1/30/2011

ஆமா, நான் திமுகதான்... இப்ப என்ன?!

கடந்த சில வாரங்களாக, பொங்கல் திருவிழா மற்றும் இதர வேலைகளுக்காக பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல தரப்பட்ட தமிழ் நண்பர்களைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. எங்கு சென்றிடினும், ஒரே மனோநிலைதான்! அது என்ன?

திமுக, திமுக அனுதாபிகள், திமுக தலைவர்கள், தோழமைக் கட்சியினர் என அனைவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு, கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள். காரணம்? தமிழுக்கும் தமிழனுக்கும் நேர்ந்திருக்கும் பின்னடைவு என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.

ஆனால், அமெரிக்காவில் குடியிருக்கும் இவர்களுக்கு ஊரைப்பற்றின நிலை எப்படித் தெரிய வந்திருக்கும்? வேறென்ன?? இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம். தாயகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இணையம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் வரவில்லை என்பதுதான் காரணம்.

இன்னுஞ் சொல்லப் போனால், தாயகத்து நாளிதழ்களும், வார இதழ்களும், இன்னும் பிற ஊடகங்களுமே வெகுசன மனோநிலையைப் பிரதிபலிப்பது இல்லை. மாறாக, தத்தம் கருத்துகளையும் நிலைப்பாட்டையும் கொண்டு செலுத்துவதிலேதான் முனைப்பாய் இருந்து வெற்றி காணத் துடிக்கின்றன.

இச்சூழலில்தான், நமது வெளியூர்ப் பயணங்களும் இன்ன பிற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் அமைந்தன. அரசியல், ஊழல்வாதியால் மக்கள் இன்னலுறுகிறார்கள் என்ற ரீதியில் நண்பர்களுடைய கேலிப் பேச்சுகள். ”அது அப்படி அல்ல; சுயநலவாத மற்றும் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நம்மவர்களால்தான் நமக்கு இன்னல்கள் நிறைய”, என்பது நம் வாதம்.

துள்ளிக் குதித்து எழுந்தனர் நம்மவர்கள். பிரச்சினையை ஆழமாகப் பேசிப் புரிந்து கொள்ள எவருமே ஆயத்தமாக இல்லை. மாறாக, உடன் இருக்கும் சக தமிழனை, திமுக அனுதாபி எனும் பட்டத்தைச் சூட்டி ஆர்ப்பரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். இணையத்தில் கேட்ட, கண்ட பரப்புரைகளை, சொல்லி வைத்தாற்போல் மாய்ந்து மாய்ந்து வாந்தி எடுத்தார்கள்.

கொள்கைகள் இன்னது என அடையாளம் காண முற்படவில்லை. சித்தாந்தங்கள் சிந்தனைக்குள் கொண்டு வரப்படவில்லை. சமூகம் என்பது, பொருளாதாரம், அரசியல் மற்றும் கொள்கைகள் முதலானவற்றோடு இரண்டறக் கலந்தது. அதையொட்டியே, யாவும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை உணரவே இல்லை. வேறு என்னதான் செய்கிறார்கள் இவர்கள்?

”இந்த மாதிரி இன்னமும் திமுகவுக்கு அனுதாபியா இருக்குற ஆட்களாலதான், இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்தே நாட்டைக் கெடுக்கிறானுக இவனுக?”, சக நண்பர் என் முன்னாலேயே கூறியதுதான் இது.

இவருடைய குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். நாட்டிய, நாடகங்களில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், கட்டமைப்பைக் கட்டி, நல்லதொரு வாய்ப்பினை நல்கும் தமிழ்ச் சங்கத்துக்கு உரிய கொடைக் கட்டணத்தை நினைவு கூர்ந்த சில நிமிடங்களில் ஆள் அம்பேல். இவர் பேசுகிறார், ”தாயகத்தில் இலவசத்தின் தாக்கம் அளப்பரியது”.

