3/23/2022

இடது vs வலது

கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், தொழில் என எதை எடுத்துக் கொண்டாலும், பொதுவாகப் பெரும்படியாக நோக்கின் இருவிதமான கோட்பாடுகள் இருக்கும். அதனை இடது, வலது எனச் சொல்வர். லிபரலிசம், கன்சர்வேடிசம் என்றும் சொல்வர். கட்டுடைத்தல்(தாராளமயம்), கட்டுப்பாடு(மரபுபோற்றல்) என்பதாக அவற்றைப் பொருள் கொள்ளலாம்.

மேலைநாடுகளில் லிபரலிசத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வலதுசாரியாக இருந்தாலும் கூட, தேவையான இடங்களில் கட்டுடைப்புக் கொள்கைகளையும் கொண்டவராக இருப்பார். அல்லாவிடில், புத்தாக்கம், மேன்மை, மாற்றம் என்பன இல்லாமலே ஆகிவிடும். எடுத்துக்காட்டாக, கருக்கலைப்பு என்பது கொலைக்குச் சமம், கூடாது என்பது வலது. அது அந்தப் பெண்ணின் உரிமை, தன் உடலுக்குள் என்ன நடக்க வேண்டுமன்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு உண்டு என்பது இடது. அக்கப்போர். முதல் 12 வாரங்களுக்குள் கலைத்துக் கொள்ளலாம். உடல்நலத்துக்கு ஊறு எனும் போது கலைத்துக் கொள்ளலாம் போன்ற சலுகைகளுடன் வலதுகள் விட்டுக்கொடுக்க, நடுவாந்தரமாக இருக்கின்றது இன்றைய அமெரிக்க நிலைமை.

எதுவானாலும் அதன் செயன்முறைதான் பொறுப்பு என்பது இடது. இல்லை, செயன்முறை என்பதே ஆட்களால் கட்டமைக்கப்படுவதுதானே, ஆகவே ஆட்களே பொறுப்பு என்பது வலது. shift left testing vs shift right testing. அக்கப்போர். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்.

When problems are perceived during a project, they are most often traced back to an individual or team, not the processes or operational procedures in place that created the environment where the problem happened. Instead of examining the situation, organizational norms, processes and methods (and their implementations), we have a strong tendency to look for a scapegoat, a person that is at fault. https://sciodev.com/blog/major-concerns-offshore-outsourcing/

ஆஃப்சோர் என்றால் இந்தியா. நியர்ஷோர் என்றால் மெக்சிகோ அல்லது தென்னமெரிக்க நாடுகள் என்பது பொதுப்பழக்கம். ஏதாகிலும் பிரச்சினையென்றால், ஆஃப்சோரிலிருந்து கிடைக்கும் உடனடி பதில், “இன்னார் கோட்டை விட்டுவிட்டார். அவர் சரியாகக் கடமையைச் செய்யவில்லை. எனவே அவரைத் தூக்கிவிட்டு, நல்ல திறமையான ஒருவரைப் போட்டிருக்கின்றோம்”, என்பதாகப் பதில் வரும். இப்படியான பதில் இரசிக்கப்படுவதில்லை. அது அப்போதைக்கான தீர்வாக இருக்குமேவொழிய, நெடுங்காலத் தீர்வாக இருக்காது. 35 ஆண்டுகாலப் பரிணாமத்தில், சில மரபுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, இப்போதெல்லாம், எந்தநாட்டில் தமக்கான வேலை நடக்கின்றதோ, அங்கே செயன்முறைகளைக் கட்டமைப்பது, அதனைக் கண்காணிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர் மேலைநாட்டவர்கள். ஆட்கள் வருவார்கள், போவார்கள், அவர்களை நம்பித் தொழில் நடத்த முடியாது. செயன்முறை தரமானதாக இருந்து, அதற்கொப்பப் பணிகள் இடம்பெறும் போது தரமான அவுட்புட் மேலோங்கும் என்பது அடிப்படை.

