10/04/2010

நெனப்பு, பொழப்பைக் கெடுக்குமா??

நெனைப்புதான் பொழப்பைக் கெடுத்துச்சாம்! கிராமங்கள்ல, இப்படியான சொலவடையச் சொல்லக் கேட்டு இருப்பீங்க? மனக்கோட்டை மட்டுமே கட்டிகிட்டு இருந்தா பொழப்பு ஓடாதுங்றதை குத்திக் காமிச்சுச் சொல்றதுதான் இந்த சொலவடை.

அதுக்காக, நினைச்சுப் பார்த்து, சிந்தனையைக் கிளறாம வாழ்க்கையில ஒன்னைச் சாதிக்க முடியுமா? நெனப்பு பொழப்பைக் கெடுக்கும்னு சொன்ன அதே பெரியவங்க, ”ஆராய்ந்து பாரான் காரியம் சாந்துயரம்!” அப்படின்னும் சொல்லி இருக்காங்கதானே?

அப்ப, எது ஒன்னையும் வடிவாச் சிந்திச்சுப் பார்த்துச் செய்யணும். அப்பதான், வாழ்க்கை நம் கைவசப்படும். அல்லாங்காட்டி, எவனோ எடுத்த படத்துக்கு நாம காவடி தூக்கவும், தேர் இழுக்கவும் செய்துட்டு இருக்க வேண்டியதுதான்! என்ன, நாஞ் சொல்றது?!

சரி, சிந்திச்சுப் பார்க்கறது அவசியம்ங்ற முடிவுக்கு வந்துட்டோம். இன்னும் வரலையா? வரணும்ங்றதுதானே நம்மோட ஆசை. வரலைன்னா, நீங்க காவடி தூக்கவே போலாம். எதுக்கு, இந்த இடுகைய வாசிச்சி உங்க நேரத்தை விரயம் செய்யுறீங்க? இஃகி! ச்சும்மா, ஒரு லொல்லுதான்!!

ஆராய்ச்சியாளர் எட்வர்டு போனோ என்ன சொல்றாருன்னா, சிந்தனைங்கறது ஆறு வகையா இருக்கு. அந்த ஆறு வகையான சிந்தனைகளையும், மாற்றுச் சிந்தனைகளாப் பாவிச்சி சிந்தனை வயப்பட்டோமானா, வாழ்க்கை நம் வசப்படும் அப்படிங்றாரு.

அதாவது, இலக்கை நிர்ணயமா வெச்சி, தன்னுள் இருக்குற அகந்தையப் புறந்தள்ளி, இந்த ஆறுவகையான சிந்தனைகளை நல்லாப் புரிஞ்சி செயல்படுறவன் வெற்றிசாலியா வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமுன்னும் சொல்றாரு திரு. எட்வர்டு போனோ!

சரி, அந்த ஆறு வகைச் சிந்தனைகள் என்னென்ன??
  • புதுமைச் சிந்தனை
  • நேர்மறைச் சிந்தனை
  • எதிர்மறைச் சிந்தனை
  • உணர்வுச் சிந்தனை
  • சூட்சுமச் சிந்தனை
  • மாற்றுச் சிந்தனை
புதுமைச் சிந்தனை: ஒரு பற்றியத்தைச் செயல்படுத்தப் போறதுக்கு முன்னாடி, அதைப் பற்றின கூடுதல் தகவல்களைத் தேடி, அலசி, இன்னது இருக்கு, இன்னது இல்ல அப்படின்னு தெரிஞ்சுக்க முற்படுற சிந்தனை. creative thinking! இந்தா, இது எப்பவும் நடந்ததே இல்ல. இதைச் செய்து காமிச்சா, நல்ல வரவேற்பு கிடைக்கும்னு எல்லாம் சிந்திக்கிறது.

நேர்மறைச் சிந்தனை: இதனோட பலன்கள் இப்படி இருக்கும்; இதனால இன்னது கிடைக்கும்; இதைச் செய்தா இது நடக்கும்... அப்படின்னு நேர்மறையாக, பலன்களை நோக்கிச் சிந்திக்கிறது. நம்பிக்கையூட்டி, செய்முறைப்படுத்த வைக்கிற சிந்தனை. Positive thinking! நம்ம நல்ல தரத்தோட இந்த பொருளைச் சந்தைப்படுத்துறோம்... தரத்துக்கு முன்னாடி, வேற எதுவும் கிடையாது. தரம் வெல்லும்... அதை நல்லபடியா மக்களுக்கு, எடுத்துச் சொல்றோம், வெல்லுறோங்ற கோணத்துல உதிக்கிற சிந்தனை.