மனமுவந்து முன்வந்து, தமிழ்க் கட்டமைப்புக்கும் இன்னபிற சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ஈவது, அல்லது தொண்டாற்றுவதை வழக்கமாகக் கொண்ட நம்மவர்கள் எத்தனை பேர்?

சொந்தத் தெருக்களில் வாழும் சக தமிழனிடம், உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது உண்டா?

தன் கிராமத்தில், தன் ஊரில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்திற்கு, ஒரு பார்வையாளனாகச் சென்று அவதானித்த நாள் ஒன்று இவ்விமர்சகருக்கு உண்டா??

வாரம் ஒருமுறை, வேண்டாம், மாதம் ஒரு முறையாவது தன் சொந்த கிராமத்துக்குச் சென்று, ஊர்க்கட்டமைப்பு அல்லது இன்னபிற நிகழ்வுகளில் தன் பங்களிப்பைச் செய்தது உண்டா??

சென்ற தலைமுறையில் எழுத்தறிவின்மையைப் போக்குவது முதன்மைத் தேவையாக இருந்தது. இன்றைக்கு, சிந்தனையறிவின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. கேளிக்கை மற்றும் பொழுது போக்கைத் தவிர்த்து படைக்கப்படும் படைப்புகளுக்கு தொடர்புடைய விமர்சகர்கள் செய்த பங்களிப்பு என்ன?

பொருளாதாரத்தில் மேன்மை அடைய வேண்டும் என்பதைத் தவிர, இனமான மற்றும் தமக்கு ஒத்த விழுமியத்தைப் பற்றி சிந்தனைவயப்பட்டது உண்டா?

தனிமனிதனாய் மிளிரும் பிரச்சாரகரின் பின்னால் அணிவகுப்பதை விடுத்து, அப்படிப்பட்ட பரப்புரையாளரின் கொள்கைகள் மற்றும் இலக்கினைப் பற்றி வினவுவது உண்டா? உணர்வைக் கிளர்ந்து எழச் செய்து, அதற்கு ஆட்படுவதால் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கண்டுவிடுமா?

அமெரிக்கா வந்தும், சாதிப் பற்றைக் கைவிட முடியாமல் திரிகிறோமே? இந்த இலட்சணத்தில், காசு பார்க்கும் அரசியல்வாதியின் வெற்றியே அதில்தான் அடங்கி இருக்கிறது என்பதை உணர்வது எப்படி??

பிரச்சினை என்ற மாத்திரத்தில், தமிழ், தமிழன் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் வந்துவிடுமா தீர்வு? கொள்கைகள் தரித்த மனிதர்கள் உலாவுதல் வேண்டும். அம்மனிதர்களின் வெளிப்பாடாய், கட்சிகள் தோன்றுதல் வேண்டும் என்பதுதானே நியமம்??

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வணிகமயமாக்கல் என மாற்றங்களைத் திணிக்கிறான் வளர்ந்த நாட்டுக்காரன். பகற்பொழுதில் ஐந்து பில்லியன், பத்து பில்லியன் என, உதவுதல் போலக் காசைத் தருகிறான். அன்றைய இராப் பொழுதிலேயே, ஐம்பது பில்லியன், அறுபது பில்லியன் என அறுவடையும் செய்கிறான். அதைப் பற்றிப் பேசினால், கலாசாரக் காவலன் எனக் கேலி பேசுவதில்லை?!

நின்முந்தை, நின் மரபு, நின் மொழி, நின் நானிலம், நின் மக்கள் எனும் உணர்வைத் தரிக்க தனிமனிதனாய் ஒருநாளேனும் சிந்தித்தது உண்டா? முதன்மையாய்த் தமிழில் பேசுவதை ஒரு கணமேனும் செயற்படுத்தியது உண்டா??

கிராமத்தில், பாமரராய் இருந்தும் அழகாய்ச் சொல்வர், “தும்பை வுட்டுட்டு, வாலைப் புடிக்கிறான் இவன்?”. இப்படிப் பின்பற்றக் கூடியனவற்றைச் செய்யாது இருந்து விட்டு, வெற்றுக் கூச்சல் இடும் இவர்களால் ஆகப் போவது ஒன்றும் இல!

திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!!


அவர்கள் அவனைப் பிடிக்கும் வரை, ஒவ்வொருவரும் நேர்மையானவரே!

1/27/2011

கல்வெட்டுகளும் தமிழ்நாடும்!!









கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வெ.இரா.துரைசாமி

1/21/2011

தமிழ்மணம் விருதுகளும், விமர்சனமும்!!

சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் தமிழ்மணம் திரட்டியானது விருது வழங்க்லைச் செவ்வனே நடத்தி முடித்திருக்கிறது. தமிழ் வாசகன் எனும் முறையில் நன்றியும் வாழ்த்துகளும்!

விருதுகள், படைக்கப்பட்ட படைப்புக்கே ஒழிய படைத்தவர்களுக்கு அல்ல. எதிலும் தனிமனிதர்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்வது என்பது களையப்பட வேண்டிய ஒன்று.

பங்கேற்ற நடுவர்கள் தத்தம் மனசாட்சிக்கு ஒப்ப நடந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியே, ஓரிருவர் வழுவி இருந்தாலும் தேர்வுக்குப் பங்கம் நேர்ந்திருக்காது. ஏனெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் பல நடுவர்கள் பணியாற்றினர். ஒருவரது மதிப்பீடு மட்டும் இறுதித் தெரிவினை முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சொறபம்.

கொடுத்த விருதினைத் திருப்பி அளிப்பது என்பது, கட்டமைப்புக்கும் கட்டமைப்பின் நேயர்களுக்கும் எதிரானது.

இறுதியாக, விருதுகள் என்பன கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய நாடப்படுவன அல்ல. அம்முறையில், தத்தம் இடுகையை தாமே விருதுக்குச் சமர்ப்பிப்பதில் அவ்வளவு நியாயம் இல்லை. மாறாக, தாம் வாசித்துச் சிலாகித்து, விருதுக்குத் தகுதியானவற்றை மற்றவர் முன்மொழிதலே சிறப்பாக இருக்க முடியும். இதிலும் சிக்கல் எழும். ஒரே பதிவரின் எண்ணற்ற இடுகைகள் முன்மொழியப்படக் கூடும். அப்படியான நேரத்தில், குறித்த பிரிவின் கீழ் முதலில் சமர்ப்பிக்கப்படும் இடுகை மாத்திரமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு சிலர், பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள். என் பார்வையில் அதுவும் சரியன்று. விருது வழங்கலின் நோக்கத்தில், நயம்மிகு இடுகைகளைத் தெரிவு செய்து பார்வைக்கு வைத்தலும் அடக்கம். அப்படியாக, நயம்மிகு இடுகைகள் பார்வைக்குச் செல்லாமல் தடுப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?

தமிழால் இணைந்தோம்!

ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம்

”எங்கடா உங்கம்மா போயிருக்கு?”

“எங்கம்மா கொழிஞ்சாம்பாறைக்கு, எங்களுக்கு வெச்ச செய்வினைய எடுக்கப் போயிருக்குதுடா!”

எம் நினைவுக்கு எட்டிய வரையிலும், செய்வினை எனும் சொல் முதன்முதலாக மேற்கூறிய உரையாடலின் மூலம்தான் அறிய நேரிட்டது. அதற்குப் பின், எங்கள் ஊரில் சின்னக்கண்ணான் என்பவர் அடிக்கடி பல வீடுகளுக்குச் சென்று வருவதை அவதானித்து இருந்தோம். எங்கள் வீட்டில் அவர் குறித்து வினவியதற்கு, ”பில்லி சூனியம் விடுவிக்கும் வேலை அவருக்கு. அதனால்தான் அவர் மற்றவர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருகிறார்” எனக் கூறினார்கள்.

அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆவல் மிகுதியால், அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் செய்வதை எல்லாம் கண்டு வந்த நாட்கள் பல.

