10/12/2010

அறை எண் 311

சட்டனூகா! வளைந்து, நெளிந்து ஒய்யாரமாய் ஓடிக் கொண்டிருக்கும் டென்னசி ஆற்றின் ஒரு வளைவை ஒட்டி, அழகுற அமைந்த நகரம் இது. இந்நகரானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் விளங்குகிறது. 1860ம் ஆண்டில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிறது. அமெரிக்காவின் தென்பகுதியில் இருந்து வந்த நிறத்தின் அடிப்படையிலான அடிமைக் கலாசாரத்தை, கட்டுக்குள் கொண்டு வருவோம் எனச் சொல்லி அரியணை ஏறுகிறார் அண்ணல் ஆப்ரகாம் லிங்கன் அவர்கள்.

அதையொட்டி, அவரது கொள்கைகளுடன் ஏற்பில்லாத ஏழு மாகாணங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து, பின்னர் மேலும் சில மாகாணங்கள் அதனுடன் இணைந்து கொண்டன. தென்கரோலைனா, வடகரோலைனா, மிசிசிபி, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, அலபாமா, லூசியானா, டெக்சாசு, ஆர்கன்சாசு, விர்ஜீனியா மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்கள், அமெரிக்க்க் கூட்டு மாகாணங்கள் எனத் தம்மை அறிவித்துக் கொண்டன. அதிபர், அப்ரகாம் லிங்கனின் தலைமையில் இருந்த எஞ்சிய மாகாணங்கள், அமெரிக்க ஒன்றியம் எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.

அதைத் தொடர்ந்து, கூட்டுப் படைகள் 1861ம் ஆண்டு, ஏப்ரல் 12ந் தேதி அன்று, தென் கரோலைனாவில் உள்ள சம்டர் கோட்டை எனும் இடத்தில் இருந்த அதிபர் லிங்கனின் படைகளைத் தாக்கவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுப் போர் உருவெடுத்தது.

அதே ஆண்டு, தெற்குமுகமாக படையெடுத்து வந்து ஒன்றியப் படையானது, நுழைவாயிலாகவும் ஆற்றுப் போக்குவரத்துக்கு முக்கியமாகவும் இருந்த சட்டனூகா நகரைத்தான் முதலில் கைப்பற்ற நினைத்து வெற்றியும் கண்டது. வெற்றி கொண்ட அதே கையோடு, அட்லாண்டாவுக்கு அருகில் உள்ள சிக்கமுகாவைப் பிடிக்கக் கனவு கண்டது ஒன்றியப் படை.

அங்கிருந்த கூட்டணிப்படையினரோ, வரவிட்டு வாண வேடிக்கை காண்பித்தார்கள். பெருமளவிலான ஒன்றியப் படையினர் உயிரிழப்பையும் பெருங்காயங்களையும் எதிர்கொண்டனர். தோல்வி கண்ட ஒன்றியப் படை பின்வாங்கி, மீண்டும் சட்டனூகாவில் நிலை கொண்ட்து. போரில் காயம்பட்ட பெரும்படையினரைக் காப்பாற்றும் முகமாக, சட்டனூகாவில் தற்போது இருக்கும்  ரீடு இல்லம் எனும் சொகுசு விடுதியானது மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடியும் வரையிலும் மருத்துவ மனையாகவே தொடர்ந்தது.

இவ்விடுதியானது 1847ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பழைய க்ரெட்சு ஃபீல்டு இல்லம் என அழைக்கப்பட்டு வந்தது. 1863ஆம் ஆண்டு, உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வந்து, அடிமைக் கலாசாரம் களையப்பட்ட்து உலக வரலாறு! எதிர்பாராத விதமாக, அவ்வாண்டே இம் மருத்துவமனையின் பெரும்பகுதியானது விபத்துக்குள்ளாகித் தீக்கிரையாகிப் போனது பெரும் சோகம்.

