10/31/2010

FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா

இச்சார்ல்சுடன்(Charleston, SC). ஏசுலி ஆறும் கூப்பர் ஆறும் அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கிப் பாய, அவற்றுக்கு இடையில் தீபகற்பமாக, எழிலுற அமைந்ததுதான் பசுமைநிறை இச்சார்ல்சுடன் பெருநகரம். கூப்பர் ஆற்றைக் கடக்கையில், பிரம்மாண்டமான கட்டமைப்புக் கொண்ட ஆர்த்தூர் ரேவனெல் பாலம் நம்மை மறுகரைக்குக் கொண்டு சேர்க்கிறது.

2005ல் கட்டமைக்கப்பட்ட இப்பாலத்தினை வியந்து கண்டோம் நாம். கிட்டத்தட்ட 13,200 அடி நீளம் கொண்ட சாலையை, வானுயர இருதூண்கள் எழுப்பி, அதனின்று கிளம்பும் நூற்றுக்கணக்கான இரும்பு விழுதுகளால் தொங்கவிடப்பட்டுள்ள தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது.

இச்சார்ல்சுடன் நகருக்குள் நுழைந்தாலோ, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புராதனக் கட்டிடங்களும் நவீனமும் நம்மை “வா, வா” என ஈர்த்துக் கட்டிப் போட்டுவிடுகிறது. ”இங்கேயா, நம் தமிழ் மக்கள் ஒன்று கூடி விழா காணப் போகிறார்கள்?”, என்று எண்ணிப் பார்த்ததுமே நம்முள் உற்சாகமும் ஒருவிதமான வியப்பும் நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மைய நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஃபாலி கடற்கரை செல்கிறோம். ஆகா! கடல் தேவதைக்கு நிகர் வேறு எவருண்டு? நீண்ட, நெடிய தூய்மையான கடற்கரை. கதிரவன் உதயத்தைக் காண அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி மேடை கடலுள் நீண்டிருக்கிறது. நாமும், கதிரவனுக்குப் போட்டியாய் எழுந்து சென்று அவனது உதயத்தைத் தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

காத்திருக்கச் செய்து, மெல்ல, மெல்ல, செவ்வொளி கப்பியவிதமாய் தலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் காண்பித்துக் கொண்டே அவனெழுந்த விதம்... அப்பப்பா... ஒவ்வொரு மணித்துளியும் அட்லாண்டிக் பெருங்கடல் வாசத்துடன் நாம் கண்ட காட்சி, கண்களது ஆயுளை நீட்டித்தது.

அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைக்கிறோம். குளுகுளுவென, நம்மை நனைத்துப் பரவசமூட்டியது. மனம் குதூகலத்தில் துள்ளி எழும்புகிறது. எம் அன்னை மொழியவள் இங்கே கொண்டு வந்து சேர்த்தாளேயென எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து, அதன் நீட்சியாக, தெளிந்து படிந்திருத கடற்கரை மணலில், அங்கே இருந்த நத்தை ஓடு ஒன்றைக் கொண்டு, பெரிய எழுத்தாகத் தமிழ் என எழுதி வைக்கிறோம்.

கடலுக்குள் சென்று, தமிழ், தமிழவளைக் கண் கொண்டு பார்க்கிறோம். காலில் தண்மைக் கடலின் ஆட்சி; கண்களில் தமிழ்க் கடலின் ஆட்சி!! நமது பூரிப்பைக் கண்ட கடலலைகள், தமிழைத் தழுவி அழிப்பது போல்ச் சென்று தழுவாமல் விட்டு வருவதும், மீண்டும் தமிழை அழிப்பது போல்ச் சென்று நாணுவதுமாக நம்மைச் சீண்டி விளையாட்டுக் காட்டியதை என்ன சொல்லி மகிழ்வது?

கடற்கரையினில் இருந்து விடுபட மனமில்லைதான். எனினும், நாம் காணப் போகிற தமிழர் கூட்டத்தின் நினைவு நம்மை ஆட்கொள்ள, அவர்களை நோக்கி விரைய விழைந்தோம்.

காலை பதினொரு மணிக்கெலாம், தென்கரோலைனாவின் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்துள் தமிழர் கூட்டம் தத்தம் குடும்ப சமேதரர்களாய் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆம், அடுத்த ஆண்டு தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடனில் நிகழவிருக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)யின் இருபத்தி நான்காம் ஆண்டு விழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கும் விழாவாக, கோவில் நோன்புக்கான கம்பம்நடு விழா போன்றதொரு விழாவாக அமைந்ததுதான் இந்நாள்.

