8/30/2022

விபூதி அடிப்பவர்களைக் கண்டு கொள்வது எப்படி?

Rule 1: Con Artists Like To Blend In

Rule 2: Con Artists Dress For Success

Rule 3: Con Artists Often Push Poorly Understood or Little-Known Products

Rule 4: Con Artists Bring Out The Worst In You

Rule 5: Con Artists Are Fair Weather Friends

Rule 6: For Every Silver Lining, There Is A Cloud

Rule 7: Don’t be afraid to “sleep on it.”

source: https://www.nasaa.org/2700/how-to-spot-a-con-artist/

விதி 1

Often, con artists like to blend in with others in your group whether that group be political, community (such as the local senior center), religious or other. They quickly get to know a lot of people in the group so they can count on this common bond to spread the word about their questionable investments and reel in unsuspecting investors. தனிமனிதர்களோடு அவ்வளவாகத் தொடர்பில் இருக்க மாட்டார்கள். மாறாக, குழுக்கள், பொதுவெளியில் இருக்கும் சிலரைக் கவர்ந்து அவர்கள் மூலமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வர்.

விதி 2

They work very hard to come across as smooth, professional and successful. Con artists may dress like they are wealthy and work out of impressive looking offices. தம் கடுமையான உழைப்பின்வழி திறமையாளரைப் போலவே கட்டமைத்துக் கொள்வர். அறிவார்ந்தவராக, செல்வத்தில் திளைப்பவராக, வல்லுநராக, உயர் அலுவலராக, பேராசிரியராக, சமூக சேவகராக, நன்கு நேரிய வழியில் உடுப்புகளை அணிந்து கொண்டு தோற்றம் கொள்வர். கோட் சூட் என்பது உக்கிர வெயிலிலும் அணிபவராக இருப்பர்.

விதி 3

பொதுமக்களின் புழக்கத்தில் இல்லாததும் அறியப்படாததுமான பொருட்களை அறிமுகப்படுத்திப் பேசி, மக்களின் மனத்தை கவர்வதின்வழி தம் பொருட்கள் அல்லது சேவையை விற்பவராக இருப்பார். Feeding them too many details about false experiences in order to distract their victims from the obvious fact that the person doesn't know them at all. தேவைக்கும் அதிகமான தகவல்களைத் திணிப்பதின்வழி, வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டித் திசை திருப்பி ஆசைகாட்டி மோசம் செய்பவர்களாக இருப்பர்.

விதி 4

Skilled con artists can bring out your worst traits, particularly greed, fear, and insecurity. Con artists try to make you feel inadequate if you don’t believe them or ask too many questions. வாடிக்கையாளர்களின் உணர்வுகளைக் கிளறிக் கிளறிக் கொந்தளிப்பிலேயே வைத்திருப்பர். பெருமை பேசிக் கொண்டே தாழ்வுநிலை, எதிரிகள் என்பதாக வாடிக்கையாளர்களைத் தம் பிடிக்குள்ளேயே வைத்திருப்பர். பிடிக்கு வராதோரை, வசைபாடி, அவமானப்படுத்தி, திறமையைக் குறைத்துப் பேசி அல்லது நிராகரித்து விடுவர்.

விதி 5

Con artists are very friendly. They take a personal interest in you out of the blue. They call back when they promised they would. Each time, they tell you even more good things. வாடிக்கையாளர்களின்பால் அதீதப் பற்றுக் கொள்பவராக இருப்பார். உரிமைகள், நலம், இலாபம் என்பதாகக் கட்டமைத்துக் கொள்வார். You may feel you’re being pressured into investing. உடன் இருப்பவர்கள் அவரைப் புகழப் புகழ, நீங்களும் உங்கள் நேரம், பணம் முதலானவற்றைக் கொடுத்தால்தான் என்னயெனும் நிலைக்கு ஆட்படுவீர்கள். Peer Pressure!

விதி 6

Con artists usually are not very good at answering important questions. முக்கியமான வினாக்கள் மேலெழுந்தால், இசை, விளையாட்டு, சிரிப்பு, நாட்டுப்பற்று இப்படி ஏதாகிலும் ஒன்றைக் கூட்டத்தினரில் பரவலாக விரும்புமொன்றை நிகழ்த்திக் காண்பிப்பவராக இருப்பார்.

விதி 7

Many con artists rely on a big, grandiose background story. Others don’t share much of anything at all so that they don’t have to worry about keeping their lies straight. தனிப்பட்ட தகவல்கள் கிடைக்காவண்ணம் இருந்து கொள்வர். Never invest in anything based on the enthusiasm or charisma. கவர்ச்சி, எழுச்சியூட்டம், உணர்வூட்டம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

8/11/2022

நதியெங்கே செல்கின்றது? கடலைத் தேடி...