அதன்பிறகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடுதியை, டாக்டர் ஜான் ரீடு என்பாரும் அவர்தம் மகனும் இணைந்து வாங்கி, மீண்டும் ரீடு இல்லம் என்கிற பெயரில், விடுதியை இருந்ததை இருந்தபடி அழகுற நிர்மாணித்தார்கள். அதிபர் சர்ச்சில், எலினோர் ரூசுவெல்ட் முதலானோர் இதில் தங்கி இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

தற்போதும் இவ்விடுதியானது, நகரின் முதன்மை விடுதியாகத் திக்ழ்கிறது. செரட்டன் ரீடு இல்ல விடுதி எனத் தற்போது அழைக்கப்படுகிறது. ப்ராடு வீதியும் மார்ட்டின் லூதர் கிங் சாலையும் சந்திக்கும் இட்த்தில், அழகுற அமைந்த்துதான் இவ்விடுதி.

கிட்டத்தட்ட இருகூப்பிடு தூரத்தில் நான் வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருந்தாலும் கூட, தினமும் காலையிலும், பிற்பகலிலும் ரீடு இல்ல வளாகத்திற்கு வருவதை வழமையாக்க் கொண்டவன் நான். ஏனென்றால், அவ்வளாகத்தில்தான் இசுடார் பக்சு(star bucks) என்ப்படும் தேனீர்க் கடை அமைந்திருக்கிறது. காலை பத்து மணி மற்றும் பிறபகல் மூன்று மணி அளவில், இசுடார் பக்சுக்கு வந்தே ஆகவேண்டும் எனும் வேட்கை உடையோன் நான்.

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாத காலமாக இந்த ரீடு இல்லத்திற்கு வந்து போகும் நான், என்றாவது ஒரு நாள் இவ்விடுதியின் அறை எண் 311ல் தங்கிருந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்பது என் தணியாத ஆசையாக இருந்தது. இருப்பினும், அதற்கு வாய்ப்பு அமையவே இல்லை. ஏனென்றால், நான் வேலை பார்க்கும் நிறுவனமானது மற்றொரு விடுதியான மேரியாட் எனும் விடுதியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டமையானது, என் ஆசைக்குத் தடையாக இருந்தது.

இச்சூழ்நிலையில்தான், அவ்வளாகத்தில் வேலை பார்க்கும் இசுகாட்(scott) வின்டர்வைல்டு உடனான நட்பு நமக்கு உதவியாக இருந்தது. இசுகாட்டின் உதவியோடு, ரீடு இல்லத்தைச் சுற்றிப் பார்த்து, அறை எண் 311க்குச் செல்லவும் ஏற்பாடானது.

ஏன் அந்த அறை எண் 311க்கு இவ்வளவு முக்கியத்துவம்? அந்த அறை எண் 311ல்தான், ஒரு பெண் பேய் குடிகொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரின் போது தங்கி இருந்த ஒன்றியப் படைவீரன் ஒருவனுடைய காதலிதான் அவள். காதலனால், அவ்வறையில் வைத்து அவள் கொல்லப்பட, அவளது ஆவியானது அங்கேயே இன்னும் குடி கொண்டிருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பலர்.

வேறு சிலரோ, படையினரால் இங்கே கடத்திக் கொண்டு வரப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பலரது ஆனமாக்கள், இன்னும் ஆவியாக அலைவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இப்பின்னணியின் காரணமாகத்தான், யாராவது அந்த அறைக்குச் சென்று தங்கினால், அந்த ஆவி அவர்களைத் தங்க விடுவது இல்லையாம். தங்குபவர்கள் ஆண்கள் என்றால், அதன் சீற்றம் வெகு அதிகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது.

எனக்கு முன்னெப்போதும் பேயைப் பார்த்த அனுபவம் இல்லாததால், எப்படியும் அந்த அறையைச் சென்று பார்த்திட வேண்டும் என்கிற தீராத வேட்கை. முடிந்தால், பேயுடனும் தங்கி இருந்து வர வேண்டும் என்கிற ஆசையும் எம்முள்.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, வழமைக்கு மாறாகச் சற்று முன்னமே சட்டனூகா நகரை வந்தடைந்து, நேராக ரீடு இல்லத்திற்குச் சென்றடைந்தேன். நான் வருவதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த நண்பரும், விடுதி ஊழியருமான இசுகாட்(Scott)டும் எனக்காகவே காத்திருந்தார்.

