Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

2/03/2012

நின் வாழ்த்தால் வசமானேனே!!

அகமுடையான், அன்பன்
கணவன்,ஆம்பான், ஆமுடையான்
ஆமக்கன்,நாயகன்,தவன்
தற்கொண்டான், தாட்டான்
துணைவன், நயந்தோன்
நாதன், பாங்கன், புவான்
பூண்டான், பெண்ணான்
மகிணன், மணந்தோன்,
மணவாளன், மணாளன்,
மனைக்கிழவன், மாப்பிள்ளை
வயவன், வல்லபன்
விழைந்தோன், வீட்டுக்காரன்
வேட்டான், கண்வாளன்
கண்ணாளன், உயிரான்
எனத் தமிழாலே எனக்காய்
எல்லாமுமாய் ஆனவரே
நின் வாழ்த்தால் வசமானேனே!!

2/01/2012

விழிநாள் வாழ்த்து!!

அகத்தாள், இல்லாள், மனையாள்
அடுப்பி, அகவாட்டி , அறத்துணைவி
ஆட்டி. சகசரி, சமுசாரம்
சானி, சேர்த்தி, தலைமகள்
எம்மானி, தலைவி, துணைவி
தேவி, நப்பின்னை , நாயகி
பத்தினி , பாரியை, பிரியை
பெண்சாதி, பெண்டாட்டி, பொருளாள்
மகடூஉ , மனைக்கிழத்தி, மனையாள்
வல்லவை, வனிதை, விருந்தனை
மனைவி, வதுவராளி
வீட்டாள், வீட்டுக்காரி
வீரை, வேட்டாள்
கண்வாட்டி, சாயி
எனத் தமிழாலே எனக்கு ஆனாய் நீ
நின் பூவிரு விழிகள் விழித்த நாளதில்
தமிழால் வாழ்த்துகிறேன்
நன்றியுடனே!!

3/04/2011

நசரேய இளம்பாண்டியனார் வாழிய, வாழியவே!!

அமெரிக்கத் தூங்காநகரம்
நியூயார்க் நகரம்
மெய்சிலிர்த்துக் குதூகலித்தது
தம்மண்ணை அலங்கரிக்க
தமிழ்மொட்டு ஒன்று மலர்ந்ததென!

தமிழுக்கு உயிர்த்த
தென்பாண்டித் தேரடா நீ!
குருவின் தினத்தில்
தமிழ்க் குலவிளக்காய்
பாராள வந்தாய் நீ
பொங்குதமிழ்ப் பாடுவாய் நீ
அவனியெங்கும் தமிழ் பவனி வர
டேவிட் கவின் நீ
எம்மவர்க்கு அணி சேர்ப்பாய் நீ
தென்பாங்குத் தமிழே நீ வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!


2/25/2011

மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் பிறந்த நாள் வாழ்த்து!!

இன்று பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் நாள், அன்புச் செல்லம் மடத்துக்குளம் கவின் செந்தில்வேலன் தனது அன்பு அப்பா, அம்மா, அப்பாவின் தோழர்கள், மற்றும் சுற்றமும் நட்பும் சூழத் தனது முதலாவது பிறந்த நாளைத் துபாயில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுகிறார்.

பிறந்த நாள் விழாக் காணும் அன்புத்தளிர் கவின் அவர்களை, சென்னையிலிருந்து வாசு மாமா, ஈரோட்டிலிருந்து கதிர் மாமா, ஆரூரன் மாமா, உடுமலையிலிருந்து அம்மம்மா, அப்பப்பா, நாகா மாமா, சிதம்பரம் மாமா, சூலுரிலிருந்து தாத்தா பாட்டி, நியூயார்க்கிலிருந்து நசரேயன் மாமா, டாலாசிலிருந்து குடுகுடுப்பைத் தாத்தா, டெட்ராயிட்டிலிருந்து பெரியப்பா, சார்லட்டிலிருந்து பழமைபேசி பெரியப்பா, ராலேயிலிருந்து ஓலையார் மற்றும் சித்தப்பாமார், சித்திமார், அத்தை முதலானோர் இவரை பல்கலைகள் கற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்கள்!!

