9/27/2009

Washington, DC: பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி பற்றிய‌ கண்ணோட்டம்!

நமது அமெரிக்கத் தலைநகர் பயணமானது, சரியான நேரத்திற்குத் துவங்கி நண்பகல் வாக்கில் விமானம் பால்டிமோர் விமானத்தை அடைந்தது. எனது வாழ்க்கையிலேயே இதுவரையிலும் கிடைத்திராத ஒரு அங்கீகாரமும், வரவேற்பும், விருந்தோம்பலும் கிடைக்கவிருப்பதை நான் கிஞ்சித்தும் நினைத்து இருக்கவில்லை, அப்படியொரு விருந்தோம்பல்!

அதைப் பற்றி அத‌ன் இருப்பிடத்திலே இருந்து கொண்டு எழுதுவது அறமாகாது; பின்னொரு இடுகையில் விரிவாகக் காண்போம். ஆனால் இந்த ஒரு நல்ல தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு, நான் எழுதும் இந்த தமிழுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். இனி முதல் நாள் நிகழ்ச்சியான,
AIMS India Foundation பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சிக்குள் செல்வோம்!

எனக்கு இந்த அமைப்பை மிகவும் பிடித்திருக்கிறது. இறைவன் இரு கைகளைப் படைத்ததே ஒன்று தனக்கு வேலை செய்வதற்காகவும், மற்றொன்று தன்னையொத்த சமுதாயத்திற்காகவும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். தான் மேலை நாட்டிற்கு வந்து ஒரு வளமான வாழ்க்கையை அடைந்து விட்டாலும், தன்னையொத்த தன்னாட்டு மக்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகவும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனக் கருதுவது மேலான செயல், they make difference among us!

இந்த ஆண்டுக்காக நிதி திரட்டும் பணி நிமித்தம் இந்த இனிய பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். திரையிசைக் கச்சேரியும், ஒத்ததாக சிறுவர்களின் நடனமும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. லதா‍ - கண்ணன் குடுமபம், அய்யப்பன் மற்றும் பலரின் அயராத உழைப்பைக் காண முடிந்தது.

'அச்சமில்லை' எனத் துவங்கும் இந்திரா படத்தின் பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போது உள்நுழைந்து முன்வரிசையில் பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்டேன். அடுத்தடுத்து பழைய பாடல்கள் பாடப்பட்டது; குங்குமப்பூவே, குங்குமப்பூவே பாடலை அந்த முக்கியப் பாடகர் நேர்த்தியாக பாடத் துவங்கியதுதான் தாமதம், சீட்டியின் ஒலி வெள்ளை மாளிகையையே அதிர வைக்கக் கூடிய வகையில் இருந்தது.

தொடர்ந்து பாடலுக்கிடையே சுவாரசியமான தகவல்களும் கண்ணன் அவர்களால் பரிமாறப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு பாடலைப் பாடப்பட்ட பிறகு, இந்த பாடலுக்கு தொடர்புடைய, ஒரே நாளில் பிறந்த இருவர் யார் என வினவப்பட்டது. பின்னர், விசுவநாதன் அவர்களும், கவியரசு கண்ணதாசன் அவர்களுமே என்ற தகவலையும் அளித்தார். ஆம், அவர்கள் இருவருமே ஜூன் 24 அன்று பிறந்தவர்கள், ஆனால் இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்!

மீண்டும் அதே முக்கியப் பாடகர்! 'வலையபட்டி தவிலே தவிலே, ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே, ஜிமிக்கி போட்ட மயிலே’ என இசை வேகமெடுக்க, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்த பாடகரின் அங்க அசைவுகளும், கைச் சொடுக்கும், இசைக்கேற்ற குறிப்பு மொழியும் அவருக்கு மேலும் மெருகூட்டியது. அரங்கமென்ன வாளாதிருக்குமா? சீட்டிகளும், கரவொலியும் கூரையைப் பிளந்தது!

முக்கியப் பாடகருக்கு, நிகர் வேறு எவருமில்லையோ என எண்ணிய தருணத்தில் மின்னலாய் மின்னி, மக்களை இருக்கையினின்று வெளியே கிடத்தி ஆட்டம் போட வைத்தார், அருமைப் பாடகர் ஐய்யப்பன் அவர்கள். அவரைத் தொடர்ந்து கண்ணன், லதா மற்றும் சிலர் அடுத்தடுத்த பாடல்களைப் பாடி முடிக்க, 'சம்திங் சம்திங்' என்று சூட்டைக் கிளப்ப வந்தார் அய்யப்பன்!

மீண்டும் கண்ணனின் இடையூட்டுத் தகவலொன்று, "ஒரு நாள் மெல்லிசை மன்னர், இரவு முழுதும் இசை அமைத்து விட்டு காலையில் இசைப்பதிவு இருப்பதையும் மறந்து உறங்கிவிட்டார். காலையில் இசைப் பதிவுக்கூடம் வந்த கண்ணதாசன் மெல்லிசை மன்னருக்காக சற்று நேரம் காத்திருந்து பார்த்தார். அவர் வருவதாய் இல்லை. வெறுத்துப் போய், ஒரு சீட்டில் ஏதோ எழுதி, விசு வந்தால் இந்த வரியை பல்லவியாய் வைத்துக் கொண்டு மெட்டு போட சொல்லுங்கள் என்று மெல்லிசை மன்னரின் உதவியாளரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்!