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்னர், நான் கொண்டு வந்திருந்த பைகளை அங்கிருந்த ஒரு முன்னறையில் வைத்துவிட்டு, விடுதிக்குள் நுழைந்தேன். முன்னரங்கம் பெரிய அளவில், வண்ணமிகு விளக்குகளோடு வரவேற்றது.

அதிபர் வின்சுடன் சர்ச்சில் தங்கி இருந்த அறை மற்றும் விருந்தினர் வளாகம் முதலானவற்றைப் பார்த்துவிட்டு, மூன்றாவது தளத்திற்குச் சென்றோம். உள்ளே நுழைந்ததுமே, எம்முள் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. கடந்து செல்லும் அறைகளின் எண்களைக் கவனித்தேன். குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்த்து. நான் அப்போது பார்த்த எண் 323. இனியும் பனிரெண்டு அறைகள் கடந்த்தும், அறை எண் 311 வரப் போகிறது என எண்ணிய மாத்திரத்தில், ‘டமால்’ என்று ஏதோ ஒரு பேரொலி ஒலித்தது. உடல் வியர்க்கத் துவங்கியது.

’Are you alright?’ என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தான் இசுகாட், “அச்சத்தமானது, எதிரில் இருக்கும் கட்டிடத்தில் இருந்து வருகிறது. அவர்கள், அத்தளத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்”, என்றான்.

அதற்குள் அறை எண் 311ம் வந்துவிட்டது. தன்வசம் இருந்த மின்காந்த அட்டையை எடுத்துச் சொருக முற்படுகையில் அவன் கை நடுங்கியது. நடுங்கியபடியே கூறினான், “நானே இங்க வந்து ரொம்ப நாளாச்சி. சீக்கிரத்துல போய்டலாம் சரியா?”, என்றான்.

சரியென்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். அவன் கதவினருகிலேயே நின்று கொண்டான். நான் உள்ளே சென்றேன். கும்மிருட்டாக இருந்தது. சமீபத்தில் யாரும் தங்கி இருந்துவிட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. எதிரில் இருந்த சுவரின் அருகே சென்று, திரைத்துணியை விலக்கிவிட முயன்றேன்.

திரைத்துணியின் ஒரு ஓரத்தைத் தொட்டதுதான் தாமதம், “அச், அச்” எனத் தொடர்ந்து தும்ம ஆரம்பித்தேன். சில மாதங்களாகவே, நான் ஒவ்வாமையின் பாதிப்புக்கு உள்ளானவன். அத்துணியின் தூசியானது, தும்மலைக் கிளப்பி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தும்மலானது நிற்கவே இல்லை. அச்... அச்... என்பது மாறி, ஆச்... ஆச்.. எனப் பெருங்குரலெடுத்துத் தும்ம ஆரம்பித்தேன்.

சுற்றிலும் என்ன நடக்கிறது எனச் சுதாரிப்பதற்குள்ளாகவே, மேலும் சிலர் வந்து அறை வாசலில் குழுமி இருந்தார்கள். யாரோ ஒருவர், மின்விளக்கொன்றை ஒளிர விட்டார். நான் பரப்பு நாற்காலியின் மேலிருக்கும் குட்டைத் துண்டை எடுத்து மூக்கைத் துடைக்கும் பொருட்டு, கைலிருந்த அலைபேசியினை படுக்கையின் மீது விழும்படியாக வீசினேன்.

தும்மலின் தாக்கத்தில் நிலைகுலைந்த எனக்கு, சரியாக வீச முடியவில்லை. அது படுக்கையில் விழுவதற்கு மாறாகச் சுவரில் பட்டுத் தெறித்த்து. அதைக் கணடதும், அங்கிருந்தவர்கள் அலறி வெளியே ஓடினார்கள். “oh my God.. we are in trouble… he becomes haunted man “ எனக் கத்தினார் ஒருவர்.

அதற்குள், அங்கிருந்த மேற்பார்வையாளர் வந்து கத்திக் கொண்டு இருந்தார். என்னைக் கேட்காமல், யார் வெளியாட்களை உள்ளே விட்டது எனச் சீறிக் கொண்டிருந்தார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட நான், கீழே விழுந்த அலைபேசியை எடுத்துச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு, மூக்கைத் துடைத்தபடி அறையை விட்டு வெளியே வந்தேன்.

