Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

8/07/2013

ஆப்பு

அம்மா பயித்தம் பருப்பு(பாசிப் பயறு) காயப் போட்டுக் கொண்டிருந்தார். ”அம்மா, பயறுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருக்கு? பூச்சிகள் அண்டி உளுத்துப் போனதாட்டம் தெரியலையே??” என்றேன். “பூச்சி அண்டினாத்தான் காயப் போடணும்ங்றது இல்ல. நல்லா வெயில் அடிக்குது. சும்மா இருக்குற நேரங்கள்ல இதுகளைக் காயப் போட்டு வெச்சிகிட்டா நெம்ப நாளைக்கு நின்னு புடிக்கும்” என்று சொல்லிக் கொண்டே மொட்டை மாடியிலிருந்து கர்ம சிரத்தையாய் அடுத்த வேலைக்காக இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குப் பலியாகாத அம்மா என் அம்மா என்கிற திமிர் எனக்கு. அந்த நேரம் பார்த்து ஒரே ஒரு குருவி மாத்திரம் தரையிலிருந்து வெடித்து வெடித்து குந்திக் கொண்டிருந்தது. அது வெடிக்கும் போது இறக்கைகள் சிதறுவது போல இருந்தன. இது ஏன் சும்மா சும்மா வெடித்துக் கொண்டிருக்கிறது என நினைத்த நான், அந்த பயித்தம் பயிறிலிருந்து சில மணிகளைக் கையிலெடுத்து அதை நோக்கி வீசினேன். இரண்டு மூன்று முறை தரைகுத்திப் பொறுக்கிய அது விருட்டெனப் பறந்து போனது.

என்னை அங்கு நிலைநிறுத்திய அதுவும் போய் விட்ட சூழ்நிலையில் அம்மாவிடமே போகலாம் எனக் கீழிறங்க நினைத்த மாத்திரத்தில் நான்கைந்து குருவிகள் வந்து குந்தின. அந்த ஒற்றைக்குருவி போய் மற்றனவற்றைக் கொண்டு கூட்டியாந்திருக்கிறது என நினைத்த நான், இன்னும் சில பயறுமணிகளை எடுத்து வீசினேன். குதித்துக் குந்திய அவை தரை குத்தத் துவங்கின. அவற்றுள் ஒரு குருவி மாத்திரம் எழும்பிப் போனது. போயிக் கொஞ்ச நேரத்தில் இன்னும் மூன்று குருவிகள் வந்து சேர்ந்து கொண்டன. மணிகள் வீசப்பட வீசப்பட குருவிகளின் சேகரம் பெருக்கிறதே என்று நினைத்த நான் இன்னும் கொஞ்சம் மணிகளை அள்ளி வீசினேன். விருட்டென எல்லாமும் ஒரு சேரப் பறந்து போய்விட்டன. நின்று பார்த்தேன். நின்று பார்த்தேன். அவை வரவேயில்லை. குரல் மட்டுந்தான் கேட்டது. “பாட்டி, இங்க வந்து பாருங்க. சித்தப்பா எல்லாத்தையும் எடுத்து கீழ வீசிட்டு இருக்காங்க பாட்டி!!”.

5/30/2010

யார்டா அவன்? அவனை எறக்கி விடணும்!!

அவந்தான் பிரச்சினை... சொல்லுங்க.... எல்லாரும் ஏமாத்துறாய்ங்க.... அவன் எவன்? ஏற்கனவே பிரச்சினை.... எவ்ளோ கலாட்டா தெரியுமா? அவ்வ்வ்...... சொல்லுங்க சார்.... நீங்களும் என்னையும் ஏமாத்துறீங்க... பார்த்தீங்களா?

10/26/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 11

ஒரு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன்; ஒருநாள் காலையில, நான் வெளில ஓட்டப்பயிற்சிய முடிச்சிட்டு களைப்போட வீட்டுக்கு வரவும், என்னோட அன்பு மகள் மட்டும் வெளில என்னை எதிர்நோக்கிக் காத்துகிட்டு நின்னபடி இருந்தா. ’என்றா தங்கம் நீ மட்டும் வெளில நிக்குறே? அம்மா எங்கடா??’ அப்படீன்னேன்.

குழந்தை, அழகாத் தெளிவா பதில் சொல்லுச்சு, ‘ம்ம்.. ம்ம்.. அம்மா, பாத்திரம் எல்லாம் குளிக்க வெச்சுட்டு இருக்கு!’ அப்படின்னு.

எனக்கா, களைப்பு எல்லாம் நீங்கி, ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. என்னங்கடா இது, அமெரிக்காவுல பாத்திரத்தை எல்லாம் குளிக்க வெக்க ஆரம்புச்சுட்டாங்களே அப்படின்னுதான். அது போலத்தாங்க, சமீபத்துல காக்கா கத்துதுன்னு எதோ படிச்சேன். கழுதைதான் கத்தும், காக்கா கத்துமா? அது கரையும்! இதை மனசுல அசை போட்டுட்டே இருந்தப்பதான், எங்க அண்ணனோட மகள் நேற்றைக்கு மேலும் ஒரு சுவாரசியத்தைக் கொடுத்தா, பிள்ளை.

ஊருக்கு பேசிட்டு இருக்கும் போது, என்னடா வீட்ல சாப்பாடு இன்னைக்குன்னு கேட்கவும், பிள்ளை சொல்லுறா, ’சித்தப்பா, அம்மா இன்னைக்கு வெங்காய இலைப் பொரியல் போட்டுப் பிசைஞ்சு ஊட்டி விட்டாங்க’ அப்படின்னு. என்னங்கடா இது, வெங்காயத்துக்கு எல்லாம் இப்ப இலை முளைக்க ஆரம்பிச்சுடுச்சான்னு அண்ணிய ஒரு கலாய் கலாய்ச்சம்ல? இஃகிஃகி!

நான் பலமுறை சொன்னதுதான், தமிழ்ல ஒவ்வொன்னையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை உண்டு செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பாவிச்சா, குழப்பம் (Ambiguity) வராது.

ஆமாங்க, வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள். அகத்தி, பசலை, முருங்கை இந்த மாதிரியான தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை. கீரை ரெண்டு இணுக்கு முறிச்சுட்டு வாடா கண்ணு அப்படின்னுதான் கிராமத்துல சொல்லுறது. அதுக்காக கறிவேப்பிலைய ஏன் கீரைன்னு சொல்றது இல்லைன்னு மொடக்கடி பேசப்படாது பாருங்க.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. புல், பூண்டு அப்படீன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க இல்லையா? பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்! கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது சோகை, நல்ல தமிழ்ல சொல்றது தோகை. அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை. டேய், அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு எகுர ஆரம்பிக்கிறீங்க பார்த்தீங்களா? பொறுமை சாமி, பொறுமை! எதுவும், செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை இப்படி!

இவன் என்ன, இன்னைக்கு இலைய வெச்சிக் கச்சேரி நடத்திட்டு இருக்கான்னுதானே யோசிக்குறீங்க? விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது. நாம சின்ன வயசுல, வாரக்க நாட்டுல வாழ்ந்த கதையப் படிச்சீங்க இல்லையா? அந்த காலகட்டத்துல வீட்ல சொல்வாங்க, டேய், போடாப் போயி பெதப்பம்பட்டியில நல்ல வெத்தலையாப் பாத்து நாலு கவுளி வாங்கியா போன்னு சொல்லிச் சொல்வாங்க.

நானும் உடுமலைப் பேட்டை போற வண்டியப் புடிச்சு பெதப்பம்பட்டி நாலுமுக்குச் சந்தியில இறங்கி, அங்க வெத்தலைக்கடை வெச்சிருந்த இராமலிங்கண்ணங் கடைக்குப் போவேன்.