10/06/2010

நசையுநர் வாழ்த்து!

மரங்கள் உயிர்த்திட
உழவுநிலம் காத்திட
கண்கொடை விருத்திட
குருதிக்கொடை உயர்த்திட
நெகிழிப் பாவனை குறுகிட
உணவுவிரயம் சிறுகிட
மனித நேயம் பரவிட
நற்செயலாதரவு கூடிட
தமிழ்முகம் மலர்ந்திட
நும் சேவை தொடர்ந்திடுக!
பொன்னகவை பல அடைந்திடுக!!
நம்பப்பட்டோனாய் நிலைத்திடுக!!
மொத்தத்தில், நீ, நீயாகவே இருந்திடுக!!

பிறந்த நாள் வாழ்த்துகள்!

--அகில உலக நசையுநர்கள்

9/04/2010

திருமண வாழ்த்து

சென்னையில் இன்று திருமண விழாக் காணும் நண்பர்கள் திருநிறைச்செல்வன். க.மகேந்திரன் மற்றும் திருநிறைச்செல்வி பதிவர் செள.தமிழரசி அவர்கள் இருவரையும்,


கலையாத கல்வி, கபடற்ற நட்பு,
குறையா வயது, குன்றா வளம்
போகா இளமை, பரவசமான பக்தி
பிணியற்ற உடல், சலியா மனம்
அன்பான துணை, தவறாத சந்தானம்
தாழாக் கீர்த்தி, மாறாச் சொல்
தடையற்ற கொடை, தொலையா நிதி
கோணா செயல், துன்பமில்லா வாழ்வு
என்ப் பதினாறும் உற்றுப்
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!!


விஜயகுமார் வேணுகோபால், நியூஜெர்சி.
வெங்கடேசன் சந்திரன், பெங்களூரு,
பழமைபேசி, சார்லட்.

7/28/2010

யாரந்த, நான் ஊறிய நலஞ்சூடி??

அவதானித்து வந்தாய்
நாளும் நறுக்கென நாலு
நயமாய் நையக் கேட்டாய்
பேதமிலா வாசிப்பாளனுமானாய்
எழுதுவோர் ஊக்கனுமானாய்
ஆழ்ந்து படித்து பண்பனுமானாய்
மெல்ல முகம் காட்டினாய்
வியந்தது அவனிமிகு பதிவர்கூட்டம்
நாளொரு முகம் காட்டினாய்
நாடுவோர் கூட்டம் மிகுந்தவனானாய்
மகுடங்கள் பல சூடினாய்
வெல்லாமகனையும் வென்றாய்

நானூறு...
நான் நானாக நல்லதனமாக ஊறுகிறவனுமானாய்
நற்றமிழ், நல்லூழ், நல்லுயிர்
நலஞ்சூடி நாளும் நாளும் படைத்திடுவாய்!!
வாழ்க, வளர்க, வணங்குகிறோம்!!

7/20/2010

வாழ்த்துறோம்... வாழ்த்துவோம்!!!


அண்ணே... பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

POP( பொ ஊ போ...)party கொடுத்துச் சிறப்பிச்சதுக்கும் நன்றிகள்!!!

