Showing posts with label Fetna. Show all posts
Showing posts with label Fetna. Show all posts

5/31/2026

அரவணைப்புக் கடமை (duty of care)

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்நிமித்தம், இலாபநோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கான சான்றிதழ்ப் படிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நானும் ஒரு வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்றேன். அதில் ஒரு பாடம்தான் அரவணைப்புக் கடமை. பேரவையில் இப்பொறுப்பானது கடைபிடிக்கப்பட வேண்டுமென்பதற்காக, இடம் பெற்ற ஒரு நிகழ்வினைச் சுட்டிக்காட்டினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும்.

ரிக் ரெஸ்கோர்லா, Morgan Stanley Dean Witter என்ற பெரிய நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். அவருடைய அலுவலகம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் இருந்தது. வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ அதிகாரியான ரிக், பாதுகாப்பை வெறும் ஒரு மேஜை பணியாகப் பார்க்கவில்லை. தன் பொறுப்பில் இருந்த 2,700 ஊழியர்களின் பாதுகாப்பைத் தன் சொந்தப் பொறுப்பாகக் கருதினார். 1993-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குத் பிறகு, இந்தக் கட்டடங்கள் மீண்டும் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ரிக் தீர்க்கமாக நம்பினார். அங்கிருந்து அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அவர் நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். ஆனால் நிறுவனம் அங்கேயே இருக்க முடிவு செய்தபோது, ரிக் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்: "அவர்களை இந்த இடத்தை விட்டு மாற்ற முடியாவிட்டால் என்ன, ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!"

ரிக் ஒரு கடுமையான அவசரக்கால வெளியேற்றத் திட்டத்தை அமல்படுத்தினார். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களின் வேலைகளை நிறுத்தச் செய்து கட்டாயப் பயிற்சி அளித்தார். இருண்ட, குறுகலான அவசரக்காலப் படிக்கட்டுகளில் அவர்களைக் கீழே இறங்கி நடக்க வைத்தார். Stopwatch மூலம் அவர்கள் இறங்கும் நேரத்தைக் கணித்தார். ஒரு ஒலிபெருக்கி மூலம் கட்டளைகளைக் கூவி, பதற்றமின்றி எப்படி வெளியேற வேண்டும் என்று பயிற்சி அளித்தார்.

பல ஊழியர்கள் இதைப் பார்த்து சலிப்படைந்தனர். தங்களின் விலைமதிப்பற்ற வேலை நேரம் வீணாவதாகக் கூறினர். "இந்த ராணுவக்காரருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது" என்று கேலி செய்தனர். ஆனால் ரிக் யாரிடமும் நல்ல பெயர் வாங்க விரும்பவில்லை; அவர்களின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே விரும்பினார்.

செப்டம்பர் 11 காலை, ஒரு விமானம் வடக்கே இருந்த முதல் கோபுரத்தைத் தாக்கியது. உடனே, ரிக் இருந்த தெற்கு கோபுரத்தின் பொது அறிவிப்பு அமைப்பில், "இந்தக் கட்டடம் பாதுகாப்பாக உள்ளது, ஊழியர்கள் யாரும் வெளியேற வேண்டாம், தத்தமது இருக்கைகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நெருப்பையும் புகையையும் பார்த்த ரிக், அந்த அரசு அறிவிப்பை முற்றிலும் புறக்கணித்தார். அவருடைய பொறுப்பு அந்தக் கட்டடத்தின் நிர்வாகத்திற்கு அல்ல, அங்கு பணிபுரியும் மனிதர்களுக்கு மட்டுமே! உடனே தன் மெகாஃபோனை கையில் எடுத்து உரத்த குரலில் கட்டளையிட்டார்: "உடனே அனைவரும் வெளியேறுங்கள்!"

ரிக் கொடுத்த இடைவிடாத பயிற்சிகளின் காரணமாக, அந்த 2,700 ஊழியர்களும் எவ்வித பதற்றமும் இன்றி, வரிசையாக அவசரக்காலப் படிக்கட்டுகளில் கீழே இறங்கத் தொடங்கினர்.

அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது விமானம் அவர்கள் இருந்த தெற்கு கோபுரத்தின் மேல் பகுதியில் பயங்கரமாக மோதியது. கட்டடமே பலத்த சத்தத்துடன் அதிர்ந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எங்கும் பயமும் மரண ஓலமும் சூழத் தொடங்கியது. அந்த இக்கட்டான நொடியில் ரிக் முன்னால் நின்றார். தன் மெகாஃபோன் மூலம் வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல், மக்களின் பயத்தைப் போக்கத் தொடங்கினார். அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, தன் சிறுவயதில் கற்ற நாட்டுப்புறப் பாடல்களையும், அமெரிக்க தேசியப் பாடல்களையும் அந்தப் புகையார்ந்த படிக்கட்டுகளில் உரக்கப் பாடத் தொடங்கினார்.

"கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக..." என்று அவருடைய கம்பீரமான குரல் அந்தப் படிக்கட்டுகளில் எதிரொலித்தது.

அவருடைய தைரியமான குரலைக் கேட்ட ஊழியர்கள், தங்களுக்குள் ஒரு பாதுகாப்பை உணர்ந்ததாகப் பின்னாளில் கண்ணீருடன் கூறினர். அது அவர்களுக்குப் பயமின்றி முன்னோக்கி நடக்கும் சக்தியைக் கொடுத்தது.

ரிக், தன் நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,700 ஊழியர்களையும் பாதுகாப்பாகக் கட்டடத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால், அவருடைய கடமை அத்துடன் முடிந்துவிடவில்லை. மேல் தளங்களில் யாராவது காயமடைந்து அல்லது வழியறியாமல் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த ரிக், மீண்டும் கட்டடத்திற்குள் செல்லத் திரும்பினார். அவருடைய சக ஊழியர் ஒருவர், "ரிக், எல்லோரும் வெளியே வந்துவிட்டார்கள், நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்.

அதற்கு ரிக் அமைதியாகப் பதிலளித்தார்: "கடைசி மனிதனும் வெளியேறிவிட்டான் என்பதை நான் உறுதி செய்யும் வரை என்னால் வர முடியாது." புகை சூழ்ந்த அந்தத் தெற்கு கோபுரத்தின் படிக்கட்டுகளில், எஞ்சியவர்களைத் தேடி மேலே நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரிக் ரெஸ்கோர்லாவைத்தான் அங்கிருந்தவர்கள் கடைசியாகப் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கோபுரம் மொத்தமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்தப் பேரழிவின் நாளில், மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், பாதுகாப்புப் படையினர் உட்பட வெறும் 13 ஊழியர்களை மட்டுமே இழந்தது. 2,680-க்கும் மேற்பட்ட மனிதர்கள் அன்று மாலை பாதுகாப்பாகத் தங்கள் குடும்பத்தாரிடம் சென்று சேர்ந்தனர் என்றால், அதற்கு ஒரே ஒரு மனிதனின் "பாதுகாப்புப் பொறுப்புணர்வும் கடமையும்தான்" காரணம். வீடு வந்து சேராத ரிக், நமக்குப் பாடமாகி சாகாவரம் பெற்று, இன்றும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!

-பழமைபேசி.

