12/22/2008
தமிழ் இலக்கியத்தின் ஒரு சர்ச்சை
ஔவையாரும் ஒட்டக் கூத்தரும் சம காலத்தவர்களாக இருக்க முடியாது. ஏனெனில், திருவள்ளுவரும், ஔவையும் சம காலத்தவர்கள். ஔவையின் சிபாரிசால் தான், பாண்டிய மன்னன், திருக்குறளை, மதுரை பொற்றாமரைக் குளத்திலுள்ள சங்கப் பலகையில் ஏற்ற முடிந்தது. ஔவையின் சிபாரிசு இல்லாமலிருந்தால், அன்றே திருக்குறளை பரிகசித்து, அறியாமையால், பாண்டிய மன்னன் ஒதுக்கியிருப்பான். இதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. அதாவது, திருவள்ளுவர் நிச்சயம் நாஞ்சில் நாட்டவராகத்தான் இருக்க முடியும் (மைலாப்பூரில் அல்ல).ஒட்டக்கூத்தரும் கம்பரும் சம காலத்தவர்கள். ஆகவே, ஒட்டக் கூத்தருக்கு தக்க பதிலடி கொடுத்தவர் கம்பராகத்தான் இருக்க முடியும்.
--வெற்றிச்செல்வன் (ஜெய் சுப்ரமணியன்)
அய்யா,
வணக்கம்! _/\_ நேற்று தான் உங்கள் இளவல் அன்பர் கண்ணன் அவர்களிடம் உங்களைப் பற்றி அளவலாவிக் கொண்டு இருந்தேன். உமது கடிதம் கண்டு மகிழ்ச்சி. மேலும் பல அலுவல்களுக்கு இடையில் அக்கறையுடன் எமது பதிப்புகளையும், குழுமத்தாரிடமும் கேட்டறிந்தமைக்கு நன்றிகள். கிடைக்கும் கால அவகாசத்தில் பிறந்த மண்ணில் உற்றார் உறவினருடன் பொழுதைக் கழித்து இனிமையுற வாழ்த்துகிறோம்!
புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய உமது குறிப்புகள் கண்டு உவகை உற்றோம். யாமும் இவை பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் கேள்விப்பட்டது உண்டு. இருந்தாலும், அதனை உரிய தருணம் வாய்க்கும் பொழுது பதிவிடுவோம் என எண்ணி இருந்தோம். தாங்கள் அத்தகைய கிடக்கையை வெளிக் கொணர்ந்தமையால், வாய்க்கப் பெற்ற இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்வோமாக!!
"எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது."
யாம் குறிப்பிட்ட இந்தப் பாடல் ஔவையார் எழுதிய ஒன்றே! ஒட்டக்கூத்தரும் ஔவையாரும் சமகாலத்தில் வாழ்ந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆம், இன்றளவும் புலவர்கள் வாழ்ந்த காலம் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிராகவே உள்ளது. இருந்தாலும், ஔவையார் இந்தப் பாடலை ஒட்டக்கூத்தருக்கு எதிராகப் பாவித்தாரா அல்லது கவி காளமேகப் புலவருக்கு எதிராகப் பாவித்தாரா என்பது பற்றிய விவாதமே யாம் அறிந்த ஒன்று. நீங்களோ, மூன்றாவதாக, இந்தப் பாடலை ஔவையார் எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள்.
ஔவையார் கடைச்சங்க((கி.மு. 300 - கி.பி. 300) காலத்தில் வாழ்ந்த பெண் புலவராவர். இவர் இளமையில் மணம் புரிய மனம் இல்லாமல், தனக்கு முதுமையை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இவர் முதியவரானார் என கூறப்படுவதுண்டு. இவருடைய படைப்புகளுள் ஆத்தி சூடி, விநாயகர் அகவல், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, ஞானக் குறள், பந்தனந்தாதி ஆகியவை அடங்கும். புறநானூறு முதலிய சங்க நூல்களில் அவரது பாட்டுக்கள் காணப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டு இவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தாரெனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த ஔவையார் தவிர, பல ஔவையார்கள் வேறு வேறு காலங்களில் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
உண்டிச் சுருக்குவது பெண்டிற்கு அழகு என்று கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை சங்ககாலத்தவரல்ல.
கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டுவரை ஒளவை என்ற பெயரில் எழுதியவர்கள் ஆறு பேர்.
கி.பி. 2ம் நூற்றாண்டு: சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர், அதியமான் நெடுமானஞ்சியின் தோழி
கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை
கி.பி 14 முதல் 17ம் நூற்றாண்டு: ஆத்திச் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர்
கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர், அசதிக் கோவை எழுதியவர்
18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர். இதே காலத்தில் ஒரு ஒளவை இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மகாகவியின் மகள். கவிஞர் சேரனின் தங்கை. அவரை மேற்குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கவில்லை.
