9/02/2012

செவ்வந்தி

புறக்கொல்லையில் இருக்கும் கிளுவமரத்து வேலியிலும், காரமடை மூலையில் இருக்கும் அந்த ஒரே ஒரு வேம்பு மரத்திலும் குருவிகளின் சிலுசிலு சிணுங்கல்களுடன், ஊரோரத்தில் இருக்கும் சின்னான் வீட்டுச் சேவலொன்றின் கூவலொலியும் சிறுகீற்றாய்க் காதில் விழுகிறது.

கட்டுத்தறியில் சாணம் அகற்றி, அண்ணன் சீதனமாய் அனுப்பி இருக்கும் கனகவள்ளியை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள் சம்பங்கி. விருகல்பட்டிக்கு வாழ்க்கைப்பட்டு பதினைந்து ஆண்டுகளானாலும், ஆறுக்குட்டி அண்ணன் தனக்காக இப்போது அனுப்பி வைத்திருக்கும் கனகவள்ளியைப் பார்த்து சம்பங்கிக்குக் கடலளவு மகிழ்ச்சி. கனகவள்ளி காலடி எடுத்து வைத்த இந்த ஆவணி மாதம் முழுதும் அவள் புறக்கொல்லையில்தான் அதிகம் வசிக்கிறாள்.

”இந்தா பெரீவளே பொற்கொடி! கெழக்க வெளுத்துத் திண்ணைக்கு வெயில் சித்தங்கூரத்துல வரப் போகுது புள்ளை, எந்திரீங்க வெள்ளண்ண!!”, சம்பங்கியின் மாமியார் தன் பெயர்த்திகளை விரட்டத் துவங்கினாள்.

“ஆத்தா, எனக்கு இன்னுந் தூக்கம் முறியலை ஆத்தா!”

“பெரியவ நீயே இப்பிடி விளங்காமக் கொள்ளாமத் தூங்குறியே? எளையவ பூங்கொடி, எந்திரின்னா எந்திரிக்கவா போறா? ரெண்டும் பொட்டைகளாப் பெத்துப் போட்டுட்டு உங்கம்மா எங்க போய்த் தொலைஞ்சாளோ? ஒரு வாய்க் காப்பித் தண்ணி கூட நாந்தாம் போட்டுக் குடிக்கோணுமாட்ட இருக்கூ?”, அன்றைய புலம்பல் நல்லபடியாகவே துவங்கியது.

தன் மாமியாரின் குரல் கேட்டதும் அடுக்களைக்குத் திரும்பினாள் சம்பங்கி. அடுப்பில் உலை காய்ந்து அரிசி வெந்து சோறு மகிழ்ந்து வந்து கொண்டிருந்தது. துடுப்பால் கிளறி விட்டுத் துடுப்பில் ஒட்டியிருந்த ஓரிரு பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்தாள்.

“இன்னும் பாதி வேக்காடு வேகணுமாட்ட இருக்கு?!” என நினைத்தவாறே எரிந்து கொண்டிருந்த விறகுகளை ஒன்று கூட்டி உள்ளே நகர்த்தினாள். கண்ணடுப்பில் காய்ந்து கொண்டிருந்த காப்பித் தண்ணியைக் கிண்ணத்தில் சற்று ஊற்றி, கருப்பட்டித் தூளையும் சேர்த்து விளாவிக் கொண்டே தன் பார்வையை மேற்புறமாகக் கிடத்தினாள்.

மாலகோயில் மூலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் உறி ஒய்யாரமாய் ஊசலாடிக் கொண்டிருந்தது அதிலிருந்த பால்க் குண்டாவை பதனமாய்க் கீழிறக்கினாள். பிறகு காப்பித் தண்ணியோடு சிறுகப் பாலையும் சேர்த்தபின்னர், “இந்தாங்க அத்தை! காபி சூடாக் கொண்டாந்து இருக்குறேன்!!” எனக் கூறியபடியே காப்பிக் கிண்ணத்தையும் குவளையையும் கொண்டுத் போய் தன் மாமியாரின் அருகில் வைத்தாள் சம்பங்கி.

”ம்ம்… பெத்துப் போட்டிருக்குறது ரெண்டும் பொட்டைப் புள்ளைகளாப் பெத்துப் போட்டுருக்குறா. விளங்குற கூறு அதிலிருந்தே விளங்குதே? எப்பப் பார்த்தாலும் அந்தச் செனை மாட்டைச் சுத்தியே வந்தா, ஊட்டு வேலையெல்லாம் நேரத்துக்கு ஆரு பாப்பாங்களோ? ஊட்டுக்குள்ள பொட்டைக்கன்னுகளாப் பெத்துப் போட்டுருக்குறா. அவ கொண்டாந்த மாடு என்னத்தை ஈனப்போகுதோ? பொட்டைக் கன்னாவே ஈனுமா? நல்ல காளைக் கன்னாத்தான் போடப் போகுது அது! அதுக்குப் போயி இந்த சீரும், சிறப்புமு??” தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள் மாமியார்க்காரியான காட்டம்பட்டி தெய்வாத்தாள்.

காட்டம்பட்டி தெய்வாத்தாள் மிகவும் கண்டிப்பானவள், கெட்டிக்காரி, வேளாண் தொழிலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தவளெனப் பட்டி தொட்டியெல்லாம் பேசுமளவுக்குப் பெயர் எடுத்தவள். தன் ஒரே மகனான மந்திரியப்பனுக்கு இரண்டு பேறும் பெண் மகவாக அமைந்து விட்டதே எனும் அகங்கலாய்ப்பு அவளைத் தொடர்ந்து ஆட்\கொண்டிருந்ததன் ஒரு முகம்தான் அவளது இப்போதைய புலம்பல்.

தெய்வாத்தாளின் மருமகளும் மந்திரியப்பனின் மனைவியுமான சம்பங்கி, தெய்வாத்தாளை விட மிகவும் திறமைசாலி. விருகல்பட்டி கிராமத்தில், நெகமத்துப் பள்ளிக்குச் சென்று மேல்நிலைப் பள்ளிப் பாடம் கற்ற ஒரே பெண்மணி இவள்தான். எதையும் பொறுமையாக எதிர்கொள்பவள். ஏழ்மை கண்டு துவழ்ந்து போகாதவள்.

”பொற்கொடி, பூங்கொடி, எந்திரிங்க கண்ணுகளா! எந்திரிச்சி பல் துலக்கித் தண்ணி வாத்துட்டு வாங்க. எங்கூடத் தோட்டத்துக்கு வருவீங்களாமா? உங்கப்பா அங்க பசியோட காத்திட்டு இருப்பாரு. எந்திரிங்க கண்ணுகளா!”, பிள்ளைகளை எழுப்பினாள் சம்பங்கி.

”அம்மா, நம்ம கனகவள்ளிய தோட்டத்துக்கு நாந்தான் ஓட்டியாருவேன்!”, எந்நேரத்திலும் கன்று ஈன்றெடுக்கும் நிலையிலுள்ள சினை மாடான கனகவள்ளியைத் தானே ஓட்டி வருவேன் எனச் செல்லமாய் உரிமை கொண்டாடுகிறாள் சம்பங்கியின் இளையமகள் பூங்கொடி.

வானம் பொய்த்து விளைச்சலும் பொய்த்தது. உப்பாற்று அணைக்கட்டுக்காகத் தன் தோட்டத்துக்கு அண்மையில் ஓடிக்கொண்டிருந்த அரசூர் ஓடையிலும் முன்பு போலத் தண்ணீர் பெருக்கெடுப்பது இல்லை. ஏன் என்று கேட்டால் அரசியல் என்கிறார்கள். இயற்கையாக ஏற்பட்டிருக்கும் ஓடையில் தண்ணீர் வரத்து இல்லை. மாறாகச் செயற்கையாய் கால்வாய்கள் உண்டு செய்யப்பட்டு மேலானவர்கள் எனக்கருதப்படும் பலர் இருக்குமிடங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் கண்டவன் மந்திரியப்பன். இன்று ஒரு போக விளைச்சலுக்கே அல்லாடுகிறான். விபரமறிந்த மச்சான் மருதாசலம் தன் தங்கையின் வீடு சிறப்பாக இருக்க வேண்டுமென, தன்னிடத்தில் இருக்கும் ஒரே சினைமாடான கனகவள்ளியைச் சம்பங்கிக்குச் சீதனமாய் அனுப்பி வைத்திருக்கிறான்.

”கனகவள்ளி ஈன வேண்டும். அது கொடுக்கப் போகும் பாலை உள்ளூர் கூட்டுறவுச் சங்கத்தில் ஊற்றிக் குடும்பச் செலவைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்” என்பதே சம்பங்கியின் ஆசை. பெண் மகவாக, கிடாரிக் கன்றாக ஈன்றெடுத்தால் இன்னும் சிறப்பு.

சினைமாட்டை ஓட்டியபடி இளையவள் பூங்கொடி முன்பக்கமாய்ச் சென்று கொண்டிருக்க. சோத்துப் போசியும் கம்பங்கூழ்க் கலயமும் வாகாய் வைக்கப்பட்ட பொட்டிக்கூடையைச் சும்மாட்டுடன் தலையில் வைத்துப் பூங்கொடிக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தாள் சம்பங்கி. இவர்களுடன், பெரியவளான பொற்கொடி திருகணிச் சொம்பில் தன் தந்தைக்கான காப்பித் தண்ணியோடு என அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.

