12/16/2025

பேரவை விழா 2025 - மாநாட்டு மேடை நிரல் மேலாண்மை

 

மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பது திட்ட மேலாண்மை, மக்கள் தொடர்பு, நிகழ்நேர செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியப் பணியாகும். இந்த நபர், நிகழ்ச்சி உள்ளடக்கத்தையும் அட்டவணையையும் கவனிக்கும் நிரல் மேலாளரின் பொறுப்புகளையும், அதே சமயம் மேடையின் தொழில்நுட்பச் செயல்பாட்டைப் பிழையின்றி இயக்கும் ஒலி ஒளி நுட்ப மேலாளரின் கடமைகளையும் ஒருங்கிணைப்பவர் ஆவார்.

மாநாட்டுக்கு முன்னதான பணிகள்

  • பங்களிப்பாளர்கள், பேச்சாளர்கள், வீடியோ இடைவேளைகள், மேடை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அட்டவணையையும் இறுதி செய்தல்.
  • அனைத்துப் பேச்சாளர்கள், பங்களிப்பாளர்களிடம் அவர்களின் ஸ்லைடுகள், வீடியோக்கள், இசைக் குறிப்புகளை முன்கூட்டியே சேகரித்தல்.
  • ஒளி, ஒலி, வீடியோ தொடக்கம், பேச்சாளர் நுழைவு போன்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் குறிப்பையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிப் பட்டியல்  ஆவணத்தை எழுதுதல்.
  • உள்ளடக்கம் மற்றும் பேச்சாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு (மைக், மானிட்டர்கள், லைட்டிங்) வழிகாட்டியை வழங்குதல்.
  • பேச்சாளர்கள், கலைஞர்கள் மற்றும் குழுவினர் வந்து செல்லும் பாதைகள் தெளிவாக இருக்க, மேடைக்குப் பின்னால் உள்ள பகுதிகளை வடிவமைத்தல்.

மாநாட்டுத் தருணம்

  • அடுத்த பேச்சாளர் சரியான நேரத்தில், மைக்கைப் பொருத்திக்கொண்டு, மேடைக்குத் தயாராகக் காத்திருப்பதை உறுதி செய்தல்.
  • நிகழ்ச்சிப் பட்டியலின் நேரத்தையும், நிகழ்நேர நேரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல். ஒரு பேச்சாளர் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சியின் நேர அட்டவணையைக் காக்க, அடுத்த பகுதியின் நேரத்தைக் குறைக்க தயாரிப்பாளருடன் ஒருங்கிணைத்தல்.
  • விருதுவழங்கல், பாராட்டுரைகள், சிற்றுரைகள், நெறியுரைகள் முதலானவற்றை நேரத்துக்குத் தக்கபடி செயல்படுத்துதல்.
  • ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாகக் குழுவினருக்குத் தீர்வை விரைவாகத் தெரிவித்து, பார்வையாளர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் பார்த்துக் கொள்வது.
இப்படியாக, மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பவர், தொழில்நுட்பத் துல்லியத்துடனும், சரியான நேரத்துடனும், அமைதியான அணுகுமுறையுடனும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் ஆவதனை உறுதிசெய்யும் செயல்பாட்டு முதுகெலும்பாக ச் செயல்படுவர்.

நிகழ்ச்சிக்குழு என்பது, விருந்திநர்களையும் இடம் பெறும் நிகழ்ச்சிகளையும் தெரிவு செய்யும் குழு. நிகழ்ச்சிநிரல் அமைப்புக்குழு என்பது, மாநாட்டின் முக்கிய அரங்கில் இடம் பெறும் நிகழ்ச்சிகளுக்கான நிரல்வகுக்கும் குழு. மாநாட்டு மேடை நிரல் மேலாளர் குழு என்பது, நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதோடு மேடையை நிர்வகிப்பவர் அல்லது மேலாண்மை செய்பவர்கள் குழு.

2025 பேரவை மாநாட்டினைப் பொறுத்தமட்டிலும், நாம் நிகழ்ச்சிக்குழுத் துணைத்தலைவர் எனப் பெயரளவில் இருந்தாலும் கூட, ஒன்றமுடியாமல், ஒரு கட்டத்தில் குழுவிலிருந்தேவும் வெளியேறிவிட்டோம். நிகழ்ச்சி நிரல்வகுப்புப் பணிகளைச் செய்து வந்தோம். கடைசி கட்டத்தில் நம் ஆன்மாவுக்கு எதிராக நம்மால் செயற்பட முடியவில்லை. 2025 ஜூலை 1ஆம் நாள் நண்பகல்வாக்கில், தார்மீக எதிர்ப்பு களுடன் நம் பணிகளை முடித்துக் கொண்டோம். ஆதிக்க, அதிகார சக்திகள் நிரலைக் காவு கொண்டு விட்டன. தோராயமாக நம்மால் வகுக்கப்பட்டிருந்த 85% நிகழ்ச்சிகள் செம்மையாகவே இடம் பெற்றன. ஆனால், இடைச்செருகலாக என்னவெல்லாம் புகுத்தப்பட்டனவோ, ஒன்றுவிடாமல் அத்தனையும் நேரக்கடைபிடிப்பில் தோற்றுப் போயின; நிலைகுலைந்தும் போயின. மக்கள் இரசிக்கவில்லை.  இன்னின்னது எங்கள் தேவைகள்; செய்து தாருங்களெனச் சொல்லி இருந்தால், நாமே செம்மையாகச் செய்தும் கொடுத்திருப்போம். அதிகாரத்தை நம்பினார்கள் போலும். Honest work may be quiet, but it’s undefeated.

இத்தனைக்கும் பிறகும், ஜூலை மூன்றாம் நாள், மாநாட்டுக்கும் முதல்நாள், நண்பர்களுடன் இணைந்து மேடை நிர்வாகத்தைச் செம்மையாகக் கையாள்வது குறித்தான கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆலோசனைகள் பெறப்பட்டன. விருதுகளை இனங்காணுதல், தனித்தமிழில் அவ்விருதுகளுக்குப் பெயர் சூட்டுதல், பட்டயம் உருவாக்குதல் முதலான பணிகளிலும் நாம் ஈடுபட்டிருந்தோம். தொகுப்பாளர்களுக்கான சிற்றுரைகளையும் கட்டமைத்திருந்தோம். காலை ஆறரை மணிக்கெல்லாம் மாநாட்டு அரங்குக்கு முதல் ஆளாகச் சென்றிருந்தோம். மாநாட்டு மேடை நிரல் மேலாளர் பணியை நாம் ஆற்றுகின்ற வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கவில்லை. மாநாட்டிலிருந்து கிளம்பும் தருவாயில், கடந்தகாலத்தில் நம்மால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைவரொருவர் சொன்னார், “இது பேரவைவிழா இல்லை. பழமைபேசியின் பேரவை விழா”. நாம் சொன்னோம், “ மெய்யாலுமே ஊர்கூடித் தேரிழுத்த சாமான்ய மக்களின் வரலாற்றுப் பெருவிழா

𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞𝐬 𝐡𝐚𝐫𝐦𝐨𝐧𝐲, 𝐢𝐧𝐬𝐢𝐝𝐞 𝐚𝐧𝐝 𝐨𝐮𝐭.

-பழமைபேசி.

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ConventionStageProgramManager


No comments: