11/23/2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.

பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இரண்டாம் உலகம் பற்றி வலைப் பூவில் இதுவரை நான் படித்த விமர்சனங்களில் இருந்து வேறுபட்டு ஓர் புதிய அணுகுமுறையினை தங்களிடம் கண்டேன்.