கிராமத்தில் சொல்லப்படும் சொலவடையை நினைத்துப் புன்னகைத்தாள் சம்பங்கி. அழகும் அன்புமாய்த் தனக்கு இரு பெண் பிள்ளைகள். ஊரே கேலி பேசுகிறது. ஆனால் மாட்டுக்கான சொலவடை, “ஈனுறது கிடாரின்னா பட்டி பெருகிக் குடும்பம் தழைக்கும்!”.

சட்டென இறுகியது சம்பங்கியின் முகம். தன் அத்தை போடும் கூப்பாட்டுக்கு ஏற்றாற்போல, “காளைக்கன்றுதான் கனகவள்ளி ஈன்றெடுப்பாளோ? அவ்வளவுதான், தன்கதி அதோகதி ஆகிவிடுமே? ஆசை பொய்த்துப் போவது மட்டுமல்லாது, குடும்பம் விரிசல் கண்டு வாழ்க்கை இன்னுஞ் சீரழியுமே??”, கவலை தோய்ந்து பெரும் இறுக்கத்துக்கு ஆளானாள் சம்பங்கி.

மனைவி மக்களைக் கண்டதும் முகில் விலகிய நிலாப் போல ஒளிர்ந்த மந்திரியப்பன், “கண்ணுகளா வாங்கடா வாங்கடா… காலையில சோறுண்டீங்களாடா?”.

“ஆச்சுங்ப்பா… நீங்க சாப்புடுங்ப்பா, வயித்துப் பசியோட இருக்காதீங்க”, பொற்கொடி குழைந்தாள்.

பசியாறிய பின்னர் மந்திரியப்பன் கடப்பாரையால் அருகு தோண்ட, தோண்டப்பட்ட மண்ணை மண்வெட்டியால் வாங்கி, மண்ணில் ஊன்றியிருக்கும் அருகு வேர்களைக் கையால் களைந்தெடுத்துக் கொண்டிருந்தாள் சம்பங்கி.

அருகில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் கனகவள்ளி மேய்ந்து கொண்டிருக்க, பொற்கொடியும் பூங்கொடியும் வெங்கச்சாங்கல் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென மந்திரியப்பன் பெருங்குரலெடுத்து இரைந்தான். “சம்பங்கி, போ, ஒடனே போயி கோம்பக்காட்டு மாறனைக் கூட்டியா போ!”.

அண்மையில் இருக்கும் பிறிதொரு தோட்டத்துச் சாளையை நோக்கி ஓடினாள் சம்பங்கி.

இடக்கைப் பழக்கமுள்ள மந்திரியப்பன், தன் இடக்கையின் நடு விரலையும் பெருவிரலையும் வளையமாக்கித் தன் வாயில் வைத்துச் சீட்டியடித்து அண்மையிலிருக்கும் ஆட்களை வரவழைத்தான்.

நடப்பதையெல்லாம் பொற்கொடியும் பூங்கொடியும் விக்கித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கனகவள்ளி இங்குமங்குமாய் அலைமோதினாள். முதலில் தலை வெளிப்படத் தோன்றியது. கனகவள்ளியின் உடலனைத்தும் குறுகக்குறுக வெண்பனிக்குடத்தின் மேலாடையுடன் தலை வெளிப்பட்டு, முன்னங்கால்கள் வெளிப்பட்டு, கடைசியாய்க் கீழே ”தொப்”பென விழுந்து மண்ணை முத்தமிட்டது கன்று.

வெண்பனிக் குடத்தின் நீரும் மண்ணுமாக அப்பித் தரையில் கிடந்தது இளங்கன்று. கனகவள்ளி தலையை மறுபக்கம் திருப்பித் தானீன்ற சேயைத் தன் நாவால் நக்கத் துவங்கினாள். மெதுவாகக் கன்று தத்தித்தத்தி எழுந்தது. தன் பால்மடி நாடப்படுவதை உணர்ந்த கனகவள்ளி, வாகாய் நகர்ந்து நின்றாள். தாயின் மடி முட்டிக் குடித்தது கன்று. அன்பொழுகத் தன் மகவை இன்னும் நக்கிக் கொண்டிருக்கிறாள் கனகவள்ளி.

கணங்கள் பல கழிந்தன. கோம்பக்காட்டு மாறனின் தந்தையார் குரல் கொடுத்தார். “முதல்ல பாலைக் கறக்கறது ஆரு? மந்திரீப்பா நீயே கறந்துரு!”,

“வேண்டாம்! வேண்டாங் மாமா, சம்பங்கிக்குனு அவிக அண்ணங் குடுத்ததுங்க. சம்பங்கியே கறக்கட்டுமுங்க!!”, வாஞ்சையாய்த் தன் மனைவியை ஏறிட்டான் மந்திரியப்பன்.

கணவனுக்குச் சோறு கொண்டு வந்த சோத்துப் போசியில், கடும்பால் எனப்படுகிற சீம்பாலைக் கறந்தாள் சம்பங்கி. தோட்டத்துச் சாளையில் வைத்தே அடுப்பு கூட்டிச் சீம்பால் திரட்டும் தயாரானது.

