3/09/2010

வடகிழக்கு அமெரிக்கப் பதிவர் சந்திப்பு மற்றும் தமிழ்விழா அழைப்பு!

அழகிய, சோழ வள நாட்டின் எழில்மிகு ஊரான கோவூரில் வேளாண் தொழில் செய்பவர்தான் இக்கதையின் நாயகன். கோவூர்க் கிழார் என்றும் அழைக்கப்படுபவர் இவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரை எப்படி காவியக் கவிஞர் வாலி, தான் நினைத்த மாத்திரத்தில் சென்று சந்தித்து உரையாடுகிறாரோ அதைப் போல, இவரும் சோழ மன்னனை எந்த நேரத்திலும் சென்று சந்தித்து உரையாடக் கூடியவர், நேர்மையானவர் மற்றும் கண்டிப்பு மிகுந்தவர்.

போரில் தோற்றுவிட்ட சேர மன்னன் மலையமான் மகன்கள் மீது யானையை ஏவிக் கொல்லுமாறு உத்திரவிட்ட சோழன் குளமுற்றுத்துஞ்சிய கிள்ளி வளவனை, அவனது அவைக்கே சென்று கண்டித்தவர்தான் இந்த கோவூர்க் கிழார். அதே நேரத்தில், தன் சோழ நாட்டின் மீதும், சோழ மன்னன் மீதும் தீராத பற்றுக் கொண்டவர்.

சோழ நாட்டின் உயிர்நாடியான காவிரியின் தென்கரையில், கோவூர்க் கிழார் வந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்குப் பரிச்சியமான வெளியூர்ப் பாணன் ஒருவன், சோர்ந்த முகத்தோடு தனது மனைவியுடன் செல்வதைக் காண்கிறார். சோழ நாட்டில் ஒருவன் சோர்வாக இருப்பதா என்று எண்ணியபடியே அந்தப் பாணனை நோக்கிப் பாடுகிறார்,

”தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!


என்ன பாணரே, நான் பாடியது புரிகிறதுதானே? இருந்தாலும் சொல்கிறேன் கேள்!”

“சொல்லுங்கள் தேவரே!”

”தேன் போன்ற இனிய இசையை அளிக்கவல்ல சிறிய யாழ் வீற்றிருக்கும் இசைக்குளத்தில, அந்த இசையை நுகர்ந்து பின் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்று வாழும் ஒரு ஆமையை எடுத்து, தெள்ளிய குச்சிகளால் கோர்த்து நோக்கின் எப்படித் தெரியுமோ, அது போன்றதொரு முரசு அல்லது உடுக்கையைக் கொண்டு இசையால் ஆற்றுப்படுத்தவல்ல முதுமையான இரவலனே!”

”தங்கள் பெருந்தன்மை! கேட்கிறேன், மேலே சொல்லுங்கள் தேவா!!”

“தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி!


எங்கள் கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது.

எம்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. இங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும், நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன் எம் கிள்ளி வளவன்!!”

“அப்படியா தேவரே! மன்னனின் பெருமை கேட்டு அகமகிழ்கிறேன் தேவா!!”

“ஆமாம்! நீர் சோழ மன்னனைக் காணச் செல்லும் வழியில், மன்னனது நண்பனையும் கண்டு பேறு பல பெறுவாயாக!

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை!


நீர் கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற அல்லி மலர்களின் மேலே ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும் சிறுகுடி என்ற ஊர் இருக்கும்.

கொடைக் கையை உடையவனும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் அந்த ஊரில் உள்ளான். பாதிரி மணம் கமழக்கூடிய கூந்தலும், ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் இல்லாளுடன் மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்கிறபட்சத்தில், பண்ணனின் கொடையால் நீர் செல்வந்தன் ஆவாய்!”

”அப்படியா தேவரே? எங்கே இருக்கிறது இந்தச் சிறுகுடி?”

“மயிலாடுதுறை-திருவாரூர் சாலை வழியில், பேரளம் வழியாக பூந்தோட்டம் சென்று, அங்கிருக்கும் அரசலாற்றுப் பாலத்தைக் கடக்க வேண்டும். பிறகு, கும்பகோணம்-நாச்சியார் கோவில் சாலையில் சென்று கடகம்பாடி போய்ச் சேர்ந்து, அங்கிருந்து வலதுபுறமாக இருக்கும் சாலையில் சென்றால் சிறுகுடியை நீர் அடையலாம் பாணரே!”

“ஆகட்டும் தேவா! நான் அப்படியே செய்கிறேன்!!”

விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!


அந்தச் சிறுகுடியில் வாழும் பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீர் அவனிடம் பரிசில் பெறப் போவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீர் ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!!”

“வாழ்க பண்ணன்! உமது ஆற்றுப்படுத்தலும் வளர்க!! தேவா, நான் சென்று பலன்கள் பல அடைய, தற்போது விடை பெறுகிறேன் தேவா!!!”