நமக்கெல்லாம் தெரிந்ததுதான்

வளைந்து நெளிந்து

கொந்தளிப்புகளினூடாக 

பதற்றத்துடன் பாய்கின்றது நதி

திரும்பிப் பார்க்கின்றது

வந்த பாதையை

மலை உச்சிகளை

தான்வீழ்ந்த பள்ளத்தாக்குகளை

காடுகளை மலையோர ஊர்களை

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு அமிழ்ந்துவிடப்போகின்றோம்

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு மூழ்கிவிடப்போகின்றது

வேறுவழியில்லை நதிக்கு வேறுவழியில்லை

நதி திரும்பிச் சென்றுவிட முடியாது

எவரும் திரும்பிச் சென்றுவிட முடியாது

துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

கடலுக்குள் நுழைவதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

அப்போதுதான் அச்சம் விலகியோடும்

அப்போதுதான் நதிக்குத் தெரியவரும்

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலாகவே ஆவதுதான் அது!!


[ஜமுனா மாப்ள அவர்கள், ’கடலைத் தேடி ஓடும் நதி’ என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். யோசிக்கத் தலைப்பட்ட போது எப்போதோ படித்த கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘திரும்பச் செல்லமுடியாது நதிக்கு’ எனும் படிமக் கவிதைதான் நினைவுக்கு வந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விருப்பமானவை இருக்கும். தம் வாழ்வில் இன்னின்னதைச் செய்தால் மனம் நிறைவு கொள்ளுமென்கின்ற இலக்குகள் இருக்கும். அவற்றை எப்படி அடையப் போகின்றோமென எண்ணும் போது, அச்சமாக இருக்கும். வாழ்க்கைப் பயணம் என்பது நதியைப் போல. எப்படியாக மடிந்தோமென்பதல்ல; எப்படியாக வாழ்ந்தோமென்பதுதானே? எதிர்காலத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்! சியர்ஸ்!!]

8/10/2022

வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம்

வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை.

சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது.

பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால், அவரின் வாழ்க்கைத் தரம் சிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். வாழ்வுநிலை மேம்பட்டதாக இருந்தால், வாழ்க்கைத்தரமும் சிறப்பாகத்தானே அமைந்தாக வேண்டும்? உடல்நலம், இன்பம் இவற்றுக்கெல்லாம் வாழ்வுநிலைதானே அடிப்படை? ஆமாம்.

எனினும், வசதிகள் இருந்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கைத்தரம் அமைந்து விடாது. நீர்நிலை இருந்தால்தான் நீச்சல் அடிக்கமுடியும். ஆனால் நீர்நிலை இருப்பதாலேயே ஒருவர் நீச்சல்காரர் ஆகிவிட முடியாது. அதைப்போன்றதுதான் இவையிரண்டும்.

கடலளவு நீர் இருந்தால்தான் நீச்சல்காரர் ஆக முடியுமென்பதும் இல்லை. போதிய அளவுக்கான நீர்நிலை இருக்க, அவர் நீச்சல் பழகியிருக்க, அவர் நீச்சல்காரராக உருவெடுப்பார். அதே போன்றதுதான் வாழ்க்கைத்தரம் என்பதும். போதிய அளவு, தேவைப்படும் அளவுக்கான வாழ்வுநிலை அமையப் பெற்று, பண்புநலம், உடல்நலம், பயிற்சி, தன்னுமை(லிபர்ட்டி), இலக்கியம், கலை, சிந்தனையாற்றல், கேளிக்கை முதலானவையும் அமையப் பெறும் போது, அவருக்கான வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக அமையும்.

”The quality of life is more important than life itself. Quality of life actually begins at home - it's in your street, around your community.” -Charles Kennedy

வாழ்வுநிலையெனும் வர்க்கபேதத்தில் புதையுண்டு விடாமல், வாழ்க்கைத்தரம் நோக்கிய பயணம் இன்புறுகவே!

8/06/2022

பன்னாட்டு விமானப்பயணம்

பன்னாட்டு விமானப்பயணம் என்பது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. என்ன காரணம்?

விமானப்போக்குவரத்து என்பது கிட்டத்தட்ட 180 துறைகளை உள்ளடக்கியது. ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் இன்னொரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் தொடர்புண்டு. விமானத்தை குத்தகைக்கு விடும் நிறுவனம் வேறு; விமானப் பயணிகளின் கட்டணங்களை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. விமானப் பணியாளர்களை நிர்வகிக்கும் துறை வேறு. விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. சரக்குகளைக் கையாளும் துறை வேறு. அந்தத் துறைக்குள்ளாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வேறு. விமானநிலைய ஓடுதளங்களைப் பராமரிக்கும் நிறுவனம் வேறு. கட்டுப்பாட்டு அறைகளைக் கண்காணிப்பது வேறு துறை. ஒரு பயணம் நல்லபடியாக நிகழ, இந்தத்துறைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இயைந்து செயற்பட்டாக வேண்டும். நிற்க.