எதிர்மறைச் சிந்தனை: இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கு. இதனால, இவ்வளவு செலவு ஆகும். இதனால, குறிப்பிட்ட நேரத்துல முடிக்க முடியாதுங்ற ரீதியில, எதிர்மறையாச் சிந்திக்கிறது. Negative Thinking! நாம இப்படி செய்யலாம். ஆனா, இது நடக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்திடுச்சா, முதலுக்கே மோசம். அப்ப, நாம அப்படிச் செய்யக் கூடாது. ஒரு வேளை, அது அப்படியும் நடக்கலாம். அப்படி நடந்திட்டா என்ன செய்யுறது? இப்படியாக, எதிர்மறையாச் சிந்திக்கிறது.

உணர்வுச் சிந்தனை: உணர்வுப் பூர்வமா சிந்திக்கிறது. Emotional Thinking! இந்த நேரத்துல கொண்டு போயி, இதைச் சொன்னம்னா அவங்க கோபப்பட வாய்ப்பு இருக்கு. அந்த இடத்துல வெச்சி, அதை விக்க முடியாது. அந்த நாள்ல செய்தம்னா, மகிழ்ச்சிகரமா அமையலாம். உணர்வுகளைப் பிரதானமா வெச்சி சிந்திக்கிறது.

சூட்சுமச் சிந்தனை: தருக்க ரீதியா இல்லாம, தந்திரங்களை, உபாயங்களை அடிப்படையா வெச்சி சிந்தனை. இலக்கு இதுன்னு ஒன்னை வெச்சிட்டு, அதை மறைமுகமா அடையக் கூடிய சிந்தனை. conventional or lateral thinking! நாம ஒரு கல்லூரிக்கு முன்னாடி, ஒரு கணினி மையத்தை உண்டு செய்வோம். எப்படியும் பொண்ணுக வருவாங்க; அவங்கள்ல பிடிச்சவங்களாப் பார்த்து ஒருத்தரைத் தெரிவு செய்துக்கலாம்ங்றது சூட்சுமச் சிந்தனை!

மாற்றுச் சிந்தனை: ஒரு கோணத்துல மட்டுமே சிந்திச்சி, ஒன்னைச் செய்யாம, பல வழிகள்லயும் மாற்றுச் சிந்தனைகளைப் பாயவிடுறது. parallel thinking! கிராமத்துல அமைஞ்சா, அம்மா அப்பாவுக்கு மகிழ்ச்சியா இருக்கும். ஆகவே, கிராமத்துல வளர்ந்து, நகரத்துல வாழுற அம்மணியப் பார்ப்போம். இந்த மாதர, இருக்குற எல்லா வகைச் சிந்தனைகளையும் ஒரே நேரத்துல சிந்திக்கிறது.

இப்படியாக, ஒரு நல்ல தலைமைப் பண்பு கொண்டவனுக்கு, மாற்றுச் சிந்தனைகள் அவசியம்ங்றாரு ஆராய்ச்சியாளர் திரு. போனோ. குதிரைக்கு கண்ணட்டி கட்டிவுட்ட மாதர, ஒரு கோணத்துலயே நெனப்பை வெச்சிக்காம, பல கோணங்கள்லயும் சிந்திச்சு, வாழ்க்கையில நல்லபடியா இருக்க வாழ்த்துகளைச் சொல்லிகிறனுங்க இராசா! வாழ்க வளமுடன்!!!

25 comments:

  1. ஆஹா, இப்பிடி எல்லாம் சிந்தனைங்க இருக்கா. இன்னும் ரெண்டு தடவை படிச்சுட்டு சொல்றேன். ரொம்ப சிந்தனை செய்யறவங்களையும், மண்ட கணம் பிடிச்சு அலையரவங்கள கூட, 'நெனப்பு பொழப்பு கெடுக்குது' என்பாங்க. தமிழில பூந்து விளையாடுறீங்க. நல்லா இருக்கு. சூப்பர் இது

    இதுக்கு உங்க நண்பர்கள் என்ன எசப்பாட்டு பாடப் போறங்கன்னு பாப்போம். அது கூட இதுக்கு மெருகூட்டும்.