உக்ரைன் போர் நடக்கின்றது. உக்ரைனின் தற்போதைய இராணுவத்துக்கு வயது 8; இரஷ்யா, கிரேமியாவை ஆக்கிரமித்துக் கொண்டபிறகு கட்டமைக்கப்பட்டதுதான். இரஷ்ய இராணுவமோ தொன்மை வாய்ந்தது, அளவில் 20 மடங்கு பெரியது. உக்ரைன் செயன்முறையின் அடிப்படையில் இயங்குகின்றது. இரஷ்யா, ஆட்களின் அடிப்படையில் இயங்குகின்றது; செயன்முறையில் பெரும் ஓட்டை. எனவேதான் முன்னணித் தளபதிகளே களத்துக்கு வர வேண்டி உள்ளது. 15ஆவது தளபதி பலியானதாகச் செய்தி. https://www.newsweek.com/alexei-sharov-russia-ukraine-kyiv-mariupol-general-putin-death-1690834

Let's focus on the subject, process! Not on the individual!!


3/22/2022

மனிதவளம்

ஒருநாட்டுக்கு மனிதவளம் மிக முக்கியமானது. நாளைய உலகம், இந்தியாவின் கைகளில் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. ஏனென்றால், அங்கேதான் இளைஞர்கள் வாழையடி வாழையாகத் தொய்வில்லாமல் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.  சீனாவில், ஒரு குழந்தை என்கின்ற சட்டம் போட்டதன் தாக்கம், இளைஞர்கள் குறைந்து போவதற்கான ஒரு சூழல். இருப்பவர்களுக்கும் தயக்கம். China’s population outlook worrying as young people baulk at high cost of having kids. https://www.scmp.com/economy/china-economy/article/3133078/chinas-population-outlook-worrying-young-people-balk-high

இரஷ்யாவில் நிலைமை இன்னும் மோசம். கடந்த பத்து ஆண்டுகளாகவே இளைஞர்கள் வெகுவாக வெளியேறிக் கொண்டிருந்தனர். காரணம், சர்வாதிகார ஆட்சியும் நவீனமின்மையும் அதீத நேசனலிசமும் தலைவிரித்தாடியதுதான்.  The survey by the independent Russian pollster Levada Center, released on November 26, found that more than half of Russians between the ages of 18 and 24 want to leave for other countries. The next age group that was most interested in emigrating was 25 to 39 at 30 percent, the poll showed. [Dated November 26, 2019, https://www.rferl.org/a/number-of-young-russians-who-want-to-emigrate-hits-highest-level-in-decade/30292951.html]

தற்போது, இன்னும் அது விரைவாக நடைபெறத் துவங்கி இருக்கின்றதென இரஷ்ய நாளிதழ் சொல்கின்றது.  RAEC predicted the departure of up to 100 thousand IT specialists from the Russian Federation in April. https://www.interfax.ru/russia/830581

உலகத்திலேயே பெரியநாடு நிலப்பரப்பில். இரண்டாவது பெரிய நாடான கனடாவைக் காட்டிலும் இருமடங்கு பெரிய நாடு. மக்கள்தொகையோ வெறும் 14 கோடிகள்தான். எகானமியோ வெறும் 1.5 டிரில்லியன் டாலர்கள்தாம். அதே நேரத்தில் சரிபாதியாக 7 கோடி மக்கள்தொகை கொண்டதும், பரப்பளவில் உத்திரப்பிரதேசத்தின் அளவு மட்டுமே கொண்ட பிரிட்டனின் எகானமி 2.8 டிரில்லியன் டாலர்கள். இந்த இலட்சணத்தில், இருக்கும் இளைய தலைமுறையும் வெளியேறிக் கொண்டால்? சொந்த செலவில் சூன்யம். நேசனலிசம், இம்ப்பீரியலிசம் என்பது இலைமறையாக இருக்க வேண்டியதுதான். அதுவே பிழைப்பென இருந்தால், எந்தநாடும் இப்படியானதொரு தேக்கத்திற்கே ஆளாகும் இலங்கையைப் போலே!!


3/20/2022

உக்ரைன் போர் 26ஆம் நாளில்

போர் என்பது பல உருவில் இடம் பெறும். அவையென்னன்ன? hard power, soft power, smart power, supreme power என்பனவாக இருக்கும்.

hard power: ஆயுதங்களைக் கொண்டு நேரடியாகக் களத்தில் இறங்கி, இரு தரப்போ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ மோதிக் கொள்வது.

soft power: பேச்சுவார்த்தைகளில், இன்னபிற நாடுகளின் ஆதரவைப் பெற்று, அல்லது இழப்பதன் மூலம் மேற்கொண்ட இலக்கினை அடைவது அல்லது இழப்பது.