“யாரு, சலவநாய்க்கன்பட்டிப் பொன்னானா, வாப்பா, வா! கொழுமம் வெத்தலை, கொமரலிங்கம் வெத்தலை, தாராபுரத்துக் கற்பூர வெத்தலை எல்லாம் இருக்குது. உங்க ஊட்டுல என்ன வாங்கியாறச் சொன்னாங்க?”

”தாராவரத்து வெத்தலைதேன் வாங்கியாறச் சொன்னாங்ண்ணா!”

“அப்படியா, எத்தனை கவுளி வேணும்?”

“அம்மா, அரை முட்டியாவே வாங்கியாறச் சொல்லுச்சுங்!”

”சரி அப்ப, இந்தா புடி அரை முட்டி!”

அப்படின்னு, வாழை மரத்துச் சருகுல சுத்திக் குடுப்பாரு அந்த அண்ணன். அப்படி தாராவரம்ன்னா வெத்தலையும் அமராவதி ஆறும் கரும்பும்தாங்க ஞாவகத்துக்கு வருது. கூடவே, நாம கச்சை கட்டுனதுமு! இஃகிஃகி,

தாராபுரம் V.P.பழனியம்மாள், R.அய்யாசாமி, A.பெரியசாமின்னு நிறைய... ஆமாங்க, நாமதான் பிஞ்சுலயே பழுத்தமல்ல? போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை எலையப் பாத்து... அடச்சீ, சும்மா நிறுத்து! இஃகிஃகி!! அப்புறம் முக்கியமான் விசியம், நம்ம நடிகர் நாகேசுமு!!

சரி வாங்க, நம்ம சகபதிவர்கள் அப்பன், ராஜ நடராஜன் அவர்களுக்கான சிறப்பு இடுகையா, தாராபுரமுமு அதைச் சுத்தீலுமு இருக்குற ஊர்களை உள்ளடக்கின, கொங்கு நாட்டோட உபநாடுகளான மணநாடு, தலையநாடு பாக்குலாம் இன்னைக்கு!


தென்னிலை கூடலூர் சேர்கோடந் தூர்நடந்தை
சின்னத்தா ராபுரமுஞ் சேர்ந்துமிக உன்னிதங்கள்
சூழ்ராச மாபுரமும் சூடா மணியிலவை
வாழ்மணலூர் நாடாய் வழுத்து!


தென்னிலை, கூடலூர், கோடந்தூர், நடந்தை, சீர்மிகுதாராபுரம், இராசபுரம், சூடாமணி, இலவனூர் என எட்டு பேரூர்கள் கொண்டது மணநாடு!

தங்குபுங்கம் பாடியர வக்குறிச்சி
தகுசேந்த மங்கலமு ந்ன்மு டக்கூர்
பொங்குசாந் தப்பாடி யிணுங்கனூரும்
புகழ்வேளாண் பூண்டியெழிற் றலையூ ரோங்கும்
மங்கைகன்னி வாடிகிழான் கொண்டல் சின்ன
மருதீடக் கலப்பாடி யறிஞ ரெல்லாம்
புங்கமிகு குமரபா ளையத்தி னோடு
போந்தபதின் மூன்றூருந் தலைய நாடே!

புங்கம்பாடி, அரவக்குறிச்சி, சேந்தமங்கலம், முடக்கூர், சாந்தப்பாடி, இணுங்கனூர், வேளாண்பூண்டி, தலையூர், கன்னிவாடி, கிழான்கொண்டல், சின்னமருதூர், இடக்கலப்பாடி மற்றுங் குமாரபாளையம் என ப்தின்மூன்று ஊர்கள் கொண்டது தலையநாடு!

சரி, இன்னைக்கு மணநாடு, தலையநாடு படிச்சாச்சில்ல? போங்க, போயி அம்மணிக்குக் கூடமாட இருந்து ஏனவானம், பண்ட பாத்திரம் எல்லாத்தையும் குளிக்க வையுங்க போங்க!

7/02/2009

வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு!

தெக்க செமதாங்கியில இருந்து வடக்க ஜக்கார்பாளையம் போற இட்டேரி வரைக்கும் ரெண்டு மைல் தூரம், மேக்க வீதம்பட்டி இட்டேரில இருந்து கெழக்க புதூர் போற இட்டேரி வரைக்கும்னு நொம்பப் பெரிய ஊர் வேலூர்.

மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி, கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு, சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊருகளுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊருதான் வேலூர்.

அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன், இந்த ஊர் இருக்குற இடத்துல தன்னோட வாகனமான மயிலை விட்டு இறங்கி தன்னோட வேலையும் நட்டு வச்சுட்டு, சுத்து பத்து கிராமத்தைச் சேந்தவிகளுக்கு அருள் பாவிச்சதாகவும், அதனாலதான் இந்த ஊருக்கு வேலூர்னு பேர் வந்ததாகவும் ஒரு ஐதீகம்.

ஊருக்குள்ள ஏராளமான அரசமரம், வேப்பமரம், புளியமரம், புங்கமரம், ஆலமரம், ஆவரம்பூனு, ஒரே பசுமையாவும் பொலிவாவும் களைகட்டி இருக்கும் இந்த ஊர். தலைவாசல்ல இருக்குறது பெரிய விநாயகர் கோயில். முன்னாடி பெரிய மைதானம். மைதானத்துல அரசமரம் வேப்பமரம் ஒண்ணா வளர்ந்து இருக்குற ரெண்டு மேடைக. ஊர்சனங்க எல்லாம் ஒண்ணு விநாயகங் கோயில் திண்ணைல, இல்லாட்டி இந்த மேடைலதான் இருப்பாங்க. எப்பவும் நிழலும் காத்துமா குளுமையா இருக்கும் அந்தக் கோயிலடி.

கோயிலுக்கு வலதுபொறம் சந்தைப்பேட்டை. சுத்துபத்து கெராமங்களுக்கும் வாராவாரம் திங்கக்கெழமை, இங்கதான் சந்தை. கோயிலுக்கு இடது பொறம், திண்ணைப் பள்ளிக்கூடமா இருந்து வளந்து இருக்குற பள்ளிக்கூடம். அந்தக் காலத்துல எல்லாம் பட்டம் படிச்சவங்களைப் பாக்கவே முடியாதாம். ஆனா, இந்த பள்ளிக்கூடத்துல படிச்சவங்க அப்பவே பட்டம் வாங்கி இருந்தாங்களாம். அதுல தாமோதரசாமி அய்யாவும் ஒருத்தர். "பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்!". ஆனா, அந்தப் பாம்புகூட தாமோதரசாமி அய்யாவைக் கண்டா வணக்கம் போடுமாம். அந்த அளவுக்கு அவர் பண்பானவர். நொம்ப நல்லவர். அப்பேர்ப்பட்ட நல்லவரை பெத்த ஊர்தான் வேலூர்.

இப்படிப்பட்ட ஊர்ல சரவணசாமி அய்யான்னு ஒருத்தர். அவரும் நொம்ப நல்லவர், நெறஞ்ச மனசுக்கு சொந்தக்காரர். தோட்டத்துல குடியிருந்துட்டு வெவசாயம் பாக்குறவர். திங்கக்கெழமை ஊருக்குள்ள வந்து தானிய யாவாரம் பண்ணுற அந்தியூர் அய்யாகிட்ட, தான்வித்த இராகி பத்து மூட்டைக்கு உண்டான தொகை ஆயிரத்து முந்நூறு ரூவாவை வாங்கிட்டு சந்தைக்குப் போறார்.