6/30/2010

தமிழ்ச் சேவகன் சின்னப்பையன் சத்யா

ஆற்றுவார் ஆற்றல் பணிதல், அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை! இக்குறளுக்கு இலக்கணமானவர்; இளகிய மனதுக்குச் சொந்தக்காரர்; அதீத நகைச்சுவை உணர்வும் கொண்டவர்; பணிவாகப் பேசி அடுத்தவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அதிசய மனிதர் இவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் எம்மை அழைத்து அளவளாவிக் கொண்டு இருந்தார். அதனூடாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் பேரவையின் திருவிழாவைப் பற்றியும் நினைவு கூர்ந்துவிட்டு, ”தன்னார்வத் தொண்டராக வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். யாரை அணுக வேண்டும்?” என்று வினவினார். அன்றைய நாள் தொட்டு இன்று வரையிலும், தமிழர்களுக்காகவும் தமிழ்ச்சங்கப் பேரவைக்காகவும், அல்லென்றும் எல்லென்றும் பாராமல் உழைத்து வருபவர்தான்
சின்னப்பையன் என்கிற சத்யா அவர்கள்.

கனெக்டிக்கெட் மாகாணம், வாட்டர்பெரியில் நடக்க இருக்கும் தமிழ்த் திருவிழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்த அவரிடம், நாம் கண்ட செவ்வியின் சாராம்சம்தான் இது.

வணக்கம் சத்யா! விழா ஏற்பாடுகளில் வெகுமும்முரமாய் இருக்கிறீர்கள். தங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது??

(வழமையான நகையுனூடே தொடர்கிறார்) வணக்கம், வணக்கம் பழமைபேசி! ஆமாம், இந்த ஏழு எட்டு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் தருணத்தில் இருக்கிறோம். மகிழ்வாய் இருக்கிறேன். கடந்த எட்டு மாத கால அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். அந்த அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட, மேலான அனுபவத்தை அடைந்த உணர்வுதான் மேலிடுகிறது.

மகிழ்ச்சி சத்யா! திருவிழாவுக்கான உங்களது கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. என்றாலும், குழப்பங்கள், ஏமாற்றங்கள், அயர்ச்சி, சலிப்பு, விரக்தி முதலான உணர்வுகளும் உங்களை நிச்சயம் ஆட்கொண்டிருக்கும். அத்தருணத்தில், “இது எல்லாம் ஒரு பொழப்பா” என நினைத்த்து உண்டா??

இல்லவே இல்லை. நான் சார்ந்த சமூகத்திற்குப் பணி செய்வதை என் கடமையாகக் கருதினேன். கூடவே, இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை எண்ணிப் பெருமையடையவும் செய்தேன். என் ஈடுபாட்டை அறிந்த அமெரிக்க நண்பர்கள், என்னைப் பாராட்டும் போது பெருமிதம் கொண்டேன் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அமெரிக்க நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் போல, சில தமிழ் நண்பர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பார்களே??

ஆமாம். சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. தமிழர்களுக்கென்று ஒரு அமைப்பு; அதற்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை. பங்களிப்புச் செய்து கொண்டு விமர்சனம் செய்யலாம். எதுவுமே செய்யாமல், புறம் பேசுவது சரியானது அல்ல என்பதே என் கருத்து.

சத்யா, பேரவைக்கும் தமிழ்ச் சங்கத்திற்கும் முன் அறிமுகம் இல்லாதவர் நீங்கள். அப்படியான சூழலில், தமிழ்ச் சங்கம் மற்றும் பேரவையின் முன்னோடிகள் உங்களை நட்த்திய விதம் பற்றிக் கூற முடியுமா??

அஃகஃகா! எட்டு, ஒன்பது மாதம் தொடர்ந்து வேலை செய்வதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியவில்லையா? மிகவும் நல்லபடியாக, சகோதர சகோதரிகள் போலவே நட்த்தினார்கள். ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் அறவே இல்லை. இனியும் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனியிடம் கொடுக்கப்பட்டு இருப்பது போலவே உணர்கிறேன்.

அப்படியானால், மற்றவர்களுக்கு??

என்ன கேள்வி இது?? தனியிடம் என்றால், எனக்கான இடம் அது. அது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்து இருக்காமலா போயிருக்கும்?? இன்னுஞ் சொல்லப் போனால், என்னைவிட மிக அதிகமாக உழைப்பவர்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள்.

