7/14/2010

ஊர்ப் பழமை

கொங்குச் சீமையில் பிறந்து, கிராமங்களில் வளர்ந்து, அன்பொழுகும் கிராமத்தாரின் அரவணைப்பில் ஆளாகிய நான், அக்காலங்களில் அனுபவித்ததை சதாசர்வ காலமும் நினைத்து நினைத்து அசை போடுவது உண்டு. கூடவே, அன்னைத் தமிழின்பாலும் தீராத காதல் எமக்கு.

அக்காதலுடன் கொங்குச்சீமையில் வளைய வந்த நான், விதியின் வல்லமையால்தானோ என்னவோ, எனதருமைத் தமிழ்த் தேசத்தை விட்டகன்று புலம் பெயர்ந்தவன் ஆனேன்; அதுவும் பதின்மம் கடந்த சில காலத்திலேயே! பிரிவு என்பது கொண்ட காதலை மேலும் இறுக்கிப் பெருக்கும் என்பார்களே, அதேதான் எமக்குள்ளும் உண்டாயிற்று.

கண் இமைகள் விழிகளை மூடிச் சயனிக்க எத்தனிக்கும் போதெல்லாம், எம்மண்ணும், அம்மண்ணில் வாழும் மனிதர்களும், அவர்களுடைய வெள்ளந்தியான வாழ்க்கைமுறை பற்றிய நினைவுகளுமே எம்மனதை ஆக்கிரமிக்கும். அதன் பொருட்டே, நெற்களம், களையெடுக்கும் காடு கழனி, கோவில் முற்றங்கள், மரத்தடிகள், ஊர்ச்சத்திரங்கள், அரசமரத்தடி மேடைகள் எனக் கொங்குச் சீமையெங்கும் வியாபித்திருக்கும் பழமை பேசுதலைக் கருத்திற் கொண்டு, பழமைபேசி எனும் புனை பெயரோடு எமக்கான வலைதளத்தில் எம்நினைவுகளை படைப்புகளாய்ப் பதிய விழைந்தோம்.

பழமை பேசுதல் என்றால், அளவளாவல் எனும் பொருளில் கொங்குச் சீமையில் புழங்குவது வாடிக்கை! ”சித்த இரு, பாடு பழமையப் பேசிட்டு அப்பொறம் போலாம்”, “நெம்ப நல்லாத்தான் இருக்கு உன்ற பழமை”, “அவன் கோயத்திண்ணையில குக்கீட்டு வெட்டிப் பழமை பேசிட்டு இருப்பாம் போயிப் பாரு போ”, என்றெல்லாம் வெகு சரளமாக அன்றாட வாழ்க்கை முறையில் இடப் பெறக்கூடியதுதான் பழமை எனும் சொல். பழமை என்றால், பழம் போன்றது, பழகப் பாவிப்பது, பழனம் சார்ந்தது எனப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம். அவ்வகையிலே, பழகப் பாவிக்கும் தனித்தன்மையோடு பேசுதல் என்கிற பாங்கில் கொண்ட புனைபெயரே பழமைபேசி என்பதாகும்.

வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று ஒரு நெறிமுறை கிடையாது. இலக்கண வரம்பும் கிடையாது. தனது வட்டாரத்தின் மீது ஈர்ப்புக் கொண்ட படைப்பாளிகளும், நாட்டுப்புறவியலில் ஆர்வம் கொண்டவர்களும்தான் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். எனவே அதில் சில குறைபாடுகள் இருப்பதும் இயல்பே. சொற்களை எழுத்து வடிவில் பதிவு செய்யும் போது, ஒலிக்கும் முறையும் முகபாவனைகளையும் அப்படியே கொண்டுவர இயலாது என்பதே காரணம். இயன்ற வரையில் ஊர்ப் பழமைகளை அப்படியே வாசகர்கள் மனதில் விரியச் செய்திருக்கிறேன்.

கொங்குச் சீமையைப் பொறுத்த மட்டில் சைவ சமயத்தின்பால் அபரிதமான ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் தொன்மையானது என்றே கூறலாம். சிவராத்திரி என்று வந்து விட்டால், சீமை முழுதும் அறநெறியோடு வழிபாடுகளும், விழாக்களும் வெகு விமரிசையாக வடிவெடுக்கும். அத்தருணத்தில் இறைவனுக்கு, பயிரிட்டு அறுவடை செய்த பல தானியங்களையும் கலந்து வேக வைத்துப் படைப்பது என்பது வழமை. அதை நினைவிற் கொண்டு பள்ளயம் என்கிற தலைப்பின் கீழ், ஒரு பல்சுவைத் தொகுப்பாக நான் வாழும் அமெரிக்க மற்றும் தாயகத்து வாழ்வியற் கூறுகள் பற்றிய கட்டுரைகளை எமது வலைதளத்தில் இட்டிருக்கிறேன். அவை இப்புத்தகத்து வாசகர்கள் மனதையும் கவரும் என்றே எண்ணுகிறேன்.

மேலும் எனது படைப்புகளை வாசித்து வாழ்த்துரை வழங்கியோருக்கும், www.pazamaipesi.com எனும் வலைதளத்தை ஏற்படுத்தி அதில் எமது காலச்சுவடுகளைப் படைப்புகளாய் இட வைத்த அமெரிக்காவில் உள்ள சார்லட் நகரத்தில் இருக்கும் ஜெய் சுப்ரமணியம் மற்றும் செந்தாமரை பிரபாகரன் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர், வலையுலக நண்பர்கள், வாசகர்கள், அட்டைப்படம் கொடுத்து உதவிய நண்பர் சுரேஸ்பாபு, எமது படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் பதிவர் ஆரூரன் மற்றும் அருட்சுடர்ப் பதிப்பகத்தாருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி!

