9/14/2008

"கடுதாசி"ன்னா என்ன?

From: XXXXXX
Subject: கடுதாசி
To: navasakthi@googlegroups.com
Date: Saturday, September 13, 2008, 6:40 PM


கடுதாசிங்றது தமிழா? இல்ல.

அப்ப? போர்ச்சுக்கீசீயத்துல இருந்து வந்த திசைச்சொல்.

கடிதங்றதுதான அது? இல்ல.

அப்ப? உறை. அது எதுக்கும் பொழங்கலாம். உதாரணமா, குல்லாவை கடுதாசியில் வைத்துக் கொடுத்தான். கடிதம், உறையில வர்றதால நாம மாத்திப் பொழங்கறது வழக்கம் ஆயிடுச்சு.


(.....எவனோ பொழப்பத்தவன், பூனை மயிரச் செரச்சானாம்......)


From: xxxxxxxxxxx
Subject: Re: கடுதாசி
To: NavaSakthi@googlegroups.com
Date: Sunday, September 14, 2008, 3:47 AM

அதேபோல் சன்னல், மேசை, அலமாரி, வராண்டா, பீங்கான், பேனா ஆகியவை போர்ச்சுகீசிய சொற்கள். இதில் சில வார்த்தைகள், ஆங்கிலத்திலும் வழக்கதில் உள்ளதை காணலாம் (மேசா, வராண்டா, பென்). சன்னலுக்கு தமிழில் சாளரம் என்ற சொல்லுண்டு. 1500க்கு பிறகு, ஐரோப்பியர்கள் தென்னிந்தியாவிற்குள் வந்த பிறகுதான் (முதலில் வந்தவன் போர்ச்சுகீசியன்), அலமாரி (பூட்டிவைக்க), மேசை, பேனா (ஒப்பந்தகள் எழுத) போன்றவைக்கு பயன் வந்ததோ என்னவோ!

அதேபோல, சிவில் சட்டதில் பயன்படுததபடும் பல வார்த்தைகள், பல மொழிகளிருந்து வந்ததை பார்ககலாம். உதாரணமாக, வாரிசு (அரபு).

(மற்றவை மறந்து போய்விட்டதையா! எனக்கு 13 - 15 வயதிருக்கும் போது தஞ்சையில் விவசாயம் பொய்த்து போக ஆரம்பித்த காலம் அது. என் அப்பா நிலம் வீடு தரகு செய்து கொண்டிருந்தார்கள், அப்போது, பலமுறை பள்ளி விட்டு வரும் வழியில், ரிஜிஸ்டிரார் ஆபிஸில் போய் காத்திருந்து, ரிஜிஸ்டிரேஷன் முடிந்த பிறகு, அப்பாவிற்க்கு கிடைக்கும் கமிஷனில், தேவையானவை வாங்கி வருவேன், சில சமயம், புது பேனா, நோட்டு கூட கிடைக்கும்! அது ஒரு தனி கதை.

ரிஜிஸ்டிரார் ஆபிஸில், டாக்குமெண்டை உரக்க வாசிக்க ஒருத்தர் இருப்பார். அதை கவனித்தால், அத்தனை ஆர்வமுண்டாக்கும் வார்த்தைகள் இருக்கும். அந்த ஆர்வ கோளாறினால், லைப்ரரியில் தோண்டி துருவி, பல சொற்களின் வேரை ஆராய்ந்துண்டு. இப்பொழுது, ரிஜிஸ்டிரார் ஆபிஸில் முழுக்க முழுக்க ஆங்கிலம், தமிழ் வந்துவிட்தென்று கேள்வி. BTW, அவர்கள் எழுதுவதிலும் பல வேடிக்கையாக இருக்கும்.)


From: xxxxxx
Subject: Re: கடுதாசி
To: NavaSakthi@googlegroups.com
Date: Sunday, September 14, 2008, 5:55 AM

அப்படிப் போடுங்க..... மலரும் நினைவுகள் எப்படி மலருதுன்னு பாருங்க...... நீங்க சொல்லுறத நானும் கேட்டு இருக்குறன். எங்க ஊர் ஜமாபந்தில, டாவாலி அப்படித்தான் எழுந்து உரக்க வாசிப்பாரு.....

