2/28/2010

கனியனும் மணியனும்!

திருமூர்த்திக் கானகத்தில் நாளெல்லாம் இருந்து கழித்து, இரையாடிவிட்டுக் கூட்டங் கூட்டமாய் வெண்கொக்குக் கூட்டமும், கூழக்கடாக்களும் நெகமம், காட்டம்பட்டி, சீலக்காம்பட்டி எனப் பரவி, விரவி இருக்கும் தென்னந் தோப்புகளுக்குத் திரும்புகிற வேளையது.

கனியனும் மணியனும், கம்பங்காட்டுப் பொழியின் மீது தென்வடலாக நடந்து கொண்டிருந்தனர். கானாங்கோழிகள், மெலிதான சிலுப்பலில் தாத்தாச்சி ஐயன் கோவில் சமீபம் மேற்கு முகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் அவற்றின் இறகில் பட்டுத் தெறித்ததில் கனியனின் கண்கள் கூசியது.

“மணியா, கதிரவன் இறங்கிக் கொண்டு இருக்கிறான். விரைந்திடு நண்பா, சென்று நாம் புறநானூற்றில் சில பாடல்களைப் படித்தே ஆகவேண்டும்!”

“சரியாய்ச் சொன்னாய் கனியா! பாடல்களைக் கற்கக் கற்க இனிமையாகவும், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று அறிவதில் கெழுமையோடு இருக்கவும் முடிகிறது அல்லவா?”

“ஆமாம், ஆமாம்! நமது மானமிகு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் நடத்தும் பல்லூடக நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்கிறாய்தானே?”

“வேறு வழியில்லை நண்பா! இல்லாவிடில் மேன்மைமிகு குழந்தைவேல் இராமசாமி அய்யா நம்மை விட்டு விடுவாரா என்ன?”

“நீ கொடுத்து வைத்தவன் அன்றோ?”

“நல்லதே சொன்னாய்! அவர், தானும் கற்று மற்றவரையும் கற்க வைக்கிறார் கண்டாயா? அதை நாம் மெச்சித்தான் ஆக வேண்டும்!”

“அது சரி! புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன?”

“நானூறு பாடல்கள், பல திணைகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது! ஒவ்வொரு திணையிலும், துறை எனும் உட்பிரிவும் உண்டு கனியா!”

“மணியா, எனக்கு பாடாண் திணை என்றால் மற்றவரைச் சிலாகித்துப் பாடுவது என்று தெரியும். மற்ற திணைகளை எளிதில்ப் புரிந்து கொள்ள முடியவில்லை!”

“அதேதான்! நான் நேற்றுப் பின்னேரத்தில்தான் அவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டேன். எனவே நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!”

“நண்ணுதல் ஆனேன்; நீ தொடரலாம் மணியா!”

“கனியா, இதோ பழைய பாடல் ஒன்றைக் கூறுகிறேன் கேள்!

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்!”

“ஆகா, அருமை! கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது; திணைகளின் பெயர்கள் பாடலில் வரக் கண்டேன் மணியா!! ஆனால், அவற்றின் பொருள் சரிவர விளங்கவில்லையே?”

“கனியா, அது ஒன்றும் கடினமானது அல்ல; விரைவாகச் சொல்லி முடித்துவிட்டேன் என எண்ணுகிறேன். பணிந்தவன் ஆகிறேன் நான்!”

“இல்லை மணியா, நீ நன்றாகவே சொன்னவன் ஆயினன்! பொருள் விளங்க உரைத்தவனும் ஆகுக!!”

“ஒரு நாட்டை வென்று, மண்ணைக் கவர நினைப்போர் முதற்ச் செய்வது அந்த நாட்டிற்கு வெட்சிப்பூவைச் சூடிச் சென்று, அந்நாட்டிலுள்ள ஆநிரைகளை, அதாவது மாடு, கன்று என இருக்கும் கால்நடைகளைக் கவர்ந்து எடுத்து வருவது பற்றிப் பாடுவது வெட்சித் திணை!”

“ஆகா! ஆகா!!”

“ஆமாம்... இதிலேயும் இருவகை உண்டு கனியா!”

“அரசன் குறிப்பறிந்து செல்வது; அரசன் கட்டளையிடச் செல்வது! சரிதானே மணியா?”

“மிகச்சரியாய்ச் சொன்னாய் கனியனே! அரசன் குறிப்பறிந்து செல்வது தன்னுறு தொழில்; அரசனின் கட்டளையேற்றுச் செல்வது மன்னுறு தொழில்!!”

“வெட்சி சுவையாகவே உள்ளது. அடுத்து கரந்தைதானே?”

“ஆமாம், கரந்தைப்பூச் சூடிச் சென்று வெட்சியினர் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டெடுத்தல் கரந்தைத் திணை!”

