2/23/2026

அறையில் அடைபட்ட 13 ஆண்டுகள்

ஜினி 1957இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தார். அவருக்குச் சுமார் 20 மாதங்கள் இருக்கும்போதே, அவரது தந்தை அவரை ஒரு சிறிய இருண்ட அறைக்குள் வைத்துப் பூட்டினார். அடுத்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஜினி வெளி உலகத்தையே பார்க்கவில்லை. ஒரு சிறிய நாற்காலியில் (Potty chair) அவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். யாரிடமும் பேசவோ, சத்தம் போடவோ அவருக்கு அனுமதி இல்லை. ஜினி சத்தம் போட்டால் அவரது தந்தை அவரை ஒரு நாயைப் போல உறுமிப் பயமுறுத்துவார் அல்லது கடுமையாகத் தண்டிப்பார். இதனால் ஜினி சத்தமே இல்லாமல் வளரக் பழகிக்கொண்டார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜினியின் தாயார் தனது கணவரிடமிருந்து தப்பித்து, 13 வயதான ஜினியை அழைத்துக்கொண்டு அரசு அலுவலகத்திற்கு உதவி கேட்டுச் சென்றார். அங்குள்ள அதிகாரிகள் ஜினியைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். 13 வயதான அவர், பார்க்க 6 வயதுச் சிறுமி போல மெலிந்து காணப்பட்டார். அவருக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை, யாரையும் நேராகப் பார்க்கவில்லை, மேலும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியவில்லை. உடனடியாக அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவரது தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜினியின் நிலை தெரிந்தவுடன், உலகின் சிறந்த மொழியியலாளர்களும் உளவியலாளர்களும் அவரைப் பற்றி ஆராய முன்வந்தனர். "ஒரு குழந்தை தனது வளரிளம் பருவத்திற்குள் (Puberty) மொழியைக் கற்கவில்லை என்றால், அதன் பிறகு ஒரு மொழியை முழுமையாகக் கற்க முடியுமா?" என்ற பெரிய கேள்விக்கு விடை தேட ஜினி ஒரு முக்கிய ஆதாரமாக மாறினார். அவருக்குப் பல ஆண்டுகள் தீவிரப் பயிற்சியும் அன்பும் வழங்கப்பட்டது. அவர் மெதுவாகச் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டார், மற்றவர்களுடன் சைகை மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஆராய்ச்சியின் முடிவில் ஒரு கசப்பான உண்மை தெரிந்தது. ஜினியால் தனித்தனி வார்த்தைகளைச் சொல்ல முடிந்ததே தவிர, ஒரு மொழிக்கே உரிய இலக்கணத்தோடு (Grammar) வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. உதாரணமாக, "Appple me eat" (ஆப்பிள் நான் சாப்பிடு) என்பது போன்ற உடைந்த வாக்கியங்களையே அவர் பேசினார். மனித மூளையில் மொழி வளர்ச்சிக்கான ஒரு 'குறிப்பிட்ட காலம்' (Critical Period) கடந்துவிட்டதால், அவரால் ஒரு தாய்மொழியைப் போல சரளமாகப் பேசும் திறனைப் பெற முடியவில்லை என்பது உறுதியானது.

கவலைக்குரியவிதமாக, ஜினிக்கான அரசு நிதி உதவி ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அவர் பல்வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தமும், மோசமான கவனிப்பும் அவர் கற்றுக்கொண்ட அரைகுறை மொழித் திறனையும் மறக்கச் செய்தது. அவர் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றார். தற்போது 60 வயதைக் கடந்த ஜினி, கலிபோர்னியாவில் ஒரு ரகசியமான அரசுக் காப்பகத்தில் வசித்து வருகிறார். ஜினியின் கதை, மனித வளர்ச்சிக்குத் 'தொடர்பு' (Communication), 'அன்பு' எவ்வளவு அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு துயரமான பாடமாகும். அந்தப் பாடத்தின் முக்கியமான கூறு, துவக்கநாள்களில் ஊட்டப்படும் தாய்மொழியின் விதைப்பே அவ்வுயிருக்கான ஊட்டம். அத்தகு ஊட்டமில்லையேல் எதுவுமேயில்லை!

𝐘𝐨𝐮𝐫 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐨𝐧𝐠𝐮𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐡𝐞𝐚𝐫𝐭𝐛𝐞𝐚𝐭, 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐢𝐭.

-பழமைபேசி.

2/17/2026

2026: அமெரிக்கச் சமூகத்தின் புதிய மாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2025, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தைக் கடந்து, தற்போது மக்கள் அதிக விலைவாசி, அதீத தொழில்நுட்பம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுடன் கூடிய ஒரு "புதிய இயல்பினை” ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களின் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த முக்கிய மாற்றங்கள் , நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவையெவை?