அங்கிருந்தவர்கள் தயங்கித் தயங்கி என்னிடம் வந்தார்கள். “I have an allergy, seasonal allergy”, என்றேன் நான். அவர்கள் என்னை நம்பத் தயாரில்லை. நானும் இசுகாட்டும், இடதுபுறப் படிக்கட்டில் இறங்க, அவர்கள் மறுபக்கம் போனார்கள்.

“அஃ... ஃக... அஃ...ஃக”, திடீரெனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. யாரோ ஒரு இசுபானிய வேலைக்காரி, எங்களைப் பார்த்துக் கேலியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். இசுகாட்டின் முகம் சிவந்திருந்தது. வெளியில், வாசல் வரைக்கும் கொண்டு வந்துவிட்டவன், திரும்பிப் பார்த்தால், ஆளைக் காணவில்லை.

இன்று, செவ்வாய்க் கிழமை, அதே இசுடார் பக்சு(Star Bucks) கடைக்குச் சென்றிருந்தேன். கடையில் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ”எங்கே, இசுகாட்?”,என்றேன். அவனை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்களாம். மனசுக்குச் சங்கடமாய் இருந்தது.

என்னால் அவனுக்கு வேலை பறி போயிற்றே என்ற கவலையோடு, வெளியில் வந்து, நண்பரும், சக பதிவருமான ஒருவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.

“அண்ணே! அண்ணே!!”

“எதுக்குப் பேயாட்டம் கத்துறீரு? நான் ஆபிசுல இருக்கன்!”

நான் பேய்தானா?? கையிலிருந்த இசுடார் பக்சு காபியைக் குடிக்க மனம் வரவில்லை. தூர இருந்த குப்பைத் தொட்டியில் விழும்படித் தூக்கி வீசியெறிந்தேன். மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. சரி,  இந்தியாவில் இருக்கும் மனையாளுடனாவது பேசலாமென எண்ணி, அலைபேசியை இயக்கினேன்.

“அகோ... நாந்தாண்டா... எப்படி இருக்க? நல்லா இருக்கீங்ளா??”

“ம்ம்... இதென்ன அர்த்த இராத்திரியில பேய் கணக்கா? குழந்தைக எல்லாந் தூங்கிட்டு இருக்காங்க... வையுங்க போனை!”

ங்கொய்யால.... நான் பேயேதானா? உங்களைத்தான் கேக்குறேன், என்ன, நான் பேயேதானா?? ஒருவேளை அது என்னைய அண்டிடுச்சோ??! அவ்வ்...


19 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)) எட்டிப் பாத்ததுக்கே இத்தன கதையா? தங்கியிருந்தா?

இப்படிக்கு,
ஆஆஆ......

Unknown said...

வாவ். பழமை! சூப்பர் இது.

பழமை, தப்பி தவறி கூட ஸ்டார் பக்ஸ் லே தேனீர் கடைன்னு தேனீர் கேடடுட்டியலா? நொந்து போயிருப்பாங்களே! என்ன பண்றது! அரை எண் 311 லிருந்து வந்த ஆளுன்னு தெரிஞ்சிருக்கும்.

இசுகாட்டா? ஏங்க இவங்களுக்கு நம்ம ஆளுங்க மேல இப்பிடி ஒரு கொலை வெறியை ஏற்படுத்தறீங்க?

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....ரசனையான பதிவு......

Mahesh said...

உம்ம இச்சைக்கு ஒருத்தர் வேலையை இழக்க வேண்டியதாப் போச்சே :(

நிகழ்காலத்தில்... said...

நீங்க பேய்தான்...


ஆமாம் தமிழ்ப்பேய்தான் பிடித்திருக்கு பங்காளி..

ஆமாம் ஒரு சந்தேகம் 311 ல் ஆண்பேய் இருப்பதாக இருந்தால் போயிருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்..........

sathishsangkavi.blogspot.com said...

அற்புதமான ரசனையுடன் கூடிய பதிவு...

பவள சங்கரி said...

ஆகா thrilling experience...? தங்கி பார்த்திருந்தால் உண்மை விளங்கியிருக்கும்.

a said...

