4/18/2010

அமெரிக்கத் தலைநகர் கண்ட சித்திரைத் திருவிழா!










வசந்தம் வருடிவிட, தென்றல் தளைய வர, வீதியெங்கும் இளந்தளிர்கள் பச்சைப் பட்டுடுத்த, முகில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊர்கோலமிட அந்த இனிய மாலைப் பொழுதானது, அமெரிக்கத் தலைநகரையொட்டிப் பரவி விரவி இருக்கும் தமிழர்களை எல்லாம் வெள்ளோக்கு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கச் சேர்க்க, இதுவன்றோ சமத்துவம் போற்றும் தமிழர் கூட்டமெனச் சிலாகித்த நிலாமகள் தன் நான்காம்பிறைப் பொன்னொளியைப் படரவிட்டாள்.

குறித்த நேரத்திற்கொப்ப, வெர்ஜீனியா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அரங்கத்தின் மேடையிற் தோன்றி தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடி முடித்ததும், சிவா நவரத்தினம் அவர்கள் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார்.

வரவேற்புரை முடிந்ததும், குழுமியிருந்த அரங்கத்தினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொருவரும் இது கனவா அல்லது நினைவா என வியந்து தம்மைத் தாமே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள் எனச் சொல்வது மிகையாகாது என்றே சொல்ல வேண்டும். செந்தமிழே திரண்டு வந்திருந்து ஆர்ப்பரித்தது போன்றதொரு காட்சி.

மூன்று வயதில் இருந்து பதின்மத்தைத் தொடும் வயது வரையிலான இளந்தளிர்கள், ஒரு சீராய் ஒவ்வொருவர் பின் ஒருவராய் அரங்க மேடையை நோக்கிப் பணிவோடும், ஒரு ஒழுங்கோடும் முன்னேறிச் சென்றனர். முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள் குழந்தைகளைக் கொஞ்சு மொழியில் நெறிப்படுத்த, ஆசான் கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, குழந்தைகள் அதீத ஆவலுடன் தமிழோடு பின்னிப் பிணைந்து கிடந்தார்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பத்தெட்டுத் தமிழ்ச் சிறார்கள் பங்கேற்று, வெகு அனாயசமாக அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளைச் செப்புவித்து, கற்ற தமிழுக்கும், தன் வாழ்வுக்கும், வந்திருந்தோர் வாழ்வுக்குமான செம்மையைச் செவ்வனே செய்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் திருக்குறளைச் சொல்லிச் சென்றதும் கூடியிருந்தோர் முகத்தில் பரவசம் பளீரென மின்னலிட, நிகழ்ச்சியைக் கண்டு கொண்டிருந்த எமக்கோ மெய் சிலிர்த்துச் சிலிர்த்து உச்சி குளிர்ந்து கண்கள் பனித்தன. தமிழ்ப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கான மகத்தான வெற்றியே அந்நிகழ்ச்சி!

தமிழனின் வாழ்வில் இரண்டறக் கலந்ததுதானே இயல், இசை, நாடகம் என்பதும்? இதையும் நமது தமிழ்ச் சிறார்கள் விட்டு வைப்பார்களா என்ன?? கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பல குழந்தைகள் மேடையில் தோன்றி பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு, உரிய நடனத்தைப் பாங்காய், தத்தம் நடன ஆசிரியர்களின் பயிற்றுவிப்புக்கேற்ப வெகு அழகாக ஆடி தம் திறமையை வெளிப்படுத்தினார்கள். இடையில் ஏற்பட்ட, தொழில்நுட்ப இடையூறுகள் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக இடம்பெற்ற, கிளமெண்ட் ஆரோக்கியசாமி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சிறுவர்களுக்கான இசைப் போட்டியும் சிறப்பாக அமைந்தது. அதிலே ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய பாடல் ஒன்றைப் பாடிய சிறுமியும், கருவியிசையில் மிளிர்ந்த சிறுமியும் பலரது மனதைக் கொள்ளை கொண்டார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளும் வெகு அனாயசமாகத் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும் நேரத்தில், விழா ஏற்பாட்டாளர்கள் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்வது ஒன்றே, அவர்களுக்கு அளிக்கக்கூடிய ஊக்கமாக இருக்க முடியும்.

இளஞ்சிறார்களின் பல்பொருள் திறமைகளைக் கண்டு களித்துக் கொண்டிருந்ததில், நேரம் விரைவாகக் கரைந்து கொண்டிருப்பதை எவருமே அறிந்திருக்கவில்லை. இரண்டுமணி நேரம் இரண்டு மணித்துளிகளாகக் கழிந்தது போன்றதொரு உணர்வே அனைவருள்ளும் ஏற்பட்டது.

