தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு, இரண்டே இரண்டு கலைவிருந்திநர்கள்தாம் வந்திருக்கின்றனர். முதலாமவர் எழுத்தாளர் பெருமாள் முருகன், அடுத்தவர் தூரிகைக் கலைஞர் டிராட்ஸ்கி மருது. வீட்டுக்குழந்தைகள், அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு, எங்கள் எல்லாருக்கும் விருப்பமானவர்களாக, நுட்ப உணர்வினை ஊட்டுபவர்களாக இருந்தனர்.
அண்ணன் மருது அவர்களின் ”கோடுகளும் வார்த்தைகளும்” நூலிலிருந்து, “தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக்கலை வரலாறு உண்டு. ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியல்க்கலைகளைக் கண்டுணரவும் பாரவைப்படிப்பினைப் பெறவும் கலைமனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்”.
எட்டு கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன் என்பதைக் காட்டிலும், அதனுள் மூழ்கிப் போய் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேனென்றுதான் சொல்ல வேண்டும். நூலெங்கும் ஓவியங்கள், ஓவியங்கள் சார்ந்த கட்டுரைகள், அடுக்கடுக்கான தகவல்கள். நானாக, வலிய வலிய நூலை எட்ட வைத்திருக்கின்றேன், தற்போதைக்கு!
கண்டறிதல் என்பது ஒரு வேள்வியைப் போன்றது. ஒரு படத்தைப் பார்த்த மட்டிலும், காட்சி, அது இருக்கின்றது, இது இருக்கின்றதெனும் தட்டையான பார்வையிலும் சென்று விட முடியும்; அதன் ஆழத்தின் ஆழத்துக்கேவும் ஒருவரால் தம்மை அதில் மூழ்கடித்துக் கொள்ள முடியும். அது அவரவர் நுண்ணறிபுலத்தைப் பொறுத்தது.
சில நாள்களுக்கு முன்புதான் நான் நண்பர்களிடம் குள்ளாம்பூச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதன்முதலில் நான் காடேகியது, என் அம்மாவழிப் பாட்டனாரின் ஊரில்தான். காலையில் நாய்க்கு சாமைக்கூழ் தூக்குப் போசியில் கொண்டு போக வேண்டும். போய்ச் சேர்ந்ததும் மாடு மேய்க்க வேண்டும். மாடு மேய்க்கையில், எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் ஏதோவொரு துணுக்குறு செயற்பாடுகள் கிடைத்துவிடும். கிடக்கும் கற்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போடுவது. அப்படிப் புரட்டுகையில், கல்லுக்குக்கீழே தேள், பாம்பு, அரணை, தேரை என ஏதாகிலும் இருக்கும். அவற்றைக் கொல்வது ஒரு விளையாட்டு. அதன் நீட்சியாக இடம் பெற்றதுதான் இதுவும். குறங்காட்டுப்(தரிசு நிலம்) புழுதியில் ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணக்கிணறுகள் இருக்கும். புழுதிக்காட்டுக்குள், தோய்ந்த மெலிதான மணற்பரப்புடன் கூடிய சிறு சிறு குழிகள். அதனுள் எறும்பு போன்றவை விழுந்து விட்டால் மீள முடியாது. மீள்வதற்குள்ளாகவே, குழிக்குள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி அவற்றைப் பிடித்துத் தின்று விடும். வில்லத்தனமான, விளையாட்டுத்தனமான மனம். ஓடியோடித் தேடிப் போய், அவ்வாறான மரணக்குழிகளைக் காலால் எத்திவிடுவது. குழி குலைந்து, அதனுள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி ஓட்டமெடுக்கத் துவங்கும். அந்தக் காட்சியைக் காண்பதில் ஒரு சிரிப்பு. இலயிப்பு.