    ReplyDelete
  2. வியாபார நோக்கு சிந்தனைனு ஒன்னும் கண்டு பிடிக்களையாங்க?

    ReplyDelete
  3. //Sethu said...
    வியாபார நோக்கு சிந்தனைனு ஒன்னும் கண்டு பிடிக்களையாங்க?
    //

    சூட்சுமத்துல அடக்கமுங்கோ!!!

    ReplyDelete
  4. எதையும் வில்லங்கமாவே யோசிப்பதை எதிர்மறைன்னு சொல்லுவிங்களா அல்லது மாற்றுச் சிந்தனையா? இதை கேட்கிறேன்னு என்ன மனசிலே வைச்சு சொல்லிடாதீங்க. உண்மையை சொல்லுங்க.

    ReplyDelete
  5. ஆறு வகைசிந்தனைகளை எளிமையாய் விளக்கியிருகிறீர்கள்.

    சூட்சும சிந்தனைவாதிகள்தான நம்ம காவடி தூக்க வைக்கிறது!?

    ReplyDelete
  6. "எதையும் வில்லங்கமாவே யோசிப்பதை எதிர்மறைன்னு சொல்லுவிங்களா அல்லது மாற்றுச் சிந்தனையா? இதை கேட்கிறேன்னு என்ன மனசிலே வைச்சு சொல்லிடாதீங்க. உண்மையை சொல்லுங்க."

    என் கேள்வியே குண்டக்க மண்டக்க இருக்கே. இது நல்லா இல்ல. (எனக்கே சொல்லிகிறேன்)

    ReplyDelete
  7. \\இலக்கை நிர்ணயமா வெச்சி, தன்னுள் இருக்குற அகந்தையப் புறந்தள்ளி, இந்த ஆறுவகையான சிந்தனைகளை நல்லாப் புரிஞ்சி செயல்படுறவன் வெற்றிசாலியா வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமுன்னும் சொல்றாரு\\

    சரியாத்தான் சொல்லி இருக்காரு பங்காளி..

    அப்பப்ப இப்பிடி நிறைய போடுங்க

    ReplyDelete
  8. //எதையும் வில்லங்கமாவே யோசிப்பதை//

    வில்லங்கமாக மட்டுமே சிந்திச்சா, அது எதிர்மறைச் சிந்தனைதான்....

    பலவிதமான நினைப்புகள்ல, இதுவும் ஒன்னுமா இருந்தா... அது மாற்றுச் சிந்தனை!!!

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள பகிர்வுங்க.........அழகான விளக்கங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வட்டார வழக்கில் நல்ல பதிவுங்க

    ReplyDelete
  11. மிக நல்ல பதிவு.


    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  12. /ஒரு கணினி மையத்தை உண்டு செய்வோம். எப்படியும் பொண்ணுக வருவாங்க; அவங்கள்ல பிடிச்சவங்களாப் பார்த்து ஒருத்தரைத் தெரிவு செய்துக்கலாம்ங்றது சூட்சுமச் சிந்தனை!/

    /ஆகவே, கிராமத்துல வளர்ந்து, நகரத்துல வாழுற அம்மணியப் பார்ப்போம். இந்த மாதர, இருக்குற எல்லா வகைச் சிந்தனைகளையும் ஒரே நேரத்துல சிந்திக்கிறது. /

    ஏனுங் ஈரோட்டு மாப்பு. இவருக்கு எப்படி வைக்கிறது ஆப்புன்னு இந்த ஆறுல ஒரு சிந்தனைல சிந்திச்சி வைங்க.

    /மனக்கோட்டை மட்டுமே கட்டிகிட்டு இருந்தா பொழப்பு ஓடாதுங்றதை குத்திக் காமிச்சுச் சொல்றதுதான் இந்த சொலவடை. //

    அதான் அதேதான்:))

    /conventional or lateral thinking!//

    இஃகி. அது non-conventional இல்லையோ#டவுட்டு

    ReplyDelete
  13. 6 Thinking Hats ஐ எளிமையாக விளக்கியுள்ளீர்கள்

    நன்றி.