முனைவர் தண்டபாணி, முனைவர் சுந்தரவடிவேலு மற்றும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் அனைவரையும் வரவேற்று, அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துவிட்டு, இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

எந்த ஒரு தமிழ்ச் சங்கத்திற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை இவர்களுக்கு இருப்பதாக உணர்ந்தேன். விருந்தினர் தவிர, உள்ளூர்ச் சங்கத்தினர் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொளவதை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. அதாகப்பட்டது, ஒவ்வொருவரும் இயல்பாகவே ஏதோ ஒரு பணியை சிரமேற்கொண்டு எளிய புன்னகையுடன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஒழுங்கு, நம்மை சிந்தனையில் ஆழ்த்தியது.

பெரிய சங்கம் என மார் தட்டிக் கொள்வதில் இல்லை பெருமை; உயிர்ப்பும், தளிர்ப்பும், வீரியமும் எங்கே அதிகம் என்பதில் இருக்கிறது பெருமை! எண்ணிக் கொண்டு இருக்கையில், அனைவரும் மேடைக்கு வந்து சுய அறிமுகம் செய்யப் பணித்தார் முனைவர் சுந்தர வடிவேலு.

என்னவொரு சுவராசியமான அறிமுக நிகழ்ச்சி. தாயகத்தில் இருப்பிடம் மற்றும் இங்கு இருக்கும் இருப்பிடம் முதலானவற்றைக் குறிப்பிட்டு அனைவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே நண்பகல் உணவைக் கொடுத்து அசத்தினார்கள். அதே உத்வேகத்தில், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி முனைவர் ஆனந்தி சந்தோஷ் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தும், தொகுத்தும் வழங்கினார். 2011-ல் நிகழ இருக்கும் ஆண்டு விழாவின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரவடிவேலு, இதுகாறும் ஈடேறிய பணிகள் குறித்தும், இனிச் செய்ய வேண்டிய அலுவல்கள் குறித்தும் நறுக்குத் தெறித்தாற் போல எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர்களில் மற்றொருவரான திரு,பாட்சா அவர்கள், வர்த்தகக் காட்சியின் நோக்கம் மற்றும் நடப்புப் பணிகள் முதலானவற்றை எடுத்துச் சொல்லி, அமர்ந்து இருந்தோருக்கு செறிவான தகவல்களை ஊட்டினார்.

விழாவில் இடம் பெறவிருக்கும், மருத்துவக் கருத்தரங்கம் தொடர்பான விபரங்களை,மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர், மருத்துவர் அன்புக்கரசி மாறன் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அது குறித்துச் செய்த பணிகள் மற்றும் செய்யவிருக்கும் பணிகள் குறித்துப் பேசி, நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தைப் பெருக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மேடை ஏறினார், பேரவையின் தலைவர் முனவர் பழனிசுந்தரம் அவர்கள். தலைவருக்கே உரிய பொறுப்பு மற்றும் கடமையுணர்வுடன் அவர் பேசிய பாங்கு, அவருடன் இணைந்து நெடுங்காலமாய்ப் பணியாற்றுவோருக்கே ஒரு வியப்பாகத்தான் இருக்கும்.

சிறந்த நிர்வாகிக்குரிய அத்தனை சிறப்புகளுடன், அவர் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த தகவற்செறிவான விபரங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. பேரவையின் வரலாறு, நோக்கம், கடமை, விழாவின் அவசியம், எப்படி நடத்தப் போகிறோம் என்பன முதலான விபரங்களை நகர்ச் சில்லுகள் மூலம் தெளிவாக எடுத்துரைத்தார்.

முனைவர் முத்துவேல செல்லையா அவர்கள்! ஆம், அடுத்துப் பேச வந்தார் பேரவையின் முன்னாள் தலைவர் அவர்கள்!! ஐந்தே மணித்துளிகள் பேசினாலும், பேச வேண்டியதை, ஏழு அண்டப் பேரொளியையும் ஒரு கல்லுள் வைத்துச் சுடரொளியை எழுப்பும் இரத்தினத்தைப் போல, இரத்தினச் சுருக்க உரை நிகழ்த்தினார் இவர். அரங்கம் வீறு கொண்டு உற்சாகமுற்றது.

