12/30/2011

மனுஷ்யபுத்திரனே, தொடர்க!!




அண்மையில், கமலஹாசனின் வணிக இதழ்ச் செவ்விகளை நூலாக்கி இருக்கிறார்கள் என விமர்சனம் எழுந்தது. அதுவும், அந்த விமர்சனம் கடுமையாகவும் இருந்தது. சமூகக் கருத்துகளைத் தெளிக்கும் கலைஞனுடைய சொற்களை நூலாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்? இருபதாண்டுப் பழைய கல்கி, குமுதம் கிடைத்தால் ஒருவித ஆவலுடன் படிப்பதில்லையா நாம்? விமர்சனம் செய்தோர்க்கு இக்காணொலியை காணப் பணிக்கிறேன். இன்னுஞ்சொல்லப் போனால், இது போன்ற பேச்சுகளையும் மனுஷ்யபுத்திரன் நூலாக்க முன் வர வேண்டும்.

பகுத்தறிவாளன் மற்றவர்கள் பொட்டை அழித்த்துத்தான் பகுத்தறிவை நிறுவ வேண்டியதில்லை. மற்றவர்களை அன்போடு பார்த்துத் தம் கொள்கைக்கு வரவேற்க வேண்டும்!!

12/29/2011

இலகான் புயல்

இலகான் புயல்
இன்னுஞ்சிறிது நேரத்தில்
வங்கங்கடற்கரையில்
புறப்பட்டு
பாரசீகவளைகுடா
கருங்கடல்
செங்கடல்
கடந்து
அட்லாண்டிக் பெருங்கடலைக்
கடக்க இன்னும்
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு
குறைவாகவே உள!!

12/28/2011

பிரச்சினை

"ஏங்க... எனக்குப் பிரச்சினையாக் கெடக்கு... பிரச்சினையக் கொஞ்சம் இல்லாமப் பண்ணியுடுங்களேன்?”

“யோவ்... என்னையா பிரச்சினை உனக்கு?”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“என்னயா சொல்றே? ஒரு பிரச்சினையும் இல்லையா... நெம்ப நல்லது... நிம்மதியா இரு அப்ப”

”பிரச்சினை இல்லேங்குறதுதான் பிரச்சினையே எனக்கு”

“செரி அப்ப... அந்த பிரச்சினைய வெச்சி மல்லுக்கட்டு பின்ன?”

“என்னங்க நீங்க... பார்த்தா பெரிய மனுசனாட்ட இருக்கீங்க? எனக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னா இப்படிச் சொல்றீங்களே? அதான் பிரச்சினையே இல்லைன்னு சொல்றேனில்ல? என்னதான் படிச்சுப் பட்டம் வாங்குனீங்களோ? விளங்கலையா உங்களுக்கு??”

“குழப்புறடா நீ! என்ன பிரச்சினை ஒனக்கு??”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“அதான் சொன்னனேடா! பிரச்சினை இல்லத்தானே? நிம்மதியா இரு அப்ப”

“யோவ்... நானே பிரச்சினை எதுவும் இல்லாமப் பிரச்சினையாக் கெடக்குங்றேன்... எழவு, நீயெல்லாம் என்ன படிச்ச நீ?”

“சதக்... சதக்”

12/24/2011

புளிமரக்காடு


நத்தார் நாள் விடுப்பையொட்டி வலையில் தமிழை நுகர்ந்து கொண்டிருந்தேன். நுகர்ந்தவாக்கில் எம்மண்ணில் இருப்பதாய் உணர்ந்ததும், கண்டு கொண்டிருந்த காணொலியை ஆய்வு செய்திடப் பார்த்தால், எம்மண்ணின் சொந்தக்காரன் மா.பிரகாசு. உயிரோடு மண்ணையும் கலந்து சுவாசித்துக் கொண்டிருப்பவன். தமிழுக்காக, தமிழருக்காக ஈகங்களைச் செய்தவன்; செய்கிறவன். கொண்ட கொள்கைக்காய் வாழ்கிறானவன்!!

அழைத்துப் பேசினேன். மனதாரப் பாராட்டினேன். நான் தொலைத்த மண்ணை இலாகவமாய்ப் படம் பிடித்திருக்கிறான். கூடவே, அறமோங்க நறுந்தேன்த் தமிழால் ஊர்ப் பெரியவரைப் பாராட்டவும் செய்திருக்கிறான் அவன். நானும் அவனும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். பிரகாசு, அண்ணனால் செய்ய வேண்டியதை இளவல் நீ செய்கிறாய். நீ வாழ்க! நின் தொண்டு வளர்க!!


12/23/2011

கலக்கமா இருக்கு!

கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

துணிகெல்லாம் துவச்சி
மடிச்சும் வெச்சிருக்கேன்
சமையலறை கழுவி
துடைச்சிம் வெச்சிருக்கேன்
குளியல்தொட்டி ரெண்டும்
கழுவிப் பளபளன்னு ஆக்கியிருக்கேன்
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஊர்தி ரெண்டும் பழுதுபார்த்து
கீலெண்ணெய்யும் போட்டு வெச்சிருக்கு
பாப்பாவோட பள்ளிக்கூடத்து ஆட்களுக்கு
பரிசு நல்லாக் கொடுத்தும் வெச்சிருக்கு
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஆமா; அந்த ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இப்பத்தான் சித்த முன்னாடி பார்த்தேன்
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
ஏது சொல்வாளோ?
என்னென்னு வைவாளோ??
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

12/22/2011

ஓலையக்கா கொண்டையிலே....

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

பாடலைக் கேட்க....

12/20/2011

மயிரணி

”தொந்தி சரிய மயிரே வெளிர நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி” எனத் துவங்குகிறது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் அறுபத்தி எட்டாவது பாடல். மயிர் வெளிற இருப்பவனே என மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்வதை நாம் காண்கிறோம். தற்காலத்தில் நாம் மயிர் என ஒலிக்கவே தயங்குகிறோம். எடுத்துக் காட்டாக, குந்தள மயிரணியை உரித்த அழகு மிகுந்த நல்ல உமாதேவியாரோடு என்பதானது, ”சந்தமலி குந்தள நன்மாதினொடு” என தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியாக, மயிரை அணிப்படுத்துவதையும் அதற்குகந்த சொற்களைச் சுட்டுவதையுமே இப்படைப்பானது நமக்குக் காட்சிப்படுத்துகிறது. 
அரும்பம் (soft sprouting hair)

அளகம்(highlighted hair)

குதறம் (loose and spread)


குந்தளம் ( hair crinkles)

குழலி(folded back into a roll)
குழற்சிகா (folded back into a roll with curly)
கூழாமணி ( who has peacock's tail)
கொண்டை ( rolled knot in a style)


அலரி(form of a cluster-bean)

கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)


கொப்பு (as a whole with a knot)

பூங்கோதை (decorated with flower)

சடாதரவல்லி(who has long roll with a weave)

சிகண்டம்(arranged like peacock tail)

சுருளம்(curly hair)

சுளகுவல்லி (loose and wide plaiting of the hair)

துஞ்சுகுழல்(with multiple roll)

பம்பை(rough and dense hair)


பின்னைமாட்டி(weaving decorated hair)

மிஞ்சுகா (long roll hair) 


பூஞ்சுகா (lock of hair adorned with flower)

பொறுப்பி-1: படங்கள் உதவி கூகுள்

12/19/2011

உதயசூரியன்

தெருமுனையில் வைத்தே பசையை நன்கு தோய்த்துக் கொண்டான். மேற்பக்கத்து இருமுனைகளையும் கைக்கு ஒரு முனையாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படிப் பற்றிக் கொண்டு போவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது என அடிக்கடி சொல்வான் ரொட்டிக்கடை சுப்பு. பற்றிக் கொண்டு இருக்கும் இரு கைகளும் அகலத்தைத் துல்லியமாகக் கடைபிடிக்க வேண்டும். அகலம் நீளுமானால் பசையுள்ள தாள் கிழிந்து விடும். அகலம் குறுகிப் போகும் தருவாயில் மடிப்பு உண்டாகி தாளில் சுருக்கம் விழுந்து போகும். அப்படி விழுந்து விட்டால் கதவில் சரிவர ஒட்டுப்படாது. மிகக் கவனமாக வாசலில் காலை வைத்தான். இலாகவமாய் வேலு வீசிய கருப்பட்டித் துண்டில் சரணாகதி அடைந்தது முன்வாசலில் இருந்த நாய்.

வாசற்படியேறி மேல்பக்கத்து இருமுனைகளையும் கதவில் வாகாய்ப் பதிய, ஒரு அடிக்கு ஒன்னரை அடி நீளமுள்ள மொத்தத் தாளும் கதவோடு அப்பிக் கொண்டது. வலது உள்ளங்கையை தன் வலது குண்டியின் மீது தோய்த்து பசை ஈரமெதுவும் இல்லையெனச் சரிபார்த்த பின்னர் மென்மையாக ஒட்டிய தாளை நேர்த்தியாய் தடவி விட்டுக் கொண்டான். மஞ்சள்தாளில் கருப்பு அலைகளினூடாக செங்கதிரோன் பளபளத்துக் காட்சி அளித்தது. “அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன்!” கத்திக் கூப்பாடு போட வேண்டும் போல இருந்தது. மனம் அவனின்று பிய்த்துக் கொண்டு ஓடி அருகே உள்ள குப்பைமேட்டின் மீது நின்று கூவ முயன்றது. அந்நேரம் பார்த்துச் சட்டையின் பின்புறத்தை இழுக்காமல் இழுத்தான் வேலு.

இன்னும் வேலை நிறைய எஞ்சி இருக்கிறது என உணர்ந்தவன், அவனைப் பின்தொடர்ந்து போனான். வெல்லக்கட்டியைத் தின்று தீர்த்த நாயானது இவர்களைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. கால் பாதங்கள் தரையைத் தொடாதபடிக்கு மெதுவாக நடந்து போயினர். கிளுவ மரத்தில் இருந்த குருட்டாந்தை ஒன்று அலறியது. அந்த அலறல் ஒலியைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டு தெருமுனைக்கு ஓடிப் போயினர் இருவரும்.

“தடிமுண்டமே இங்கெதுக்குடா நிக்கற? வேலி மறப்புக்குள்ளார போலாம் வா”

“செரி மூடீட்ட்ப்போ”

செடிபீடி ஒன்றை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து நன்கு உருட்டிக் கொண்டான். அப்படி உருட்டிக்கொள்வதில் ஏற்படும் சூட்டில் பீடியின் நதநதப்புப் போய் கதகதப்பாக்குள்ளாக்கும் வாடிக்கையது. அந்த பீடியை வாயில் வைத்தபடித் தன் கால்ச்செராயில் இருக்கும் தீப்பெட்டியை எடுக்க முற்படுகையில், அதற்கெனவே தயாராக இருந்த மற்றவன் தனது தீப்பெட்டியால் தீ மூட்டி அவன் வாயருகே கொண்டு போனான்.

“கேனப்பொச்சு, காத்துல அவியுறதுக்குள்ள இழுத்துத் தொலை!”