பேரவையின் சிறப்பு என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

புலம் பெயர்ந்த நாட்டிலே, வட அமெரிக்காவிலே இருக்கிற தமிழர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரும் ஒரு கட்டமைப்பு. தமிழர்களாகிய நாம் எல்லோருமே அதை வலுப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எம் ஆவல்.

அதிகார மையம் போன்று யாராவது செயல்படுகிறார்களா? ஆமெனில், அதைப் பற்றி விரிவாக்க் கூற இயலுமா??

என்ன இது? நல்ல கேள்வியே உமக்குக் கேட்கத் தெரியாதா?? அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நாளில் இருந்தே, நான் விழா ஒருங்கிணைப்பாளருடைய வழிகாட்டுதலில்தான் வேலை செய்து வருகிறேன். எங்கள் ஊரைச் சார்ந்த
முனைவர் பழனி சுந்தரம் அவர்கள்தான், அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தலைவர். ஆகவே, அவருடன் சேர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பின்னாலேயே நானும் பயணிப்பேன்.

பேரவைப் பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளு முன்னரே, பேரவையைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தீர்களா??

இல்லை. சென்ற ஆண்டு விழாவின் போது, உங்களுடைய வலைப்பூவை அவதானித்திருந்தேன். அதுதான் எனக்குக் கிடைத்த அறிமுகம்.

அப்படியானால், பேரவையின் மீது வைக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருந்து, உமக்கு அவை பற்றிய விபரங்கள் தெரியாமலும் இருக்கலாம் இல்லையா??

விமர்சனங்கள் சரியானதாக இல்லாமலும் இருக்கலாம் இல்லையா? இந்த எட்டுமாத காலமாக அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியெல்லாம் எதுவும் என் கண்களுக்குப் புலப்படவில்லை. அதற்கும் மேலாக, தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டமும் இல்லை. தமிழர்கள் ஒன்று கூடி, விழாவைக் கொண்டாட வேண்டும். கல்வி மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வளவுதான் என் மனதில் தோன்றுவது.

இப்படி தினமும் நள்ளிரவு வரை உழைக்கிறீர்களே? குடும்பத்தாரின் அணுகுமுறை எப்படி இருக்கிறது எனச் சொல்ல முடியுமா??

துவக்கத்தில் விரக்தியாகத்தான் பேசினார்கள். பெரும் குழுவாகப் பலரும் கூடி வேலை செய்யத் துவங்கியதைக் கண்டதும், விரக்தியானது மறைந்து ஒரு புரிந்துணர்வு வந்து விட்டதாக உணர்கிறேன் நான்.

சத்யா, உங்களைப் பேரவைக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த்தில் எனக்குப் பெருமை; தமிழர்களுக்குப் பெருமை; குறிப்பாக, பதிவுலகுக்குப் பெருமை! உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!! என்னிடம் கேட்க வேண்டியது ஏதாவது உள்ளனவா??

நீங்கள் நிறைய இலக்கிய நூல்கள் படித்து வருவதாக அறிகிறேன். இளைஞர்களுக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா எனச் சொல்லுங்கள்.

மொழி வளம் கூடும். மனம் பண்படையும். கூடவே வாசிப்பனுபவம் பெருகிப் பேரின்பம் கிட்டும்; கிட்டுகிறது என்பதுதான் என் நிலை. நன்றி சத்யா! உங்கள் ஊர்த் திருவிழா சிறக்க எம் நல்வாழ்த்துகள்!!

நீங்களும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக, உங்களுடைய பதிவுலகப் பணி சிறக்க என் வாழ்த்துகள்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

6/29/2010

அண்ணன் அப்துல்லாவே வருக!


அகந்தையற்ற அண்ணனாய்
ஆமாம்ணேயென ஆற்றுபவனாய்
இன்முகமே இனியபொழுதாய்
ஈவது இயல்பினனாய்
உவகைதரு உற்றவனாய்
ஊக்கமது ஊட்டுபவனாய்
எல்லோருக்கும் எங்களவனாய்
ஏணியது ஆகுபவனாய்
ஐம்மையே கொண்டவனாய்
ஒண்ணுதல் ஒதுக்காது
ஓராயம் போற்றும்
ஒளதாரியனே

வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவுக்கு வருகை தரும்
அண்ணன் அப்துல்லாவே வருக! வருக!! வருக!!!

6/21/2010

செம்மொழி மாநாடு: ஈரோடு கதிர் பேசுகிறார்!

யார் இந்த ஈரோடு கதிர்?


அன்புப்பெருக்கானது பொங்கு கடலினும் அளப்பரியதாய் மேலோங்கி, எங்கும் செழித்திடச் செய்யும் கொங்குவள நாட்டின் சிற்றரசுகளில் ஒன்றான பொன்கலூர் நாட்டுக்கு உரிய செம்பை எனும் கிராமத்தைச் சார்ந்தவர். வளர்ந்து வரும் படைப்பாளி, சிந்தனைவாதி!

சிற்றிதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இணையத்திலும் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார். சீரிய ஆளுமைக்குச் சொந்தக்காரர். சமூகநலப் பணிகளை வெகுவாக ஆதரித்து எழுதுபவர். அரிமா சங்கம் மற்றும் ஜேசீஸ் சங்கம் முதலானவற்றில் முனைப்பாகச் செயல்பட்டு வருபவர்.

பல ஆண்டுகளாக உடல்தானம் மற்றும் கண்தானங்களை முனைப்போடு ஆதரித்து, ஊக்குவித்துச் செயல்படுத்தி வருபவர். அரிமா சங்கம் மற்றும் தனது நண்பர்களோடு இணைந்து மரம் நடுதல், கல்விக்கான உதவி முகாம்கள் முதலானவற்றை நடத்துவதிலும் பங்களிக்கிறார்.

உலகளாவிய வலைப்பதிவர் கட்டமைப்பு உருவாக வேண்டும் என்பதில் திண்ணமாய் இருப்பவர். தமிழ்மணம் திரட்டியின் நல்லாதரவோடு, ஈரோடு பதிவர் சங்கமம் எனும் நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக நடத்திக் காட்டியவர்களுள் இவரும் ஒருவர்.

வார ஈறில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் தன் பெற்றோருடனும், வார நாட்களில் ஈரோடு நகரில் சுயதொழில் புரிந்து கொண்டும் சமூகத்திற்குத் தன்னாலான பணிகளைச் செய்து வருகிறார்.

செம்மொழி மாநாடு

கோயம்பத்தூரில் வெகு விமரிசையாக நடக்கவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழிணைய மாநாடும் நடக்கவிருக்கிறது. இணையத்தில் தமிழ் வளர்க்கும் பல ஆன்றோர், சான்றோர், தொழில்நுட்பப் பொறிஞர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்வையொட்டி ஜூலை 25, 2010ம் நாள் பிற்பகல் 3.45 மணியிலிருந்து மாலை 4.15 வரையிலும், மாநாட்டு வளாகத்தில் இருக்கும் முரசொலி மாறன் அரங்கத்தில், கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார் ஈரோடு கதிர் அவர்கள்.

சமூக மேன்மையைக் கருத்திற் கொண்டு படைக்கும் எழுத்துகளைக் கொண்ட ஒரு வலைப்பூவின் படைப்பாளி, இத்தகைய தலைப்பில் உரையாற்றுவது அவருக்கும், பதிவுலகக் கட்டமைப்புக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

நாளுக்கு நாள் இணையப் பயன்பாடு பெருகி வரும் இவ்வேளையில், வலைப்பூக்களின் சிறப்பைக் கூட்டப்போகும் அவரது உரை மற்றும் அவரோடு இணைந்து அரங்கத்தைச் சிறப்பிக்கும் மற்றவர்களது உரையும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்!

எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய்
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!
--பாவேந்தர் பாரதிதாசன்


வாழ்த்தும்,
உலகளாவிய நண்பர்கள் மற்றும் பழமைபேசி

6/15/2010

குடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே!!

அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!

அவனியாள வந்தாய் நீர்
இளஞ்சோழா
பாரெங்கும் தமிழ் தழைத்தோங்க
நீர் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!!

பொதிகை நின்னைத் தவழ்ந்துவர
நின்பெற்றோர் பெருமை உய்த்திட
அவர்தம்பெயர் சொல்லிவருவாய் நீயே
உம்பிறப்பால் தமிழ் எழுச்சிகொள்ளும்!
தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!

2/13/2010

கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன்!


என்னவளே,

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ என் வாழ்வில் அமையப் பெற்ற ஒன்றும், நிதர்சனமும் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, எனக்கு இனிமை கூட்டும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் அறியாமையையும் முட்டாள்ப் போக்கையும் அலட்சியம் செய்யும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் வீட்டைப் பற்றிய கவலைகளைக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் இளவல்களை உன் கருவிழிகளாய்ப் பார்க்கிறாய் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன்முகத்தில் என்னைப் பற்றிய பெருமிதம் மிளிரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் அறத்தைப் பற்றிக் கற்கும் போது அருகில் வரும் நீ, அறமாய்த் தோற்றம் அளிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன் வெகுளித்தனத்தின் விளைவாய் ஏற்பட்ட உன்னழுகை என்னுள் சிரிப்பை உண்டாக்கி, அது உன்னுள் மேலதிக அழுகையை உண்டாக்கி, அதுகண்டு நான் மேலும் வலுவாகச் சிரிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உள்ளபடியே எனது காதல் அனுபவங்களைச் சொல்ல, நீ அதைக் காதல் பார்வையோடு காண்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ எனது தவறுகளைச் சரி செய்து அவற்றைக் கடந்து செல்லும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, சண்டை மூளும் போதெல்லாம் கோபமாய்ச் சென்ற நீ, மீண்டும் வாஞ்சையோடு திரும்பி வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் உயிரைப் பாதுகாப்பாய் உன்னுள் வைத்திருக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்ற பெண்களைப் பற்றிய விரும்பத்தகாத செய்திகள் காதில் விழும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மிகச்சரியாய் நீ என்னைப் புரிந்து கொள்ளும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் ஏகடியம் செய்ய வாய்ப்பளிக்கும் பொருட்டு சமைத்த உணவில் உப்பைப் போட மறக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ ஏமாந்து போய் என்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை நினைக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என்னை நீ உத்தமனாய் எண்ணிக் கொண்டு இருப்பதை எண்ணும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, குறிப்பறிந்து உகந்த நேரத்தில் ”இந்தாங்க மாமாய் காப்பி!” என்று வளைய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்றவர் இடத்துப் பேசும்போதெல்லாம் என்னை நீ உயர்வாகப் பேசுவதை அறிய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் இன்னும் உன்னைக் காதலிக்கிறேனோ என எண்ணிப்பார்க்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நின்னை நினைந்து நினைந்து என்னுள் நினைவுகளை விரித்து, அதை எழுத்தாக மாற்றும் இந்த மணித்துளியைப் போன்ற நேரத்தில் மட்டும்!


மேலே சொன்ன ‘கொஞ்சங்களை’ எல்லாம் ஒன்று கூட்டிப் பார்த்து, ”ஒவ்வொரு மணித்துளியும் நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாளும் நாளும் மேலதிகமாய்க் காதலிக்கிறேன்” என உள்ளதை உணரும் இப்பொழுதிலும் காதலிக்கிறேன் உன்னை!

பணிவுடன்,
பழமைபேசி.


