1/17/2011

கனவில் கவி காளமேகம் - 20

பாருங்க மக்களே, எல்லாம் ஒரு நிதானத்துலயே இல்ல பாருங்க. ஊர் முச்சூடும், வெட்டி வீறாப்பும் முறைச்சலுமுமாவே இருக்காங்க. கேட்டா, இது துன்பகாலம்னு அளக்குறாங்க. என்றா உனக்குத் தும்பம்ன்னு இழுத்துப் புடிச்சிக் கேட்டா, சாயங்காலமான கமுத்துறக்கு பணம் இல்லீங்கறானுக.

ஏண்டாப்பா, வாரத்துல இருக்குறது ஏழு நாளு? அதுல ஒம்போதுதரம் கருமத்தைக் குடிச்சுப் போட்டு அல்லாடாட்டி, கெடையில இருக்க முடியலையான்னு கேட்கலாம். கேட்டா, வுட்ருவாங்களா? செரி, அது அவனுகபாடு? ஆனாலும், இந்தியாவுல ஆண்டுக்கு ஒன்னரை இலட்சம் பேர் தற்கொலை செய்யுறது அறமாலும் அநியாயமுங்க! இதை நெனைச்சிக் கவலைப்படும் போது, நம்ம அப்புச்சி நாவகமும் வந்திட்டுது எனக்கு.

தமிழ்ச் சங்க விழாவுக்குப் போய்ட்டு வந்த களைப்புல, நம்ம அப்புச்சியும் தற்கொலை செய்திட்டாரோ? ஏம்பொறகு வாறதே இல்லைன்னு நினைச்சிட்டே தூங்கிப் போனனுங்க நேத்து. நாம் எப்ப அப்பிச்சிய நெனைச்சி கவலைப்பட்டாலும், குறிப்பறிஞ்சி வாறதுல அப்பச்சி பலே ஆளுங்க. ஆமாங்க, நம்ப கனவுல வந்த அப்பிச்சி, என்ன சொன்னாரு, ஏது சொன்னாருன்னு மேல படிங்க!!

”என்ற பேராண்டி, என்றா பண்றே?”

“க்கும்... சலுப்புல தூங்கீட்டு இருந்தவனை எழுப்பி உட்டுப் போட்டு, கேள்வியப் பாருங்க? ஆமா, ஏனுங்க இத்தினி நாளா ஆள் நடமாட்டத்தையே காணம்??”

“ஆமா, தூங்குறதுல நல்லா வசங்கண்டவன் ஆயிட்ட? அதான் வந்து எதுக்கு செரமத்தைக் குடுக்கோணுமின்னுதான் வாறதை நிறுத்திப் போட்டன் நானு??”

“ஏனுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்க? ஆமா, வசங்கண்டவன்னு சொல்லிச் சொன்னீங்களே, அதென்னோ??”

“அதா... ஒன்னைச் செய்யுறதுல நெம்ப அத்துபடி ஆனவன்னு சொல்றதைத்தான், வசங்கண்டவன்னு சொல்றது. ஆளுமை கண்டவன்னும் சொல்லலாம்டா பேராண்டி!”

அத்துபடின்னா?”

”என்றா நீயி, இன்னும் அரைவேக்காடாவேதான் இருக்கியா? ஒன்னைச் சொன்னா, அதுல இருந்து மறுக்கா ஒன்னைக் கேக்குற? ஆனாலும், கேட்டுத் தெரிஞ்சிக்கிற பாரு.... அங்கதாண்டா நீ எம் பேராண்டியா நிக்கிற?”

“அப்பிச்சி, இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கட்ட வேண்டாம்.. அத்துபடின்னா என்னொ? அத மொதல்ல சொல்லுங்க... அப்புறம் கேக்குறம் உங்க இராமயாணத்தை!!”

“சொல்றண்டா... சொல்றன்.. சொல்லாம எங்க போயறப் போறேன்? அத்து அப்படின்னு ஒன்னோட எல்லை, வரையறை, வன்மை, அவன்மைன்னு அதைப் பத்தின விபரங்கள். ஆக அத்துபடின்னா, ஒன்றைப் பற்றிய சகலவிபரங்களும்னு ஆகுது!”

“அப்பிச்சி... நான் என்ன திருவாத்தானா? சொல்றதை எல்லாங் கேட்டுப் போட்டுத் தலையாட்டுறதுக்கு... அத்துங்றதுக்கு விளங்குச்சு... அத்துபடிங்கும் போது, வாற ’படி’? இஃகிஃகி, யார்கிட்ட??”

“டேய்... டேய்... நீ ஒரு மஞ்சமாக்காண்டா... ஆனாலும் மடக்கிக் கேக்குறதுல எனக்கு நெம்பப் பெருமையா இருக்குதுடா பேராண்டி?”

