2/01/2010

எதிர்த்திசை!

ஏமாந்தா கோமாளியாக்கிடுவாங்க
ஒரே புழுதியும் குப்பையும்
அவன் எப்பவும் அப்படித்தான்
அவன் ரொம்ப மோசம்
துரோகிக படுபாவிக
கழிசடைக கருமாந்தரம்
வெறியனுக, ஆதிக்க சக்திக
த்தூ, மனுசனுகளா அவங்க
அந்த நாடு பொழியுதாமே?
எல்லாம் சுடுகாடு ஆவுது
கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம்
நாஞ்சொன்னா யார் கேக்குறா?
சுரண்டல் மன்னனுக!
எல்லாம் காலக்கொடுமை!!
அழைப்பே இல்லாத
அலைபேசியில்,
என்னது உடனே வரணுமா?
இதோ வந்துட்டேன்!
ஆலாய்ப் பறந்தான்
எதிர்த்திசை நோக்கி!!

1/31/2010

அமெரிக்காவில் H1B: சமீபத்திய மட்டுறுத்தலும், நுழைவு நிராகரிப்பும்!

விபரம் உண்மைதான்! ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இன்று வரையிலும், ஊரில் விடுப்பைக் கழித்துவிட்டு உள்நுழைந்தவர்கள் சிலர் திருப்ப அனுப்பப்பட்டனர் என்பது சரிதான். இதற்கான சுட்டிகள், முதல், இரண்டாவது!

ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனரா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை. மேலும், உள்நுழைவுக்கான இடம் மாறி இருப்பதனால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏனென்றால், பல மாகாணங்களில் பன்னாட்டு விமான நிலையங்களே கிடையாது. ஆகவே, உள்நுழைவுக்கான இடம் மாறுவது என்பது தவிர்க்க முடியாததே!

பிறகு ஏன் இந்தக் கெடுபிடி? சமீபத்திய இந்த சுற்றறிக்கையே காரணம்! இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள், குடியுரிமை இணையத்திலேயே காணப் பெறலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில், உள்நுழைவுக்கான முத்திரை பதியச் சென்றிருக்கிறார். அவரிடம், உம்மை மேற்பார்வை செய்வது உமது நிறுவனத்தினரா அல்லது உமது சேவையைப் பெறும் நிறுவனத்தினரா என்று வினவ, இவர் யதார்த்தமாக, உள்ளது உள்ளபடியே, Yeah, I do report to a manager who is from client எனச் சொல்லி இருக்கிறார். அப்படியானால், நீர் உமது நிறுவனத்திற்கு வேலை செய்கிறீர்கள் என்பதற்கான மேலதிக விபரங்களைத் தாருங்கள் எனப் பணிக்கப்பட்டு, அவர் உள்நுழைவது கிடப்பில் உள்ளது.

H1b தகுதி என்பது மாற்றப்படவில்லை என்றாலும் கூட, அதை நிரூபணம் செய்யக் கூடிய விதம் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதே சரி. உங்களுக்காக, யார் விண்ணப்பித்தார்களோ அல்லது விண்ணப்பிக்கப் போகிறார்களோ அவர்களுக்கே, அந்தவகை உள்நுழைவு பெறுபவர் பணியாற்ற வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம்.

ஒரு நிறுவனமானது, குறிப்பிட்ட வேலையை எடுத்துச் செய்வதற்காக ஒருவரையோ அல்லது பலரையோ அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அதுவே, ஆள்களை அனுப்புவது/தருவிப்பது மட்டுமே அந்த நிறுவனத்தின் பங்காக இருக்குமானால் அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது என்பதே மேற்சொன்ன சுற்றறிக்கையின் நோக்கமாகப்படுகிறது.

ஏற்கனவே உள்நுழைந்து இருப்பவர்களானாலும் சரி, புதிதாக உள்ளே நுழைபவர்களானாலும் சரி, விபரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப, உங்கள் நேர்காணல், உள்புகு உரையாடல் மற்றும் விண்ணப்பத்தின் போதான மேலதிக விபரங்களில் கவனம் செலுத்துங்கள்!

1/30/2010

சீனுவாசன்

பால்ய காலத்து
நண்பனெனும்
தாக்கமவனுக்கு!

நட்பு மாறாமல்
இருந்ததில்
உவகையெனக்கு!