இந்நேரத்தில்தான், புயலெனப் புறப்பட்டுப் பெருங்காரெனக் களமிறங்கினார் கவித்தென்றல் ஜான் பெனடிக்ட் அவர்கள். ஆம், கணீர்க் குரலில் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க மேடையில் தோன்றினார் இவர். தலைமை உரையாற்ற, வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி அவர்கள் அழைக்கப்பட, தலைவர் அவர்கள் தோன்றி வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் கடமை, பொறுப்பு, சாதனைகள் முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்ததாக, இந்தியத் தூதரக அதிகாரி உயர்திரு. வி.எஸ்.செந்தில் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்தியாவின் மகத்தான வளர்ச்சி, தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசி அமர்ந்ததும் கரவொலி அடங்க சில நேரம் பிடித்தது. சிறப்பு விருந்தினரைத் தொடர்ந்து, இந்திய கார்கில் போரில் பங்கேற்ற உயர்திரு. கர்ணல் இரவி அவர்கள் பேசினார். அவர் பேசுகையில், இச்சித்திரை விழாவில் தமிழரொடு தமிழராய் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

சித்திரைத் திருவிழா எனும் தலைப்பில் பேச, ’அனைவரும் நன்கறிந்த’ எனும் சிலாகித்தலோடு மேடையில் தோன்றினார் வலைப்பதிவர் பழமைபேசி. சித்திரைத் திருவிழாவின் மூலத்தை அறியும் நோக்கில், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைத் தாம் கற்க முற்பட்டதையும், அதில் எவ்வாறு சமத்துவத்தோடு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

கூடவே, திருக்குறள் மாநாடு, புறநானூறு ஆய்வுக் கூட்டம், இலக்கிய வட்டம், தமிழ்ச் சமூகத்தையொற்றிய சுகதுக்கங்களுக்கான பங்களிப்பு எனப் பன்முகத்தோடு இயங்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தைப் பார்த்து அதன்மீது காதலுடன் கூடிய பொறாமை கொள்வதாகவும் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பழமைபேசி அவர்களது உரைக்குப் பிறகு, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் எனும் தலைப்பில் சங்கத்தின் செயலாளர் திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் வெகு விரிவாகப் பேசி சங்கத்தின் உறுப்பினர்கள் மேலும் மேலும் ஊக்கத்தோடு செயல்பட வேண்டுமென்பதை அறிவுறுத்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து, தென்றல் முல்லை இதழின் ஆசிரியர் கோபிநாத் அவர்கள், தென்றல் முல்லை இதழுக்கு சங்கத்தினரின் பங்களிப்பு எவ்வாறாக இருக்க வேண்டுமென்பதை விபரமாக எடுத்து உரைத்தார்.

சரியானதொரு தருணத்தில் உண்டிக்கான இடைவேளையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜான் பெனடிக்ட் அறிவிக்கவும், அரங்கத்தினர் வளாகத்தின் மற்றொரு மூலையில் இருந்த உணவக மையத்தை அணுகினர். அங்கே அவர்களுக்கு அறுசுவையுடன் கூடிய உணவு கடுகதியில் பரிமாறப்பட்ட்து. இட அமைப்பும், உணவு பரிமாறப்பட்ட விதமும் வெகு சிறப்பாக இருந்த்து.

உணவு இடைவேளைக்குப் பின்னர், நாட்டுப்புறப் பாடலுக்கான இளமை ததும்பிய துள்ளல் நடனத்தை ஜானத்தன், பிரின்ஸ் மற்றும் ஜெய்சன் ஆகிய பதின்மவயதினர் அரங்கேற்றினார்கள். இசையும் நடனமும் அரங்கத்தினரையும் எழுந்து நின்று ஆடும் நிலைக்கு இட்டுச் சென்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இளஞ்சிறார்கள் எப்படி திருக்குறளை வடிவாகச் சொல்லி அரங்கத்தினர் மனதைக் கொள்ளை கொண்டார்களோ அதைப் போல, ஈழத்துக் கவிஞர் சேரனின் பாடலான பூமியின் அழகே பரிதியின் சுடரே எனும் பாடலுக்கு வெகுநேர்த்தியான அபிநயத்துடன் ஆடி, பார்ப்போரைப் பரவசத்திற்குள் ஆழ்த்தினர் அபிநயா நடனப் பள்ளியின் மாணவியர்.

