9/30/2010

ஏற்றவன்

வழிந்தோடும் இருளின்
பதட்டம் தணிப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வெற்றிப் பட்டியலில்
இடம் அமைப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வயிற்றுப் பசிக்கு
தின்னக் கொடுப்பவன்
உற்றவனை ஏற்றவன்

மரணத்தின் இடுகாட்டில்
துணை நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

தேடலில் புதையாது
காத்து நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

நேசிப்பை நேசிக்க
மறக்காது நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

மலர்களின் அழகை
இரசித்துப் பகிர்வான்
உற்றவனை ஏற்றவன்

இந்த அற்றவனுக்கு உற்ற ஏற்றவன் இவன்!!!

9/29/2010

மற்றவள்

9/27/2010

உறாதவன்

இந்தா, அவன் நல்லவன்... அப்படின்னா, கெட்டவனும் எங்கியோ இங்க இருக்கான்; அப்படித்தானே? நல்லதாவும் இல்லாம, கெட்டதாவும் இல்லாம ஒன்னு இருக்க முடியாதா??

இருக்கும்னா, அதுக்கு என்ன பேரு? இஃகி! வந்து மாட்டிகிட்டீங்கதானே? சொல்லுங்க... அப்பச் சொல்லுங்க....

கண்ணுகளா, நாம பொறக்கும் போது அல்லாருமே, உறாதவர்களாத்தான் பொறந்தோம்.... உறாததுன்னா, எந்நிலையும் கொள்ளாத ஒன்னுன்னு சொல்லிச் சொல்றாய்ங்க பெரியவங்க.... நாளா வட்டத்துல, அந்த சொல்லே காணாமப் போயிடுச்சி சமூகத்துல....

நல்லவன்... அல்லன்னா, கெட்டவன்! நல்லது, அல்லாங்காட்டி கெட்டது... இப்பிடிச் சொல்லிச் சொல்லியே பழகிப் போனாய்ங்க மனுசங்க....

நல்ல பழமையுஞ் சொல்லலை அவன்...  அதே நேரத்துல கெடுதியாவுஞ் சொல்லலை... உறாதவனா இருக்கான்... இருந்துட்டுப் போறான்... அப்படி வுடுறமா நாம? நல்லவங் கெட்டவன்னு ரெண்டு கட்சிக்காரனும் அவனைப் பார்த்து, வெத்துப்பயன்னு பேசிப் பேசியே அவனையுங் கெட்டவனாக்குறோம்...

இப்பக் கூடப் பாருங்க... நான், இந்த பழமைய எதுக்கு சொல்றன்னா, உறாதல்ங்ற சொல்லை அறிமுகம் செய்யத்தான் சொல்றதே... அதுக்கும் ஒரு சாயம் பூசி, நல்லது கெட்டதுக்குள்ள தள்ளி வுடுவாய்ங்க பாருங்க...... உறாமப் படிச்சி, எளிமையா இருக்கலாம்... இருக்க முயற்சியாவது செய்யுலாம்... இஃகிஃகி...

எளிமைன்னு சொன்னதும், இன்னொரு கதை ஞாவகத்துக்கு வருது.... அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்துல அப்படி ஒரு முசுவா, வேலை பார்த்துட்டு இருந்தாங்களாம் விஞ்ஞானிக....

எடுத்த ஆய்வுக் குறிப்புக, கணக்குகளை எல்லாம் ஏட்டுல எழுதணும்னு அல்லாரும் முயற்சியோ முயற்சி செய்யுறாங்க... ஆனா, எழுதி வெக்கவே முடியலையாம்....

செஞ்சிட்டு இருக்குற ஆராய்ச்சிய உட்டுப் போட்டு, ஏன் எழுத முடியலைன்னு ஆராய்ச்சியத் துவங்கினாங்களாம் விஞ்ஞானப் பக்கிக... எத்தனியோ பேனாவுகளை மாத்தி மாத்தி எழுதிப் பார்த்தாலும் முடியலையாம்...

இதைப் பார்த்துட்டு இருந்த வேலையாள் ஒருத்தரு, படக்குனு சிலேட்டுக் குச்சியில, ரைச்சோ ரைச்சுன்னு ரைச்சு (tick mark) போட்டு போட்டுப் பார்த்துகிட்டு இருந்தாராம்...

