12/14/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு



உழைப்புக்கு நிகர் எவருமில்லை. துணிந்தவனின் சாதனைகளுக்குத் தடைகள் வந்திடினும் இலக்குகளில் மாற்றமிருப்பதில்லை . 2009ஆம் ஆண்டு துவக்கம், 2017ஆம் ஆண்டு வரையிலான நிகழ்ச்சி நிரல்கள், ஒவ்வோர் ஆண்டும் நம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். காரணம், இரண்டு நாள் நிகழ்வுகளுக்கான தொகுப்புரைகள் எழுதுவது நாம்தான். மணித்துளிக்கு மணித்துளி, நேர விரயம் ஏற்பட்டு விடக் கூடாதெனும் அக்கறையும் ஈடுபாடும் மேலோங்கி இருக்கும். அந்தப் பின்னணியில், தகவல்தொடர்பு , வட அமெரிக்க வாகை சூடி , இவற்றுடன் நாம் ஈடுபட்டுக் கொண்டது நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பு .

நாம் பார்த்த பணிகளில், மிகவும் நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துச் செய்ததில் அதிக உழைப்பினை எடுத்துக் கொண்டது இப்பணிதாம். முதல்நாள் ~35 நிகழ்ச்சிகள், இரண்டாம் நாள் ~30 நிகழ்ச்சிகள், இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பங்களிப்பாளர்களின் முகம் கோணாமல், அன்பையும் அக்கறையையும் குழைத்துக் குழைத்து, அவர்களின் வேண்டுதலுக்கெல்லாம் “no" சொல்லாமல், அதேநேரம் நிரலும் நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, காலை பதினொரு மணிக்கு இன்ன நிகழ்ச்சி என்றால், அதில் பங்கேற்கும் இந்த இன்னின்னார், அதே நேரத்தின் இலக்கிய இணையரங்கு நெறியாளர்கள் எனத் தகவல் வரும். தீர்வு கண்டாக வேண்டும். இன்ன நிகழ்ச்சிக்கு 40 மணித்துளிகள் என்றால், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்களென்பார். ஐந்து பத்து மணித்துளிகள் கூட்டிக் கொடுத்து அவரையும் அவர்தம் குழுவினரையும் மகிழ்ச்சியாக, அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். 65 நிகழ்ச்சிகள், அதன் பங்களிப்பாளர்களின் தேவைகள், நேரம், இணையரங்குகள், போட்டிகள் இவற்றையெல்லாம் அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து அவதானித்துச் செல்வதின் வழிதான் இது ஈடேறும் . அதிகார சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் இவை குறித்துக் கவலையிராது. தேர்ந்த களப்பணியாளர்களுக்கு மட்டுமே புரியக் கூடியன இவை.

பொதுவாக இரு நாள் விழாக்களின் நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு எப்படி இருத்தல் வேண்டும்?

1. ⚡ ஆற்றல் மேலாண்மை, வேகக்கட்டுப்பாடு (Energy Management and Pacing)

மூன்று நாள்களிலும் எழுச்சி குறையாமல், தளவு, தொய்வின்றி, வருகையாளர்களின் உற்சாகம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால், பங்களிப்பாளர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருக்கவிடக் கூடாது.

நாள் 1: வலுவாகத் தொடங்கி உத்வேகத்தைக் கட்டியெழுப்புதல்

துவக்கம் : அதிக ஆற்றல் கொண்ட, ஊக்கமளிக்கும், அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுடன்(எ.கா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு, போட்டி) தொடங்கி, ஒரு வலுவான தொனியை அமைத்து, பங்கேற்பாளர்களின் பங்களிப்பை  உறுதிப்படுத்த வேண்டும்.

உச்ச நேரம் : பங்கேற்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் பிற்பகலுக்கு முன்னதான நேரத்தில், அதிக கவனம் தேவைப்படும் அல்லது மிகவும் முக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்ட நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முடிவு : முதல் நாளை ஒரு முக்கியமான நிகழ்ச்சி, சமூகச் செயல்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூக்கலான நிகழ்ச்சியுடன் முடிக்க வேண்டும். இது ஒரு வெகுமதியாகவும், உறவுகளை உருவாக்க உதவுவதாகவும், இரண்டாம் நாள் தவறவிடக் கூடாதெனும் விரைவுத் தொனியில் திரும்புவதற்கு ஒரு வலுவான காரணமாகவும் இருக்கும்.

