11/05/2011

India Fest 2011, Memphis, Tennessee

இந்திய விழா 2011. ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் தென்மத்திய மாகாணமான டென்னசியின் மெம்ஃபிசு மாநகரில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் மாபெரும் விழாதான் இந்திய விழா.

மெம்ஃபிசு மாநகரில் குடியமர்ந்த நாள்தொட்டே இவ்விழாவின் மீதான எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு விழாவின் போது இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளின் காணொலிகள் மற்றும் அங்கிருப்போர் கூறக்கேட்டவை என அனைத்துமாகச் சேர்ந்து எதிர்பார்ப்பினைக் கூட்டி இருந்தது.

இவ்விழாவினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வது Indian Association of Memphis என்பதாகும். மிகவும் சிறப்பானதொரு அமைப்பு. மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் அமைப்பு. சமூகத்தின்பால் மிகவும் நாட்டம் கொண்டு, அறப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அமைப்பு.

காலையில் எழுந்தவுடனேயே, வீட்டார் புறப்பட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு வேறுசில பணிகள் இருந்தமையால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியும் இப்படியுமாக நண்பகல்வாக்கில், மெம்ஃபிசு நகர வேளாண்நிலையத்தை அடைந்தோம்.

மெம்ஃபிசு நகர வேளாண்நிலையம் என்பது மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர் ஒருங்கே கூடியிருக்கும்படியான உள்ளரங்கைக் கொண்டது. வாகனத்தரிப்பிடமும் பரந்த நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்கிறது. நாங்கள் உள்ளே சென்ற வேளையில் எப்படியும் பத்தாயிரம் பேருக்கும் மேலான பார்வையாளர்கள் இருந்திருக்கக் கூடும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஆறு அல்லது ஏழாம் ஆண்டு, மிச்சிகன் மாகாணம் டெட்ராயிட் நகரில் நடந்த தெலுங்கர் மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம் எமக்குண்டு. அம்மாநாட்டில் நாற்பதினாயிரம் பேர் கலந்து கொண்டதாக நினைவு. அதற்குப் பின், இப்போதுதான் இவ்வளவு பெரிய இந்தியர் கூட்டத்தை அமெரிக்காவில் காண்கிறேன்.

இந்தியாவில் என்று கேட்டுவிடாதீர்கள்? ஆம், சென்ற ஆண்டு, 2010 கோவை வ.உ.சி பூங்காவில் பல இலட்சம் பேர் கூடிய திமுக கூட்டம்தான் நான் கலந்து கொண்ட கடைசிக் கூட்டமாகும்.

பெருமளவிலான கூட்டத்தைக் கண்டதும் நமக்குள்ளும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நுழைவாயிலில் நுழைவுக் கட்டணமாக தலா மூன்று வெள்ளிகள் செலுத்தினோம். அரங்கத்திற்குள் சென்றதும் முதலில் கண்ணில் தென்பட்டது யோகா பிரச்சாரக் கூடாரங்கள். அவற்றை நிராகரித்துவிட்டு உள்ளே சென்றோம்.

அப்பப்பா, எத்தனை, எத்தனை உணவுக் கடைகள்? காட்சிப் பொருட்களாக வைத்திருந்த உணவுப் பண்டங்கள் யாவும் கவர்ந்திழுக்கக் கூடியனவாக இருந்தன. எனக்கு ஒரிசா மாநில வகை உணவு மீது நாட்டம் தோன்றியது. ஆனால், மனைவியார் தட்டிக்கழித்துக் கூட்டிக் கொண்டு போனார்.

“அய்ய்... தமிழ்நாடு உணவகம்” எனச் சிலிர்த்து அங்கே அழைத்துப் போனார். அங்கே சென்றமாத்திரத்தில், “அய்ய்... கோவை கார்னர்” என்று கூவி, அந்தக் கடைக்கு இழுத்துச் சென்றார். “என்னுங்க நம்மூர்ச் சாப்பாடே சாப்பிடலாமுங்க” என்று சொல்லியதற்கு கட்டுப்படுவதைத் தவிர எனக்கு வேறெதும் உறுதல் உண்டோ??

“ஏங்க கோழி பிரியாணி பாருங்க. நம்மூர்ல செய்த மாதிரியே இருக்கு பாருங்க!”