பீடியை உறிஞ்சி நன்கு உள்ளிழுத்ததில் பீடிமுனை நன்கு கனன்று, பழுத்த ஊசிமுனையாய் மிளிர்ந்தது. தீமூட்டிய கைகளைப் பின்வாங்கலாம் என வேலன் நினைத்த மாத்திரத்திலேயே, புகையைப் பற்றவைத்தவன் முகத்தில் குறும்புச் சிரிப்போடு ஊதினான் சுந்தர்.

“இந்த ஏத்தமசுறுதான ஆகாதுங்றது. எனக்கொரு பீடியக் குடுறா!”

வேலனும் தன் பங்குக்கு ஒரு பீடியை வாங்கிக் கைகளால் உருட்டித் தன்வாயில் வைத்துக் கொண்டு பீடிக்கு நெருப்பு வாங்கத் திரும்பினான். பீடி இழுப்பில் இலயித்து இருந்ததில், இவன் தன்னருகே வருவதை கவனித்திருக்கவில்லை.

“யாரு, உங்கப்பனா வந்து பீடிக்குத் தீ குடுப்பான்?”

வெறுக்கென இவன் பக்கந்திரும்பிய சுந்தர், தன் பீடியை இவனுக்குக் கொடுக்க பீடியும் பீடியும் முத்தமிட்டுக் கொண்டன.

“டே.. இந்த கீகாத்துல பீடி அவிஞ்சி போயிரும். முட்ட வெச்சா மட்டும் பத்தாது. நல்லா வெரசலா இழுக்கோணுமாக்கூ”

“அல்லாந்தெரியுமடி… நீ மூடு”, வேகவேகமாக இழுத்துப் புகையை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவனது பீடியை அவனிடமே கொடுத்தான் வேலு.

கீழ்க்காற்று சிலுசிலுவென மெலிதான தண்மையோடு அடித்துக் கொண்டிருந்தது. ஊருக்கு மேற்கே ஓடும் உப்பாற்றுப் பள்ளத்தின் நீரோடைச் சத்தம் ஒரு சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மாறி மாறி செடிபீடியை இழுத்துக் கொண்டிருந்தனர். கும்மிருட்டாக இருந்தது. இருட்டில் இருந்து அவ்வப்போது மின்னாம்பூச்சிகள் கிளம்புவதும் ஒளி மறைவதுமாக இருந்தது.

“ஊருக்குள்ள கொஞ்சமாச்சி வெளிச்சம் இருக்குதா பாரு. தொப்பித்தலையன் ஒழியணுமடா. அப்பதான் நாட்டுக்கு நாலு நல்லது நடக்கும்!”

“மூடு வாய. என்ற அப்பனைப் பேசிப் போட்டாண்டா அந்த அரணாசலம். அவனைப் பழி வாங்கோணும். அவனூட்டுச் செவுத்தல அவனுக்காகாத உதயசூரியனை வரைஞ்சி, அவம்மூஞ்சீல எச்சியத் துப்புனாப்புல செய்யோணும். அவ்வளவுதேன். தலைவரைப் பத்தி எதனாச்சிம் பேசினாப் பார்த்துக்கோ!”

“செர்றா… வா, வேலையப் பாக்குலாம்”

திண்ணைக்குக்கீழே வைத்திருந்த நுவாக்கிரான் தகரப் பொட்டியில் கரித்தூளைக் கொட்டினான் சுந்தர். பருத்திக்காட்டுக்கு வாங்கிய மருந்துக் கொள்கலம் அது. ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் கால்வாசியளவுக்கு கரித்தூளைக் கொட்டி, ஐந்து லிட்டர் சிம்புசு மருந்து நெகிழிக்கலத்தில் இருந்த நீரைத் தேவையான அளவுக்கு ஊற்றிக் கொண்டான். “டே, அந்த பைக்குள்ள இருக்குற மொன்னை புருசை எடுறா!”. பாவித்துச் சிதைந்த தூரிகை கைக்குக் கிடைத்ததும் நன்கு கலக்கிய கரியநிறக் குழம்பு தயாரானது.

“நெம்ப கெட்டியா இருக்கான்னு பாரு சித்த”

“இல்ல.. கருப்பட்டிப் பாகாட்ட நல்ல பகுனமாத்தான் இருக்குது!”

“செங்காவியுங் கலக்கீட்டுப் போயிர்லாமா? அல்லன்னா, கருப்பு அடிச்சிப்போட்டு வந்து செங்காவி கலக்கி எடுத்துட்டுப் போலாமா?”

“ஒன்னொன்னாச் செய்யலாம். நான் டப்பாவைப் புடிச்சிக்கிறன். நீ புருசுல தொட்டு நல்லாப் பெருசா வரஞ்சுடு. என்ன நாஞ்சொல்றது நல்ல ஓசனைதான?”

“ஆமா, அதுஞ்செரிதான்! வா போலாம்!! புருசையுமு அந்த கருப்பட்டித்துண்டுல ஒன்னையுமு கையிலயே வெச்சிக்கோ. அவனூடு வந்ததீமு வாங்கிக்கிறேன்”

வெந்தயக்கார முனியப்பன் வீட்டுப் புதரில் இருந்து மெதுவாகப் புறப்பட்டு, வெண்ணக்கார கந்தசாமி வீட்டின் பிறவடையில் வந்து நின்று நோட்டம் விட்டுக் கொண்டார்கள். மீண்டும் மெதுவாகச் சென்று, கிளைச் செயலாளர் அருணாசலம் வீட்டுக் கிளுவை மரத்திற்கடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டனர் இருவரும்.

“டே வேலு. நீ மொதல்ல போ. போயி அந்த கருப்பட்டித் துண்டை நாயிக்குப் போட்டு அதோட வாயக்கட்டு. நான் அதுக்குள்ள, இந்த ஊமாத்தாந் தழைய இதுக்குள்ள புழிஞ்சு உட்டுர்றன், அப்பத்தான் காய்ஞ்சவிட்டு அழிச்சாலும் அழியாது”

பதுங்கிப் பதுங்கி சென்ற வேலுவுக்கு காதுகள் இரண்டும் விர்றெனப் புடைத்தது. நெஞ்சு திக்திக்கென அடித்துக் கொள்வது அவனுக்குப் புலப்பட்டது. உடலெங்கும் பின்தங்கி இருக்க ஒருபாதி முகம் மட்டும் பக்கச்சுவர் கடந்து ஒரு கண்ணால் அருணாசலக் கவுண்டர் வீட்டு வாசலைப் பார்த்தான். நாய் மட்டும், வெளிப்புறச்சிவரில் இருந்து ஈரடி தொலைவிலேயே படுத்திருந்தது. மெதுவாக கருப்பட்டி உருண்டைய உருளவிட்டான். கருப்பட்டி மணங்கொண்ட நாய் வாயுதிர்த்து, புணர்ந்து வீழ்ந்த பொதிக்கழுதையாகிப் போனது.

திரும்பவும் சுந்தரிடமே வந்தான். “அந்த அரணாசலம் குப்புறப்படுத்துத் தூங்கறாம் போல இருக்கு. ஆரையுங்காணம் அங்க”

“நல்லதாப் போச்சு. இந்தாபுடி இந்த டப்பாவை”

சுந்தர் இங்கேயே டப்பாவுக்குள் தூரிகையை ஒரு முக்கு முக்கிக் கொண்டான். “டே மாங்காமடையன்டா நீயி. அங்கெங்க போற?”

“வாசலுக்குத்தான்!”

“இங்க வீதிச் செவுத்துல வரஞ்சாத்தானொ அல்லாரும் பார்த்து அவம் பொச்சுல சிரிப்பாங்கோ? இங்கியே நில்லு!”

சுந்தர் ஓவியத்தில் படுகெட்டி. எந்தப் படத்தையும் பார்த்த மாத்திரத்தில் வரையக்கூடியவன். தூரிகையால் நாலே நாலு முக்குத்தான் முக்கியிருப்பான். கடல் அலைகள் எழுவதைப் போலப் பெரிய அளவில், அலையின் இரு எழுச்சியை அடியிலிருந்து உச்சிவரை நெளிவு சுழிவோடு வரைந்திருந்தான்.

“ஏன்டா ரெண்டு கரட்டுக்கும் நடுவாப்புல சூரியன் உதிக்கிற மாதரதானொ வரோணும்? நீ என்னொ ரெண்டு கத்தாழை நிக்கிறாப்புல எதையோ வரைஞ்சு உட்டுருக்குற?”

“அடக் கோமாளி, நீ சொல்றாப்புல வரைஞ்சா அது மறையுற சூரியனாய்டும்டா. பாரு, நம்மூருக்கு மேக்க அல்லாம் மலைகதான இருக்குதூ?”

“ஆமா. அதுக்கு கத்தாழைகளை வரைஞ்சா செரியாப் போயுறுமாக்கூ?”

”இல்லடா. அது கடல்ல எழும்புற அலைகடா.. அலைகளுக்கு நடுவாப்புல உதிக்கிற மாதர இந்த ரெண்டு உச்சிக்கு நடுவுல காவித்தண்ணியில வரைஞ்சு உட்டா செரியாப் போயிரும்”, இருவரும் மாறி மாறி கிசுகிசுத்துக் கொண்டே கருவண்ண வேலைகளை முடித்து விட்டு வெந்தயக்கார முனியப்பன்வீட்டுப் புதருக்குத் திரும்பினார்கள்.

”அருணாசலம் பொண்டாட்டி காலையில வாசல் தொளிக்குறதுக்கு வந்து பாக்கப் போறா. பாத்து என்னென்ன சொல்லி வையிவாளோ?”, இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

”அந்த டப்பாவுலயே போட்டுக் கலக்குனா செரிவராது. கருப்படிச்சிரும். இந்தா, இந்தப் பழைய வாணா சட்டியில காவித்தூளைப் போட்டுத் தண்ணிய ஊத்து. நான் அந்த புருசை மாத்திரம் கழுவிக்கிறன்.”

காவிக்குழம்பும் தயார் செய்யப்பட்டு, ஊமத்தையைக் கரைத்து விட்டார்கள். பதுங்கிப் பதுங்கித் திண்ணையைக் கடந்து கவுண்டர் வீட்டுச் சுவருக்கருகே போனார்கள். நாய் வாலை ஆட்டிக் கொண்டு வந்து அருகே நின்று கொண்டது.

சுந்தர், தூரிகையைப் பட்டையாகச் சுவற்றில் அரைவட்டத்தினை வரைந்து, அதினின்று கிளம்பும் ஐந்து கதிர்களை ஒளிர விட்டான். வேலுவுக்கு எழுச்சி மனத்துள் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து சுந்தர் தூரிகையை காவிக்குழம்புக்குள் முழுதுமாக முக்கி எடுக்காமல், ஒற்றி எடுத்து வேலைப்பாட்டினைச் செம்மையுறச் செய்து கொண்டிருந்தான். உதயசூரியன் மிடுக்காய் ஒளிர்ந்தது. தொடர்ந்து அதன் கீழே, “எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே” என எழுதிவிட்டு, வியப்புக் குறியிடலாம் என எண்ணினான். அதன்பொருட்டுத் தூரிகையில் இருக்கும் மிகுதியான கரைசலை வடித்தெடுக்க, வேலு பிடித்துக் கொண்டிருக்கும் கொள்கலத்தின் விளிம்பின் மீது அழுத்தினான்.