5/05/2026

தேர்தலில் பங்களிப்பு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
— கணியன் பூங்குன்றனார்

உலக நாகரிகத்தின் தொட்டிலென்று போற்றப்படும் தமிழும், அதன் மக்களும் உலக வரலாற்றின் மிகத் தொன்மையான அடையாளங்கள். காலங்காலமாகக் கடல் கடந்து வாழும் ஆற்றல் கொண்ட தமிழர்கள், இன்று உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தங்களின் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளனர். அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அவர்களின் பண்பாட்டு முகமாகவும் விளங்குவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். இப்பேரவையின் தரத்தையும், நயத்தையும், மாண்பினையும் காத்து மேம்படுத்துவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழ்மொழி வெறும் பேச்சல்ல; அது ஒரு பண்பாடு, வாழ்வியல் நெறி. உலகின் மிக மூத்தகுடியான தமிழ் மக்கள், தங்களின் உழைப்பாலும் அறிவுத்திறனாலும் அமெரிக்கா போன்ற உலகின் முதன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பம் மிக்க நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பரவிவாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் பாலமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு முற்போக்கு நாட்டில், தமிழர்களின் உயரிய விழுமியங்களைப் போற்றப்பணித்திருக்கும் பேரவை எப்போதும் தன் தரத்திலும் மாண்பிலும் விட்டுக்கொடுத்தல் செய்து கொள்ளக் கூடாது. உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமானால், பேரவையின் செயல்பாடுகள் மிக உன்னதமானவையாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் பேரவையைத் தம்வீடாக எண்ணி, இதன் வளர்ச்சிக்கும் நெறிமுறை சார்ந்த செயல்பாட்டிற்கும் தமக்கும் பங்குண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாபெரும் அமைப்பு இன்னும் உயரங்களை எட்ட வேண்டுமானால், அதற்குள் இருக்கும் தேக்க நிலைகளையும், எதிர்மறையான காரணிகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். பேரவை முழுமையான மாண்பை அடைய நாம் பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும்:

குறுங்குழுச் சார்பு 

அமைப்புகளுக்குள் உருவாகும் சிறிய குழுக்களின் ஆதிக்கம், ஒட்டுமொத்தப் பேரவையின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை முன்வைக்க வேண்டும்.

 சாதி, சமயச்சார்பு 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" — திருவள்ளுவர்.  தமிழ் என்பது சாதி, சமயங்களைக் கடந்து எல்லோரையும் பிணைக்கும் ஒரு சக்தி. பேரவைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதிய, சமயரீதியிலான பாகுபாடுகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ இடம் தரக் கூடாது. தமிழன் என்ற ஒற்றை அடையாளமே முதன்மையானதாகவும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். 

பிற்போக்குத்தனம்

பழமைவாதக் கருத்துக்களையும், மாற்றங்களை ஏற்கமறுக்கும் பிடிவாதத்தையும் கைவிட்டு, காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனைகளுடனும் அறிவியல் பார்வையுடனும் பேரவை நகர வேண்டும்.

பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பரந்த மனப்பான்மை கொண்ட தகுதியான தனிமனிதர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பார்வையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். தன்முனைப்போ, புகழோ விரும்பாமல், அறநெறி, நேர்மையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். தமிழ்மொழியின் மரபினைப் பேணுவதோடு, புதுமை உலகிற்குத் தக்கவாறு வழிநடத்தும் சிந்தனை கொண்டிருக்க வேண்டும். தகுதியுடைய ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பேரவையின் முக்கியப் பொறுப்புகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்வதே பேரவையின் தரத்தை உயர்த்தும் வழியாகும்.

பிளவுவாதம். பிற்போக்குத்தனம், தன்முனைப்பு, புகழ்வெளிச்ச ஆசை, பகைமை பாராட்டுதல், வாசிப்பற்ற மொண்ணைத்தனம் முதலானவை சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருப்பன. பேரவைக்களமும் இவற்றில் விதிவிலக்கல்ல. அவை எங்குமிருக்கும். ஆனால், தன்னார்வத் தொண்டு என்பது மற்றவருக்கான சேவையில் தம்மைக் கரைத்துக் கொள்ளக் கூடிய மெழுகுவர்த்தியைப் போன்றதாகும். பல மணி நேரங்கள் உழைத்திட வேண்டும். மக்களின்பால் பரிவு இருந்திடல் வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கும் மேட்டிமைக்கும் ஆனதல்ல இப்பணிகள்.

தன்கருத்து எதுவானாலும் திடமாகச் சொல்லும் மனப்பாங்கு இருந்திடல் வேண்டும். குறுங்குழுவாதத்துக்குள் இருந்துகொண்டு கொந்தளிப்புகளோடு இருப்பதற்கான இடமல்ல பேரவை. ஒவ்வொருவரும் தன் ஆன்மாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தக் கொள்கை, இந்தக் கொள்கை என்பதெல்லாம் வேலைக்காகாது, குறுங்குவாத பகைமை பாராட்டும் சமன்பாடற்ற இடத்திற்கே இட்டுச்செல்லக் கூடியன அவை. உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை! 

Have the courage to exercise your rights.

-பழமைபேசி.

4/07/2026

கொண்டாட்டம்

 கொண்டாட்டம்

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேகாலகட்டம். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பத்து பதினைந்து மணித்துளிகள் கடந்திருக்கும். அழைப்பில் கலந்து கொண்டேன். நிறையப் பேர் அழைப்பில் இருந்தனர். வெற்றிக் களிப்புடன் நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் சொன்னோம், “அன்புகூர்ந்து நாம் இதை ஒரு வெற்றியாகக் கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுகள் நம் பணிகள் நிறைவடைந்த பின் கொண்டாடுவதே சரியாக இருக்கும்!”.

நமக்கான வாய்ப்புக்கு ஆதரவளிக்காதவரின் மனத்தையும், தணிந்த மனத்தோடு வென்றெடுத்து முடிப்பதுதான் வெற்றியாக இருக்க முடியுமென்பது நம் கணக்கு. கணக்குப் பிழைத்து விட்டது.  தோல்வி அடைந்து விட்டதாக, நான் என்னளவில் தோற்றுவிட்டதாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் உணர்கின்றேன்.

நேரிடையாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆறு மணி நேரப் பயணம், வீடு வந்து சேரவே காலத்தாழ்ச்சி ஆகியிருந்தது. குடும்பத்தார் ஊரில். அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது முக்கால்வாசிக் கூட்டம் முடிந்திருந்தது. பிற்பாடு, கூட்டத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுக் கேட்டு முடித்தேன்.

2022 தேர்தலில் வெளியிட்ட காணொலியில் சொல்லி இருப்பேன், மேலாதிக்கமும் மேட்டிமைத்தனமும் களையப்பட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்களென. குழுவில், பெரும்பான்மை வலு இருந்துவிட்டால், எதுவும் செய்து கொள்ளலாமென்பதுதான் பெரும்பான்மைவாதம், மேட்டிமைத்தனம், மேலாதிக்கமென்பதாகும்.