காப்பிக்காகக் கொண்டுவரப்பட்ட கருப்பட்டித் தூளைச் சிறிதாகச் சீம்பால்த் திரட்டின் மீது தூவி, அதைக் கலயத்தில் இட்டாள் சம்பங்கி. கலயத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி எழுச்சியோடு ஓடினாள் மூத்த மகள் பொற்கொடி.

”ஆத்தா, மாடு கன்னுப் போட்டுருச்சி! ஆத்தா மாடு கன்னுப் போட்டுருச்சி!”

“அடப் பெரியவளே மொல்ல வாடா! அடப் பாத்து மொல்ல வாடா!! ஆமா, என்ன கன்னுப் போட்டுருக்குது?”

“நம்ம கனகவள்ளி கிடாரிக் கன்னுதாம் போட்டுருக்குது ஆத்தா. செவலையா நல்லா இருக்குது. அவபேரு செவ்வந்தி!!”

குறிப்பு: வல்லமை இதழின் செப்டம்பர் மாத முதல் பரிசு பெற்ற கதை இது!! http://www.vallamai.com/literature/articles/26935/


8/19/2012

சோலைபாடி

சோலைபாடி


தாரா



தீகாக்கா



பனை உழவாரன்




செவ்வாலி


சில்லைக்குருவி

செங்களியன்

கருங்களியன்

சம்பங்கோழி

8/17/2012

படைப்பாளிகள் எளிய வழியில் பணமீட்ட "கவிமாலா"


மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கவிதைக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் தரப்படும். ஆக ஆண்டுக்கு ஒரு இலட்சத்து இருபதனாயிரம் ஈட்டுவதற்கான நல்லதொரு வாய்ப்பு. தங்கள் படைப்புகள் பாரெங்கும் பிரபலமடைவதோடு கை நிறையப் பணமும் கிடைக்க அரியதொரு வாய்ப்பு. தவறவிடாதீர்!!

ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஒவ்வொரு கணக்குத் துவங்கவும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே வைப்பு நிதியாகும்.  தமிழ் வளர்க்கவும் உங்கள் படைப்பாற்றல் பெருக்கவும் பொருளாதாரம் கூட்டவும் இது அருமையான வழி. அப்படியான படைப்புகள், கன்னிமாரா நூலகம், கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக்கழக நூலகம், நியூயார்க் பொதுநூலகம், எகிப்து அலெக்சேண்ட்ரா நூலகம் போன்ற நூலகங்களில் உங்கள் படைப்புகள் இடம் பெற்றுச் சிறப்பெய்தவும் இது ஒரு நல்வாய்ப்புதானே? தகவலை அகிலமெங்கும் பரப்புங்கள். தமிழர்கள் எல்லாரும் பயனடையட்டும். கவிமாலா திட்டத்துல சேருங்க! கனவெல்லாம் நனவாகும்!!

கவிமாலா நிறுவனத்தின் இத்தகைய நல்ல திட்டத்தினைச் செயல்படுத்த உலகமெங்கும் முகவர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளோர் அணுகலாம்.


அணுக வேண்டிய முகவரி:

திரு.பொருளீட்டன்,
கருவூலகச் செயலர்,
கவிமாலா பன்னாட்டு நிறுவனம்,
முதலிலி வணிகப்பாளையம்,
ஆக்கப்பாடனூர் வட்டம்,
கொங்குநாடு - ௮௲௧

8/04/2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா

கிட்டத்தட்ட நாற்பது தமிழ்ச்சங்கங்களை உள்ளடக்கி, அதன் ஒன்றியமாகக் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்(FeTNA) பேரவையாகும். ஜூலை நான்காம் நாளில் இடம் பெறும் விடுதலை நாள் விழா விடுமுறையை ஒட்டிய நாட்களில், பேரவையானது தொடர்ந்து அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தன் இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவினை பேரவை வெள்ளி விழாவாகவும், முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாகவும் பால்டிமோர் நகரில் உள்ள மேயர்யாஃப் சிம்பொனி இசையரங்கத்தில் ஜூலை ஐந்தாம் நாள் மாலை துவக்கம், ஜூலை ஒன்பதாம் நாள் வரை கொண்டாடியது பேரவை.

அமெரிக்கத் தமிழ்த் திருவிழா-2012இன் இயன்மொழியாக, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது. அவ்வாசகத்தின் தலைப்பில் சொற்பொழிவு, தமிழ் மாணாக்கருக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விழா மலருக்கான கட்டுரைகள் போன்றவை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விழாவினை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தியது.