ஆகவே, இந்தப் பாடலை ஏதோ ஒரு ஔவையார் ஒட்டக் கூத்தருக்கு எதிராகப் பாவித்து இருக்கலாம். கவி காளமேகத்துக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். அல்லது கம்பருக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். ஏனென்றால், இம்மூவருமே ஏதோ ஒரு ஔவையை இகழ்ந்தோ அல்லது எள்ளலாகவோ எழுதியதாக பாடல் உண்டு. இவர்களுள் ஒட்டக் கூத்தரும் கம்பரும் வாழ்ந்தது கி.பி. 11 ஆம் நூற்றாண்டு, காளமேகம் வாழ்ந்தது 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு.
கொசுறு: நீவிர் பாண்டியர் புகழ் பாடுவதையே வழமையாக வைத்திருக்கிறீர்கள் போலும். யாமும் பதிற்றுப்பத்து கற்று எம் நாட்டு மன்னர்கள் பதின்ம சேரர் புகழ் பாட வேண்டி இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். "மாற்றுக் கருத்துகள் இருப்பின் தெரியப் படுத்தவும். சரியான தகவல்கள் சேகரிப்பதுவே எமது விருப்பம்!"
10/26/2008
பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!
கருத்தபுள்ள முழிசுருட்டி
குளத்துக்குள்ள ஆள்பகட்டி
கொழந்தப்பய நான் வருவேன்
கொண்டணைக்க வேணுமடி
சடசடன்னு மழைபொழிய
சத்தத்தோட இடி இடிக்க
கொங்காடிபோட்டு நான்வருவேன்
கொணமயிலே நீயிருக்கவேணும்!
ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!
வட்டப்பொட்டு வெக்காதடி
குறுகுறுன்னு பாக்காதடி
காயிலயும் நல்லகாயாம்
காட்டமான முருங்கக் காயாம்
அந்த முருங்கக்காயத் தின்னுப்பிட்டு
மனசுலென்னை வெச்சுகிட்டு
தங்கமயிலே நீயிருக்கவேணும்!
ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!
குறுங்கட்டலு, வெறுங்கட்டலாவே இருக்க முடியுமா?
அந்த ஓட்டு மக்களே?
10/25/2008
மஞ்சலவுக்க தாரேன்!
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப
மச்சான்னு கூப்புடுடி!
அமராவதி ஆத்தங் கரையோரம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டாச் செவக்குதில்லே
பூமயிலே ஒம்மயக்கம்
உழுத புழுதிக்குள்ள
உப்புக் கொண்டு போறபுள்ள
உப்புவெலை சொன்னியின்னா
கொப்புப் பண்ணி போட்டுருவேன்
ஏருக்கு முன்னால
எருப்பொருக்கி போற குட்டி
மாருக்கு முன்னால ரெண்டு
மயிலிருந்து கூவுதடி!
மஞ்சலவுக்க தாரேன்
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப
மச்சான்னு கூப்புடுடி!
--------------------------------------------------
தயிரு விக்கிற பொம்பளே,
தயிரு போனா மயிரு போச்சு,
கிட்ட வாடி எம்மயிலே!
கொசுவத்தோட பொறந்து இருப்பால்ல?!
8/30/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 7
நீயாமா பாடுபா வாவா!
வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.
கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!
இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!
காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க
(.........இன்னும் வரும்........)
8/28/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 6
நீ மீ ஊ ஈ,
வீ மோ கோ போ,
தீ தா ஐ ஓ!
வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.
பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
ஊ : அன்னம் அல்லது உணவு
ஈ : கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
ஐ : அச்சம்
ஓ : ஒழி அல்லது தவிர்
கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!
பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!
8/27/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 5
சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி மேனித் தளிர்
மான் மகவு மேஅது!
முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!
இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!
(இனியும் வரும்....)
8/25/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 4
புகழும் வாக்கும்
பெற்று விடு!
நிகழும் போக்கும்
உற்று விடு!!
வீடு வாழ
நல்லது செய்து விடு!
நாடு வாழ
வல்லது உய்து விடு!!
வீட்டைக் காக்கப்
பூட்டைப் போடு!
நாட்டைக் காக்கப்
பாட்டைப் பாடு!!

(இனியும் வரும்....)
8/24/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 3
துறுதுறு சுறுசுறு பொம்மி குறுபொம்மு!