கோவிட் தொற்றுக்காலம் வருகின்றது. விமானங்கள் பறப்பதினின்று மட்டுப்படுகின்றன. வேலை இழப்புச் செய்யக் கூடாதெனச் சொல்லி, விமான நிறுவனங்களுக்கு சலுகைத் தொகை கொடுக்கப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு மாதாமாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, ’பெருந்தொகை கொடுக்கப்பட்ட முன்கூட்டிய பணி ஓய்வு’ என்பதைக் கையிலெடுக்கின்றன நிறுவனங்கள். நிறையப் பேர் பணி ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தொற்று சரியாகி தளர்வுகள் செயற்பாட்டுக்கு வந்தவுடனேயே ஒரே நேரத்தில் பயணிகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். மளமளவென விமானங்கள், டிக்கெட்டுகள் என பயணங்கள் துவங்குகின்றன. ஆனால் களத்தில், பணிகளைத் துவக்குவதில் சிக்கல்கள். புதிய பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. போதிய பைலட்டுகள் இல்லை. வேலையற்றுக் கிடந்த தளபாடங்களை மீளக்கட்டமைத்துச் செயற்பாட்டுக் கொண்டு வருவதில் தாமதம். துறைகளுக்கும் துறைகளுக்குமான ஒருங்கிணைப்பில் தொய்வு. விளைவு, விமானங்கள் கேன்சல் ஆகின்றன. போதாக்குறைக்கு, கடுமையான வெப்பம், புயல் முதலான காரணங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஒருநாளைக்கு அமெரிக்காவில் மட்டும் 1500 விமானங்கள் வரை கேன்சல் ஆகின்றன. 1800 விமானங்கள் வரை காலதாமதம் ஆகின்றன. நாம் என்ன செய்யலாம்?

1. கேளிக்கை, பொழுதுபோக்கு என்பதற்கான பயணங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம்.

2. நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுமையுடன் தன் பயணத்திட்டத்தை எதிர்கொள்தல் நலம்.

3. போதிய தின்பண்டங்களைக் கைவசம் கொண்டு செல்தல் நலம். மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களும்.

4. அதிகாலைப் பயணங்கள் குறைவான தடங்கலுக்கு உரித்தானது. ஆகவே அப்படியானவற்றைத் தெரிவு செய்தல் நலம்.

5. ஒருவிமானத்துக்கும் இன்னொருவிமானத்துக்குமான கனெக்சன் இருக்குமாயின் போதிய இடைவெளியுடன் பயணத்தை அமைத்துக் கொள்வது உசிதம்.

6.சரக்குப் பெட்டிகள் வந்து சேர்வதற்கு காலதாமதமாகலாம். ஆகவே அதற்கேற்றபடி தயார்படுத்திக் கொள்தல் நலம். ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானவற்றை கேரி-ஆன் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி கிடைக்காவிடில் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. டிக்கெட்டுகளை உரிய கிரிடிட் கார்டில் வாங்குவது நலம். அதில் இன்சூரன்சு இருக்கும். மேலும் கூடுதல் கட்டணத்துடன், இன்சூர் செய்து கொள்வதும் மன அமைதியைக் கொடுக்கும். Lost luggage insurance reimburses the value of what you lost, assuming you can document what’s inside (pro tip: take a picture of the interior contents before you leave home). 

7. செல்ஃபோன் சார்ஜ் செய்வதற்கான உபகரணங்கள் அவசியம் கைவசம் இருத்தல் நன்று.

8. செவ்வாய், புதன், டிராஃபிக் குறைவான நாட்கள்.

பணம் இரண்டாவது. பாதுகாப்பு, உடல்நலம், மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வாழ்த்துகள்.

7/31/2022

உறவுச்சிறகுகளால் பறந்திருப்போம்

 


கோவை விமானநிலையத்தில் விமானம் தரையிலிருந்து எழும்பும் அந்த விநாடியில்தான் பகிர்ந்தேன். சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதைத் துணுக்கினை எழுதிப் பகிர்ந்திருந்தேன். அது இப்படியாக முடியும், 

சென்றமுறை வந்திருந்தேன்

சிலபலரை இழந்திருந்தேன்

இம்முறையும் வந்திருக்கின்றேன்

சிலபலரை இழந்திருக்கின்றேன்

அடுத்தமுறை?

வருவேனே தெரியாது

உதிரும் சிறகுகள்

இருக்கும்வரையிலும்

பறந்திருப்போம் உறவுச்சிறகுகளால்!

இன்று சரியாக இருபதாவது நாள். பலரை இழந்திருக்கின்றேன். இழப்புகளின் வேகம் கூடிக்கொண்டே இருப்பதாய் உணர்கின்றேன். ஆண்டுக்கொருமுறை ஊருக்குச் செல்பவன், இனி ஆறுமாதங்களுக்கொருமுறை சென்று வந்தாலென்ன என யோசிக்கத் தலைப்படுகின்றேன். தேடித்தேடி மக்களைச் சந்திக்க விரும்புகின்றேன்.