நாள் 2: ஈடுபாட்டைத் தக்கவைத்து, சிறப்பாக முடித்தல்

காலை மனமாற்றம் : முதல் நாள் இரவு நிகழ்வினால் ஒருவேளை தாமதமான தொடக்கம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகத் தொழில்நுட்பம் நிறைந்த அல்லது சிக்கலான அமர்வுகளை அதிகாலையில் வைக்கக் கூடாது. மக்களை எளிதாக நிகழ்வுக்குள் கொண்டுவர, சற்றே லேசான, அதிகமாக ஊடாடக் கூடிய நறுக்கான நிகழ்வுடன் தொடங்கலாம்.

மதியச் சோர்வு : இரண்டாம் நாள் பிற்பகலுக்கு முன்னதான நேரம் சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதி. இங்கு அதிகமாக ஊடாடும் வடிவங்களை (குழு விவாதங்கள், பார்வையாளர்களின் கேள்விகள், நேரடிப் பயிலரங்கங்கள், விநாடி வினா, பரிசளிப்புகள்) நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.

நிறைவு : நிகழ்வைச் சக்திவாய்ந்த, மறக்கமுடியாத நிறைவு அமர்வுடன் (எ.கா:, ஒரு தொலைநோக்குடைய அமெரிக்க வாழ்வியலை மேம்படுத்தும் நிகழ்வு, பேச்சாளர், ஒரு பெரிய அறிவிப்பு, தெளிவான அழைப்பு அல்லது அறைகூவல்) முடிக்க வேண்டும்; கூடவே எப்போதும் போலத் துள்ளலைக் கட்டியெழுப்புகின்ற மெல்லிசை நிகழ்ச்சி. இது பங்கேற்பாளர்கள் விழா முடிந்த விட்டதேயெனும் ஏக்கத்துடன் வீடு திரும்புவதைக் கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.

2. கட்டமைப்பு நுணுக்கப்பாடுகள் (Structural & Logistical nuances)

  • அமர்வுகளுக்கு/அறைகளுக்கு இடையில் பங்கேற்பாளர்கள் செல்ல, A/V அமைப்பு மாற்றங்கள், இடத்தைப் புதுப்பிக்கத் தேவைப்படும் நேரம்.
  • நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்கள், போட்டிகள், இணையரங்குகள், உணவு இடைவேளை, தொழில்நுட்பத் தேவைகள், இவையாவும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்தல்.
  • முக்கியப் பேச்சாளர்களை முன்பே சரிபார்த்து, A/V சோதனையை அவர்களின் நேரத்திற்கு முன்பே முடித்தல். சிலரை, அவர்தம் பின்னணியைக் கொண்டு, அதற்கேற்ற நேரத்தில் நேரம் ஒதுக்குதல் வேண்டும்.
  • தொய்வு நேரத்தில், இடைவெளி நேரத்தில், மேடையைப் பயன்படுத்திக் கொள்ள மாற்று ஏற்பாடுகள் எப்போதும் கைவசம் இருத்தல் வேண்டும்.

இரண்டு நாள் நிகழ்வுக்கான அட்டவணையைப் பொறுத்தவரை, மிக முக்கியமான நுணுக்கம் என்னவென்றால்,  இரவு நேர இடைவெளியுடன் கூடிய இரண்டு ஓட்டப் பந்தயங்களாக (two sprints with a deliberate overnight pause) நினைத்து, ஓட்டத்தின் வீச்சு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

( படம் : Truth, Transparency & Trust என்பதற்கொப்ப, நிரலைப் பலரும், எந்த நேரத்திலும் பார்க்கும்படியாக, செயற்குழு, வழிகாட்டுதல்க்குழு, இணையரங்குக்குழு, நிகழ்ச்சிநிரல்க்குழு, எனக் குறைந்தது 75+ பேருடன் பகிர்ந்துகொண்டு,  நாள்தோறும், நிகழ்ச்சி நிரலை ஒலி ஒளிக்குழுவினருடன் இணைந்து பேசிப் பேசிக் கட்டமைத்தன் சான்று)

𝐖𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐟𝐞𝐞𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬, 𝐨𝐮𝐫 𝐢𝐧𝐯𝐨𝐥𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐦𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐢𝐞𝐬.

(தொடரும்..)


-பழமைபேசி.

#FeTNA2025
#ProgramLineUp
#Empathy

No comments: