7/04/2009

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... நண்பகல்

சிலம்பொலி அய்யா அவ்ர்களது உரைக்குப் பின்னர் மயிர் கூச்செரியக் கூடிய வித்தைகளூடன் சிலம்பாட்ட விற்பன்னர் சோதி கண்ணன் அவர்களும், அவர் பயிற்றுவித்த அமெரிக்க மாணவர்களும் நடத்திக் காட்டிய சாகச நிகழ்ச்சி இடம் பெற்றது. நயமான, தரமான நிகழ்ச்சி அது.

ஆனால் என்னைப் பொறுத்த மட்டிலும் புதுமை என்ற வகையில் மனதைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி என்றால், நடிகை ஜெயஸ்ரீயின் ஒருங்கிணைப்பில் நடந்த சிறுவர்களுக்கான தமிழ்த்தேனீ என்ற நிகழ்ச்சிதான். அது சிறுவர்களுக்கு மாத்திரம் அல்ல, பெரியவர்களுக்கே கூட சவால் விடும்படியாகத்தான் இருந்தது.

என்றாலும் சிறுவர்கள் உற்சாகத்தோடும், ஆவலோடும் போட்டி போட்ட காட்சிகள் பிரமிக்க வைத்தது. எனக்கேகூட சில கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. இந்த நிகழ்ச்சியைப் பரிந்துரைத்தவர் யாராக இருப்பினும், அவர் பாராட்டுதலுக்கு உரியவர் ஆவர். புதுமை புதுமை என்று சொல்லிப் பிறழ்தல் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இது ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சி.

என்னருகே உட்கார்ந்து இருந்த கணவன் மனைவி இருவர் பேசிக் கொள்கிறார்கள், ‘ஏனுங், நம்ம ரமாவையும் இனி தமிழ் வகுப்புல சேத்து விடணும்! மாசம் 90 டாலர் போனாப் போகுது!!”

“நான் இதை போனவாட்டி செம்மலை வீட்ல வெச்சே சொன்னன் இல்ல?”

இதுவே நிகழ்ச்சியின் வெற்றியை, விழாவின் வெற்றியைப் பறை சாற்றுவதாக இருந்தது. பெற்றோர்களே, சிறுவர்களை ஊக்குவியுங்கள். திணிக்காதீர்கள். ஊக்குவிப்பதற்கு இது போன்ற விழாக்கள், ஒன்று கூடல்கள், இன ஒற்றுமை போன்றவை இன்றியமையாதது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உணவு இடைவேளை துவங்கியது. இன்றும் நவரச உணவு வகைகள் வெகு சிறப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது. அட்லாண்டா தமிழ்ச் சங்கம் வாழ்க! உண்ட உணவுக்கான வாசகம் அல்ல இது, உள்ளபடியே அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்!!

அடுத்து நான் பங்கு கொள்ளப் போகும் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி. ஆகவே அடுத்த இடுகை இட ஒரு சில மணி நேரங்கள் ஆகும்....

’புலம் பெயர்ந்ததில் அதிக நன்மைகள் வாய்க்கப் பெற்றவர்கள் ஆண்களே’ என உங்கள் பழமைபேசி விரைவில்......


1 comment:

  1. மனதைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி என்றால், நடிகை ஜெயஸ்ரீயின் ஒருங்கிணைப்பில் நடந்த
    ///
    :)))))))))

    ReplyDelete