"பெருவரவுசெலவு"க் கலாச்சாரம், முன்பெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தற்போது சிக்கனமாக இருப்பது அவமானத்திற்குரியது அல்ல. சிக்கனவரவுசெலவு பிரபலமாகி வருகிறது. அதாவது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் செலவு வைக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கும்போது, "மன்னிக்கவும், இது என் திட்டத்தில் இல்லை" என்று வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல் மறுப்பதும் தற்போது இயல்பாகிவிட்டது. மற்றவர்களை திருப்திப்படுத்த செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது உறவை பாதிக்காது; மாறாக மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறைப்பு , வயதான தோற்றத்தை மறைப்பது போன்றவை பழைய வாடிக்கையாக ஆகிவிட்டன. தற்போது, அனைவரது கவனமும் மனநலத்தின் மீது திரும்பியுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் கூட, அறிவாற்றல் திறன், கவனக்குவிப்புத் திறன் குறைவது குறித்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, உடல் அழகை விட, நல்ல தூக்கம் , மனத் தெளிவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அன்றாடம், 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை உணர வேண்டும். வெறும் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்காமல், சதுரங்கம் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது, நூல் வாசிப்பது போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம் நம் வாழ்வின் எல்லா இடங்களிலும் இருந்தாலும், மக்கள் தற்போது அதிலிருந்து சிறிது விலகி இருக்க விரும்புகிறார்கள். தொடுதிரையில் மூழ்கிக்கிடப்பதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களில் சாதாரண போன்களைப் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தற்போது "ஆஃப்லைன்" அனுபவங்களை அதிகம் தேடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது சில மணிநேரங்கள் போனை அணைத்துவிட்டு, குடும்பத்தினருடன், இயற்கையோடு நேரத்தைச் செலவிட வேண்டும். தொழில்நுட்பம் நம்மை ஆள விடாமல், நம் வேலைகளை எளிதாக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்து 10 நாட்களில் 10 இடங்களைப் பார்க்கும் சுற்றுலா முறை மாறிவிட்டது. "Slowcation" எனப்படும் நிதானமான பயண முறை பிரபலமாகி வருகிறது. அதாவது, விடுமுறையில் ஒரே இடத்தில் தங்கி, அந்த இடத்தின் கலாச்சாரத்தை ரசித்து, மன அமைதியுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். மேலும், கிளப்கள் , பார்ட்டிகளை விட, பூங்காக்கள், நூலகங்கள் போன்ற அமைதியான பொது இடங்களில் கூடுவதை மக்கள் விரும்புகிறார்கள். பயணங்களின் போது நிறைய இடங்களைப் பார்ப்பதை விட, மன அமைதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழுவாகச் சேர்ந்து நடைப்பயிற்சி செல்வது, விளையாடுவது போன்ற எளிய சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

வளைந்து கொடுக்கும் தொழில் வாழ்க்கை (Non-Linear Career), "ஒரே கம்பெனியில் வாழ்நாள் முழுவதும் வேலை" என்ற கோட்பாடு மறைந்து வருகிறது. மக்கள் தற்போது வருவாயைவிட விட, மனநலனுக்கும், சமச்சீர் வாழ்வுக்கும் (Work Life Balance) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல திறன்களை வளர்த்துக்கொள்வதும், தேவைக்கேற்ப வேலைகளை மாற்றிக்கொள்வதும், பகுதிநேர வேலைகளாகப் பலவற்றைச் செய்வதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த அண்மைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். "ஆடம்பரத்தை விட அமைதி முக்கியம்; வேகத்தை விட விவேகம் முக்கியம்." பணத்தை மிச்சப்படுத்துவதிலும், தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருப்பதிலும், உடல்நலத்தைப் பேணுவதிலும் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

புயல் வீசும்போது மரங்கள் வளையும், ஆனால் வேர்கள் உறுதியாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களை ஏற்கும் அதே வேளையில், நம் உறுதி, வலு, விழுமியங்களைப் பேணுவதே மெய்யான விழிப்புணர்வு.

பழமைபேசி, 02/17/2026.

2/12/2026

சிறுகோட்டுப் பெரும்பழம்

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு சார்பாக அடுத்து இடம் பெறவிருக்கும் கூட்டத்தின் தலைப்பு, சிறுகோட்டுப் பெரும்பழம் . இந்தத் தலைப்பில் ஏராளமான கதை, கவிதைகள், கட்டுரைகள் காலங்காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு, குறுந்தொகையின் இச்சொல்லாடல் புகழ்வாய்ந்தது. சிறுகோடு போலுள்ள காம்பானது  பெரும்பழத்தையும் தாங்குவது போல, காம்பு போன்ற மெல்லுயிரானது பலாப்பழம் போன்ற காதல்பாரத்தையும் சுமக்கின்றதெனும் உவமைதாம் இது.