இந்திராணி அக்கா. நண்பர் ஆரூரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் ‘ஊர்ப்பழமை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. பலரது பாராட்டுதலுக்கும் ஆட்பட்ட நூல். வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைக்க வேண்டுமெனக் கேட்டார்கள். சட்டென நினைவுக்கு வந்தவர்கள் மணிவாத்தியாரும் இந்திராணி அக்காவும்தான். முதன்முதலின் என் பெயரை எழுதிப் பழக்கியவர் மணி வாத்தியார். முதலாம் வகுப்பில் சேர்த்துப் பதிந்தவரும் வா.வேலூர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அவர்தாம். இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலப்பாடம். அப்போதெல்லாம் ஆங்கிலம் என்பது மூன்றாம் வகுப்புக்குப் பின்னர்தாம் பாடத்திட்டத்திலேயே வரும். ஆனால் இவர் இரண்டாம் வகுப்பிலேயே எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். அதற்கும் மேற்பட்டு ஊரார் அனைவருக்கும் குடும்ப நண்பர். இளைஞர். திருமணமாகாதவர். இவர்மேல் மோகம் கொள்ளாத இளம்பெண்கள் இருந்திருக்க முடியாது. இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும். ஆனால் அதுதான் அன்றைய நாட்டுப்புற மனநிலை. காரணம், புற அழகு மட்டுமேயல்ல. கலகலவெனப் பேசுவார். சிரிப்பார். யாரும் அணுகக்கூடிய வகையிலே இருப்பார். ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணம். யார் மணமகள்? அவர் எப்படி இருப்பார்? சக மாணவர்களுக்குள் பரபரப்பு. என்ன ஆச்சர்யம்? அவரே எங்களுக்கு அறிவியல் ஆசிரியராகவும் வந்தார். தோழியாக, அக்காவாகப் பழகினார். அதற்குப் பின் பல ஊர்கள், இடங்கள், நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்திருந்தாலும் கூட, அதே மாறாப்பற்றுடன் வாழ்வில் இடம் பெற்றிருந்தார். இன்று இழந்திருக்கின்றேன். பலமுறை அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கின்றேன். விழாக்களுக்கு வந்திருக்கின்றார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

அலெக்ஸ். நண்பர். அன்றாடமும் இணையத்தினூடாக அளவளாவுவோம். மாதமொருமுறையாவது அழைத்துப் பேசிக் கொள்வோம். பத்து நிமிடங்களாவது பேசிவிடுங்கள். அந்த நினைவிலேயே நான் அடுத்த ஒரு மாதம் முழுதும் ஓட்டிவிடுவேனென்று மனம் திறந்து சொல்வார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். வியப்பில் மகிழ்ந்து வரவேற்றார், ‘இவன் எப்படி நேரில் இங்கே வந்திருக்கின்றான்?’ என நினைத்திருக்க வேண்டும். பரபரத்துக் கிடந்தார். அருகில் இருப்பவர்களிடம், ‘பழமைபேசிக்கு உடனே காஃபி வாங்கி வந்து கொடுங்கள்’ என்றார். எல்லாமுமே சைகை மொழியில்தாம். பார்க்க வந்த மருமகளிடம், ‘நீங்கள் யார்? என் மருமகளைப் பார்த்தால் வரச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கின்றார். அந்த அளவுக்கு நினைவு தப்பி இருந்தவர், அழைத்துச் சென்ற மருத்துவர் சோமு அவர்களையும் என்னையும் கண்டு, முழு உணர்வும் பெற்று நடந்து செல்ல வேண்டுமென்கின்றார். புத்துயிர் பெற்றவரானார். அடுத்த வாரத்திலேயே விடை பெற்றுக் கொண்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

லெட்சுமண வாத்தியார். வா.வேலூர்த் தலைவாசல் பரபரத்துக் கிடக்கும். பெரிய ஊர். அண்மையில் இருக்கும் வாகத்தொழுவு, சங்கமநாயக்கன்பாளையம், மொகானூர், சலவநாயக்கன்பட்டி, சலவநாயக்கன்பட்டிப் புதூர், வீதம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி எனப் பல ஊர்களுக்கும் இதுதான் பிரதானம். கரண்ட்பில் கட்ட, பள்ளிகளுக்கு வர, சந்தைக்கு வர, ஓட்டுப் போட, பஞ்சாயத்து ஆபிசுக்கு வர, மாட்டாஸ்பத்திருக்கு வர என எல்லாவற்றுக்கும் இங்குதான் வந்தாக வேண்டும். அப்படியான தலைவாசலில் ஓங்கி வளர்ந்த அரசமரங்கள் பல உண்டு. அவற்றின் நிழலிலே, நிழல்படிந்த திடலிலே எப்போதும் குறைந்தது ஐம்பது சிறார்களாவது திடலிலே விளையாடிக் கொண்டிருப்போம். குடிதண்ணீருக்கு சங்கமநாயக்கன் பாளையத்துக்கருகே இருக்கின்ற அய்யர் தோட்டத்துக்குத்தான் போயாக வேண்டும். மூத்த அண்ணன், வயது 13, 14 இருக்கும். சைக்கிளில் சென்று சைடுக்கு ஒன்றாக இருகுடங்களிலும் தண்ணீரோடு வந்து கொண்டிருந்தார். எதிர்ப்பட்ட லெட்சுமண வாத்தியார் அவர்கள் அண்ணனை நிறுத்தி, ‘பிரபாகர், எங்கிருந்து தண்ணி கொண்ட்டு வந்திருக்கிற?’. அண்ணனுக்கு பதில் சொல்ல நா வரவில்லை. பிதற்றிக் கொண்டிருக்கின்றார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த நாங்களெல்லாம் அருகில் ஓடிப் போகின்றோம். லெட்சுமண வாத்தியார் அண்ணனுக்கு ஆசிரியர். அதாவது எங்களுக்கெல்லாம் தமிழாசிரியர். ‘என்னடா? தண்ணி எங்கிருந்து கொண்ட்டு வர்றன்னுதான கேக்குறன்?’. அண்ணன் வெலவெலத்துப் போய் சொன்னார். ‘சார், நம்ம தோட்டத்துல இருந்துதான் சார் கொண்ட்டு வர்றன்’. ‘நம்ம தோட்டம்னா? எனக்கேதுடா தோட்டம்?’ என்கின்றார் ஆசிரியர். இஃகிஃகி. விசியமென்னவென்றால், லெட்சுமண வாத்தியார், தலைவாசலிலே இருக்கும் இராமய்யர் வீட்டு மருமகனும் கூட. ஆனால் அய்யர் தோட்டம் என்பது பெயர் மட்டுமே. தோட்டம் யாருக்கோ சொந்தமானது. அவரிடமே அய்யர் என உச்சரிக்க அண்ணனுக்குப் பயம். எனக்கும் உடன் விளையாடிக் கொண்டிருந்த பையன்களுக்கும் விளங்கி விட்டது பிரச்சினை. நான் சொன்னேன், ‘சார், எங்கண்ணன் உங்களப் பாத்து பயப்பட்றான் சார். நல்ல தண்ணிக் கெணத்து மோட்டார் காயல் கருகிப் போச்சி சார். அதான் அவன் அய்யர் தோட்டத்துக்குப் போயி தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான் சார்’. சொல்லி முடிக்கும் முன்பாகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டெனப் பறந்து விட்டிருந்தார் அண்ணன். தமிழாசிரியரும் நேற்று மறைந்து விட்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நண்பர் ஆறு. அமெரிக்கத் தமிழ் வானொலி நிலைய நிறுவனர். நேரில் சந்தித்திருக்கின்றோம். பலமுறை உரையாடி இருக்கின்றோம். என்றாலும் கூட அந்த நாளை என்னால் மறக்க இயலவில்லை. வானொலி நிலைய நிகழ்ச்சி. பொங்கல் குறித்த கிராமிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன். ஒருமணி நேர நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிவுற்றதும் இவரும் நானும் உரையாடியது இரண்டு மணி நேரங்கள். எப்படி பழமைபேசி, இவற்றையெல்லாம் துல்லியமாக நினைவிற்கொண்டு சொல்ல முடிகின்றது? அப்படி இப்படியென மனமார்ந்து பாராட்டியதோடு, பல்வேறு வினாக்களையும் தொடுத்து அறிதலைத் தீட்டிக் கொண்டே இருந்தார். பலமுறை மகளாரின் வயலின் நிகழ்ச்சிக்காகத் தொடர்பு கொண்டவர், ஒருமுறையேனும் அவரிடம் நேரம் வாங்கிக் கொடுங்கள் என வேண்டிக் கொண்டார். அவரது ஆசையை நான் நிறைவேற்றிக் கொடுக்காமலே இருந்து விட்டேன். குற்றவுணர்வில் தவிக்கின்றேன். கடந்தவாரம் மறைந்து விட்டார். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நிலையாமை என்பது நிரந்தரம். நாம்தாம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சம வயதுடைய, மேற்பட்ட வயதுடைய மாந்தர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்தல் அவசியமானது. விடைபெற்றுக் கொண்டோருக்கு மலர்வணக்கங்கள். Life is too short not to celebrate nice moments!


7/29/2022

ஜீவன்

ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன்.  அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.  https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html

இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க.

தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்?

மனிதன், நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதில்லை. மாறாக, சாலைகளில் விரைந்து செல்வதால் துல்லியத்தை அடைந்து விடலாமென நினைக்கின்றான். வேகத்தைக் கூட்டுகின்றான். அதனாலும் மனக்கண்களில் வேறெங்கோ உலாவிக் கொண்டிருப்பதாலும் சாலையின் மீதான கவனத்தை இழக்கின்றான். எதிர்ப்படும் நாயொடு மோதுகின்றான். விபத்து ஏற்படுகின்றது. அந்த விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெல்மெட்டும் பெரும்பாலான நேரங்களில் அணிந்து கொள்வதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும், கச்சைகளை ஒழுங்காகப் பூட்டி இருக்கமாட்டான். இதற்கும் மேற்பட்டு, சக ஜீவராசிகளெல்லாம் இவன் விருப்பத்துக்கு அடங்கி, ஒடுங்கி ஒத்துழைத்து வாழ வேண்டுமென நினைப்பான். அவற்றின் உயிரியல், மனவியல் அறிந்து கொள்ளவும் அவனுக்கு நேரமில்லை. இதுதான் பெரும்பாலான நாய் விபத்துகளுக்குக் காரணம்.

