4/04/2011

2011: கோவையில், திணறும் திமுக

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்திலே, இரட்டை இலை என்பது எங்கும் ஊடுருவி வியாபித்திருந்த காலமது. ஆனாலும், சென்னை, காவிரி டெல்டா பகுதிகளுக்கு அடுத்து திமுக பெறும் இடங்கள் கோவையை அண்டியுள்ள தொகுதிகளாகத்தான் இருக்கும்.

பேரூர் ஆ.நடராசன், சிங்காநல்லூர் A.D.குலசேகர், கோவை மேற்கு மு.இராமநாதன் மற்றும் இரா.மோகன், C.T.தண்டபாணி முதலானவர்களில் ஓரிருவர் வெற்றி பெற்றுவிடுவார்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் பெருவாரியாக திமுகவுக்கு வாக்களித்து வந்தார்கள்.

ஆனால் இன்றைய நிலை என்ன? கோயம்பத்தூருக்கு, உள்ளபடியே திராவிட முன்னேற்றக் கழக அரசு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. கோவை மக்கள், செல்வத்தில் திளைக்கிறார்கள். இருந்தும், எம்.ஜி.ஆர் காலத்திலேயே வெல்லக் கூடியதாக இருந்த தொகுதிகளில் திமுகவினர் திணறுவது ஏன்??

திமுகவில் இருந்த, கட்சித் தளபதிகளை பெரும் புள்ளிகள் ஓரங்கட்டி வைத்தது முதற்காரணம். நடுத்தர வர்க்கத்தின் குரலாக இருந்த கட்சித் தலைவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு, செல்வந்தர்கள் கட்சித் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.

கோயம்பத்தூர் என்பது, பெரியார் உயிர்கொடுத்த திராவிடத்தின் இலக்கணம் என்பது இன்று வரையிலும் மெய்யானதாகவே உள்ளது. ஏன்? கோயம்பத்தூரில், பெருமளவில் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான கட்சியாக இருந்த திமுக, ஒரு குறிப்பிட்டவர்களின் கட்சியாக மாறிப் போனது இன்று. இதன் காரணமாக, இதர திராவிட மொழிகளைச் சார்ந்தோரின் சங்கங்கள் எல்லாம், கூட்டம் போட்டுத் திமுகவுக்கு எதிராகத் தீர்மானம் போடும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.

கல்லூரிகளின் மாநகராகத் திகழும் கோவையில், மாணவர்களின் ஆதரவு என்றும் திமுகவுக்கே இருந்து வந்தது. ஆனால், இன்றைக்கு அவர்கள் திமுகவுக்கு எதிரான நிலையை மேற்கொண்டு உள்ளார்கள். குடும்ப அரசியல் மற்றும் இசுபெக்ட்ரம் முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள் இவர்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, திராவிடத்தை முன்னிறுத்தியதில் கோயம்பத்தூருக்கு நிகர் வேறு எந்த நகரும் இருக்க முடியாது. ஈழ உறவுகளுக்காக அன்றும், இன்றும் குரல் கொடுக்கும் தலைவர்கள் வாழும் ஊர் இது. அவர்களை ஒட்டி இருக்கும் தமிழார்வலர்கள், பேராயம் மற்றும் திமுகவுக்கு எதிரான நிலையை மேற்கொண்டிருப்பதும் திமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இலவசங்கள் மற்றும் தள்ளுபடித் திட்டங்கள் மூலம் கிராமப்புறத்தினரைக் கவர்ந்திழுத்த திமுக, சோதனையான காலத்திலெல்லாம் கைகொடுத்த நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவை இழந்து, பணத்தாலே அரசியல் நடத்தலாம் எனும் நிலையை மேற்கொண்டிருப்பது எம் போன்ற முன்னாள் திமுக அபிமானிகளுக்குப் பெருத்த ஏமாற்றமே!

இன்றும் நாளையும், அதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் கொங்குப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்கள். அவரது வருகை, நிச்சயமாய்த் திமுகவின் ஆதரவு வாக்குகளையும் சேர்த்துக் கொள்ளை கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இறுதி நாட்களிலாவது, திமுக தலைமை தலையிட்டுத் தன் பழைய உறவுகளை மீட்டெடுக்குமா? அல்லது, படு பயங்கரமாகத் தோற்றுப் போகுமா?? முடிவு, திமுகவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.

16 comments:

vasu balaji said...

/எம் போன்ற முன்னாள் திமுக அபிமானிகளுக்குப் பெருத்த ஏமாற்றமே!/

அப்ப இன்னாள் அபிமானம் யாருக்கு?:)).

பழமைபேசி said...

//அப்ப இன்னாள் அபிமானம் யாருக்கு?//

இஃகி இஃகி... நான் ஓட்டே போடப் போறது இல்லைங்க அண்ணே... எனக்குப் பிடிச்ச தலைவர் தேர்தல்ல நிக்கலையே?! இஃகி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முன்னாள் திமுக அபிமானிகளுக்குப் பெருத்த ஏமாற்றமே!//

கதை அப்படி போகுதா தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எனக்குப் பிடிச்ச தலைவர் தேர்தல்ல நிக்கலையே?! இஃகி!//

குஷ்பூவுக்கு சீட் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டுமாமா!

குறும்பன் said...

கொங்கில் திமுக தேறுவது கடினம். காசு கொடுத்து வெற்றி பெறலாம் என்பது தவறாக போகப்போகுது, காசு கொடுத்தவன் தோத்த கதை நாம பார்த்தது தான்.

கண்டமேனிக்கு இலவசம், வாக்குக்கு காசு இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் திமுக மீது எரிச்சலில் உள்ளது உண்மை.

தாத்தா பண்ணுன தப்பு ஆத்தாவுக்கு தெம்பு.

KRISHNARAJ said...

DEAR MAPLAI AS YOU SAID DMK is struggling in CBE dist is correct. No respect for true workers here, Moreover , "all free" most of the people here got irritated and their votes will turn against DMK

செந்திலான் said...

நடுத்தர வர்க்கத்தின் குரலாக இருந்த கட்சித் தலைவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு//
முற்றிலும் தவறு அவர்கள் தான் செல்வந்தர்களாகவே உருவானார்கள்.

பெரியார் உயிர்கொடுத்த திராவிடத்தின் இலக்கணம் என்பது இன்று வரையிலும் மெய்யானதாகவே உள்ளது.//

இதுவும் முற்றிலும் தவறு பெரியார் சொன்ன திராவிடம் என்பது மற்ற மொழிக்காரர்களை அரவணைத்து செல்வது என்பதல்ல.
அவர் முன்னிறுத்தியது தமிழர் என்ற அடையாளம் தான் ஆனால் தமிழர் என்று சொன்னால் பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்றதாலே தானே திராவிடர் சொல்லை முன்னிறுத்தினார்? மேலும் தமிழர்களிடம் இருந்த அளவு எதிர்ப்புணர்வு மற்ற மொழிக்காரர்களிடம் ஒப்பீட்டளவில் குறைவு என்பதே உண்மை