“எனக்கு அடுத்தவற்றை நீ கூறிய பாடலில் இருந்து யூகிக்க முடிகிறது. மண்ணாசை கொண்டு போரிட வருதல் வஞ்சித் திணை; அவர்களை உள்ளே வர விடாமல் காஞ்சி மலர் அணிந்து எதிர்கொளல் காஞ்சித் திணை!”

“நான் கூறியதே திண்ணம் ஆயிற்று. பாடலைப் புரிந்து கொண்டவனே நீ. அது போலவே, அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் எனும் நிலைகளின் மதில் வளைத்து நொச்சி சூட்டிப் போரிடுவது நொச்சித் திணை என்க; மதில் காக்க முடக்கத்தான், அதாவது உழிஞைக் கொடி தரித்துப் போரிடுவது உழிஞைத் திணை என்க!”

”மதில் கடந்துவரின், நேருக்கு நேரான யுத்தம்தானே? சரி, அதையும் அறியச் செய்க நண்பா!”

“யூகம் சரியே! வீரத்துடன், ஆர்ப்பரித்துப் போரிடுவது தும்பைத் திணை; கலைஞர் அஜீத்தைச் சொன்னாரே, வந்து விழுந்த தும்பை மலர் என்று, அதுவும் இந்தத் திணைதான் கனியா! தும்பைப் பூவை அகற்றிப் பின், வாகை மலரணிந்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை!”

”அருமை, அருமை! இதைக் கேட்ட மாத்திரத்திலேயே என்னால் சங்ககாலத்தில் இருப்பது போன்ற உணர்வு மேலிடுகிறது மணியா!”

“நுகர நுகரப் பேரின்பம் அளிக்க வல்லதுதான் சங்ககாலப் பாடல்கள். இத்தோடு திணைகள் முடிந்து விடவில்லையடா கனி; இன்னும் இருக்கிறது!”

“ஆமாம், தெரியும்! நீ தொடர்ந்து சொல்லடா மணியா!!”

“அடுத்து நீ ஏற்கனவே சொன்ன பாடாண் திணை; அதாவது அடுத்தவரது மேன்மை, கொடை, புகழ் எனச் சிறப்பித்துப் பாடுவதுதான் இது!”

“ஆமாம்!”

“ஒருதலைக் காதல் பற்றிப் பாடுவது கைக்கிளைத் திணை; பொருந்தாக் காதல் பற்றிப் பாடுவது பெருந்திணை! எதிலும் சாராத, ஒழிபுகள் பற்றிப் பாடுவது பொதுத்திணை

”புறத்திணைகள் ஏழு, அகத்திணைகள் ஏழு எனப் படித்ததாக அல்லவா என் நினைவு?”

”ஆமாம்; தொல்காப்பியத்தில் அப்படித்தான் இருக்கிறது; ஆனால், ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா மாலையில் இப்பனிரெண்டும் இடம் பெற்று உள்ளது!”

“இது எனக்குத் தெரிந்திராத ஒன்று! தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!!”

“டேய் கனியா, அதோ அங்கே பார்! ஊரோரத்துப் பிள்ளையார் கோவிலில் யாரோ சிதறு தேங்காய் அடித்துவிட்டுச் செல்கிறார்கள்... வா போகலாம்!”

“ஆமாம்... ஓடு, ஓடு... முடிந்தால், நம்ம இராமசாமி அய்யாவுக்கும் ரெண்டு சில்லுகளைப் பொறுக்கிடுவோம்... ஓடுக!”

16 comments:

  1. அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி சகா...இன்னும் இது மாதிரி நிறைய சொல்லி குடுங்களேன்...

    ReplyDelete
  3. அழ‌கு! துறைக‌ள் ப‌ற்றியும் சொல்லுங்க‌ளேன் க‌னிய‌னுக்கு!

    ReplyDelete
  4. பழமை நன்றாகவே சொன்னவன் அயினன் நீ. பணிந்தவன் ஆனேன் நான்.
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  5. நானும் உள்ளேனய்யா.. ம்ம்.. நடத்துங்க.. ஓரமா இருந்து கவனிக்கறேன்..

    ReplyDelete
  6. உயர்நிலைப்பள்ளிக் காலத்துக்கு நினைவைத் திருப்பியது தோழா. குறிப்பாக கற்பித்தலினூடே இனிய இசையில் அதைப் பாடிக்காட்டும் எங்கள் தமிழ்மணி இராமசாமி அய்யாவின் நினைவும்

    ReplyDelete
  7. நல்லா இருக்குண்ணே. இதே மாதிரி இன்னும் எதிர் பாக்குறேன் உங்க கிட்ட..