காலமெல்லாம் எதிர்க்குரலாக இருந்து, இருந்து, சமர்புரிவதே எழுத்தாளனின் அறமாக இருக்கின்றது. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

முன்னாள் தலைவர் அவர்கள், 2012ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு பிணக்கினைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்கள். அதில் நானும் தொடர்புடையவன். 2012-2014 செயற்குழுவில் இடம் பெற்றிருந்தேன். எங்கள் செயற்குழு பொறுப்பேற்கு முன்பேவும், இணையதளத்தில், ”Beware of இன்னார்” எனும் தலைப்பில் ஒரு சுற்றறிக்கை இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை எதிர்த்து, தமக்கு அது மானபங்கத்தை ஏற்படுத்துகின்றதெனச் சொல்லி, ஒட்டுமொத்த செயற்குழுவின் மீதும் 100 மில்லியன் டாலர்கள் ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி, எங்கள் பெயர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. எண்ணிப்பாருங்கள், தன்னார்வத் தொண்டு புரிய வந்த நாங்கள் மன உளைச்சலை எதிர்கொண்டதோடு, பணமும் செலவு செய்து கொள்ள வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை. இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இடம் பெற்ற சுற்றறிக்கையென்பது, பழங்குடி ஃபட்வாதான். அப்படிச் செய்வது அமெரிக்க வாழ்வியலன்று!

சிறப்புக்கூட்டத்துக்கான அடிப்படை குறித்து ஏற்கனவே நாம் பேசிவிட்டோம். கூட்டம் நடத்தப்பட்ட விதத்தைத்தான் நாம் தற்போது பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நிரலில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதென்பதற்காக, 45 மணித்துளிகள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு, இப்படியானவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனும் பாணியில் பேசிவிட்டு, ஆவணங்களைப் பகிர்வதற்கென  முன்கூட்டியே சொல்லவில்லையென்பதல்லாம் கொடூர நகைச்சுவை. கேள்வி/பதில் நேரமென்பது கூட நிரலில் இல்லைதாம். ஆனால் கேள்வி பதில் நேரம் கடைபிடிக்கப்படுகின்றது. உறுப்பினர் பேசுவது தொடரும் போது, சட்டக்கோப்பில் இல்லையெனச் சொல்லப்படுகின்றது. பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமெனும் போக்கு மிகவும் ஆபத்தானது.

கூட்டம் நடத்தப்பட்ட விதமென்பது மிகவும் வருத்தத்தையும் கவலையையும் அளிக்கக் கூடியதாகும். தீர்மானமெனும் சொல்லே, பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கு அளித்தபின்புதான் உச்சரிக்கப்படவே வேண்டும். செயற்குழுவில் நிறைவேறி இருந்தால், செயற்குழுக் கூட்டக்குறிப்பில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டும். பொதுக்குழுத் தீர்மானமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இப்படி, ஒவ்வொன்றைப் பற்றியும் பேச முற்படுவோமேயானால், அன்பும் அறமும் பெருந்தோல்வி அடைந்திருக்கின்றது. ஒழுங்கில் பெருவீழ்ச்சியென்பதே காலத்தின் கணங்களில் இடம் பெறும் நம் பதிவாக இருக்க முடியும்.

எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்!



3/27/2026

𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚


 𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚

உள்ளடக்கிய தன்மை என்பது வெறும் நாகரிகசொல் அன்று; அது ஒரு நாகரிகத்தின் முதிர்ச்சி. 

ஒரு தோட்டத்தில் ஒரே ஒரு வகை மலர் மட்டும் பூத்திருப்பதை விட, பல வண்ண மலர்கள் பூத்திருப்பதே கண்களுக்கு விருந்து. அதுபோலவே, ஒரு சமூகத்தில் வெவ்வேறு பின்னணி, மொழி, உடல் அமைப்பு , சிந்தனை கொண்ட மனிதர்கள் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் அந்தச் சமூகம் முழுமையடைகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழரின் பழமொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த உள்ளடக்கிய தன்மையைத்தான் உலகிற்குப் போதித்தது.

ஒரு நிறுவனத்திலோ அல்லது பொது இடத்திலோ 'பல்வகைமை' (Diversity) இருப்பது ஒரு தொடக்கம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்துக்கு எல்லாத் தரப்பு மக்களையும் அழைப்பது பல்வகைமை. ஆனால், அந்த விருந்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் எந்தவிதத் தயக்கமும் இன்றி உணவருந்தவும், உரையாடவும், தங்களை அந்த இடத்தின் ஒரு அங்கமாக உணரவும் வைப்பதுதான் 'உள்ளடக்கிய தன்மை'. எங்கே ஒரு மனிதன் "நானும் இங்கே மதிக்கப்படுகிறேன்”, ”என் குரலும் இங்கே கேட்கப்படுகிறது" என்று உணர்கிறானோ, அங்கேதான் உள்ளடக்கிய தன்மை உயிர்பெறுகிறது.

இன்றைய நவீன உலகில் உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சமூகத் தேவையாக மாறியுள்ளது. வெவ்வேறு துறைகளில் இருக்கும் வல்லுநர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்கும்போது, அங்கே புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் ஒரு சிக்கலுக்கு ஒரே மாதிரியான தீர்வையே தருவார்கள். ஆனால், மாறுபட்ட பின்னணி கொண்டவர்கள் அந்தச் சிக்கலை வெவ்வேறு கோணங்களில் அணுகி, யாரும் எதிர்பாராத ஒரு புதுமையானத் தீர்வை முன்வைப்பார்கள். இதுதான் ஒரு அமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாகும்.

தனிப்பட்ட ரீதியில் நாம் இந்த உள்ளடக்கிய தன்மையை எளியச் செயல்கள் மூலம் பழகலாம். ஒரு விவாதத்தில் எப்போதும் அமைதியாக இருப்பவரிடம் "உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டுப் பார்ப்பது ஒரு சிறந்தத் தொடக்கம். மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவிப் பார்ப்பதை விட, அவர்களின் தனித்துவமானத் திறமைகளை அங்கீகரிப்பது அவசியம். ஒருவரை அவர் சார்ந்த அடையாளங்களை வைத்து எடைபோடாமல், ஒரு சக மனிதராக அரவணைக்கும்போது ஒரு ஆரோக்கியமானச் சூழல் உருவாகிறது. வார்த்தைகளில் மென்மையும், பார்வையில் சமத்துவமும் இருந்தால் உள்ளடக்கிய தன்மை தானாகவே மலரும்.

உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சட்டமோ அல்லது விதியோ அல்ல; அது நம் மனப்பான்மையில் ஏற்பட வேண்டிய மாற்றம். "நான்" என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து "நாம்" என்ற விரிந்தத் தளத்தில் இயங்கும்போதுதான் உலகம் இன்னும் அழகாகிறது. மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவது என்பது அவர்களை உள்ளே அழைப்பது மட்டுமல்ல, நமக்கானப் புதிய வாய்ப்புகளையும், அனுபவங்களையும் உள்ளே அனுமதிப்பதாகும். சமத்துவமான ஒரு உலகைப் படைக்க உள்ளடக்கியத் தன்மையே முதற்படி.

’வீட்டிலிருந்தே வேலை செய்கின்றேன். வீட்டில் இருப்பதால் இரண்டு தொடுதிரைகளுடன் கூடிய தனிப்பட்ட கணினியில் பேரவை விழா வேலைகள், மடிக்கணினியில் நிறுவன வேலை, தவிர வீட்டு வேலைகளென இருக்கலாம். விழா வளாகம் வந்தால், எமக்குக் கையும் ஓடாது காலும் ஓடாதென முன்கூட்டியே விழா ஒருங்கிணைப்பாளர்கள், குழுத்தலைவர்களென எல்லாருக்கும் சொல்லி இருந்தேன். இருந்தாலும், அழைப்பு மேல் அழைப்புகள். கச்சை முதற்கொண்டு, பாதித் துணிமணிகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பேரவைக்கான குழுக்கள் அமைத்ததிலிருந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டது வரையிலும், கனடாவிலிருந்து ஃபுளோரிடா, கீழ்க்கரையிலிருந்து மேல்க்கரை வரையிலும், எல்லாமும் பரவல்தான். எதுவும் ஓரிடத்தில் குவிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டர்கள் தட்டுப்பாடு எனப் பேசிக் கொண்டார்கள். நான் சொன்னேன், “வெளியூர்களிலிருந்து குறைந்தது 150 தம்பிமார்கள் வருகின்றார்கள், அது போதும், எவருக்கும் அடிபணியத் தேவையில்லை”. 

வேலையிடத்திலிருந்து புறப்பட்டு விட்டதாக மனைவியார் அழைத்துச் சொன்னதுமே, புறப்படத் துவங்கினேன். அழைப்புகளோ அழைப்புகள். ’வாசிங்டன் டிசி விமானம் நிலையத்தில் இருந்து மாறி வரவேண்டும், என்ன செய்வது?’, ‘இன்ன போட்டிக்கு எந்த அறை?’, இப்படி நிறைய. முன்னாள் செயலாளர் அழைத்து, ’தமது விமானம் கிரீன்ஸ்பரோவுக்குத் திருப்பி விட்டுவிட்டனர்; இங்கிருந்து யாராவது தம்மை அழைத்துச் செல்ல முடியுமா?’. குழுக்களில் விபரத்தைப் பதிந்ததுமே, முன்னாள் செயற்குழு உறுப்பினர் அவர்கள் அழைத்து, ‘அட்லாண்டாவிலிருந்து கிரீஸ்பரோ நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றேன். பிக்-அப் செய்து கொள்கின்றேன்’. இப்படி, பலப்பல.

இத்தனைக்கும் நடுவில்தான் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். மீண்டும், மழை, புயல், போக்குவரத்து நெரிசல்; மாலை 7 மணிக்கு நான் அங்கிருப்பேன், சந்திக்கலாமெனச் சொல்லி இருந்தேன். இரவு 9.15 மணிக்குத்தான், விடுதி வளாகம் சென்று சேர்ந்தோம். அத்தனை பேர் வந்து சூழ்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 50+ பேர் வரையிலும் எனக்காகக் காத்திருந்தனராம். அந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அதிலும் பெரும்பாலும், பெண்கள். 

4 நாட்கள் இருந்து விட்டுக் கிளம்பும் வரையிலும், தன்னார்வலர் தட்டுப்பாடு என்பதே எம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.  வாய்ப்புகள் தருவதன் மூலம் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பது என்பது, வெறும் நிர்வாகச் செயல்முறை மட்டுமல்ல, அது ஆழமான உளவியல் ரீதியான பிணைப்பை உருவாக்குவதாகும். ஒரு மனிதனுக்கு ஒரு அமைப்பில் அங்கீகாரமும், அவனது திறமையை வெளிப்படுத்த ஒரு பொறுப்பும் வழங்கப்படும்போது, அவன் அந்த அமைப்பைத் தனது சொந்த அமைப்பாகக் கருதத் தொடங்குகிறான். "நான் இங்கே வெறும் பார்வையாளன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒரு அங்கம்" என்கிற உணர்வு அவனுள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பொறுப்புகள் ஒருவருக்குத் தன்னாட்சி உணர்வையும், சமூகமதிப்பையும் தருவதால், அவர் அந்த இலக்கை நோக்கி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். இவ்வாறு பலருக்கும் சிறு சிறு வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வெற்றியின் பங்காளிகளாக மாறி, ஒரு வலுவான, அர்ப்பணிப்புள்ள கூட்டமாகத் தானாகவே திரள்கிறார்கள்.  [படம்: விருந்தோம்பலில் பழமைபேசிக் குடும்பம்]

𝐖𝐞 𝐫𝐢𝐬𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐫 𝐰𝐡𝐞𝐧 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐥𝐢𝐟𝐭𝐞𝐝.

-பழமைபேசி.

3/21/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲 𝐫𝐮𝐥𝐞

பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம் சுவடுகள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். அவற்றுக்கு எவரும் அணை போட்டு விட முடியாது.

”மேன்மை அணி வரலாற்று வெற்றி கொள்கின்றது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பெருந்திரளாகத் தன்னார்வலர்கள் முனைந்து வருகின்றனர். குழுக்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளிப்படையாகப் பொதுவெளியில் பகிரப்படுகின்றது. கூட்ட அறிக்கைகள் பகிரப்படுகின்றன. விழாக்கள் வெற்றிகரமாக நிகழ்கின்றன. குழுக்கள் இயங்குகின்றன. தரவு சேமிப்பு. முதன்முதலாக மாவீரர்நாள் கடைபிடிப்பு. தகவல் தொடர்பில் முனைப்பு”, இப்படியாக ஒரு தோற்றம்.

“ஒருமித்த வெற்றி. வாட்சாப் குழுவில் நீக்கம். ஆயுள் உறுப்பினர் நீக்கம்.  சலசலப்பு. விழாவில் சலசலப்பு. சிலர் தத்தம் பணிகளில் இருந்து ஒதுங்கல். முதலாம் ஆண்டைப் போல, இரண்டாம் ஆண்டில் குழுக்கள் இயங்காமை. எழுத்தாளர் அழைப்பு குறித்த சர்ச்சை. இலக்கியக்குழு சலசலப்பு. பழைய அருவி, மலர்கள் காணக்கிடைக்காமை. பேரவையின் அறிவுசார் சொத்துகள் தனிக்கடைகளாக இருப்பது, உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை”, இப்படியாக ஒரு தோற்றம்.

முதலாவது தோற்றத்தின்கண் இருப்பவருக்கு, இரண்டாவது தோற்றம் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டாவது மனத்தோற்றம் கொண்டிருப்பவருக்கு, முதலாவது தோற்றம் தோன்றுவதில்லை. ஏன்? முன்பிருந்த திறந்தவெளி உரையாடல் தற்போது கொல்லப்பட்டுவிட்டதுதான் காரணம்.  இது யாருக்கான தோல்வி?

தேர்தல் மாண்பின் விதையான நண்பர் சிவானந்தம், சென்றமுறை செயற்குழுவினரிடம் அழகாகச் சொன்னார், “தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதியானோர் என்பதனைப் பேரவையே தேர்தல் அறிவிப்பின் ஒருபகுதியாக வெளியிட வேண்டும். அல்லாவிடில், எல்லோரும் தகுதியானவர்களேயென அறிவித்து, எல்லோரையும் போட்டிக்குள் கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும்”. விழுமியமார்ந்து இருப்பதுதான் ஒரு மனிதனுக்கான வெற்றியென்பதுதான் அடிப்படை.

𝐇𝐢𝐞𝐫𝐚𝐫𝐜𝐡𝐲 𝐨𝐟 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐚 𝐧𝐨𝐧𝐩𝐫𝐨𝐟𝐢𝐭:

  1. Federal Law/Tax Law (e.g., IRS regulations)
  2. State Statute/Law (e.g., State Nonprofit Corporation Act)
  3. Articles of Incorporation (Charter)
  4. Bylaws
  5. Board Policies/Procedures (e.g., Robert's Rules of Order)

தணிக்கைக்குழு அமைக்கப்படுகின்றது. வரிசையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள அமைப்பின் சட்டக்கோப்பில் உள்ள ஒரு சரத்தினை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவு. அந்த முடிவினைச் சான்றாகக் கொண்டு, செயற்குழுவில் ஒரு கதையாடல். அந்தக் கதையாடலின் தீர்வாக, நான்கு பேர் வரிசைப்படுத்தப்படுகின்றனர். அந்தக் கதையாடல் கோப்பு உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவர்கள் இன்னபிறருக்கு அனுப்பி வைப்பர். சமூகத்தில், அந்த நான்கு பேரின் மீதான அளவளாவல். ஒழுங்கைக் கட்டமைக்கிறோமெனும் பேரில், ஒழுங்கு தவறுவது சரியா?

இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, இலாபநோக்கற்ற அமைப்புகளில் வேலை செய்யும் தன்னார்வலருக்கான சட்டப்பாதுகாப்பினை அந்தந்த அமைப்புகள் உறுதி செய்யும் பொருட்டு, சட்டக்கோப்பு விதியை வைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு, பேரவையின் சட்டக்கோப்பில் ஈட்டுறுதிக்கான சரத்தும் உள்ளது. “Board Member of the Federation shall be indemnified by the Federation, பணிகளைச் செய்யும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு, சம்மேளனம் அந்த உறுப்பினருக்கு இழப்பீடு வழங்கும்” என்பதனை, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கைதான் சட்டக்கோப்பு. இதனைச் சற்றும் கருத்தும் கொள்ளாமல் செயற்படுவது, நீண்டகாலப் பார்வையில் பெரும் தீங்காகவே அமையும். “shall be" எனும் பதத்தின் தன்மையானது, கட்டாயத்தன்மையை வலியுறுத்துவதாகும்.

தங்களுக்குள் மட்டும் ஓங்கிய ஒற்றுமையை வைத்துக்கொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை, ’பழங்குடி மனப்பான்மை’ என உளவியலாளர்கள் குறிப்பிடுவர். அது உள்ளார்ந்த, ஒருங்கமைந்த சமூகவிழுமியத்தை ஒருபோதும் ஈட்டித்தராது. எல்லோரையும் இயங்கவிட்டு, அதிலிருந்து சிறப்பினை கடைந்தெடுப்பதுதான், பேரின்ப வெற்றியாக ஒருவருக்கான சுவடு(legacy) அமைய வேண்டுமேவொழிய, அதிகாரத்தின் குரலில் அமைவதாக இருக்கலாகாது; அது காலத்தின் பிற்பகுதியில் ஏசும்!

நெறிமுறைப் பிறழ்வுகள் (procedural violations) இனம்காணப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மாறாக, ’திருத்துகிறேன்’ என்ற போர்வையில் ஒழுங்குப் பிறழ்வுகள்(wilful violations) இடம்பெற்றுவிடக் கூடாது. முதலில் திருத்தப்பட வேண்டியது அமைப்பின் சட்டக்கோப்புதான்!

𝐑𝐞𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬; 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐞𝐫𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞𝐦!

-பழமைபேசி.




3/19/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫

ஃபிலிபஸ்டர் என்பது ஒரு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் முறையைத் தாமதப்படுத்த அல்லது முழுமையாகத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். ஒரு குறிப்பிட்ட சட்ட முன்வடிவு மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்க, ஒரு உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் குழு சபையில் மிக நீண்ட நேரம் உரையாற்றுவதே இதன் அடிப்படைச் செயல்பாடாகும். இதன் மூலம் விவாத நேரத்தை நீட்டித்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இந்த நடைமுறை அமெரிக்க செனட் சபையில் மிகவும் பிரபலம். அங்குள்ள விதிகளின்படி, ஒரு விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர 'குளோட்சர்' எனப்படும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு 100 உறுப்பினர்களில் 60 பேரின் ஆதரவு தேவை. ஒருவேளை ஆளுங்கட்சியிடம் இந்த அறுதிப் பெரும்பான்மை இல்லையெனில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஃபிலிபஸ்டர் முறையில் இடைவிடாது உரையாற்றுவர்; பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும்.

ஃபிலிபஸ்டர் செய்யும் உறுப்பினர்கள் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்பதால், அவர்கள் பேசுவதற்குத் தலைப்புச் சார்ந்த தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அமெரிக்க வரலாற்றில் சில செனட்டர்கள் சமையல் புத்தகங்கள், தொலைபேசி டைரக்டரிகள் , ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசித்து நேரத்தைக் கடத்தியுள்ளனர். 1957இல் சிவில் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக ஸ்ட்ரோம் தார்மண்ட் என்பவர் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி சாதனை படைத்தது இன்றும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் தனிச்சிறப்பே அதன் அரசியல் சாசனம்தான். ’ஒவ்வொரு மூலை முடுக்கில் இருப்போர், சமூகத்தில் ஒரு தனியாள் இருந்தாலும் அவரின் குரல்’ என ஒருங்கமைந்த சமூகமாக, எல்லாத் தரப்பையும் உள்ளடக்கிய சமூகமாக நாடு திகழ வேண்டுமெனப் பார்த்துப் பார்த்து முன்னோர்களால் செதுக்கப்பட்டிருப்பதன் ஒரு விழுமியச்சான்றுதான் இது, 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫.

பேரவையின் செயற்பாடுகளில் சிலவற்றை முன்வைத்து, முன்னாள் தமிழ்ச்சங்கத் தலைவர் ஒருவர் இத்தகு ஃபிலிபஸ்டரைக் கையிலெடுத்திருக்கின்றார். வாராவாரம் மின்னஞ்சல்கள் வருகின்றன. நமக்கு நமது பெட்டி நிறையக் கூடாது. மேலும், ’வாய்சுநோட்’ என்பதெல்லாம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் எவ்வளவு சொன்னாலும் சமூகம் கேட்பதில்லை. இஃகிஃகி. பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதுதான் அமெரிக்கமுறை.

𝐄𝐧𝐝𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐨𝐟𝐭𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐮𝐝𝐞𝐬𝐭 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 𝐬𝐢𝐥𝐞𝐧𝐭 𝐩𝐫𝐨𝐭𝐞𝐬𝐭.

-பழமைபேசி, 03/19/2026.

3/10/2026

தனித்தமிழின் தேவை: ஒரு பார்வை

தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட சீரிளமைத் திறம் வாய்ந்தது. ஒருகாலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழின் தனித்தன்மையின் மீது தாக்கம் கொண்டபோது, மறைமலை அடிகள், பாவாணர் போன்றோரின் பங்களிப்பால்  'தனித்தமிழ் இயக்கம்' உருவானது. நாம் ஏன் தனித்தமிழைக் கடைபிடிக்க வேண்டுமென்பதற்குப் பல அழுத்தமான காரணங்கள் உள்ளன.

ஒரு மொழியின் தனித்துவம் என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகைபடக் கலக்கும்போது, அந்த மொழியின் வேர்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து போகின்றன. இதனால் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும் சிதைந்து, ஒரு காலகட்டத்தில் அந்த மொழியே சிதைந்த நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ் சிதையாமல் அதன் ஆதி வடிவில் நிலைத்திருக்க, தனித்தமிழ்ப் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

அடுத்து, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையிலான வேர்ச்சொற்களைக் கொண்டது. புதிய கண்டுபிடிப்புகள் , புதுத் தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. நாம் பிற மொழிச் சொற்களை அப்படியே இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தும்போது, நம்முடைய சிந்தனைத் திறனும் புதிய சொற்களை உருவாக்கும் படைப்பாற்றலும் மங்கிப்போகின்றன. தமிழைத் தூய வடிவில் பயன்படுத்தும்போதுதான், அது காலத்திற்கேற்பத் தொடர் வளர்ச்சி அடைய முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் மொழியியல் சார்ந்த பற்றியம் மட்டுமன்று; அது நம் பண்பாட்டைக் காக்கும் அரண். ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அதன் மொழியில்தான் பொதிந்துள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை நாம் தடையின்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தமிழின் வேர்களை நாம் சிதைக்காமல் காக்க வேண்டும். பிறமொழிச் சொற்களின் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் நற்பணியாகும்.