"அவர்கள்" மொழி வாரி மாநிலம் கேட்டபோது எடுத்துக்கொண்டு ஒழியட்டும் என்றுதானே பெரியார் சொன்னார்.மற்ற மொழிக்காரர்கள் எந்த அளவுக்கு திராவிடத்தை ஆதரித்தார்கள் என்பதே ஆய்வுக்குரியது. மற்ற மாநிலங்களில் தமிழர்கள் அரசியல் உரிமைகளை எந்த அளவுக்கு பெற்றுள்ளார்கள்? ஆந்த்ராவில் எந்த தமிழரேனும் அரசியல் பதவிகளில் உள்ளார்களா? கர்நாடகாவில் தமிழர்கள் வெற்றி கொண்ட பதவிகள் இப்பொழுது முற்றிலும் இல்லை பெங்களுருவில் கன்னடர்கள் சிறுபான்மையினர் தான் ஆனால் எல்லா பதவிகளும் அவர்களிடம்தானே இருக்கிறது. கேரளாவில் தமிழர்களின் நிலை என்ன? வாக்குரிமை கூட சரியாக வழங்கப்படுவதில்லை.
ஓணத்துக்கு,உகாதிக்கு இங்கே விடுமுறை ஆனால் பொங்கலுக்கு எங்கும் விடுமுறை இல்லை எந்த ஊர் நியாயம் இது? தமிழனின் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் தானே இதற்கெல்லாம் காரணம்? சரி உங்கள் வாதப் படி //ஒரு குறிப்பிட்டவர்களின் கட்சியாக மாறிப் போனது இன்று.// ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் கட்சிகளில் என்ன நிலை அங்கும் குறிப்பிட்ட பிரிவினர்தானே கொலேச்சுகிரார்கள்? அப்படி ஒன்றும் எல்லா இடங்களிலும் முழுக்க மாறிவிடவில்லை மேட்டுப்பாளையம், உடுமலை எல்லாம் மொழி சிறுபான்மையினர் தானே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்? தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட இங்கே சாதி உணர்வு குறைவு தானே? இந்த சாதி உணர்வு தலை தூக்கியதற்கு காரணம் என்ன என்பதைப் பார்த்தோமானால் அதற்கு மற்ற சாதி உணர்வுகளும் ஒரு காரணம். அதாவது ஒரு இனக்குழுவாதப் பார்வை இங்கே முதலிலேயே இருந்தது அதாவது தங்கள் நிறுவனங்களில் தங்களது ஆட்களை முன்னிலைப்படுத்துவது போன்ற செயல்களை கண்ட மற்றவர்கள் எளிதாக சாதி உணர்வுக்கு ஆட்பட்டார்கள்
இன்னும் பேசலாம் ஆனால் நேரமினை காரணமாக முடிக்கிறேன்
நான் நடந்த உண்மைகளை மட்டுமே சொல்கிறேன் இதில் யார் மனமெனும் புண்பட்டால் வருந்துகிறேன்

பழமைபேசி said...

@@செந்திலான்

தம்பி, திமுகவுக்குக் கோயம்பத்தூரில் மாபெரும் சரிவு. மற்ற இடங்களில், மொழிச் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு என்பதல்ல பிரச்சினை.

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளைத் திமுக கூட்டணி கைப்பற்றுமா??

கைப்பற்றாது என்றால், காரணங்கள் என்ன??

செந்திலான் said...

அண்ணே நீங்க தான் சரிவு சரிவுங்கிறீங்க ஆனா எனக்கு அப்படித் தோணல. தேர்தல் முடிவுகளை வெச்சு தான் தீர்மானிக்க முடியும்.

//கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளைத் திமுக கூட்டணி கைப்பற்றுமா? //

கோவை தெற்கில் பொங்கலூரார் வெல்வார்
சிங்காநல்லூர் வெல்ல வாய்ப்பு அதிகம் ஏனெனில் challenger துரை சிங்காநல்லூரில் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் அவரை பொங்கலூராரை எதிர்க்க வைத்து பலிகடா ஆக்கி விட்டார் amma
சிங்காநல்லூர் சின்னசாமி கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி அலை வீசுகிறது. மேலும் அவர் அ.திமு.க காரரே அல்ல எங்கயோ அய் என் டி யு சி என்ற சங்கத்தில் இருந்து தாவியவர் இதனால் உள்ளடி நிச்சயம்

கவுண்டம்பாளையம் புதிய தொகுதி ஆகவே கணிப்பது சிரமம்.

பழமைபேசி said...

தம்பி,

வணக்கம்.

கோவை தெற்கு - வீரகோபால் X துரை

வீரகோபால் நூலிழையில் முன்னிலை; ஆனாலும் சிறுபான்மையினர் ஜிவாஹிருல்லா பின் சென்றால், வீரகோபால் வெல்ல முடியாது.