“டமால்’ என அந்தப் பழைய வாணா சட்டியானது கீழேயிருந்த கருங்கற் கூளங்களின் மீது விழுந்து மோதியது. அவ்வளவுதான், முதலில் வேலு கிழக்குப் புறமாகத் தாவினான். அவனைத் தொடர்ந்து சுந்தரும் அதே திசையில் ஓடினான். இருவருக்கும் அடிவயிறு சுண்டி இழுத்தது. டில்லி முற்களுக்குள் புகுந்து ஏரிக்காட்டு இட்டேரியில் ஓடி, வெள்ளக்கோயில் தேவராயன் புழுதிக்காட்டில் வந்து நின்றார்கள். இருவராலும் நிற்க முடியவில்லை. சுருண்டு கீழே விழுந்தவர்கள், மெலிதாகச் சிரிப்பதும் அடங்குவதுமாய் இருந்தனர். அவர்களது மூச்சிறைப்பு நிற்க வெகுநேரம் பிடித்தது.

புழுதிக்காட்டில் ஒருக்களித்துப் படுத்திருந்தவர்களுள், முதலில் கண்ணைத் திறந்து பார்த்தவன் வேலு. காரிருளில் யாரோ வெண்மையைக் கலப்படம் செய்தாற் போன்றதொரு பிரமை. வெகுதூரத்தில் ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் இருந்து பறவைகளின் ஒலி சிறிது சிறிதாய்க் கூடி வருவது போன்ற உணர்வு. “என்றா சுந்தரு இது?”. “அட ஆமாண்டா. கிழக்க ஒதயமாகுதுறா சூரியன்!”

12/14/2011

தோற்றது யார்?

அவையில் நுழைந்தேன்
பணிவாய் அமர்ந்தேன்
வீட்டின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
ஒதுக்கில் இருக்கும் காலணி போல
எனக்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில்!
விட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவேனும்
எனக்கும் முறைவைத்து
வாய்ப்பொன்று கொடுத்தார்கள்
கூற நினைத்ததைக் கூறினேன்
ஏகடியமும் எக்காளமும்
நையாண்டியும் எள்ளலுமாய்
அவை துள்ளியது
தோற்கடிக்கப்பட்ட தொனியோடு!
புன்முறுவல் கொண்டு வெளியேறினேன்
காற்று கட்டித்தழுவியது
நீலவானம் வாழ்த்தியது
வெயிலோன் ஒளி பொருத்தி மகிழ்ந்தான்
தோற்றது யார்?!!

செய்தோற்பு தெரிந்திருந்தும் வைக்கப்படும் வாதங்கள் வீணானது அல்ல! அவை வரலாற்றுப் பதிவுகள்!!

12/12/2011

திரைப்பட விநாடி வினா - பல்லூடக நிகழ்ச்சி

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்ச்சிகளிலும் பல்வேறு பல்லூடக நிகழ்ச்சிகள் இடம் பெறுவது உண்டு. அதில் முதன்மையானது, உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் தயாரித்து வழங்கும் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தபடியாக, நண்பர் பொற்செழியன் குழுவினரின் தேனீ எனும் தலைப்பில் இடம் பெறும் சிறார்களுக்கான பல்லூடகப் புதிர்ப் போட்டியும் இடம் பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தினர் அண்மையில் நடத்திய தமிழ்விழா ஒன்றில், களிப்பூட்டும் பல்லூடகத் திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் அண்ணன் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள்.

இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சித் தயாரிப்பில் அவர் ஈடுப்பட்ட தருணத்தில் அவருடன் அளவளாவும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிட்டியது உண்டு. இரவு பகல் என்று பாராது, விடிய விடிய சங்ககாலத்து நூல்களைப் படித்து, வெகு முயற்சிக்கிடையே வினாக்களைத் தெரிவு செய்வார். வினாவைத் தெரிவு செய்த பின்னர், அதனை நயம்படவும் சுவைபடவும் திரையில் விடுப்பது பற்றிப் பல ஆய்வுகள் நடத்தி திறம்பட வடித்தெடுப்பார் அவர். நகர்ச்சில் ஒன்றுக்கு இருபது மணி நேரம் முதல் நாற்பது மணி நேரம் வரையிலும் செலவாகும் என்பார்.

தானே தேவையான தொழில்நுட்பக் கூறுகளைப் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைத் தமிழின்பால் ஈர்ப்பது எப்படி எனச் சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதன் விளைவுதான், இப்புதுமையான பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சியாகும்.

அந்த வகையில், அண்மையில் இடம் பெற்ற திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியில் இடம் பெற்ற வினாக்கள் நாற்பத்து ஐந்தாகும். இந்த 45 வினாக்களில் உங்களால் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இதோ, இக்காணொளிகளைக் கண்டு களித்து உங்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.



தயாரிப்பு: உயர்திரு.நாஞ்சில் பீற்றர்
உதவி: தமிழ்மணம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை

காணொளியின் மூலக்கோப்புகள் (multimedia files such as .ppt, audio files, video files, images etc, etc) வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழால் இணைந்தோம்!

12/11/2011

சுவர்க்கோழி


உறக்கம் கலைந்தேன்
அடுக்களையில் எதையாவது
உருட்டிக்கொண்டிருக்கும் மனையாள்

இருப்பது அனைத்தும் அறிந்து
பிறர் அறியாததை அறியவைக்க
சதா எதையாவது
மாய்ந்து மாய்ந்து
படித்துக்கொண்டிருக்கும் மூத்தவள்

கைக்கணினி கேட்டு
அழுது அடம்பிடித்து
அழுதுகொண்டிருக்கும் அடுத்தவளென
யாருமில்லா வீட்டின்
சுவர்களை வெறித்துப்பார்க்க
எக்காளமாய்ச் சிரிக்கிறது சுவர்க்கோழி!

12/07/2011

இணையம்

வாசிப்பு

மாங்கு மாங்கென்று
வாசித்தேன் கவிதைகளை
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
ஏதோ ஒன்றை
இவர்கள்
ஒளித்தே வைத்திருக்கிறார்கள்
இவர்கள் கவிஞர்களா?
கள்வர்களா??

தங்கமணி நிலவரம்

நாளொருமுறை
கேள்விக்கணைகள்
துளைத்தெடுத்தே
பழக்கப்பட்டவன்
இன்று நல்லதொரு
கேடயத்தோடே
அழைத்தேன்!
வ்ஞ்சிக்காரி
எப்படியோ
மோப்பம் பிடித்து
வீசினாள்
மலர்க்கணையை!!
பரவாயில்ல
வேணுங்றப்ப வாங்கிக்குங்க
கவிதாகிட்ட
தோசை மாவு!!!

12/04/2011

எழுச்சிமிகு இசை, நாடக நாட்டிய விழாவது கண்டிடக் கூடிடுவீர் தமிழர்காள்!

இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறின் அது இசைத்தமிழாக உருவெடுத்து நம்மையெல்லாம் பேரின்பத்தில் திளைக்கச் செய்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் ஆதிகாலம் முதற்கொண்டே அவர்தம் வாழிவியலோடு பின்னிப் பிணைந்தே வந்திருக்கிறது.

முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா, இசைநுணுக்கம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுள்துறைக் கோவை முதலான பண்டைய நூல்களின் மூலம் இசைத்தமிழின் தொன்மையை நாம் உணரலாம்.

குரலானது, துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நிலைகளாகத் தமிழிற் சுட்டப்படுகிறது. சிலப்பதிகாரம் தமிழிசை இலக்கண நூல் என்றே போற்றப்படுகிறது. அதற்குரிய அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன.

இடைக்காலத்தில் இசையோடு தமிழ் பாடிய ‘தேவார திருவாசகம்’ தமிழிசை வளர்ச்சியைக் காட்டக் கூடியனவாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் தேவாரத்திற்குரிய பண்களை வகுத்து அவற்றை அதன்படி பாடி, நாடெங்கும் பரப்பி வந்துள்ளனர். பரிபாடலும், தேவாரமும் இங்ஙனம் பண்முறைப் படி தொகுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இசைத்தமிழை வளர்த்தார். ஆயிரத்தெட்டு மேளகர்த்தாப் பண்களுக்கும் அவர் திருப்புகழ் பாடினார்.

வடலூர் வள்ளலார் இராமலிங்கரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் முறையே கீர்த்தனைகளும், காவடிச் சிந்தும் பாடினர். குணங்குடி மஸ்தான் சாகிபு, கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், கவி குஞ்சரபாரதி, முத்துத் தாண்டவர், மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை போல்வாரும் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றினர்.

பாரதியார் பண் அமைந்த பாடல்கள் பல பாடினார். தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார். பாரதிதாசன் இசையமைதி பொருந்திய பாடல்களை மிகுதியும் பாடித் தமிழிசையை வளப்படுத்தினார் என்பதை அவருடைய முதலிரு தொகுதிகளும், இசையமுது தொகுதிகளும் மெய்ப்பிக்கும். யோகி சுத்தானந்த பாரதியார், பெரியசாமித்தூரன் போல்வார் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

அண்ணாமலை அரசர் 1943-இல் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கித் தமிழிசை வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்தார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரும், இரசிகமணி டி.கே.சியும், கல்கியும் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

அதன்பின்னர் தமிழிசையைப் பலரும் தொடர்ந்து போற்றி வந்திருக்கிறார்கள். சமகாலத்தில் தமிழிசையின் தொடர்ச்சியில் பங்குவகித்துப் போற்றி வருபவர்களுள் ஒருவர்தான் திருபுவனம் G.ஆத்மநாதன் ஆவார்கள்.

சங்ககாலத்துப் பரிபாடல் முதல் காப்பியகாலத்துச் சிலப்பதிகாரம், பக்தி இயக்க காலத்துப் பன்னிருதிருமுறை, ஆழ்வார்களின் நாலாயிர திவய்பிரபந்தம், ஆதிமும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், திருப்புகழ், வள்ளல் பெருமானின் திருவருட்பா, பாரதியார், பாரதிதாசனார், பாபநாசம் சிவன் மற்றும் இன்றைய அருளாளர்களின் பாடல்களை இளைய தலைமுறையினர்க்குக் கொண்டு செல்லும் மாபெரும் பணியை ஏற்றுத் தொடர்ந்து செய்துவருகிறார் இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்.

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும், இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகமும் இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களும் இணைந்து நடத்தும் ஏழாம் ஆண்டு தமிழிசை விழாவானது சென்னையில் எதிர்வரும் டிசம்பர் 24 முதல் டிசம்பர் 28 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன்போது, 'காகிதப்பூட்டு’ நாடகம், திருவருட்பா இசை, கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசை, மகாகவி பாரதியார் பாடல்கள் இசை, பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் இசை, பாபநாசம் சிவன் பாடல்கள் இசை, நாட்டியம் உள்ளிட்ட நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வள்ளல் பெருமானின் திருவருட்பா இசைவிழாவாக முதன் மூன்றுநாட்களும், கலைமாமணி போழகுடி கணேசய்யர் - சவாய் கந்தர்வ தஞ்சாவூர் உதயசங்கர்ஜோஷி ஆகியோரது நினைவாக இரண்டு நாட்களும் தமிழிசை நாடக நாட்டிய விழா நடைபெற உள்ளது.