சரவணன் அய்யாவுக்கு இயற்கையிலியே குருவிங்க, கிளி, மயிலு இப்படி பறவைகன்னா உசுரு. அன்னைக்குப் பாருங்க, அந்த சந்தைக்கு முன்னாடி இருக்குற "அரசமர வேப்பமர" மேடைல ஒருத்தன் குருவி வித்துகிட்டு இருந்தான். சந்தைக்கு வரப்போக இருந்த சனங்களும் கூடி நின்னு வேடிக்கை. குருவிக்காரன் ரூவா அம்பதுன்னு ஏலத்தை ஆரம்பிச்சான். சரவணன் அய்யாவுக்குத்தான் பறவைகன்னா உசுரு ஆச்சே.

"இந்தக் குருவி சாதாரணக் குருவி இல்லீங்கோ, பேசும், பாடும், அம்பது ரூவா, அம்பது ரூவா!"

கூட்டத்துல இருந்த இனியொருத்தர், "அறுவது ரூவா!"

சரவணன் அய்யா, "நூறு ரூவா!"

கூட்டத்துல இருந்த வேறொருத்தர், "நூத்தி அம்பது!"

இப்படியே ஏலம் விறு விறுப்பாப் போச்சு. சந்தைக்கு வந்த சனமெல்லாம் கூடி நின்னு வேடிக்கை பாக்குது. சந்தைல பொரி காத்துல பறக்குது. கொய்யாப் பழத்தை, காக்காய்ங்க கொத்தித் திங்குது. ஆனா, வித்து யாவாரம் பண்ண வந்தவிங்க கடைய விட்டுப்போட்டு, இங்க வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு ஒரே விறுவிறுப்பான ஏலம். ஏலத்தொகை எண்ணூறு ரூவா ஆனவுடனே ஏலம் கேக்குறவங்க எண்ணிக்கை கொறஞ்சு போச்சு. ரெண்டே பேருதான் இப்ப. அதுல நம்ப சரவணன் அய்யாவும் ஒருத்தர்.

சரவணன் அய்யா, "யார்றா அது, ஏட்டிக்குப் போட்டியா? இந்தா நான் சொல்லுறேன், எண்னூத்தி அம்பது ரூவா!"

ரெண்டொரு நிமுசங் கழிச்சு, "தொளாயிரம் ரூவா!"

சரவணன் அய்யா, "யாருகிட்ட? இந்தா தொள்ளாயிரத்து ஒண்ணு!"

மறு பக்கத்துல, "தொள்ளாயிரத்து அம்பது!"

கோவத்துல சரவணன் அய்யா கூட்டத்தைப் பாத்து, "டேய், நீ யார்றா? வேணாம்! இந்தா சொல்லுறேன் ஆயிரம் ரூவா!"

குருவி விக்க வந்தவன், "சரிங்க அய்யா, கோவப்படாதீங்க... இனி இதுக்கு மேல யாரு எவ்வளவு குடுத்தாலும் குருவி உங்களுக்குத்தான், நீங்க சொன்ன அதே ஆயிரம் ரூவாய்க்கு!"

அய்யாவுக்கு நொம்ப சந்தோசம். இராகி வித்த காசுல ஆயிரத்த எடுத்து குடுத்துப் போட்டு, குருவிய வாங்கும் போது, "என்னடா, குருவி கொழு கொழுன்னு நல்லாத்தான் இருக்கு, பேசுமல்லோ?"

குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா பவ்யமா, "அய்யா, என்ன இப்படிக் கேட்டுப் போட்டீங்க? இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..."

6/11/2009

என் மனைவி திருமணம்!

நீலமலைச் சாரலில் நெளிந்து வரும் தென்றலினை வளைய விட்டு, பால் போன்ற இதயங்களை உயிர்ப்பித்து, பண்பினையும் அன்பினையும் ஊட்டி விடும் பேரூர்தான் அந்த வஞ்சி நாட்டின் வாஞ்சை பொழில் நல்லூர் கோயம்பத்தூர்! பரந்து விரிந்த பல பஞ்சாலைகள் ஊருக்கு முதுகெலும்பென்றால், தொழில்நுட்பத்தில் மேலோங்கி அந்தநல்ல ஊருக்கு இதயமென அன்றைய காலத்தில் இருந்ததுதான் இலட்சுமி இயந்திர ஆலை, Lakshmi Machine Works(LMW).

ஊட்டிக்குச் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையிலும், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழு(NH-47) அவினாசி சாலையிலும் இயந்திர ஆலையின் இளம்பச்சைச் சொகுசுப் பேருந்துகள் தவழ்ந்து திரிய, பெருமையாய்ப் பார்த்திடுவர் ஊர் மக்கள். தன் பிள்ளை, தன் மகன், தன் மகள், தன் பேரன், தன் பேத்தி இதிற்சென்று வேலை பார்த்து ஊதியம் ஈட்டுவது எந்நாளோ என ஏங்கித் தவித்ததும் உண்டு.

பிறவியிலேயே சற்று உயரமாய்ப் பிறந்ததின் பயனாய் நான்கு வயதிலேயே தன் வலக்கை தலைமேற்ச் சென்று மறுபக்கத்து காதைத் தொட்டுவிட, குடும்பத்து ஆசிரியர் அவனை ஐந்து வயதுப் பாலகனாக்கி பெயரையும் மாற்றி முதல் வகுப்பில் உட்கார வைத்துவிட, அந்த பாலகன் பதினேழு வயதிலேயே பட்டயப் படிப்பு முடிந்த கையோடு, கல்லூரியே நேரடியாக வேலைக்கு அமர்த்தியதின் பொருட்டு இயந்திர ஆலையில் பணி புரியலானான்! அதுவும் ஒரு பிரிவின் மேற்பார்வையாளனாக!!

மீசை முளைக்காத பாலகன், தன்னைவிட பல வயது மூத்த பணியாளர்களுக்கு முதன்மைப் பொறியாளனானான். உடன் பணிபுரிந்த ஏனைய அலுவலர்களும் அவனைவிட பல வயது மூத்தவர்களாகவே இருந்தனர். அதன்பொருட்டு அவன் அவர்களுக்கு குழந்தையானான். ஆம், “குழந்தை” என்றே அழைக்கப்பட்டானவன்.

பதின்மவயதுப் பாலகன் குழந்தை பணி புரிந்த பிரிவு, இழை உருளிப் பிரிவு( Flutted Rollers - FRS Department). அதே பிரிவில் உடன் வேலை செய்த தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நாகராஜ், மனோகரன், ஜெயச்சந்திரன் முதலானோர். இவர்கள் அனைவருமே குழந்தையைவிட ஆறிலிருந்து பத்து வயது மூத்தோர், எவருக்கும் திருமணம் ஆகவில்லை. நல்ல குணமுடைய, சுவாரசியமிக்க இளைஞர்கள், நல்ல நண்பர்களும்கூட!

திங்கட்கிழமை மாலை நான்கு மணி இருபது நிமிடம்! இரண்டாவது நேர வேலைக்கு அலுவலர்களை ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து, இயந்திர ஆலையின் வாசலில் வந்து நிற்கிறது. சொகுசுந்தை விட்டிறங்கிய ஜெயச்சந்திரன் ஆலையினுள் உள்ள பதிவேட்டு அட்டையில்(time card) பதிந்து விட்டு உள்நுழைய, கண்காணிப்பாளர் கேசவன் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார். ஜெயச்சந்திரனுக்கு அவரது வித்தியாசமான பார்வை ஒரு வித வியப்பைத் தந்தது. அவர் ஏன் அப்படிப் பார்த்து விட்டுச் செல்கிறார் என்ற சிந்தனையினூடே தன் பிரிவான FRSக்குச் செல்கிறார்.