smart power: தொழில்நுட்பங்களைக் கொண்டு தாக்குவது, ’இன்ஃபர்மேசன் வார்’ என்பதன் மூலம் ஒன்றைக் கட்டமைத்துப் பொதுவெளியில் பின்னடைவைச் சந்திக்கும்படியாக்குவது, நாட்டின் அன்றாடப் பணிகளைச் சீர்குலைப்பது போன்றவை.

supreme power: பொருளாதாரத் தடைகள், பொருட்குவிப்புக் கூடுதல் வரிகள், செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்துவது அல்லது கூடுதல் உற்பத்தியின் மூலம் விலையைக் குறைத்து நிலைகுலைய வைப்பது போன்றவை.

hard power: இரஷ்யாவால் உக்ரைனை வெல்ல முடியவில்லை. attrition எனும் முறையில், வான்வெளியின் மூலம் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துச் செல்லரிப்பது போலக் கொஞ்சம் கொஞ்சமாக எதிரியைச் சீர்குலைப்பது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன்மூலம் வெற்றியும் கிட்டலாம். தோல்வியும் கிட்டலாம். ஆனால் ரிஸ்க்குகள் அதிகம். பொதுவாகப் பார்க்கின், அட்ரிசியன் வார்கள் பெரும்பாலும் தோற்றே போயிருக்கின்றன. வியட்நாம், ஆப்கானிஸ்தான், கொரியா போன்றவை எடுத்துக்காட்டுகள். ஏன்? நீண்டநாட்கள் களத்தில் இருப்பதால், தொடர்ந்து ஆட்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ammunition, யானைக்கு எப்படித் தீனி போட்டே அழிவது என்று சொல்வார்களோ, அது போலப் போர்க்களத்துக்கு வெடிகுண்டுகளும், துப்பாக்கிக் குண்டுகளும், படைக்கலன்களும், உணவு உடுப்புகளும், மருந்துகளும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். களத்தில் இருக்கும் ஆள் ஒன்றுக்கு, நாளொன்றுக்கு ஆயிரம் டாலர்கள் செலவாகும். இரஷ்யாவால் அந்த செலவுகளைச் செய்ய முடியுமா? சீனாவிடம் கேட்கின்றது, அம்மோக்களை(ammunition). சீனாவை மிரட்டுகின்றது அமெரிக்கா. ஏனென்றால், ஏற்கனவே பங்குச் சந்தையில் 72% வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றது சீனா. தொடர்ந்து மாதாமாதம் பையர் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தால்தான் ரொட்டேசனுக்குக் கம்பெனியிடம் பணம் இருக்கும். அவன் இழுத்தடித்து விட்டால், கம்பெனியை இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். அதேதான், சீனாவின் பெரும்பணம் அமெரிக்காவிடம். ஆகக்குறைந்தது 35 ஆயிரம் கண்ட்டெய்னர்கள் நாளொன்றுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை இறக்குவதில் காலதாமதம் செய்தால் கூடப் போதும், தொய்வு ஏற்பட்டுவிடும்.

soft power: ஏற்கனவே இரஷ்யா தனிமைப்பட்டு விட்டது. நாட்கள் கூடக் கூட, வார்கிரைம் என்பதன் வீச்சு அதிகரிக்கும். புடின் எனும் தனிமனிதனின் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கப் போவதில்லை.

smart power: இரஷ்யா 30 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போய்விட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் சொல்கின்றன. The first casuality of the war is TRUTH என்பார்கள். ஆனால், இளைஞர்கள் வெளியேறி அயல்நாடுகளுக்குக் கொத்துக் கொத்தாகச் சென்று சேர்வது உண்மை. அயல்நாட்டுத் தூதரகங்களின் செய்திக் குறிப்புகளே சொல்கின்றன.

supreme power: சொத்துகளை முடக்குவது. நாணய மதிப்பைச் சீர்குலைப்பது. இரண்டிலுமே வீழ்ச்சியையே கண்டிருக்கின்றது இரஷ்யா. ஆனால் அதன் தாக்கம் எப்படியாக இருக்கின்றது என்பதை, இரஷ்யாவாகச் சொன்னால்தான் நமக்குத் தெரியவரும். அங்கு பொது ஊடகங்கள் இல்லை.

https://cepa.org/the-next-10-days-will-decide-this-war/

https://twitter.com/DefenceHQ/status/1505427498313596928/photo/1




3/19/2022

திடம்

 

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். சேவையின் தரமும் நிலைத்திருக்க வேண்டும். சேவையின் பரப்பளவு, பலமாநிலங்களுக்கும் பலநாடுகளுக்கும் விரிந்து கொண்டேயிருக்க வேண்டும். தங்குதடையற்ற சேவையாக இருக்க வேண்டும். இப்படிப் பல பரிமானத்திலும், தாங்கி நிறகக்கூடியதாக இருத்தலைத்தான் திடமான அமைப்பு, robust system என்கின்றோம்.

அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு திடமானதா? அவ்வப்போது விமர்சனங்கள் எழும். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கக் கூடாது. தன்னாட்சி மிக்க படிநிலைகள் இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்பால் பொறுப்புகள் கையாளப்பட வேண்டும். மக்களின் நேரடி பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் இடம் பெற வேண்டும். அந்தத் தேர்தல்கள், சட்டத்தின்பாற்பட்டு நியாயமான முறையில் இடம் பெற வேண்டும். இவையெல்லாமும் அதனதன் கிரமத்தில் செவ்வனே இயங்கினால்தான் அது திடமானதாகக் கருதப்படும். டிரம்ப், இத்தனையையும் உடைத்து முன்னேற எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார். முடியவில்லை. ரோபஸ்ட்னஸ் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில், சோதனையில் அமெரிக்காவின் டெமாக்ரசி எளிதில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்புகள் இடம் பெற்றன.

நாட்டுக்கு, நிறுவனங்களுக்கு, தனிமனிதனுக்கு என எல்லா இடத்திலும் திடம் என்பது அவசியம். அதனைச் சோதிப்பதற்கான வழி என்ன? மாற்றுக்கருத்துகளும் விமர்சனங்களும்.

ஒரு புராடக்ட். ஒரு கட்டுரை. ஏன் இந்தக் கட்டுரை என்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம். கட்டுரையாளர் தன் எண்ணங்களை, சிந்தனைகளை, தகவல்களைக் கொண்டு கட்டுரையை எழுதுகின்றார். படிப்பவர்கள், கட்டுரையாளனை மனத்தில் கொண்டு, ஊக்கமளிக்கும் பொருட்டும் ஆதரவளிக்கும் பொருட்டும், பாராட்டுதல்களையும் நன்றிகளையும் சொல்லிச் செல்கின்றனர். என்ன ஆகும்? காலப்போக்கில், திடமற்ற ஒருநிலையையே அது அடையும். மாறாக, படிப்பவர்கள் வினாக்களைத் தொடுக்கின்றனர். மாற்றுக்கருத்துகளை வைக்கின்றனர். என்ன ஆகும்? கட்டுரையானது மென்மேலும் வலுப்பெறும். முழுமையை நோக்கி நகரும். கட்டுரையாளன் அடுத்த பதிப்பில் அவற்றையெல்லாம் செம்மைப்படுத்துவார். ரோபஸ்ட் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆகும்.

மாற்றுக்கருத்துகள் மனிதனை முழுமையாக்கும். படைப்பின் உட்பொருளை நோக்கியே பார்வை இருக்க வேண்டும்; படைப்பாளனை நோக்கியதாக இருக்கக் கூடாது. விமர்சகர்கள் கொண்டாடப்பட வேண்டும். வசைக்கு ஆட்படக் கூடாது.

நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றார். அதன் சாரங்களைச் சாமான்யன் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். சமூகத்துக்குப் பயனளிக்கக் கூடியதுதானா? தேவையானதுதானா? சரியானதுதானா? நோக்கத்தில் பிழை இருக்கின்றதா? இதெல்லாமும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாநில நிர்வாகம் ரோபஸ்ட்னஸாக இருக்கும். நாம் என்ன செய்கின்றோம்? மூன்று மணி நேரப் பேச்சில், எங்கெல்லாம் அவரது உச்சரிப்புக் குளறுபடியாகின்றதோ, அந்தக் காட்சிகளையெல்லாம் தொகுத்து ஒருசில நிமிடக் காணொலியாக்கி, அதைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பொழுதைக் கழிக்கின்றோம். அமெரிக்கா வல்லரசுத்தன்மையை இழப்பதற்குக் கனவுகாணும் நாம், நம் ஜனநாயகத்தைத் திடமாக்குகின்றோமா?!