இத்தகைய தமிழ்விழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுவது அனைவருக்கும் சிறப்புச் சேர்க்கும் என்பது திண்ணம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவில் தமிழிசையால் வந்திருந்தோர் அனைவரையும் கட்டிப்போட்டுப் பேரின்பத்தில் ஆழ்த்திய இன்னிசையேந்தல் அவர்களது முயற்சிகளுக்கும் பணிக்கும் நல்லாதரவுக்கும் வலுச்சேர்ப்பதென்பது தமிழிசையை நுகர்ந்து போற்றுவதுமேயாகும்.

(வலதுகீழ் முனையில் இருக்கும் உருப்பெருக்கி வில்லையைச் சொடுக்கிப் பெரிய அளவில் காண்பீராக!)

12/01/2011

கிளிப்பிள்ளை

  • வேளா வேளைக்குச் சாப்பிடணும். நாளொன்னுக்கு நாலுவாட்டி, ஆனா அரை வயித்துக்குதான் சாப்பிடணும்.
  • எப்பவும் போல, மதியச் சாப்பாட்டுல எதனா ஒரு பழம் கட்டாயமாச் சேர்த்துகிடணும்.
  • உடற்பயிற்சி செய்யுறதுல எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. ஒரு நாள் அப்படி இப்படி தவறினாலும் மறுநாள் சரியாச் செய்திடணும்.
  • தனக்கு வர்ற தோழிகளோட அழைப்பை எடுக்காம விட்டு, அழைப்புக் கிடக்கத்து(voice mail)க்கு போக வுட்டுடணும். மாறா, எடுத்துப் பேசுறது கூடாது.
  • விசாழக்கெழமை தவறாம பள்ளிக்கூடத்துக்குப் போயி, பாப்பாவோட வீட்டுப்பாடத்தை வாங்கி மின்நகலா மின்னஞ்சல்ல அனுப்பி வெச்சிடணும்.
  • எக்காரணம் கொண்டும் இருத்தாத(press) உடுப்புகளை வேலைக்குப் போகும் போது உடுத்திட்டுப் போயிடக்கூடாது.
  • அன்றாடம், உறக்கத்துக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற கழிவுகளைக் கட்டி வெளியில வெச்சிடணும். அல்லாட்டா வீட்டுல நாத்தம் அடிக்கத் துவங்கிடும்.
  • வர்றதுக்குள்ள, எல்லாக் குளியலறைத் தொட்டிகளும் கழுவப்பட்டு இருக்கணும்.
  • சமையலறையில எடுத்ததை எடுத்த இடத்துலயே வெச்சிடணும்.
  • பால் காலாவதி ஆயிடிச்சின்னா கழிச்சிக் கட்டிட்டு வேற பால் வாங்கிக்கணும்.
  • சாம்பார் தூள் சம்படத்தை திறந்து வெக்கவே கூடாது. நிறைய நேரம் திறந்து வெச்சா, தூளுக்குண்டான சுவை பறிபோயிடும்.
  • எண்ணெயக் கிண்ணத்துல ஊற்றித்தான் வாடணும். கொள்கலத்தை அப்பிடியே சாய்ச்சி ஊத்தி வாடக்கூடாது.
  • பாத்திரங்களுக்குள்ள நெகிழி அகப்பைகளை மட்டுந்தான் பாவிக்கணும்.  அப்படிச் செய்யாம உள்பூச்சை உரசிக் கீறல் செய்து வெச்சா, வேற பாத்திரங்கள்தான் வாங்கணும்.
  • பின்னலாடைத் துணிகளைக் கையால துவைச்சிப் போடணும். அல்லாட்டி நெறம் வெளுத்து வீணாப் போகும். துவைக்க முடையின்னா துவைக்காமயே கிடக்கட்டும். நான் வந்து துவைச்சிக்கிறேன்.
  • காலையில எழுந்ததும், சாக்குப்போக்கு சொல்லாம ஊருக்கு அழைச்சிப் பேசிடணும்.
  • தன்னோட வண்டிய ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மறக்காம அஞ்சு பத்து மணித்துளிக்காவது இயக்கத்துல வுட்டு வைக்கணும்.
  • எக்காரணம் கொண்டும் இரவு பத்து மணிக்கு மேல உறக்கத்தைக் கெடுத்துட்டு வெட்டி வேலை பார்க்கக் கூடாது. அதுக்கு முன்னாடி பாத்திரங்களைக் கழுவாம வுட்டு வைக்கக் கூடாது.
  • ஆண்டு முடியப் போகுது; அதனால பல்மருத்துவர்கிட்டயும் கண் மருத்துவர்கிட்டயும் தவறாமக் காட்டிட்டு வந்திடணும். அங்க தேமேன்னு கடன் அட்டையப் பாவிக்கக் கூடாது. வரிக்கழிவு அட்டையப் பாவிக்கணும். அல்லாங்காட்டி, அட்டையில இருக்குற நூத்தி இருவது வெள்ளி நமக்கு நட்டமாப் போய்டும்.
  • டிசம்பர் 23ந் தேதிக்கு முன்னால, மறக்காம, நத்தார்நாள்(Christmas) பரிசுகளை, பாப்பாவோட பள்ளி ஊர்தி ஓட்டுநருக்கும் அவங்க வகுப்பு ஆசிரியருக்கும் கொண்டு போய்க் கொடுத்திடணும்.
  • இந்த மாத மின்கட்டணம், பற்றுச்சீட்டுக் கட்டணம் எல்லாம் நானே செலுத்திட்டேன். அடுத்த மாதத்திற்கான கட்டணம் டிசம்பர் 27ல செலுத்துற மாதிரி தானியக்கச் செலுத்திக்கு ஊட்டங்கொடுத்திடுங்க. நான் வந்ததுக்கு அப்புறமா அந்த ஊட்டத்தை மறுபடியும் நிறுத்திடலாம்.
கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி, இதைப் போல இன்னுஞ் சொன்ன நீங்க, “நாங்கதான் ஊருக்குப் போறமே... வார ஈறுல நண்பர்களோட களிப்பா இருந்துக்குங்க”, அப்படின்னு தப்பித்தவறிக் கூடச் சொல்லலையே??

விமானம் இஃகூசுடன்ல அமெரிக்க மண்ணிலிருந்து இன்னும் எழும்பக் கூட இல்லை. ஆனா, நாங்க துவக்கிட்டம்ல ஆட்டத்தை?!

போகவுட்டுப் பண்ணையம் பாக்குற வித்தகம் எங்களுக்குத் தெரியாததா என்ன?! இஃகி இஃகி!!

11/26/2011

செல்லி

ஊர் முழுதும் காலை நேரத்துப் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. ஊர்வாசலில் இருந்த பாலக்காட்டு ஜோசப்பின் டீக்கடையில் வழக்கம் போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. நரிக்கல் காட்டுக்குக்கு கல்லெடுக்கச் செல்பவர்கள் இட்லிகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நாளிதழின் இருபக்க விளிம்புகளையும் விரித்துப்பிடித்து, படித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அவருக்குப் பின்னால் சிலர் நின்று படிக்க, முன்பக்கங்களை எதிர்ப்பக்கத்தில் இருந்து சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கூட்டத்தில் இருந்து தினத்தந்தி படிப்பதென்பது தனக்கு இயலாத காரியமென்பதை உணர்ந்த சிறுவன் வேலு, தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

ஊர்வாசலில் இருந்து கிளம்பி மேல்வளவுக்குள் நுழைந்தான். அவிநாசியப்பன் ஊட்டு அக்காவும், ஆட்டுக்கார மாரியப்பன் பொண்டாட்டி சுமதியும் சொல்லம்புகளை ஆள்மாற்றி ஆள் சரமாரியாக எறிந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளான சொல்லாடலை ஆங்காங்கே நின்று இரசித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

“கட்டீத்தின்னி... என்ன மயித்துக்குடீ அச்சக்காரம் வாங்குன நீயி. எட்டு ரூவாக்கூலின்னு சொல்லித்தான, கைக்களை எடுக்க வாறன்னு சொல்லி மூணு நாளைக்குமா சேந்து அச்சக்காரம் இரவது ரூவா குடுத்தேன். இப்ப வர்லீங்றயேடி? அடுத்தவிங்ககிட்ட முந்தானை விரிக்குற நீசத்தனம், அச்சக்காரம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கோணும்!”

“இதபாருங்க. ஊரெல்லாம் பத்து ரூபாக் கூலிக்குப் போறாங்க. அந்த வெவரத்தை மூடிமறைச்சு என்ற வவுத்துல அடிக்கப் பாத்தது நீங்க. சோளக்காட்டுல தொண்டூழியம் பார்த்தது ஆருன்னு ஊருக்கே தெரியும், உங்க அச்சக்காரத்தை அவிங்கப்பன் வந்ததுமே குடுக்கச் சொல்லீர்றன்”

“அடித்தேவிடியா முண்டை”, அவிநாசியண்ணன் ஊட்டு அக்காவின் வசவு சரியாகக் கூட காதில் விழவில்லை. ‘பட்’டென்று யாரோ பின்னந்தலையில் அடித்தார்கள். என்னதான் எட்டு வயதுச் சிறுவன் என்றாலும், பின்னந்தலையில் அடித்தால் யாருக்கும் சினம் சிலிர்த்தெழத்தானே செய்யும். கோபத்தோடு திரும்பிப் பார்த்தவன் அமைதியாகிப் போனான்.

“இங்கென்றா பண்ற? இந்த ஊத்தை நாயத்தை எல்லாம் உங்கம்மா இருந்து கேட்ட்டு வரச் சொன்னாளா? ஊட்டுல போயி பொட்டாட்ட இரு போ”, அதட்டி அனுப்பினார் பெரியப்பிச்சி சின்னைய கவுண்டர்.

அச்சூழலில் இருந்து விடுபட்ட வேலுவை, அவனது வீட்டில் இருக்கும் செல்லியின் நினைவு ஆட்கொண்டது. தன் மாமா ஆறுக்குட்டி அவரது துள்ளுந்தை முடுக்கி ஓடவிடும் காட்சியைத் தன் மனத்துள் இருத்தினான் வேலு.

தன் அரைக்காற்சட்டைப் பையினுள் இருந்த சாவி கொண்டு தன் துள்ளுந்திற்குச் சமிஞ்ஞை அளித்து, வலது காலால் கற்பனைத் துள்ளுந்தின் இயக்கி மேல் ஓர் உதைவிட்டான். ‘ப்புர், ப்புர்’ என ஒலிக்கத் துவங்கியது வாய். கைகள் இரண்டும் காற்றோடு கரைந்திருக்கும் கைப்பிடிகளை இறுகத் திருப்பி முடுக்கியது. அடுத்த விநாடிக்கெல்லாம், ‘ப்புர், ப்புர்’ ஒலியானது ‘ட்டுர்ர்ர்’ரென மாறிப் பெருவேகம் கொண்டு தன் துள்ளுந்தில் வீடு சென்றான் வேலு.

