12/30/2008

சூந்தோ சூந்து!

நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். மூனு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் அந்த வீதம்பட்டி வேலூர் வினாயகங் கோவில் மைதானம் இருக்கே? அட அட, சொல்லி மாளாது போங்க. கோயலைச் சுத்தியும் அரசமர வேப்பமர இணைகள், ஒவ்வொரு இணைக்கும் தனி மேடை கட்டி, அந்த மேடையில மரங்களுக்குக் கீழ சாமி சிலைகள வெச்சி, அவ்வளவு நேர்த்தியா இருக்கும். இதெல்லாம் மைதானத்துலன்னா, கோவில் வளாகத்துக்குள்ள அழகான வில்வமரம் எப்பவும் நல்ல வாசத்தோட தென்றல் காத்தை சிலு சிலுன்னு வீசிட்டே இருக்கும்.

கோயிலோட கொடி மரத்துக்கு, அழகான சிற்பக் கூடத்தை வடிவமைச்சு, அதுக்கு மேலதான் தீபம் ஏத்துறது. ஊரே கூடும், அந்த பதினாலு நாளும் வெகு விமரிசையா இருக்கும். கடைசி நாள் அன்னைக்கு தாங்க, வெடிகளும், சூந்தும், சொக்குப்பனையும் களை கட்டும். வெடிய வெடிய சிறப்பா இருக்கும். நாம பாட்டெல்லாம் பதிஞ்சிட்டு வர்றம் இல்லீங்களா, அப்ப சூந்து ஞாவகம் வர, சூர்யா அவிங்ககிட்ட அதுக்கான பாட்டைக் கேக்க, அவரு தெரியாதுன்னு சொல்லிப் புட்டாருங்க. சரிங்க, எனக்குத் தெரிஞ்ச மேலதிக விபரங்களைப் பாக்கலாம் இப்ப.

தீபம் வெச்சி, அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, ஆம்புளைப் பசங்க அவிங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாங்க. அதுக்குத் தேவையான சூந்தை முன்னாடியே தயார் பண்ணி வெச்சிருப்பாங்க. திறவக்கொடி(பிரிமனை), இல்லீன்னா வட்டமா இருக்குற எதனா ஒன்னை துணியால சுத்தி, அதை தீபத்துக்கு வாங்கி வெச்சு இருக்குற எண்ணையில ஊற வெச்சிடுவாங்க. அந்த வட்டமா இருக்குறத, நாய்ச் சங்கிலி, இல்லீன்னா உறி தொங்க உடுற சங்கிலியோட ஒரு கொணை(முனை)யில கோத்து விட்டுடுவாங்க. மறு கொணைய கையில வாகாப் புடிச்சுக்குற மாதர ஒரு குச்சியோட கட்டி வெச்சிருப்பாங்க. இதைத்தாங்க சூந்துன்னு சொல்லுறது. சூந்துன்னா கொடும்பாவி எரிக்கிறதுன்னும் ஒரு அர்த்தம் இருக்கு.

தீபம் வெச்சி அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, இதைத் தீயில பத்த வெச்சி, லாவகமா சுழட்டி சுழட்டி வெளையாடுவாங்க. காலுக்குள்ள உட்டு சுத்துவோம். தலைமேல சர் சர்ன்னு சுத்துவோம். இப்பிடி அவனவன் அவனவன் திறமையக் காமிப்போம். சும்மா சுத்துனா, ஆட்டம் வாட்டம் அவ்வளவு நல்லா இருக்காது. சுத்தி இருக்குறவிங்க, அதுக்குன்னு இருக்குற பாட்டுகளைப் பாடுவாங்க. பாடப் பாட, சுதியும் ஏறும். ஆனா, அந்தப் பாட்டுகெல்லாம் கொச்சையாவும், பாமரத்தனமாவுந்தான் இருக்கு. கொஞ்சமா நல்லவிதமான பாட்டுகளும் இருக்கு. இஃகிஃகி! எனக்கு ஞாவகம் இருக்குறதெல்லாம், மோசமான பாட்டுகதேன்.

படக்கட்டு படக்கட்டு படுக்கையிலே
படலைச் சாத்தி இருக்கையிலே
............................... (தணிக்கை, இஃகிஃகி)
.....................................................
சூந்தோ சூந்து!

மேக்கால ஊட்டு மாரியப்பனுக்கு
தும்மல் வந்துச்சாம்
செவுட்டுச் சிவகாமிக்கு
ஒடனே மாரு வலிச்சதாம்
மாரு வலிக்குதுன்னு
மாரியப்பன் ஓடி வந்தானாம்
ஓடி வந்த மாரியப்பனுக்கும்
செவுட்டுச் சிவகாமிக்கும்
சூந்தோ சூந்து!

இப்பிடி நெறய இருக்குதுங்க. உங்களுக்கு அந்த மாதர எதனாத் தெரிஞ்சா எனக்கு மின்னஞ்சல் செய்யுங்க. இந்த வட்ட வளையத்துக்கு பதிலா, தட்டுப் போர்ல இருக்குற தட்டுக் கத்தையோட மொனையில தீயை வெச்சி, அதையும் சுத்துவாங்க. அப்புறம், மசத்தனமா கண்டதையும் எரிக்குறதுதேன். இஃகிஃகி!

சொக்கப் பனை/ சொக்கப் பானை எரிக்குற வழக்கமும் இருக்கு. அதாவது, சொக்கர் வந்து காமனை அழிச்சதை ஞாவகப் படுத்துற விதமா, பனையோலைல குச்சு கட்டி, அதையும் கார்த்திகைத் திருநாள் அன்னைக்கு எரிப்பாங்க. அந்த சூந்துப் பாட்டுக தெரிஞ்சா, எனக்கு சொல்லுங்க. அப்புறம், அடுத்த கார்த்திகைக்கு நீங்களும் சூந்து வெளயாடுங்க... இஃகிஃகி!

நீர் ஆழம் கண்டுகிட்டாலும், நெஞ்சு ஆழம் காண முடியாது!

12/29/2008

கொல கொலயா முந்திரிக்கா...

இன்னைக்கு நாம பதியுறது அமிர்தவர்ஷினி அம்மா அவிங்களுக்கான வாசகர் விருப்பம். தொகுப்பில் உதவிய நண்பர், ROCKFORT மகேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி!

சுத்தி வர்றவரும், வட்டமா ஒக்காந்து இருக்குறவிங்களும் பாடுற பாட்டுங்க இது:


கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா

கொல கொலயா முந்திரிக்கா
கோலார்பட்டிக் கத்திரிக்கா

கொல கொலயா முந்திரிக்கா
கொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா

மாமரத்துல மாங்கா
உன்வாயில ஊறுகா

புழுங்கரிசியத் திம்பேன்
பூட்டத்தான ஒடப்பேன்

வடிச்சதண்ணி சிந்துச்சே
வாரி வாரி நக்கிக்கோ

கொல கொலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி!

கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா!!

இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாலே, அம்மணிகளையும் ஆட்டத்துல சேத்திகிட்டு வட்டமா உக்கார வச்சிட்டு ஆட்டத்துல ஒருத்தர் கொல கொலயா சொல்லிகிட்டே உருமா (துண்டு)மாதிரி ஏதாவதை யாராவது ஒருத்தர் பின்னாடி போட்டுட்டு ஓடி தொட்டு விளையாடறதும் சேர்ந்தாதான் பாட்டுக்கே ஒரு கம்பீரம் வரும்! சொன்ன மகராசரு: ராஜ நடராஜன்

கிட்டி விளையாடுற‌ப்ப‌ பாடுற‌ பாட்டு:


ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!!

நாலுக‌ர‌ண்டி நல்லெண்ணெய்
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பய்யா
வழிவிடுங்க மீனாட்ச்சி
மீனாட்ச்சியம்மன் கோயில்ல‌
மில்லல் வாங்கிப் போட்டு
காமாட்ச்சியம்மன் கோயில்ல‌
கம்மல் வாங்கிப் போட்டு
தும்பி, துளசி, தூக்கிப்போட்ட நம்பட்டி!

ஈச்சி.. எலுமிச்சி.. டண் டண் டாமுச்சி!!


