1/29/2012

பகுப்பு

இவ்வையகத்தில் ஆயிரமாயிரம் பகுப்புகள் உண்டு. அதுகுறித்துத் தொடர்வதற்கு முன் சற்றுத் தமிழையும் பார்த்து விடலாமே? பகுதி எனும் இடத்திலெல்லாம் பிரிவு எனும் சொல்லைப் பாவிப்பது மொழியின் நுண்மையைப் பாழாக்கும் செயலாகும். யாரும் வேண்டுமென்றே செய்வதாக நினைக்கவில்லை. ஆனால், கல்வியாளர்களுக்கும் ஊடகத்தினருக்கும் மொழியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு உண்டு. வேலியே பயிரை மேயும் செயல் இனியும் எவ்வளவு காலத்திற்குத் தொடருமெனத் தெரியவில்லை.

யாதோவொரு விழுமியத்தின் அடிப்படையில் பகுத்தடைவது பகுதி. ஒன்றிலிருந்து பிரித்தடைவது பிரிவு ஆகும். ஒரு பள்ளியில் இருக்கும் மாணவர்களை நிலை வாரியாக வகுப்பதால் வருவது வகுப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, ஆறாம் வகுப்பு. இருக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களை, எண்ணிக்கை அடிப்படையில் பகுத்து வருவது, ஆறாம் வகுப்பு, பகுதி ‘அ’. பகுதி ‘ஆ’ என்றிருத்தல் வேண்டும்.

தமிழர்களுள் சாதி வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்திருப்பது பிரிவுகள் ஆகும். பிரிந்து இருக்கிறார்கள்; யாரும் அவர்களைப் பகுக்கவில்லை. நாமே நம்மில் இருக்கும் இன்னொருவனிடம் இருந்து பிரிந்து நிற்கிறோம்; ஆகவே அவை பிரிவுகள் ஆகும். பிரிவுகள் கூடினால் தோன்றுவது ஒன்றியம். பகுதிகள் கூடினால் கிடைப்பது பருமை ஆகும். அதை ’பெருமை’ என்றும் விளிக்கலாம்.

மீண்டும் பகுப்புகளுக்கு வருவோம். நம்மில் பல பகுப்புகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு கூடத்தில் தேநீர் அருந்துபவர்களில், அரைக்கோப்பைக்குக் கீழே தேநீர் கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதியினர். அரைக்கோப்பைக்கு மேலாகத் தேநீர் கொண்டிருப்பவர்கள் அடுத்த பகுப்பினர் ஆவர்.

மீண்டும் அவர்களையே எடுத்துக் கொள்வோம். அரைக் கோப்பை வெற்றாக இருக்கிறது என்பார் ஒரு பகுப்பினர். அரைக்கோப்பை நிறைந்து இருக்கிறது என்பார் அடுத்த பகுப்பினர். இப்படியாக, அவர்களை வைத்து இன்னும் கூடுதலாகப் பகுப்புகளை நாம் பெற்றிட முடியும். ஆக, அவரவர் சிந்தனைக்கொப்ப பகுப்புகள் தோன்றுகிறது. ஒவ்வொருவர் சிந்தனையிலும் யாதோவொரு முறைமை(நியாயம்) இருப்பதையும் நாம் எளிதில் உணரலாம். அதேவேளையில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்நிலையில், அந்த அறையை வழிநடத்தும் தலைவர் என்பவர் இவற்றையெல்லாம் நன்கு புரிந்தவராக இருத்தல் வேண்டும். மாறாக, அவர்களுக்குள் இருக்கும் முறைமையைத் தட்டிக் கழிப்பதும், கொச்சைப்படுத்துவதும் அறையில் இருக்கும் இணக்கப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும். அல்லது அவர்களுக்குள் இருக்கும் பகுப்பினைப் பிரிவுகளாக்குவதற்கு வழி வகுக்கும். முறைமை இழந்தவனின் செயல் மனித நேயத்திற்கே கூடப் பங்கம் நேரிடச் செய்யும். அவ்வேளையில், பங்கம் விளைவிக்கும் முறைமை இழந்தவனைத் தண்டித்து ஒழிப்பதே நல்லறம் எனப் பறைசாற்றுவது ஒட்டுமொத்த மனிதத்திற்கே கேடு விளைவிக்கும்.

I look to a time when brotherhood needs no publicity; I look to a time when a brotherhood award would be as ridiculous as an award for getting up each morning.~Daniel D. Mich

1 comment:

ராஜ நடராஜன் said...

பழ்மைண்ணா!நலமா?
பஸ் பிடிச்சு ஓடிட்டீங்களாக்கும்:)