சொல்லவருவதை எளிய எடுத்துக்காட்டுகளின் மேலேற்றி உருவகப்படுத்திச் சொல்வதும், அந்தந்த நிலப்பகுதிக்கேவுரிய பண்பாட்டுத் தன்மைகளுடன் வாய்மொழிச் சொல்லாடலாக பேச்சுகளில் வெகுசரளமாகப் புழங்கி வரக்கூடியன இவை. இத்தகு பழமொழிகளிலும் அவற்றையொத்த சொலவடைகளிலேயும் தூய தமிழ்ச்சொற்கள், இயல்பானதும் உண்மையானதுமான பற்றியங்கள் நறுக்குத் தறித்தாற்போல வெளிப்படும்.
”உண்டவன் பாய் தேடுவான். உண்ணாதவன் இலை தேடுவான்”. நம் வாழ்வியலில், உழைப்பாளர்கள் மத்தியில் இடம் பெறுகின்ற ஓர் எளிய நிகழ்வைச் சுட்டி, ஆழமானதும் தத்துவார்த்தமானதுமான ஒரு கருத்தினை வெளிப்படுத்துகின்றது இப்பழமொழி. படித்தவுடனே வேடிக்கையாகத் தோன்றும். அந்த வேடிக்கைக்கு இடையேவும் மனத்தைத் தைக்க வல்லது இது. அதனாலேதான் இது பழமொழி. இவ்வுலகம் தேவைகளின்பாற்பட்டுத்தான் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கின்றது. தேடலும், நாடலுமே நம்மை மேன்மைக்கு இட்டுச் செல்லும். உண்டவனுக்குக் கிரக்கம் ஏற்படும். உடல் சற்று ஓய்வுகொண்டால்தான் அடுத்த கட்ட உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியும். உண்ணாதவனுக்கோ பசி. உடனே பசியாறுதல் தேவையாக இருக்கின்றது. அதற்கான விழைவை மேற்கொண்டாக வேண்டும். ஆக மொத்தத்தில், ஒருவன், அறிவுத்தேடல், பொருட்தேடல், அன்புத்தேடல் என ஏதோவொன்றின்பால் இயங்கிக் கொண்டிருத்தல் அவசியம். எவ்விதத் தேடலுமற்று இருக்கும் நிலையில்தான் உள்ளமும் உடலும் பீடிக்கத்தலைப்படும் என்பதையெல்லாம், போகின்ற போக்கில் சொல்லிச் செல்கின்றது.
”மூக்குமசிர் புடுங்குனா பாரங்குறையுமா?”. ஒருவருக்கு உடல் எடை குறைக்க வேண்டுமென்கின்ற தேவை இருக்குமேயானால், அவர், உடற்பயிற்சி, மனப்பயிற்சி, உணவுப்பயிற்சி ஆகியவற்றைக் கொண்ட உழைப்பினை, திட்டமிடலை மேற்கொண்டாக வேண்டும். ’வெறுமனே மூக்குமயிர்களைப் பிடிங்கினமாத்திரத்தில் எடை குறையுமா?’ எனும் வினாவின் மேலேற்றி, ஆழ்ந்த புரிதலுக்கான தேவையையும் திட்டமிடலையும் வலியுறுத்துகின்றது இப்பழமொழி. படிமத்தால் தத்துவார்த்தமானதாக உருவெடுக்கின்றது. பாரம் என்பது இலக்கு என்பதனையும், மூக்குமசிர் என்பது மிக மேலெழுந்தவாரியாக சடங்காகச் செய்கின்ற ஏதோவொன்றையும் குறிக்கின்ற குறியீட்டுச் சொற்களாக இடம் பெற்றிருக்கின்றன.
”கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பினதை எல்லாம் சொல்லாதே”. எளிய மொழியில், சொல்வதற்கு இதமான சொற்களில், எதுகை மோனை போன்ற மொழியழகினைக் கைக்கொண்டும் புழங்கப்பட்டு வருகின்றன பழமொழிகள். முக்காலத்துக்கும் பொருந்திவருகின்றாற்போலவும் அமைந்து வருகின்றன. மின்னணுத் தொழில்நுட்பம் மேலோங்கி இருக்கின்ற இக்காலகட்டத்தில் போலிச்செய்திகளின் வீச்சும் பெருக்கமும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆனால், தலைமுறை தலைமுறை, வாய்வழியாகக் கடந்து வந்திருக்கின்ற இப்பழமொழியைப் பாருங்கள். அரிய கருத்தினை எவ்வளவு இசைநயம் கூடியமொழியில் சொல்லிச் செல்கின்றது. Science doesn't care what you believe. சிந்தைக்குட்படுத்தப்பட்டு, காரண, ஏரணம், தரவுகள், சான்றுகள் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படாதவொன்றை, மேலெழுந்தவாரியாகக் கேட்கப்படுவதை நம்பிச்செயற்படுங்கால் ஏற்படும் விளைவுகளை உணர்த்திச் செல்கின்றது இப்பழமொழி.
கருத்து என்பதில் நல்லகருத்து, தீயகருத்து என்பதில்லை. கருத்து என்பது, கருத்து என்பது மட்டுமே. அதனின்று நாம்தான், நல்லது எது, தீயது எது, சரியானது எது, சரியல்லாதது எது, உள்ளது எது, இல்லாதது எது, மெய் எது, பொய் எது முதலானவற்றையெல்லாம் உணர்ந்து செயற்பட வேண்டும். பழமொழிகளும் அப்படித்தான். சமூகத்தில் இடம் பெறுகின்ற செயல்களைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும். நாம்தான் அவற்றை ஆய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். வேடிக்கைக்காக மட்டுமே அல்ல அவை.
’கோபப்படாத பெண்சாதி பெண்சாதி அல்ல. கொதிக்காத சோறு சோறு அல்ல”. மரபார்ந்த கூற்றுகள் பழமொழிகள். வாழ்வியல் வரலாற்று அனுபவத்தைச் சொல்லிச் செல்கின்றன. சமைக்கத் தெரிஞ்சவனுக்கு உமையவள் உள்ளங்கையில்!
-பழமைபேசி, pazamaipesi@gmail.com.
[கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா மலருக்காக எழுதப்பட்டது]
No comments:
Post a Comment