7/02/2018

அருகிவரும் கதைக்களம்

புவி தோன்றி உயிர்கள் உயிர்த்த அந்த முதற்கணத்திலிருந்து கதைகளும் தோன்றின. மானுடத்தின் அடிச்சுவடுகளாக காலங்காலமாகக் கதைகளே இருந்து வந்துள்ளன. குறிப்பாக மாந்தனின் உயிரணுக்களைக் கொண்ட ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்தில் (Deoxyribonucleic acid), மரபுசார் விழுமியங்கள் கதைகளாகவே பொதிந்துள்ளன. கதைகளுக்கும் மாந்தனுக்குமான பிணைப்பு என்பது உணர்வார்ந்தவை. எந்தவொரு பற்றியத்தையும் கதையாகச் சொல்லும் போது, மாந்தனின் அகக்கண்கள் அதனைத் தெளிவாக உள்வாங்கி, எளியமுறையில் மாற்றங்களை உருவாக்கித் தன்னகத்தே கொள்ளக் கூடியதாகும்.

பிறந்த குழந்தைகூடக் கதை கேட்கக்கூடிய திறனுடனே விளங்குகிறது. இசையைக் கதையோடு குழைத்துப் பாட்டாகப் பாடினோர் பெரியோர். தாலாட்டுப் பாடல்கள், களியாட்டப் பாடல்களென எங்கும் கதைகள் நீக்கமற நிறைந்திருந்தன. மனிதசமூகத்தில் இடம்பெறும் எல்லாவற்றையும் குறித்துக் குழந்தைகளுக்கு, விலங்குகள், தாவரங்கள், இயற்கைக்கூறுகள் முதலானவற்றின் மீது ஏற்றிச் சொல்லும் போக்கு தமிழ்மரபில் 1990ஆம் ஆண்டு வரையிலும் வெகுவாக இருந்தது. ஊடகம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை மேலோங்கி இருந்தாலும், கதை சொல்லும் வாழ்வியல்முறை மேலைநாடுகளில் வாழ்வின், கல்வியின் அடிப்படையாகவே இன்னமும் இருந்து வருகிறது. ஆனால், தாய்த்தமிழ் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடையேயும், கதை சொல்லும் போக்கும், இலக்கிய வாசிப்பும் வெகுவாகக் குறைந்து விட்டது. இது தமிழின் நீட்சிக்கே பெரும் சிக்கலை உண்டாக்கக் கூடியவொன்றாகும்.

நிகழ்ச்சி, தகவல், செயல் என எதுவாக இருந்தாலும் அதைச் சொல்வதன் அடிப்படை கதையே ஆகும். கதையினின்று, காட்சிப்படுத்தலை நீக்கித் தகவலை மட்டும் கொடுத்தால் அது கட்டுரையாகிவிடும். சுருக்கமாக உணர்வின் வாயிலாக உள்ளத்தைத் தொடுமாயின், அது கவிதையாகிவிடும். ஆக, எல்லாவற்றுக்கும் கதையே அடிப்படை.

உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்னர், சந்தைக்கு வருகின்ற எல்லாப் பொருட்களையும், அதனதன் கதைகளைச் சொல்லியே வணிகப்படுத்தினர். தொழில்நுட்பம், சந்தையில் முந்தித்தரவேண்டிய கட்டாயம், கதைசொல்வதற்குச் செய்யப்படும் செலவைக் குறைப்பதால் கிடைக்கும் கூடுதல் இலாபம் போன்றவற்றின் தேவை கருதி, பொருட்களின் கதைகளைச் சொல்லாமல், அவற்றின் சுருக்கவுரைகளை முன்னிலைப்படுத்தி விற்கத் தலைப்பட்டனர் வணிகர்கள். அத்தகைய போக்கு துவக்கத்தில் பயனளிப்பதாகத் தோற்றமளித்திருந்தாலும், பிற்பாதியில் கூடுதல் செலவுகளுக்கே வித்திட்டது. நுகர்வோர் எல்லாம் கூடுதல் கேள்விகளை பலவாக்கிலிருந்தும் கேட்கத் தலைப்பட்டனர். ஒவ்வொருவரோடும் தனித்தனியாக விளக்கமளித்துச் சொல்ல நேரம் செலவிட வேண்டியிருந்தது. இதன்பொருட்டுத்தான், பன்னாட்டு இணையவழி வணிகத்தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், கருத்துமணிக் கோப்புகள்(power point slide) பாவிப்பதைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, கதைசொல்லி விவரிக்கும் முறைமைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பினார். அமேசானைத் தொடர்ந்து, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கதை சொல்லி வணிகம் மேற்கொள்ளும் பழக்கத்திற்கு தத்தம் வணிகங்களை ஆட்படுத்தி வருகின்றன.