நாட்டியம் ஆடிய மாணவிகளில் ஒருவரான மாதவி சங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க, நடன ஆசிரியர் திருமதி. ரேவதி குமார் அவர்களின் நடன மேலாண்மையில் மேலும் சில பாடல்களுக்கு தொடர்ந்து நடனம் இடம் பெற்றது. சித்திரைத் திருவிழாவின் மகுடத்தில் மாணிக்கமாய் அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால், கவிஞர் சேரனின் பாடலுக்கு இடம் பெற்ற நடனமாகத்தான் இருக்க முடியும்.

அபிநயா நடனப் பள்ளியின் மாணவிகள் வழங்கிய அந்த அழகுறு நிகழ்ச்சியத் தொடர்ந்து, இலக்கியச் சுவை கூட்ட மேடையில் தோன்றினார் முனைவர் இர.பிரபாகரன் அவர்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் புறநானூற்றுப் பாடலுக்கு நயம்படப் பொருளுரை அளித்து அவர் பேசியதும், அந்தப் புறநானூற்றுப் பாடலுக்கு இசையமைத்துப் பாட வந்தார் திருமதி.லதா கண்ணன். முனைவர் பிரபாகரன் அவர்களது நயமான உரைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் மிக அற்புதமாக, சக பாடகர் அய்யப்பன் அவர்களோடு இணைந்து பாடி அரங்கத்தினரின் கைதட்டலை அள்ளிச் சென்றார் லதா கண்ணன்.

தமிழ்ச் சமுதாயம் சார்ந்த ஒரு சில அறிவிப்புகளுக்குப் பின்னர், தனித்தமிழில் பேச முடியுமா? எனும் நிகழ்ச்சியை அவருக்கே உரிய பாணியில் நட்த்த வந்தார் கவிச்சோலை ஜான் பெனடிக்ட். நடுவர்களாக முனைவர் சரவணபவன், நல்லாசிரியர் வேலுச்சாமி, வலைப்பதிவர் பழமைபேசி ஆகியோர் செயலாற்ற, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடையேறினர் திருமதி. புஷ்பராணி, மருத்துவர் ஜெயகோபால், திரு.ஜோகன், திரு.சுந்தர் குப்புசாமி, திருமதி. உமாதேவி ஆகியோர்.

கொடுத்த தலைப்பில் போட்டியாளர்கள் அனைவருமே வெகு சிறப்பாக, ஆங்கிலச் சொல் எதுவும் இடம் பெறாமல்ப் பேசி அரங்கத்தினரைப் பெருவியப்பில் ஆழ்த்தினர் என்றுதான் குறிப்பிட வேண்டும். போட்டியின் முடிவில், திரு.சுந்தர் குப்புசாமி அவர்கள் முதலிட்த்தைப் பெறுவதாக முனைவர் சரவணபவன் அறிவிக்கவும், அதை ஆமோதிக்கும் பொருட்டு அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பட்டிமண்டப நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியாகவும், அனைவரும் ஓடோடி வந்து த்த்தம் இருக்கைகளில் அமரத் துவங்கினர். திரைப்படப் பாடல்களால் தமிழ் வளர்ச்சி அடைகிறதா? வீழ்ச்சி அடைகிறதா?? எனும் தலைப்பில் பேச வருமாறு இரு அணியினரையும் அழைத்தார் பட்டிமண்டப நடுவர் பிரபாகரன் முருகையா.

அதைத்தொடர்ந்து, வளர்ச்சி அடைகிறது என வாதாட அணியின் தலைவராக உமாதேவி, கோபிநாத் மற்றும் ஜான்பெனடிக்ட் ஆகியோரும், வீழ்ச்சி அடைகிறது என வாதாட அணித் தலைவராக மயிலாடுதுறை சிவா, முனைவர் பாலாஜி சீனிவாசன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோரும் களம் புகுந்தனர்.

பல திரைப்படப் பாடல்களை இரு அணியினரும் மேற்கோள்காளாக்க் காட்டிப் பாடிப் பேசினர். எனினும் மயிலாடுதுறை சிவா மற்றும் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் இசை நயத்துடன் பழைய பாடல்க்ளைப் பாடிக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.

எனினும், இறுதியாகப் பேச வந்த ஜான்பெனடிக்ட், தான் முன்வைத்த ஆணித்தரமான கருத்துகளால் அரங்கத்தினரின் ஆதரவைத் தட்டிச் சென்றார். நடுவரும் அதற்கேற்ப, காலமாற்றத்திற்கேற்ப பாடல்களும் மாற்றத்திற்கு ஆட்படுகிறது; கவிஞனின் தோய்ப்பில் திரைப்படப் பாடல்கள் தமிழுக்கு என்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பாகவே இருக்கிறது என தீர்ப்பை நல்கினார். மொத்த்த்தில், பட்டிமண்டப நிகழ்ச்சியானது வெகு சுவாரசியமாகவும், நயத்தோடும் அமைந்த்து என்றே சொல்ல வேண்டும்.