பொன்மாலைப் பொழுதில்
உரிமையோடு
அழைத்தான் அவன்!

அதே உரிமையோடு
வீடு தேடிச்
சென்றேன் நானும்!

அளவளாவினோம்
பாராட்டினோம்
விடைபெற எத்தனித்தோம்!

எல்லாம் சரிடா
இனிமேல் சீனிவாசன்னு
கூப்டாத!
சீனியில் வாசம் செய்பவன்,
எறும்பு; அதனால,
எம்பேரு இனி சீனுவாசன்!!


1/29/2010

தவளை வாயனும், கரண்டி வாயனும்!

சாமக்குருவி

தவளை வாயன்

மணிகண்டங் குருவி

மாங்குயில்


கூகை

கதிர்க்குருவி

கரண்டி வாயன்

கல்திலுப்பி


கானாஞ்சேவல்

செங்காடை

ஆட்காட்டி

நீலகிரிக் குருவி

கான மயில்

நெறக் கெளதாரி


செம்போத்து

கீச்சான்


வானம்பாடி

1/28/2010

திருட்டு யாமம்

ஊதக்காற்றின் சீட்டிச் சத்தம், கூடவே
ஊர்கோடியில் ஒரு நாயின் ஊளைச் சத்தம்!!

சிறிது சிறிதாய் நுண்ணிய ஒலியில்
சில்வண்டுக் கீசுகள்!

வானத்தின் உச்சிக்கு சற்றுக் கீழே
பொன்மயமாய் மதி!

திண்ணையில் இருந்து எழும்பி
கீழே படாமல் பதிந்த கால்கள்!

முற்றம் பார்த்து பின், படிப்படியாய்
வேகமெடுத்த பாதங்கள்!

வீதியின் முனைக்கு வந்ததும்
பின்னோக்கிய விழிகள்!

ஆள்அரவம் இல்லாதன கண்டு
மெதுவாய் மேற்குத் தெருவில்!

நான்கு வீடுகள் தாண்டியதும்
ஒரு பூந்தோட்ட வீடு!

சாளரத்து மூடுபலகையில்
மெலிதாய் தட்டலொன்று!

சிவகாசித் தீக்குச்சி கீறப்பட்டதும்
நீலநிறச் சுடர் பளீர்!

இதயம் ஒன்றுக்கு இன்னொன்றாய்
துடிக்கும் ஒலிப்பைவிடவும்,
உவகையிலும் அச்சத்திலுமாய்
ஆனதொரு மெலிந்த குரல்!

1/27/2010

ருக்குமணி

இளிச்சவாயன்

முக்குருணி

ருக்குமணிக் குருவி
(தங்கக்கழுத்து = ருக்குமணி)

பச்சைக் கொக்கு

முக்குளிப்பான்

கடல் பக்கி

அருவா மூக்கன்

வில்லேந்திரன் குருவி

நொள்ளைமடையானப் போட்டப்ப, மக்க வந்து மத்த மத்த குருவியெல்லாம் கேட்டாங்க அப்புனு. அதான்! செந்தலை, விசிறிவால், பூங்குருவி, கதிர்க்குருவி, வானம்பாடி, சாமக்குருவி, கொசுக்காடை, தளிக்குருவி, தகைவிலான், தாம்படி, கானகத்தி, கீச்சான், இருவாட்சி, சாவக்குருவி, பஞ்சுருட்டான், செம்போத்து, பொட்ட போத்தன்னு எல்லாம் போடத்தான் வேணும். ஆனாப் பாருங்க, இன்னிக்கி ஓய்ஞ்சு ஓய்ஞ்சு வருது! அதுனால அதுகளை இனியொரு நாளைக்கு பாத்துகுலாஞ் செரியா? நல்ல பழமையா எதனா சொல்றதுன்னா சொல்லிட்டுக் கிளம்புங்க அப்ப!

1/26/2010

வெல்லந் தின்ற பாவம் தேடு!

ஒரு முரடன் தேன் வாங்குவதற்காக கடைக்குப் போனான். அவன் வளர்த்து வந்த பூனையும் அவனைத் தொடர்ந்து சென்றது. கடையில் தேன் வாங்கும் போது ஒரு துளி தேன் கீழே சிந்திற்று.