”அண்ணா, அந்த கோழி பிரியாணி ரெண்டு குடுங்க”

“what?"

"நீங்க கோயமுத்தூருங்களா?”

”ஆமா”

“Two Chicken Biriyani"

விட்டால் அந்த அம்மையார் பருக்கைகளை எண்ணுவார் போலிருந்தது. மிக மெதுவாக அந்த நெகிழி அகப்பை கொண்டு மிகச் சரியாக ஒரு அகப்பை, பெரிய எலுமிச்சையளவு தட்டில் இட்டு முட்டைக் குழம்பில் அரை முட்டைக்கும் மேலாக எதுவும் இருந்துவிடாமல் மிகக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்.

இடையில் குறுக்கிட்ட இன்னொருவர், “fish cutlet?"

"சரிங்க, வையுங்க”, என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த அம்மையார் குறுக்கிட்டு, “each plate is dollar ten" என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அதன் மொத்த மதிப்பு எப்படிப் பார்த்தாலும் ஐந்து வெள்ளிகளுக்கும் மேல் இராது. காசைப் பறித்தது போலவே உணர்ந்தேன்.

அங்கிருந்த பரப்பு நாற்காலிகளின் மேல் இவ்விரு தட்டுகளையும் வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் செல்ல முற்பட்டேன்.

“எங்க போறீங்க?”, ஏமாற்றத்தை அடக்க முடியாமற் தவிர்த்த மனைவியாரின் முகம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “பரவாயில்லை, இரண்டு தட்டுலயும் இருக்குறதை ஒரு தட்டுல போட்டு நீ சாப்பிடு. அந்த மீன் வடைய மாத்திரம் குழந்தைக கையில குடுத்துரு” எனக் கூறிவிட்டு மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் சென்றேன்.

“yes"

"வணக்கங்க. சாப்புடுறதுக்கு பிரியாணி ஒரு தட்டு!”

“sure, you want anything else?"

"ம்ம்... அந்த மெதுவடை ரெண்டுங்க”

“twelve dollars" என்றார் அவர்.

வேறெதுவும் பேசாமல் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தமர்ந்து, கோழியைக் கடித்தேன். இறைச்சி வெந்திருக்கவே இல்லை. இறைச்சி மணம் குப்பென்று அடித்தது. அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, இவ்விரு வடைகளும் வெந்திருக்கிறதா எனப் பார்த்துவிட்டுக் குழந்தைகளின் கைகளில் திணித்தேன்.

பசியில் இருந்த அவர்கள், கொடுத்ததை எல்லாம் வாங்கிச் சுவைக்கலானார்கள்.

நான் மட்டும், இன்னமும் எதுவும் சாப்பிடவில்லை. ஆனால், முப்பத்தி இரண்டு வெள்ளிகள் கைமாறி இருந்தன. அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது கண்ட காட்சி மிகவும் எரிச்சலூட்டியது.

ஒரு கடையில் இருந்த அந்த அமெரிக்கப் பெண்மணி, தான் கண்டதில் பிடித்தமானவற்றை எல்லாம் வேண்டுமெனச் சொல்லி, உடன் இருந்த இரண்டு குழந்தைகளின் விருப்பத்தையும் கேட்டறிகிறார். பின்னர் பணம் செலுத்தும் தருணமும் வருகிறது.

“forty two dollars madam"

அந்த அம்மையாரிடம் இருந்த பணம் போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அவ்வளவு ஆகுமென எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். தட்டுகளை ஏந்தி ஆயிற்று. ஆனால், பணம் கொடுக்க இயலவில்லையே எனும் இக்கட்டில் அவர் பரிதவித்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அதனைக் கண்டதும், அருகில் இருந்த மற்றொருவர், “its ok... I will take care, when I pay mine" என்றதும் அவரது முகத்தில் பேரொளி பிறந்தது. “thank u, thank u" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்.

இந்தக் கடை இனி நமக்கு வேண்டாம் என நினைத்து, நண்பர் இளங்கோவன் அவர்கள் நடத்தும் உணவுப்பண்ட சாலைக்குப் போனோம். எதையோ சொல்லி, அக்கடையின் பணப்பெட்டியில் இருந்த அவரது நண்பர் கையில் இருபது வெள்ளிக்கான தாளினைத் திணித்தேன்.

