குடித்த பால் ஒழுகிட
அம்மாவெனத் தேன் சிந்திய
வாயில் ஒலித்தது தமிழன்றோ?!
அக்குழந்தையின் கிளிப்பேச்சு
தமிழேயன்றோ??
வானத்து வெண்ணிலவு
நீல்கடலின் கதிரவன்
பொற்றாமரைக்குளத்து ஆம்பல்
அவையனைத்தும் தருமிகு வியப்பினை
தேனொக்கப் பகர்ந்ததுவும் தமிழன்றோ??
அம்மா, அப்பா, அண்ணா, அக்காளென
உறவு பாராட்டிக் கொஞ்சியதும்
பாவிசைத்த பாவலனின் நாவிலும்
இறைவனைத் தொழுத கணம்
இன்புற்ற கான நேரமென எதிலும் எங்கும்
தெளிதேனாய் இனித்ததுவும் தமிழன்றோ?!!
ஞாலத்துத் தமிழரெலாம் கண் கொண்டு பார்த்திடுவார்; பாரெங்கும் பரவியுள பாசமிகு தம்பிமார் நோக்கிடுவார்; அவனியெங்கும் அருந்தமிழின் நயம் போற்றும் அன்னைத் தமிழ் மக்காள் வாழ்த்திடுவார்; நனிச்சிறப்பின் கட்டியமாம் எங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவைத்தான்! நனிச்சிறப்பின் கட்டியமாம் எங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவைத்தான்!!
வட அமெரிக்க தமிழர்களையெலாம் ஒன்று கூட்டி, தமிழ்ப் பண்பாடு போற்றுகிற வகையிலே, வேகமாய் நகரும் இயந்திர வாழ்விலே இருந்து சற்று விலகி, முந்தையையும் தனதையும் இனம் கண்டு, அடையாளத்தைப் பேணிப் பாதுகாக்கிற வகையிலே, வாழ்வியற் கூறுகளனைத்தையும் அந்த மூன்று நாட்களுக்குள்ளாக அடக்கி சமச்சீரோடு வழங்கப்படுவதுதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா1
வழமை போல இந்த ஆண்டும், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவாக, வட அமெரிக்கத் தமிழரின் வாழ்வில் பெருவொளியோடு, தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடன் எனும் எழில்மிகு பெருநகரில் மிளிர இருக்கிறது. எந்தவொரு விழாவுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு, 2011ம் ஆண்டு தமிழ் விழாவுக்கு இருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது.
ஏன் அப்படிச் சொல்கிறோம்? தமிழைத் தொழுகிற தமிழர்கள் வாழும் ஊர் இச்சார்ல்சுடன். தமிழை உயிர் மூச்சாகக் கொண்டு தொண்டுள்ளம் போற்றும் மக்கள் நடத்துகிற சங்கம், பனைநிலத் தமிழ்ச் சங்கம். தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றுகிற பெண்டிர் சிறப்பொக்கும் விழாதான், பெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழா!!
மேலப்பெருமழை எனும் ஊரைச் சார்ந்த, தமிழ் ஆராய்ச்சியாளர். சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றுக்கு உரை எழுதி தமிழின் பெருமையை நிலைநாட்டுவதிலே பெரும்பங்கு ஆற்றியவர்தான் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள்.
தமிழர்களே, வட அமெரிக்காவின் தமிழுக்கும் தமிழனுக்குமான கட்டமைப்பை உருவாக்கிப் பேணுவது தமிழனின் கடமை. வாருங்கள், ஒன்று கூடுவோம். விழாக் காண்போம். வாழ்வைச் சிறப்புறச் செய்வோம்.
இளைஞர்கள், சிறுவர்கள், பெற்றோர், மாணவர்கள், பெரியவர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், முனைவோர் எனப் பலரையும் சிறப்பிக்கும் வண்ணம், அவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ்விழா. இவ்வாண்டும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
விழா நடைபெறப் போகுமிடமோ, ஒரு எழிலார்ந்த நகரம். கடற்கரை நகரம். நல்லதொரு மீனகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. அதையொட்டி, தமிழ்ச்சான்றோர் பலர் வந்து சிறப்பிக்க உள்ளார்கள். இளைய தளபதி விஜய், குணச்சித்திர நடிகர் நாசர், கவிஞர் கலைமாமணி நா.முத்துக்குமார், பாட்கர்கள் A.V.இரமணன், உமா இரமணன், பிரன்னா, கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், கோடைமழை வித்யா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் புதுகை பூபாளம் என எண்ணற்றோர் சிறப்புமிகு நிகழ்ச்சிகளை உங்களுக்கு வழங்க உள்ளனர்.
காலம் தாழ்த்தாது, உடனே விழா நிகழ்ச்சிகளைக் காண முன்பதிவு செய்திடுவீர். www.fetna.org
ஜூலை 1-4, 2011, திருவள்ளுவராண்டு 2042
கில்யார்டு அரங்கம், இச்சார்ல்சுடன், தென் கரோலினா.
2 comments:
FeTNA - தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் விழா பற்றியச் செய்தியைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தம்பி மணி
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்
அண்ணா, கண்டிப்பா குடும்பதோடு வந்துடரேன்........
Post a Comment