உடுக்கை அடித்து, மந்திரப் பாடல்கள் பல பாடி, ஒருவருக்குள் இருக்கும் பில்லி மற்றும் சூனியத்தை விடுவிப்பார். வேப்பிலையால் மந்திரங்கள் ஓதி, வசியத்தை அகற்றுவார். பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று, பூசனைகள் நடத்தி, பூசனைக்கு வைத்த எலுமிச்சம் பழங்களை வீடுகளுக்கு அரணாக விட்டெறிந்து ஏவலை முறியடிப்பார். கோழிக் குஞ்சுகள் மற்றும் நரபலி இட்டு, இருப்பதாகக் கருதப்படும் வைப்புகளை நிர்மூலமாக்குவார்.

பில்லி என்றால், ஒருவரை ஆட்கொண்டு இருக்கும் நச்சு நிரலி என்பதாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரும் தன்னுள் இருக்கும் ஆன்மா எனும் நிரலியின் சொல்கேட்டுச் செயல்படக் கூடியவராகும். காலையில் எழுந்து, இந்த நேரத்திற்கு இங்கு செல்ல வேண்டும் என எண்ணம் துளிர்க்க, மெய்யானது அக்கட்டுப்பாட்டுக்கு இயங்கும். அக்கட்டுப்பாட்டில் குழப்பத்தை உண்டு செய்யும் விதமாக இயங்குவதுதான் பில்லி என்பதாகும்.

சூனியம் என்றால், ஒருவருக்கு எதுவுமே வாய்க்காது போதல். “அவனுக்கு யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க”, “அவன் ஒரு சூன்யம்டா” என்றெல்லாம் கிராமங்களில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மந்திரிக்கப்பட்ட தகடுகளை வீடுகளில் வைத்தல், ஒருவரது மயிரில் மூன்று இழைகளைச் சேகரித்து அவர்தம் வீட்டில் அவர்தம் காலடி மண்ணோடு சுழியம் போல் புதைத்தல் என்பன அந்த வீட்டிற்கும், காலடி மண்ணுக்கு உரியவருக்கும் சூனியத்தை உண்டு செய்யும் என்பது நம்பிக்கை.

ஏவல் என்றால், துர்ப்பாக்கியமான காரியங்களுக்கு ஒருவரைத் தூண்டுவதன் மூலம் அவரைச் சீரழிப்பது அல்லது பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும். ஒருவருக்குப் பிடித்தமான பானங்கள், பண்டங்கள் முதலானவற்றைப் பூசனையில் வைத்து மந்திரங்கள் பல ஓதி, அவற்றை எல்லாம் அவ்ரைக் கொண்டு நுகரச் செய்வதன் மூலம், ஏவலில் சிக்க வைக்க முடியும் என்பது நம்பிக்கையாகும்.

வசியம் என்றால், தன்வசம் வயப்படுத்துவது. அல்லது, ஆகாக் குணங்களுக்கு ஒன்ற வைப்பது என்பதாகும். இறைச்சி உணவுகள் கொண்டு வசியம் செய்வது. அல்லது ஒரு பெண்ணின் வசம் வீழ்த்துவதற்கு, அப்பெண்ணின் நகம், மயிர் முதலான உடற்கூறினை மந்திரித்து அவரது இருப்பிடத்தில் தரிப்பது போனற செய்லகள் எல்லாம் வசியம் வைத்தல் என்பதாகும்.

வைப்பு என்பது, மேற்கூறியவற்றுக்காக எதோ ஒன்றை வைத்திடச் செய்வதே. அவர்தம் இடத்தில்தான் வைக்க வேண்டும் என்பது இல்லை. அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் வைக்கலாம். அவருக்கு முற்றிலும் தொடர்பில்லாத இடத்திலும் வைக்கலாம்.

