12/14/2010

காலமே, கனிந்து நில்!

மாற்றங்கள் மாறாதன! ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்காக மாறி வருவன எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமா? இன்னுஞ் சொல்லப் போனால், அதன் போக்கில் நிகழ்வன மாற்றங்கள். இன்றைய சூழலில், மாற்றங்கள் திணிக்கப்படுகின்றன என்பதுதானே உண்மை??

செங்கற்பொடியோ அல்லது கரித்துண்டை நசுக்கியதில் எஞ்சிய துகள்களையோ கொண்டு பல்துலக்கியவன், வேப்பங் குச்சிகளையும் கருவேலங் குச்சிகளையும் கையில் எடுத்தேன். அதுவே, பிறிதொரு நாளில் பற்பசையுடன் கூடிய பற்குச்சி என்றாகிவிட்டது. இது மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றம்.

மோர் கொடுத்தால் இளக்காரமாய் நினைக்கக்கூடும் என நினைத்து, ஆள் வைத்து அனுப்பி, கோக்கும் ஃபேண்ட்டாவும் வாங்கி வந்து, கண்ணாடிக் கோப்பையில் வார்த்துக் கொடுப்பது என்பது பகட்டுதானே? இந்த மாற்றம் யாரால், எப்படி நிகழ்ந்தது??

மூக்கைப் பொத்திக் கொண்டு நிற்கிறோம். ஆனாலும் அவன் அதைச் சட்டை செய்தானா? அவன் குடிக்கும் பழங் கஞ்சியையும், ஊற வைத்த தேயிலைத் தண்ணீரையும்தானே சீனன் குடிக்கிறான்?? அதுவும் அமெரிக்காவில்??? காரணம், அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை என்பதே கிடையாது. என் மரபு, என் முந்தை, என் நிழல்... எல்லாமும் என்னோடுதான் வரும் என்கிற நினைப்பு அவனுக்கு.

நான் என் வழக்கைப் பின்பற்றும் போது, என்னைக் கேலி செய்பவன் வெள்ளைக்காரனோ அல்லது சீனனோ அல்ல; என் மரபை, பழக்க வழக்கத்தை, பண்பாட்டைச் சிதைக்கும் காரியத்திற்குத் துணை போகும் எம்மவன்தான் என்னைக் கேலி பேசுகிறான். இப்படிப் பழைமையில் ஒன்றினாயானால், தனித்து நின்றுவிடுவாய் என மிரட்டவும் செய்கிறான். இப்படித்தான் நம்மில் மாற்றங்கள் நிகழ்கிறது!

யூதர்களிடம் பழகுகிறேன். கிட்டத்தட்ட 2003 துவக்கம், இன்று வரையிலும் யூத நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன். 1996 துவக்கம், பல இசுலாமிய நண்பர்களிடம் நெருக்கம் வைத்திருக்கிறேன். ஆப்பிரிக்க அமெரிக்க நண்பர்கள் பல பேர், என்கீழ் பணி புரிகிறார்கள். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், அவர்கள் எவருமே என்னைப் பகடி செய்திருக்கவில்லை. இன்னுஞ் சொல்லப் போனால், மாறாதன கண்டு அவர்களுக்கு மகிழ்ச்சியே!

why do you try to alter your instinct? தவறானவை என்றும் நீட்சியடைவது இல்லை. அது இயற்கையின் நியதி. பிறப்பின் வழிவந்த பழக்கத்தை இழிவு எனக் கருதுவாராயின், இழிவின்பால் ஒருவர் வீழ்ந்துவிட்டார் என்றே பொருள். உதாரணத்திற்குச் சொல்வதெனின், ஒருவருக்கு காமம் எப்போதும் தலைவிரித்தாடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அடங்கச் செய்வன குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, அவரை அறவே ஒழிப்பது என்பது தீர்வாகாது. ஆனால், இன்றைய தாயகத்து நிலை மிகவும் கேலிக்கூத்தானது. ஏனென்றால், இவ்விரு நிலைப்பாட்டையும் தவிர்த்து, காமம் ஒரு திணிப்புப் பண்டம் போல் வணிகமாக்கப்பட்டு விட்டதுதான் மாபெரும் சோகம்.

எங்கோ, யாரோ, எதற்காகவோ, இந்தியத் திருநாட்டின் தனித்தன்மையைக் குறி வைத்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இலாவகமாய் சிதைத்து வருகிறார் அவர். நம்மவர்களும் இரையாவது தெரியாமல் இரையாகிக் கொண்டு இருக்கின்றார். எதிர்மறையாகப் பேசிப் பழக்கம் இல்லைதான். இருந்தும் பேசித்தானே ஆக வேண்டி இருக்கிறது.

கலை, இலக்கியம் இவற்றின் தரத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமகால இலக்கியம் என்பது ஒரு போதும், இன்றைய நிலையைக் கொண்டது இல்லை. புதுமை புகுத்திய மாற்றங்கள், ஆக்கப்பூர்வமான மாற்றங்களாகத்தான் இருந்தன. எதிர்நிலை மற்றும் குறை கூறல் என்பனவும் கூடவே இருந்தது. ஆனால், இப்போது இருப்பது போல விலைபேசுவனவாக ஒருபோதும் இருந்தது இல்லை.

நல்ல நயமான திரைப்படம் வெளியாகிறது. தோற்றுப் போகிறது. நயமற்ற படம் வெற்றி வாகை சூடுகிறது. நல்ல நூல்கள் பிரசவிக்க, படாதபாடு பட வேண்டி இருக்கிறது. அப்படியே பிறந்தாலும், நுகரப்படுவதே இல்லை. இதையெல்லாம் நெறிமுறைப்படுத்துவது யார் கடமை? மக்களின் கடமையா? மக்களை நெறிப்படுத்தும் சமூக, கலை, இலக்கியவாதிகளின் கடமையா?? அரசாளும் தலைவனின் கடமையா??

ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுதல் வேண்டும்; ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள், வெளியில் இருந்து உள்புகுதல் வேண்டும். அப்படியாவது, மாற்றங்கள் மாறுபனவாய் இருக்கட்டும். காலமே, கனிந்து நில்!!

14 comments:

  1. பிட்ஸா கார்னர்ல அரை ரொட்டி ஆர்டர் பண்ணிட்டு ஒரு மணி நேரம் சோடியா கடலை போட முடியுது. முருகன் இட்லி கடையில முக்கால் இட்டிலி திங்கறதுக்குள்ள முதுகு பின்னாடி நிக்குறாய்ங்க.

    /வேப்பங் குச்சிகளையும் கருவேலங் குச்சிகளையும் கையில் எடுத்தேன்/

    இப்பதான் பற்பசையில வேப்பங்குச்சி சாறு, ஆலங்குச்சி சாறு சேர்க்கப் பட்டதுன்னு போட்டுல்ல கல்லா கட்டுறானுவ. அத நானே மென்னுக்குவனேன்னு சொல்லலாம்னு பார்த்தா மரத்தக் காணோம்.
    /மோர் கொடுத்தால் இளக்காரமாய் நினைக்கக்கூடும் என நினைத்து,/
    அவ்வ்வ். எத்தன ஊட்டுல மத்து இருக்குது. இருந்தாலும் எத்தன தங்கமணிங்களுக்கு கடையத் தெரியும்.

    /இந்தியத் திருநாட்டின் தனித்தன்மையைக் குறி வைத்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது./

    தனீஈஈஈத் தன்மைன்னு ஒரு இடுகை தேத்திறுவோம்:))

    /மக்களை நெறிப்படுத்தும் சமூக, கலை, இலக்கியவாதிகளின் கடமையா?? அரசாளும் தலைவனின் கடமையா??/

    பகடிக்கு அப்பாற்பட்டு, நெறிப்படுதல் என்பதற்கு உடன்படுகிறோம் என்பதே நம் பலவீனம் என நினைக்கிறேன். சுய நெறிக்கு உட்படாதவன் புற நெறிக்கு உட்படுதல் அசாத்தியம். நம் ஊர்களில் இதற்குக் கண்காணிப்புக்கு வழியே இல்லை எனும் போது என்ன வழியென்றே தெரியவில்லை.

    ReplyDelete
  2. தெளிவா சொல்லிட்டீங்க `எதுக்கு சொன்னேன்னு சொல்லமாட்டேன்னு` நன்றி

    ReplyDelete
  3. இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ற கட்டுரை. அவசியமானது கூட. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தேகம் புத்தகம் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா!!! :)))

    ReplyDelete
  5. /எம்மவன்தான் என்னைக் கேலி பேசுகிறான். இப்படிப் பழைமையில் ஒன்றினாயானால், தனித்து நின்றுவிடுவாய் என மிரட்டவும் செய்கிறான்/
    நிறைய பேர் இருக்கானுங்க. ஆனா, அவனுங்க கல்யாணம் பண்ணும்போது மட்டும் நம்மூர் பொண்ணு வேணும். கலாச்சாரத்த காப்பாத்தவோணும் இல்ல?

    ReplyDelete
  6. @@கபீஷ்

    சீமாட்டி வாழ்க!

    ReplyDelete
  7. //இப்படிப் பழைமையில் ஒன்றினாயானால், தனித்து நின்றுவிடுவாய் என மிரட்டவும் செய்கிறான். //

    இதயத் தான் ஆங்கிலத்தில் peer pressure என்பார்கள்.. மாற ஒருவருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு தம்முடைய பழக்க வழக்கங்களில் பழைமையை பின்பற்றவும் ஒருவருக்கு உரிமை உண்டு.. பின்பற்ற இயலாதவன் அல்லது விரும்பாதவன் பின்பற்றுபவனை கேலி பேசுவது நடைமுறை வழக்கம் தான்.. அந்தக் கேலியே தன் நிலையில் உறுதியாய் நிற்பவனது உறுதியை இன்னும் மேம்படுத்தும்.. கேலியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கடந்து செல்ல வைக்கும்.. உறுதி இல்லாதவனை குலைக்கவும் செய்யும்..

    தனித்து நிற்க வேண்டியும் வரலாம் என்பது தான் உண்மை.. அப்படி வரும் நிலையில் தனக்கு எது தேவையென அவனே முடிவு செய்து கொள்ளுவான்..

    என்னைக் கேட்டால் ஒரு விஷயத்தை முடிந்தவரையில் பின்பற்றுவது என்பதோடு மட்டும் நின்று விடலாம்.. இயலாத காலத்திலும் அதை ஒரு அப்செஷன் போல பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை..

    ReplyDelete
  8. //இயலாத காலத்திலும் அதை ஒரு அப்செஷன் போல பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை..
    //

    அது, கையில் எடுக்கும் காரியத்தைப் பொறுத்தது... மாதம் ஒரு முறை அல்லது, வாரம் ஒரு முறை... கோவிலோ, பள்ளிக்கூடமோ, பகுத்தறிவுப் பாசறையோ... எதோ ஒரு இடத்துல கூடணும்ங்றது ஒரு நல்ல வழக்கமா இருக்கு.... அதை நான் விரும்புறேன்னு வெச்சிக்கோங்க....

    அந்த விருப்பத்தை நிறைவு செய்ய, மத்தவங்களோட பங்களிப்பும் தேவைப்படுது... அப்படி இருக்கும் போது, பிடிச்சித் தொங்க வேண்டியதாத்தான இருக்கு?!

    மேலைநாடுகள்ல, பள்ளி, கோவில், தேவாலயம், சமூக நிலையம்னு எதோ ஒன்னுல வழக்கமா கூடுறாங்க... நினைச்சாப் போறதுங்றது அல்ல.... நாம, இருந்ததையும் உட்டுப் போட்டு பொட்டியே கதின்னு கிடக்குறோம்... ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்றேன்....

    ஊர் கூடினா, யாவாரிக்கு யாவரம் கெடும்ல? எதுக்கு பொல்லாப்பு, நான் இதோட நிறுத்திகிறேன்...

    ReplyDelete
  9. //அந்த விருப்பத்தை நிறைவு செய்ய, மத்தவங்களோட பங்களிப்பும் தேவைப்படுது... //

    எல்லாரும் வரமாட்டாங்க.. ஒத்த சிந்தனை உள்ளவங்க கொஞ்சம் பேரு வருவாங்க..

    பொட்டி முன்னாடி கிடக்கறதுல வேலை கம்மி, செலவும் கம்மி.. பொழுதும் போயிடுது.. :)) பொட்டி உண்மையில்லைன்னு புரியும் போது இன்னும் கொஞ்சம் பேரு கிளம்பி வரலாம்..

    சமீபத்துல படிச்சது.. இங்க, எதுல்லாம் well being ன்னு நினைக்கறீங்கன்னு நாலு பதில் கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்துனாங்கன்னு நினைக்கறேன்.. அதுல சர்ச்சுக்குப் போயி நண்பர்களை சந்திக்கறது அப்பிடிங்கரதுக்குத் தான் அதிக வாக்குகள்.. :)

    ReplyDelete
  10. எதுக்காக எழுதினீங்கன்னு பொதுவாச் சொல்ல வேணாம்னு நீங்க நினைக்கிறதால், எனக்குத் தெரிய வேணாம் :) (விசு டயலாக் மாதிரியே இருக்குல்ல?)

    நீங்கள் குறிப்பிட்டு யாரையோ சொல்வது போல் தோன்றுகிறது. "Great minds discuss ideas; Average minds discuss events; Small minds discuss people. - Eleanor Roosevelt"

    Let's be great.

    ReplyDelete
  11. //யூதர்களிடம் பழகுகிறேன். கிட்டத்தட்ட 2003 துவக்கம், இன்று வரையிலும் யூத நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன். //
    இஸ்ரேலுக்கு சென்றதுண்டா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. //
    எதுக்கு பொல்லாப்பு, நான் இதோட நிறுத்திகிறேன்...
    //
    ஒன்ணும் புரியல.................

    ReplyDelete
  13. i have thought on similar lines. a friend was teased for eating with his hands he said my bare hands go in to my mouth only, but your fork and spoons would have gone in to thirty thousands mouths atleast. i was asked in hong kong why indians wash with their hands and not use toilet tissue my answer was which is better washing or wiping. i dont say that what all we do is good but to throw away everything is what confounding me

    ReplyDelete