இன்றைக்கு ரீல்சு எனப்படும் மீச்சிறுகுறும்படங்களில் இடம்பெறும் தலைவன் தலைவி க்கிடையேயான ஊடல்ப் பகடிகளில் பெரும்பாலானவற்றின் வேர், தமிழ்ச்சங்க இலக்கியங்களென்றால் வியப்படைவீர்கள். அத்தனையும், தமிழின் அகத்திணையில் அடக்கம்.

தும்மல் அக்கப்போர்

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இந்தத் துணுக்கு மிகவும் பிரபலம்: " வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." (திருக்குறள்: 1317 ). நான் தும்மியபோது "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள். ஆனால், அடுத்த கணமே "யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு அழுது பிணங்கி அக்கப்போர் செய்தாள்.

கனவிலும் ஊடல்

"நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர் காணப் பவர்." (திருக்குறள்: 1219). கனவிலாவது என் காதலரைக் காண முடிந்ததே என்று மகிழாமல், கனவில் வந்தவரிடமும் ஏன் நேரில் வரவில்லை என்று ஊடல் கொள்கிறாள். கனவைக் கலைத்து நினைவாவதன் வாயிலாக, மீண்டும் பிரிவில் என்னை ஆழ்த்தும் விளையாட்டாயெனவும் சிணுங்கி அக்கப்போர் புரிகிறாள்.

மகனைத் தூதுவிடுதல்

தலைவன் பரத்தையிடம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, தலைவியின் கோபத்தைத் தணிக்க மகனைப் பயன்படுத்துவதை ஐங்குறுநூறு விவரிக்கிறது. " நின்னினும் சிறந்தோன் புதல்வன் இவனைக் கொண்டுபுகல் கின்றீயால் ஐய! தன்பார்ப்புக் கற்பின் மலிந்த கண்ணினள்..." (ஐங்குறுநூறு: 401) . "ஐயனே! உன்னைவிடச் சிறந்தவனான உன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாயே? உன் மகனைக் கண்டதும் அவனது தாய் (தலைவி) தன் கோபம் மறந்து மகிழும் போது சேர்ந்து கொள்ளலாமென்பதுதானே உம் கோளாறு?" என, தோழி கலாய்க்கிறாள்.

கண்ணின் பிம்பம்

" கண்ணுள்ளின் நின்றார் எவராகொல்? பண்ணை எம்மேல் கடுத்தார் பெரிது." (திருக்குறள்: 1313) .  உம் கண்ணுக்குள் யாரோ ஒரு பெண் தெரிகின்றாள்? யார் அவளெனக் கேட்டு அக்கப்போர், அவனது கண்களில் தெரிவது தம் உருவம்தான் என்பதையும் கடந்து.

இயற்கை தந்த சாட்சி

“ தினைத்தாள் அன்ன கால செங்கால் நாரை நல்அலகு பார்க்கும் ஊரன் எம்மை நீயென்றோனே." (குறுந்தொகை: 25) ”. காட்டில் வைத்து அவன் அவளிடம் உறுதி கூறிய போது, தினைத்தாள் போன்ற கால்களை உடைய ஒரு நாரை மட்டும் மீனுக்காகக் காத்திருந்தது (அதுவும் மீன் பிடிப்பதில்தான் கவனமாக இருந்தது). அதாவது, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும் அந்த நாரையைப் போல நீயுமன்றோ எனச் சொல்லாமல் சொல்லி ஊடல் புரிகின்றாள்.

பல்லி சொல்லுதல்

" கல்லென் கானத்துத் தேன்மீக் கொள்பவர்... பல்லிப் பாங்கில் சொல்லும்..." (நற்றிணை: 169) . தலைவன் வருவதைத் தெரிவிக்கும் விதமாகப் பல்லி சத்தம் போடுகிறது (நற்சொல்). "பல்லியே! நீ சொல்வது உண்மையானால் என் காதலன் இப்போதே வருவான்" என்று தலைவி பல்லியிடம் உரையாடும் அளவுக்குப் பிரிவு அவளை வாட்டுகிறது. இதுவே பின்னாளில், கெளளி கத்தினால் நல்லூழ் எனும் வழக்காறாக மாறிப் போனதாகவும் இருக்கலாம்.

காதல் நோய்

காதல் நோய்க்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. மற்ற நோய்களுக்கு மருந்து வேறு எங்காவது கிடைக்கும். ஆனால் காதல் நோயைத் தந்தவனே அதற்கு மருந்தாகவும் இருப்பான். " நோய் தந்தவர் மருந்தாகார் எனின்..." (கலித்தொகை) . தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை, கனவென்னைக் கொத்தி தின்றால் பரவாயில்லை, காதல் பிசாசே காதல் பிசாசே!

ஆதலினால் காதல் புரிவீர்! ❤️❤️‍🔥

-பழமைபேசி. 02/12/2026.