செய்வினை என்பது, ஒவ்வாத மாந்திரிகச் செயல்களைச் செய்தல் என்பதாகும். ஆனைமலைக் கோயிலுக்குச் சென்று, அவன் நாசமாகப் போக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, மாசாணியம்மனுக்குச் சினத்தை உண்டாக்கும் வகையில் மிளகாயை அரைத்து அம்மனுக்கு அப்புவதெல்லாம் செய்வினை என்பதே ஆகும்.

மாந்திரீகம் என்பதில் எழுத்துப் பிழை இருக்கிறது. மாந்திரிகம் என்பதே சரி. மந்திரங்கள் அறிந்தவரைக் கொண்டு, மற்றவருக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருட்டு எதைச் செய்தாலும் அதை மாந்திரிகம்/மாந்திரிகன் என்றழைக்கப்படுவது வழக்கம். ஆனால், மாந்திரிகம் என்பது நன்மை பயக்கவும் செய்யும்.

கோயமுத்தூர், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முனியப்பன் கோவிலின் மந்திரங்கள் ஓதிப் பூசித்துத் தரும் கயிற்றைக் கட்டுவதன் மூலம், உடல் உபாதைகள் நீங்குகிறது எனப் பலர் நம்புகிறார்கள். அதுவும் மாந்திரிகம்தான்.

தூக்கமின்மை, குளிர்காய்ச்சல் முதலானவற்றுக்கு, கிட்டா எனும் மூதாட்டி எங்களுக்குச் சிறுவதின் போது துண்டை வீசிக் கொண்டே மந்திரம் சொல்லி, இறுதியில் திருநூறு வைத்துவிடுவது வழக்கம். இதுவும் மாந்திரிகம்தான்!

யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா
திருநீல கண்டம்! .

1/17/2011

கனவில் கவி காளமேகம் - 20

பாருங்க மக்களே, எல்லாம் ஒரு நிதானத்துலயே இல்ல பாருங்க. ஊர் முச்சூடும், வெட்டி வீறாப்பும் முறைச்சலுமுமாவே இருக்காங்க. கேட்டா, இது துன்பகாலம்னு அளக்குறாங்க. என்றா உனக்குத் தும்பம்ன்னு இழுத்துப் புடிச்சிக் கேட்டா, சாயங்காலமான கமுத்துறக்கு பணம் இல்லீங்கறானுக.

ஏண்டாப்பா, வாரத்துல இருக்குறது ஏழு நாளு? அதுல ஒம்போதுதரம் கருமத்தைக் குடிச்சுப் போட்டு அல்லாடாட்டி, கெடையில இருக்க முடியலையான்னு கேட்கலாம். கேட்டா, வுட்ருவாங்களா? செரி, அது அவனுகபாடு? ஆனாலும், இந்தியாவுல ஆண்டுக்கு ஒன்னரை இலட்சம் பேர் தற்கொலை செய்யுறது அறமாலும் அநியாயமுங்க! இதை நெனைச்சிக் கவலைப்படும் போது, நம்ம அப்புச்சி நாவகமும் வந்திட்டுது எனக்கு.

தமிழ்ச் சங்க விழாவுக்குப் போய்ட்டு வந்த களைப்புல, நம்ம அப்புச்சியும் தற்கொலை செய்திட்டாரோ? ஏம்பொறகு வாறதே இல்லைன்னு நினைச்சிட்டே தூங்கிப் போனனுங்க நேத்து. நாம் எப்ப அப்பிச்சிய நெனைச்சி கவலைப்பட்டாலும், குறிப்பறிஞ்சி வாறதுல அப்பச்சி பலே ஆளுங்க. ஆமாங்க, நம்ப கனவுல வந்த அப்பிச்சி, என்ன சொன்னாரு, ஏது சொன்னாருன்னு மேல படிங்க!!

”என்ற பேராண்டி, என்றா பண்றே?”

“க்கும்... சலுப்புல தூங்கீட்டு இருந்தவனை எழுப்பி உட்டுப் போட்டு, கேள்வியப் பாருங்க? ஆமா, ஏனுங்க இத்தினி நாளா ஆள் நடமாட்டத்தையே காணம்??”