கதைகள் சொல்வதும், வாசிப்பதும் பொழுதுபோக்குப் பண்பெனும் நம்பிக்கை, தமிழர்களிடையே வெகுவாக இடம் பெற்றுவருவது கவலையளிக்கக் கூடியதாகும். கதைகளின் வாயிலாக, அடுத்தவரின் வாழ்வில் இடம் பெற்ற அனுபவத்தை நமதாக்கிக் கொண்டு பல படிப்பினைகளைப் பெற முடியும். மனநிறைவை எட்டமுடியும். சமூகத்தில் இடம்பெறும் ஏற்றத்தாழ்வுகள், பொதுப்புத்திக்கு அகப்படாத நுண்ணசைவுகள், வரலாற்றுத் தகவல்கள், அறம், நெறி, கட்டுப்பாடு, கட்டுடைப்பு, அரசியல்சார் விழுமியங்கள் எல்லாவற்றையும் அதனதன் களத்தில் வைத்து அறிந்து புரிந்து கொள்ளமுடியும். உணர்வோடு இயைந்துவந்து நம் மனத்தை ஆர்ந்து மாற்றத்தை உண்டாக்க வல்லதாகும். மொழியின் வளமும், மரபும், வாழையடி வாழையென அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கதைகள் சொல்வதன் வாயிலாகவும் வாசிப்பதன் வாயிலாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கற்பனைத் திறன், புத்தாக்கத்திறன், புனைவுத்திறன் போன்றவற்றையும் மேன்மையுறச் செய்து, மாந்தனை நல்ல திறமுள்ளவனாய் ஆக்கச்செய்தலுக்கும் கதைகளே கருவாகும்.

ஒரு பன்றியும் கடற்பசுவும் ஓடியாடி விளையாடுகின்றன. பன்றியின் வேகத்துக்குக் கடற்பசுவால் ஓட இயலவில்லை. பன்றிக்கு வருத்தம் மேலிடுகிறது. அழுகிறது. இக்கதையைக் கேட்கிற, படிக்கின்ற அந்தக் குழந்தையும் அழுகிறது. பன்றிக்கு ஓர் யோசனை பிறக்கிறது. கடற்கரையோரம் போய் நின்று கொண்டு, நீ தண்ணீரில் நீந்திவா. நான் கரையில் ஓடிவருகிறேனென்று சொல்கிறது. அது போலவே கடற்பசுவும் தண்ணீரில் நீந்திப் போகிறது. அதற்கிணையாக, கரையிலிருக்கும் பன்றியும் ஓடுகிறது. கடற்பசு நீந்துவதைப் பார்க்கிற பன்றி சிரித்துக் கொண்டே ஓடுகின்றது. அந்தப் பன்றியின் சிரிப்பைப் படிக்கிற குழந்தையின் மனமும் நிறைந்து, அக்குழந்தையும் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கின்றது. இப்படித்தான் மேலைநாட்டுச் சமூகம், குழந்தைகளின் மனத்தைப் பண்படுத்துகிறது. சமத்துவம், விட்டுக்கொடுத்தல், தோழமை முதலான எல்லாப் பண்புகளும் கதைகளினூடாகவே மெருகேற்றப்படுகின்றது. படிக்கிற, கேட்கிற குழந்தைகளும் பல்வேறு கதைகளைப் புதிது புதிதாய் உருவாக்குகின்றன. புத்தாக்கம் பிறக்கிறது. இத்தகு புத்தாக்கப் பண்பினால், அவர்கள் வளர்ந்து ஆளாகும் போது, அவர்களால் பல புதுப்புது படைப்புகள் தொடர்ந்து படைக்கப்பட்டு, இவ்வையகமே மேன்மையுறுகிறது.

