4/23/2018

லஸ்கர் சுமதீ!

எப்பயும் போலத்தான், நான் எட்டு ஐம்பதுக்கே வகுப்புக்கு போய்ட்டன். வாரப்பட்டி வேலுசாமி டர்புர்ன்ண்ட்டு வந்தான். என்னடா விசியம்ன்னேன். ”நேத்து லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்தன். இன்னிக்கு அவ அப்பனைக் கூட்டிட்டு வந்துட்டாடா” அப்படின்னான். ‘செரி விட்றா” அப்படின்னு சொல்லவும், வகுப்பாசிரியரும் தமிழாசிரியருமான சுல்தான் பேட்டை கோவிந்தராஜ் வாத்தியார் வந்துட்டாரு. பாடம் நடத்தத் துவங்கி, அரை மணி நேரம் இருக்கும். பக்கத்துல இவன் பரபரன்னுகிட்டு இருந்தான். ‘போடா, ரீசசு வருதுன்னு சொல்லிட்டுப் போயி பார்த்திட்டு வாடா”ன்னு சொல்லி நொச்சு நொச்சுன்னுகிட்டே இருந்தான். தாங்க முடீல. இடைவேளை பத்து மணிக்குத்தான். அப்பதான் வழிபாட்டு அணிவகுப்பும் நடக்கும். ஆனா இன்னும் அதுக்கு இருபது மணித்துளிகள் இருந்தது. எழுந்து நின்னு, “சார், ரீசசு”. “வகுப்பு ஆரம்பிச்சி அரை மணி கூட ஆவலை. சரி, ஓடு, ஓடு”, அப்படின்னு எள்ளலா சொன்னாரு கோய்ந்தராஜ் வாத்தி. இயல்பாவே அவரு சரியான நக்கலும் கிண்டலுமான ஆள். வெலவெலத்துதல, “இல்ல சார், போய்ட்டன். வேலுச்சாமிதாம் கேட்டுப் போகச் சொன்னான்”, அப்படின்னேன். “அடச் சீ... நாலு கழுத வயசாச்சி... போ, சுத்தம் செய்றதுக்கு வாட்ச்மேன் தங்கமணியக் கூட்டீட்டு வா போ”, அப்படின்னு சொன்னாரு. எனக்கு மகா கேவலமா இருந்திச்சி. வெளியில வந்தன். தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு முன்னாடி மரங்கள் நிறைய இருக்கும். அதில ஒரு மரத்துக்குக் கீழ, வாட்ச்மேன் அண்ணனும், லஸ்கர் சுமதியோட அப்பனும் நின்னு பேசிட்டு இருந்தாங்க. “அண்ணா, தமிழ்ப்பண்டிதர் உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னாரு” “ஏன்டா தம்பி, என்ன விசியம்?”ன்னு தங்கமணியண்ணன் சாதுவாத்தான் கேட்டாரு. “அதுங்ளா. வாரப்பட்டி வேலுச்சாமி லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்ததினாலத்தான் அவங்க அப்பா வந்திருக்காருன்னு நினைச்சி”ன்னு சொல்லிக் கூட முடிக்கலை. “வா போலாம்”னு சொல்லி நடக்க ஆரமிச்சிருந்தாரு தங்கமணியண்ணன். எங்க ஊர்ப்பக்கம் லஷ்கர்னு ஒரு கதாபாத்திரம் உண்டு. திருமூர்த்தி மலையிலிருந்து, விளாமரத்துப்பட்டி, குண்டலப்பட்டி, நெகமம், சுல்தான்பேட்டை, பல்லடம், காங்கயம், வெள்ளகோயில் வரைக்கும் ஒவ்வொரு ஊர்லயும் லஸ்கர் இருப்பாங்க. அவங்களுக்கு, கால்வாய் பராமரிப்பு, மதகு பராமரிப்பு வேலை. ஆங்கிலேயர்கள் கப்பல்கள்ல போகும் போது உதவியாள் வெச்சுகுவாங்க. அதனோட பேரான “லஸ்கர்” என்பதே இதுக்கும் நிலைச்சுப் போச்சி. அதனால், ஊர் ஊருக்கும் லஷ்கர் கிருஷ்ணன், லஷ்கர் மணியன்னு இருப்பாங்க. சுல்தான் பேட்டையில இவர் பெயர் என்னன்னு யாருக்கும் தெரியாது. ‘லஸ்கர் ” அவ்வளவுதான். அவ்ரோட மகள் பெயர், “லஸ்கர் சுமதி”. மகளுக்கு எவனோ லெட்டர் குடுத்துட்டான்ங்கிற பதற்றத்துல அவரும் எங்ககோட வர ஆரமிச்சிட்டாரு. வகுப்பறைக்குப் போனம். “கோய்ந்த்ராஜ் சார், உங்களையெல்லாம் நம்பித்தான புள்ளைகளை பள்ளிக்கோடம் அனுப்பி வெக்கிறம். அது எவன் எம்புள்ளகிட்ட லெட்டர் குடுத்தவன்?”