“அப்பிச்சி... இன்னுமு ஒன்னைச் சொல்லி இருக்கீங்க இப்ப... அதையும் இதையும் பேசி என்னைக் கோமாளி ஆக்கிறலாம்ன்னு மட்டும் நெனச்சிறாதீக? அத்துபடில வாற, படிக்கு என்ன அர்த்தம்? அப்பொறம், மஞ்சமாக்கான்னு சொல்லித் திட்டுனீங்களே, அப்ப மஞ்சமாக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்?? மாட்டீட்டீங்களா... மாட்டீட்டீங்களா? இஃகிஃகி”

“டேய், டேய்... இர்றா, இர்றா.... அத்துபடி, பரும்படின்னு சொல்லிக் கேட்டு இருப்பியேடா? இதுகள்ல வாற படி அப்படிங்றது குணத்தின் நிலையக் குறிக்கும். அத்த்படி அப்படின்னா, அவன் அதைப் பற்றிய முழுவிபரமும் தெரிந்த நிலையில் இருப்பவன் அப்படின்னு அர்த்தம்”

“ஓ அப்படியா? அப்ப, பரும்படின்னா??”

“பரும்படியா இருந்துட்டேன்... தெனை இந்த வாட்டி பரும்படியாத்தான் முளைச்சி இருக்கு அப்படின்னெல்லாம் சொல்லிச் சொல்றதுடா... அதாவது, ஆழமும் நுணுக்கமும் இல்லாம, மேம்போக்கான நிலையில் இருக்குறதைச் சொல்றதுதான் பரும்படி. இரவை, மாவு அல்லாம் நுணுக்கமா இருக்கும்... பருப்புக எல்லாம், பெருசு பெருசா இருக்கில்ல? அதை உவமைப்படுத்தி வந்த சொல்தான் பரும்படி அப்படிங்றது... விளங்குச்சாடா?”

“நெம்ப நல்லாவே... ஆனா நான் மறக்கல...”

“என்னடா சொல்ற?”

“மஞ்சமாக்கானை உட்டுப் போடுவேன்னு நெனைச்சீங்களா?”

“அதுசெரி.... நீயி மஞ்சமாக்கான் மட்டும் இல்லடா... கோக்குமாக்கானுங்கூட... அதான், ஆறடி வளந்து நிக்கிறியே? அதைப்பத்திச் சொல்ல ஆரம்பிச்சா வெடிஞ்சி போயிரும்... அடுத்தவாட்டி வந்து சொல்றஞ்ச் செரியா?”

“செரீங் அப்பிச்சி... நீங்க சொன்னாச் செரீங்... ஆனா, எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு... உங்ககிட்ட கேக்குறதுக்கு?”

“செரி, விசுக்காக் கேள்றா? என்னோட பூமியில ஒளவை எனக்காகக் காத்திருப்பாடா!!”

“அப்பிச்சி... என்ன நடக்குது அங்க? அது ஆம்பளை ஒளவையா? பொம்பளை ஒளவையா?? அப்புறம் எங்கமுச்சீ...??”

“அதெல்லாம் பூலோகத்தோட போச்சி உங்கமுச்சியோட சங்காத்தம்... நித்திராலோகத்துல அம்சவல்லி ஒளவைதாண்டா எனக்கு எல்லாமும்!”

“அடக் கொடுமையே? இதா பாருங்யா... எங்கயும் இந்த அழிம்புதானா??”

“டேய்... சும்மா பொல்ம்பாமக் கேக்க வேண்டியதைக் கேளு... எனக்கு என்ற அம்சவல்லி காத்திருப்பாடா...”

“போங்க அப்பிச்சி... ஊர்ப் பேர்களைச் சொல்லிக் கேட்கலாமுன்னு இருந்தன்... எல்லாம் மறந்து போச்சுங்க... இந்த ஊர், பட்டி, பாளையம் இதுகளைப் பத்திச் சொல்லுங்க சித்த...”

“ஊர் அப்படின்னா, மக்கள் ஊர்ந்து சென்றடையும் இடம்; இருப்பிடங்கள் இருக்கும் இடம். பட்டி அப்படின்னா, மக்கள் தங்கிச் செல்லும் இடம்.”

“நிறுத்துங்க, நிறுத்துங்க... எங்கூர்ல இருந்து பொழில் வாய்ச்சி, அதாங்க பொள்ளாச்சி வரைக்குமு ஒரே பட்டிகதான்... அப்ப அதுக ஊருக இல்லையா?”

“அட, அந்த மாதிரியான இடங்க பின்னாள்ல ஊர்களாவும் மாறி இருக்கலாந்தானொ?”