“Good Eveningடா நாகராஜ்!”

“Good Eveningடா!”

“எங்கடா மனோகரனைக் காணம்?”

“அவன் இங்கதாண்டா இருந்தான். ஒரு வேளை Sheet Metalக்கு அரவிந்தனைப் பாக்கப் போயிருப்பான்!”

“ஓ, அப்பிடியா? அப்புறம் எல்லா Machineம் நல்லாப் போகுதுதானே?:

“ஒன்னும் பிரச்சினை இல்லடா ஜெயச்சந்திரா! டேய், நான் மறக்கத் திரிஞ்சேம்பாரு, JB உன்னை வந்து பாக்கச் சொன்னாரு!”

“எதுக்குடா? எதும் பிரச்சினையா?”

“தெரியலடா, ஒன்னும் பிரச்சினை இருக்குற மாதரித் தெரியல!”

தரக்கட்டுப்பாட்டுக்கு(Quality Control) மேலாளரான இவர் (QC Manager) எதுக்கு தன்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். நாம் ஏதும் வேலையில் தவறு செய்து விட்டோமோ? அல்லது, யாராவது தன்னைப் பற்றி மோசமாகக் கோள்மூட்டி விட்டார்களோ? இப்படிப் பல விதமான யோசனைகளின் ஊடே தனது மேலாளரான J.பாலகிருஷ்ணன் அவர்களுடைய அறையை அடைந்தார் ஜெயச்சந்திரன்.

“Sir, May I come in?"

"Yes!"

"Sir, Good Evening Sir!"

"வாப்பா ஜெயச்சந்திரா! உனக்கு ரொம்பப் பெரிய மனசு!! ஆனாலும் மனசு ரொம்பச் சங்கடமா இருக்குப்பா, வாழ்க்கைன்னு இருந்தா இப்படித்தான். அதுக்காக நாம நொடிஞ்சு போய் உக்காந்துற முடியுமா? அதையே நினைச்சுட்டு இருக்காத, ஆமா வீட்ல நீ ஒருத்தந்தான?”

அவர் பேசியது ஒன்றுமே விளங்காத ஜெயச்சந்திரன், “ஆமாங்க சார்!”

“நல்லதாப் போச்சு, இன்னும் ஒரு வருசங்கழிச்சு இன்னொன்னு பாத்துகிடலாம், நொம்ப செளரியமாப் போச்சு போ!”

“சார், நீங்க என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் புரியலீங்க சார்!” என்று தயங்கித் தயங்கி பயங்கலந்த மரியாதையுடன் சொன்னார் ஜெயச்சந்திரன்.

“யோவ், எனக்கெல்லாம் தெரியும்யா! இது உன்னோடதுதானே?” என்று வினவியபடியே எதையோ காண்பிக்க, ஜெயச்சந்திரனின் முகம் ஆப்பிள்பழத் தோல் போலச் சிவந்தது. பின் ஓரிரு நிமிடம் தனது மேலாளரிடம் ஏதோ பேசிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினார்.

நேராக தனது பிரிவான FRSக்கு வந்த ஜெயச்சந்திரன், கடுமையான முகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“டேய் நாகராஜ், எங்கடா அந்த நாதாரி மனோகரன்?”

“டேய் என்றா நடந்துச்சு, இவ்ளோ கோவமா இருக்கே?”

“இல்லடா, அவனைக் கையக் கால ஒடைக்காம விடப் போறதில்லை இன்னைக்கு!”

“அண்ணா ஏனுங்ண்ணா இவ்ளோ கோவமா இருக்கீங்க, கொஞ்சம் அமைதியா...” என்றான், அந்த நேரத்திற்கு எங்கிருந்தோ வந்த குழந்தை.

“நீ ச்சும்மா இரு குழந்தை! நாயி, அவன் மண்டையப் பொளக்காம விடுறதுல்ல இன்னைக்கி, என்ன ஆனாலுஞ்சரி!”

இடைமறித்த நாகராஜ் மிகக் கடுமையான குரலில், “நிறுத்துறா! மொதல்ல என்ன நடந்துச்சு சொல்வியா? ச்சும்மா எகுறாங் கெடந்து?!”

நாகராஜின் கடுமையை எதிர்பார்த்திராத ஜெயச்சந்திரன், ”இல்லடா, நான் சனிக்கிழமை ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்ததால வேலைக்கி வரல பாரு. அதுக்காக மனோகரங்கிட்ட லீவு கார்டைக் குடுத்து JB ரூம்ல போடச் சொல்லியிருந்தேன்!”

“சரீ, அதுக்கென்ன இப்போ?”

“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”

அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய் சிட்டெனப் பறந்தனர்!

6/04/2009

’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?

குதிரைகள்ல தலைவர்கள், வீரர்கள் உட்கார்ந்திருக்கிற மாதிரியான சிலைகள் பார்த்து இருப்பீங்க. அப்படிப்பட்ட சிலைகள்ல முன்னிரு கால்களும் தூக்கினா மாதிரி இருந்தா, அவர் போர்க்களத்துல இறந்திட்டாரு. வலதுபக்க முன்கால் மட்டும் தூக்கினா மாதிரி இருந்தா, போர்ல பட்ட குண்டடியினால இறந்திட்டாரு. இடதுபக்க முன்கால் தூக்கினாமாதிரி இருந்தா, போர்க் களத்துல ஏற்பட்ட விபத்துனால இறந்துட்டாரு. நாலு காலும் நிலத்துல இருந்தா, அவருக்கு ஏற்பட்டது இயற்கை மரணம். நாலுகாலும் நிலத்துல ஊன்றி இருக்காம இருந்தா, உங்களைப் போல அவரும் உயிரோட இருக்கார்ன்னு தானே அர்த்தம்?

அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரற்கடை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?

ஒருத்தர் நாய் மாதிரி, எட்டு வருசம் ஏழு மாசம் ஆறு நாட்களுக்கு குரைக்குறதுக்கு செலவாகுற சக்தியானது, ஒரு கோப்பை காப்பித் தண்ணி சூடு செய்யுறதுக்கு உண்டான அளவாம். அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?!

உலக மக்கள் தொகையில 51% பெண்கள்; 49% ஆண்கள். உலகப் பணத்துல பாதி, வெறும் ஆறு சதமான மக்கள்கிட்டவே முடங்கி இருக்கு. இந்த ஆறுல ஒரு சதம் சாகும் தருவாயில இருக்குறவங்க. ஒரு சதம் பிறந்து சில நாட்களே ஆனவங்களாம். இந்த ஆறு சதத்துல, இந்தியாவுக்கு எத்தனை சதம்?

தன்னோட சாம்பலை எடுத்து, அதை சுருக்கிப்(compress) படிகக் கல்லா மாத்தி, அந்தக் கல் வெச்ச மோதிரத்தை விருப்பமானவங்ககிட்டத் தர ஒரு நிறுவனம் $14000 விலை வெக்கிறாங்களாம்; விருப்பமிருக்குறவங்க கிட்ட இருந்து விண்ணப்பங்களைக் கோரி விளம்பரமும் செய்யுறாங்களாம். மோதிரத்துக்கு ஆசைப்பட்டு, உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?

வருசத்துக்கு சராசரியா நாற்ப்பத்து இரண்டு இலட்சம் தடவை ஒருத்தரோட கண் இமைகள் மூடித் திறக்குதாம், அதாவது அவ்வளவுதடவை அவரு கண் சிமிட்டுறாரு. தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்னன்னு கேக்குறாரு வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன். கேள்வி நியாயமானதுதானே?