“கண்ணூ வேலூ. எங்கடா இராசா சொல்லாமக் கொள்ளாமப் போன? நம்ம செல்லியப் போய்ப் பாரு, போ”, சொல்லிக் கொண்டே வாசலில் இருந்து அடுக்களைக்குள் நுழைந்தாள் அம்மா.

“அய்...”, துள்ளிக்குதித்து புறக்கொல்லைக்குப் போனான். வலது மூலையில் தரையெல்லாம் வைக்கோலிட்டு, மேற்புறத்தில் பருத்தியைப் பொதியாக்கப் பாவிக்கும் கிழிந்த மலகு ஒன்று மடித்து விரிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் செல்லி படுத்திருந்தாள். “அட செல்லீ” வாஞ்சையோடு குரல் கொடுத்துக் கொண்டே சென்றான் வேலு. பாலூட்டும் தினவிலிருந்த செல்லி, ஒருக்களித்த தலையின் மேற்புறக்கண் இமையை மாத்திரம் திறந்து பார்த்தாள். வேலுவைக் கண்டதும் தலையை உயர்த்தி பெருமிதத்தோடு மென்குரலில் குழைந்தாள்.

செல்லியின் கண்களில் இருந்து, தன் பார்வையை மெல்ல அவளது அடிவயிற்றுக்கு நகர்த்திக் கொண்டு போனான் வேலு. முட்டிமுட்டிப் பால் குடித்துக் கொண்டிருந்தன அத்தனையும். கொழுகொழுவெனப் பார்ப்பதற்குப் பரவசமூட்டின அவை. ஒன்றன் மீது ஒன்று ஏறுவதும், முலைக்காம்பினைக் கவ்விப் பிடிப்பதில் போட்டி போட்டுக் கொள்வதும், பிஞ்சுக்கால்களால் மற்றதைத் தள்ள முற்படுவதுமாய் மூசிக்கிடந்தன அவை. முலையொலிகள் ஒரு அற்புதமான இசையைத் தருவித்துக் கொண்டிருந்தது. குட்டிகளின் சிலும்பல்கள் மென்மையிடம் தோற்பதும் ஒரு அழகுதான். இவை எல்லாமே சிறுவன் வேலுவுக்கு கிடைத்திராத அனுபவம். அதில் மூழ்கி ஆழ்ந்து மெய்மறந்து நின்றவன், அருகில் இருந்த ஆட்டாங்கல்லின் மீது வாகாய் அமர்ந்து கொண்டான்.

எத்தனை குட்டிகள் என எண்ண முற்பட்டவன், பலமுறை முயன்றும் தோற்றுப் போனான். ஒன்றனடியில் ஒன்றாகப் புதையுண்டு பாலுண்ணும் அழகில் தன்னைப் பறிகொடுத்து, எண்ணுதலில் தோற்றான் வேலு.

”எத்தனாவது நாளுக்கா இது?”, உரையாடிக் கொண்டே அம்மாவும் மாகாளியாத்தா கோயில் சம்பங்கி அக்காவும் அவனிருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

“இன்னையோட மூணு நாளாச்சு சம்பங்கி”

“அதான், கண்ணுத்தொறக்க ஆரமிச்சிருச்சுக. எத்தனை குட்டிகக்கா மொத்தம்?”

“கடுவங்குட்டி ஆறும் பொட்டைக்குட்டி மூணும், மொத்தம் ஒன்பது குட்டீக ஈனி இருக்குறா செல்லி”

"செரிக்கா, அப்ப நான் இப்பவே ஒன்னை எடுத்துட்டுப் போறேன்”

“செரி சம்பங்கி. அப்படியே போற வழியில ’சின்னக்கண்ணா’வுக்கும் ஒன்னைக் குடுத்துட்டுப் போயிரு. முன்னாடியே ஒரு குட்டிக்குச் சொல்லி இருந்துச்சு”

சாளையில் இருந்த சிறு பொட்டிக்கூடையை எடுத்த சம்பங்கி அக்கா நேராக செல்லியிடம் போனாள். “செல்லி, எந்திரிச்சு அந்தப் பொறம் போ” என சம்பங்கி சொல்ல, அடுக்களைக்குச் சென்று வந்த அம்மா தூக்குப் போசியில் இருந்த சாமைக்கூளை அங்கிருந்த செல்லியின் வட்டலில் ஊற்றினாள். அதனருகே சென்ற செல்லி, “ப்ளக், ப்ளக்” என்று தன் நாவை நீட்டி நீட்டி அள்ளிப் பருகினாள் தன் குட்டிகள் புதுவீட்டு எசமானர்கள் ஆகிக்கொண்டிருப்பது அறியாமல்.

முலைப்பாலுண்டு திளைத்திருந்த குட்டிகளில் இரண்டை எடுத்து பொட்டிக் கூடைக்குள் வைத்தாள் செம்பங்கி அக்கா. கண்ணிமைப் புருவங்கள் கறுத்திருந்தன. வாய் அவ்வளவு சிறியதாகவும் வடிவாகவும் இருந்தன. வால்மயிர்கள் செவலை நிறத்தில் பட்டுப் போல படர்ந்திருந்தது. நாட்டு நாய்க்குட்டிகளின் அழகே தனிதான். வீட்டிற்குச் சென்றதும், கழுத்தில் மணியொன்றைக் கட்டிவிட வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள் செம்பங்கி அக்கா. கூடையில் படுத்திருந்த குட்டியொன்று எழுந்து நின்று அச்சிறுகுறியின் நுண்துளையினூடாகச் சிறுநீரைப் பீய்ச்சியது.

“கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்தீருச்சு. இஃகிஃகி.. கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்திருச்சு”, சிரிப்பில் அதிர்ந்து வெகுளியாய்க் கத்தினான் வேலு.

“சம்பங்கியக்காவுக்கு யோகம்டா வேலு. இந்தவாட்டி ஏக்கராவுக்கு ஏழுபொதி பருத்தியாச்சும் பாக்காம உடமாட்டா பாரு”, அம்மாவும் நெகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாள்.

காலை ஏழு மணிக்குத் துவங்கிய நாய்க்கொடை அடுத்தடுத்து வந்த உற்றார் உறவினரின் வருகையால் எட்டரை மணிக்கெல்லாம் ஓய்ந்தது. வேலுவுக்கு மனத்துள் ஏமாற்றமும் இறுக்கமும் கப்பி இருந்தது. புறக்கொல்லையில் செல்லியுடன் அவனும் இருந்தான், செல்லியும் அதன் பொட்டைக் குட்டிகளுமாக! இருந்த கடுவன்கள் எல்லாம் நாலாபுறமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

தோட்டத்திற்குச் சென்றிருந்த அப்பா வீடு வந்து சேர்ந்திருந்தார். வந்தவர், அம்மாவை விரட்டலானார். “என்ன பண்ற நீயி? மணி எட்டரை ஆகுதல்லோ?? எந்த நேரத்துலயும் சொசைட்டி வண்டி வந்துரும். வேணுங்ற பாலெடுத்துட்டு பால்போசியக் குடு; போயி ஊத்தீட்டு வந்துடுறேன்!”

“இதென்னுங்... வேணுங்றதை எடுத்துட்டு, மிச்சத்தை அளந்து வெச்சிருக்கேன். இந்தப் பொட்டைக்குட்டிக மூணத்தையும் வெச்சிட்டு என்ன பண்றது? அந்த வேன்க்காரங்ககிட்டக் கொடுத்து, மொகானூர் வாய்க்கால்ல வீசீறச் சொல்லுங்க”

”அம்மா நம்முளுக்கு?” வேலன் சொல்வதறியாது இக்கட்டில் தவித்தான். “இருக்குற பொட்டை நாயி ஒன்னு பத்தாதாக்கும்?” எரிந்து விழுந்தாள் அம்மா.

அம்மாவின் பின்னால் தகித்துப் போய் கையறு நிலையில் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறாள் செல்லி. அப்பா, பால்ப்போசியை ஒரு கையிலும் கூடையை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு வீதியில் இறங்கிவிட்டார். அவரைப் பின்தொடர்வதற்காய் வீதியில் இறங்கினாள் செல்லியும்.

“வேலா, நீ எங்கடா போற?”

“போங்மா. எங்கோடப் பேசாதீங்க”, வேலனும் செல்லியோடு போனான். பால்வளக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆளுயரத் திண்ணையில் கூடையை வைத்துவிட்டு பால் ஊற்றுவதற்காக அப்பா உள்ளே சென்றார். செல்லி உயர உயரக் குதிக்க முற்பட்டது. சிதைந்து போன தக்காளிக் கூடை ஒன்றுக்குள் இருந்த அந்த பொட்டைக்குட்டிகள் ‘க்ம்ம்.. க்ம்ம்” என மெல்லொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

சுல்தான்பேட்டைப் பால்வள வங்கியின் ஊர்தியொன்று, எமன் வருவது போலப் பூதாகரமாய் வந்து நின்றது.

“லேட்டாய்ட்டு இருக்கு. சீக்கிரம் கேன் ரெண்டையும் உருட்டுங்க, உருட்டுங்க”, விரட்டினார் ஊர்திக்காரர்.

“தம்பி, இந்தப் பொட்டைக் குட்டிகளை மொகானூர் வாய்க்கால்ல வீசீறுங்க தம்பி”.

“செரி கொண்டாங்க”, கூடை கைமாறியது. செல்லி கத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்தினாள். வேகமாய்ச் சென்ற பால்வண்டிக்குப் பின்னர் சற்று தூரம் சென்று திரும்பியது. வீடே, இழவு வீடாய்க் காட்சியளித்தது வேலனுக்கு.

சரியாகப் பசிக்கவில்லை. ஒழுங்காகச் சாப்பிடவுமில்லை. குளிக்கவில்லை. எதுவுமே செய்யப் பிடிக்கவில்லை வேலனுக்கு. ஆழ்ந்த யோசனைகள் பலவாறு வந்து போயின. “வாய்க்கால்ல வீசி இருப்பாங்களோ? வாய்க்கால்ல தண்ணி போகாம இருந்துச்சுன்னா, பொழைச்சிக்கும் இல்ல?? வேற ஆறாச்சும், அதுகளை எடுத்து அவிங்க வீட்ல வெச்சுகுவாங்களோ, நம்மூட்ல செல்லி இருக்குறதைப் போல??”

யோசனையில் ஆழ்ந்தவன், திண்ணையில் இருந்த கயிற்றுக் கட்டிலின்மீதே உறங்கிப் போனான். திடுமென எழுந்தவன், கூட்டுறவுச்சங்கம் நோக்கி ஓடினான்.

“மணீன்னா, காலையில வந்த கிளீனரேதான் சாய்ங்கால வண்டீலயுமு வருவாங்களாண்ணா?”. கூட்டுறவுச் சங்கத்தில் பாலடிக்கும் பணியாளர் மணியை வினவினான். “தெரியலை வேலு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதர இருக்கும். ஏன், உங்கம்மா மருந்து எதனா வாங்கியாறச் சொல்லி இருக்காங்களா?”

“இல்லீங்ணா”, பணியாளர் மணியின் மறுமொழியில் நிறைவற்று பதிலளித்தான் வேலு.

