6/01/2009

அமெரிக்காவுக்கு பதிலடி! பெண்டிர் வளர்ச்சிக்கு முதல்படி!!

சமீபத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிபதியாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை அந்நாட்டு அதிபர் நியமனம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அது போலவே இந்தியாவிலும் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் சபைத் தலைவர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை நியமிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிகிறோம்.

எம்மைப் பொறுத்த மட்டிலும், மாநில முதல்வர், இந்தியாவின் பிரதமர், ஏன் அமெரிக்காவின் அதிபர் பதவியைக் காட்டிலும் சவாலான பதவி இந்த இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பதவி என்பது. 545 உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி அவையை நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அதைக் கையாளும் பொறுப்பு, இப்போதுதான் ஒரு பெண்மணிக்கு கிடைக்க இருக்கிறது என்பதும் தாமதமான ஒன்றுதான்.

இவரது தலைமையில் நடக்கப் போகும், இந்த 15வது மக்கள் சபையின் காலத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமானால், அதைவிட அளப்பரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.


பெண்களின் வளர்ச்சி துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தேவையானது, நாம் முன்னரே உரைத்தது போல பாரிய அளவிலான உளவியல்ப் புரட்சியாக மட்டுமே இருக்க முடியும்.

முதற்கட்டமாக, பெண்ணடிமை, ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற சொற்களை அறவே ஒழித்தாக வேண்டும். ஏன்? இவையெல்லாம் எதிர்மறைப் (negative approach) பார்வையோடு, துயரச் சிந்தனை(pessimism)யோடு சமூகத்தை நாடும் சொற்கள். அவற்றைக் கையாளுவதால், மறைமுகமாக (indirect) பெண் அடிமையானவள், ஆண்களின் ஆதிக்கத்தில் தாழ்ந்து போனவர்கள், விடுதலையற்றுக் கிடப்பவர்கள் போன்ற உணர்வைச் சமூகத்தில் நாமே விதைக்கும் காரியத்திற்கு துணை போகிறோம்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? மங்கயர்தாழ் நிலையை, தாழ்ந்த நிலையில் இருந்து மேன்மை நிலைக்குக் கொண்டு செல்லும் முகமாக, பெண் வளர்ச்சி, மங்கையர் மறுமலர்ச்சி போன்ற மேன்மைச் சிந்தனை(Optimism)யுள்ள சொற்கள் கொண்டு சமூகத்தை அணுக வேண்டும்.

சொற்களை மாற்றிக் கையாளுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இங்கே சொற்கள் என்பது முக்கியமல்ல. சிந்தனையும் மாறுபடுகிறது! இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தின் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவே அடிப்படை. சமூகத்தில், தெரிந்தோ தெரியாமலோ அவநம்பிக்கையுள்ள(pessimism) சிந்தனை வேரோடிப் போயிருக்கிறது. சமூகத்தின் லெளகீக வாழ்வில் நிகழும் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் மனைவி, “ஏங்க, வேலைக்குப் போகலையா?”. அதற்கு கணவன், “நீ இன்னும் காபி போடலையா? காபி போடாம என்ன செய்யுற??”.

அதுவே பக்கத்து வீட்டில், “வேலைக்குப் போறீங்கதானே? நேரம் ஆகுது அதான்!”. உடனே கணவன், “காபி போட்டுட்டியா, இதோ வர்றேன்!”.

இந்த இரு வீடுகளிலும் என்ன வேறுபாடு? முந்தைய வீட்டில், எதிர்மறைச் சிந்தனை தாண்டவமாடுவதை உணரலாம். அதுவே பக்கத்து வீட்டில், இன்பமயச் சிந்தனை வழிந்தோடுகிறது என்பதுதான்.

இரு நண்பர்கள், அவர்களுக்கு வயது 8. முதலாமவன் மாட்டு வண்டியில் இருந்து வீசப்படும் திரைப்பட அறிவிப்புத் துண்டுகளைப் பெறச் செல்கிறான். திரும்பி வருபவனைப் பார்த்து, “டே குமாரு, நோட்டீசு கெடச்சுதாடா?”. அதே நண்பர்கள், வயது 18, உடுமலை லதாங்கி திரையகம் முன்பு, “என்றா, டிக்கெட் கெடைக்கலையா?”. “கெடச்சது, வா போலாம்!”. ஆக இடைப்பட்ட இந்த பத்துவருட காலத்தில், அவர்களுக்குள் இந்த எதிர்மறைச் சிந்தனையை ஊட்டியது யார்? சமூகம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன், மணமகள் வீட்டார் ஏதோ குறித்து மறைவாகப் பேசிக் கொண்டு உள்ளனர். அதையறிந்த மூன்றாம் நபரான இவர், “என்ன, கல்யாணத்துல ஏதும் பிரச்சினையா?” என்று கேட்கிறார். கல்யாண வேலை எல்லாம் நன்றாக நடக்கிறதாயென ஏன் இவர் கேட்கக் கூடாது?? அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே எதிர்மறைச் சிந்தனையோடு கேட்பது கிடையாது. இயல்பாகவே அப்படித்தான் பேச்சு வருகிறது சமூகத்தில். இதில் அந்த தனிப்பட்ட நபரைக் குறை சொல்வது சரி ஆகாது.

இப்படி உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால், pessimism என்கிற அவநம்பிக்கை எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம். கடை இன்னும் திறக்கலையா? பஸ் போயிருச்சா? பள்ளிக்கூடத்துல இடம் கிடைக்கலையா? அரிசி தீர்ந்து போச்சா? இப்படி நிறைய! சரி, இனி இவற்றின் மூலம் மற்றும் விளைவுகளைப் பார்ப்போம்.

மூலம் என்று பார்த்தால், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள். பேச்சாளர்கள் என்பவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். பெரும்பாலும் பரப்புரையாளர்கள்தானே?! ஊடகங்களிலும் எதிர் மறையான காட்சிகள் கொண்டு வெகுவாக துயரத்தைக் காண்பித்து, எதிர்மறையை விதைத்து வளர்த்து விடுகிற நிலையை நீங்கள் சுலபமாக உணரலாம்.

நான் 1990களிலே பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, பெரும்பாலும் 1980களுக்கு முன் வந்த நாவல்கள், நூல்களை வாசிப்பது உண்டு. அவற்றிலெல்லாம் நல்ல சிந்தனைக்குரிய, வெற்றியை அடிப்படையாகக் கொண்ட நேர்மறைக் காட்சிகள் வெகுவாக வர்ணிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கோ வதைபடுவதை இரசிக்க சாரை சாரையாய் மக்கள் கூட்டம். இரசனையே மாற்றப்பட்டு விட்டதுதானே காரணம்?!

இன்றைய உலகில் அறிவியல் சாதனம் கொண்டு, ஒருவர் எந்த மாதிரியான உணர்வுடன் இருந்தார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? அவன் உணர்வுகள் மூளையில் அதற்கான சுவடுகளைப் பதிக்கிறது. அதைப் படம் எடுப்பதின் மூலம், மருத்துவர்கள் பதிந்த உணர்வுகளைக் கணக்கிடுகிறார்கள் என்பதே!

ஆக, வெந்தசாமியோ நொந்தசாமியோ, யாரோ ஒருவர் தெருமுனையில் நின்று கொண்டு பரப்புரையாற்றும் போது கேட்கப்படும் வக்கிரங்கள், அவனுள்ளும் அவளுள்ளும் சுவடுகளாய் விதைக்கப் படுகிறது. அது போன்றதுதான் காணொளிக் காட்சிகளும்.


அச்சுவடுகள், குரோமோசோம்கள் வழியாகச் சென்று பிறக்கும் குழந்தையினுள்ளும் தங்குகிறது. சமூகத்தில், வெளிச் சக்திகளால் விதைக்கப்படுகிற வக்கிரங்கள் நம்முள் செல்வதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, கர்ப்பம் தரித்த பின் அமைதியாய்ப் பாடல்கள் கேட்பதின் மூலம், குழந்தையினுள் பதிந்த சுவடுகள் அழிந்து விடுமா?

நன்னம்பிக்கையோடு பிரச்சினையை அணுக வேண்டும், எனவேதான் முன்னாள் குடியரசுத் தலைவர் நல்ல கனவு காணுங்கள் என்றார். அதையும் கனவு காணச் சொல்கிறார் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி, சிந்தனையை மழுங்கடித்து விட்டோம்.


மனநல மருத்துவர் ருத்திரன் ஐயா அவர்களைப் போன்று, ஆயிரமாயிரம் ருத்திரன்கள் வர வேண்டும். அவர்கள் எல்லாம், கலை, இலக்கியம், பத்திரிகை, ஊடகங்கள் என எங்கும் வியாபித்து உளவியல்ப் புரட்சியைக் கொண்டு வரவேண்டும்.

அவ்வாறு உளவியல் ரீதியாக, பெண்களின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுகள் சமூகத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நல்ல நம்பிக்கையை ஊட்டி, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.


மக்கள் சபைத் தலைவராக பதவி ஏற்கும்பட்சத்தில், வேளாண்மைத் துறையில் புரட்சிகளைக் கொணர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் போலவே, அவரது புதல்வி மீரா குமார் அவர்களும் புரட்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு,

பழமைபேசி.

24 comments:

  1. வழமை போல் அருமை பழமை.

    ReplyDelete
  2. //இன்றைக்கோ வதைபடுவதை இரசிக்க சாரை சாரையாய் மக்கள் கூட்டம். இரசனையே மாற்றப்பட்டு விட்டதுதானே காரணம்?!//

    nalla sonninka.

    ReplyDelete
  3. ஜெகஜீவன்ராமின் மகள் எனும் போது அங்கும் வாரிசு அரசியல்தான்.

    ReplyDelete
  4. ///சமீபத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிபதியாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை அந்நாட்டு அதிபர் நியமனம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அது போலவே இந்தியாவிலும் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் சபைத் தலைவர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை நியமிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிகிறோம். //

    மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. //அதைக் கையாளும் பொறுப்பு, இப்போதுதான் ஒரு பெண்மணிக்கு கிடைக்க இருக்கிறது என்பதும் தாமதமான ஒன்றுதான்.//

    குழுக்களை கட்டியாழும் தன்மை இயற்கையில் பெண்களுக்கு உண்டு. அதனால் சுலபமாக இருக்கும் என்றெ எனது எண்ணம்..

    ReplyDelete
  6. //முதற்கட்டமாக, பெண்ணடிமை, ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற சொற்களை அறவே ஒழித்தாக வேண்டும்.//
    உண்மைதான் நண்பா, ஆனாலும் இவற்றை சாதகமாக கொண்டு பெண்களால் ஆண்களை அடைக்கியாள வேண்டும் என்ற எண்ணமும் ஆரோக்கியம் இல்லை என்பதும் என் எண்ணம்...

    ReplyDelete
  7. //பாலா... said...
    வழமை போல் அருமை பழமை.
    //

    நன்றிங்க பாலாண்ணே!

    ReplyDelete
  8. அருமையான பதிவு....

    ReplyDelete
  9. நீங்கள் கூறுவது சரிதான். மேன்மைச் சிந்தனை பல பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழி வகுக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது, நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ அன்று இந்திரா காந்தி நாட்டில் ஒரு கம்பீரமான பிரதமராக இருந்தது ஆச்சிரியத்தைத் தான் கொடுக்கிறது.

    ReplyDelete
  10. //545 உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி அவையை நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம்.//

    545 பேர் ஒன்னா சபைக்கு என்றும் வரமாட்டார்கள். பல சமயம் 'கோரம்' இல்லாம சபையை நடத்த முடியாம போன நிகழ்வுகளும் உண்டு. :-(

    ஆனா சபையில இருக்குற கொஞ்ச
    ஆளுங்கல மேய்க்கறது இலேசுபட்ட செயல் அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    மீரா குமாருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. //குறும்பன் said...
    545 பேர் ஒன்னா சபைக்கு என்றும் வரமாட்டார்கள். பல சமயம் 'கோரம்' இல்லாம சபையை நடத்த முடியாம போன நிகழ்வுகளும் உண்டு. :-( //

    என்னா கவலை? இஃகிஃகி!! இருக்குற 100 வாலுகளை வெச்சி மேய்க்கிறதே கடினம்....