“ஆமா, தூங்குறதுல நல்லா வசங்கண்டவன் ஆயிட்ட? அதான் வந்து எதுக்கு செரமத்தைக் குடுக்கோணுமின்னுதான் வாறதை நிறுத்திப் போட்டன் நானு??”

“ஏனுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்க? ஆமா, வசங்கண்டவன்னு சொல்லிச் சொன்னீங்களே, அதென்னோ??”

“அதா... ஒன்னைச் செய்யுறதுல நெம்ப அத்துபடி ஆனவன்னு சொல்றதைத்தான், வசங்கண்டவன்னு சொல்றது. ஆளுமை கண்டவன்னும் சொல்லலாம்டா பேராண்டி!”

“அத்துபடின்னா?”

”என்றா நீயி, இன்னும் அரைவேக்காடாவேதான் இருக்கியா? ஒன்னைச் சொன்னா, அதுல இருந்து மறுக்கா ஒன்னைக் கேக்குற? ஆனாலும், கேட்டுத் தெரிஞ்சிக்கிற பாரு.... அங்கதாண்டா நீ எம் பேராண்டியா நிக்கிற?”

“அப்பிச்சி, இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கட்ட வேண்டாம்.. அத்துபடின்னா என்னொ? அத மொதல்ல சொல்லுங்க... அப்புறம் கேக்குறம் உங்க இராமயாணத்தை!!”

“சொல்றண்டா... சொல்றன்.. சொல்லாம எங்க போயறப் போறேன்? அத்து அப்படின்னு ஒன்னோட எல்லை, வரையறை, வன்மை, அவன்மைன்னு அதைப் பத்தின விபரங்கள். ஆக அத்துபடின்னா, ஒன்றைப் பற்றிய சகலவிபரங்களும்னு ஆகுது!”

“அப்பிச்சி... நான் என்ன திருவாத்தானா? சொல்றதை எல்லாங் கேட்டுப் போட்டுத் தலையாட்டுறதுக்கு... அத்துங்றதுக்கு விளங்குச்சு... அத்துபடிங்கும் போது, வாற ’படி’? இஃகிஃகி, யார்கிட்ட??”

“டேய்... டேய்... நீ ஒரு மஞ்சமாக்காண்டா... ஆனாலும் மடக்கிக் கேக்குறதுல எனக்கு நெம்பப் பெருமையா இருக்குதுடா பேராண்டி?”

“அப்பிச்சி... இன்னுமு ஒன்னைச் சொல்லி இருக்கீங்க இப்ப... அதையும் இதையும் பேசி என்னைக் கோமாளி ஆக்கிறலாம்ன்னு மட்டும் நெனச்சிறாதீக? அத்துபடில வாற, படிக்கு என்ன அர்த்தம்? அப்பொறம், மஞ்சமாக்கான்னு சொல்லித் திட்டுனீங்களே, அப்ப மஞ்சமாக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்?? மாட்டீட்டீங்களா... மாட்டீட்டீங்களா? இஃகிஃகி”

“டேய், டேய்... இர்றா, இர்றா.... அத்துபடி, பரும்படின்னு சொல்லிக் கேட்டு இருப்பியேடா? இதுகள்ல வாற படி அப்படிங்றது குணத்தின் நிலையக் குறிக்கும். அத்த்படி அப்படின்னா, அவன் அதைப் பற்றிய முழுவிபரமும் தெரிந்த நிலையில் இருப்பவன் அப்படின்னு அர்த்தம்”

“ஓ அப்படியா? அப்ப, பரும்படின்னா??”