    ReplyDelete
  8. கனியன்னு படிச்சதும் அப்பச்சி வெட்டாப்புல போயிட்டாருன்னு பூங்குன்றனாரை புடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.

    விளக்கம் படிடா போங்குது:).

    (உ.கு)
    /கலைஞர் அஜீத்தைச் சொன்னாரே, வந்து விழுந்த தும்பை மலர் என்று, அதுவும் இந்தத் திணைதான் கனியா! தும்பைப் பூவை அகற்றிப் பின், வாகை மலரணிந்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை!”/

    அட! ஒரு தும்பையே வாகை சூடியதே! கவிதை! கவிதை!நோட் பண்ணுங்கப்பா.

    ReplyDelete
  9. Thanks for the definitions and explanations for each and evey thiNai. Keep the good work
    Regards

    ReplyDelete
  10. இந்த பாட்ட பள்ளிக்கூடத்துல எதோவொரு வகுப்புல படிச்ச ஞாபகம்... மறுபடியும் நினைவுபடித்தியிருக்கீங்க... நன்றி...

    ReplyDelete
  11. மாப்பு அருமைங்க...

    தேங்காச் சில்லு எனக்கும்!!!!

    ReplyDelete
  12. சுகமா இருக்குது..திரும்ப திரும்ப படிக்கிறேன்.

    ReplyDelete
  13. //நசரேயன் said...
    அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    //

    எல்லாம், தளபதியோட உற்சாகம், ஒத்துழைப்புதான் காரணம்!

    //செந்தில் நாதன் said...
    நன்றி சகா...இன்னும் இது மாதிரி நிறைய சொல்லி குடுங்களேன்...
    //

    சரிங்க நண்பா; நான் 2 ஆண்டுகள், அங்கதான் மார்சல், பேட்டில்கிரீக்ல இருந்தேன்... 2005-2007 வரை!

    //கயல் said...
    அழ‌கு! துறைக‌ள் ப‌ற்றியும் சொல்லுங்க‌ளேன் க‌னிய‌னுக்கு!
    //

    கவிஞருக்கேவா? அவ்வ்வ்.....

    //தாமோதர் சந்துரு //

    ஆகா...கற்றவன் ஆயினன் நீர்!

    //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    நானும் உள்ளேனய்யா
    //

    எப்பவும் இங்கு உள்ளவன் ஆகவே இருப்பீராக; நன்றி!!

    //சுல்தான் //

    அய்யா, வாங்க, வணக்கம்!

    //முகிலன் said...
    நல்லா இருக்குண்ணே.//

    நன்றிங்க!

    //இதே மாதிரி இன்னும் எதிர் பாக்குறேன் உங்க கிட்ட..//

    ஆகா!

    //வானம்பாடிகள் //

    தும்பையே
    வாகை சூடியதே?! அதன்கால்
    நீர் பாடாண் ஆயினரே!!

    //naanjil //

    அண்ணா, எல்லாம் உங்க வழிகாட்டுதல்!


    //க.பாலாசி said...
    இந்த பாட்ட பள்ளிக்கூடத்துல எதோவொரு வகுப்புல படிச்ச ஞாபகம்...
    //

    ஓகோ, இப்ப நீங்க பள்ளிக்கூடத்துப் பக்கம் தலைவெச்சிப் படுக்காததை யாராவது சொன்னாங்களா? சொன்னாங்களா?? அப்புறம்??!


    //ஈரோடு கதிர் said...
    தேங்காச் சில்லு எனக்கும்!!!!
    //

    உங்களுக்குமா? அப்ப இராமசாமி அய்யாவுக்கு வேட்டு!

    //தாராபுரத்தான் said...
    சுகமா இருக்குது..திரும்ப திரும்ப படிக்கிறேன்.
    //

    ஃகா! எங்க அண்ணனே சொல்லிப் போட்டாரு? அப்ப நெசமாத்தான் இருக்கும்!

    ReplyDelete
  14. உங்களின் "கனியனும் மணியனும்" பக்கம் வெகு பிரமாதம்!
    வெகு சுலபமாக பெரிய செய்தியை சிறிய பக்கத்தில் எழுதிவிட்டீர்கள்!!!

    நன்றி!நன்றி!!!
    வாழ்த்துகள்!!!
    கொழந்தவேல் இராமசாமி
    மேரிலாந்து.

    ReplyDelete
  15. நானும் சங்க காலத்தில் இருப்பது போல் உணர்ந்து கொண்டேன். அருமை.

    ReplyDelete
  16. /கனியனும் மணியனும்//

    கனியனும் மணியனும் சனியனும் (சும்மா ஒரு நக்கலுக்கு "நக்கீரரே"..... உள்குத்து எதுவும் இல்லை தலைவா.... சும்மா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு தான்)

    ReplyDelete