காதலே குருதியாய் ஓடும் நம்முள், அது மேலும் மேலும் மகத்தானதாய் உருவெடுத்துக் குதூகலம் பொங்கட்டும் என, என் காதலியுடன் இணைந்து, இந்தக் காதலர் தினநாளில் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

2/26/2009

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

9/08/2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு - 3

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம். அதுபத்திக் கவி காளமேகம் பாடினது, திருநள்ளாறு கோவில் வரைவுன்னு இரு வேறு பதிவுகள கடந்த காலங்கள்ல பதிஞ்சு இருந்தோம். இப்ப, இது மூனாவது பதிவு இது குறிச்சு.

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

--அபிராமிப் பட்டர்.
  1. நோயற்ற வாழ்வு
  2. கல்வி
  3. தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
  4. தனம்
  5. அழகு
  6. புகழ்
  7. பெருமை
  8. இளமை
  9. அறிவு
  10. சந்தானம் (குழந்தைச் செல்வம்)
  11. வலிமை
  12. துணிவு
  13. வெற்றி
  14. ஆயுள்
  15. ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்)
  16. நுகர்ச்சி

8/30/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 7

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல நாம அடுத்து பாக்கப் போறது மாலை மாற்று! "ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி!". அதாவது கடைசி எழுத்துல இருந்து திரும்பி படிச்சாலும் அதே பாட்டு வரணும். அதாவது மணி மாலையை இட வலமாப் போட்டாலும், வல இடமா மாத்திப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கு இல்லீங்களா? அது மாதிரிதான் இதுவும். இட-வலம், வல-இடம்னு எப்படிப் படிச்சாலும் ஒரே பாட்டு வரும். வழக்கம் போல எம்மோட செல்ல மகளை மனசுல இருத்தி, மாலை மாற்று அடிப்படைல எழுதினதுதான், மேல சொன்ன பாட்டு.

பொழிப்புரை:
வா - வருவாய்
பாடு - பாடு
பா - பாட்டு
மா - சிறப்பு
ஆயா - காப்பவள்
நீ - நீயே
நீ - நீ
யாம் - யாங்கள்
மா - மேன் நிலை
பாடு - பாடு
பா - அழகு
வா - வருவாய்

கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!

இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க

(.........இன்னும் வரும்........)

8/28/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 6

பா      வா      மை      வை,
நீ       மீ          ஊ         ஈ,
வீ      மோ      கோ      போ,
தீ      தா        ஐ       ஓ!

வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.

பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
ஊ : அன்னம் அல்லது உணவு
ஈ : கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
ஐ : அச்சம்
ஓ : ஒழி அல்லது தவிர்

கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!

பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!


8/27/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 5

"சிலேடை நயம் இல்லாம, கவி காளமேகத்தோட தாக்கம் இவனுக்கு எப்படி வரும்?". இப்படிக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்கையா, கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்படியான பொறகு, நாம சிலேடைல பாட்டு எழுதித்தான ஆகணும். சரி, அந்த வகைல எளிதான சொல்லுகளை வெச்சு எழுதின, இரட்டுற மொழிதல் (சிலேடை) பாட்டு ஒன்னைப் பாக்கலாங்க.

சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி
மேனித் தளிர்
மான் மகவு மேஅது!

முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!

இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!

(இனியும் வரும்....)