“பரும்படியா இருந்துட்டேன்... தெனை இந்த வாட்டி பரும்படியாத்தான் முளைச்சி இருக்கு அப்படின்னெல்லாம் சொல்லிச் சொல்றதுடா... அதாவது, ஆழமும் நுணுக்கமும் இல்லாம, மேம்போக்கான நிலையில் இருக்குறதைச் சொல்றதுதான் பரும்படி. இரவை, மாவு அல்லாம் நுணுக்கமா இருக்கும்... பருப்புக எல்லாம், பெருசு பெருசா இருக்கில்ல? அதை உவமைப்படுத்தி வந்த சொல்தான் பரும்படி அப்படிங்றது... விளங்குச்சாடா?”

“நெம்ப நல்லாவே... ஆனா நான் மறக்கல...”

“என்னடா சொல்ற?”

“மஞ்சமாக்கானை உட்டுப் போடுவேன்னு நெனைச்சீங்களா?”

“அதுசெரி.... நீயி மஞ்சமாக்கான் மட்டும் இல்லடா... கோக்குமாக்கானுங்கூட... அதான், ஆறடி வளந்து நிக்கிறியே? அதைப்பத்திச் சொல்ல ஆரம்பிச்சா வெடிஞ்சி போயிரும்... அடுத்தவாட்டி வந்து சொல்றஞ்ச் செரியா?”

“செரீங் அப்பிச்சி... நீங்க சொன்னாச் செரீங்... ஆனா, எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு... உங்ககிட்ட கேக்குறதுக்கு?”

“செரி, விசுக்காக் கேள்றா? என்னோட பூமியில ஒளவை எனக்காகக் காத்திருப்பாடா!!”

“அப்பிச்சி... என்ன நடக்குது அங்க? அது ஆம்பளை ஒளவையா? பொம்பளை ஒளவையா?? அப்புறம் எங்கமுச்சீ...??”

“அதெல்லாம் பூலோகத்தோட போச்சி உங்கமுச்சியோட சங்காத்தம்... நித்திராலோகத்துல அம்சவல்லி ஒளவைதாண்டா எனக்கு எல்லாமும்!”

“அடக் கொடுமையே? இதா பாருங்யா... எங்கயும் இந்த அழிம்புதானா??”

“டேய்... சும்மா பொல்ம்பாமக் கேக்க வேண்டியதைக் கேளு... எனக்கு என்ற அம்சவல்லி காத்திருப்பாடா...”

“போங்க அப்பிச்சி... ஊர்ப் பேர்களைச் சொல்லிக் கேட்கலாமுன்னு இருந்தன்... எல்லாம் மறந்து போச்சுங்க... இந்த ஊர், பட்டி, பாளையம் இதுகளைப் பத்திச் சொல்லுங்க சித்த...”

“ஊர் அப்படின்னா, மக்கள் ஊர்ந்து சென்றடையும் இடம்; இருப்பிடங்கள் இருக்கும் இடம். பட்டி அப்படின்னா, மக்கள் தங்கிச் செல்லும் இடம்.”

“நிறுத்துங்க, நிறுத்துங்க... எங்கூர்ல இருந்து பொழில் வாய்ச்சி, அதாங்க பொள்ளாச்சி வரைக்குமு ஒரே பட்டிகதான்... அப்ப அதுக ஊருக இல்லையா?”

“அட, அந்த மாதிரியான இடங்க பின்னாள்ல ஊர்களாவும் மாறி இருக்கலாந்தானொ?”

“ஆமா... திப்பம்பட்டி, கோலாறுபட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டி, அப்பொறம் பொள்ளாச்சி...”

“திப்பம் அப்படின்னா, பொன் நாணயம்; பொன் நாண்யங்கள் கண்ட இடம் திப்பம்பட்டி”

“கோலா(ர்)றுபட்டின்னா அப்ப?”

“பார்த்த வேலைக்கு ஈடாக, கோலால் நிலத்தை அறுத்து(அளந்து)க் கொடுத்த காணி நிலத்தில் அமைந்த பட்டி”

“ஊஞ்சவேலாம்பட்டி, நானே யூகிக்க முடியுது. அப்ப மாக்கினாம்பட்டி?”

“மாகினம் அப்படின்னா, மேன்மை பொருந்திய ஒருவன் நிர்வாகம் செய்வது. அப்படியானவனின் இடம், மாகினம்பட்டி.”