அடுத்து நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தின் போது, நாமும் நம்முடன் ஒட்டிப் பிறந்த கோயம்பத்தூர்க் குசும்பை வெளிப்படுத்தினோம். அக்குசும்பிலும், வந்திருந்தோருக்கு சென்று சேரவேண்டிய தகவலை சொல்லத் தவறவில்லை நாம். ஆம், பேரவை ஆண்டு விழாவிற்கு கொடையாளர்கள் ஆவதன் பலன்களைக் குறிப்பிட்டோம் நாம்.

இறுதியாக, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த திருமதி வளர்மதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பேரவையின், இருபத்தி நான்காம் ஆண்டுவிழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கிடச் சிறப்பு விருந்தினர்களாக, அண்டை மாகாணத்துத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் வந்திருந்து, தத்தம் ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பாலன் அவர்கள், சார்லட் அரசி நக்ரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி செந்தாமரை பிரபாகரன் மற்றும் செயலாளர் இலட்சுமண் அவர்கள், அகசுடா தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சிவகுமார், கொலம்பியாவிலிருந்து திரு.சரவணன், கிரீன்வில்லைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி, மினசோட்டாவில் இருந்து திரு. ஜெயச்சந்திரன் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொத்தத்தில், எழில்மிகு இச்சார்லசுடனின் கவின்மிகு இடங்களைக் கண்டு களிக்கவும், அழகான மீன்காட்சியத்தில் நடக்க இருக்கும் விருந்தினர் மாலை நிகழ்ச்சியை உள்ளடக்கிய, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி நான்காம் ஆண்டு விழா, அகில உலகத் தமிழர்களையெலாம் வரவேற்று, அற்புதத் திருவிழாவாக அமைந்து, வட அமெரிக்கத் தமிழரின் வரலாற்றில் சிறப்பை எய்தப் போகிறது என்பதுமட்டும் திண்ணம்!



தென்கரோலைனா, இச்சார்ல்சுடனில் இருந்து பழமைபேசி!

29 comments:

  1. கலக்கல்! கலக்கலோ கலக்கல்!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பழமை!
    போட்டோ பகிர்ந்தமைக்கு நன்றி.

    தெரிந்த ஒரே முகம்
    உங்க முகம்
    எல்லோரும் மலர்ந்த முகம்
    கடைசியில் சிலர் உறங்கும் முகம்!

    ரொம்ப பேசிட்டியலோ!

    ReplyDelete
  4. ஐயா கலக்கறீங்க... வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வெகுதொலைவிலிருந்து பயணித்து வந்து இத்தமிழ்த் திருவிழா ஏற்பாடுகளைத் தொடங்கிவைத்த இவ்வேளையில் ஊக்கமளித்த உங்களுக்கும், அனைத்து தமிழ்ச் சங்க நண்பர்களுக்கும் தமிழ்த்தாயின் அன்பு வாழ்த்துக்களும், எங்கள் நன்றியும்!

    ReplyDelete
  6. அண்ணே : ஆரம்பமே அசத்தலா இருக்கு,,,,

    ReplyDelete
  7. அன்புள்ள பழமைபேசி, உங்களுக்கும், உங்களோடு வந்திருந்த நண்பர்களுக்கும், அண்டை மாநிலத் தமிழ்ச்சங்கங்களிலிருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் எங்களது நன்றிகள்! உங்களது வருகையும், ஊக்குவிப்பும், இனி வரும் நாட்களில் உங்களது உதவியும் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் ஒரு விழாவினைக் கொண்டாட வைக்கும் என உறுதியாக நம்புகிறோம். இக்கூட்டம் குறித்த எங்களது இடுகை இங்கே.
    http://panainilam.blogspot.com/2010/10/2011.html
    நன்றி
    பநிதச

    ReplyDelete
  8. இச்சார்ல்சுடன்னுன்னு எழுதினா தளபதி கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவரும். அட்லாண்டிக் கடலில் கால் நனைத்ததற்கு ஆதாரமெங்கே:)).எங்க மாப்புவ எப்ப விருந்தினரா அழைக்கப் போறீங்க.

    ReplyDelete
  9. நல்ல ஆரம்பம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எங்கள் பகைவர் எங்கோ பறந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு

    என்ற வரிகளை நினைவுகூறம் விதமாக அமைந்திருக்கிறது உங்கள் பணிகள்.