இளங்கோ அவர்களது மனைவியார். கச்சுப்பண்டம்(sandwich) இரண்டும் தேநீரும் எங்கள் கண் எதிரிலேயே உண்டு செய்து கொடுத்தார்கள். கச்சுப்பண்டத்திலும் முக்கால் பங்கினை மகள்கள் வாங்கி உண்டார்கள். நான் உண்ட காற்பங்குப் பண்டம் மிகவும் சுவையாக இருந்தது.

இருந்த கடைகளிலேயே இக்கடையில்தான் அறம் நின்றாடியது என உறுதிபடச் சொல்வேன்.

எல்லோரும் வடித்து ஆறிப் போனவற்றைச் சூடு செய்து கொடுத்து, கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மாத்திரம், வந்தவர்களுக்கெல்லாம் சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கணக்குப் பார்க்க மனம் வரவில்லை. அவர்கள் மிகவும் களைத்து சோர்ந்து இருந்தார்கள். பார்க்கவே, பரிதாபமாக இருந்தது.

அடுத்து, மனைவியார் குழந்தைகளுக்கு நகைகள் வாங்க வேண்டுமென நகைக்கடைகளுக்கு அழைத்துப் போனார். நான் கண்ட காட்சியை விவரிக்க இயலாது. அந்த அளவுக்கு, கடைக்காரர்களின் மனத்தினைப் புண்படுத்திக் கொண்டிருந்தனர் வந்தவர்கள்.

ஐம்பது வெள்ளி நகையை ஐந்து வெள்ளிக்குக் கேட்டு, இடத்தைவிட்டு நகரவும் செய்யாமல் இருந்தார் ஒரு இளம்பெண்மணி. அடுத்த கடையிலோ, விலை உயர்ந்த நகைகளைத் தாறுமாறாக விட்டெறிந்து கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில், கடைக்காரர்களின் நிலை வெகுபரிதாபமாக இருந்தது.

குழந்தைகளுக்கான காதணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியார், “இந்தக் கம்மலுக எல்லாம் நல்லா இருக்கு. ஆனா, இன்னும் நாலு கடைகளைப் பார்க்கலாம்”.

“இந்நேரம் உனக்கு எடுத்துக் காமிச்சிட்டுருந்தவன் பைத்தியக்காரனா?” எரிச்சலைக் கொட்டித் தீர்த்தேன்.

”நூற்றிப்பத்து வெள்ளிகள் பெறுமானம் கொண்ட பொருளுக்கு, நூறு தாருங்கள்” எனப் பரிதாபமான இறைஞ்சும் குரலில் தாழ்ந்த பார்வையோடு பார்த்தார்.

என்னிடம் இருபது வெள்ளிப் பெறுமானமுள்ள தாள்கள் மட்டுமே இருந்தன. அவற்றுள் ஆறினை எடுத்து நீட்டினேன். ஆனால், அவற்றுள் இருந்ததில் ஒரு தாளினைக் கவனத்துடன் திரும்பக் கொடுத்துவிட்டார்.

உடனடியாக, இவ்விடத்தில் இருந்து வெளியேற வேண்டுமெனச் சொன்னதும், “ஆமாங்க, போலாம்” என என்றுமில்லாதபடிக்கு ஒத்திசைந்தார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் அரங்கத்திற்குச் செல்லலாம் என எண்ணி, மாற்றுப் பாதையில் செல்ல நினைத்துத் திரும்பினோம்.

“அப்பா, பசிக்குது!”

“என்ன கொடுமைடா இது? ஐம்பத்து இரண்டு வெள்ளிகள் கொடுத்த பிறகும் பசிக்கொடுமை தீரலையா?” என்றெண்ணியபடியே மனைவியாரைப் பார்த்தேன்.