கொடும் ஊழ், ஊறு வடுவும் மவ்வும் பேரும்!!
மதுவும் சூதும் சுடுசுடு சூடு; ஒவ்வாது!
பாகுமுறுவும் ஊணும் உடுப்பும் உறு!
தொழு ஒரு பொழுது, பெறு ஓதும் பேறு!
பொருளுரை: "துறு துறு" என இருக்கும் சுறு சுறுப்பான, அழகான என் மகளே! கொடுமையானது என்பது மனத்தில் தீங்கு நினைப்பதும், அதனால் பெயர் கெடுவதும். மதுப் பழக்கமும் சூதாடும் பழக்கமும் மிகவும் கொடியது. தீயைப்போல் சுட்டுவிடும், அவை உனக்கு ஆகாது. கரும்புப்பாகுவைப் போன்ற இனிமைப் புன்முறுவல், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியனவற்றை நீ எப்போதும் உடையவளாவாயாக! மேலும் தினமும் ஒரு முறையாவது இறைவனைத் தொழும் பாக்கியம் நீ பெறுவாயாக!
(இனியும் வரும்....)
கவி காளமேகத்தின் தாக்கம் - 2
இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:
அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!
பொருளுரை: அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன்.
மேலதிகத் தகவல்: பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம். சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.
8/21/2008
கவி காளமேகத்தின் தாக்கம் - 1
மெல்லினத்துல மெதுவா மென்மையா ஆரம்பிச்சு, அப்புறம் இடைப்பட்ட வாக்குல வாழ்த்துற மாதிரி வாழ்த்தி, கடைசியா வல்லினத்துல வலுவா புத்திமதி சொல்லுற மாதிரி எழுதி, இல்ல இல்ல, கிறுக்கி இருக்கேன்.
மௌனமணி யாம்! நன்னி யாம்!!
நின்நன்மனம் யாம்! நின்நும்மே யாம்!!
எம்மனம்நீ! ஞானம்நீ!! நாணம் நீ!!!
மினன்மின்னி மானம்நீ! மாமணி மா!! (மெல்லின வெண்பா)
வாயார ரருளுரை யுரைய வல்லவரும்
வாழுரை யுரைய வேல்விழியா ளைவெல்ல
வருவார் யாரோ? வரவுவழிய விழியொளிர்
வாழ்வு வாழிய, வாழிய வாழியவே! (இடையின வெண்பா)
கடுகடு தடு கிடக்குது பாடு,
பகடற கசடற தோடக் கேடு!
சிறுபாதை தேடா, தப்புச் செப்பா,
தசபதி துதி தீதது சாடாது!! (வல்லின வெண்பா)
பொருளுரை:
மௌனசாமியின் மைந்தன் மணியாகிய யாம் உம்மைப் பெற்றதில் இறைவனுக்கு நன்றிக் கடன்பட்டோம். உமது அன்பைப் பெற்றவனும், உமது நன்மை ஒன்றையே நோக்குக்கிறவனுமே யாம். எம்மனதில் குடி கொண்டு உள்ளவளும், அறிவும், வெட்கிப் புன்முறுவல் பூக்கும் அழகுடையவளும், குலம் போற்ற வந்தவளும் நீ. நீ மாமணி போல் வாழ்வாய்.
அன்பாய் நீயிருக்க, வாழ்ந்த வல்லமையுடைய பெரியோர் உன்னை வாழ்த்த, அழகிய கண் கொண்ட உன்னைத் துன்புறுத்த யாரும் வரார். வளம் பொங்க, ஒளி மயமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
எத்தகைய கடுமையான இடர் வந்தாலும் உண்டாகும் கோபத்தை தணித்துக் கொள்; வீண் பெருமைக்காகவும் தவறானதுக்காகவும் செய்கிற செயல்களை விட்டொழி; எந்தவித துன்பமும் உன்னை அண்டாது ஓடிவிடும். மேலும் குறுக்கு வழியில் பொருள் தேடாமலும் தவறாக எதையும் பேசாமலும் இருந்து, பத்து அவதாரங்கள் கொண்ட திருமாலை வணங்கி வருகிறபட்சத்தில் தீங்கெதுவும் உன்னை அண்டாது.
(.....இல்ல, இவனுக்குக் கொஞ்சம் முத்தித்தான் போச்சோ?!.....)
8/19/2008
தமிழின் பெருமைகள்: அண்ணன் நடிகர் சிவகுமார் அவர்கள்
தொகுப்பு:2
தொகுப்பு:3
தொகுப்பு:4
தொகுப்பு:5
தொகுப்பு:6
தொகுப்பு:7
தொகுப்பு:8
8/08/2008
காளமேகம் போல், தகரத்தில் வேள்வி!