ஜூலை ஐந்தாம் நாள், வியாழக்கிழமை மாலை விழாவின் ஓர் அங்கமாகத் தமிழிசை விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில், அடிப்படைப்பாடல், தமிழ்ப்பாடல், சேர்ந்திசைப்பாடல் என மூன்று பிரிவுகளில் பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. தமிழறிஞர்களும் இசை விரும்புநர்களும் வீற்றிருக்க அரங்கு நிரம்பிய விழாவாக அமைந்த இந்நிகழ்ச்சியைத் திருமதி. தேவகி செல்வன், திரு.மலர்செல்வன், திரு.பொற்செழியன் முதலானோர் ஒருங்கிணைத்திருந்தனர்

தமிழிசை விழாவினைத் தொடர்ந்து இடம் பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியான ‘விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியில் கொடையாளர்களும், விருந்தினர்களான தோழர் நல்லகண்ணு, மலேசிய மாகாணங்களுள் ஒன்றான பினாங்கு மாகாண துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன், வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடக இயக்குநர் ஸ்ரீராம் சர்மா, வேலுநாச்சியார் மணிமேகலை, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி, திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலா பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஜூலை ஆறாம் நாள், வெள்ளிக் கிழமை காலையில் மங்கள இசை, நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்து விளக்கேற்றுதல் ஆகிய முறைமைகளுடன் பேரவையின் வெள்ளி விழா செவ்வனே துவங்கியது. பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் முறையே தலைமையுரையையும் வரவேற்புரையையும் ஆற்றி வந்திருந்தோரைச் சிறப்பாக வரவேற்றனர்.

துவக்க நிகழ்ச்சியாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் நாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து, நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றி, காணக்கிடைக்காத அவர்தம் அரிய நிழல்படங்களோடு விரித்துரைத்தார் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள். அடுத்து இடம் பெற்ற பனைநிலத் தமிழ்ச்சங்கத்தினரின் நகைச்சுவை நாடகம் பார்வையாளரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலும் “இதயங்கள் இயங்கட்டும்” எனும் தலைப்பிலும் இடம் பெற்ற கவியரங்கத்தில், உள்ளூர்க் கவிஞர்கள் புகாரி, சிகாகோ பாசுகரன், புவனா நந்தகுமார், இளமுருகன், சுந்தரமூர்த்தி, கரு.மாணிக்கவாசகம் ஆகியோர் பங்களித்தனர். திரு. கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சி தோழர் நல்லகண்ணு அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக் அவர்களின் அனுபவவுரை, அரசி நகரத் தமிழ்ச்சங்கத்தின் சிலம்பாட்ட நிகழ்ச்சி, அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை ஆகியவை இடம் பெற்றன. எழுபது கவனகர் முனைவர் கலை.செழியனும், அவர்தம் தந்தையார் திரு.கலைச் செல்வமும் இணைந்து நடத்திய கவனகக்கலை நிகழ்ச்சி பெருத்த வரவேற்பையும் பாராட்டுதலையும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. நினைவாற்றலுடன் கூடிய திறனாற்றலை வெளிப்படுத்துவதை இயல்பாக வெளிப்படுத்தி வியப்பில் ஆழ்த்தினார்.

நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாட்டியம், தமிழகத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் குறித்த உரை, வாழ்த்துரையாகக் கல்வியாளர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் உரை, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தினைப் பற்றிய உரை ஆகியவற்றைத் தொடர்ந்து இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார் தமிழிசைக் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்கள்.
வெள்ளி விழாவுக்குப் பேரவையைக் கொணர்ந்த பேரவையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். தமிழ் தொழில் முனைவோருக்கும் சிறப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, பெரும் கரவொலிக்கிடையே “தமிழரின் மனித உரிமைகள் பேணல்” எனும் தலைப்பில் பேசினார் பினாங்கு துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி. அவரது உரையைத் தொடர்ந்து இடம் பெற்றது கனடிய தமிழர் பேரவையின் உணர்வுப்பூர்வமான நாட்டிய நிகழ்ச்சியொன்று.

வெள்ளி விழா மலர் வெளியீட்டினை மலராசிரியரும் பதிவருமான பழமைபேசி தொகுத்தளிக்க, பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் கலை.செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அரங்கம் நிரம்பிப் பெருத்த ஆரவாரத்துக்கிடையே மேடையில் தோன்றினார் வாழும் கலைப்பயிற்சி நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்கள். அவரது சிறப்புரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து சேலம் நியூசு இதழியலாளர் டிம் கிங், போனி கிங் முதலானோர் உரையாற்றினர். பெரும் கரவொலிக்கிடையே தோன்றி சிரிப்பலைகளைத் தோற்றுவித்தார் பகடிக்கலைஞர் மதுரைமுத்து.