சின்ன அம்மிணி / முத்துலெட்சுமி-கயல்விழி அவிங்க‌ நினைவூட்டிய‌ பாட்டு:


குத்த‌டி குத்த‌டி சைன‌க்கா
குனிஞ்சு குத்த‌டி சைன‌க்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!

தாயின் மன‌ம் குழந்தையின் பள்ளிக்கூடம்!

12/28/2008

உழைப்பு


ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்
ஒன்னுமொன்னா பின்னி வெச்சேன்
பார்த்துப் பார்த்துக் க‌ட்டி வெச்சேன்
ப‌க்குவ‌மா ஊஞ்சல் ஆட‌‌ வெச்சேன்
வாகா வாச‌ல் விட்டு வெச்சேன்
ந‌னையாம‌ ந‌ய‌மா இறுக்கி வெச்சேன்
ந‌ல்ல‌ நாள்ல‌ அவ‌ளைக் கூட்டி வந்தேன்
வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!



கொசுறு: ஆண் குருவிதான் கூடு கட்டுமாமுங்க. நல்ல விதமாக் கட்டி முடிச்ச அப்புறம், துணையில்லாம இருக்குற பெண் குருவிய அழைச்சிட்டு வந்து, கட்டின கூட்டைக் காண்பிக்குமாம் இந்த ஆண் குருவி. பெண் குருவி வீட்டை நல்லா சுத்தி பார்த்துட்டு, பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை கழுவிடுமாம்.

ஒருவர் பொறுமை இருவர் நட்பு!

12/27/2008

தினமலர்

நம்ம சூர்யா கிராமத்து விளையாட்டுகளைத் தொடரா பதிஞ்சுட்டு வர்றாருங்க. படிக்கலையின்னா ஒரு எட்டுப் போயிப் படிச்சுட்டு வாங்க. அதைப் படிச்ச தாக்கத்துல, ஊர் வழில நாமெல்லாம் பாடின பாட்டுகள்ல இன்னும் கொஞ்சத்தைப் பார்க்கலாம் இப்ப.

நீயும் நானும் கூட்டு
பாடு ஒரு பாட்டு
சில்லரைய நீட்டு
சிவகாசி வேட்டு
திண்டுக்கல்லுப் பூட்டு
திருப்பித்தலைய ஆட்டு


================================================

பனமரமே பனமரமே பச்சக் கண்ணாடி!
பல்லுப் போன கெழவனுக்கு ரெண்டு பொண்டாட்டி !!

================================================

மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!

================================================

ஒன்னு
ஓடிவா கண்ணு

ரெண்டு
ரோசாப்பூச் செண்டு

மூனு
முகட்டுமேல தேனு

நாலு
நாய்க்குட்டி வாலு

அஞ்சு
அவரக்காப் பிஞ்சு

ஆறு
அதாபாரு தேரு

ஏழு
பானையில கூழு

எட்டு
டமடமக் கொட்டு

பத்து
படுக்கப் போட்டு மொத்து!

================================================

பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?

முருங்கைப்பூ

முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு

மாட்டேன்

================================================

மழை வருது மழை வருது
நெல்லுக் குத்துங்க‌!
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்குச் சுடுங்க‌!
ஏர் ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க‌!
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு போடுங்க!

================================================

பொக்கைப் பல்லு டோரியா
பட்சி பாக்கப் போறியா?
பட்டாணி வாங்கித் தாறேன்
பள்ளிக்கூடம் வாறியா?

================================================

அவரவர் வீட்டுக்கு
அவரைக்கா சோத்துக்கு
பிள்ளைபெத்த வீட்டுக்கு
புளியங்கா சோத்துக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வர்றேன் விளையாட்டுக்கு

