கொமாரசாமி அண்ணனுக்கு நாலு வருசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆயி ஒரு பொம்பளைப் புள்ளை. நங்கையா பேரு தெய்வானை. அல்லாரும் பெரிய பாப்பாத்தின்னு கூப்புடுவாங்க. அண்ணனோட மக பேரு மீனாட்சி, மூனு வயசு. அண்ணனுக்கு மேக்க, ஏரோப்ளேன் காட்டுக்கிட்ட ஒரு பருத்தி குடோன்ல வேலை. காலைல எந்திரிச்சு ஆறு மணிக்கெல்லாம் மொத வண்டிக்கே போயிரும். போய்ட்டு சாயங்காலம் இருட்ட இருட்டத்தான் வீட்டுக்கு வரும். வந்தா, சின்ன அம்மினி மீனாட்சி கூடத்தான் ஒரே வெளையாட்டு. அண்ணன் வேலைல இருந்து ஊட்டுக்கு வரும் போது வழக்கமா நடக்குற பழமைதான் இது,
"மாமா வாங்கோ! இந்தாங், காப்பித் தண்ணியக் குடிச்சுட்டு அப்படியே ஒடம்புக்கும் தண்ணி வாத்துட்டு வந்துருங்க!! தண்ணி காஞ்சி கெடக்குது, ஆறிப் போயிரும். அப்புறமா வந்து சின்ன அம்மினிகோட வெளையாடுவீங்களாமா..."
"சரி, இந்தா இந்தப் பைய உள்ள வெய். சின்ன அம்மினி, இங்க வாடா, வாடா! அப்பனுக்கு ஒரு முத்தங்குடு பாக்கலாம், கண்ணு இல்லே?!!"
இப்படி அண்ணன் காப்பித் தண்ணிய திண்ணைல இருந்து குடிச்சுட்டே சின்ன அம்மினி கூட வெளையாடும். அவகூட வெளையாடுறதுல வேலைக்குப் போய்ட்டு வந்த அலுப்பே தெரியாது அண்ணனுக்கு! நங்கையா வந்து, மறுக்கா மறுக்கா சத்தம் போட்டாத்தான் அண்ணன் தண்ணி வாக்கப் போகும். இப்படி சந்தோசமா போய்ட்டு இருந்த இந்த நேரத்துல நங்கையா மறுவடியும் முழுகாம இருக்கு. இப்ப ஏழாவது மாசம் நடக்குது.
நங்கையாக்கு அண்ணனை இங்க உட்டுப்போட்டு அவிங்க அம்மா ஊர் முத்துக்கவுண்ட்ன்புதூர் போறதுக்கு இஷ்டம் இல்ல. அதனால உள்ளூர்ல இருக்குற அருக்காணி அக்காவை, கூடாமாடா இருந்து யானபானம் கழுவுறதுக்கும் சின்ன அம்மினியப் பாத்துக்குறதுக்கும் வேலைக்கு சேத்துகிட்டாங்க.
அருக்காணி அக்காவுக்கு ஒரு பையன் இராசு, புருசன் கல்யாணம் ஆயி ஒரு வருசத்துலயே எங்கயோ பரதேசம் போய்ட்டான். இராசு பொறக்கும் போதே, அவிங்க அப்பன் வீட்டை விட்டு எங்கயோ போய்ட்டான். அப்ப இருந்து, அருக்காணி அக்கா ஊருக்குள்ள வீட்டு வேலை செஞ்சி இராசுவக் காப்பாத்திட்டு வருது. இப்ப இராசுவுக்கு ஏழு வயசு, ரெண்டாம் வகுப்பு படிக்குறான்.