“நெம்ப சிறப்பாச் சொன்னீங்க அப்பிச்சி... இதுக்கு மேலயும் உங்களை தடுத்து நிறுத்தலை நானு... நெதானமாப் போய்ச் சேருங்க... ஆனா, அம்சவல்லி ஒளவைகூடச் சுத்தீட்டு, இந்தப் பேராண்டிய மறந்துறாதீங்க அப்பிச்சி!”

“செரிச்செரி... நான் வாறனப்ப?”

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மனுசன், நித்திராலோகத்துல போயிக் கூட அறம், பொருள், இன்பம்ன்னு மூணையும் விட்டபாடில்ல போலிருக்கு. அம்சவல்லியத் தேத்தி இருக்கார் பாருங்களே?! எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(கனவில் மீண்டும் வருவார்...)

1/15/2011

வட கரோலைனா பொங்கல் விழா - படப்பிடிப்பு துவங்கியது

பொங்கலோ பொங்கல்! மக்களே, டென்னசி மாகாணத்தின் சட்டனூகா நகரில் இருந்து கிட்டத்தட்ட நடுஇரவில் வட கரோலைனாவின் தலைநகருக்கு வந்து சேர்ந்தோம். அவ்வேளையிலும், தமிழாசான், சொல்வித்தகர் அமரர் கா.காளிமுத்து அவர்களுடைய உறவினருடைய உணவகம் ஒன்றின் அறுசுவை நம்மை “வா, வா” என வரவேற்றுப் புசிக்க வைத்தது.

புசித்து முடித்து, அறைக்குத் திரும்பியதும் தமிழ்மணம் விருதுகளைக் கண்டேன். அகமகிழ்ந்தேன். எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு அதில் அடங்கி இருக்கிறது. நேரம் செலவழித்து எழுதிய பதிவர்களின் உழைப்பு, கட்டமைப்பு உருவாக்கிப் போட்டிதனை அறிவித்து நடத்தி முடித்த தமிழ்மணம் திரட்டியினரின் உழைப்பு, நடுவர்களின் உழைப்பு என எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு, தமிழுக்கு அர்ப்பணிக்கப்பட்டதில் மிகவும் அகமகிழ்கிறேன்.

ஈரோட்டுப் பாசறைக்குப் பல விருதுகள். மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! எம்மவன் பாலாசி படைத்த “புழுக்கள்”. என்றும் எம்மை சிந்தனை வயப்படுத்தக் கூடிய ஒன்று. மாப்பு, ஈரோடு கதிர் படைத்த “கோடியில் இருவர்”, அர்ப்பணிப்பின் அடிநாதத்தை ஊர் உலக்குச் சொல்லும் இடுகை. விருதுக்குப் பெருமை!!

இதோ, அம்மகிழ்ச்சியின் தொடர்ச்சியாய்த் தமிழர் திருநாளைக் காணப் புறப்பட்டு விட்டோம். நேற்றைக்குத் தமிழ்சசி அவர்கள், விளையாட்டாய்க் கேட்டதில் உண்மை இருக்கிறதுதான். ஆனால், ஊக்கமும் உற்சாகமும் பெற அவையெல்லாம் செய்யத்தானே வேண்டி இருக்கிறது?!

இன்றைய நாள், உற்சாகத்தோடும் களிப்போடும் கழியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிவர் மக்களே, தமிழ்விழாக்களுக்கு தத்தம் குடும்பத்தோடு வாருங்கள். சக தமிழரையும் வந்து கலந்து கொள்ளச் செய்யுங்கள். உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கு வலிமையூட்டுங்கள்!!

ஆமாங்கய்யா... இதோ, படப்பிடிப்புத் துவங்கிருச்சு.... அட, இப்பத்தான் அறையிலிருந்து கிளம்பிட்டு இருக்கோமுங்க....



தமிழால் இணைந்தோம்!