8/25/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 4

கவி காளமேகம் எல்லா விதமான கவிதைகளையும் எழுதுவதில வல்லவர். அவருடைய தாக்கம் நம்மளையும் இந்த முயற்சிக்கு தள்ளி விட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய மூணு பதிவுகளைப் படிச்சுட்டு இந்த பதிவைப் படிச்சீங்கன்னா மேலும் பயனுள்ளதா இருக்கும். சித்திரக் கவியில மெல்லினப் பாடல், இடையினப் பாடல், வல்லினப் பாடல், நீரோட்டகம், ஒட்டியம் பாத்தாச்சு. அந்த வகைல இப்ப பாக்கப் போறது கோமூத்திரி (ஆநீர் நடை). பாட்டுல முதல் அடிய மேலயும், அடுத்த அடிய கீழயும் எழுதிட்டு, ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து மேலடியிலயும் கீழடியிலயும் படிக்கும் போது அதே அடி வரணும். இப்ப நீங்க மேலயும் கீழயும் ஒரு எழுத்து விட்டு எழுத்துப் படிக்கிறது ஒரு ஆ(மாடு) நடக்கும் போது சிறுநீர் கழிச்சுட்டுப் போனா, தரையில எப்படி இருக்குமோ அந்த சாயல்ல இருக்கும். சிரிக்கப் படாது, சரசுவதி கண்ணைக் குத்தீரும்! ஆம்மா... சொல்லிட்டேன்!! அதனால தான் இந்த வகைக்குப் பேரு கோமூத்திரி (கோ + மூத்திரம்). வழக்கம் போல என்னோட செல்ல மகளை மையமா வெச்சு ஆநீர் நடையில ஒரு கவிதை.

புகழும் வாக்கும்
பெற்று விடு!
நிகழும் போக்கும்
உற்று விடு!!

வீடு வாழ
நல்லது செய்து விடு!
நாடு வாழ
வல்லது உய்து விடு!!

வீட்டைக் காக்கப்
பூட்டைப் போடு!
நாட்டைக் காக்கப்
பாட்டைப் பாடு!!


பொருளுரை: செல்ல மகளே, புகழையும் உண்மை பேசும் வாக்கையும் கொண்டு, பின் இப்போது இருப்பது போலவே நல்லதொரு நிலையை எப்போதும் அடைந்து விடு. வீட்டார் நல்லபடியாக இருக்க நல்ல காரியங்களைச் செய்தும். நாடு நல்லபடியாக இருக்க வலிமை பெற்றும் இருப்பாயாக!. மேலும் வீட்டைப் பாதுகாக்க நல்லதொரு பூட்டைப் பூட்டுவது போல் நாட்டைப் பாதுகாக்க எழுச்சி மிக்க பாட்டைப் பாடு.

(இனியும் வரும்....)

8/24/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 3

வணக்கம்! நீங்க இதுக்கு முந்தைய பதிவான "கவி காளமேகத்தின் தாக்கம் - 2 "ங்ற பதிவைப் படிச்சுட்டு வந்தா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். ஏற்கனவே அதை படிச்சிட்டீங்கன்னா, மேல படியுங்க! சித்திரக் கவி வகைல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம். அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக மட்டும் தனியாவோ கூட்டெழுத்தாவோ சொல்லுல வர்ற மாதிரிப் பாடினா, உதடு ஒட்டியோ குவிஞ்சோ வரும்ங்க. இப்ப வழக்கம் போல, என்னோட மகளை மையமா வெச்சி எழுதின ஒரு ஒட்டியப் பாட்டு:

துறுதுறு சுறுசுறு பொம்மி குறுபொம்மு!
கொடும் ஊழ், ஊறு வடுவும் மவ்வும் பேரும்!!
மதுவும் சூதும் சுடுசுடு சூடு; ஒவ்வாது!
பாகுமுறுவும் ஊணும் உடுப்பும் உறு!
தொழு ஒரு பொழுது, பெறு ஓதும் பேறு!


பொருளுரை: "துறு துறு" என இருக்கும் சுறு சுறுப்பான, அழகான என் மகளே! கொடுமையானது என்பது மனத்தில் தீங்கு நினைப்பதும், அதனால் பெயர் கெடுவதும். மதுப் பழக்கமும் சூதாடும் பழக்கமும் மிகவும் கொடியது. தீயைப்போல் சுட்டுவிடும், அவை உனக்கு ஆகாது. கரும்புப்பாகுவைப் போன்ற இனிமைப் புன்முறுவல், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியனவற்றை நீ எப்போதும் உடையவளாவாயாக! மேலும் தினமும் ஒரு முறையாவது இறைவனைத் தொழும் பாக்கியம் நீ பெறுவாயாக!

(இனியும் வரும்....)