சுருக்கமாகச் சொன்னால், தனித்தமிழ் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதன்று; மாறாக, தன் மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்து அதனை அழியாமல் காப்பதாகும். அன்றாடப் பேச்சுவழக்கில், ஆங்கிலம் , பிறமொழிச் சொற்களைக் குறைத்து, எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதனால் நாம் நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமன்று; அது தமிழின் தனித்துவமான இலக்கண மரபுகளை, தொன்மையான வழக்காறுகளையும் போற்றிப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா, அதன் மரபு சார்ந்த நடையில்தான் வாழ்கிறது. ஆனால், இன்று நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் வடமொழி, ஆங்கில மொழிகளின் இலக்கணத் தாக்கமும், சிந்தனை முறையும் ஊடுருவித் தமிழின் இயல்பான அழகைச் சிதைத்து வருகின்றன. இது ஒரு மொழிச் சிதைவு மட்டுமன்று, ஒரு பண்பாட்டு அடையாளத்தின் சிதைவுமாகும்.

பிறமொழி மரபுகளின் ஊடுருவலைக் களைவது இன்றியமையாதது. தமிழில் இல்லாதபிறமொழி எழுத்துகளையும், தத்திதச் சொற்களையும் பயன்படுத்துவதால் தமிழின் ஒலியியல் அமைப்பு மாறுகிறது. பழந்தமிழ் வழக்காறுகளைப் புறக்கணிப்பதும் தமிழின் செழுமையைக் குறைக்கிறது. தமிழ்ச்சொற்களிலேயே உயர்ந்த பொருளும் ஆழமான தத்துவமும் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற மரபுகளைக் கொண்டாடுவது நம் மொழியின் தற்சார்புத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது.

தற்காலத்தில் ஆங்கில மொழி மரபுகளின் ஆதிக்கம் தமிழை 'ஆங்கிலத் தமிழ்' வடிவாக மாற்றி வருகிறது. ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றித் தமிழில் எழுதுவது, தேவையற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்களைத் திணிப்பது போன்ற போக்குகள் பெருகியுள்ளன. கணினி, இணையம் போன்ற தற்காலத்துறைகளில், தமிழின் கலைச்சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவது, காலப்போக்கில் தமிழை ஒரு 'அடையாள மொழியாக' மட்டுமே சுருக்கிவிடும். ஆங்கில மரபுகளைக் களைந்து, தமிழின் தனித்துவமான வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது, தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகவும் நம்முள் குடிகொள்ளும்.

‘தமிழ்த்தாலிபான்கள், தமிழ்த்தீவிரவாதிகள், பிற்போக்காளர்கள்’ போன்ற சொல்லாட்சிக்கு ஆட்பட நேரிடும்தான். ஆனாலும் நாம்தான் ஒரு வேள்வியாகக் கருதிச் செயற்பட்டாக வேண்டும். அதுவே, தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் அவர்களின் நூற்றைம்பதாவது ஆண்டினைக் கொண்டாடுவதற்குப் பொருண்மியத்தை ஊட்டும்!

கூடுதலாக, “பிழை திருத்துபவரின் மனைவி” எனும் இச்சிறுகதையும் வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. https://shorturl.at/opVNd

-பழமைபேசி.

3/07/2026

பேரவையில் தேர்தல்

𝐓𝐡𝐢𝐧𝐤 𝐠𝐨𝐨𝐝, 𝐝𝐨 𝐠𝐨𝐨𝐝, 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐠𝐨𝐨𝐝.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு (House of Representatives) ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், ஒரு பிரதிநிதி பதவியேற்ற அடுத்த ஓராண்டிற்குள்ளேயே அடுத்த தேர்தலுக்கான நிதி திரட்டலிலும், பரப்புரையிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதையே அரசியல் ஆய்வாளர்கள் "நிரந்தர தேர்தல் பரப்புரை" (Permanent Campaign) என்று அழைக்கிறார்கள். மேலும், செனட் சபையின் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தாலும், மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடப்பதால், நாடு எப்போதும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கிறது.

முக்கியமான அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் "உட்கட்சித் தேர்தல்கள்" (Primaries and Caucuses) மற்றொரு நீண்ட நெடிய செயல்முறையாகும். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக இந்தத் தேர்தல்கள் நடைபெறும். இதில் கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள். இது தவிர, மாநில அளவில் ஆளுநர்கள், அரசு வழக்கறிஞர்கள் , உள்ளூர் அளவில் பள்ளி வாரிய உறுப்பினர்கள், நகர மேயர்கள், வீட்டு உரிமையாளர் சங்கங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பொறுப்புகளுக்குத் தனித்தனியான கால அட்டவணையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இறுதியாக, அமெரிக்காவில் "நேரடி மக்கட்பங்களிப்பு" ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் சட்ட திருத்தங்கள் அல்லது புதிய வரிகள் குறித்து மக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்கும் "வாக்கெடுப்பு முன்முயற்சிகள்" (Ballot Initiatives) தேர்தல் சமயங்களில் இடம்பெறும். இவ்வளவு நிலைகளில் தேர்தல்கள் நடப்பதால்தான், அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு அல்லது பரப்புரை எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு தேர்தல்நாடு.

நேற்றைக்கு, 03/06/2026, மகளார் வயலினிசை வாசிக்கும் காணொலியைப் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்தவர்கள் அழைத்துப் பாராட்டிப் பேசியதோடு, அவர்களில் சிலர், என்ன பழமை, மார்ச் வந்துவிட்டதெனச் சொல்லித் துருவினார்கள். இஃகிஃகி.

தேர்தல்நாட்டில் இருந்து கொண்டு, தேர்தலே இடம்பெறாத சூழல் பேரவையில் நிலவி வந்தது. 2016ஆம் ஆண்டு, நண்பர் சிவானந்தம் அவர்கள் போட்டியிட்டார். பேசினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைநோக்குப் பார்வையில் அவர் சொன்னது, ’தோற்பது, வெல்வது முக்கியமில்லை பழமை; உறுப்பினராட்சியைக் கட்டமைப்பது நம் நோக்கம். ஆக்கிரமிப்புகள் அகலவேண்டும். அதுதான் மேன்மைக்கு வழிவகுக்கும்’. தேர்தலில் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை; ஆனாலும், தொடர்ந்து முறையான தேர்தல், இப்படியிப்படி நடத்துதல் அமைப்புக்குச் சிறப்புச் சேர்க்குமெனச் சொல்லி வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்தார். நாங்களும் உடன் நின்றோம். அதன்விளைவு, நண்பர் கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் பங்களிப்பில் இணையவழித் தேர்தலுக்கான கட்டமைப்பு வேலைகள் இடம் பெற்று, வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுதான் முழுமையான தேர்தலுக்கான விதை.