ன்னு எகிற ஆரமிச்சாரு. வாரப்பட்டி வேலுச்சாமி துடுக்கானவன். வாயி, வாயி, அப்படியொரு வாயி. எந்திரிச்சு தகிரியமா முன்னாடி எங்ககிட்டயே வந்துட்டான். “ஆமா, நீங்கதான் எங்கம்மாகிட்ட லெட்டர் குடுக்கச் சொன்னீங்ளாமே? அதான் நான் உங்க புள்ளகிட்ட குடுத்தன்”, அப்படின்னான். இதென்னடா நாறப்பொழப்பா இருக்கேன்னு எல்லாரும் திகைப்பாப் பார்க்க, எனக்கோ படபடன்னு இருந்திச்சி. ஆமா. கட்டுத்தறியில கொட்டுறதுக்கு வாய்க்காமேட்டு ஜல்லி வேணும்னு உங்கப்பந்தான் சொன்னாரு. அதான் எஞ்ஜீனியருக்கு ஒரு லெட்டர் எழுதிக் குடுத்து சேங்சன் பண்ணி வாங்கிக்கலாமுன்னு சொன்னன் அதுக்கு இப்பென்ன? அப்படின்னாரு. அதான், எங்கப்பன் குடுத்த லெட்டரை நானும் சுமதிகிட்டக் குடுத்தன். அதுக்கு இப்பென்ன அப்படின்னான் வேலான். இதானா விசியம்? வகுப்பு அமைதியாச்சுது. இதான் வாய்ப்புன்னு கோயிந்தராஜ் வாத்தியாரும், அவரு தோட்டத்து கட்டுத்தாரைக்கு ஜல்லி கேட்டு பேச்சை ஆரமிச்சாரு. நான் போயி என்ற எடத்துல உட்கார்ந்தேன். பின்னாடி பெஞ்ச்சில இருந்த சுல்தான் பேட்டை மேட்டுக்கடைப் பழநிச்சாமி சும்மா இருக்க வேண்டியதுதான? ”செரியான ஜல்லிடா காலீல”ன்னான். வாத்தியார் திரும்பி முறைச்சாரு. முகமெல்லாம் ’நறநற’. அதுக்கப்புறமும் அவன் சும்மா இருந்தானா? “ஏன்டா, இருந்து இருந்தும் ஜல்லிப்பய மவதான் உங்களுக்குக் கெடைச்சாளாடா?”ன்னான். எல்லாப் பயலுவளும் சிரிச்சானுவ. வாரப்பட்டி கதிர்வேலனுக்கும் வாரப்பட்டி வேலனுக்கும் காலங்காலமாவே வாய்க்கா வரப்பு. இஃகிஃக்கீன்னு கதிரானும் கெக்கலிக்கவே வேலனுக்கு கோவம் வந்திட்டுது. என் காலை பச்சக்னு மிதிச்சான். நான் மேட்டுக்கடை பழனியப்பனை ஓங்கி ஒரு உதை விட்டேன். அந்தப்பக்கம் வேலனும் கதிரானும் கட்டுல எறங்கிட்டானுக. செரியா இண்ட்டர்வெல் பெல் அடிச்சது. திரும்பிக் கூடப் பார்க்கலை. விறுவிறுன்னு ஹாஸ்டல்ல இருக்குற என்ற ரூம்புக்கு போனன். வார்டர் சந்திர மெளலி, “என்னடா, பிரேயருக்குப் போகல?”. “இல்ல சார், எனக்கு வவுத்து நோவு”. “சரி, கிட்டான்கிட்ட சொல்லி மத்தியானத்துக்கு ரொட்டியும் வறக்காப்பியும் ரூம்புக்கே கொண்டாந்து குடுக்கச் சொல்றன்”ட்டு போயிட்டாரு. யார் யாரோ, அவங்கவங்க கட்டுத்தாரைகளுக்கு ஜல்லி கொட்டுறதுக்காக, நான் வறட்டு ரொட்டியத் தின்னுபோட்டு நாள் முச்சூடும் வயித்துப் பசியோட சுருண்டு கெடந்தன். வயிறு எரியுது இப்ப நெனைச்சாலும். அவ அப்பன் இன்னும் இருக்காரா மண்டையப் போட்டுட்டாரா தெரியாது. அடியே லஸ்கர் சுமதீ... எப்படியும் அவ அங்கனைக்குள்ளதான் எங்கனாச்சியும் இருப்பா... அவளெ... மண்டையில நாலு கொட்டு நங்குன்னு எறக்கினாத்தான் மனசு ஆறும். இதா அடுத்த மாசம் வர்றண்டி... கிளம்பிகிட்டே இருக்கன்!! -பழமைபேசி.

2 comments:

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

Unknown said...

மலரும் நினைவுகள் அண்ணா! Watchman தங்கமணி அண்ணா ? I know only watchman துரைசாமி அண்ணா!! கோவிந்தராஜ் வாத்தியார் ;) ;) அவரை பாத்தா "அம்மு" வ கேட்டதா சொல்லுங்க ;)