’நேட்ச்சர் கம்யூனிகேசன்’ எனும் நிறுவனம் பிலிப்பைன்சு, தாய்லாந்து, கென்யா, சீனம் உள்ளிட்ட 18 நாடுகளில் வாழும் பல்வேறு தொன்மையான இனக்குழு மக்களிடையே இருவிதமான ஆய்வுகளை மேற்கொண்டது. நவீனமற்ற கிராமப்புறங்களில், மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. மருத்துவம், இடர்காலம், குடும்ப நெருக்கடி, பஞ்சம் முதலான துன்பகாலங்களில் உதவி கேட்டுப் போகக் கூடிய இடங்களாக, கதைகளைச் சொல்லக் கூடியவர்களின் வீடுகளே இருந்தன என்பது முதலாம் ஆய்வில் தெரிய வந்தது.

பிறிதொரு ஆய்வில், ஆள் ஒன்றுக்கு தனித்தனியாக பனிரெண்டு ஒவ்வொரு கிலோ அரிசிப் பொட்டலங்கள், 300 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு வழங்கப்பட்டன. அதை அவர்களும் வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாமெனச் சொல்லியே கொடுக்கப்பட்டது. கொடுத்து முப்பது நாட்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதல் குழுவில் 50% பொட்டலங்கள் மற்றவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இன்னொரு குழுவில் 20%க்கும் குறைவான பொட்டலங்களே அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இவர்களுள், 50% பொட்டலங்கள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்த குழுவில் அதேயளவு, 50% உறுப்பினர்கள் கதை சொல்லிகளாக இருந்ததும் ஆய்வில் உறுதியானது. ஆக, கதைகள் சொல்வதும் கேட்பதும் வாசிப்பதும் எப்படியெல்லாம் மாந்தநேயப் பண்பாட்டில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுகளாகும்.

மொழி, மொழியைச் சார்ந்த நிலப்பரப்பு, நிலப்பரப்பைச் சார்ந்த ஒரு தேசிய இனம், இவையாவும் அதனதன் மரபு, கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவும், மொழியை காலத்துக்கொப்ப மெருகேற்றி, அதே வேளையில் அதன் வளமான சொற்களையும், இலக்கணத்தையும் அழகையும் பேணிக்கொள்ளவும் கதைகளே அடிப்படை. கதைகளைச் சொல்லும் கலைஞர்களை, படைப்பாளிகளைப் போற்றுகிற சமூகம், நயமான வாழ்வைக் கதைகளினூடாகச் சென்றடைந்து விழுமியச் சிறப்பெய்தும், அந்த புத்தம்புது மழையைப் போல, செக்கச்சிவந்து விடியலைக் கொடுக்கும் புதுவானத்தைப் போல.

நன்றி: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா மலர், 2018

3 comments:

Unknown said...

அருமை

M. RUDRAPATHI said...

புராணங்கள் எல்லாம் கதை வடிவில் இருந்தாலும் அவையனைத்தும்
அரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளன. தமிழர்கள் தத்துவத்தை மறந்து விட்டு கதையை மட்டுமே குழந்தைகளுக்குச் சொன்னால் அதில் என்ன பயன்?

பழமைபேசி said...

//கதையை மட்டுமே குழந்தைகளுக்குச் சொன்னால் அதில் என்ன பயன்?//

கதைகளில் நல்லகதை, தீயகதை, பயனில்லாத கதையென இல்லவே இல்லை. எந்த ஒரு நிகழ்வு, கதையிலும் தெரிந்து கொள்ள நல்லதோ, கெட்டதோ, தகவலோ, எதொவொன்று இருந்தே தீரும்.