Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

4/12/2009

அமெரிக்கா: பூந்தாதுத் தொல்லையும், தீராத இம்சையும்!

வணக்கம் அன்பர்களே! பொழப்பு தேடி அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியா அமெரிக்கா வந்தப்ப நாம நல்லாதான் இருந்தோம். முதல் ரெண்டு மூனு வருசமும் நல்லாத்தான் போச்சுது. அப்ப பாருங்க, ஒன்றுகூடல் நடத்துறேம் பேர்வழின்னு நம்ம தமிழ் நண்பர் ஒருத்தர் வீட்ல, Carry, NCல கூடி இருந்தோம்.

நண்பரோட நண்பர், இப்ப அவர் நமக்கும் நண்பர், சித்தங்கலங்கி, மூக்குல, வாயில, கண்ணுலன்னு உடல்ல இருக்குற நவ துவாரங்கள்லயும் தண்ணி சிந்திகினு உள்ள வந்தாரு. உடனே, துடைப்பானால துடைச்சி விட்டு, மூக்குல பச்க், பச்க்ன்னு எதொ தெளிப்பானால தெளிச்சு விட்டாங்க. அதைப் பார்த்த நாம மிரண்டு போய்ட்டம்ல?! ஆச்சலு, என்னடா இது எல்லாம்ன்னு நாம கேட்க, அவரு,

“நிரந்தரவாசிக்கான(green card) விண்ணப்பம் எந்த நிலையில இருக்கு?”

“I-140 முடிஞ்சது, I-485 இனிதான் விண்ணப்பிக்கணும்டா. ஆமா, அது எத்தனை நாள் எடுக்கும்?”

“கவலையேபடாத. அது வர்றதுக்கு முன்னாடியே, இந்த ஒவ்வாமை(allergy) உனக்கு வந்துரும்டா!”ன்னான் பாவி மகன்.

அதேபோல அவன் சொன்ன நாள்ல இருந்து, ஒரு வருசத்துக்குள்ளயே அந்த ஒவ்வாமை வந்து சேந்துருச்சுங்க. வருசா வருசம் ஏப்ரல் ஒன்னாந்தேதி தவறாம வந்திடுதுங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, மருத்துவர்கிட்ட போனேன். அவர், பொறியில சிக்கின எலியாட்டம், லபக்னு புடிச்சி கிட்டாரு நம்மளை. நாம ஏற்கனவே எல்லாப் பற்றியமும் தெரிஞ்சுதான இருக்கோம். ஐயா, அந்த Allegraக்கு மருந்துச் சீட்டு எழுதிக் குடுங்க போதும்ன்னோம். ம்ம், நீங்க ஒரு தடவை பரிசோதனைக்கு வந்தே ஆகணும்ட்டாரு.

சரின்னு, ஒரு நல்ல நாளும் அதுவுமாப் போனோம். வாங்க, வாங்கன்னு உபசாரமல்லா வெகு பலமா இருந்துச்சு. முதல்ல உட்கார வெச்சாங்க. இடது பக்கம் திரும்பினா, 125 விதமான ஊசி மருந்து இருக்கு. என்னங்க, இன்னைக்கு இவ்வள்வு பேர் பரிசோதனைக்கு வர்றாங்களா? எல்லார்க்கும் ஒரே ஒவ்வாமை போல இருக்குன்னேன்.

அந்த தாதியம்மா சிரிச்சுகிட்டே, ஆமா, இன்னைக்கு நிறைய பேர் வர்றாங்க. ஆனா, ஒரு சிறு திருத்தம்ன்னாங்க. ஏன், நான் இன்னைக்கு போய்ட்டு, வேற ஒரு நாளைக்கு வரணுமான்னு கேக்க, அவங்க மறுபடியும் ஒரு குறுஞ்சிரிப்போட, நீங்க பாக்குற இந்த 125 ஊசிகளும் உங்களுக்குத்தான் போடப் போறங்கன்னு சொல்ல, நம்முளுக்கு அழுகையே வந்திடுச்சு. ஆனா, 60, 70 ஊசிகளோடயே நிறுத்திகிட்டாங்க.

அதைப்பார்த்த அந்த தாதி, இது சும்மா, தோல்ல மேலால போட்டு, உங்க உடம்பு எது எதுக்கெல்லாம் ஒவ்வாதுன்னு பாக்கப் போறோம்ன்னாங்க. சரி, பொறியில மாட்டியாச்சு, இனி என்ன செய்ய? நடத்துங்கன்னு சொல்லியாச்சு. இடது கையில மேல தோள்பட்டையில இருந்து, முழங்கை வரைக்கும், இட வலமா எட்டு எட்டு ஊசியா, எங்க அமுச்சி வறட்டி தட்டி வைக்குறா மாதிரி, குத்திகினே வந்தாங்க. முதல் பத்து ஊசிக்கும் வலிச்சது. அப்புறம், அவ்வளவாத் தெரியலை.

எல்லாமும் போட்டு முடிச்சதுக்கப்புறம், பத்து நிமிசங்கழிச்சு பாத்தா, ஒரு பத்து பன்னெண்டு வில்லைக ஊசி போட்ட இடத்துல. அதுகளை வெச்சி, உங்க ஒடம்பு இது இதுக்கு ஒவ்வாமைன்னு ஒரு பட்டியலையும் கீழ்க்கண்ட மருந்துகளையும் குடுத்தாங்க.

Allegra - மாத்திரை
Nasonex - மூக்குத் தெளிப்பான்
Visine - கண் சொட்டு மருந்து

இதுகளைத் தேவைக்கு ஏத்தா மாதிரி பாவிச்சுகுங்கன்னு சொல்லி மருந்துச் சீட்டும் குடுத்தாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, இந்த இம்சை. கண்ணுல ஒரே அரிப்பு, மூக்குல தண்ணியா ஊத்துது, உடம்பெல்லாம் சித்தங் கலங்கி ஓய்ஞ்சா மாதிரியே இருக்கு இப்பக் கூட.

சரி, ஏன் இது வருது? பாருங்க, வசந்த காலம் பொறக்குதோ இல்லையோ, மரம், செடி, புல்லுகள்ல பூந்தாது (மகரந்தத்தூள்) வெளிப்பட ஆரம்பிச்சிரும். இதுக, காத்துல 400 மைல் வரைக்கும், தரையில இருந்து மேல ரெண்டு மைல் வரைக்குமா பறக்குமாமுங்க. அவ்வளவு நுணுக்கமா இருக்குற இது, காத்தோட காத்தா மூக்கு, வாயி, கண்ணுல படும்போது உடல்ல இருக்குற தற்காப்பு அமைப்புகள் வேலை செய்ய ஆரம்பிச்சுடுமாம். அதாவது, தும்முறது, கண் உறுத்துறது இந்த மாதிரி.என்னதான், மேல சொன்ன மருந்துகளைப் பாவிச்சாலும், இம்சை இம்சைதானுங்க!

இது தெரிஞ்ச நம்மாள் ஒருத்தன், அவனோட இந்தியப் பிரயாணத்துக்கு நடுப்புல இருந்துட்டு கூப்ட்டான், ’டேய், இங்க Allegra கிடைக்குது, ஒரு ரெண்டு பெரிய பொட்டலம் 200 மாத்திரைக வாங்கிட்டு வரட்டா?’ன்னு கேட்டான். ’சரீடாப்பா!’ன்னேன் நானும். அவனும் நல்ல புள்ளையாட்டம் வாங்கியாந்து தந்தான்.

ஒரு மாத்திரை போட்டேன், ரெண்டு போட்டேன், ஒன்னும் வேலைக்காகலை. போன வாரம் பூராவும் இப்பிடியே ஓடுச்சு. முடியலை! பழைய குருடி, கதவைத் திறடின்னு நேத்து மறுபடியும் மருத்துவர்கிட்டப் போக, அவரும் மாதிரிக்கு இருந்த அதே Allegra மாத்திரைக, ஒரு 50 மாத்திரைகளுக்குப் பக்கமா குடுத்தாரு. அதுல ஒன்னை உள்ள போட்டன், அடைச்சி இருந்த மூக்கு ஒடனே தொறக்குது. அரிச்சிப், பிச்சிகினு இருந்த கண்ணு முழிக்குது, களைப்பு நீங்குது.... இது எப்படீங்க? இதுக்கும் மருத்துவர் கொடுத்தது, நுண்ணிய அளவுல குறைஞ்சதுதான். அப்ப, அந்த 200 மாத்திரைகளும் தூக்கிப் போட வேண்டியதுதானா? அல்லது, எனக்கு மனப்பிராந்தியா??

அதை விடுங்க, இப்ப ஒடம்புக்கும் கொஞ்சம் நல்லா இருக்கு, நாம நம்ம பினாத்தலை ஆரம்பிக்கலாம்... இஃகிஃகி! காயம், புண் அப்படீன்னு சொல்றமே, அதுகளை எப்படிப் பொழங்குறது? ஏன்னா, சில பல இடங்கள்ல இடம் மாறிப் பொழங்கிப் போடுறமே, அதனாலதான் ஒரு அலசல். அது வந்துங்க, புறச் சக்திகளால் ஆனது காயம். உளரீதியான உணர்வு, உடல் உபாதை இதுகளால ஆகுறது புண்.