================================================

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

ஈரிரிண்டைப் போட‌டா
இறுக்க‌ மாட்டைக் காட்ட‌டா

ப‌ருத்திக் கொட்டை வைய‌டா
முக்க‌ட்டு வாணிய‌ஞ் செக்க‌டா

செக்கும் செக்கும் சேந்தாட‌
வாணிய‌ன் வ‌ந்து வ‌ழ‌க்காட‌
வாணிச்சி வ‌ந்து கூத்தாட‌

நாலைவ‌ச்சி நாலுஎடு
நார‌ய‌ணன் பேரெடு
பேரெடுத்தபின்ன‌ பிச்சையெடு

அஞ்சுவ‌ர‌ளி ப‌சு ம‌ஞ்ச‌ள்
அரைக்க‌ அரைக்க‌ப் ப‌த்தாது
ப‌த்தாத‌ம‌ஞ்ச‌ள் ப‌சு ம‌ஞ்ச‌ள்

ஆக்குருத்த‌லம் குருத்த‌ல‌ம்
அடுப்புத்த‌ண்ட‌ல‌ம் த‌ண்ட‌ல‌ம்
வேம்பு சுட்டா வெங்க‌ல‌ம்

ஏழுபுத்திர‌ச் ச‌காய‌ம்
எங்க‌புத்திர‌ச் ச‌காய‌ம்
மாட்டுப்புத்திர‌ச் ச‌காய‌ம்

எட்டும் பொட்டும்
எட‌க்க‌ண்ணு பொட்டை
வ‌லக்க‌ண்ணு ச‌ப்ப‌ட்டை

ஒம்போதுந‌ரி சித்திர‌த்தை
பேர‌ன் பொற‌ந்த‌து பெரிய‌க‌தை
பெத‌ப்ப‌ம்ப‌ட்டிப் பெரிய‌த்தை

ப‌த்துரா சித்திரா கோலாட்ட‌ம்
ப‌ங்குனி மாச‌ங் கொண்டாட்ட‌ம்!
ஆடிவெள்ளி வ‌ந்துச்சுன்னா
அம்ம‌னுக்க‌ல்ல‌ கொண்டாட்ட‌ம்!!


தலைவாசல்ல படிக்கிறது தினமலரு!
பின்வாசல்ல தாண்டுறது மதில்சுவரு!!

12/26/2008

அப்பிச்சி

முதுகு மேலஏறி பிஞ்சுக் காலால
மிதிச்சுவிட்டா பத்து பைசாகுடுப்பீங்க!
காலுரெண்டும் புடிச்சிவிட்டு வெத்தலை
பாக்கு கொட்டிக்குடுத்தா நாலனாவும்
திறகணிச்சொம்பு நிறைய காப்பித்தண்ணி
தோட்டம் கொண்டுவந்தா எட்டனாவும்
கெழக்காலூரு காளியாத்தா நோம்பிக்கு
கையில பம்பாய்முட்டாய்க்
கடியாரம் பூனைக்கண்ணாடியோட‌
ரெண்டு சீக்கியும் வாங்கித் தருவீங்க!

வேலூர் சந்தையில பொரிஉருண்டை
கெழங்கு வத்தலும் வாங்கிவருவீங்க!!
மணியாமணியான்னு மாருல போட்டுத்தான‌
கொஞ்சுவீங்க; தோள்ள ஒக்காரவெச்சு
காததூரம் காத்துவாங்கப் போவீங்க! இப்ப
எனக்கு சந்தையுமில்ல, நோம்பியுமில்ல,
வாகாக் கதைசொல்ல நீங்களுமில்ல!!

எழுதி வழங்கான் வாழ்க்கை, கழுதை புரண்ட களம்!

புதிதாய்ப் பிறந்தேன்!


புதிதாய்ப் பிறந்தேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

இதயத்தில் உறையும் இருள்
அதில் அமிழ்ந்து சாவதும்,
பின் வீறுகொண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

கனவு மேகம் கலைகிறது, அது
கண்டு மனம் வாடுவதும்,
பின் துளிர்த்து
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

ஏமாற்ற இருள் சூழ்வதும், அது
கண்டு மனக் கண்கள் தவிப்பதும்
பின் நம்பிக்கையொளி கண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

12/25/2008

பெய்த மழையில் காணாமல் போயினவா?

ஊர்ல மழையா கண்ணு? இந்த கேள்விங்றது நம்ம ஊர்கள்ல வணக்கஞ் சொல்லுற அளவுக்குப் புழக்கத்துல இருக்கும். ஆமுங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டா இதான் கேக்குறது. இன்னைக்கு அதெல்லாம் போயி, உங்க வீட்ல அந்தத் தொலைக்காட்சி காணக் கிடைக்குதா, இது கிடைக்குதான்னு கேட்கிற அளவுல வந்து நிக்குது. இங்க அமெரிக்காவுல கேக்குறது, "இன்னும் வேலைலதான இருக்கே? பிரச்சினை ஒன்னும் இல்லியே??"ங்ற அளவுல இருக்குங்க பொழப்பு.

நாம‌ இப்ப‌ விடுப்புல‌தான இருக்கோம். ச‌ரி, ந‌த்தார் விழாவ‌ முன்னிட்டு, ந‌ம்ம‌ அமெரிக்க‌ ந‌ண்பன் திமோதி (Tim)க்கு ஒரு வாழ்த்துச் சொல்வோமேன்னு, தொலைபேசில‌ அழைச்சு, வாழ்த்து சொல்லிப் பேசிட்டு இருந்தேன். அப்ப‌, அவ‌னோட‌ அண்ண‌ன் புது வீடு க‌ட்டி இன்னைக்கு குடி போறானாமுங்க‌. அதைப்ப‌த்தி சொல்ல‌, நாம‌ இந்த‌ சூழ்நிலையில‌ எதுக்கு புது வீடுன்னு கேட்க‌, அவ‌ன் சொன்னான், "ம‌ணி, இது அவ‌னும் எங்க‌ப்பாவுமா சேந்து க‌ட்டின‌ வீடு. வெளியாளுக‌ யாரும் க‌ட்ட‌லை, அத்னால‌ வெறும் $90000தான் செல‌வு ஆச்சு!". என‌க்கா ஒரே ஆச்ச‌ரிய‌ம், "என்ன‌து, அவிங்க‌ளே க‌ட்டிட்டாங்க‌ளா? க‌ட்டிட‌ வேலை செய்ய‌த் தெரியுமா??"ன்னு ம‌றுப‌டியும் கேட்டு உறுதிப் படுத்திகிட்டேன்.

போன‌ வார‌ம் என்ன‌டான்னா, நம்ம த‌மிழ் ந‌ண்ப‌ர் ஒருத்த‌ரு, அவ‌ரே ஒரு விசைப் ப‌ட‌கை, வீட்டுப் புற‌க்கொல்லைல‌யே க‌ட்டிகிட்டேங்றாரு. இப்ப‌ இது எல்லாம் எதுக்கு சொல்ல‌ வ‌ர்றேன்னா, இங்க‌ அமெரிக்கால, இது ஒன்னைப் பாராட்டியே ஆக‌னும்ங்க‌. என்ன‌தான் அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சின்னாலும், ப‌ழ‌மைய‌க் காப்பாத்துற‌துல‌ இவிங்க‌ள‌ மிஞ்ச‌ ஆளே கிடையாது. முழுநேர‌த் தொழில் ஒன்னா இருக்கும், ஆனாலும் கிடைக்குற‌ உப‌ரி நேர‌த்துல‌ விவ‌சாய‌ம், மீன்பிடித் தொழில், வீடு க‌ட்டுற‌து, தேனீ வ‌ள‌க்குற‌துன்னு எதாவ‌து ஒன்னு செய்துட்டு இருப்பாங்க‌. ஆச்ச‌ரிய‌மா இருக்கு. திமோதியோட‌ அண்ண‌ன் இங்க‌ இருக்குற‌ வ‌ங்கியில‌, மென்பொருள் க‌ட்டுமான‌ நுட்ப‌ இய‌க்குன‌ர் (technical director). ஆனாலும், கொத்த‌னார்/த‌ட்டான் வேலைல‌ அத்துப‌டியா இருக்காரே?! நான் போயி, ஏர் பிடிச்ச‌ன்னு வெச்சிகோங்க‌, ஊர்ச‌ன‌ம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும். என‌க்கு ஏர் பிடிக்க‌த் தெரியும்னு சொன்னா, நீங்க‌தான் ந‌ம்புவீங்க‌ளா என்ன‌?!