“ஆமா... திப்பம்பட்டி, கோலாறுபட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டி, அப்பொறம் பொள்ளாச்சி...”

“திப்பம் அப்படின்னா, பொன் நாணயம்; பொன் நாண்யங்கள் கண்ட இடம் திப்பம்பட்டி

கோலா(ர்)றுபட்டின்னா அப்ப?”

“பார்த்த வேலைக்கு ஈடாக, கோலால் நிலத்தை அறுத்து(அளந்து)க் கொடுத்த காணி நிலத்தில் அமைந்த பட்டி”

“ஊஞ்சவேலாம்பட்டி, நானே யூகிக்க முடியுது. அப்ப மாக்கினாம்பட்டி?”

“மாகினம் அப்படின்னா, மேன்மை பொருந்திய ஒருவன் நிர்வாகம் செய்வது. அப்படியானவனின் இடம், மாகினம்பட்டி.”

“நெம்ப சிறப்பாச் சொன்னீங்க அப்பிச்சி... இதுக்கு மேலயும் உங்களை தடுத்து நிறுத்தலை நானு... நெதானமாப் போய்ச் சேருங்க... ஆனா, அம்சவல்லி ஒளவைகூடச் சுத்தீட்டு, இந்தப் பேராண்டிய மறந்துறாதீங்க அப்பிச்சி!”

“செரிச்செரி... நான் வாறனப்ப?”

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மனுசன், நித்திராலோகத்துல போயிக் கூட அறம், பொருள், இன்பம்ன்னு மூணையும் விட்டபாடில்ல போலிருக்கு. அம்சவல்லியத் தேத்தி இருக்கார் பாருங்களே?! எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(கனவில் மீண்டும் வருவார்...)

9 comments:

Naanjil Peter said...

“ஊர் அப்படின்னா, மக்கள் ஊர்ந்து சென்றடையும் இடம்; இருப்பிடங்கள் இருக்கும் இடம். பட்டி அப்படின்னா, மக்கள் தங்கிச் செல்லும் இடம்.”

அருமையான கருத்துப்பரிமாற்றம். நல்ல சொல்வளம்.
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்
www.fetna.org

Chitra said...

ஊர்களின் பெயர் காரணங்களை , நல்லா சொல்லி இருக்கீங்களே.... இப்படித்தான் அப்போ அப்போ தமிழுக்கே - தமிழில், கோனார் உரை தேவைப்பட்டு விடுகிறது. :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடடா.. நம்ம ஊர் பக்கத்துல இருக்கற ஊர்களோட பேருக்கான அர்த்தம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

அப்பிச்சி அடிக்கடி வரட்டும்.

தமிழ் said...

அருமை

ஷர்புதீன் said...

கலோக்கியல்ல படிக்க அடியேனுக்கு சற்று சிரமமாக இருக்கும்., ( நான் என்னைய சொன்னேன்) :-)

Unknown said...

பழமை,
நான் இந்த விளையாட்டுக்கு வரலை. எங்க ஊரு பக்கம் இருக்கிற கிராமம் பேருக்கு விளக்கம் மட்டும் கேட்க மாட்டேன். பின்னிடுவாங்க பின்னி. வேண்டாம் இந்த விளையாட்டு.

vasu balaji said...

அப்புச்சியக் கண்டு எத்தன காலமாச்சு. அடடா பாதிய சொல்லிட்டு போய்ட்டாரே. அடுத்தவாட்டி வரட்டும் இதயும் கேளுங்க. பேட்டை,புரம்,பாக்கம்,வாக்கம்,இதெல்லாமு என்னான்னு.

LinuxAddict said...

"கோலா(ர்)றுபட்டி", back then when we used to walk to Palani for thai poosam, that used to be our first pit stop.

அரசூரான் said...

ம்ம்ம்... பொழில் வாய்ச்சி-தான் பொள்ளாச்சியா? அருமை.
எங்கூருல ஆடு,மாடு அடையர இடம்தான் பட்டி.
அடியக்கமங்கலம்-ன்னு ஒரு ஊரின் பெயர், பட்டி இல்ல ஊர் இல்லையேன்னு நினைக்காதீங்க. தரங்கம்பாடி வந்த வெள்ளைக்கார துரை ஒரு பெண்ணை பார்த்து இந்த ஊரின் பெயர் என்னன்னு கேட்க, துரை கேட்பது விளங்காமல் அந்த அம்மிணி “அடி அக்கா மங்களம்”-ன்னு அருகில் உள்ள அக்காவை அடிக்கடி அழைக்க அதுதான் ஊர் பெயர் என்று துரை “அடியக்கமங்கலம்”-ன்னு பதிவு செஞ்சிட்டார்... இஃகி...இஃகி.