாகத்தான் இருக்கிறதுங்க பழமைபேசி.......
அண்டை வீட்டு அண்ணனுக்கு வணக்கம் சொல்லத் தயங்குகிறோம். அலாசுகாவிலும், அடிலெய்டிலும் இருக்கும் முகமறியா மனிதனுக்கு வாழ்த்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம்.
100 % உண்மை
ம்ம். /இம்மணித்துளியில் கூட, எங்கோ, எவனோ ஒரு தமிழன், வியந்தோதலின் பொருட்டுச் சோரம் போய்க் கொண்டிருப்பானாய் இருக்கும்.../
இதுதான் சரி. போகிற போக்கில் ‘டமிலேண்டா’ என்று மார்தட்டிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை. சை.
நல்ல பதிவு
http://denimmohan.blogspot.com/
வாசித்தேன் நானும்..
---------------------------
புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக
http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html
//எத்தகையவராயினும், எதோ ஒரு சூழலில், ஏதோ ஒன்றுக்கு இரையாகித்தானே போகிறோம் நாம்? //
ம்ம்ம்ம்ம்ம்....
வணக்கம் பழம
Post a Comment