இந்த நேரத்துலதான் நங்கையாவுக்கு திடீல்னு வவுத்து நோவு வந்துச்சுன்னு, சின்ன அம்மினிய அருக்காணி அக்காகிட்ட உட்டுப் போட்டு, அண்ணனும் பக்கத்து வீட்டு பொன்னுச்சாமி அண்ணனும் ப்ளஷரு காருல நங்கையாளை சூலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அங்கதான் நடக்கக் கூடாதது நடந்து போச்சு. எப்பிடியெல்லாம் அண்ணனும் நங்கையாவும் ஒன்னுமொன்னுமா இருந்து இருப்பாங்க. எந்த ஊரு சனம் கண்ணு பட்டுச்சோ, பாவி மனுசன் தலைல கல்லப் போட்டுட்டு அவ போயிச் சேந்துட்டா மவராசி.
புள்ளத்தாச்சியா இருந்து, உசுரு விட்ட ஒடம்பு தாங்காதுன்னு வாற வழிலயே நொய்யல் ஆத்து சுடுகாட்டுல எரிச்சுட்டு வந்துட்டாங்க. ஒரம்பறைங்க ஊர்சனம்னு, எல்லாரும் சோனு அழுவாச்சி. இப்படியே பன்னெண்டு நாளும் போச்சு. அப்புறம் எல்லாரும் அவிங்க அவிங்க சோலியப் பாக்கப் போய்ட்டாங்க. சின்ன அம்மினியோ அருக்காணி அக்காவை விட்டே கீழ எறங்க மாட்டீங்கிது. அண்ணனுக்கும் வேலைக்குப் போகணும். என்ன பண்றது? கடைசில அருக்காணி அக்காவை, எப்பவும் போல வீட்டுல சோத்த ஆக்கி வெச்சிட்டு சின்ன அம்மினியயும் பாத்துக்க சொல்லிப் போட்டு, அண்ணன் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருச்சு.
நாளும் கெழமையும் நிக்குமா? அது ஓடிட்டேதான இருக்கும். இப்படியே ஆறு மாசம் ஓடிப் போச்சு. நல்ல தண்ணிக் கெணத்துல தண்ணி சேந்துறப்ப, ரேசன் கடைல சீமை எண்ணை வாங்குறதுக்கு நிக்குற எடத்துலன்னு ஊருக்குள்ள இப்ப ரெண்டு பேரு சேந்தாலே பேசுறது, கொமாரசாமி அருக்காணிய வெச்சுகிட்டு இருக்கான்னுதான். அண்ணனுக்கு வெள்ளை மனசு, பாவம்! வேலைக்குப் போகும், வரும். நங்கையா போன நாள்ல இருந்து அண்ணனுக்கு ஒரு நாளும் நல்ல தூக்கங் கெடையாது. எப்பவும் நங்கையா நெனப்பு தான். அருக்காணி அக்காவுக்கோ ஊருக்குள்ள இப்படிப் பேசுறது அல்லாந் தெரியும். இருந்தாலும், அதச் சொல்லி கொமாரசாமி மனச எதுக்கு நோவடிக்கனும்ங்றது அருக்காணி அக்காவுக்கு.
அண்ணனை விட்டுப் போட்டு நங்கையானால இருக்க முடியலையோ, என்ன கெரகமோ, அந்த சம்பவமும் நடந்து போச்சு. அண்ணன் வேலைல இருந்து ஊட்டுக்கு வரும் போது, நீலம்பூர் பெரிய பாலத்துல அண்ணன் வந்த பஸ்சும் எதுக்க வந்த லாரியும் மோதி அண்ணன் அந்தக் கெடைலயே போய்ச் சேந்துருச்சு. நங்கையா போய் எட்டு மாசந்தான் ஆவுது. என்ன சங்கடம் பாருங்க. சின்ன அம்மினி மீனாட்சிக்கு இன்னும் நாலு வயசு கூட முடியலை. அவளுக்கு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு, ஒன்னும் தெரியாது பாவம்.அண்ணன் வாங்கிப் போட்ட மேட்டாங்காடு ரெண்டு ஏக்கரா இப்ப அண்ணனோட பங்காளி முருகேசு எடுத்துகிச்சு. ஆனா முருகேசுனால அதை விக்க முடியாது. வெள்ளாமை மட்டும் பண்ணிக்கிடலாம். அருக்காணி அக்கா, சின்ன அம்மினியப் பாத்துகிட்டு கொமாரசாமி அண்ணன் வீட்டிலயே குடி இருந்துக்கலாம்னு சொல்லிப் போட்டு அல்லாரும் அவிங்க அவிங்க பாடு பழமய பாக்கப் போய்ட்டாங்க.