இணையவழியில், 2018, 2020, 2022 என அடுத்தடுத்துத் தேர்தல்கள். “நான் இன்னிக்கி நிக்கிறன். இதைப் பார்த்திட்டு, நாளைக்கு இன்னும் சிலர் வருவாங்கல்ல?”. அதுதான் தொலைநோக்குப் பார்வை. நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் புதியவர்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தோம். 2024, தேர்தல். பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல். ஒட்டுமொத்த எல்லா இடங்களுக்குமான இணையவழித் தேர்தல். இதற்கான முதற்புள்ளி, 2016ஆம் ஆண்டுத் தேர்தல்.

அனுபவசாலிகளுடன் புதிய தலைமுறையினர் தேர்தலில் போட்டியிடுவதும் வாக்களிப்பதும், கொள்கை முடிவுகளில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது. பொறுப்புகளில் ஏற்கனவே இருந்தவர்கள், இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சிந்திக்கும் வேளையில், புதியவர்கள் புலப்பட்டிராத அன்றாடத் தேவைகளைத் துணிச்சலுடன் முன்வைக்கிறார்கள். சமூக சேவையாகக் கருதி வரும் புதிய ரத்தம், தேய்வழக்குகளில் இருந்து விடுபட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஒரு வாக்கு, உங்கள் வேட்புமனு என்பது ஒரு தனிநபரின் முயற்சி மட்டுமன்று, அது வரும் சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச்செல்லும் ஒரு சிறந்த மக்களாட்சிப் பரிசாகும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கத் தமிழரின் முகம். மேம்பாட்டுப் பணிகள், திட்டங்களை முன்வைத்து வெளிப்படையானதொரு போக்குடன், எவரும் தேர்தலை எதிர்கொள்ளலாம். ஏனென்றால் இது ஒரு தேர்தல்நாடு. சாதி, சமயம், அரசியல், தன்விளம்பரமோகம், சார்புச்செயற்பாடு  முதலானவற்றை ஒதுக்கிவிட்டு, மேம்பாட்டுக்கானதொரு வேள்வியாக,  பலரும் களம் காண வேண்டுமென்பதே நம் அவா! 𝐘𝐨𝐮𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬. 𝐇𝐞𝐥𝐩 𝐬𝐡𝐚𝐩𝐞 𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞!!

-பழமைபேசி, 03/07/2026.

2/12/2026

சிறுகோட்டுப் பெரும்பழம்

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு சார்பாக அடுத்து இடம் பெறவிருக்கும் கூட்டத்தின் தலைப்பு, சிறுகோட்டுப் பெரும்பழம் . இந்தத் தலைப்பில் ஏராளமான கதை, கவிதைகள், கட்டுரைகள் காலங்காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு, குறுந்தொகையின் இச்சொல்லாடல் புகழ்வாய்ந்தது. சிறுகோடு போலுள்ள காம்பானது  பெரும்பழத்தையும் தாங்குவது போல, காம்பு போன்ற மெல்லுயிரானது பலாப்பழம் போன்ற காதல்பாரத்தையும் சுமக்கின்றதெனும் உவமைதாம் இது.

இன்றைக்கு ரீல்சு எனப்படும் மீச்சிறுகுறும்படங்களில் இடம்பெறும் தலைவன் தலைவி க்கிடையேயான ஊடல்ப் பகடிகளில் பெரும்பாலானவற்றின் வேர், தமிழ்ச்சங்க இலக்கியங்களென்றால் வியப்படைவீர்கள். அத்தனையும், தமிழின் அகத்திணையில் அடக்கம்.

தும்மல் அக்கப்போர்

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இந்தத் துணுக்கு மிகவும் பிரபலம்: " வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." (திருக்குறள்: 1317 ). நான் தும்மியபோது "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள். ஆனால், அடுத்த கணமே "யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு அழுது பிணங்கி அக்கப்போர் செய்தாள்.

கனவிலும் ஊடல்

"நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர் காணப் பவர்." (திருக்குறள்: 1219). கனவிலாவது என் காதலரைக் காண முடிந்ததே என்று மகிழாமல், கனவில் வந்தவரிடமும் ஏன் நேரில் வரவில்லை என்று ஊடல் கொள்கிறாள். கனவைக் கலைத்து நினைவாவதன் வாயிலாக, மீண்டும் பிரிவில் என்னை ஆழ்த்தும் விளையாட்டாயெனவும் சிணுங்கி அக்கப்போர் புரிகிறாள்.

மகனைத் தூதுவிடுதல்

தலைவன் பரத்தையிடம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, தலைவியின் கோபத்தைத் தணிக்க மகனைப் பயன்படுத்துவதை ஐங்குறுநூறு விவரிக்கிறது. " நின்னினும் சிறந்தோன் புதல்வன் இவனைக் கொண்டுபுகல் கின்றீயால் ஐய! தன்பார்ப்புக் கற்பின் மலிந்த கண்ணினள்..." (ஐங்குறுநூறு: 401) . "ஐயனே! உன்னைவிடச் சிறந்தவனான உன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாயே? உன் மகனைக் கண்டதும் அவனது தாய் (தலைவி) தன் கோபம் மறந்து மகிழும் போது சேர்ந்து கொள்ளலாமென்பதுதானே உம் கோளாறு?" என, தோழி கலாய்க்கிறாள்.

கண்ணின் பிம்பம்

" கண்ணுள்ளின் நின்றார் எவராகொல்? பண்ணை எம்மேல் கடுத்தார் பெரிது." (திருக்குறள்: 1313) .  உம் கண்ணுக்குள் யாரோ ஒரு பெண் தெரிகின்றாள்? யார் அவளெனக் கேட்டு அக்கப்போர், அவனது கண்களில் தெரிவது தம் உருவம்தான் என்பதையும் கடந்து.

இயற்கை தந்த சாட்சி

“ தினைத்தாள் அன்ன கால செங்கால் நாரை நல்அலகு பார்க்கும் ஊரன் எம்மை நீயென்றோனே." (குறுந்தொகை: 25) ”. காட்டில் வைத்து அவன் அவளிடம் உறுதி கூறிய போது, தினைத்தாள் போன்ற கால்களை உடைய ஒரு நாரை மட்டும் மீனுக்காகக் காத்திருந்தது (அதுவும் மீன் பிடிப்பதில்தான் கவனமாக இருந்தது). அதாவது, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும் அந்த நாரையைப் போல நீயுமன்றோ எனச் சொல்லாமல் சொல்லி ஊடல் புரிகின்றாள்.

பல்லி சொல்லுதல்

" கல்லென் கானத்துத் தேன்மீக் கொள்பவர்... பல்லிப் பாங்கில் சொல்லும்..." (நற்றிணை: 169) . தலைவன் வருவதைத் தெரிவிக்கும் விதமாகப் பல்லி சத்தம் போடுகிறது (நற்சொல்). "பல்லியே! நீ சொல்வது உண்மையானால் என் காதலன் இப்போதே வருவான்" என்று தலைவி பல்லியிடம் உரையாடும் அளவுக்குப் பிரிவு அவளை வாட்டுகிறது. இதுவே பின்னாளில், கெளளி கத்தினால் நல்லூழ் எனும் வழக்காறாக மாறிப் போனதாகவும் இருக்கலாம்.