    ReplyDelete
  14. சீரிய சிந்தனை,தெளிவான கருத்துக்கள்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. டைட்டிலை ஜனரஞ்சகமா வெச்சு மார்க்கெட்டிங்க் டெக்னிக்ல மன்னன் நிரூபிக்கறீங்க ம்ம்,,ம்ம்

    ReplyDelete
  16. ஆறு வகை சிந்தனைகள் அருமை பழமை:)

    * புதுமைச் சிந்தனை
    சான்சே இல்லை நமக்கு

    * நேர்மறைச் சிந்தனை
    அப்பப்ப வந்து போகும்.
    * எதிர்மறைச் சிந்தனை

    ஒண்ணு கவனிச்சீங்கன்னா பதிவுலகிலும் சரி!இந்திய மனப்பான்மையிலும் சரி எதிர்மறை சிந்தனைகள் நிறைந்து கிடக்கிறதென நினைக்கிறேன்.

    அதற்கு என்ன காரணமென்றால் நிறைய சிந்தனை செய்கிறோம்.ஆனால் இடம்,பொருள் பெரும்பாலும் அதற்கு சாதகமாக இருப்பதில்லை.முக்கிய இரு காரணிகளான மதம்,அரசியல் இந்தியனை கவிழ்த்து விட்டு விடுகிறது.

    * உணர்வுச் சிந்தனை

    இதுல நாம் கில்லாடிகள்

    * சூட்சுமச் சிந்தனை
    அதற்கும் சில ஆட்கள் நாற்காலி விட்டு நகராமலேயெ உட்கார்ந்திருக்காங்க.

    * மாற்றுச் சிந்தனை

    மாத்தி யோசின்னு பதிவுலகத்தில் சிலபேர் இருக்கிற மாதிரி தெரியுது.

    மறுபடியும் ஒரு முறை வாசிக்கிறேன்.

    ReplyDelete
  17. இந்த எல்லா சிந்தைகளையும் பலேன்ஸ் பண்ணுவது ரொம்ப முக்கியம் .
    நல்ல பதிவு , உணர்வுபூர்வமாக எண்ணுவது என்பது உண்மையிலயே கடினம் உணர்வுகள் வந்துவிட்டாலே சிந்திப்பது குறைந்து விடும் .மேலும் இந்த சிந்தனையில் நாம் அதிகம் தவறுவதற்கு வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  18. //நெனப்பு பொழப்பக் கெடுக்கும்//

    நல்ல நினைவுகள் தானே வெற்றிக்கு வழிகோலுமாம். இப்படிச் சொன்னா கனவு காண்பதெல்லாம்...?

    நாங்கெல்லாம் கனவு காண்றதையே பொழப்பா வச்சிட்டு அலையுறோமே என்ன செய்ய?

    ரொம்ப சிந்திக்க வச்சுட்டீங்களே!

    எல்லா சிந்தனைகளும் கலந்த வாழ்க்கை தான் சரி அப்படித்தானே.
    ஆனா எதை எங்க தொடர்பு படுத்தனும்கிற அறிவுக்கு அனுபவங்கள் தானே முன்னோடி?

    சதுரங்க ஆட்டம் மாதிரியான வாழ்க்கையில இந்த சரிவிகித கலவை இல்லையினா என்னாகுமோ?

    அமைதியா படிச்சிட்டு போவேன்.ஆனா பின்னூட்டம் போடனுமின்னு தோணுச்ச்சி இந்த இடுகைக்கு.
    வாழ்த்துக்கள் ஆசானே!அருமையான விசயம்.

    ReplyDelete
  19. ரொம்பத்தான் சிந்திக்க வெக்கிறீங்க!

    ReplyDelete
  20. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  21. ஏற்கனவே வாசித்த சிந்தனைகள், ஆனாலும் அழகுத் தமிழில் வாசிக்க, சிறகுகள் விரிகின்றன

    ReplyDelete
  22. நல்லாயிருக்கு.. இப்பிடி எல்லாம் யோசிச்சது இல்ல..

    எப்பவுமே சரியா சிந்திக்கறது எப்படின்னும் சொன்னாங்கன்னா நல்லாயிருக்கும் :)

    ReplyDelete
  23. நல்ல பதிவு அண்ணா...

    ReplyDelete
  24. விளையாட்டு விளையாட்டாக சிந்தனை பற்றி அருமையான கட்டுரை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்.
    Vetha Elangathilakam,
    Denmark.

    ReplyDelete