அருக்காணி அக்காவுக்கு, மாசம் வந்துட்டு இருந்த முந்நூறு ரூவா சம்பளமும் இல்ல இப்ப. பாவம் அருக்காணி அக்கா! சின்ன அம்மினிக்கோ அருக்காணி அக்காதான் அம்மா, எல்லாமே! ஊருக்குள்ள ரெண்டு வீட்டு வேலை, மூணு வீட்டு வேலைன்னு பாத்து இராசுவையும் மீனாட்சியையும் காப்பாத்திட்டு வருது.
அருக்காணி அக்கா கூலிக்கு வேலை பாக்குறதை விட முடியாதவங்களுக்கு பண்ற ஒத்தாசை நொம்ப சாஸ்த்தி ஆயிருச்சு. இப்படியே வருசங்களும் போச்சு. இராசுக்கு இப்ப பெரியதோட்டத்து ஜின்னிங் பேக்டரில வேலை. மீனாட்சி வயசுக்கு வந்து மூணு மாசந்தான் ஆவுது. அருக்காணி அக்கா, தன்னோட மவனை விட, மீனாட்சியத்தான் அப்பிடிச் செல்லமா வளர்த்துச்சு. பாசமும் நொம்ப அதிகம் அவமேல. ஆனாப் பாவம், என்னமோ காய்ச்சல்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு மாசம் படுத்து எந்திரிச்சதுல இருந்து அவளுக்கு ஒடம்புக்கு எதோ ஒன்னு அடிக்கடி வந்து கிட்டே இருக்குது.
சின்ன அம்மினி வயசுக்கு வந்துட்டா. யாராவது ஒரு நல்ல பையனுக்கு கட்டிக் குடுத்துட்டா அருக்காணி அக்கா கடமை முடியும். அருக்காணி அக்காவும் சின்ன அம்மினியோட ஒன்னுவிட்ட அத்தை காங்கயம் பாளையத்துல இருக்குது. அவங்ககிட்டப் பேசி, அவுக பையனுக்கே கண்ணாலம் பண்ண முடிவு செய்யுது. அத்தை பையனுக்கு பெருசா சொத்துபத்து இல்ல. சரி, அவுகளுக்கு சின்ன அம்மினியோட ரெண்டு ஏக்கரா காடு வரும், அத வெச்சிட்டு எப்படியோ முன்னேறலாம். அதனால ரெண்டு பக்கமும் இந்த கண்ணாலம் நிச்சயம் ஆனதுல நொம்ப சந்தோசம். ஆனா, அருக்காணி அக்கா மவன் இராசு மட்டும் மொகங்குடுத்துப் பேச மாட்டேங்குறான். ரெண்டு மூணு நாளா வீட்டுக்கும் சரியா வரலை.
கண்ணாலத்துக்கு ஒரு மாசந்தான் இருக்கு. ஊருக்குள்ள போன அருக்காணி அக்கா வீட்டுக்கு வந்து பாத்தா, இராசுவையும் காணோம். சின்ன அம்மினி மீனாட்சியையும் காணோம். ஒரு நாள் போச்சு. ரெண்டு நாள் போச்சு. ஊருக்குள்ள விசயம் தெரிய ஆரம்பிச்சதுதான் தாமுசம். அப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, "ரெண்டு ஏக்கர் ஒரு கோடிக்குப் போகும் இப்ப, அருக்காணி நல்லா திட்டம் போட்டு காரியத்தை முடிச்சுட்டா"ன்னு.