நாள்பட்ட காயம் புண்ணாகலாம். ஆன காயம் ஆறி, பக்க விளைவின் காரணமாய் புண். புண் ஒரு போதும் காயம் ஆகாது. இது போக வடு, இரணம், ஊறுன்னு நிறைய இருக்கு. பிரத்யேக இடுகை கால அவகாசம் கிடைக்குறப்ப இடணும். இதெல்லாம் புழங்கினா, பயன்பாடு தெரியும். நாம இஞ்சூரி, வூண்டு, ரேஷ்ன்னல்ல காலத்தை ஓட்டுறோம்...இஃகிஃகி!

புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று!

10/14/2008

எள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-3

பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே!
பாமரர் ஏதறி வார்!!
-- பாரதியார்


நாம, எள்ளுத் தாத்தா 1880-ல எழுதி வெச்ச குறிப்புகளை தொடரா, எழுதிட்டு வர்றோம். இதனால, என்ன பிரயோசனம்ன்னு நீங்க யோசிக்கலாம். நமக்கு, இந்த தொடர் எழுதறதால கையெழுத்துப் பிரதிய, கணனியில தரவேற்றம் செஞ்ச மாதிரி ஆச்சு. உங்களுக்கும், அதப் படிக்கும் போது சுவராசியமா இருந்தாலும் இருக்கலாம். அதாவது, எருமைக்குப் புல் புடுங்கின மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதிரியும் ஆச்சு பாருங்க! அதான், இந்த ஒரு முயற்சி!!

லிங்க வீக்கத்திற்கு:

கற்றாழைச் சோற்றை ஏழுதிரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு வீக்கம் உண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு இராத்திரி வைத்துக் கட்ட வாடிப் போகும்.

பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு:

கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடை வைத்தரைத்து, புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.

விக்கல் வாந்தி சுரத்திற்கு:

கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமனிடை போட்டு கசாயம் வைத்து, தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.

விரை வீக்கத்திற்க்கு:

கெச்சக்கா இலையை துளி விளக்கெண்ணை விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலையில் பேதிக்கு சாப்பிட்டு வர வீக்கம் நீங்கும்.

காமாலை-சோகை-பாண்டுக்கு:

கோசலமென்னும் சிறுவர் சிறுநீறும் வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டு வந்தால், சோகை‍‍-காமாலை-பாண்டு‍-பித்தம் இவை தீரும்.

நாடியிறுக‌:

சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து, சக்கரை கலந்து திருகடியளவு உண்டு வந்தால் நாடியிறுகும். விந்து நன்றாக உண்டாகும்.

சுண்டைக்காய் ப‌ற்றிய‌ வெண்பா

நெஞ்சிற் க‌ப‌ம்போகும் நிரைகிருமி நோயும்போகும்
விஞ்சுவாத‌த்தின் விளைவும்போகும்! வ‌ஞ்சிய‌ரே
வாயைக்க‌ச‌ப்பிக்கும் மாம‌லையி லுள்ள‌சுண்டைக்
காயைச் சுவைப்ப‌வ‌ர்க்குக் காண்!

பாராம விட்டாக் கெடும், பழசு! பழசக் கேளாம விட்டாக் கெடும், புதுசு!!

(...இன்னும் வரும்...)

9/24/2008

சோதனை மேல் சோதனை...

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அந்நிய நாட்டு நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சென்டா' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது. `இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய_அந்நிய நாட்டு உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அந்நிய நாட்டு நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அந்நிய நாட்டு கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது. இது குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்த செய்தி. ஆகவே, நம் ஜெய் ஆலமரத்தை நிழல் படமாக எடுத்து வைத்திருப்பதுபோல், நீங்களும் உங்களுக்கு பிடித்தவற்றை நிழல் படம் ஆக்க இதுவே தக்க தருணம். எதிர் வரும் காலங்களில் அவையும் மறைந்து விடும் என்பது திண்ணம்.

6/22/2008

எதிர்மறைச்சக்தி உணவு

நான் டொரோன்டோல இருந்தப்ப 'அர்னாப் முகர்ஜி'ங்கற வங்காள நண்பனோட, பலதையும் பேசிட்டு இருப்பேன். இன்னும் அவன் அங்கதான் இருக்கான். அப்ப தெரிஞ்சிகிட்ட விசயந்தான் எதிர்மறைச்சக்தி உணவுகள்(catabolic foods).