விழாவின் முதல்நாளை நிறைவு செய்ய இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சி, “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகமாகும். 2400 பேர் அமரக்கூடிய அரங்கம் நிரம்பி வழிந்தது. தன்விருப்பத் தொண்டர்களை விடுத்து, ஏனையோர் அமர்ந்திருக்க தமிழரின் வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த வீரத்தாய் கூரிய வாளொடு வேலுநாச்சியார் தோன்றினார். தயாரிப்பாளர் வைகோ அவர்களின் வாழ்த்துரையோடு துவங்கிய நாட்டிய நாடகம், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பைக் கூட்டியது. வேலுநாச்சியாராகத் தோன்றிய மணிமேகலை சர்மா, குயிலாகத் தோன்றிய சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி, பெரியமருது பாண்டியர் ஓஏகே தேவர், சின்னமருது யுவராஜ், அய்தரலி மயிலாடுதுறை சிவா ஆகியோரது நடிப்பாற்றல் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

குறித்த நேரத்தில் வழக்கமான முறைமைகளுடன் துவங்கின இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள். கவிஞர் இலந்தை இராமசாமி அவர்களின் கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டுக் கவிதை, முனைவர் சவரிமுத்து அவர்களின் தனிநாயகம் அடிகளார் குறித்த சொல்வீச்சு, போசுடன் தமிழ்ச்சங்கத்தின் குறுங்கதைகள், நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் ‘வீரம்’ நாட்டியம். கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் ஆகியன வெகுசிறப்பாக இடம் பெற்றன.

தமிழ் மாணவர்களுக்கான தமிழ்ப் பன்முகத்திறன்(jeopardy) போட்டி ஒரு பல்லூடக நிகழ்ச்சியாக இடம் பெற்றது. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த இந்நிகழ்ச்சியினை கவனகர் முனைவர் கலை.செழியன் திறம்பட நடத்தினார். வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தமிழிசைப் பாடலுக்கான நாட்டியத்தைத் தொடர்ந்து தமிழ்த்தேனீப் போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, பன்முகத்திறன் போட்டி முதலானவை இடம் பெற்றிருந்தன. போட்டிகளை இராமசாமி சோமசுந்தரம், பொற்செழியன் இராமசாமி, இளங்கோ சின்னசாமி, பூங்கோதை ஆகியோர் செய்திருந்தனர். முதலாம் நிலைப் பிரிவில் இடம் பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தென் மத்திய தமிழ்ச்சங்க மாணவி ஸ்ரீநிதி மணிவாசகம் முதல் பரிசினைப் பெற்றார்.

நாஞ்சில் பீற்றர் அவர்களது நெறியாள்கையின் கீழ் இடம் பெற்ற இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இலக்கியச்சுவை ததும்பிய இந்நிகழ்ச்சியைக் கண்ட விருந்தினர் வெகுவாக வரவேற்றுச் சிலாகித்தனர். திரு.கொழந்தைவேல் இந்நிகழ்ச்சிக்கு இராமசாமி பயிற்சியாளராகப் பணியாற்ற, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், கவனகர் முனைவர் கலை.செழியன் நடுவராகப் பணியாற்றிச் சிறப்புச் சேர்த்தனர்.

வட கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் நாட்டார் நடனம் பண்டைய தமிழ்ப் பண்பாட்டினைப் பறைசாட்டுவதாக அமைந்திருந்தது. நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இசை நாட்டியம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் காவியத் தலைவிகள் நாட்டியம், அமெரிக்கத் தமிழ் இளையோர் அமைப்பின் களி நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம் பெற்றது மாபெரும் ஆர்ப்பரிப்பை உண்டாக்கிய கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயனின் “நேற்று இன்று நாளை” எனும் தலைப்பிலான விவாத மேடை. சிவகார்த்திகேயனின் பலகுரல் பேச்சினைக் கண்ட பார்வையாளர்கள் கூக்குரலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டெலவேர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் காட்டுத்திருவிழா நடனம், வித்யா வந்தனா சகோதரிகள் பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், வட அமெரிக்கத் தமிழ் இளையோருக்கான “தமிழன் – தமிழச்சி” போட்டிகள் இடம் பெற்றன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளை நன்கு வெளிப்படுத்தி வந்திருந்தோரை எழுச்சி கொள்ள வைத்தனர். முடிவில், யாழினி பொற்செழியன், வசந்த் குப்புசாமி ஆகியோர் முறையே 2012ஆம் ஆண்டுக்கான தமிழச்சியாகவும் தமிழனாகவும் வாகை சூடினர்.

கதைகளின் மூலம் எப்படியெல்லாம் புரிதலைக் கொண்டு வரலாமென்பதை வெகு யதார்த்தமாகப் பேசி வந்திருந்தோரை எல்லாம் தனதாக்கிக் கொண்டார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அடுத்ததாகத் திரைப்படக் கலைஞர்கள் அமலா பால், பரத், சிவகார்த்திகேயன் அவர்களுடனான கலந்துரையாடலைத் தொகுத்தளித்தார் தொகுப்பாளரும் பன்முகத்திறமும் கொண்ட கலைஞர் பிரியதர்ஷினி.