மாலை மணி ஏழு எப்போது ஆகுமெனத் தவம் இருந்தான். ஊர்வாசலுக்குச் செல்வதும், கூட்டுறவுச் சங்கத்தின் வாசலுக்குச் செல்வதும், தனித்து இருக்கும் செல்லியைப் பார்ப்பதுவுமாகத் தவித்துக்கிடந்தான். தனக்கிருக்கும் அன்றாட வேலைப்பளுவில், வேலுவின் துயரத்தைக் கவனிக்க அவனது அம்மாவுக்கு வாய்ப்பில்லை.

மாலை ஆறு மணிக்கெல்லாம், கூட்டுறவுச்சங்கத்தின் முன்பிருக்கும் அண்ணாச்சி கடைத் திண்ணையில் வந்தமர்ந்து கொண்டான். யாருடனும் விளையாடச் செல்லவில்லை. ஒருவழியாக, பால்வண்டி வரும் ஒலி கேட்கத் துவங்கியது. “கடவுளே, அதே அண்ணன் வரோணும்; அதே அண்ணன் வரோணும்”, இறைஞ்சலின் அதிர்வு கூடிக்கொண்டே போனது.

”என்றா தம்பி?”, அதே பணியாளர்தான்.

கண்கள் குளமாகிய நிலையில், பணிந்த குரல், “அண்ணா, அந்த பொட்டை நாய்க்குட்டிக மூணையும் வீசிட்டீங்ளாணா?”

“இல்றா தம்பி. சுல்தான்பேட்டை மேட்டுக்கடையில குடுத்து யாராவது கேட்டாக் குடுக்கச் சொல்லிட்டோம்”.

வீட்டை நோக்கி தலைதெறிக்க ஓடினான். எதிரில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆட்டுமந்தைகள் வந்து கொண்டிருந்தன. களையெடுக்கச் சென்ற காரிகையர் வந்து கொண்டிருந்தனர். ஊர்க்கிணற்றில் குடிநீர் எடுக்கச் சென்றவர்கள், சும்மாட்டுத்தலையில் ஒரு குடமும் வளையிடுப்பில் ஒரு குடமுமாக வந்து கொண்டிருந்தனர். இவன் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இறக்கை கட்டிப் பறந்து சென்றவன், கீழிருந்த கல் ஒன்றின் மேல் தன் காலடி மோதக் குப்புற விழுந்தான்.

“ஏன் வேலு, மாலநேரம் பார்த்துப் போகப்படாதாடா?? இந்தா, மண்ணுக் கொழிச்சுத் தாறேன். காயத்து மேல போடு!”, தன் வலக்கையால் மண்ணைக் கொழித்து அவன் சிராய்ப்புக் காயத்தின் மேல் பூசிவிட்டாள் எதிர்ப்பட்ட தெய்வாத்தக்கா. இரத்தம் வழிவது நின்றது.

மீண்டும் தன்வீடு நோக்கிப் பாய்ந்தான் வேலு. வாசலில் அம்மா கோழிகளை அடைத்துக் கொண்டிருந்தாள். இவன் பாய்ந்த பாய்ச்சலில், கோழிக்குஞ்சுகள் நாலாபுறமும் சிதறின. “நாசமத்துப் போனவன் எப்பிடிக் கலைச்சு உடுறாம்பாரு”, அம்மா அரட்டினாள்.

“செல்லீ.. செல்லீ.. உன்ற குட்டிக சாகுலடா. சுல்தான் பேட்டைக் கடையில வெச்சி, வந்து போறவிக எடுத்துட்டுப் போயிட்டாங்களாமா...”

புறக்கொல்லையில் நின்று, செல்லியைத் தேடின வேலனின் கண்கள். பிறகு பார்வையைக் குறுக்கிக் கீழே பார்த்தான்; வலது முழங்காலில் அப்பிய மண்ணையும் மீறி வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் தன் நாவால் நக்கித் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தது செல்லி!!

11/23/2011

பிதுங்கும் சுரைக்காய்கள்

LabuKendit.jpg (238×400)
பிள்ளைகள் 
பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்கள்!
பெண்கள்
கடைகளுக்குச் சென்றார்கள்!
சாலைகள்
பெருக்கின்றி இளைப்பாறின!
எஞ்சிய மக்கட்திரள்
பிதுங்கிய சுரைக்காய்களாய்
சாராயக் கடைகளிலும்
நீதிமன்றங்களிலும்!!


11/20/2011

பாதுகாப்பு

பேராய்வு
ஆராய்வு
பாதுகாப்பு
ஓம்படுத்தல்

11/07/2011

அமெரிக்கா:நாடளாவிய அறுந்தருண(emergency) அறிவிப்புச் சோதனை

அறுந்தருணத்தின் போது நாட்டின் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில், அமெரிக்க தகவல் ஒலிபரப்புத் துறையானது இதர சில துறையினருடன் ஒருங்கிணைந்து அறிவிப்பு வெள்ளோட்டம் ஒன்றினை நடத்த உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் தொலைதொடர்புத் துறை மற்றுமுள்ள ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிவிப்பானது, குறுகிய நேரத்தில் நாட்டு மக்களைச் சென்றடைகிறதா எனப் பரிசோதிக்கும் பொருட்டும், தகவற்கட்டுறுத்தல் குறித்த ஆய்வுக்காகவும் இச்சோதனை நடத்தப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் நாள், கிழக்கு அளவீடு பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் போழ்து, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் இடையூடாக செய்தி வெளியிடப்படும். எனவே, இவ்விபரத்தை உற்றார், உறவினர், அக்கம் பக்கம் என அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டுகிறது மத்திய அறுந்தருண மேலாண் முகமை(FEMA).

Here are specific items we want everyone to know about the test:

  • It will be conducted Wednesday, November 9 at 2:00 PM EST.
  • It will be transmitted via television and radio stations within the U.S., including Alaska, Hawaii, the territories of Puerto Rico, the U.S. Virgin Islands, and American Samoa.

Similar to local emergency alert system tests, an audio message will interrupt television and radio programming indicating: “This is a test.” When the test is over, regular programming will resume.


http://www.fema.gov/eastest/

அமெரிக்காவில் முதல் பரிசு பெற்ற படைப்பு

கரும்படக் காட்சி. ஒளியைப் பாய்ச்சி, அதனுள் மறைவுகளை நேர்த்தியாய் உள்ளடக்கிப் படைக்கும் காட்சிதான், கரும்படக் காட்சி என்பதாகும். ஆங்கிலத்தில் silhouette எனக் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இப்பெயர் வரக்காரணம், Étienne de Silhouette எனும் பிரஞ்சு அமைச்சரே ஆகும். அதன் பின்னணி விபரங்களைப் பின்னர் காண்போம்.

தற்போதைக்கு, மெம்ஃபிசு நகர இந்திய விழாவில் இடம் பெற்ற, கேரள மாநிலத்தவரின் இப்படைப்பினைக் கண்டு மகிழுங்கள். விழாவின் முத்தாய்ப்பாகவும், முதல் பரிசினைப் பெற்ற படைப்பும் இதுவேயாகும். இப்படைப்பினை வடிவமைத்து இயக்கியதில் பெரும்பங்கு வகித்தவர், வேலையிடத்தில் எனக்கு உதவியாக இருக்கும் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை.



11/06/2011

எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் 
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!
--பாவேந்தர் பாரதிதாசன்

இப்படிதாங்க எங்க வீட்ல, ஞாயிறுதோறும் தமிழ் வகுப்பு நடக்கு!! இஃகி இஃகி!!

11/05/2011

India Fest 2011, Memphis, Tennessee

இந்திய விழா 2011. ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் தென்மத்திய மாகாணமான டென்னசியின் மெம்ஃபிசு மாநகரில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் மாபெரும் விழாதான் இந்திய விழா.

மெம்ஃபிசு மாநகரில் குடியமர்ந்த நாள்தொட்டே இவ்விழாவின் மீதான எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு விழாவின் போது இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளின் காணொலிகள் மற்றும் அங்கிருப்போர் கூறக்கேட்டவை என அனைத்துமாகச் சேர்ந்து எதிர்பார்ப்பினைக் கூட்டி இருந்தது.

இவ்விழாவினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வது Indian Association of Memphis என்பதாகும். மிகவும் சிறப்பானதொரு அமைப்பு. மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் அமைப்பு. சமூகத்தின்பால் மிகவும் நாட்டம் கொண்டு, அறப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அமைப்பு.

காலையில் எழுந்தவுடனேயே, வீட்டார் புறப்பட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு வேறுசில பணிகள் இருந்தமையால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியும் இப்படியுமாக நண்பகல்வாக்கில், மெம்ஃபிசு நகர வேளாண்நிலையத்தை அடைந்தோம்.

மெம்ஃபிசு நகர வேளாண்நிலையம் என்பது மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர் ஒருங்கே கூடியிருக்கும்படியான உள்ளரங்கைக் கொண்டது. வாகனத்தரிப்பிடமும் பரந்த நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்கிறது. நாங்கள் உள்ளே சென்ற வேளையில் எப்படியும் பத்தாயிரம் பேருக்கும் மேலான பார்வையாளர்கள் இருந்திருக்கக் கூடும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஆறு அல்லது ஏழாம் ஆண்டு, மிச்சிகன் மாகாணம் டெட்ராயிட் நகரில் நடந்த தெலுங்கர் மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம் எமக்குண்டு. அம்மாநாட்டில் நாற்பதினாயிரம் பேர் கலந்து கொண்டதாக நினைவு. அதற்குப் பின், இப்போதுதான் இவ்வளவு பெரிய இந்தியர் கூட்டத்தை அமெரிக்காவில் காண்கிறேன்.

இந்தியாவில் என்று கேட்டுவிடாதீர்கள்? ஆம், சென்ற ஆண்டு, 2010 கோவை வ.உ.சி பூங்காவில் பல இலட்சம் பேர் கூடிய திமுக கூட்டம்தான் நான் கலந்து கொண்ட கடைசிக் கூட்டமாகும்.

பெருமளவிலான கூட்டத்தைக் கண்டதும் நமக்குள்ளும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நுழைவாயிலில் நுழைவுக் கட்டணமாக தலா மூன்று வெள்ளிகள் செலுத்தினோம். அரங்கத்திற்குள் சென்றதும் முதலில் கண்ணில் தென்பட்டது யோகா பிரச்சாரக் கூடாரங்கள். அவற்றை நிராகரித்துவிட்டு உள்ளே சென்றோம்.

அப்பப்பா, எத்தனை, எத்தனை உணவுக் கடைகள்? காட்சிப் பொருட்களாக வைத்திருந்த உணவுப் பண்டங்கள் யாவும் கவர்ந்திழுக்கக் கூடியனவாக இருந்தன. எனக்கு ஒரிசா மாநில வகை உணவு மீது நாட்டம் தோன்றியது. ஆனால், மனைவியார் தட்டிக்கழித்துக் கூட்டிக் கொண்டு போனார்.

“அய்ய்... தமிழ்நாடு உணவகம்” எனச் சிலிர்த்து அங்கே அழைத்துப் போனார். அங்கே சென்றமாத்திரத்தில், “அய்ய்... கோவை கார்னர்” என்று கூவி, அந்தக் கடைக்கு இழுத்துச் சென்றார். “என்னுங்க நம்மூர்ச் சாப்பாடே சாப்பிடலாமுங்க” என்று சொல்லியதற்கு கட்டுப்படுவதைத் தவிர எனக்கு வேறெதும் உறுதல் உண்டோ??

“ஏங்க கோழி பிரியாணி பாருங்க. நம்மூர்ல செய்த மாதிரியே இருக்கு பாருங்க!”

”அண்ணா, அந்த கோழி பிரியாணி ரெண்டு குடுங்க”

“what?"

"நீங்க கோயமுத்தூருங்களா?”

”ஆமா”

“Two Chicken Biriyani"

விட்டால் அந்த அம்மையார் பருக்கைகளை எண்ணுவார் போலிருந்தது. மிக மெதுவாக அந்த நெகிழி அகப்பை கொண்டு மிகச் சரியாக ஒரு அகப்பை, பெரிய எலுமிச்சையளவு தட்டில் இட்டு முட்டைக் குழம்பில் அரை முட்டைக்கும் மேலாக எதுவும் இருந்துவிடாமல் மிகக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்.

இடையில் குறுக்கிட்ட இன்னொருவர், “fish cutlet?"

"சரிங்க, வையுங்க”, என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த அம்மையார் குறுக்கிட்டு, “each plate is dollar ten" என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அதன் மொத்த மதிப்பு எப்படிப் பார்த்தாலும் ஐந்து வெள்ளிகளுக்கும் மேல் இராது. காசைப் பறித்தது போலவே உணர்ந்தேன்.

அங்கிருந்த பரப்பு நாற்காலிகளின் மேல் இவ்விரு தட்டுகளையும் வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் செல்ல முற்பட்டேன்.

“எங்க போறீங்க?”, ஏமாற்றத்தை அடக்க முடியாமற் தவிர்த்த மனைவியாரின் முகம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “பரவாயில்லை, இரண்டு தட்டுலயும் இருக்குறதை ஒரு தட்டுல போட்டு நீ சாப்பிடு. அந்த மீன் வடைய மாத்திரம் குழந்தைக கையில குடுத்துரு” எனக் கூறிவிட்டு மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் சென்றேன்.

“yes"

"வணக்கங்க. சாப்புடுறதுக்கு பிரியாணி ஒரு தட்டு!”

“sure, you want anything else?"

"ம்ம்... அந்த மெதுவடை ரெண்டுங்க”

“twelve dollars" என்றார் அவர்.

வேறெதுவும் பேசாமல் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தமர்ந்து, கோழியைக் கடித்தேன். இறைச்சி வெந்திருக்கவே இல்லை. இறைச்சி மணம் குப்பென்று அடித்தது. அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, இவ்விரு வடைகளும் வெந்திருக்கிறதா எனப் பார்த்துவிட்டுக் குழந்தைகளின் கைகளில் திணித்தேன்.

பசியில் இருந்த அவர்கள், கொடுத்ததை எல்லாம் வாங்கிச் சுவைக்கலானார்கள்.

நான் மட்டும், இன்னமும் எதுவும் சாப்பிடவில்லை. ஆனால், முப்பத்தி இரண்டு வெள்ளிகள் கைமாறி இருந்தன. அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது கண்ட காட்சி மிகவும் எரிச்சலூட்டியது.

ஒரு கடையில் இருந்த அந்த அமெரிக்கப் பெண்மணி, தான் கண்டதில் பிடித்தமானவற்றை எல்லாம் வேண்டுமெனச் சொல்லி, உடன் இருந்த இரண்டு குழந்தைகளின் விருப்பத்தையும் கேட்டறிகிறார். பின்னர் பணம் செலுத்தும் தருணமும் வருகிறது.

“forty two dollars madam"

அந்த அம்மையாரிடம் இருந்த பணம் போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அவ்வளவு ஆகுமென எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். தட்டுகளை ஏந்தி ஆயிற்று. ஆனால், பணம் கொடுக்க இயலவில்லையே எனும் இக்கட்டில் அவர் பரிதவித்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அதனைக் கண்டதும், அருகில் இருந்த மற்றொருவர், “its ok... I will take care, when I pay mine" என்றதும் அவரது முகத்தில் பேரொளி பிறந்தது. “thank u, thank u" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்.

இந்தக் கடை இனி நமக்கு வேண்டாம் என நினைத்து, நண்பர் இளங்கோவன் அவர்கள் நடத்தும் உணவுப்பண்ட சாலைக்குப் போனோம். எதையோ சொல்லி, அக்கடையின் பணப்பெட்டியில் இருந்த அவரது நண்பர் கையில் இருபது வெள்ளிக்கான தாளினைத் திணித்தேன்.

இளங்கோ அவர்களது மனைவியார். கச்சுப்பண்டம்(sandwich) இரண்டும் தேநீரும் எங்கள் கண் எதிரிலேயே உண்டு செய்து கொடுத்தார்கள். கச்சுப்பண்டத்திலும் முக்கால் பங்கினை மகள்கள் வாங்கி உண்டார்கள். நான் உண்ட காற்பங்குப் பண்டம் மிகவும் சுவையாக இருந்தது.

இருந்த கடைகளிலேயே இக்கடையில்தான் அறம் நின்றாடியது என உறுதிபடச் சொல்வேன்.

எல்லோரும் வடித்து ஆறிப் போனவற்றைச் சூடு செய்து கொடுத்து, கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மாத்திரம், வந்தவர்களுக்கெல்லாம் சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கணக்குப் பார்க்க மனம் வரவில்லை. அவர்கள் மிகவும் களைத்து சோர்ந்து இருந்தார்கள். பார்க்கவே, பரிதாபமாக இருந்தது.

அடுத்து, மனைவியார் குழந்தைகளுக்கு நகைகள் வாங்க வேண்டுமென நகைக்கடைகளுக்கு அழைத்துப் போனார். நான் கண்ட காட்சியை விவரிக்க இயலாது. அந்த அளவுக்கு, கடைக்காரர்களின் மனத்தினைப் புண்படுத்திக் கொண்டிருந்தனர் வந்தவர்கள்.

ஐம்பது வெள்ளி நகையை ஐந்து வெள்ளிக்குக் கேட்டு, இடத்தைவிட்டு நகரவும் செய்யாமல் இருந்தார் ஒரு இளம்பெண்மணி. அடுத்த கடையிலோ, விலை உயர்ந்த நகைகளைத் தாறுமாறாக விட்டெறிந்து கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில், கடைக்காரர்களின் நிலை வெகுபரிதாபமாக இருந்தது.

குழந்தைகளுக்கான காதணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியார், “இந்தக் கம்மலுக எல்லாம் நல்லா இருக்கு. ஆனா, இன்னும் நாலு கடைகளைப் பார்க்கலாம்”.

“இந்நேரம் உனக்கு எடுத்துக் காமிச்சிட்டுருந்தவன் பைத்தியக்காரனா?” எரிச்சலைக் கொட்டித் தீர்த்தேன்.

”நூற்றிப்பத்து வெள்ளிகள் பெறுமானம் கொண்ட பொருளுக்கு, நூறு தாருங்கள்” எனப் பரிதாபமான இறைஞ்சும் குரலில் தாழ்ந்த பார்வையோடு பார்த்தார்.

என்னிடம் இருபது வெள்ளிப் பெறுமானமுள்ள தாள்கள் மட்டுமே இருந்தன. அவற்றுள் ஆறினை எடுத்து நீட்டினேன். ஆனால், அவற்றுள் இருந்ததில் ஒரு தாளினைக் கவனத்துடன் திரும்பக் கொடுத்துவிட்டார்.

உடனடியாக, இவ்விடத்தில் இருந்து வெளியேற வேண்டுமெனச் சொன்னதும், “ஆமாங்க, போலாம்” என என்றுமில்லாதபடிக்கு ஒத்திசைந்தார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் அரங்கத்திற்குச் செல்லலாம் என எண்ணி, மாற்றுப் பாதையில் செல்ல நினைத்துத் திரும்பினோம்.

“அப்பா, பசிக்குது!”

“என்ன கொடுமைடா இது? ஐம்பத்து இரண்டு வெள்ளிகள் கொடுத்த பிறகும் பசிக்கொடுமை தீரலையா?” என்றெண்ணியபடியே மனைவியாரைப் பார்த்தேன்.

“சரி வாங்க. போலாம். நான் வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த பட்சணங்களை வெச்சி சரி பண்ணுறேன்”

“பரவாயில்லை. நான் மறுபடியும் போயி, எதனா வாங்கியாறேன்”

“இக்கும்... அங்க போனா இருக்குறதை எல்லாம் புடிங்கிட்டுத்தான் உடுவாங்க” என முணுமுணுத்துக் கொண்டார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கம் சென்றடையவும், கேரள மாநிலத்தினர் வழங்கிய நடன நிகழ்ச்சி துவங்கவும் சரியாக இருந்தது. அவர்களது நாட்டிய நடன நிகழ்ச்சி, மிக அருமையாக இருந்தது. வயிற்றுப் பசியையும் மீறி, மனம் குளிர்ந்த நிகழ்ச்சியாக அது அமைந்தது.

“வந்ததுக்கு இது பார்த்ததே போதும். கிளம்புங்க, நான் ஊட்டுக்குப் போயி அரிசியும்பருப்புஞ் சோறாக்கணும். அல்லாரும் கிளம்புங்க”, மனைவியார் அரற்றினார்.

அறக்கட்டளை நடத்தும் விழாவில், வயிற்றால் அடித்துக் காசு பார்க்க நினைக்கும் வெகுளிகளை நினைத்து என்ன சொல்வது?! அல்லது, வயிற்றுப் பிழைப்புக்கு பொருள் விற்கும் வணிகர்களை மனிதநேயம் கொண்டு பாராமல் கொச்சைப்படுத்திக் கொள்ளை கொள்ள விரும்பும் மனிதர்களைத்தான் என்ன சொல்வது??

அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்!!


கேரள மாநிலத்தவ்ரின் அட்டகாசமான படைப்பு இதோ!!

10/23/2011

புனித லூயி நகர மிசிசிப்பி ஆற்றங்கரைக் காட்சிகள்

ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
என்னில் என்னை மறந்தேனே மிசிசிப்பி
உன்னில் என்னைக் கொடுத்தேனே மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி


Walking along, whistling a song,
Half foot and fancy free,
A big riverboat, passing us by, she’s headed for New Orleans
There she goes, disappearing around the bend.
Roll on Mississippi; you make me feel like a child again.

A cool river breeze, like peppermint leaves,
The taste of it takes me back,
Chew’n on a straw, torn overalls,
I can’t hold an old straw ???? and muddy river.
Just like a long lost friend.
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, big river roll.
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, roll on.

Now, when the world's spinning round, too fast for me,
And I need a place to dream.
So I come to your banks, I sit in your shade
Relive the memories
Tom Sawyer and Huckleberry Finn
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, Big river roll
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, Roll on, Mississippi,
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on

மிசிசிப்பி ஆற்றினூடே!!