பார்வை, விழிகளைப் பற்றிப் பேசுவது நலம் பயக்குமென நினைக்கின்றேன். மனிதனுக்கு விழிகள் இரண்டு. ஒவ்வொரு விழிக்கும் விழித்திரை, திரைக்குப் பின்னால் விழிமுன்னறை, விழிபின்னறை, இவற்றுக்கிடையே கண், கண்ணுக்குள்ளே கதிராளி, கண்மணி, வில்லை முதலானவை உள்ளன. காணப்பெறுகின்ற ஒளியானது கதிராளிக்குள்ளே(லென்ஸ்) ஊடுருவிச் சென்று மூன்று விதமான, சிவப்பு, பச்சை, நீல வண்ணப்புரிதற்ச் செல்களுக்கு சென்று சேரும். பெறப்படுகின்ற ஒளியின் அலைநீளம், தன்மையை இந்த மூன்றுவிதமான வண்ணப்பெறுகைச் செல்களும் வெவ்வேறு அளவிலாகப் பெறுகின்ற போது மனிதனுக்கு வெவ்வேறு வண்ணங்கள் புலப்படுகின்றன. இந்த மூன்றில் யாதொரு செல் பழுதடைந்தாலும், நிறக்குருடு, கலர்பிளைண்டஸ் ஏற்பட்டு விடும். குறைபாடுகள் மேலோங்கும் போது மாலையில் ஒளியின் தாக்கம் குறையக் குறைய பார்வைத் திறன் குன்றலுக்குள்ளாகும். இதற்கப்பாற்பட்டு மனக்குருடும் ஏற்பட்டு விடுகின்றது. அதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் காரணம். அதாவது எல்லா சக ஜீவராசிகளும் தமக்கு அடங்கியொடுங்கி ஒத்துழைத்து இருக்க வேண்டுமென்கின்ற மனக்குருடு. அப்படியா?

நாய்களுக்கும் விழிகள் மனிதனைப் போலவே இருக்கின்றனதான். ஆனால் மனிதனுக்கு இருப்பதைப் போல அவற்றின் கண்களில் மூன்று கோன்கள்(நிறப்பெறுகைகள்) இல்லை. மாறாக, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கோன்கள்தாம் உள்ளன. நீலம், மஞ்சள் ஆகிய இரு பெறுகைகளே உள்ளன. ஆகவே மனிதன் பார்க்கும் வண்ணங்களையெல்லாம் அவை காண்பதில்லை. சிலபல நேரங்களில் சில பல வண்ணங்கள் அவற்றின் பார்வைக்குப் புலப்படாது. அதன் முதல் புலனறி உறுப்பு என்பது மோப்பசக்திதாம். அதைக் கொண்டுதாம் அது போய்க் கொண்டு இருக்கும். நாம் செல்லும் போது, குறிப்பிட்ட சில வண்ணங்கள் அவற்றுக்கு புலப்பட வாய்ப்பில்லையென்பதால் அது அதன்பாட்டில் மோப்பசக்தி, முகர்தலுக்கு ஏற்பவும் காணப்பெறுகின்ற வண்ணத்துக்கு ஏற்பவும்தான் சென்று கொண்டிருக்கும். இந்தப்புரிதல் மாந்தனுக்கு இருத்தல் வேண்டும்.

நாயைப் பார்க்கின்றான். அவற்றின் செயற்பாடுகள் தமக்கு ஏதுவாக இல்லை. எதையாவது கொண்டு அடிக்கின்றான். அடிபடும். துன்பத்தை அனுபவிக்கும். தற்காத்துக் கொள்ள கடிக்க வரும் அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு அஞ்சி ஓடும். ஆனால் அவற்றுக்கு ’தவறு என்ன ஏது’ என்பது ஒன்றும் புரியாது. அவை நுண்ணிய உணர்வுகள் கொண்டவை. மனிதனுக்கு வண்டி வண்டியாகப் புத்தகங்கள் படிப்பதாலும், போதனைகள் கேட்பதாலும் ஏற்படும் நுண்ணுணர்வுகளைக் காட்டிலும் அவற்றுக்கான நுண்ணுணர்வுகள் அதிகமானது. எப்போதும் குட்மார்னிங் சொல்பவர், அன்று சொல்லாமற்போனால் அதற்கு அதன் மனம் நோகும். தன்னைத் தானே வருத்திக் கொண்டு அழும். அந்த அளவுக்கு சென்சிடிவ் ஆனவை. அவற்றுக்கான மொழியுண்டு. சமிக்கைகள் உண்டு.