அருக்காணி அக்காவுக்கா தான்பட்ட பாடு எல்லாம் நாசமாப் போச்சேன்னு கவலை. கட்டுனவனும் மானத்தை வாங்குனான். பொறந்தவனும் கேவலத்தை உண்டு பண்ணிட்டான்னு அழுவுது பாவம்.
தனியாக் கெடந்து கொஞ்சம் கொஞ்சமா அருக்காணி அக்காவுக்கு உசுரு போய்ட்டு இருக்கு. திடீல்னு அல்லாரும் புள்ளையார் கோயலுக்கு ஓடுறாங்க. பக்கத்து வீட்டு சிவகாமி வந்து சொல்லுது அருக்காணி அக்காகிட்ட,
"அக்கா! இராசுவும் சின்ன அம்மினியும் கோயல்ல இருக்காங்கலாம். இப்பத்தான் காருல வந்து இறங்கி இருக்காங்கலாமாக்கா!!"
"நாசமாப் போனவன் என்ன காரியம் பண்ணிட்டு, இப்ப ஊருக்குள்ள வந்து இருக்குறான். அப்பிடியே திரும்பிப் போகச் சொல்லு!"
"சரி வா, போய்ப் பாக்கலாம்"
அருக்காணி அக்கா சிவகாமிகோடச் சேந்து கோயலுக்குப் போகுது. மண்ண எடுத்து தூத்திகிட்டு சாபம் குடுத்துட்டே போகுது. அங்க இராசு, சின்ன அம்மினி நெத்தியில எதொ வெச்சி விடுறான். அதப்பாத்த அருக்காணி அக்கா,
"டேய், என்ற வயித்துல பொறந்துட்டு என்ன காரியம் பண்ணினே? நீ, வெளங்குவியாடா??"
"என்ன அம்மா சொல்லுறே? நீதான சொன்ன?! நம்மகிட்ட சீரு குடுக்க பணமும் இல்ல, பண்ட பாத்திரங்களும் இல்லன்னு. மேக்க கூட்டிட்டுப் போயி வைத்தியம் பாத்தப்ப, சின்ன அம்மினிக்கு சிறுநீரகம் யாராவது தானம் குடுத்தா நல்லதுன்னு வைத்தியரு சொன்ன ஞாபகம் எனக்கு வந்துச்சு. அதான், என்னோடதுல ஒன்னு சின்ன அம்மினிக்குக் குடுத்து கூட்டியாறன். மாப்பிள்ளையும் கூட இருந்து அல்லா ஒத்தாசையும் பண்ணுனாரு அம்மா. இது தப்பா?"
கூடியிருந்த ஊருசனம் அப்பிடியே தலையக் கீழ போட்டாங்க. தப்பாப் பேசினவங்க தலை தொங்கிப் போச்சு. அருக்காணி அக்கா அப்பிடியே மவன் காலுல விழுந்து, அந்த பழனிமலை முருகனே எனக்கு மகனா வந்து பொறந்து இருக்குறான்னு சந்தோசத்துல கூவிக் கூவி அழுவுது, அவனையும் சின்ன அம்மினியயும் கட்டித் தழுவிகிச்சு அருக்காணி அக்கா.
சின்ன அம்மினி கண்ணாலம் முடிஞ்சு சித்த நாள்லயே, இராசுவுக்கும் கண்ணாலம் ஆச்சு. ரெண்டு பேருக்கும் இப்ப ஆளுக்கொரு பொம்பளைப் புள்ளை. ரெண்டு பேருமே, அவிங்க அவிங்க மகளுக்கு அவிங்க அம்மா பேருதான்னு, பிடிவாதமா "அருக்காணி"ன்னே பேரு வச்சாங்க.
வழக்கம் போல, அருக்காணி அக்கா வடக்கால ஊர்ல அம்மை போட்டு இருக்குற வள்ளியாத்தாவுக்கு, யானபானங் கழுவிக் குடுத்து ஊடு கூட்டி எடுக்கப் போயிருக்கு. இங்க பின்னாடி இருக்குற வீட்டுப் பொடக்காளீல மாமன் மவ அருக்காணியும், அத்தை மவ அருக்காணியும் ஊருக்குள்ள போயி யானபானங் கழுவி ஒத்தாசை பண்ணுற வெளையாட்டு வெளையாடிட்டு இருக்காங்க......