இறுதியில் சித்திரைத் திருவிழாவுக்கு வருகைபுரிந்த அனைவருக்கும், திரு.செயபாண்டியன் நன்றி நவில்ந்தார். இரவு மணி பத்து மணியைத் தாண்டி இருந்தது. எனினும், ஒரு கூட்டுப் பறவைகளாக்க் கூடிய தமிழர் கூட்டம் பிரிய மனமில்லாமல் ஆங்காங்கே குழுமம் குழுமாக நின்ற்வாறே அளாவளாவிக் கொண்டும், நகைத்தபடியே ஆர்ப்பரித்துக் கொண்டும் இருந்தனர். எந்த ஒரு காரியத்துக்கும் முடிவு என ஒன்று உள்ளது என்பதுதானே நியமம்?!

திருவிழாவினை குடும்பத்தோடு முன்னின்று நடத்திய பலருள் உயர்திரு நாஞ்சில் பீற்றர் அவர்களும் ஒருவர். வளாகத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டே அனைவருக்கும் பிரியாவிடை அளித்து நின்ற அவரைப் பெருமிதத்துடன் கண்ணுற்றபடியே பிரியா விடை பெறலாயினன் இவனும்!

கண்கவர் காட்சிப் படங்களுக்கு இங்கே சொடுக்குக!

14 comments:

தாராபுரத்தான் said...

எம்மை போன்றோறை மண்டப அரங்கில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. ஒலிப் பேழையை வெளியிடுவீர்கள்தானே? நன்றியுடன் வணக்கம்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

கிரி said...

நேரில் கண்ட உணர்வை அளித்தது உங்கள் வர்ணனை! நன்றி!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
தொடரட்டும் இப்பணி இனிதாக
என
அன்புடன்
நண்டு@நொரண்டு

ஈரோடு கதிர் said...

மிக்க மகிழ்ச்சி!!!

Agathiyan John Benedict said...

நேர்த்தியான, மிக உண்மையான உங்களின் விமர்சனத்துக்கு நன்றி. நீங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டது எங்களுக்குப் பெருமை.

முதல் பத்தியை மீண்டும் மீண்டும் படித்தேன். மிக அருமையாக வருணித்திருக்கிறீர்கள்.

குறைகளையும் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. கூடுதல் முயற்சியும், கவனமும் செலுத்த முயல்கிறோம். எதிர்வரும் நிகழ்ச்சிகளை இன்னும் சிறப்பாக நடத்தச் சூளுரைக்கின்றோம். நன்றி.

vasu balaji said...

அழகான வர்ணனையுடன் நிகழ்ச்சித் தொகுப்புக்கு நன்றி.

/ ஈரோடு கதிர் said...

மிக்க மகிழ்ச்சி!!!/

சாமியார் படம் பார்த்ததில இருந்து இப்படி ஒத்தை வார்த்தை பின்னூட்டமாவே போடுறாரு மாப்பு. கவனிக்கணும்:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான நடை. வாழ்த்துகள். நன்றி!!

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி நண்பா.

சில புகைப்படங்கள் இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வடுவூர் குமார் said...

குறித்த நேரத்திற்கொப்ப
அங்கு அதிசிய‌மில்லை.
அழ‌க்காக‌ தொகுத்து கொடுத்துள்ளீர்க‌ள்.ப‌டிக்க‌வே ஆர்வ‌மாக‌வும் க‌ண்ணெதிரே ஓடுவ‌து போல‌வும் இருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

சமூக பத்திரிக்கையாளர் :)

பாலகுமார் said...

ஆம்... நல்ல நிகழ்ச்சி நண்பரே... அருமையான விமசர்னம்..உங்களை நேரில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.

மயிலாடுதுறை சிவா said...

வாழ்த்துக்கள் மணி!

விழாவில் கலந்து கொண்டமைக்கு நன்றிகள் பல....

மயிலாடுதுறை சிவா...

பாரதி பரணி said...

மிக அருமையான வர்ணனை. உங்களை நிகழ்ச்சியின் புகைப்படத்தில் பார்த்ததும் ஒரே இன்ப அதிர்ச்சி...இது போன்ற நிகழ்ச்சிகளில் நான் நேரில் இல்லையே என்ற வருத்தமும் கூட உதிக்கிறது...நம் தாய் நாட்டில் தமிழை அரசியலாக்கிகொண்டிருக்கும் பொது அயல் மண்ணில் தமிழ் வளர்ப்பது ஆனந்தமே...