இயல்புக்கு மாறாக, சரியல்லாதவொன்று, என்ன செய்யும்? கண்களால் பேசும், பார்க்கும். நாவால் சுருட்டி சுருட்டிக் காண்பிக்கும், உதடுகளைச் சுழித்துக் காண்பிக்கும்.  குழைதல், அரற்றல், ஒடுங்குதல், பரபரத்தலென வாலால் பேசும். உள்க்குரலால் முனகும். தொண்டையிலிருந்து செருமும். அதற்கும் புரிந்து கொள்ளப்படாவிடில், மென்மையாகக் குரைக்கும். சினமெனில் முன்னுதடுகளை விலக்கிப் பற்களை இளித்துக் காட்டும். இந்த சமிக்கைகள் எதற்கும் மறுவினை இல்லாத போதுதான் அவை அத்துமீறும், கட்டுப்பாடிழந்து செயற்படும். இப்படியான சமிக்கைகள் எல்லாம் சில பல விநாடிகள்தாம் இடம்பெறும். அவற்றைக் கவனிக்க மனிதனுக்கு நேரமில்லை அல்லது மனமில்லை. அதைத்தான் மனக்குருடு என்பது.

நாய்களின் மொழி, உடலியல், தன்மை, பண்பு இவற்றை அறிந்து செயற்பட வேண்டியது மனிதயினம்தான். ஜீவராசிகளிடம் இல்லாதவொன்றை, செயற்படுத்த முடியாதவொன்றை அவற்றிடம் இருந்து எதிர்பார்ப்பதில் ஒரு பயனுமில்லை. நுண்ணுணர்வுகளின் சக்ரவர்த்திகள் நாய்கள்! அன்பின் தூதர்கள்!!

7/25/2022

காம்பிளி நதிக்கரையில் 4

 

நினைவடுக்குகளில் புகுந்து புகுந்து பின்னோக்கிப் போகின்றேன். புலப்பட்டு விட்டது. முதன்முதலில் எப்போது காம்பிளி நதிக்கரையைக் கண்டேன்? அப்பா அவர்கள் ஆண்டுதோறும் சபரிமலை செல்வது வழக்கம். நான் பிறப்பதற்கு முன்பிருந்தேவும். இன்னமும் கூட, நான் பிறந்த ஊரான அந்தியூரில் என்னை மணிகண்டன் என அழைப்போர் உண்டு. அதன் தாக்கத்தில் அண்ணன் அவர்களும் மாலையிட்டுக் கொண்டார். போதிய சாலை வசதிகள் இல்லை. காலார நடந்துதான் மலையேற்றம். சென்று வந்தவர்கள் விவரிக்கும் போது கலக்கமாக இருக்கும். அப்போதெல்லாம் மலைப்பயணம் என்பது துணிவுப்பயணமாக, சாகசப்பயணமாகக் கருதப்பட்டது. இவர் பதினேழு பதினெட்டு வயதுடைய இளைஞர். துணிந்து களத்தில் இறங்கி விட்டார். தன் சொந்த ஊரான புள்ளியப்பம் பாளையத்தில் சிறிய அளவில் வழிபாடு நடத்தும் ஆசை அவருக்கு. உடன் அழைத்துக் கொண்டு போனார்.

ஆள் அத்துவானம் இல்லாத ஒரு மேட்டில் பேருந்து நிற்கின்றது. இறங்குகின்றேன். காற்று உய் உய்யென அடித்துக் கொண்டிருக்கின்றது. சாலையைக் கடந்து ஒரு சிறுக்கால் ஒத்தையடிப் பாதைக்குள் அழைத்துச் செல்கின்றார். சாராயம் காய்ச்சுவதை வேடிக்கை பார்க்க அணிக்கடவுக்கும் சலவநாயக்கன் பட்டிப் புதூருக்கும் இடையிலான உப்பள்ளத்துக்குச் சென்ற அனுபவத்தை ஒத்திருந்தது. எதிரே ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். ’சின்னம்மா பையன்’ என அறிமுகப்படுத்தி வைத்தார். காம்பிளியில் கால் வைத்தேன்.

அடுத்தடுத்த நாள். உப்பாற்றங்கரையிலும் அண்டைய காடுகளிலும் ஐயப்பனுக்கு மாலை தொடுக்கத் துளசி பறிக்கச் செல்வதென்பது நமக்கு வழமையான ஒன்று. அதேபாணியில் சகோதரன் பாபுவும் நானும் ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றோம். மீண்டும் காம்பிளி நதிக்கரை, காடுகள். எங்கெங்கோ நுழைந்து பார்த்தோம். துளசிப்புதர்கள் மட்டும் கண்களுக்கு அகப்படவே இல்லை. வெறும் பையோடு திரும்பிச் செல்ல முடியாது. நதிக்கரையில் ஏராளமான மஞ்சணத்திகள் (ஆவரம்பூக்கள்) தென்பட்டன. பறிக்கலாமாயென்றார் உடன்வந்த பாபு அவர்கள். அம்மாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து விடுவாரென்றேன். உங்க அம்மா ஊரில் அல்லவா இருக்கின்றாரென்றார். இஃகிஃகி. அதாவது, மாலை தொடுக்க இந்தப் பூக்கள் சரிவராது என்பது கருத்து. பிறகு, அங்கிருந்த பொன்னரளி, செவ்வரளிகளுடன் வீடு திரும்பினோம்.