இந்த உணவு வகைகள் செரிமாணத்துக்கு தேவையான சக்திய விட கொறஞ்ச அளவுதான் சக்தியக் குடுக்குமாம். இது நல்லா இருக்கு இல்லீங்க?! ஆமாங்க, இந்த உணவு வகைகள் எடயக் குறைக்காட்டி கூட பரவாயில்ல, கூட்டாம இருந்தாலே நல்லது தானே! நேர்மறைச்சக்தி உணவுகள, anabolic foodsனு ஆங்கிலத்துல சொல்லுறாங்க.

மேலதிக விபரங்களுக்கு, இங்க உங்க கையூக்கி(mouse)யால ஒரு கிள்ளு கிள்ளுங்க.

ஆறு சுவைகள்

(இது சுட்ட படைப்பு! அதுவா முக்கியம் நமக்கு, படீங்க மேல....)

ஆறு சுவைகள் பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் இப்ப பாக்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர்.

இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

சமையல் அறையில்.......

சின்ன வெங்காயம்

முதல்ல, சின்ன வெங்காயத்தை அதிகமா சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும்.

தேன்

இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க வைத்தியருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல, நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும். அதத்தான் மனுசி சொல்றாங்க, தேன கடவுளுக்கு படச்சா ஆயுள் கூடும்னு. (அவங்களுக்கு கடவுள் நாம தான?!)


தக்காளி

பழங்களில், நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல 'லைஸோபீன்' என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதோட, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.

முட்டைகோஸ்

காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது.


மஞ்சள்

மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா, மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அப்புறம், இது ஒரு கிருமி நாசினி.

பூண்டு

அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா. வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். விடுமுறை நாட்கள்ள மட்டும் தான் இது உகந்தது. வாய் மணம் அடுத்தவங்கள படுத்தும். அதான்!

அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா, கடலில் கிடைக்கும் மீனில், அதிக ஒமேகா 3 சத்துக்கள் இருக்குது. நாம சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும். ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!

பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை, வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும். பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும். அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கு. மேலும் வாயு தொந்தரவை குறைக்கும்.


எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-2

நெஞ்சுச்சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

6/08/2008

எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்

நாவறட்சி,வாய் நாற்றம் நீங்க:காட்டு மல்லிகை சமூலத்தை கொண்டு வந்து சீந்தல் மதுரம் சமயிடை சேர்த்து, கசாயம் செய்து குடித்து வர நாவறட்சி நீங்கும்.

வாந்தி விக்கலுக்கு:கிராம்பு ஏலம் சீரகம் வெதுப்பி, மயிலிரகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட வாந்தி விக்கல் நீங்கும்.

சொரி சிரங்கு தினவு நீங்க:தாழம்பூ வேர் எடுத்து சக்கரை சேர்த்து, சர்பத்து போல் பதமாய் கலந்து சாப்பிட்டு வர, சொரி சிரங்கு தினவு நீங்கும்.

பல்,ஈறு வலுவடைய:நன்னாரி வேரில் கசாயம் செய்து தினமும் கொப்பளித்து வர, பல்ஈறு ஆரோக்கியமாக இருக்கும்.

மயிர் வளர:சாடமஞ்சியை எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகி வந்தால், மயிர் வளரும். மயிரும் வாசனை உள்ளதாக இருக்கும்.

பசி உண்டாக: கொழிஞ்சி வேர் கசாயம் வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பசி உடனே உண்டாகும்.

பித்த வாயுவுக்கு:சிவதை வேர், திரிகடுகு சரியிடை கொண்டு சூரணீத்து சக்கரை சமன் கலந்து திருகடி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் வாயுவு நீங்கும்.

கண் நோய் நீங்க:நந்தியாவட்டை பூவை நன்கு பிழிந்து கண்ணில் விட்டு வந்தால், கண்காசம் படலம் நீங்கும்.

இருமலுக்கு:இஞ்சி சாறும் மாதுளைப்பூ சாறும் சமனாய் கலந்து ஒரு வேளைக்கு அரிக்கால் படி வீதம் குடித்து வர இருமல் நீங்கும்.


இதுவுமது (மேற்படி நோய்க்கு):இஞ்சிச்சாறும் ஈரவெங்காயச்சாறும் எலுமிச்சைச்சாறும் சமனாகக் கலந்து குடிக்க இருமல் நீங்கும்.

கட்டி கரைய:ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்துக்கட்ட கட்டி கரையும். பெருத்த கட்டிகள் உடைந்து வற்றி விடும்.


(இனியும் நிறைய இருக்கு.நேரம் கிடைக்கிற பொழுது பதியனும்)