நாம் மிசிசிப்பி ஆற்றங்கரையோரமாக கடந்த நான்கு நாட்களாக இருந்து வருவது தெரிந்ததே! பயணத்தினூடாகக் கட்டுரை எழுதுவதுதான் நமது எண்ணமாக இருந்தது. இருப்பினும், இடையறாத காட்சிப் பொழுதுகள் மற்றும் தமிழ் உறவுகளுடனான சந்திப்பு என, நம் எண்ணம் ஈடேறவில்லை.

எனினும், கட்டுரைகள் தாமதமாக வெளியாகும் என்பதை ”எழிலாய்ப் பழமை பேச” சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்காம் நாளான நேற்று, மிசிசிப்பி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான ‘மெராமெக்” ஆற்றங்கரையோரம் இயற்கையின் எழில் பருகிப் பயனடைந்தோம். இதோ, அதன் போழ்து எடுக்கப்பட்ட சில படங்கள்!



















கெழுவளம்மிகு நண்பர் விஜய் மணிவேல் அவர்களுடன்



அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

மிசிசிப்பி(பெரியாறு)

10/21/2011

உள்ளூர் நிலவரம்

மேப்பில் மரத்தில்
தார்ச்சிட்டுக் குருவிகள்
சிலுசிலு ஓசைதனைச் சீராய்
சிந்திக் கொண்டிருந்தன!

எழுந்து வெளியே வந்தேன்
கீழ்வானத்தில் வெள்ளை
பூசப்பட்டுக் கொண்டிருந்தது

அட விடிஞ்சிடுச்சு இங்க!
ஊரில் விடிந்துவிட்டதா?
கேட்டுத்தான் பார்ப்போமே?!

ஆட்டம் போட்ட குண்டர்கள்
அனைவரும் தோற்றிருந்தனர்
மகிழ்ச்சி கொண்டது மனம்!

அப்ப இனி?
வென்றதெல்லாம் யாரு??
தெளிவாய் சொன்னார்கள்,
உறங்கி இருந்த வேறு சில குண்டர்கள்!

அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!

10/20/2011

அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

அமெரிக்கப் பெரியாற்றைக் கண்ட நாள் முதற் கணமே எம்மைப் பற்றிக் கொண்டது என்றுந்தீராத காதல். அதன் சுவை மிகுந்த வரலாறு, எத்தகையவரையும் கட்டிப் போட்டு சிந்திக்க வைக்கும். அதன் உச்சிதொட்டு அடி வரை சென்று காட்சியுற்று வாழ்வுதனை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற தணியாத ஆசை எனக்கு உண்டு.

அமெரிக்கப் பெரியாறு(மிசிசிப்பி) மெம்பிசு நகரில் எம்மை ஈர்த்து அரவணைத்தது. அவ்வரவணைப்பின் நீட்சியாகத்தான் குடும்பத்தோடு செயின் லூயிசு மாநகருக்கு எம்மை இவ்வாரம் வரவைத்தாள் அவள். எம் ஒட்டு மொத்த குடும்பமே மிசிசிப்பியுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.

நேற்று மதிய நண்பகல் உணவுக் கிரிகைகளை முடித்துக் கொண்டு, காளியர்வில் நகரை விட்டுக் கிளம்பினோம். முதல் நிறுத்தமாக, மெம்பிசி நகர முற்றத்தில் நிறுத்தி மிசிசிப்யின் ஓட்டத்தைக் கண்டுகளித்தோம். எங்களைப் பார்த்து வெகுவாய்ச் சிரித்து வைத்தாள் அவள்.

“அப்பா, நம்ம ஆத்துக்குள்ள படகுலயே செயின்ட் லூயிசு போனா என்னப்பா?” என்றாள் மூத்தமகள். “இல்லடா கண்ணூ, படகுல எதிரோட்டமா போறதுக்கு நெம்ப நேரமாகும் இல்லையா?” எனச் சொன்னாள் தாய்க்காரி.

டென்னசி மாகாணத்தின் மாநகரான மெம்பிசு, அமெரிக்காவின் தென்பகுதியில் ஆற்றின் கிழப்புறம் இருக்கிறது. மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரம் என்பது, அமெரிக்காவின் வடபகுதியில் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கிறது.

ஆற்றை மறுகரைக்கு எங்கு வைத்துக் கடப்பது என ஆய்ந்த போது, மெம்பிசு நகரில் வைத்தே மறுகரையைக் கடப்பது என்றும், அங்கிருந்து ஆற்றை ஒட்டியே மேல் நோக்கிச் செல்வது என்றும் முடிவாகியது. ஆங்காங்கே நிறுத்தி, பெரியாற்றைக் கண்டு கொண்டே செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே காரணமாகும்.

I-40 தேசியப் பெருஞ்சாலையினூடாக ஆற்றைக் கடந்து, ஆர்கன்சாசு மாகாணத்தில் இருக்கும் மறுகரையை அடைந்தோம். சில மைல்தூரம் சென்றவுடன், ஆற்றின் ஓரமாகவே அமெரிக்காவின் வடபகுதிக்குச் செல்லும் I-55 பெருஞ்சாலையும், I-40 ஆகியவற்றின் சந்திப்பை அடைந்தோம்.

சந்திப்பில் வடக்கு திசை நோக்கிப் பயணித்ததை அவதானித்த மகள், வினவத் துவங்கினாள். “அப்பா, இரட்டை இலக்க பெருஞ்சாலைக்கும், ஒற்றைப்பட இலக்க பெருஞ்சாலைக்கும் என்ன வேறுபாடு??” என்றாள். “ஒற்றை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் தென்வடலாக இருப்பவை. இரட்டை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் கிழமேற்காக அமைந்திருப்பவை. மூன்று இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், ஒரு நகரைச் சுற்றிலும் வட்ட வடிவத்தில் அமைந்திருப்பவை”, என விளக்கமளித்தாள் தாய்க்காரி.

அடுத்து எங்கே வைத்து பெரியாற்றுக் கரையில் இறங்குவது என யோசித்த போது, மறுகரையில் எங்கு கெண்டகி மாகாண எல்லை துவங்குகிறதோ, அந்த இடத்தில் வைத்து இறங்குவது என முடிவாகியது. அதன்படி, ஃகோவார்டுவில் எனும் சிறுநகரத்தில் இருக்கும் ’புது மேட்ரிட்” பாலத்தின் வழியாக ஆற்றின் நடுவே இருக்கும் ”வேண்டோவர்” ஆற்றுவீயரங்கம் சென்றடைந்தோம்.

பச்சைப் பசேல் எனக் கண்களுக்கு விருந்தாக இருந்தது நிலப்பரப்பு. “வேண்டோவர்” இடைக்குறையின் இருபுறமும் சென்று மிசிசிப்பியானவள் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டோம். நிதானத்தோடும், பொறுப்போடும் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

அங்கே நாங்கள் பேச்சுக் கொடுத்த, செவ்விந்தியரான மேக்சிம் கேம்பல் என்பார் ஆற்றுவியரங்கம், அதன்மீதான தன்னுடைய அவதானம் முதலானவற்றை எங்களுக்கு உணர்ச்சி பொங்க விவரித்தார். தனக்குத் தெரிந்து மிகச்சிறிய வணடல் திட்டுதான் இங்கே இருந்தது. வண்டற்ப் பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க ஆற்றிடைக்குறுக்கின் பரப்பும் உயரமும் பெருத்துக் கொண்டே போவதாகவும் கூறினார்.

”ஆற்றுவீயரங்கம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது??”, என்றெல்லாம் மூத்தம்கள் இடையறாது கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தாள். அதற்கெல்லாம் விடையளித்துக் கொண்டிருந்த தாய்க்காரி, ஓய்ந்து போய் கைவிரித்துவிடவே அவள் எம்மை நாடியவளானாள்.

ஆற்றுவீயரங்கம் அல்லது ஆற்றிடைக்குறுக்கம் என்பது, ஆற்றில் வரும் பெருந்தொகையான வண்டல் நிலைத்து நிற்பதனால் ஏற்படுவது என்று சொல்லி ஆற்றுப்படுத்தினோம். ‘மெசபடோமியா” குறித்தும் சொல்லிப் புரியவைத்தோம்.

தொடர்ந்து, அடுத்து எங்கே நிறுத்தி மிசிசிப்பியை அவதானிப்பது எனவும் கேட்டறிந்து கொண்டாள் மகள். மிசிசிப்பியும், ஒஃகாயோ ஆறும் புணர்ந்து கொள்ளும் இடமான இல்லினாய் மாகாணத்தில் இருக்கும் ”கெய்ரோ” எனும் இடத்தைத் தெரிவு செய்தோம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களது பரப்பில் வடியும் நீரைப் பெருமளவில் கொண்டு வருபவள்தான் ஒகாயோ ஆறு. மொத்த நீரின் கொள்ளளவில், மிசிசிப்பியை விடவும் ஒகாயோதான் அதிக அளவில் நீரைக் கோண்டு வருபவளாவாள்.

இலினோய் மாகாணத்தின் கெய்ரோ நகரில் ஒஃகாயோவும், மிசிசிப்பியும் ஒருமித்துக் கொள்ளும் அழகே அழகுதான். ஆனால் நாங்கள் அங்கு வெகுநேரம் நிலைத்திருக்கவில்லை. அங்கே இருந்து புறப்படும் தருணத்தில், ’ஆறு’ என்பதற்கும், ‘நதி’ என்பதற்கும் உண்டான மாறுபாட்டை வினவினாள் இல்லாள்.

”ஆறு” என்பது ஓடோடி மற்றொரு ஆற்றோடோ அல்லது கடலோடோ கலப்பவள். ”நதி” என்பது, தானாக உயிர்த்தோ அல்லது, இயற்கையாகவே ஆற்றிலிருந்து கிளைத்து நிலத்தில் ஓடிச் செல்பவள். ஆனால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றும் கூறி வைத்தோம்.

பிறகு புறப்பட்டு, ஒரு சில மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் லூயிசு நகரத்தில் இருக்கும் மேரியாட் விடுதியை வந்தடைந்தோம். மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவரும், ‘அருவி’ இதழின் துணை ஆசிரியருமான திரு.ராஜ் மற்றும் திரு.பழனி அவர்களும் விடுதிக்கே வந்திருந்து வரவேற்பு நல்கி, பின்னர் திரு.பழனி அவர்களது இல்லத்தில் உண்டி புசித்துத் திரும்பினோம்.

குடும்பத்து ஆட்கள், ஒரு சிறு அறையில், ஒற்றைப் படுக்கையில் உறங்கியது இப்போதுதான். குடும்பத்திற்குள் என்றுமில்லாத ஒரு அணுக்கம் இருந்ததை உணர்ந்தோம். இரண்டு வயது கொண்ட மகளின் மழலையும் குறுஞ்செயல்களும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. பெரிய வீடுகளில் தனித்திருப்பதன் கொடுமை, கூட்டுக்குடும்பங்கள் அருகிப் போனது என எளிமையின் அருமை, பெருமைகளை நினைவு கூர்ந்து கொண்டோம். கூட்டுக்குடும்பத்தில் நான் வாழ்ந்த நாடிகளின் நினைவினூடே உறக்கமும் எம்மை ஆரத்தழுவிக் கொண்டது.

--மிசிசிப்பியின் அரவணைப்பு தொடரும்