கோவை வடக்கு - பொங்கலூர் X மலரவன்

மலரவன் வெற்றி உறுதி

கவுண்டம் பாளையம்: அதிமுகவின் ஆறுக்குட்டி வெற்றி உறுதி

சிங்காநல்லூர் - மொழிச் சிறுபான்மையினர் திமுக கூட்டணி மேல் அதிருப்தி, கூடவே தொழிற்சங்கங்கள், பொதுவுடமைக் கட்சியினர் பேராயத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆலாமரத்தூர் சின்னச்சாமி வெற்றி உறுதி

செந்திலான் said...

//
பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!

//

அண்ணே இது ஜூ.வீயில வந்திருக்குது யார் வேட்பாளர் ஏனெனில் பொங்கலூறார் இருக்கும் பகுதி தெற்கில் தானே வருகிறது இதில் என்ன குழப்பம் உங்களுக்கு?


சிங்காநல்லூர் - மொழிச் சிறுபான்மையினர் திமுக கூட்டணி மேல் அதிருப்தி, கூடவே தொழிற்சங்கங்கள், பொதுவுடமைக் கட்சியினர் பேராயத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆலாமரத்தூர் சின்னச்சாமி வெற்றி உறுதி //

ம.தி.மு.க கொஞ்சம் வலுவாக உள்ள பகுதி தனியாக நின்றபோதே சுமார் 15000 வாக்குகள் வாங்கியவர் மேகலா முத்துகிருஷ்ணன். அந்த வாக்குகள் இப்பொழுது தி.மு.க விற்கு எப்படி என் கணக்கு எந்த அடிப்படையில் இந்த மொழி சிறுபான்மையினர் அதிருப்தி என்று புரியவில்லை.

அப்படி அதிருப்தி என்றால் அவர்கள் ஏன் இன்னொரு மொழிப் பெரும்பான்மையினரை சேர்ந்த வேறொரு கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தனியாக கட்சி தொடங்கி பலத்தை காட்டலாமே?

எனது கணிப்பு -----
கோவை வடக்கு வீரகோபால்
கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டி
சிங்காநல்லூர் தி.மு.க வா பேராயமா என்று தெரியவில்லை ஆனால் வெற்றி உறுதி.
கோவை தெற்கு -பொங்கலூராரேதான் (நம்ம ஊர்காரர விட்டுத்தர முடியுமா?)

தொண்டாமுத்தூர்--மதில்மேல் பூனை

பழமைபேசி said...

தம்பி, தெற்கு வடக்கு குழப்பம்... ஆனா, முடிவு நீங்களா, நானா பார்த்திடுவோம் இருங்க...

செந்திலான் said...

:):):)

அப்பாதுரை said...

இலவசம் கோவையில் செல்லாதா.. வியப்பாக இருக்கிறதே?

Bharathi said...

எதோ எனக்கு விளங்கவே விளங்காத அரசியல் பற்றிய கட்டுரை. இந்த தேர்தல் எனக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோயமுத்தூர் மட்டும் தான் தெரியும். கோவை + கொங்கு = சிலிண்டர். :) அதனால ஒட்டு பிரியும் (இதுல வடக்கு, கிழக்கு, தெற்கு இதெல்லாம் புரிபடல).
ஓபன் ஆ சொல்றேன் DMK ( ஸ்பெக்ட்ரம்) நெனச்சாவே பத்திக்கிட்டு வருது. கோவையில் மட்டும் திணறல தமிழ்நாட்ல எல்லா இடத்திலும் ரொம்பவே திணறிட்டு இருக்கு. எல்லாருக்கும் அவ்ளோ எரிச்சல், கோவம்.
(தப்பு தப்பா அரசியல் பற்றிய என் இந்த கருத்து இருந்தால், அதெல்லாம் யாரும் கண்டுகாதிங்க)

Indian said...

கோவையில் திமுக தோற்பதற்கான காரணிகளில் ஒன்றான மின்வெட்டுப் பிரச்சினையை கண்டு கொள்ளாதது ஆச்சரியம்தான்.

முடிக்கப்படாத (ஆனால் திறப்புவிழா முடிந்த) டைடல் பார்க், பாதியில் நிற்கும் மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் போன்றவை மிகுந்த வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.