6/02/2009

அதிரடி! ஆச்சரியம்!!

உரக்கப் பேசினா உண்மை! உண்மை அல்லாததை கூட்டத்தை சேர்த்துகிட்டு, மொத்தமாப் பேசுனா அதுவே உண்மை!! பத்திரிகை அல்லது ஊடகத்துல எது வந்தாலும் அது உண்மை!! இது யதார்த்தம்; அந்த யதார்த்தம் உண்மை அல்லாதப்ப அதை முறியடிக்க வேண்டிய கடமை நம்ம எல்லாருக்கும் இருக்கு!!

ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.


இதைத் தெளிவாப் புரிஞ்சிட்டா, வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வராதுன்னு சொன்னாரு ஒரு பெரியவர். உடனே அது யார் அந்தப் பிரபலம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க! அது எங்க பூட்டன் வெண்குடை சுப்பையாங்ற விவசாயி எழுதி வெச்ச விலாக்குறிப்பு (புத்தகத்துப் பக்கங்களின் விளிம்பில் எழுதி வைப்பது).

அந்த வகையில ஒரு சில உண்மைக் கூற்றுகள்:

எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?

அமெரிக்கக் குடிமக்கள்ல நாலு பேர்த்துல ஒருத்தர் எதோ ஒரு தொலைக் காட்சியில தோற்றம் அளிச்சவங்களா இருக்காங்களாம். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.

நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.

குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!

சரி வரட்டுமாங்க? இஃகிஃகி!!

5/31/2009

’சூச்சூ’வும, பதிவர் அண்ணனும்!

இராணி மகாராணியும், அசத்தப் போவது யாருவும் கண்டு களித்துவிட்டு, பின் வலையில் மேய்ந்து, அளவளாவி, இடுகையிட்டுப் பின் விடிகாலையில் துயில் கொள்ளப் போய், ஆற அமர எழுந்து, பின் பிற்பகற்க் கடன்களாகிப் போன காலைக் கடன்களைக் கழித்த, ஞாயிறு பிற்பகல் நான்கு மணியந்தக் கணம்.

தங்க மனசுக்கு சொந்தக்காரன், வளர்ந்து வரும் இளம் பாடகன், அண்ணே அண்ணேயென்று பேச்சுக்குப் பேச்சு நெக்குருகி சிலாகிக்கும் அன்புக்குத் தாசனவன், தமிழெனும் இனிமையே அவனானவன், இந்த கதையின் நாயகன் அப்துல்லா! புதுகை அப்துல்லா!!

எழுந்து, முனகிய பாடலுடன் நீராடி, பின் தொழுது, அறை சாத்திவிட்டு, தன் பிரம்மரதமான சொகுசுந்து (plessure car) நோக்கி விருட்டெனச் செல்கிறான்; அப்போதும் பாடல் முணுமுணுப்புத்தான். திறவுகோல் செலுத்தியதில், சொகுசுந்துவின் முன் கதவு திறவுபட, சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவனாய் அருகில் இருந்தவரிடம்,

“அண்ணே, வணக்கம்ண்ணே! வண்டியில முன் இருக்கைகிட்ட அண்ணன் தொடுதோல்ல இருந்த மண் கொட்டிக் கிடக்கு!”

“இல்லீங்க தம்பீ, நான் உங்ககூட வரவே இல்லீங்களே?”

”ஆமாண்ணே, நேத்து இராத்திரி இன்னொரு அண்ணன் வந்தாரு, அவரோட...”

“இதென்னங்க தம்பீ, இப்பச் சுத்தம் செய்துதாரேன்!”

அங்கிருந்த அடுக்ககப்(apartment) பணியாளர், நாயகனின் பிரம்மரதத்தைத் துப்புரவாக்கித் தரவும், இரதம் ஆடாமல் அசையாமல், மெளனமே நாதமாய் மெள்ள மெள்ள நகர்ந்து அடுக்ககத்தை விட்டு வெளியில் வந்து, சாலையினுள் நுழைந்தது.

பச்சைநிறக் குடைகள் தொடர்ந்து அணிவகுத்தது போல, சாலையின் இரு மருங்கிலும் அலங்காரக் கொண்டை மரங்கள். குடைகளின் அந்த பச்சைநிற மேற்கூரையில், ஆங்காங்!கே இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களைக் கொள்ளை கொள்ளும் மலர்கள். குடையின் உள்க்கம்பிகளில் இருந்து தொங்கும் தட்டை வாள்கள்.

மரத்தின் அந்தத் தட்டையான காய்களை வாளாக ஏந்தி, நண்பர்களோடு யுத்தம் புரிந்த இனிமைப் பொழுதுகள் நம் நாயகனுக்கு நினைவு வர, வண்டியின் வேகம் குறைய, பின்னாலிருந்து ஒரு அழகு தேவதையின் குரல், சொகுசுந்துவின் மூடிய கதவுகளையும் ஊடுருவிக் கொண்டு,

“என்னா, இராத்திரியில தொங்கல்லவுட்டுப் போய்ட்டாளா அவ? Don't worry dear, some one will be there for you! May God Bless you!!"


என்றவாறு சர்ரென்று ஓடி மறைந்தது சென்னப்பட்டணத்தின் இலட்சங்களில் ஒன்றான அந்தத் துள்ளுந்து(motor cycle). நாயகனுக்கு வெட்கத்தோடு ஒரு புன்முறுவல். முடுக்கு விசையை முடுக்க, பிரம்மரதம் இலக்கை நோக்கி விரைந்தது.

நெல்சன் மாணிக்கம் சாலையில் ஊர்ந்து, பின் இரயில்வேக் கண்டாயம்(Railway Colony) குறுக்குத் தெரு 12க்கு, சாலையில் இருந்து வலது புறமாக நுழைகிறது நாயகனின் பிரம்மரதம்.

“என்ன அழகாகப் பராமரிப்புச் செய்து வெச்சிருக்காங்க. ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் அழகழகாப் பூஞ்செடிகள், காலையில போட்ட வண்ணக் கோலங்கள், இந்தப் பக்கம் நமக்கு எந்த அண்ணனும் இல்லையே? இருக்கட்டும், சீக்கிரத்துல ஒரு அண்ணனைப் புடிச்சுப் போட்டுறணும்!” என்று என்ணியபடியே இரதத்தை 44/10 எண்ணுள்ள அந்த சிறு மாளிகையின் முன் சருக்குக்கட்டை(brake) இட்டு நிறுத்தி, இறங்கி வருகிறான் நாயகன் அப்துல்லா.

நுழைவாயிலில் அழைப்பு மணியை அமுக்கவும், நடுத்தர வயதில் அவர், ”நீங்க?”

“அண்ணே வணக்கம்! நான் அப்துல்லா, புதுகை அப்துல்லா! பேசும் நாய் விற்பனைக்கு இருக்குன்னு சொன்னது நீங்கதாண்ணே?”

“ஓ ஆமாமா, வாங்க அப்துல்லா, வாங்க!”

”மொதல்ல போயி அவனைப் பாத்துடறீங்களா?”

“சரீங்கண்ணே!” என்று அவர் கைகாட்டிய திசை நோக்கி நாயகன் அப்துல்லா செல்கிறார். வீட்டின் உரிமையாளர், அவர் கையிலிருந்த Indian Express நாளிதழில் படித்துக் கொண்டிருந்ததைத் தொடர்கிறார்.

“ப்ளொள்!”

“நாய் பேசும்ன்னு சொன்னாங்களே? இங்க யாரும் இல்லையா?”

“ஆமா, இங்க யாரும் இல்லை!”