2012-2014ஆம் ஆண்டுக்கான பேரவையின் செயற்குழுவைத் தேர்தல் அலுவலர் மா.சிவானந்தம் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து பேச வந்தார், அனைவரும் எதிர்பார்ர்பில் காத்துக் கொண்டிருந்த வாழும் வரலாறு, தோழர் நல்லகண்ணு அவர்கள். இந்திய விடுதலைப் போராட்ட அனுபவங்கள் முதலான பலவற்றைக் குறிப்பிட்டுப் பேசி வெள்ளி விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தார். தொடர்ந்து மெல்லிசை இடம் பெறும் என்றிருந்த வேளையில், கடைசித் தருவாயில் விமான நிலையத்தில் இருந்து நேரிடையாக மேடைக்கு வந்து பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்தினார் இந்திய ஆட்சிப் பணியாளர் திரு.சகாயம். தெளிதமிழில் தூயமையான வாழ்வு குறித்த பல குறிப்புகளைக் குறிப்பிட்டுப் பேசி வந்திருந்தோர் மனத்தைக் கொள்ளை கொண்டார்.

ஐங்கரன் மெல்லிசை குழுவினர் நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியில், ‘சின்ன குயில்’ சித்ரா அழகாகப் பாடினார். அவரோடு உள்ளூர் இசைக்கலைஞர் அனிதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாடினர். மெல்லிசை நிகழ்ச்சியின் இடையே மதுரை முத்துவும் தோன்றிப் பேசினார். விழாவுக்குப் பணியாற்றிய தன்விருப்பத் தொண்டர்கள் அனைவருக்கும் சிறப்பளிக்கப்பட்டது.

வெள்ளி விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது அட்சயா அறக்கட்டளை திரு.கிருஷ்ணன் அவர்களுக்குத் தோழர் நல்லகண்ணு வழங்கினார். செனட்டர், ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்தவர்கள், மாநகராட்சித் தலைவர், மாகாண ஆட்சித் துணைச் செயலர் எனப் பலரும் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்துரையாற்றினர். 
வெள்ளி விழாவின் இணையரங்குகளில், தொடர் மருத்துவக் கல்வி முகாம்கள், முன்னாள் பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு, நாட்டாரியல் கருத்தரங்கம், தொழில் முனைவோர் சந்திப்பு, இளையோர் சந்திப்பு, திருமணத் தகவல் தொடர்பு சந்திப்பு எனப் பலவும் இடம் பெற்றிருந்தன. என்றுமில்லாதபடிக்கு, வெள்ளி விழாச் சந்தையில் பூக்கடை, நகைக்கடை, துணிக்கடை, ஆபரணக்கடை என அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றிருந்தன.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுக்கு மறுநாள், வாசிங்டன் வட்டார இலக்கிய ஆய்வுக்கூட்டத்தின் சிறப்பு இலக்கியக் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். அதற்கொப்ப இவ்வாண்டும் இலக்கியக் கூட்டம் திரு.மலர்செல்வன் அவர்களது ஒருங்கிணைப்பில் நடந்தேறியது. அக்கூட்டத்தில். சொல்லின் செல்வி உமையாள் முத்து, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இ.ஆ.ப சகாயம், அரிமா மார்ட்டின், கவனகர் கலை.செழியன், கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன் உள்ளிட்ட பலர் இலக்கியவுரையாற்றினர். அடுத்த ஆண்டுக்கான பேரவையின் ஆண்டு விழா கனடாவில் உள்ள டொரண்டோவில் நடக்க இருப்பதை எதிர்பார்த்து இல்லம் திரும்பினர் தமிழர் கூட்டம்.

நன்றி: தென்றல்

--பதிவர் பழமைபேசி.


7/21/2012

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு

சார்ல்சுடன் நகரில் இருந்து அட்லாண்டா செல்லும் பயணத்தினிடையே எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அழைத்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அய்யா நல்லகண்ணு உங்களுடன் பேச விரும்புகிறார் எனக் கூற, அடுத்த வினாடி தொடர்பில் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள்.

நாங்கள், தன்விருப்பத் தொண்டர்கள் ஒரு தாய்ப்பிள்ளைகளாக இருந்து எப்படி இவ்வளவு பெரிய விழாவை நடத்தினோம், தமிழ்க் கட்டமைப்புக்காக உழைக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு, தன்னலமில்லாத தொண்டினை அமெரிக்க மண்ணில் கண்டு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு ஈரோடு அருட்சுடர் பதிப்பகத்தாரின் வெளியீட்டில் வெளியான ”ஊர்ப்பழமை” நூலைத் தாம் வாசித்ததாகவும், அதில் இடம் பெற்ற பல விழுமியங்கள் தாம் சிறுவயதில் இருக்கும் போது கண்டவை; உங்களுக்கு எப்படித் தெரிய வந்ததெனக் கேட்டு மிகவும் வியந்து பாராட்டினார். அவருக்கு அந்நூலைக் கொடுத்த தமிழ் அன்பர் எவரோ? எங்கிருந்தாலும் நீவிர் வாழ்க!! ஈரோடு நண்பர் ஆரூரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

Take advantage of your week end!