15 ஆம் நூற்றாண்டில் வைணவப் புலவராய் ஒருவர். சைவப் புலவராய் ஒருவர். இவர்கள் அவ்வப்போது இலக்கிய வேள்வியில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் வாதிட்டுக் கொள்வது உண்டு. ஒருவர் வில்லிபுத்தூரார், மற்றவர் அருணகிரிநாதர்.
வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.
அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்த(ராக)ங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இப்படியாக ஒரு தருணத்தில், கீழ் வரும் அருணகிரிநாதர் பாடலுக்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூற முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறது.
திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
நடராச மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த மூலப் பொருளே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
(சேர, சோழ, பாண்டியன்னு பத்த வெச்சான்! இப்ப வைணவர், சைவர்னு பத்த வெக்க ஆரம்பிச்சுட்டான்?! யார்யா இவன்??)
8/07/2008
கோயம்பத்தூர் பெருமை
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் "கோவை" என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!
வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டு மென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!
நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு,
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.
----கவிஞர் கண்ணதாசன்
8/02/2008
ஒட்டக்கூத்தரும் கம்பரும்
ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம். அப்ப, தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து, கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம். அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா, 'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம்.
அதக் கேட்ட கம்பர், "அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு!
இதைத்தான், "நாய்க் கடிக்க, செருப்பு அடிக்க"னு சொல்லுறாங்களோ?
7/26/2008
ஒளவையின் பதிலடி
எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.
தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.
எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.
பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.
மூதேவியின் வாகனம் கழுதை.
முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.
குலராமன் தூதுவன் 'குரங்கு'.
ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.
ககரத்தில் கவி காளமேகம்
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"
இதனைப் பிரித்துப் படிக்கவேண்டும்.
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்;
கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.
பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.
நன்றி:- அகத்தியர் தொடுப்பு
6/29/2008
திருமண வாழ்த்து
6/16/2008
வள்ளியாத்தாவும் மயிலாத்தாவும்
வள்ளுவ குலத்துப்பய
வளச்சுகிட்டான்!நான்
திமிறிகிட்டேன்!!
ம்ம்.. என்னவோ போ!
அடங்காத புள்ளைக்கு எவளோ,
ஒறங்காம கொள்ளாம ரா ராட்டுனாளாம்!!
உனக்கென்னடி ஆத்தி? வண்ணானுக்கு வண்ணாத்தி
பக்தி முத்தி, பூனை கருவாட்டு பானைய,
கக்கத்துல இடுக்கிக்கிட்டு மோட்சத்து போச்சாம்!
நான் ஒண்ணும் பச்ச கண்டா ஒட்டுறவளும் இல்ல;
பருவங்கண்டு தப்புறவளும் இல்லடி.
களத்து மேட்டு கதயச் சொல்லவா? இல்ல, வடக்குமின்னா
ஓடி, பொறவால ஒளிஞ்ச கத சொல்லவா??
(.......இது ஏதோ அந்த விவகாரம்னு கொஞ்ச தாமதமாத் தான்
6/09/2008
அன்னையர் தின உவகை
நிறை
பிதாமாரின் படைப்பாற்றல்
கமலத்தின் கவிதை
சிறுவர் பட்டாளத்தின் ஒத்துழைப்பு
குறை
அவரை உள்வாங்கி
அவரையே மையம் கொண்டு
கற்பனைக்கடலில் மூழ்கி
நகைச்சுவையாய்
நீளக்கதை எழுதி
படைக்கும் ஆவலில்
உள் நுழைந்தால் அங்கே
பெரிய வெற்றிடம்.
அது ஏமாற்றம் அல்ல;
அதையும் மிஞ்சியது அது!
அதையும் மிஞ்சியது அது!!
குணமாகி அக்குழம்படிச்
சத்தம் திரும்பும்
நாள் நோக்கி நாங்கள்!
அந்நாள் நோக்கி நாங்கள்!!
உவகை
வல்லிய நோக்கமே,
புலம் பெயர்ந்த மண்ணில்
தெரிந்த தமிழ் வார்த்தைகள்
நெஞ்சகலா வண்ணம்
இருக்கவே, கிறுக்கல்கள்.
அதில் மற்றவரும் இணையக் கண்டு
மகிழ்கிறோம் மட்டற்று!
ஆனாலும் அது கிறுக்கல் இல்லை,
வார்த்தெடுத்த கவிதையே அது.
படைப்புக்கு நன்றி நவிழ்ந்து,
உவகை உற்றோம் நாம்!
உவகை உற்றோம் நாம்!!