3/18/2022

மந்தைத்தனம் (bullying)

மேலைநாடுகளில் காடைத்தனத்திற்கு எதிரான சட்டங்கள் பல உண்டு. குறிப்பாக, இளைய சமூகத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டுப் பள்ளி, கல்லூரிகளில் மிகக் கவனமாக செயற்படுத்தப்படுகின்றது.

மந்தைத்தனம் பலவேறு விதங்களில் ஒருவர் அல்லது கூட்டத்தின் மீது ஏவப்படலாம். அவை கீழேவருமாறு:

1. ஒருவர்மீது வதந்தி பரப்புதல் அல்லது பொய்/அவதூறு கட்டமைத்தல் 

2. கேலிப்பெயர்களைச் சூட்டுவது, அவமானத்துக்குள்ளாக்குவது 

3. தள்ளிவிடுவது, எச்சில் உமிழ்வது, உடுப்புகளைக் கிழிப்பது 

4. நிராகரிப்பது அல்லது தனித்து விடப்படுவது 

5. மிரட்டுவது, பொது இடத்தில் வைத்து சிறுமைப்படுத்துவது 

6.குற்றேவற்பணிகளுக்கு ஏவிவிடுவது 

7. உடைமைகளைச் சேதப்படுத்துவது 

இணையக் குழுமங்களில் பெரும்பாலும் இவை, மந்தைக் கூட்டங்களினூடாக உருவெடுக்கும். Mobbing means bullying of an individual by a group, in any context, such as a peer group, school, workplace, neighborhood, community, or online.

கண்ணெதிரில், யாராவது ஒரு தனிநபர் (targeted individual) அல்லது கூட்டம், இப்படியான மந்தைத்தனத்துக்கு ஆட்படும் போது, அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியதும், மேட்டிமையை எதிர்த்தொழிப்பதும்  நம் அனைவரது கடமை. சமூகத்தில், அமைதி, இணக்கம், புத்தாக்கம், மேன்மை போன்றவை தழைக்க வேண்டுமானால், இதற்கெதிரான சமூகத்தின் பங்களிப்பு மிக மிக அவசியம். உங்களின் சிறு செய்கையால், ஓர் உயிர் காப்பாற்றப்படலாம். உங்களுக்கு வேண்டியவர் குற்றச்செயல்களில் இருந்து காப்பாற்றப்படலாம். ஏன், உங்களை நீங்களேகூடக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இவற்றுக்கு எதிராக இருக்கவும் சமாளிக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்? 

1. தம்மை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். படிப்பு, பொது அறிவு, பொருளாதாரம், நட்பு வட்டம், குடும்பம் எனப் பலவற்றிலும் தன்னிறைவு பெற்றதொரு சூழலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்படியானோரின் ஒத்துழைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். Empower yourself as much as possible in everything.

2. Face your fears and weaknesses. தமக்கான வலுவீனம், அச்சம், மருட்கை போன்றவற்றுக்கான காரணங்கள் என்னவென்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றுக்கான சூழல் நேரும் போது, கவனமாக இருக்கலாம். அல்லது அதிலிருந்து மீண்டு கொள்ளும் வழியைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.Build up your mind & body. மனப்பழக்கம், தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. சரியானோர், தவறானோர் என்பது மட்டுமே உண்டு. சரியாய் இருக்கப் பழகிக் கொள்தலும், முயல்வதையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

4. நாம் நாமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். முலாம் பூசிக்கொண்டோ, நடித்துக் கொண்டோ, மூடிமறைத்துக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. அவரவர் அடையாளம், விழுமியங்களைக் கொண்டு தன்னிச்சையாக இருப்பதே வாழ்வினை எளிமைப்படுத்தும். Accept the things about yourself that you can’t change and change what you can.

5. பேச வேண்டும். கருத்தைச் சொல்ல வேண்டும். ஐயோ, நமக்கெதுக்கு வம்புயென வாளாதிருத்தல் கடமையினின்று தவறுவதற்கே வழிவகுக்கும். வாழப்பிறந்த மாந்தனின் தன்னாட்சியை மட்டுப்படுத்தும். Exercise the liberty.

வாட்சாப், ஃபேசுபுக், கூகுள் போன்ற குழுமங்களில் பலர் சேர்ந்து இயங்கும் போது, பொது இலக்கு என்பது துவக்க காலத்தில் செயன்முறையில் இருக்கும். போகப்போக, வீக் டார்கெட், அல்லது தம் கொள்கை, விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாதவர் போன்றோரின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கும் தருணத்தில் டார்கட்கள் குறிவைக்கப்படும். அப்படியான கூட்டத்தில் நாமும் ஒருவரா? யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியாயின், உணர்ந்து செயற்படல் நன்று. 