7 comments:
இது மாதிரி ஊருக்கு ரெண்டு அருக்காணிக இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா அவுக பின்னால இருக்கற கதையும் யாரோ ஒரு ரெண்டு பேருக்குதான் தெரியும். ஊமை கெனாக் கண்ட கதையா அதுவும் பல சமயம் வெளிய தெரியாமயே போயிருது.
அப்ப்றம் அந்த ஏரொப்ப்ளென் காடு.... சூலூர் நெனப்பு வந்துச்சு.... இப்பொ அதெல்லாம் பெரிய சிட்டியாப் போய், கொளம் வத்தி குட்டையாப் போயிருச்சு... மனசு கெனக்குதுங்க :(
//
சரியாச் சொன்னீங்க...... கால ஓட்டத்துல எப்படியெல்லாம் மாறுது பாருங்க.... நான் சூலூர்ல இருந்துட்டு LMWக்கு வேலைக்குப் போவேன். அதெல்லாம் எழுதினா, பல பதிவுகள் போடலாம். கூடவே நெஞ்சு வலியும் வரலாம். வேற என்ன சொல்ல?
இப்ப போய் தூங்கி எழுந்துட்டு வந்து, மிச்சத்தை புலம்புறேன்.
பாக்கலாங்க மகேசு....
ஆமாமா....தூங்குங்க...நேத்து பூரா தூங்காம பின்னூட்டம், பதிலூட்டம், பதிவூட்டம்னு சிவராத்திரி போல...
சாமி என்னமோ தெரியல...ஏதோ டெலிபதின்னு நெனக்கறேன்... நேத்து நானும் ஒரு கத எழுத ஆரம்பிச்சேன்... நீங்க ஒண்ணு போட்டுட்டீங்க.. எனக்கு இதுதான் மொத கத...இது வர எழுதினதில்ல... கொஞ்ச நாளா யோசிச்சு எழுதிட்டு இன்னிக்கு போட்டுட்டேன்.. படிச்சு உங்க கருத்த சொல்லுங்க.
//
சாமி என்னமோ தெரியல...ஏதோ டெலிபதின்னு நெனக்கறேன்... நேத்து நானும் ஒரு கத எழுத ஆரம்பிச்சேன்... நீங்க ஒண்ணு போட்டுட்டீங்க.. எனக்கு இதுதான் மொத கத...இது வர எழுதினதில்ல... கொஞ்ச நாளா யோசிச்சு எழுதிட்டு இன்னிக்கு போட்டுட்டேன்.. படிச்சு உங்க கருத்த சொல்லுங்க.
//
மகேசு, இப்ப எல்லாம் அந்த மண்வாசனை மருவிட்டே இருக்கு. அதுக்குப் பல காரணங்கள். ஆகவே, நாம அந்த வட்டார வழக்குல இந்த மாதிரி நிறயப் பதியனும்.
மறந்து போன பல சொல்லுகளை நினைவு படுத்தி இருக்கீங்க...... தொடர்ந்து எழுதுங்க.... நானும் செய்யுறேன்.
இண்ணைக்குத்தேன் படிச்சனுங்க. வாய்விட்டுப் படிச்சன், அப்பத்தான் சொகமா இருந்துது.
பழமையெல்லா நல்லாருக்குங்க.
நல்லாருங்க.
//
அண்ணா, நொம்ப நன்றிங்க அண்ணா! நீங்க வந்து இப்படிச் சொல்லுறதுல, எனக்கு நொம்ப பெருமையா இருக்கு. சீக்கிரம், கரையாம் பாளையத்துக் கதை ஒண்ணு எழுதிப் பதியனும்ங்க.
Post a Comment