“சரி வாங்க. போலாம். நான் வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த பட்சணங்களை வெச்சி சரி பண்ணுறேன்”

“பரவாயில்லை. நான் மறுபடியும் போயி, எதனா வாங்கியாறேன்”

“இக்கும்... அங்க போனா இருக்குறதை எல்லாம் புடிங்கிட்டுத்தான் உடுவாங்க” என முணுமுணுத்துக் கொண்டார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கம் சென்றடையவும், கேரள மாநிலத்தினர் வழங்கிய நடன நிகழ்ச்சி துவங்கவும் சரியாக இருந்தது. அவர்களது நாட்டிய நடன நிகழ்ச்சி, மிக அருமையாக இருந்தது. வயிற்றுப் பசியையும் மீறி, மனம் குளிர்ந்த நிகழ்ச்சியாக அது அமைந்தது.

“வந்ததுக்கு இது பார்த்ததே போதும். கிளம்புங்க, நான் ஊட்டுக்குப் போயி அரிசியும்பருப்புஞ் சோறாக்கணும். அல்லாரும் கிளம்புங்க”, மனைவியார் அரற்றினார்.

அறக்கட்டளை நடத்தும் விழாவில், வயிற்றால் அடித்துக் காசு பார்க்க நினைக்கும் வெகுளிகளை நினைத்து என்ன சொல்வது?! அல்லது, வயிற்றுப் பிழைப்புக்கு பொருள் விற்கும் வணிகர்களை மனிதநேயம் கொண்டு பாராமல் கொச்சைப்படுத்திக் கொள்ளை கொள்ள விரும்பும் மனிதர்களைத்தான் என்ன சொல்வது??

அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்!!


கேரள மாநிலத்தவ்ரின் அட்டகாசமான படைப்பு இதோ!!

13 comments:

ஓலை said...

Very sad. இங்கும் அதே நிலைமை. 2 சமோசா 4 டாலர். பையன் ஒரே கடி கடிச்சிட்டு அப்பா ஊசிப் போயிருக்கு வேண்டாம்னு தூக்கி போடசொல்லியாச்சு.

ஆனால் நிகழ்சிகள் அருமையாக இருந்தது. ரஷ்ய பெண்களின் இந்திய நடனம், எல்லாம் ஹிந்தி சினிமா, மிக அருமையாக இருந்தது.

தெய்வசுகந்தி said...

எல்லா ஊருலயும் அப்படித்தான் இருக்கும் போல!

a said...

:)).... Problem in both end...

செந்திலான் said...

அறக்கட்டளை நடத்தும் விழாவில், வயிற்றால் அடித்துக் காசு பார்க்க நினைக்கும் வெகுளிகளை நினைத்து என்ன சொல்வது?!//

அவர்கள் வெகுளிகளா ? பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் அவர்களோடு மிக சிறந்த கலாச்சாரத்தை வடித்தெடுக்க முடியும் ஆனால் இங்கிருந்து கொண்டு சென்ற குப்பைகளை அங்கேயும் வீசி எறிகிறார்கள் என்று கவிஞர் முத்துலிங்கம் சொன்னது நினைவுக்கு வருகிறது

vasu balaji said...

என்னத்தச் சொல்ல:( இப்படி ஒரு நாள்ள கொள்ளையடிச்சி என்னதான் பண்ணுவாங்களோ

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் சிறப்பானதொரு அமைப்பு. மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் அமைப்பு.
சமூகத்தின்பால் மிகவும் நாட்டம் கொண்டு, அறப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அமைப்பு./

எல்லம் சரி.
உணவகக்கொள்ளை தான் உறுத்துகிறது.

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
என்னத்தச் சொல்ல:( இப்படி ஒரு நாள்ள கொள்ளையடிச்சி என்னதான் பண்ணுவாங்களோ//

இவங்களுக்கு முகமூடி என்ன தெரியுமுங்களா?? அறக்கட்டளைக்கு கூடத்துக்கான கட்டணமா 500 வெள்ளி செலுத்துறோம். அது பட்டினியால் வாடும் ஏழைகளுக்குப் போகுது என்பதுதான்.

தகவல் எல்லாம் சேர்த்தாயிற்றுங்க அண்ணா...

கடையின் அளவைப்
பொறுத்து $350, $450, $650 என்பதுதான் கடைகளுக்கான கட்டணம். ஒவ்வொரு
கடையிலும் ஆயிரக்கணக்கில் நிகர இலாபம் பெற்றதாக அறிய வருகிறேன். நான்,
முறையான வழியில் உரியவர்களிடம் முறையிடலாம் என இருக்கிறேன்.