உயிர்களிடத்தில் அன்பு வேணும்;  தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிரமுடைய நெஞ்சு வேணும்;  இது வாழும் முறைமையடி பாப்பா!!


3/14/2022

படையெடுப்பு

உலகம் பல போர்களைச் சந்தித்து இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து, ஃப்ளூபுக், கட்டுப்புத்தகம் பரிணாமம் பெற்று வருகின்றது. அதன்படி, படையெடுப்புக்கான ஆட்களின் தேவை கணக்கெடுக்கப்படுகின்றது.

அதுவும் இடம், சூழலுக்கொப்ப மாறுபடும். குறுகிய இடத்தை வளைத்துத் தனதாக்கிக் கொள்வது, ஒரு பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொள்வது, அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை, தற்காலிக ஆக்கிரமிப்பா அல்லது நெடுங்காலத்திற்கான ஆக்கிரமிப்பா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் கூறுகள்.

போலீசைப் பொறுத்த மட்டிலும், ஆயிரம் பேருக்கு 2 - 4 காவற்படையினர் தேவை என்பது ஒரு கணக்கு. அது போலவே, படையெடுப்பு என வந்துவிட்டால், 10 பேருக்கு ஒரு இராணுவ வீரர் தேவை. அதாவது அந்த ஊரின் மக்கள்தொகை 1000 என்றால், சுற்றி வளைத்துத்  தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள குறைந்தது 100 வீரர்கள் தேவை.

உக்ரைன் நாட்டின் மக்கள்தொகை 4 கோடி. தலைநகரின் மக்கள்தொகை 3 மில்லியன். 2 மில்லியன் பேர் வெளியேறிவிட, ஒரு மில்லியன் பேர் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். அதாவது 10 இலட்சம் பேர். அங்குமட்டும் ஒரு இலட்சம் படை வீரர்கள் தேவைப்படுகின்றனர். இரஷ்யத் தரப்பு வைத்திருப்பதோ இரண்டு இலட்சத்துக்கும் சற்றுக்குறைவுதான். பெரிய நாடு. பெரிய எல்லைக்கோடு. தடுப்புக்காவல் காப்பதெற்கெல்லாம் சாத்தியமேயில்லை.

படையெடுப்பு நடத்தும் தரப்புக்கு உள்ளூர் மக்கள் ஆதரவளிக்கும் போது, தேவைப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறையும். அதேபோல எதிர்ப்பின் நிலைக்கொப்ப, தேவைப்படுவோரின் அளவு அதிகரிக்கவும் செய்யும்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இரஷ்யத்தரப்பின் உளவு, உத்தியில் பெரும் ஓட்டை. தலைநகரைப் பிடித்தாலும், தக்கவைத்துக் கொள்ள முடியாது. Simply they are not ready for conventional war. கிரேமியாவை ஆக்கிரமித்துக் கொண்டு போது, அது சிறு தீபகற்பப்பகுதி. அதில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானோர் இரஷ்யமொழியைப் பிரதானமாகக் கொண்டோர். மேலும், அப்போது உக்ரைனுக்கான இராணுவம் வலுவாக இருந்திருக்கவில்லை.

https://worldbuilding.stackexchange.com/questions/20826/what-percentage-of-a-population-can-be-part-of-a-medieval-military

கெமிக்கல், பயோ, நியூக்ளியர்?  ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். விரைவில் சமாதானம் பிறக்க வேண்டும். Diplomacy is essential if we are to find peaceful resolutions in times of tension.

உக்ரைன் போர், 19ஆம் நாளை நோக்கி

இருபக்கமும் பலத்த உயிரிழப்புகள். யார் வெற்றி, தோல்வி எனக் கணக்குப் போடுவதற்கான நேரமல்ல. ஓர் உயிர் என்றாலும், அது வாழப்பிறந்த உயிர்தானே? யாரோ சிலர் எடுக்கும் முடிவுகளுக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவது சகித்துக் கொள்ள முடியாதவொன்று.

இரஷ்யா, நேட்டோ இருதரப்பும்தான் இதற்குப் பொறுப்பு. பரமபத விளையாட்டின் நகர்வுகளை ஒரு பார்வையாளனாகப் பார்க்கின்றோம். அது தவிர்க்க முடியாதது.