Meet one of the cleanest politician from Tamil Nadu, warrior for the downtrodden , Tamil orator Thozar Nallakannu!!

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு
எழுபது கவனகர் கலை.செழியன்



7/11/2012

FeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன?


தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!

--பாரதிதாசன்


FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

‘தமிழ்ப் பன்முகத்திறன்’ போட்டி என்பது ஒரு பல்லூடக நிகழ்ச்சியாகும். இப்போட்டியின் கூறுகளாக, ‘வாசிப்பு’, ‘பாடுதல்’, ‘மொழி பெயர்த்தல்’, ‘செவிமடுத்து விடை கூறுதல்’, ‘காட்சிக்குரிய தகவு அளித்தல்’, ‘பேச்சு’ முதலானவை இடம் பெற்றிருந்தன.

வெள்ளி விழாவின் இயன்மொழியான, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” என்பதுவும் பேச்சுக்கான தலைப்புகளில் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. அத்தலைப்பின்கீழ், இடம் பெற்ற அனைத்துப் பிரிவுகளிலும் முதல் பரிசினை வென்ற  தென்மத்திய தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த சிறுமி ஸ்ரீநிதி மணிவாசகம் உரையாற்றியது கீழே வருமாறு:

********************************

தமிழே உயிரே வணக்கம். நீயும் நானும் தாயும் சேயுமல்லவா?! நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாய்த் தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

பால் கொடுத்த தாயின் மொழி தமிழே! அவள் ஊட்டிய அமுதும் தமிழே! நீயும் நானும் பேச அவள் கொடுத்ததும் தமிழே! மாண்பு ஈட்டுவதும் தமிழே!

தனித்து இயங்குவதும் தமிழே!! நல்லன தருவதும் தமிழே! நம் வாழ்வுச் செம்மையைப் போற்றுவதும் தமிழே!! அத்தமிழை நாம் மறக்கலாகுமா? நீங்களும் நானும் மறந்து விட்டால் நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாக இருக்க முடியாதல்லவா??

அதனால், நாம் தமிழ் கொண்டே பேசுவோம். தமிழ் கொண்டே சிந்திப்போம். தமிழாலே எழுதுவோம் அன்புச் சொந்தங்களே!!

வெறும் பேச்சுக்குத்தான் நாம் பிறந்தோமா? இல்லை இல்லை. செயற்கரிய செயல்கள் பல செய்ய நாம் பிறந்தோம். அமெரிக்காவில் நான் பிறந்தாலும் என் தாய் மொழி தமிழே!!

தமிழ் செழிக்க நாம் இணைவோம்! செயலால் வெல்வோம்! மறந்துவிடல் ஆகாது! நாம் அனைவரும் தமிழர்! நாம் தமிழர்!!

நம்மை நம்மில் இருந்து பிரிக்க இருக்கின்றன பல. சாதி என்றும், மதம் என்றும் நாம் பிரிந்து விடல் ஆகுமா? அதில் இருந்து விடுபட்டு, நம்மை ஒன்று சேர்த்து வைக்கக் கூடியது நாம் பேசும் நம் தாய் மொழி தமிழாகும். அம்மொழியைப் போற்றுவோம்! எட்டுத் திக்கும் போற்றிப் பரப்பிடுவோம்!!

கலப்புச் சொற்களும், முறையற்ற கல்வியும் மொழியைச் சிதைத்து விடும். ஆகவே, நாம் நம்மால் இயன்ற வரை மொழியைச் சிதைக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழை, தமிழ் நூல்கள் கொண்டு முறையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இச்செயல் ஒன்றே நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். எனவே, நாம் அனைவரும் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தமிழ் கற்போம்! செயலால் வெல்வோம்!!

நாம் அனைவரும் நம்மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும். அன்பு கொள்ள வேண்டும். பெரியோர் வழியில் நின்று, நாமும் தமிழை ஓதிட வேண்டும். தமிழுக்குப் பெருமை சேர்த்திட வேண்டும். ஆம், வருங்காலம் நம் கைகளில்தானே?

நாவினிக்க, நெஞ்சினிக்கத் தமிழ் எட்டுத் திக்கும் பரவட்டும். நம் தமிழ்க்கல்வி வானுயர ஓங்கட்டும். செந்தமிழாலே நாம் என்றும் இணைந்திருப்போம்! செயல்களாலே வென்று காட்டுவோம்!!

வாழ்க பேரவை! வளர்க தமிழ்!!

நன்றி, வணக்கம்!!