6/19/2010

என் வங்கணச் சிங்கியைக் காணவில்லையே?!

அதுவொரு மாலை நேரம்.... ஊருக்குத் தெற்காலே வளைந்து நெளிந்து ஓடும் செண்பக ஓடை... ஓடையின் இரு மருங்கிலும் பச்சை விரிப்பு காலம் முழுதும் விரிக்கப்பட்டே இருக்கும்...

அங்கேதான் சிங்கி சரசுவும் தன் கால்நடைகளை மேய்ச்சல்ப் புல்தரையில் மேயவிட்டபடி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி இருப்பாள். ஓடையைக் கடந்துதான் அணிக்கடவு, இராமச்சந்திராபுரம், நஞ்சேகவுண்டன் புதூர் முதலான ஊர்களுக்குச் சென்றாக வேண்டும்.

ஓடையைக் கடந்து செல்வோரெல்லாம், ஓடையின் வரவியைத் தழுவி வரும் தென்றலைத் தரிசிக்கிறார்களோ இல்லையோ, சிங்கி சரசுவின் மீது கடைக்கண் பார்வையை வீசாமற் செல்வது இல்லை. பார்வை கிட்டாத கண்கள், உள்ளீடு இல்லாத கோவைப்பழம் கண்ட அணில்கள் போலச் செல்வதும் வழமை.

இப்படியாக வீதம்பட்டி வேலூர் சார்ந்த எட்டுப்பட்டிக் கண்களுக்கும் பரிச்யமான சிங்கிக்கும் ஒரு சிங்கன் உண்டு. சிங்கனுக்குச் செங்காட்டுத் தோப்பில்தான் ஊழியம். சிங்கிக்குச் சொல்லிப் படைத்தவன் போலவே இருப்பான் சிங்கனும்; பரந்த மார்பு, தினவெடுத்த தோள்கள், வைர உலக்கைகளாய்க் கைகள், வலது கையின் மணிக்கட்டின் மேற்புறமாக இறுகக் கட்டிய கருப்பராயன் கயிறு....

எப்போதும் போலவே, அந்தி சாயும் நேரத்தில், செண்பக ஓடையின் ரெட்டைப் புளியமரம் தாண்டிய மறைவுப் பகுதிக்கு வருகிறான். மோகனத்தகிப்பில் இருக்கும் அவன் கண்கள் நாலாபுறமும் ஊடுருவித் தோற்கிறது.... தோற்ற குறிப்பறிந்து, பிரேம வெக்கையில் வெளிப்படுகிறது பாடல்.....


சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!
சிங்கியைக் காமப்பசுங்கினிப் பேடைடைச்
சீர்வளர் குற்றாளர் பேர்வளம் பாடிய
சங்கீத வாரியை இங்கித நாரியைச்
சல்லாபக்காரியை உல்லாச மோகனச்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

ஆரத்தனத்தைப் படங்கொண்டு மூடி
அசைத்து நின்றாளதை யானைக் கொம்பென்றுநான்
கோரத்தை வைத்தவிழிக் கதிர் சென்றேனென்
கொஞ்சத் தனத்ததை அறிந்து சுகக்காரி
பாரத் தனத்தைத் திறந்து விட்டாள் கண்டு
பாவியேன் ஆவி மறந்து விட்டேனுடன்
தீரக்கனிய மயக்கி முயக்கியே
சிங்கார மோகனம் சிங்கி கொண்டாளந்தச்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

பூவென்ற பாதம் வருடி வருடிப்
புளக முலையை நெருடி நெருடி
ஏவென்ற கண்ணுக்கோர் அஞ்சனம் தீட்டி
எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள
வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்
மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
ஆவென்று ஒருக்கால் இருப்பன் உதைப்பன்
அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

தாராடும் குன்றி வடத்தை ஒதுக்கித்
தடமார் பிறுகத் தழுவ வந்தாள் அவள்
வாராடும் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள்
சீராடிக் கூடி விளையாடி இப்படித்
தீரா மயல்தந்த தீராமைக்காரியைக்
காராடும் கண்டர்தென் ஆரிய நாட்டுறை
காரியப் பூவையை ஆரியப் பாவையை
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!


மூலம்: குற்றாலக் குறவஞ்சி

8 comments:

vasu balaji said...

ஆக்காககாககா! ஈரோட்டு மாப்பு எதிர் கஸ்ஸ்ஸ்ஸ்ஸிவாரே:))

ஈரோடு கதிர் said...

வாரக்கடைசி விசேசம் போல..

வாழ்க சிங்கனும் சிங்கியும்..
நா வேறொன்னும் சொல்லமாட்டேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிங்கியும் சிங்கனும் கண் முன்னே!! செண்பகத்தோப்பு, ஓடை என காட்சிகள் அழகாக விரிகின்றன.

குற்றாலக் குறவஞ்சி பாடலிற்கு அழகான ஒரு முன்னோட்டம்.

கயல் said...

அடடா! சிங்கி - சிங்கன் பாசி ஊசி விற்பதாயும், குறி சொல்வதாயும் படித்ததுண்டு. மருத நிலத்தில் ஊழியம் பார்ப்பதாய் சொல்லுகிறீர்கள்.... என்னவோ போங்க, ஆனா அசத்தலாயிருக்கு. எங்களுக்கும் புரியுற மாதிரி! :) ஓடை குறியீடா இருந்துச்சா அத சொன்னேன்!

பழமைபேசி said...

//கயல் said...
அடடா! சிங்கி - சிங்கன் பாசி ஊசி விற்பதாயும், குறி சொல்வதாயும் படித்ததுண்டு. மருத நிலத்தில் ஊழியம் பார்ப்பதாய் சொல்லுகிறீர்கள்.... என்னவோ போங்க, ஆனா அசத்தலாயிருக்கு. எங்களுக்கும் புரியுற மாதிரி! :) ஓடை குறியீடா இருந்துச்சா அத சொன்னேன்!
//

ஆகா.... பொடி வைக்கிறதுல கவிஞர்களுக்கு நிகர் யாராவது உண்டா??

வயலும் வயல் சார்ந்த நிலத்தில் ஊழியம் இல்லை எனச் சொன்னது யாரோ??

நீடூழி வாழ்க எனச் சொல்வதில்லையா?? அதாவது, குடிமக்களுக்கு உதவிகரமாய் நீண்ட நாட்களுக்கு இருக்கும்படியாக வாழ்தல் என்பதே அதன் பொருள்!

ராஜ நடராஜன் said...

ஏய் சிங்கி!ஏய் சிங்கா!

அதென்ன வங்கண?

எல் கே said...

நல்லா இருக்குங்க

Sabarinathan Arthanari said...

//காராடும் கண்டர்தென் ஆரிய நாட்டுறை
காரியப் பூவையை ஆரியப் பாவையை
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே//
மேலே உள்ள பதம் யோசிக்க தக்கது.

நல்ல பகிர்வுங்க