ஒரு கட்டத்தில் ஆழ்மனம் தலையெடுக்கின்றது. குழியின் அமைப்பைக் கண்டு வியப்புக் கொள்கின்றது மனம். அந்த சிறுபூச்சி எப்படி இப்படியான மரணக்கிணற்றைத் தோண்டி இருக்க முடியுமென வியப்பு மேலிடுகின்றது. தோண்டுகின்ற காட்சியைக் காண வேண்டுமென ஆவல் கொள்கின்றோம். மனிதநடமாட்டம், தப்படி அதிர்வைக் கண்ட பூச்சிகள் மண்ணுக்குள் பதுங்கி விடும்தானே? ஏதேவொரு நாள் எவனுக்கோ அக்காட்சி பிடிபடுகின்றது. அழைத்துப் போகின்றான். சலனமின்றி வரச் சொல்கின்றான். பூச்சிக்கு உணர்வுப்புலம் மட்டுப்பட்டிருக்கக் கூடும். தோண்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓயாத நடையில், நடையாய் நடந்து கொண்டிருக்கின்றது. தன் சிறுகால்களால் நடந்து நடந்தேவும் சாய்குழியை உண்டாக்கிக் கொள்கின்றது அப்பூச்சி. பட்டதும் வழுக்கி விழுவதற்கான மேற்பரப்பை நுணுக்கரிய நுண்துகள் மண்ணால் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. எஞ்சோட்டுப் பையன்கள், திண்ணைகளில் படுத்துக் கொண்டு விடிய விடிய கருத்துப் போர் கொள்கின்றோம். மீண்டும் காடேகுதல். அலைகின்றோம் குழிகளைக் கண்டறிய.
மனம் அடுத்த கட்டத்திற்குப் பாய்கின்றது. மெய்யியல் தொடர்பான வாதவிவாதம். இப்படியான சொற்களெல்லாம் இப்போது பயன்படுத்துகின்றோம். அப்போதெல்லாம் அவை குறித்த எந்த பிரஞ்ஞையும் இருந்திருக்காதுதானே? இந்த இடத்தில் மரணக்கிணறு உண்டாக்கிக் கொண்டால், தமக்கு இரை கிடைக்குமென்பது அந்தக் குள்ளாம் பூச்சிக்கு எப்படித் தெரியும்? சூட்சுமம். காத்திருக்கும். வரும் வரையிலும் காத்திருக்கும். தன் இடத்துக்கே வந்து இரையாகும் நுட்பம் அதற்கு வாய்த்திருக்கின்றது. மாடு மேய்க்கும் இந்தப் பையன்கள் கொள்ளும் உணர்வுதானே கலையுணர்வு? பேரூர் கோவிலுக்குச் செல்வோம். கோயிலின் நாற்புறங்களிலும் ஓவியங்கள், சிற்பங்கள் உண்டு. இருந்து, பார்த்து, காண்பதைப் பற்றிய தம் நினைப்புகளைச் சொல்ல, மற்றவரும் தம் எதிர்கருத்தைச் சொல்லும் காலமொன்று இருந்ததுதானே?
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! (சிவபுராணம் 76 - 79)
நோக்குகளில் அரிய நோக்கே, நுணுக்கங்களில் அரிய நுணுக்கத்தின் நுண்ணுணர்வேயென்றெல்லாம் மணிவாசகப் பெருமான் பாடிச் சென்றிருப்பதுதானே? Mass Media & Communication, பெருந்தொகை ஊடகங்களால் தனிமனிதச் செயற்பாடுகள் அருகிப் போய்விட்டன. ஒன்று கிடைக்கும் போது, மற்றொன்று கைவிடப்படுகின்றது. வாசிப்பு மட்டுப்படுகின்றது. ஊடகக்கட்டமைப்புகள், தனிமனித வெளிச்சம் பாய்ச்சிப் பாய்ச்சியே, வெளிச்சம் நோக்கிய விட்டில்பூச்சிகளை அறுவடை செய்து கொள்கின்றன. சொல்வதை அப்படியப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு தவிர்க்கவே இயலாதவொன்றாக ஆகிவிட்டது. எனவேதான் பேச்சாளர்களுக்கு இருக்கும் தேவை, மதிப்பு, கலைஞர்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றது! நுண்ணுணர்வு கொண்டிருப்பவர்கள், எளிதில் பொதுப்போக்கின்பால் கிளர்ச்சியுறுபவர்களாக இருந்து பொருளியல் வாழ்வில் தோற்றும் போய்விடுகின்றனர் அல்லது தமக்குத்தானே தளையும் இட்டுக் கொள்கின்றனர்.
𝑻𝒉𝒆 𝒆𝒚𝒆 𝒔𝒆𝒆𝒔 𝒐𝒏𝒍𝒚 𝒘𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒎𝒊𝒏𝒅 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒄𝒐𝒎𝒑𝒓𝒆𝒉𝒆𝒏𝒅! -Robertson Davies
-பழமைபேசி.
No comments:
Post a Comment