ஓடைகளும், ஆற்றங்கரைகளும், நீர்நிலைகளும்தான் பல்லுயிர் ஓம்புதலுக்கான அடிப்படை. டார்வின் சொல்கின்றார், பரிணாமத்தின் தோற்றுவாய் நீர்நிலைகள். அங்கிருந்துதான் ஓரணு உயிரிகளிலிருந்து படிப்படியாக ஒவ்வோர் உயிரும் பரிணாமம் பெற்றுத் தோன்றின என்பது அவரது கருதுகோள். அப்படியானதும் இப்படியானதுமான ஆறுகளை, ஆற்றங்கரைகளைக் காப்பது நம் கடமைதானே? அப்பாவின் தாய், பாட்டி அவர்கள் சொல்வார், ’ஊரிலே நிறைய அன்னக்காவடிகள் இருந்தார்கள். அவர்களின் முழுநேர வேலையே குளம், குட்டைகளைப் பராமரிப்பதுதானாம். பசித்த நேரத்துக்கு ஊருக்குள் அன்னக்காவடிகளோடு வருவர். அவர்கள் இறைவனின் நேரடித் தூதர்களாகக் கருதப்பட்டனர். இப்படியான மரபில் திளைத்தவர்கள் நாம். என்ன செய்யலாம்?

நீர்நிலைகளின் மீது நாட்டம் கொள்ள வேண்டும். அதன் தோற்றம், இருப்பு, வரலாறு குறித்தெல்லாம் உணர்வு கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எங்கு சென்றாலும், சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, அதைச் சுட்டும் பொருட்டு பெயர்ப்பலகையை வைத்திருப்பர். சில இடங்களில் அது குறித்த சுருக்கவுரையைக் கூட பார்வைக்கு வைத்திருப்பர்.

பொருள்முதல்வாத உலகில் வீட்டுப் பாவனைக்கென நிறைய திரவப்பொருட்கள் வந்துவிட்டன. அவையெல்லாமுமே வேதிப்பொருட்கள். அதன் எச்சத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். எடுத்துக்காட்டாக, வடை, போண்டா, பலகாரங்கள் சுட்டு  எஞ்சிய எண்ணெய் கூட தரையில், கழிவுக்குழாயில் ஊற்றக்கூடாத ஒன்றுதான். உரிய முறையில் அதைக் கட்டி அதற்கான கழிவுக் கிடங்கில் சேர்க்கப்பட வேண்டும்.

லேசுபாசாக உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பாவிக்கலாம், தவிர்க்க முடியாது.  ஆனால் வீடுகளைச் சுற்றிலும் அவற்றைப் பாவிக்கும் போது, நேரிடையாக மழைநீர் வடிகாலில் அவை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாற்றாக எரு, இரசாயனமற்றவற்றைப் பாவிக்கலாம்.

சோளத்தட்டுப் பொசிவுகள், மக்காச்சோளக் கூளங்கள் போன்ற சருகான மக்கும் பொருட்களை வெகுவாகப் பாவித்து, கட்டுத்தரை, புறவாசல் போன்ற இடங்களை உலர வைத்துக் கொண்டிருந்த சமூகம் நம் சமூகம். காலத்தின் போக்கில் மக்காப் பொருட்களின் வீச்சு அதிகரித்து விட்டது. அவை நிலத்தின் நீருறுஞ்சும் தன்மையைப் பாழாக்குகின்றன. நீரோடி வெள்ளத்துக்கு அடிகோலுகின்றது. மாறாக, நம் ஊரிலிருந்து பீட் மாஸ், தென்னை நார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அவர்கள் மண்ணைக் காப்பதற்கும் நீர்வளம் காப்பதற்கும் அவற்றைப் பாவிக்கின்றனர்.

உயிரினக்கழிவுகளைக் கொட்டுவது நீர்நிலைகளையும் அதனையொட்டிய பல்லுயிர் ஓம்புதலையும் கேடாக்கும். பல்லுயிர்கள் சூழலியல் பாழாகும் போது மண்வளம் கெட்டுப் போய், இறுகிப் போவதால் நீருறுஞ்சும் தன்மை இல்லாமற்போய் வெள்ளத்துக்கு வழிவகுக்கும்.

இப்படி எத்தனை எத்தனையோ நுண்ணியமான செயற்பாடுகளை, தத்தம் சமயம், பண்பாட்டில் இடம் பெறச் செய்துள்ளனர் மேலைநாட்டினர். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் நாமும் அவற்றை நோக்கிச் சென்றுதான் ஆக வேண்டும். அது இந்தநாளாகவும் இருக்கலாம். காம்பிளிநதி மீண்டும் பொலிவுறுவாளாகட்டும்!

(முற்றும்)