இப்படியான போர் வரும், நமது நகர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அங்குலம் அங்குலமாகத் திட்டமிட்டுக் கொண்டதில் மேற்குலக நாடுகள் முன்னணி வகிக்கின்றன. எப்படி? ஒவ்வொரு துறையிலும், சொல்லி வைத்தாற்போல தடைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. நினைத்தால் அணைப்பதற்கு இது ஒன்றும் நம் படுக்கறை விளக்கின் சுவிட்ச் அல்லவே? அணைப்பதற்கும், நிறைய வேலைகள் தேவைப்படும். ஒருநாளில் செய்யக்கூடிய காரியமல்ல அது. ஆனால் இவர்கள் செய்கின்றனர். ஆகவே, முன்கூட்டிய திட்டமிடல் இருந்திருக்கின்றது எனக் கருதவேண்டி உள்ளது. 

இரஷ்யாவைப் பொறுத்த வரையில், முன்னுக்கும் செல்லமுடியாமல் பின்வாங்கவும் முடியாமல் சிக்குண்டு கிடக்கின்றதென்றே சொல்லலாம். ஏன்? முதல்வாரத்தில் பிடித்த இடங்கள்தாம். அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான தரைவழி முன்னேற்றம் இல்லை. மாறாக, ஏவுகணை வீச்சுகளால் சேதத்தை உண்டு செய்து வருகின்றது. அதில் உக்ரைன் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்?

இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரே சொன்னது இது, ”எங்களது பணம் 650 பில்லியன் டாலரில் 300-350 பில்லியன் மேற்குலக நாடுகளிடம் சிக்குண்டு போய்விட்டது. எஞ்சியது தங்கமாகவும், சீனப்பணமாகவும் உள்ளது”. இந்த சீனப்பணத்தை டாலராக மாற்ற முடியாது. ஏனென்றால், வங்கிப் பரிவர்த்தனைக்குள் வந்தால் இரஷ்யப் பணம் மீண்டும் சிக்குண்டு போய்விடும். சீனப்பணமாக மற்ற நாடுகளுடன் வணிகம் செய்யலாம் அல்லது தன் பணமான ரூபிளுக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஒருநாள் போருக்கு இரஷ்யாவுக்கு ஆகும் செலவு 20 பில்லியன் டாலர்கள் என்கின்றது உலகவங்கி. நாம் 10 பில்லியன் டாலர்கள் என்றேவும் வைத்துக் கொள்வோம். எஞ்சிய பணமான 300 பில்லியன் டாலர்களில், நாளைக்கு பத்து பில்லியன் என்றால், இன்னும் 30 நாட்கள் வரை நீடிக்கலாம் எனக் கணக்குப் போடுவதா தெரியாது. இதேவேளையில், எதிர்வரும் புதன்கிழமை, 117 மில்லியன் டாலர்கள் தவணைத் தொகை கட்ட வேண்டி உள்ளது. அதை இரஷ்யாவால் திருப்பிச் செலுத்த முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை என்கின்றார் உலக நிதி ஆளுநர் அவர்கள். https://fortune.com/2022/03/14/russia-sovereign-debt-default-imf-kristalina-georgieva-bonds/

இதற்கிடையே, நாட்டில் இருக்கும் சுயசார்புத் தொழில்கள் முற்றாக முடங்கிப் போய்விட்டன; இன்ஸ்டகிராம் முடக்கத்தால் மட்டுமே 8 கோடிப் பேர் பாதிப்புக்குள்ளாவர் என்கின்றது நியூஸ்வீக் நாளேடு. 

இளைஞர்கள், இரஷ்யாவை விட்டு வெளியேறுவதும் இடம் பெற்று வருகின்றது. பக்கத்து நாடான, ஜியார்ஜ்யாவுக்குச் செல்பவர்கள் அங்கே வங்கிக் கணக்கு துவங்குகின்றனர். துவக்கும் போது வைக்கப்படுகின்ற நிபந்தன, “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன்” என உறுதிமொழிச் சான்று கொடுக்க வேண்டும். கொடுத்துத்தான் அவர்கள் அங்கே வாழத் தலைப்படுகின்றனர்.

https://www.consultancy.eu/news/7433/research-ukraine-war-costs-russian-military-20-billion-per-day

https://fortune.com/2022/03/03/russia-sanctions-central-bank-ruble-us-eu-foreign-reserves/