அந்தத் தேன் துளியின் மீது ஒரு ஈ வந்து மொய்த்தது. அந்த சமயம் சுவரில் இருந்த பல்லி ஒன்று, ஈயைப் பிடித்தது. அருகிலிருந்த பூனையானது அந்தப் பல்லியைப் பிடித்துக் குதறியது.

வியாபாரத்திற்கு இடையூறாக நடுவில் விழுந்து கிடக்கும் பூனையின் மேல் அந்த கடைக்காரன் படிக்கல்லை வீசியெறிந்தான். அந்த இடத்திலேயே பூனை உயிரை விட்டது. பூனையின் எசமானனான அந்த முரடன் கோபங்கொண்டு கடைக்காரனை அதே இடத்தில் வெட்டிச் சாய்த்தான்.

கடைக்காரன் சாகவும், பக்கத்தில் இருந்த கடை வீதியில் இருந்த அனைவரும் கோபங்கொண்டு அந்த முரடனை அடித்துக் கொன்றனர். முரடன் இறந்த செய்தி கேட்ட அவனது நண்பர்கள் ஓடோடி வந்து, கடைத் தெருவையே சூறையாடினார்கள். அதுமட்டுமன்றி அந்தக் கடைக்காரர்கள் அனைவரையும் கொன்றார்கள்.

இந்தக் கைகலந்த சண்டையினால் அநேக உயிர்கள் பலி ஆயிற்று. இதைத்தான் கட்டு வாக்கியத்தில், மது சிந்து கலகம் என்று சொல்வது வாடிக்கை ஆயிற்று. இன்றும் உலகில் ஏதோ ஒரு மூலையில் இத்தகைய மது சிந்து கலகங்கள் நடந்த வண்ணமே உள்ளது என அமைதி விரும்பிகள் வருத்தப்படுகிறார்கள்.

மேலும் வெல்லம் தின்று பாவத்தைத் தேடுபவர்களைப் பற்றியும் நாட்டில் உள்ள கிராமத்துப் பெரியவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள். அது என்ன வெல்லம் தின்று பாவம் தேடுவது?

ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த பூனையைக் கொன்று விட்டான். பின்னர், இந்தப் பாவத்தைப் போக்க ஏதாகிலும் பிராயச் சித்தம் உண்டா என சாத்திரங்களைப் புரட்டலானான். அப்போது, தங்கத்தில் பூனை செய்து தானம் தர வேண்டும்; குறைந்த பட்சம் வெள்ளியிலாவது தர வேண்டும் என இருக்கக் கண்டான்.

இவனுக்கு அந்த அளவு செய்ய மனம் இல்லை. சரி, வெல்லத்தில் பூனை செய்து யாராவது ஒருவருக்கு தானம் செய்வது என முடிவு செய்தான். அதன்படியே தனது வெல்ல மண்டியில் உள்ள வெல்லத்தை எடுத்து, முசித்து, அதில் ஒரு பூனையைச் செய்தான்.

பின்னர் அந்தப் பூனையை, வெற்றிலை பாக்கு தட்சிணையோடு ஒரு தட்டில் வைத்துத் தானம் அளிக்க விழைந்தான். தட்டு கை மாறும் சமயத்தில், வெல்லப் பூனையைக் கண்டதும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இவனும் ருசி தாளாது, அதை எடுத்து ‘லபக்’ என வாயில் போட்டுக் கொண்டான்.

தானம் வாங்க வந்தவனோ, “என்ன ஐயா இப்படிச் செய்கிறீர்களே?” என வினவவும் இவன் சொன்னான்,

“சரி போ, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்!! வெல்லந் தின்ற பாவம் எனக்கு, பூனையைக் கொன்ற பாவம் உனக்கு!!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கடை வியாபாரத்தைப் பார்க்கச் சென்று விட்டான். சிவனே என்று வீதியில் சென்று கொண்டிருந்தவன், பூனையைக் கொன்ற பாவத்தைச் சுமக்கிறான் இன்னமும்.

இதைப் போலத்தான், நாட்டிலே பெருமளவு மோசடிகளைச் செய்துவிட்டு சின்னஞ்சிறு அளவிலான ஒன்றைத் தாமே காண்பித்துப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கவலைப்படுகிறார்கள். கூடவே, வெல்லம் தின்ற பாவம் தேடுபவர்களை, திறமைசாலிகள், street smartness people என்று சொல்லி பெருமைப் படுத்துவது கண்டும் மனம் புழுங்குகிறார்கள்.