"கோயமுத்தூர் ஜில்லா, உடுமலைத் தாலுக்கா வேலூர் கிராமப் பஞ்சாயத்தில் விநாயகங் கோயில் வீதி ரெண்டுங் கீழ் நுப்பத்து எட்டாம் நெம்பர் வீட்டில் குடியிருக்கும்
மிராசுதார் சுப்பாரெட்டி பேரனும் செங்கொடை அப்பாசாமி ரெட்டியின் பதினோறாவது மகனுமான காவேட்டி ரெட்டிக்கு பாத்தியப்பட்ட" .......ன்னு அப்பிடியே கோர்வையாப்
போகும். வாயில, ஈ போறது கூடத் தெரியாம அதை இரசிச்சுக் கேப்போம்.

அதெல்லாம் போச்சுங்க அய்யா. நேத்துக்கூட ஜெய் கூடப் புலம்பிகிட்டு இருந்தேன். மானம்ங்ற மூனு சொல்லு வார்த்தைல சமுதாயத்தை கட்டுக்கோப்பா வெச்சு இருந்தாங்க நம்ம பெரியவங்க. குடுக்குறதை குடுக்கலனா மானம் போயிரும். குழந்தைய நல்லா வளர்க்கலைனா மானம் போயிரும். பொய் பேசினா மானம் போயிரும். ஒழுக்கம் தவறினா மானம் போயிரும். பொண்டாட்டி புருசனுக்கு மரியாதை தரலைனா, மானம் போயிரும் (அப்படியே, சந்துல சிந்து பாடிறலாம்!). வாக்கு தவறினா மானம் போயிரும். விருந்தாளிய கவனிக்காம விட்டா மானம் போயிரும். சரியான இடத்துல உதவி செய்யலைன்னா மானம் போயிரும். இப்படி மானம்ங்ற அந்த மூனு எழுத்து வார்த்தைல எல்லாமே கட்டுப்பட்டுச்சு. என்னைக்கு அதுல இருந்து வெளிய வந்தமோ, அப்ப போக ஆரம்பிச்சது எல்லாம். இனி திரும்ப வரவா போகுது?!

எதொ, அந்த காலத்தோட கடைசி அஞ்சு வருசத்த பாத்த பாக்கியம் நமக்கு கெடச்சது. அது போதும். அந்த நெனப்புலயே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். இந்த மாதிரி அப்ப அப்ப நாமளும் அதையெல்லாம் நெனச்சு சந்தோசப்பட்டுக்கலாம். என்ன சொல்லுறீங்க?

குல்லா - பார்சி - தொப்பி
ரிக்சா - ஜப்பானி- மூனு சக்கர வண்டி
பஜார் - பார்சி - கடைத்தெரு
அலமாரி - போர்ச்சுக்கீசு - சுவர்ப் பெட்டி
எக்கச்சக்கம் - தெலுகு - அளவுக்கதிகம்
நபர் - அரபு - ஆள்
பேனா - போர்ச்சுக்கீசு - எழுதுகோல்
இனாம் - உருது - இலவசம்
ஜாஸ்தி - உருது -- அதிகம்
துட்டு - டச்சு -- பணம்
பீரோ - பிரெஞ்சு -- கொள்கலப் பெட்டி
மேசை - போர்ச்சுக்கீசு - பரப்பு நாற்காலி
வராண்டா - போர்ச்சுக்கீசு - முற்றம்
பீங்கான் - போர்ச்சுக்கீசு - சீனக் களிமண்
வாரிசு -- அரபு -- வழி வந்தோர்


.................ஆத்துல விழுந்த எலை ஆத்தோட....


10 comments:

குடுகுடுப்பை said...

கொஞ்சம் பதிவின் நீளம் அதிகமோ

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
கொஞ்சம் பதிவின் நீளம் அதிகமோ
//
ஆமாங்க.... கொஞ்சம் நீளமாத்தான் போச்சு......

புருனோ Bruno said...

//அதேபோல, சிவில் சட்டதில் பயன்படுததபடும் பல வார்த்தைகள், பல மொழிகளிருந்து வந்ததை பார்ககலாம். உதாரணமாக, வாரிசு (அரபு).//

இதற்கு காரணம், முதலில் சிவில் அமைப்பை ஏற்படுத்தியது சோழர்கள் என்றாலும், ஆங்கிலேயர் கடைபிடித்தது முகலாயர்களின் வழிமுறைகளை என்பது தான்

ஜில்லா - மாவட்டம்
தாசில் - வட்டம்
பிர்கா - குறுவட்டம்
சிராஸ்தாரர் - தலைமை எழுத்தர்
ஜமாபந்தி - ?? (கணக்கு சரிபார்த்தல்)
அமினா - நீதிமன்ற பணியாளர்

பழமைபேசி said...