காதல் நோய்

காதல் நோய்க்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. மற்ற நோய்களுக்கு மருந்து வேறு எங்காவது கிடைக்கும். ஆனால் காதல் நோயைத் தந்தவனே அதற்கு மருந்தாகவும் இருப்பான். " நோய் தந்தவர் மருந்தாகார் எனின்..." (கலித்தொகை) . தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை, கனவென்னைக் கொத்தி தின்றால் பரவாயில்லை, காதல் பிசாசே காதல் பிசாசே!

ஆதலினால் காதல் புரிவீர்! ❤️❤️‍🔥

-பழமைபேசி. 02/12/2026.


12/17/2025

2025 பேரவைத் திருவிழா - பன்மைத்துவப் பெருவிழா

பண்பாட்டு மாநாடுகளில் சமநிலையைப் பேணுவதற்கான பல முக்கியமான பற்றியங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு விழாக்களில் பன்மைத்துவம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உயிர்ப்பாகும். பலதரப்பு மக்களுக்கும் உரிய கவனத்தைக் கொடுத்து, பங்களிப்புக்கான இடத்தைக் கொடுத்து, சமநிலையோடு நன்றி பாராட்டி ஒன்றிணைந்து கொண்டாடும் போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு தழைக்கின்றது. நம் பிள்ளைகள் இத்தகைய மாநாடுகளைப் பார்க்கும்போது, உலகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதென்பதை இயல்பாகவே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களையும் நம்மையும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றது.

🎭 உள்ளடக்கம், பல்சார்புப்பங்களிப்பு 

பல்வேறு விழுமியங்கள், கோட்பாடுகளின் வெளிப்பாடுகள்; மாநாட்டில் விவாதிக்கப்படும், காட்சிப்படுத்தப்படும் விழுமியங்கள், சிந்தனைகள் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், பரந்துபட்ட, வட்டார, சகல தரப்புப் பண்பாடுகளையும் விருப்பங்களையும் சமமாக வெளிப்படுத்தவும் உட்பட்டதாயும் இருத்தல் வேண்டும்.

பல்வேறு கருப்பொருள்கள்: கலை, இலக்கியம், மொழி, வரலாறு, உணவு, இசை, உடை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பண்புகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூறு ஓங்கலான ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழமை, புதுமை: பாரம்பரிய, பழமையான பண்பாட்டு வடிவங்களுடன், சமகால பண்பாட்டுப் போக்குகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.

🎤 பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், அரங்குகள்

இணையான வாய்ப்பு: மாநாட்டுப் பேச்சாளர்கள், குழு விவாத அறிஞர்கள், வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலினச் சமநிலை, பல்வேறு வயதுக் குழுக்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாறுபட்ட சிந்தனைகள்: கல்விசார் அறிஞர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

சிறுபான்மைக்குரல்: மாநாட்டில் குரல் குறைவாக ஒலிக்கக்கூடிய சிறுபான்மை, ஒதுங்குநிலைச் சமூகங்களின் பண்பாடுகளுக்கும் அவர்களின் தரப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

📝 நடைமுறை ஏற்பாடுகள் 

மொழி அணுகல்த்தன்மை: பேச்சுகள், நிகழ்வுகள், ஆவணங்களைச் சீரான முறையிலும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காத வகையிலும் தொடர்ந்து இடம் பெறச்செய்தல் வேண்டும்.

வெளிப்படையான கொள்கைகள்: பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரையறைகள், கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

🧘 உரையாடல் அணுகுமுறை 

திறந்தமனப்பாடு: விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், கருத்தாடல்கள் எல்லாத் தரப்பினருக்கும்  இடமளிக்கக் கூடிய வகையிலும், பண்பட்ட முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: எந்த ஒரு கூற்றினையும் தரப்பினையும் மதிப்புக் குறைவாக வெளிப்படுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், வியந்தோதலின் வீச்சு எல்லைமீறப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழிகள்: மாநாடு முடிந்த பிறகு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெற்று, அடுத்த மாநாட்டில் சமநிலையை மேலும் மேம்படுத்த முயன்றாக வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மாநாடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதைக்குரிய, பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு தளமாக அமைந்து விடுகின்றது. சிற்சிறு நகர்வுகளையும் நன்கு திட்டமிட்டு, அன்பையும் அக்கறையையும் சேர்த்துச் சேர்த்து, குருவி கூடு கட்டுவதைப் போல, ஒவ்வோர் இணுக்கு இணுக்காகக் கொணர்ந்து கொணர்ந்து, பின்னிப்பின்னிக் கட்டமைப்பதற்கான உழைப்பினை, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செய்கின்றபடியால்தான் இப்படியான மாநாடு நமக்கு வாய்க்கப் பெறுகின்றது. அத்தகைய கூட்டுப்பணிக்கு இடைஞ்சலாக, திட்டமிட்டுக் குறுக்கீடுகள் நிகழும்போது எவனொருவனும் அறச்சீற்றம் கொண்டாக வேண்டும். 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐬𝐞𝐞𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐨𝐟 𝐬𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐬𝐭𝐬.

ஜூலை 6, 2025. இலக்கியக் கூட்டத்தில் பேசிய ஆளுமைகள் எல்லோராலும் சொல்லப்பட்டு அன்று, வலியுறுத்திச் சொல்லப்பட்ட கருத்துதான் இது. ”பன்மைத்துவம் ஓங்கிய பெருவிழா, இந்தக்கால கட்டத்தில் இது போன்ற விழாக்களைத் தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத விழா”. குறிப்பாக, இலக்கிய ஆளுமைகள் சு.வேணுகோபால் அவர்களும், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ‘பெருமாள் முருகன் வரக்கூடாது; அண்ணாமலை வரக்கூடாது; ஸ்டாலின் ராஜாங்கம் வரக்கூடாது; செந்தலை கவுதமன் வரக்கூடாது”, இது போன்ற வரக்கூடாதுகள் பிற்போக்கானவை. எல்லாத் தரப்புகளும் வர வேண்டும். நமக்குள் பண்பட்ட உரையாடல்கள் நிகழவேண்டும். நமக்குள் இணக்கம் மேலோங்க வேண்டும். அழைக்கப்படுகின்ற விருந்திநர் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் சமநிலை தவறாமல், சீர்த்தன்மைப் பிறழ்வின்றிச் சகலகூறுகளும் இடம் பெற வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைப் பாரமாக்கி, மேட்டிமைகளைத் தூக்கித் திரிந்து கொண்டிருத்தல் என்றென்றும் ஆகாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்! 

ஐயா மணியரசன் அவர்கள், தாமாகவே நம்மை அழைத்து, ’நீங்கள் யார்?, பல இடங்களில் உங்களைப் பார்க்கின்றேன், மங்காத தமிழென்று சங்கே முழங்கு என நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்கின்றேன்’ என்றெல்லாம் சொல்லி, பாவேந்தர் பாரதிதாசன் குறித்துத் தம் நினைவுகளைப் பகிர்ந்து ஊக்கமூட்டிப் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டு விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் செம்மாந்த விருந்தோம்பல்ப் பெருவிழா, பன்மைத்துவம் போற்றியதன் உச்சகட்டம். அதில் நாமும் பங்காற்றினோமென்பதில், தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்ப் பெருமை உண்டு. வாழிய நற்றமிழ்!

𝐌𝐞𝐠𝐚 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐨𝐩𝐭𝐢𝐦𝐢𝐬𝐦, 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐞𝐫𝐚𝐧𝐜𝐞 𝐣𝐨𝐢𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐬.

-பழமைபேசி.


#Truth,Transparency & Trust

#FeTNA2025

#Empathy

#Inclusiveness