    வாழ்த்துக்கள்....பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்
    ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  11. //வானம்பாடிகள் said...
    அட்லாண்டிக் கடலில் கால் நனைத்ததற்கு ஆதாரமெங்கே:))//

    இப்பப் பாருங்கண்ணே!!!

    ReplyDelete
  12. இந்த ஆண்டும் எமக்கு அழைப்பு உண்டா??

    ReplyDelete
  13. //எம்.எம்.அப்துல்லா said...
    இந்த ஆண்டும் எமக்கு அழைப்பு உண்டா??
    //

    அண்ணே, இது நம்ம விட்டுக் கல்யாணம்ண்ணே!!!

    ReplyDelete
  14. // அண்ணே, இது நம்ம விட்டுக் கல்யாணம்ண்ணே

    //

    அதான்.என்னை விட்டுக் கல்யாணம் நடக்குமான்னுதான் கேட்டேன் :))))

    ReplyDelete
  15. // ச்சின்னப் பையன் said...
    கலக்கல்! கலக்கலோ கலக்கல்!

    //

    சென்ற ஃபெட்னா விழாவில் நீங்கள் காட்டிய அசாத்திய உழைப்பைக் கண்டு இன்னும் அசந்துபோய் இருக்கின்றேன்.

    ReplyDelete
  16. எம் எம் அப்துல்லா இல்லாமலா! :))

    ReplyDelete
  17. சுந்தரவடிவேல், பீட்டர் அய்யாவோட வினாடி வினா உண்டுல்ல?

    ReplyDelete
  18. இனியா,
    நிச்சயமாக!
    நீங்கள் கேட்பதைப் பார்த்தால் இவ்வாண்டு உங்களை மேடையில் பார்க்கலாமென்று நினைக்கிறேன் :))

    ReplyDelete
  19. சுந்தரவடிவேல்,
    கண்டிப்பாக. Fetna 2010 மாதிரியே இந்த முறையும் வெற்றி பெறுவோம்.
    நானும் உங்கள் அணியில்தான் (Fetna 2010 ) இருந்தேன்.

    ReplyDelete
  20. தகவல்களுக்கு நன்றி பழமை பேசி...

    பேரவை விழாவில் சந்திப்போம்...

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  21. நான் ஃபெட்னா பக்கம் இதுவரை போனதில்லை! 2011ல Charleston, SC, நடக்கவிருக்கும் விழாவை சிறப்பா நடத்த வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள், பெஃட்னா தமிழர் திருவிழா தொடக்கமே கோலகலமா இருக்கு.
    எம் எம் அப்துல்லா அவர்கள் கேட்டதை நானும் ரீபிட்.

    எங்கள் நாட்டு சார்பிலும் ஏதாவது உதவி வேண்டுமென்றால் அவசியம் செய்ய காத்திருக்கோம்.

    அழைப்பு உண்டா?

    ReplyDelete
  23. வருண்!
    இதுவரைக்கும் வந்திருக்கவில்லையென்றால் போகட்டும். வரும் ஆண்டு வந்துதான் பாருங்களேன்!

    Vijiskitchen: அழைப்பிதழ் தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவிலேயே வந்துவிடும்! உங்களைப் போன்ற உலகளாவிய தமிழன்பர்களின் நல்லாதரவுடன்தான் பேரவை விழா நடக்கிறது, நடக்கும்!

    ReplyDelete
  24. உங்களால் எப்படி இவ்வளவு அழகாக எழுத முடிகிறது.....
    அருமை ! வியந்தேன் !

    யுவராஜ்

    ReplyDelete
  25. சென்ற முறை தான் வர முடியவில்லை. இந்த முறை கண்டிப்பாக எப்படியும் வந்து விடுவேன்...

    ReplyDelete
  26. நேர்ல பார்க்கும் போது, நல்லா புரியற தமிழ்லதானே பேசறீங்க?? இந்த கீபோர்டை தொட்டா மட்டும் என்ன ஆய்டுமோ தெரியலையே தல? :) :) :)

    நான் யாருன்னு தெரியுதா..? :) :)

    ReplyDelete
  27. பிரசன்னா... அப்ப கும்மியை சவுத் கரோலினால வச்சிடுவோம்... :)

    ReplyDelete