1. ஒரு வாரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட உணவு எப்படிப் பதப்படுத்தப்பட்டு
இருந்தது? கடையின்ரிடம் அதற்கான பெரிய குளிர்மிகள் இருக்கும்.
தனிநபர்களான இவர்களது வீட்டில் அத்தகைய குளிர்மிகள் இருந்திருக்க
வாய்ப்பில்லை. எனவே, சுகாதார நெறிகளை மீறியே இவர்கள் சமைத்தெடுத்து
வந்திருக்கிறார்கள்.

2. பசியில் வாடும் மக்களிடம் கொள்ளை அடிப்பதுதான் அறக்கட்டளையின்
நோக்கமா?? வயிற்றில் அடித்து, உணவுக் கொடை என்பது எனக்குச்
சரியாகப்படவில்லை. FedEx நிறுவனத்தில் வேலை செய்யும் இவர்கள் எல்லாம்,
மத்திய அமெரிக்க மாகாண சராசரி வருமானத்தைவிட பல மடங்கு அதிகம் வருவாய்
ஈட்டுபவர்கள். பசிப்பிணியைக் காண்பித்து, இலாபம் ஈட்டும் உரிமையை
இவர்களுக்குக் கொடுப்பது நியாயமா??

3. 15 கொள்கலனில்(tray) கொணர்ந்த பிரியாணி, ஒவ்வொரு கலனிலும் கிட்டத்தட்ட
30 தட்டுகள் விற்பனை ஆகியிருக்கிறது. ஆக, 30 x 7 x 15 = $3150. இது போக,
இதர உணவு வகைகள். இது நான் ஆய்ந்த ஒரு கடையின் விபரம் மட்டுமே. இந்தக்
கடையைக் காட்டிலும் பெரிய கடைகளும் இருந்தன என்பது நினைவு கூரத்தக்கது.

என் மனத்தாங்கல் எல்லாம், விலை பற்றியது அல்ல. ஏய்ப்பு பற்றியதே.
அறக்கட்டளையின் நிபந்தனைகளுள் ஒன்று, விலைப்பட்டியலை ஒரு மாதத்திற்கு
முன்பே கொடுத்துவிட வேண்டும் என்பதுதான். அப்போது, ஒரு தட்டு பிரியாணி
ஏழு வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் ஒரு அகப்பை பிரியாணி ஏழு ஆகிப்
போனது ஏன்??

அடுத்து, ஊசிப்போன சமோசாக்களும் நாற்றமெடுத்த கோழிக்கால்களும் இடம்
பெற்றது ஏன் என்பதே! எனக்கு இன்னமும் மனம் வலிக்கிறது. கண்டுங்காணாமற்
போக என்னால் முடியவில்லை.

பணிவுடன்,
பழமைபேசி.

அரசூரான் said...

பெரிய நிகழ்வு என்றால் இப்படித்தான். போட்ட பூத் பணம், வாகன செலவு, ஆள் செலவு என காரணம் ஆயிரம் சொல்வார்கள். நீங்கள் இந்த விலைதான் விற்க்க வேண்டும் இல்லையேல் நடத்தும் எங்களுக்கு கெட்ட பெயர் என்றால் உணவின் அளவை குறைத்து விடுவார்கள்.

கொள்ளை கண்கூடு.

jalli said...

trust kaarankalukku canteen nadathita antha ammini niraya vadakai koduthirukkalaam.athai eedu
katta vilaikootti sarakkai kuraiththu kolmaal pannuraankalo...
ennavo..viyaparm akippochu ellamey.

kovai coddissia vil nadakira ''agri expo'vil, ithai vida kodumaiyellam nadukkuthu saami.thirai kadal odinaalum thirudar maaruvathillai.

--jallipatty palanisamy. kovai.

செந்திலான் said...

Jalli : Who is this ? Annan Jallipatti Palanisamy Pasumai vikatan Reporter

பழமைபேசி said...

ஆமாங்க தம்பி... நம்ம அண்ணனேதான்!!

செந்திலான் said...

முன்னாள் உ.உ.க ஏட்டில் பணியாற்றியிருக்கிறாங்க. (கட்சிக்காரருங்கோ) எமது தந்தையாரின் நண்பரும் கூட

பழமைபேசி said...

மகிழ்ச்சிங்க தம்பி