அவர் அதில் எழுதிக் கொடுத்த பல்லவி என்ன தெரியுமா? அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டவன் நானல்லவா! வந்து பார்த்த மெல்லிசை மன்னர் அந்தப் பல்லவி அந்த சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்தவே, மிகவும் வியப்போடு அதற்கு இசையமைத்தார்" என்பதே!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மாற்றப்பட்ட உடையில் மேடையேறினார் அந்த முக்கியப் பாடகர். ஒவ்வொரு பாடலுக்கிடையேயும் நையாண்டி செய்வதற்காக இருவர் வந்து போனார்கள். அந்த நையாண்டி இளைஞர்களைத் தொடர்ந்து, அபூர்வராகம், அதிசய இராகம் எனத் துவங்கும் யேசுதாசின் பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார் அந்த முக்கியப் பாடகர். தொடர்ந்து, 'கத்தாழைக் கண்ணாலே' மற்றும் பல குத்துப் பாட்டுகள் பாடப்பட்டது.

நல்ல காரியத்துக்காக உழைத்துவரும் அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளவர்கள், விருப்பமிருப்போர் அவர்களைத் தொடர்பு கொண்டு தத்தம் பங்களிப்பையும் செய்யலாம்.

இடை இடையே வந்த அந்த இரு நையாண்டிகள், ஒரு கட்டத்தில் தமிழை வம்புக்கு இழுத்தார்கள். ஒருவர் ஆங்கிலத் தமிழில் பேச, மற்றவர் என்னடா தமிளு இது? நல்லா என்ன மாதிரி நல்ல தமிளுல பேசணும்டா என்று கூறிவிட்டுத் திரும்பிப் பின்புறத்தைக் காண்பித்தவாறு தான் போட்டிருந்த அரைக்கால் சட்டைக்கும் மேலாக வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, மீண்டும் முன்பக்கம் திரும்பி நாட்டுப்புறத்து பாமரர் பேசுவதைப் போல் பேசிக் காட்டி, 'இப்படி நல்ல தமிளுல பேசணும்டா' எனச் சொன்னார். எங்கே அரங்கம் அதற்கும் கரவொலி எழுப்பி என்னுள் உறங்கும் மிருகத்தைத் தட்டி எழுப்பி விடுமோ என அஞ்சினேன். நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை! மேடையைச் சிறப்பித்த‌ அந்த முக்கியப் பாடகர், திருச்செல்வன்!


14 comments:

  1. பழமைபேசியின் இன்னொரு தரமான தொகுப்பு :)

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பொன்மாலைப் பொழுதை இனிமையாக கழித்ததோடல்லாமல், அழகாய் எங்களுக்கும் விவரித்தது அருமை.

    ReplyDelete
  3. //எனது வாழ்க்கையிலேயே இதுவரையிலும் கிடைத்திராத ஒரு அங்கீகாரமும், வரவேற்பும், விருந்தோம்பலும் கிடைக்கவிருப்பதை நான் கிஞ்சித்தும் நினைத்து இருக்கவில்லை, அப்படியொரு விருந்தோம்பல்!//

    பழமையண்ணா!இன்னும் பல அங்கீகாரங்கள் உங்கள் தமிழ் ஆர்வத்திற்கும்,உழைப்புக்கும் காத்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அழகான தொகுப்பு. கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று சொல்வது போல், தமிழ் சிறப்புற கற்ற உமக்கு சிறப்பு கிடைக்கின்றது ஐயா.

    ReplyDelete
  5. நம்ம ஊருக்கு வந்து இருக்கீங்க, இப்போ பார்த்து நான் ஊரில் இல்லையே... வட போச்சே!....(இந்திய போயிருக்கிறேன் பழமை...)

    ReplyDelete
  6. @@ச.செந்தில்வேலன்
    @@ஆரூரன் விசுவநாதன்
    @@வானம்பாடிகள்
    @@ராஜ நடராஜன்
    @@இராகவன் நைஜிரியா

    நன்றி மக்களே!

    ReplyDelete
  7. //RR said...
    நம்ம ஊருக்கு வந்து இருக்கீங்க, இப்போ பார்த்து நான் ஊரில் இல்லையே... வட போச்சே!....(இந்திய போயிருக்கிறேன் பழமை...)
    //

    ஆமாங்க..... நான் கூப்பிட்டுப் பார்த்தேன்...

    ReplyDelete
  8. இன்னும் இன்னும் தளைத்துக் கிடப்பீர்கள் :)

    ReplyDelete
  9. AIMS India Foundation பற்றி எழுதியற்கு நன்றி.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  10. @@எம்.எம்.அப்துல்லா
    @@ரவிச்சந்திரன்
    @@கதிர் - ஈரோடு

    நன்றிங்க! நன்றிங்க!!

    ReplyDelete
  11. unbelievable performance from TC & iRAM.

    ReplyDelete
  12. //Venkatesh M said...
    unbelievable performance from TC & iRAM.
    //

    Thank you Venkatesh for witnessing!

    ReplyDelete