ஆகா, இந்த நாய் பேசுகிறது என்று மனதில் எண்ணியபடியே நாயகன் அப்துல்லா, ”உம் பேரு என்னண்ணே?”

“சூச்சூ!”

“நல்லாயிருக்கு! எங்க நர்சிம் அண்ணனுக்குத் தெரிஞ்சா, ரொம்ப சந்தோசப்படுவாரு!”

“ஓ!”

“ஆமா, தினமும் உனக்கு எப்படிப் பொழுது போகுது?”

“அதென்ன பிரமாதம்? காலையில எழுந்து, வீட்டுக்கு நாந்தான் குழாயில இருந்து தண்ணியடிச்சு கொண்டாந்து ஊத்துவேன்! அப்புறம், பக்கத்து வீட்டு மாமிக்கு பால் பொட்டலம் வாங்கியாந்து தருவேன்!”

“அட, நல்லாயிருக்கே? சொல்லு, சொல்லு!!”

“அப்புறம் இந்த கடைக்குப் போயிட்டு வர்றது, வங்கியில காசோலை போடுறதுன்னு வீட்டு வேலை சரியா இருக்கும்!”


உரையாடலில் மகிழ்ந்த அப்துல்லா, இந்த நாயையே வீட்டுக்கு வேலைக்கும் வைத்துக் கொள்ளலாம் என்கிற யோசனையில், தன் வீட்டு வேலைக்கு வரச் சொல்லியிருந்த பையனின் அப்பாவான தன்னாசியை அழைத்து, இப்போதைக்கு வேலைக்கு ஆள் தேவையில்லை எனச் சொல்லி விட்டு, சூச்சுவின் எசமானரை நோக்கி நகர்ந்தான்.

”அண்ணே, நல்ல திறமையான சூச்சு! நல்லாப் பேசுது. அப்புறம் ஏன் அண்ணே விக்குறீங்க?”

“அதான் தம்பி பிரச்சினையே! அவன் வாயைத் திறந்தா, பேசுறது எல்லாமே பொய்!”

“?!?!”

அதே நேரத்தில், ”இந்த ஆள்கிட்ட பையனை வேலைக்கு சேத்தி விடுறதுல வர்ற முன்பணம் ரெண்டாயிரத்தை வாங்கி, அவளுக்குக் குடுத்திடலாம்ன்னு இருந்தேன். இப்படிக் காலை வாரி வுட்டுட்டானே? இனி அவ வீட்டுக்கே வந்து தகராறு பண்ணுவாளே? பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா, தோலுரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவா. சரி, கூட அம்பது சேத்தி, ரெண்டாயிரத்து அம்பதா இருந்துட்டுப் போகட்டுமே?!” என்று நினைத்துக் கொண்டே, மேத்தா நகரிலிருந்து தன் வீடிருக்கும் அமிஞ்சிக்கரை செல்லும் பாதையிலிருந்து மாறி, சூளைமேட்டில் இருக்கும் மாதவி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான் தன்னாசி.

3/13/2009

எங்கூர்ல வித்தை காமிக்கிறாங்க, வாங்க எல்லாரும்!

ஒரு நாள் வீதம்பட்டி வேலூர் சாமி ஐயா தெருத் திண்ணையில் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன்னால், தலையாரி குப்பன் தோன்றினான்.

’சாமி, கும்புட்டுக்கறனுங்க!’

‘என்னடா குப்பா? என்ன இந்த வேளையில் வந்திருக்கிற? கஞ்சி குடிச்சியா??’

‘ஆமாஞ்சாமி, உங்க தயவால எல்லாம் ஆச்சுதுங்கோ!’

‘சரி, ஊரில என்ன விசேசம் இன்னைக்கு?’

‘ஆமாங்க, நம்மூர்ப் புறம்போக்கு ஆலமரத்தடியில வித்தையாடுறவங்க கூடாரம் போட்டு இருக்காங்க. இளைய பண்ணாடிக எல்லாரும் வித்தை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறாங்க!’

‘அப்படியா, சரி சாயுங்காலம் நாலு மணிக்கு அவங்களை வரச் சொல்லு!அவங்க நல்லபடியா வித்தை காமிக்க வேணும். ஊருக்குள்ள எல்லார்த்துக்கும் சொல்லிடு! நம்மூர் வினாங் கோயில் முன்னாடி ஆடட்டும். வீட்ல பண்ணாடிச்சிகிட்ட சொல்லி, அவங்களுக்கு கஞ்சி எதனா ஊத்தச் சொல்லு போ!’

‘ஆகட்டுஞ் சாமி, உத்தரவு வாங்கிக்கிறனுங்க!’

உடனே ஊர் முழுதும் அல்லோலகலப்பட்டது. பறையடித்து விளம்பரப் படுத்தினான். வாத்தியார் பள்ளிக்கூடம் சாத்தினார். சங்கதி எல்லாப் பண்ணைகளுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. மூன்று மணியிலிருந்தே ஊர் மக்கள் வரத் தொடங்கினர். வினாங் கோயில் முன்னால் வெளியிடம் நிரம்பி விட்டது. நடுவிலே பத்து அடி வட்டமாகக் காலியிடம் வித்தைக்காரனுக்கு என்று விடப்பட்டது. அதை ஒரு கரை போட்டு அத்துப்படுத்தி விட்டான் வித்தைக்காரன். அதைச் சுற்றிலும் சிறு பிள்ளைகள் உட்கார்ந்தார்கள், நானும் அவர்களுடன் உட்கார்ந்தேன். அவர்களைச் சுற்றிலும் பெரிய பிள்ளைகள் உட்கார்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பெரியவர்கள், ஒரு புறம் ஆண்களும், மற்றொரு புறம் பெண்களும் அமர்ந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு வித்தைக்காரன் துடியடித்தான். தலைவர் சாமி ஐயாவும், மற்றவர்களும் கோயில்த் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.


வித்தைக்காரன் தன்வித்தைகளை ஒவ்வொன்றாகக் காட்டினான். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை, செத்த பாம்பை உயிர்ப்பித்தல், கோழி கீரி இவைகளை ஒன்றுமில்லாக் கூடையிலிருந்து வெளிவரச் செய்தல், வாயில் நெருப்பு எரித்தல், வாயில் புல்லாங்குழல் ஊத, அப்போது ஒரு மூக்கில் நீர் ஊற்ற மறு மூக்கில் நீர் ஓடச் செய்தல், பத்து பந்துக்களை கீழே விழாமல் எறிதல் முதலானவைகளை எல்லாம் காட்டினான்.

மாங்கொட்டையிலிருந்து, மாஞ்செடி முளைக்கச் செய்ததை நாங்கள் சிறுவர்கள் எல்லோரும் மிகவும் இரசித்தோம். ஒரு பெண்ணை பெரிய கூடை ஒன்றினால் மூடி விட்டு கத்தியினால் குத்தவும் அவள் சாகாமல், வேற்று உடையில் வெகுதூரத்திலிருந்து வெளி வந்தது மிகவும் வியப்பாய் இருந்தது. அன்று இருளும் வரை வித்தைகள் நடந்தன. வித்தை காண்பித்தவர்கட்கு, தேவையான உணவு, பழந்துணி, நிறையப் பணம் தரப்பட்டன. வித்தை காண்பித்தவ்ர்கள், கூட்டத்தினரைச் சுற்றி வந்து நன்றி சொல்லியவிதம் இன்னும் மனக் கண்களில் அகலாமல் நிழலாடுகிறது!