பாணருக்கு நல்வழியைக் காண்பித்த பெருமிதத்தில் கோவூர்க் கிழார் தனது வேளாண் வயல் நோக்கிச் செல்ல, பாணர் சிறுகுடியை நோக்கி முற்படுகிறார்.

இந்தச் சிறுகதையானது, புறநானூற்றுப் பாடல் 72ஐ அடிப்படையாகக் கொண்டது. கிள்ளிவளவனையும், சிறுகுடி வள்ளல் பண்ணனையும் புகழ்ந்து பாடுவதைப் பின்னணியாகக் கொண்டுள்ளதால், இப்பாடல் பாடாண் திணையில் இடம் பெற்றுள்ளது.

அருஞ்சொற்பொருள்

தேம்: தேன்
தீ: இனிமை
தொடை: யாழின் நரம்பு
கயம்: குளம்
காழ்: வலிய கம்பி
தெண்: தெளிந்த
ஆனாமை: நீங்காமை
முதுவாய்: முதிய வாய்மையுடைய
கூழ்: உணவு
வியல்: அகலம்
ஆம்பல்: அல்லி
ஞாங்கர்: மேலே
பாதிரி: ஒரு மரம்
ஓதி: பெண்களின் கூந்தல்.
இயலுதல்: நடத்தல்
ஓய்தல்: அழிந்து ஒழிதல் (வெட்டுதல்)
தலைப்பாடு: தற்செயல் நிகழ்ச்சி

===============================

Florida பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே!

செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிறையப் பதிவர்கள் விழா அரங்கில் குழும இருக்கிறார்கள். எனவே வர வாய்ப்பு இருப்போர், அவசியம் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

=====================================



புறநானூற்றுக் கருத்தரங்கம்
செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா


தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு பிறபகல், கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து

2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.00-3.25
புறநானூறு காலத்துப் புரவலரும் புலவரும்
முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்

3.25-3.45
தேனீர் இடைவேளை

3.45-4.05
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.05-4.25
தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.25-5.25
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்

பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்

இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.25-5.30
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்


அனைவரும் வருக!
ஆதரவு தருக!!

தமிழால் இணைந்து
தமிழராய் வளர்ந்திடுவோம்!

16 comments:

Unknown said...

அப்பிடியே நயகரா பக்கத்துல ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கண்ணே

பழமைபேசி said...

//முகிலன் said...
அப்பிடியே நயகரா பக்கத்துல ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கண்ணே
March 9, 2010 11:56 PM//

போன ஆண்டு பூராவும் அங்கதான இருந்தேன்... இப்ப கோரம் பத்தாது அங்க... இஃகி!

vasu balaji said...

இப்ப எங்கைங்க பண்ணன். எல்லாம் அண்ணந்தான். எலக்‌ஷன் வந்தாதான் எல்லாம். என்னமோ போங்க. எந்தக் காலம்னாலும் சங்கம்தான் எல்லாம். இஃகி.

vasu balaji said...

கருத்தரங்கப் புதையலுக்கு காத்திருக்கோம்.

Sabarinathan Arthanari said...

//தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்//

நிகழ்வும்,தங்களது உரையும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

தாரணி பிரியா said...

விழா இனிதாய் நடைபெற வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வு.....நன்றிகள்.....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அமெரிக்கால சுத்திச் சுழட்டி தமிழ் பேசறீங்கண்ணே.. :)

ஜோதிஜி said...

கடல் தாண்டிய கலைஞர் என்ற பட்டத்தை கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டுருக்கின்றேன். நல்வாழ்த்துகள்.

க.பாலாசி said...

இதுவும் இனிமையடைய வாழ்த்துக்கிறேன்.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன்!

@@Sabarinathan Arthanari
@@தாரணி பிரியா
@@ஆரூரன் விசுவநாதன்
@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
@@க.பாலாசி

நன்றிங்க!

//ஜோதிஜி//

ஆகா! நான் தமிழ் மாணவன்!! நன்றிங்க!!!

நசரேயன் said...

//முகிலன் said...

அப்பிடியே நயகரா பக்கத்துல ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கண்ணே
//
Next CT

சரண் said...

//தன்மானத் தமிழ் மறவர்//
ஆகா.. பட்டம் நல்லாருக்கே..

சிறப்பான உரையாற்ற வாழ்த்துக்கள்..
காணொளியை கண்டிப்பாக வலையேற்றுங்கள், நாங்களும் கண்டு மகிழ்கிறோம்..

ஈரோடுவாசி said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் ....

பெருசு said...

CT க்கு பயணச்சீட்டு போட்டாச்சுங்கண்ணா.

முகுந்த்; Amma said...

புறநானூறு கருத்தரங்கு எல்லாம் நடக்குதா? :)) நெம்ப சந்தோசம்.
எனக்கு இதுவரை தெரியாது அய்யா. (முன்னே தெரிந்தாலும் எங்கும் வரவும் முடியாது :)))

தங்களின் தமிழ் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.