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்,
கடைசியா இனத்துலதான வந்து அடையணும்!

புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

1. விஜயா பதிப்பகம், கோவை
2. சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், கோவை
3. ரீடர்ஸ் பார்க்- கோவை
4. உடுமலை. காம். உடுமலைப்பேட்டை
5. நியூ புக் லேண்ட், தி.நகர், சென்னை
6. மதி நிலையம், கோபாலபுரம் சாலை, சென்னை
7. பாரதி புத்தகநிலையம், ஈரோடு
8. வள்ளலார் புத்தக நிலையம், ஈரோடு, பவானி, கோபி

என்றும் அன்புடன்,
பழமைபேசி
pazamaipesi@gmail.com


27 comments:

  1. நல்ல பதிவு..வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் மணி !!!

    நிரம்பப் பெருமைப் படுகிறேன் !!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பழமைபேசி. கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மணி.

    ReplyDelete
  5. வட்டார வழக்குக்கு வளம் சேர்க்கும் நீர் வாழ்க!!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அண்ணா!

    புத்தகத்தை வாங்கனும்...

    பிரபாகர்...

    ReplyDelete
  7. வாழ்த்துகள் பழமைபேசி! மென்மேலும் பல உயரங்கள் தொடுவீர்கள்!

    அன்புடன்,
    -புலம்பெயர்ந்த மற்றுமொரு அமெரிக்க கிராமத்தான்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அண்ணே..

    ஊருக்குச் செல்லும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. பனைமரம் விளக்கத்துக்கு நன்றி . 'ரொம்ப நல்லாத்தான் பழமை பேசுறீங்க' . அருமையான பழமையும் கூட. ஊர்பழமை இங்கு எப்படி வாங்குவது

    ReplyDelete
  10. புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

    1. விஜயா பதிப்பகம், கோவை
    2. சைவ சித்தாந்தநூற்பதிப்புகழகம், கோவை
    3. ரீடர்ஸ் பார்க்- கோவை
    4. உடுமலை. காம். உடுமலைப்பேட்டை
    5. நியூ புக் லேண்ட், தி.நகர், சென்னை
    6. மதி நிலையம், கோபாலபுரம் சாலை, சென்னை
    7. பாரதி புத்தகநிலையம், ஈரோடு
    8. வள்ளலார் புத்தக நிலையம், ஈரோடு, பவானி, கோபி
    .

    ReplyDelete
  11. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மிக நல்ல முயற்சி; வாழ்த்துகள்.
    இங்கு நானும் இன்னும் சில நண்பர்களும் கொங்கு வட்டார வழக்கு சொற்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து கொள்ள இசைவு தெரிவித்து உள்ளனர். 'கொங்கு வாசல்' வலைப் பதிவர்கள் ஏற்கனவே கொஞ்சம் சொற்களை சேகரித்து உள்ளனர்; பதிவிலும் வெளியிட்டு உள்ளனர்.
    தங்களால் இயன்ற வார்த்தைகளை தந்து உதவுங்களேன். இதர விருப்பமுள்ள நண்பர்களையும் பங்கு பெற செய்யுங்கள்.

    ReplyDelete
  13. ஒரு இயந்திர சூழலில் இருந்துக்கொண்டும் இப்படி பழமை பேசியது வியக்க வைக்கிறது..... உங்களை வாழ்த்துகிறேன்....வாழ்க!

    ReplyDelete
  14. வாழ்த்துகள். கோவை போகும்போது புத்தகம் வாங்கிவிடுகிறேன்

    ReplyDelete
  15. வாழ்த்துகள் பழமைபேசி.
    தாயகத்திலிருந்து வருபவர்களிடம் சொல்லி புத்தகம் வாங்க வேண்டும்

    ReplyDelete
  16. வாழ்த்துகள்! கலக்கிட்டீங்க!!!

    ReplyDelete
  17. மாப்பு வாழ்த்துகள்

    மிகுந்த மகிழ்ச்சியான தருணமிது

    ReplyDelete
  18. சென்ற வார இறுதியில் புத்தகத்தின் சில பக்கங்கள் படித்தேன். படிக்க படிக்க சுவாரஸ்யம். ஒவ்வொருபகுதிகளாக படித்துக்கொண்டு இருக்கிறேன்....

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்ங்க பழமை..

    அடடா.. ஊருல இருக்கும்போதே இது தெரியாமப் போச்சே.. இங்கிருந்தே வாங்க முடியாதுங்களா?

    ReplyDelete
  20. வாங்கி படிக்கிறேன்...எங்க ஊரு நுலகத்துகு்ம் ஒண்ணு கொடுத்திடறேன்ங்க.

    ReplyDelete
  21. வாங்கி படிக்கிறேன்...எங்க ஊரு நுலகத்துகு்ம் ஒண்ணு கொடுத்திடறேன்ங்க.

    ReplyDelete
  22. இப்போது வேறு நாட்டில் இருப்பதால் வாங்கி படிக்க இயலாது . ஆனால் உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.
    எனவே கட்டாயம் வாங்கி படிப்பேன்.

    ReplyDelete
  23. புத்தகத்தை வாங்கி சுற்றுக்கு விட்டாச்சுங்கோ..

    ReplyDelete