வித்தையைக் கண்டு களித்த பின், கோயில் மைதானத்தில் இருந்து வீட்டிற்குச் செல்ல முற்படுகையில், சாமி ஐயா எங்களுக்கு ஒரு கணக்கைச் சொல்லி, மறு தினம் வந்து விடையளிக்கச் சொன்னார். நீங்களும் உங்கள் விடையைச் சொல்லுங்களேன்!!

ஒரு முள்ளம் பன்றி தினம் முப்பது காதம் ஓடத்தக்கினது. அப்பன்றியைப் பிடிக்க ஒரு நாயானது அதன்பின் தொடர்ந்து, அந்நாய் முதல்நாள் ௧(1) காதம், இரண்டாம் நாள் ௨(2) காதம், மூன்றாம் நாள் ௩(3) காதம், இவ்விதமாகவே நாளுக்கு நாள் ஒவ்வொரு காதமா அதிகமாக இந்நாய் ஓடுமாதலால், அப்பன்றியை எத்தனை நாளில் இந்நாய் பிடிக்கும்?

1/03/2009

என்ன கொடுமை சரவணன் இது?

அவனவன் அங்கங்க வெடிகள் வெடிக்குதுன்னு, அல்லு கழண்டு போயிருக்குற நேரத்துல, என்னா வெடி இது? என்னா வில்லத்தனம்??





12/01/2008

சிரிப்பில், எத்தனை வகைச் சிரிப்பு?

அன்பர்களே, வணக்கம்! நாம மொல்லமாறின்னு சொல்லி ஒரு பதிவு போட்டாலும் போட்டோம், வாசகர்கள், நிறைய வழக்கத்துல இருக்குற சொல்லுகளை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. அவைகளுக்கு வர்ற காலங்கள்ல பதில் பதிவு போடணும். இடையில ஒருத்தர், timely jokeக்கு தமிழ்ல என்னன்னு கேட்டு வந்தாரு.

நாம காலத்துக்கு ஏற்ற சொல்நகைன்னு ஆரம்பிச்சு, அப்புறம் வலையில மேயப் போய் பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. காலத்துக்கேற்ற சொன்னகை, காலத்தே சொல் நகை, நேரம் தழுவிய நகை, சமயம் பார்த்து பகடின்னு வேந்தன் அரசு ஐயாவும் எடுத்துக் குடுத்தாங்க. கடைசில, நேரந் தழுவிய நகைங்றது எழுத, பேச வாட்டமா இருக்குங்றதுல முடிஞ்சது நம்ம அலசல்.

இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது. :-o)

புன்சிரிப்பு

நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது

குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது

குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.

சரி, அப்பிடியே நம்ம கலைவாணர் ஐயா பாடின பாட்டையும் கேட்டுப் பாருங்க. அந்தப் பாட்டுல மேல சொன்னது போல, நிறைய வகைச் சிரிப்பு இருக்குங்க.







வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டுப் போகும்!

11/21/2008

பாத்துங்க அப்பு!


வேலை வேலைன்னு வேலைலயே இருக்காதீங்க! இப்படிக் கிப்படி மண்டை தட்டிடப் போகுது?!

11/14/2008

பாத்து போங்க அப்பு!

பாத்து போங்க அப்பு, பாத்து போங்க!




11/12/2008

வக்கணையாப் பேசுற நீ?!

அன்பர்களே வணக்கம்! நாம சின்ன வயசுல, திண்ணையில, ஆட்டாங் கல்லுகிட்ட, நல்ல தண்ணிக் கெணத்துகிட்டன்னு பொம்பளைங்க ஒன்னு கூடிப் பேசுற பக்கம் போயி ஒன்னுந் தெரியாத சின்னவனாட்டம், அவிங்க பழம பேசுறதக் கேக்குறது உண்டு. நொம்ப சுவராசியமா இருக்கும்.

"வக்கத்தவ வக்கணையாப் பேச வந்துட்டா சிறுக்கி!" ன்னு சொல்வாங்க. "அவன் ஒரு துப்புக் கெட்டவன்!" ன்னு சொல்வாங்க. "என்ன ஒரு சாமார்த்தியம், வாங்கிட்டே வந்திட்டாளே?!"ன்னு பெரு மூச்சு விடுவாங்க. "ஓகோ! நான் நாதியத்தவன்னு நெனச்சிட்டாளா, அவ?"ன்னு சீறிப் பாய்வாங்க. "பசப்புறதப் பாரு!"ன்னு சிறு மூச்சு விடுவாங்க.

நான் இந்தப் பழமைகெல்லாங் கேட்டுப் பல வருசம் ஆச்சு போங்க. ஊர்ல இன்னமும் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்ளாங்றதே சந்தேகந்தான். அப்புறம் பாருங்க, அதுகளுக்கான பொழக்கமும் மாறிப் போச்சுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். சரி, அந்தப் பழமைகளப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை இப்பப் பாப்பமா?! சொல்லுறதுல எதனா மாத்தம் இருந்தாலும் சொல்லுங்க.

வக்கு(வழிமுறை): செய்யுறதுக்கு உண்டான‌ வழிமுறை தெரியாதவிங்கள, வக்கில்லாதவன்னு சொல்வாங்க.

வக்கணை: இதனோட பொழக்கம் இப்ப நல்லாவே மாறிப் போச்சு. இப்பெல்லாம் சாமார்த்தியமாப் பேசுறதை, வக்கணையாப் பேசுறதுன்னு பொழங்கறோம். ஒருத்தங்க மத்தவங்க கிட்டப் பேசும்போது குறை சொல்லியும், எதிர் மறையாவும் பேசினா அது வக்கணை. இந்த எடத்துல பழமொழி ஒன்னு ஞாபகம் வருது. கட்டுன ஊட்டுக்கு எட்டு வக்கணை!
அதாவது, புதுசாக் கட்டின வீட்டைப் பத்திப் பொறாமைல கொற சொல்லிப் பேசுறது.

சாமார்த்தியம் அப்படீன்னா, சமர்த்தாப் பேசி காரியம் சாதிக்குறது. ஈழத்துல பொண்ணுக பெரிய மனுசி ஆனதை சாமத்தியம்னு சொல்வாங்க. பூப்புனித நீராட்டு விழாவைச் சாமத்திய சடங்குன்னு சொல்வாங்க.

துப்பு: இதுக்கு நெற‌ய‌ அர்த்த‌ம் இருக்கு. துப்புற‌து ஒன்னு. ம‌ர்ம‌ம் ப‌த்தின‌ த‌கவ‌லை துப்புன்னு சொல்வோம். திருடு போன‌ வ‌ண்டிய‌ப் ப‌த்தி துப்பு ஒன்னு கெட‌ச்சிருக்கு. அப்புற‌ம், துப்புங்ற‌துக்கு உண‌வுங்ற‌ அர்த்த‌மும் இருக்கு. ஆக‌, துப்பு கெட்ட‌வன், துப்பு இல்லாதவன்னு சொன்னா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட‌ வ‌ழியில்லாத‌வ‌ன்னு இடிச்சு சொல்லுற‌து.

சரிங்க, மத்ததை (நாதி, பசப்பு, பெரு மூச்சு, சிறு மூச்சு) எல்லாம் நாளைக்குப் பாப்போம். இப்ப நீங்க போயி வக்கணையாப் பின்னூட்டம் போடலாம். சாமார்த்தியமாவும் பின்னூட்டம் போடலாம். எப்படி வேணாலும் போடுங்க. ஆனா அந்த ஓட்டை மட்டும் நல்லபடியாப் போட்டுட்டு, அப்புறமா பின்னூட்டம் போடுங்க.

குப்பைல கெடந்தாலும், குன்றிமணி நெறம் போயிருமா?

11/11/2008

மென் பொருட்களில் என் பொருட்கள்!