//புருனோ Bruno said...

இதற்கு காரணம், முதலில் சிவில் அமைப்பை ஏற்படுத்தியது சோழர்கள் என்றாலும், ஆங்கிலேயர் கடைபிடித்தது முகலாயர்களின் வழிமுறைகளை என்பது தான்
//
வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றிங்க! நல்லதொரு விபரம்!!!

பின் புலம் said...

which book u have can u tell me i want to read and know it.

பழமைபேசி said...

arul said...
which book u have can u tell me i want to read and know it.

//
அருள்,

வாங்க, பாவாணர் எழுதின புத்தகங்கள், அனுபவம், சங்கத் தமிழ் எல்லாந்தான் கலந்து குடுக்குறேன்...

Dr. சாரதி said...

அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்துகொண்டிருக்கிறேன். என்னக்கு ஒரு சந்தேகம் உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.
முந்தைய காலங்களில் மன்னர்கள் படையெடுத்து சென்று மாற்ற மன்னர்களுடன் போர் புரிவார்கள்.(எடுத்துகாட்டாக நரசிம்ம பல்லவன் வடக்கே சென்று வாதாபி போர்ரில் புலிகேசியை கொன்றது) அப்பொழுது அவர்களுடன் மிகப்பெரிய படையும் செல்லும் அதுவும் பல்லாயிரம் மைல்கள், அவர்களின் உணவு எப்படி தயாரிக்கபட்டது, அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறு செய்தனர். பல்லாயிரம் மைல் தூரம் செல்லும்போது அவர்கள் உடல் எவ்வாறு தளர்ச்சி இல்லாமல் போர் செய்யமுடிந்தது?

பழமைபேசி said...

//
Dr. சாரதி said...
அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்துகொண்டிருக்கிறேன். என்னக்கு ஒரு சந்தேகம் உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.
முந்தைய காலங்களில் மன்னர்கள் படையெடுத்து சென்று மாற்ற மன்னர்களுடன் போர் புரிவார்கள்.(எடுத்துகாட்டாக நரசிம்ம பல்லவன் வடக்கே சென்று வாதாபி போர்ரில் புலிகேசியை கொன்றது) அப்பொழுது அவர்களுடன் மிகப்பெரிய படையும் செல்லும் அதுவும் பல்லாயிரம் மைல்கள், அவர்களின் உணவு எப்படி தயாரிக்கபட்டது, அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறு செய்தனர். பல்லாயிரம் மைல் தூரம் செல்லும்போது அவர்கள் உடல் எவ்வாறு தளர்ச்சி இல்லாமல் போர் செய்யமுடிந்தது?
//
மிக்க மகிழ்ச்சி! மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏற்கனவே இதுவும் எனது பட்டியலில் உள்ளது. படைத்தளங்களும், கொத்தளங்களும், வழிப்போக்கர்களும் எப்படித் தங்கள் இருப்பிடங்களை மாற்றினார்கள், தளராமல் இயங்க முடிந்தது என்பது பற்றி எனக்குத் தெரிந்தவற்றை விரைவில் பதிவிடுகிறேன்.

சுருக்கமான பதில் என்னவென்றால், பண்டைய காலத்தில் இருந்த சத்திரங்களும், மூலிகைத் தாவரங்களும், உணவு முறையுமே காரணம். விரைவில் மேலதிகத் தகவல்களுடன் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நன்றி! தங்கள் வலைப்பூ வெகு அழகாகவும், சிறப்பான தகவல்கள் கொண்டும் உள்ளது.

நசரேயன் said...

நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை போல நிறைய பதிவுகள் எழுதனுமுன்னு ரெம்ப தாழ்மையா கேட்டு கொள்கிறேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை போல நிறைய பதிவுகள் எழுதனுமுன்னு ரெம்ப தாழ்மையா கேட்டு கொள்கிறேன்
//
நன்றிங்க நசரேயன்! கண்டிப்பா எழுதுறேன், நீங்க எல்லாம் ஆதரவு குடுங்க...