அதைப் பார்த்ததுமே, அந்த விஞ்ஞானப் பக்கிகளுக்கு விளங்கிடுச்சி... ஆய்வு மையத்துல இருக்குற மாற்றியமைச்ச புவி ஈர்ப்பு விசையினால, மையி கீழ் வாக்குல எறங்குறதுல சிக்கல்னு....

என்ன பிரச்சினையானாலும்,மலையாட்டம் நினைச்சு பதட்டப் படக்கூடாது... எளிமையா, அடிபணிஞ்சு யோசிச்சாத்தான் எதுவும் நடக்கும்னு சொல்லிச் சொல்றதுக்கு எங்க ஆசான் இந்தக் கதைய நமக்கு சொன்னதை, நானும் சொல்லிகிடுறேனுங்க...

ரைச், ரைச்.. போலாம் ரைச்....

9/26/2010

ச்சட்டனூகா

சட்டனூகா விமான நிலையத்தில்
வெளியேறி
பக்கவாட்டில் இருக்கும்
எழில்மிகு லுக்அவுட் மலையின்
அழகில் இலயித்து
வனப்பில் மூழ்கி
மெல்ல மெல்ல அதன்மீது
ஏறிக் கொண்டிருந்தேன்!

ஐயா,
கொஞ்சம் இறங்குறீங்களா?
விடுதி வந்தாச்சு!
சடுதியில்
நினைவுக்குத் திரும்பியவனாய்
மேரியாட் விடுதிக்குள்...

புன்னகை தவழ
பிஞ்சு மொழியில்
வரவேற்பு மங்கை!
அவள் கொடுத்த
கனிவுமுலாம் பூசிய
அந்த திறவு அட்டையுடன்
மின்தூக்கியில் ஏறி
உயரச் சென்று
அறையை அடைந்தேன்!

அமைதி தேவதை
அன்பாய் வரவேற்று
பக்குவமாய்க் காட்டினாள் 
பரிசினை!
ஆம், இருந்தது
அறை முழுக்கத் தனிமை!!

9/25/2010

பொய் விழுது

தன்னறையிலமர்ந்து
நெடுநேரமாய்
அலசி, ஆராய்ந்து
கொண்டிருந்தான்...
கூடுவதும்
குறைவதுமாய்
ஓரிடத்தில் நில்லாது
போக்குக் காட்டிக் கொண்டிருந்த
கணக்காயத்தில் இருந்த
தன் பங்குகளை!

ஏங்க? எத்தினிவாட்டி சொல்றது??
வெளியில
ரொம்ப நேரமா
உங்களுக்கோசரம்
உக்காந்தது உக்காந்தவாக்குல
காத்திட்டு இருக்காரு
ஊர்லிருந்து வந்துருக்குற
உங்க அப்பா!!

9/23/2010

தொலைந்தவன்

தாயகம் சென்றிருந்தேன்;
நான் தொலைந்து போன
அயல்நாடுகளைப் பற்றி
அடுக்கடுக்காய்
அடுக்கிச் சொன்னேன்;
இரவு நீண்டு விடியல் வந்தது!
கிழக்குப்புறச் சுவர்க் கெளளி
சப்புக் கொட்டியது
ஊர் எல்லையில்
சேவல் கூவியது
வில்வ மரத்துக் காகம்
கரைந்து சொல்லிற்று வணக்கம்
முதலாளாய் எழுந்தாள் அம்மா
ஆரவாரம் எதுவுமின்றி
அமைதியாய்
அன்பொழுகக் காட்டினாள்
நான் தொலைத்து வந்த
தாய் மண்ணை!!

9/22/2010

கொடிய அலைபேசி!

குழந்தைகளையும் பாராமல்
ஓடிப்போன அந்த அண்டை வீட்டு
அத்தையின் வெற்றிடத்தை நினைத்து நினைத்து
அழுது புலம்பும் மாமாவை
வீட்டு வாசலில் இருந்து பார்த்த
அரும்புமொட்டு ஒன்று,
அம்மா, அம்மா...
நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??
அக்கணமே,
சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
தொடுப்பிலிருந்த
அந்தக் கொடிய அலைபேசி!