நம்மூட்டுத் திண்ணைக்கு வாரவிங்க, வராதவிங்க எல்லார்த்துக்கும் வணக்கம். பதிவுக்குப் பதிவு எசப் பாட்டு பாடுற அண்ணன் மகேசு அவிங்களுக்கு இன்னும் கெளரவப் படுத்த வேண்டியது ஒன்னு இருக்கு. அதாங்க, நம்ப திரைப்பட அனுபவங்களைப் பத்தி எழுதணுமாம். அதுக்கு முன்னாடி அண்ணன் அவிங்களத் தொடர்ந்து, மறுமொழியர்த் திலகம் மலைக் கோட்டையார் அவிங்களப் படுத்துறதுக்கு ஒன்னு. இல்லங்க, கெளரவப் படுத்துறதுக்கு ஒன்னுன்னு சொல்ல வந்தேன். ஏன்னா, அவருதான் இந்தப் பதிவு போடச் சொல்லி கொக்கி போட்டது.

கோடம்பாக்கத்துல ஓடாத படங்களை எல்லாம் வடிவேலு அண்ணன் ஓட்டுறார் இல்ல?! அது மாதர, எங்க பதிவுகளை எல்லாம் செல்லுபடி பண்ணுறதுல இவருதான் நொம்ப முக்கியமானவரு. ச்சும்மா சொல்லக் கூடாது, சங்க்கடமே இல்லாம மறு மொழிகளை வாரி வழங்குவாரு. நொம்ப நன்றிங்க மலைக்கோட்டை!

நாம இவரை நாடோடின்னு எல்லாம் சொல்லி, மதிப்புக் கொறச்சலாப் பேசறது இல்ல பாருங்க. அன்பா, ஊர்மாறின்னு தான் சொல்லுறது. வார நாள்ல ஒரு நாட்ல இருக்காரு. வாரக் கடைசில ஒரு நாட்ல இருக்காருன்னா பாருங்க. ஆனாத் தங்கமான மனுசன். (இப்படிச் சொல்லலைன்னா கோவிச்சுக்குவாரு!) வலைக்குள்ள வந்த ஒடனே, எல்லா ஊட்டுக்கும் சரி சமமாப் போய்ட்டு வருவாரு. ஒரு நாளும் ஒரு ஊட்டுக்குப் போய்ட்டு, இன்னொரு ஊட்டுக்குப் போகாம வந்தது இல்ல. ஆனா, தன்னோட ஊட்டை மட்டும் குப்பை மாதர வெச்சி இருக்காரு. நேத்து அவரூட்டுத் திண்ணைக்குப் போனம் பாருங்க, கசகசன்னு என்னமோ ஒன்னு போட்டுத் தாக்கிடுச்சு. அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க. சரி, இனி விபரத்துக்கு வருவோம்,

Amaya software: வலையகப் பக்கங்களை வடிக்க.

WordWeb Pro: ம‌கேசு அண்ண‌ன் சொல்லுற‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளுக்கு அர்த்த‌ம் பாக்க‌.

Primopdf: ந‌ம்ம‌ எழுத‌ற‌ ப‌திவுக‌ளை ப‌த‌மா(pdf) ப‌துக்கி வைக்க‌.

ம‌த்த‌தெல்லாம், நீங்க‌ எல்லாம் பொழ‌ங்குற‌து தான். அதுக‌ள‌ச் சொல்லி உங்க‌ நேர‌த்த‌ எதுக்கு வீண‌டிக்கோனும்? பொழ‌ச்சிப் போங்க‌!

கொக்கி:

ஒருத்த‌ர் ரெண்டு பேர்த்த‌ச் சொல்லி, ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விடுற‌துக்கு ம‌ன‌சு வ‌ர‌ல‌. யாருக்கு, எழுத‌ற‌துக்கு ஒன்னும் கெடைக்க‌லையோ, அவிங்க‌ தாராள‌மா கொக்கியில‌ மாட்டுப் ப‌டுங்க‌. பொழ‌ங்குற‌ மெனபொருள் சாமானைப் ப‌த்தி எழுதுங்க‌.


நடந்தா நாடெல்லாம் ஒறவு!

11/09/2008

"ஏழஞ்சு மை" யன்னான்னா என்ன?

வணக்கம். வாரக் கடைசி நாளுங்றபடியால் கணனியில யிருந்து எட்ட இருப்பமெண்டு, காணொளியில முதல் மரியாதை படம் பாத்துக் கொண்டு இருந்தன். நான் இந்தப் படத்தைக் கணதடவை கண்டு இருக்குறன். ஆனாலும் நீர் எத்தினி தரங்கண்டாலும் அலுப்பு அடிக்காதென்ன, அப்பிடி ஒரு படமென்ன.

படத்தக் காணைக்குள்ள மனசு சரியான விசர் பிடிச்சதென்ன. நான் படத்தோட கதையச் சொல்லலே. இந்த இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒன்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன. அவிங்கள் இதுக்கும் அடி மட்டத்துல இருந்து வந்தவிங்க என்ன. ஏன் காசு வந்த பொறகு, இப்பிடி ஆனவிகளெண்டு தெரியலை. தமிழண்ட பிரச்சினையே இதுதானென்ன. அவிகளுக்கு பொறுப்பு இருக்கு. இனியெண்டாலாவது ஒன்டு சேந்து படமெடுக்க வேணும். நல்லூர்க் கந்தன் அதுக்கு வழி செய்ய வேணும். என்ன‌ நாஞ்சொல்லுறது சரிதானே?

அந்தப் படம் பாக்கைக்குள்ள எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டு என்ன. அந்த வடிவுக்கரசி கதைக்க றெதெல்லாம்டப்பா, ஒரே பேய்க் கதையென்ன. நம்பட ஊர்ல எல்லாம் அப்படித்தான கதைக்குறது. அதுவும் பொம்பளைப் புள்ளைக கொழுவல் எண்டால், நமக்கு ஒரேப் பகிடிதான். பொடியங்க ஏசுறது எப்பிடி யெண்டு தெரியுமே உமக்கு? ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம். இதெல்லாம் உமக்கு விளங்குதே?! இல்லியே?! சொல்லுறன், கேளுங்கோ!


123456789101001000
௧௨௩௪௫௬௭௮௯௰௱௲

ஏழுக்கு தமிழ் எண் வந்து எ. அஞ்சுக்கு ரு. அதத்தான், எருமையண்டு ஏசுறதுக்கு பதிலா ஏழஞ்சு மையன்னா. ஒண்டாம் எண்ணுக்கு தமிழ் எழுத்தெண் க. முக்கால் 3/4 பின்னத்த தமிழ் எழுத்தில ழு மாதிரி இருக்குற எழுத்தில எழுதிவினம். ஆக, கழுதையிண்டு ஏசுறதை ஒன்னே முக்காத் தையன்னா எண்டு ஏசுவினம். இப்ப விளங்கிட்டே?!


குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!


காணொளி: ‍‍ Television
காணைக்குள்ள: ‍ காண்கையில்
விசர்: ‍‍கவலை/வெறி
ஒன்டா: ‍‍ ஒன்றாக‌
கொழுவ‌ல்: ச‌ண்டை/ஊட‌ல்
ப‌கிடி: வேடிக்கை


வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!

11/03/2008

குரங்கே, நன்றியுள்ளவரைச் சீண்டாதே!

வாக்களியுங்க மக்களே!

11/02/2008

போடுறானாம் கணக்கு...

நீங்க எல்லாம் இதை ஏற்கனவே பாத்து இருப்பீங்க.... இருந்தாலும் இன்னொருக்காப் பாருங்க.....




ஓட்டுப் போடுங்க மக்களே!