ஆஹா........

எனக்கு உங்களோட மொபைல் போனிலே இருந்து கால் வந்துதே......... அப்ப ........... அது.............

அய்யயோ..............

பழமைபேசி said...

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

இஃகி

@@Sethu

நன்றிங்கோ!

@@ஆரூரன் விசுவநாதன்

வணக்கமுங்கோ!

@@Mahesh

அண்ணா, நல்லா இருக்கீகளா? ஊட்ல எல்லாரும் நல்ல சேமந்தான?? நான் தனியா மின்னஞ்சல் அனுப்புறனுங்கோ!!!

@@ நிகழ்காலத்தில்...

இஃகிஃகி, வாங்க பங்காளி!

@@சங்கவி

நன்றிங்க சங்கவி!

@@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து

ஆமாம்ங்க...

@@ வழிப்போக்கன் - யோகேஷ்

இருக்கும்...இருக்கும்...

வருண் said...

***சட்டனூகா! வளைந்து, நெளிந்து ஒய்யாரமாய் ஓடிக் கொண்டிருக்கும் டென்னசி ஆற்றின் ஒரு வளைவை ஒட்டி, அழகுற அமைந்த நகரம் இது.***

There was a time we drove from Nashville to chattanooga. The freeway was really "வளைந்து, நெளிந்து ஒய்யாரமாய் ஓடிக் கொண்டிருக்கும்"!

-------------

***கிட்டத்தட்ட கடந்த ஆறு மாத காலமாக இந்த ரீடு இல்லத்திற்கு வந்து போகும் நான், என்றாவது ஒரு நாள் இவ்விடுதியின் அறை எண் 311ல் தங்கிருந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்பது என் தணியாத ஆசையாக இருந்தது.***

நமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை லேது, தல!

311 கூட்டினால் 5 வருது நல்ல நம்பர்தான் ஒரு சில ஜோசியர் சொல்லுவாங்க!

குறும்பன் said...

\\மூன்றாவது தளத்திற்குச் சென்றோம். உள்ளே நுழைந்ததுமே, எம்முள் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. கடந்து செல்லும் அறைகளின் எண்களைக் கவனித்தேன். குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்த்து. நான் அப்போது பார்த்த எண் 323. \\

அமெரிக்காவில் 323 என்ற எண் இரண்டாவது தளத்துலதான இருக்கும்??? 1-2-3 இங்க 0-1-2 அங்க (நம்மூர்ல அதாவது இந்தியாவுல)

குறும்பன் said...

2 நிமிடம் இருந்ததுக்கே பேய் ஆகிட்டிங்களே. தங்குனா பெரும் பேய் ஆகி இருப்பீங்க.

இதுக்கு சரியா பதில் சொல்லக்கூடியவர் உங்க தங்கமணிதான்.

பழமைபேசி said...

@@குறும்பன்

இது அமெரிக்காவுலங்கோ....

ground floor, 2nd floor, 3rd floor.... இஃகிஃகி!!

http://en.wikipedia.org/wiki/Storey

எஸ்.கே said...

அழகான படங்கள்! ரொம்ப விரிவான கட்டுரை! நன்றாக இருந்தது!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணா.. இந்த இடுகையை வீதம்பட்ட சந்தை இடுகை பட்டியலில் வைக்குமளவிற்குத் தரம்.

கிடுகிடுத்தது அவர்கள் மட்டுமல்ல.. வாசகர்களும் தான். ஹிஹிஹி..

அருமையான நடை. உங்களுக்குள்ள ஒரு திகில் எழுத்தாளர் ஒளிந்திருப்பது இன்று தெரியவந்திருக்கிறது ;)

ஈரோடு கதிர் said...

நல்ல வேளை பேய் நடுச்சாமத்துல நம்மள எழுப்பல!!! :))))

priyamudanprabu said...

HA HA
TRY TO STAY ONE FULL DAY THERE

Unknown said...

நாங்கூட படமெல்லாம் பாத்தங்காட்டி, வரலாற்றுப் பதிவோனு நெனச்சேனுங்க..

manjoorraja said...

அடடா, எனக்கும் 311ல் தங்கும் ஆசை வந்துவிட்டதே!