இப்ப‌டி அமெரிக்காவுல‌, ப‌ழ‌மை ப‌ற்றின‌ ஆராய்ச்சியும், பேணுவ‌தும் ச‌த்த‌மில்லாம‌ ந‌ட‌ந்துட்டுதான் இருக்கு. என‌க்குகூட‌, வீர‌ப்ப‌னைக் கொன்னு போட்டாங்க‌ன்னு சொன்ன‌ உட‌னே வ‌ருத்த‌மா இருந்துச்சு. அவ‌ர் மேல‌ இருந்த‌ அனுதாப‌மோ, அவ்ர் நிர‌ப‌ராதின்னோ நான் சொல்ல‌ வ‌ர‌லை. காட்டாட்சி ந‌ட‌த்தின‌ ஒருத்த‌ர்கிட்ட‌, அவ‌ரோட‌ அனுப‌வ‌ங்க‌ள், இய‌ற்கை ப‌ற்றின‌ நுணுக்க‌ங்க‌ள் எல்லாம் தெரிஞ்சி, அதுகளை ஆய்வுக்குட்ப‌டுத்துற‌ ஒரு வாய்ப்பு சாக‌டிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தேங்ற‌ ஒரு ஆத‌ங்க‌ம்தான். அவ‌ருக்கு இய‌ற்கைய‌ப் ப‌ற்றின‌ விப‌ர‌ங்க‌ள் எல்லாம் அத்துப‌டியாமுங்க‌. அதுவும் அவ‌ரோட‌ அனுப‌வ‌த்துல‌ வ‌ந்த‌தாமுங்க‌. ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறிக‌ள‌ அவர் சொன்ன‌தாப் ப‌டிச்ச‌துல‌ இருந்து, என‌க்கு நினைவுல‌ இருக்குற‌து.

தாழ்வான‌ ப‌குதியில‌ இருக்குற‌ எறும்புக‌ள், மேடான‌ இட‌த்துக்கு சாரை சாரையா உண‌வுப் பொருளைக் க‌ட‌த்தினா, அது ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறி.

ப‌ற‌வைக‌ள் முன்கூட்டியே கூட்டுக்கு வந்து அடைஞ்சாலோ, அல்ல‌து வ‌ழ‌க்க‌மா கிள‌ம்பிப் போகுற‌ திசையில‌ ஏதாவ‌து மாற்ற‌ம் இருந்தாலோ, அது ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறி.

புழுக்கமா இருந்து, தும்பிக் கூட்ட‌ம் தாழ்வா ஒரு தொகுதியாப் ப‌ற‌ந்து ஆல‌வ‌ட்ட‌ம் போட்டாலும், அன்னைக்கு ம‌ழை வ‌ருமாமுங்க‌.

தெளிஞ்சு இருக்குற‌ வான‌த்துல‌, நிலாவைச்சுத்தி வ‌ட்ட‌மா வெண்மேக‌ம் சூழ்ந்து இருந்தாலும் அது ம‌ழைக்கான‌ அறிகுறியாமுங்க‌.

காற்றோட்ட‌ம் திசைமாறி, ம‌ண்வாச‌னை அடிக்கிற‌ப்ப‌வும் ம‌ழை வ‌ருமாம். கொங்கம‌ழை, கோடை ம‌ழைன்னெல்லாம் சொல்லுவாங்க‌. அதுக‌ளுக்கான‌ விப‌ர‌ம் ம‌ற‌ந்து போச்சுங்க‌. ஊருக்குப் பேசும்போது கேட்க‌ணும்.

அடிவானங் கறுத்தாலும், சீக்கிரத்துல மழை வரும். இப்படி, பெரியவிங்க இயற்கைய நல்லாப் புரிஞ்சு வெச்சிருந்தாங்க. சரிங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி மழை அடிக்கும் போது, எனக்கு ஏற்பட்ட பழைய நினைவுகள‌யும் இங்க பதியுறேன்.

சூழல்: மழை பெய்த இரவுக்கு ஒட்டிய காலை நேரம்

முற்பகலிலே கட்டியம் கூறிய,
தும்பிக்கூட்டம்!
பெய்த மழையில் பெருத்துப்போன
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போன கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்த ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்,
நீர் கிழிய அதில் ஏர்க்குச்சி ஓட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக் களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!

ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!!