    ReplyDelete
  12. // பாஸ்கர் said...
    நீங்கள் கூறுவது சரிதான். மேன்மைச் சிந்தனை பல பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழி வகுக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது, நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ அன்று இந்திரா காந்தி நாட்டில் ஒரு கம்பீரமான பிரதமராக இருந்தது ஆச்சிரியத்தைத் தான் கொடுக்கிறது.
    //

    ஆமாங்க... ஒரு மிடுக்கு வேணாமா? எப்பப் பார்த்தாலும் ஒண்டி, ஒருங்கிகினு...காச் மூச்னு ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுகினு.... வரும், நடக்கும்ன்னு இருக்கணும் இல்லியா?

    ReplyDelete
  13. //மீரா குமார் அவர்களும் புரட்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு//

    அட போங்கையா அவங்களுக்கு 545 MPகல மேய்க்க நேரம் கெடைக்குமான்னு பாப்போம். ஒவ்வொன்னும் ஒவ்வொரு புறம் எழுக்கும். ஆலளப்பட்ட சோம்நாத் சட்டேர்ஜி யாலேயே மேய்க்க முடியல... பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  14. கருத்து கந்தசாமி இல்லாவிட்டாலும்(!) நான் ஒரு நொந்த சாமி, வெந்த சாமி என்று அறிவித்துவிட்டு பின்வரும் எதிர்மறை கருத்துகளை உதிர்க்கிறேன் :0))

    ஒரு பெண் சபாநாயகர் ஆவதானாலேயே, ஜனாதிபதி ஆவதினாலேயோ எந்த விதமான மாற்றம் வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? கஷ்டப்படும் பெண்களுக்கு இதனால் எந்த மாற்றமும் வந்துவிடுவதில்லை...கல்லுடைக்கும் மாரியம்மாளும் பஞ்சு மில்லு எஸ்தரும் இன்னமும் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்...ஜனாதிபதியின் மகனுக்கும், சபாநாயகரின் கணவருக்கும் இதனால் நன்மை உண்டாகுமே தவிர வேறு யாருக்கும், சமுதாய அளவில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை....ஜெயலலிதா, வசுந்தரா ராஜே சிந்தியா, மாயாவதி, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித், இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் ஒரு அம்மையார்(அவர் பெயர் என்ன??) இவர்களெல்லாம் தலைமைப் பதவிக்கு வந்ததால் எந்த பெண்ணுக்கும் பிரயோஜனமில்லை...

    எனக்கு தெரிந்த அளவில் இவையெல்லாம் ஒரு நாடகம்...நாங்கள் முற்போக்குவாதிகளாக்கும் என்ற அரசியல்வியாதிகள் நடத்தும் நாடகம்...

    //
    இவரது தலைமையில் நடக்கப் போகும், இந்த 15வது மக்கள் சபையின் காலத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமானால், அதைவிட அளப்பரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.
    //

    உண்மையில் அரசியல் வரும்போது ஆண் என்ன பெண் என்ன?? மக்களை ஏமாற்ற முடிந்தால் யாரும் ஜெயிக்கலாம், அப்புறம் என்ன இட ஒதுக்கீடு??
    இட ஒதுக்கீடு என்பதால் உண்மையான அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை..அமைச்சரின் மனைவியோ, மகளோ தான் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்க போகிறார்கள்...
    பெண் எம்.எல்.ஏக்கள், மந்திரிகளின் செயல்பாடு ஆண்களை விட எந்த விதத்திலும் உயர்ந்ததாக இல்லை...சில வருடங்களுக்கு முன் வந்த செய்தி..சென்னைக்கு அருகில் உள்ள ஒரு நகராட்சி தலைவியின் கணவரை அவருடன் போட்டியிட்டு தோற்ற (பெண்) வேட்பாளர் ஆள் வைத்து அடித்துக் கொன்றார்.....

    இன்றைக்கும் பல்வேறு பெண் நகராட்சி தலைவர்கள் வெறுமனே டம்மியாக தான் இருக்கிறார்கள்...அவர்கள் கணவர்களே நகராட்சியை நடத்துகிறார்கள்...இதற்கு அந்த பெண்களும் உடந்தையே...வேறு ஒரு தகுதியான பெண்ணுக்கு போக வேண்டியதை தட்டிப் பறித்த இவர்களும் பெண்களே!

    என்னைப் பொறுத்த அளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுதியிலோ, திறமையிலோ, ஊழல், மோசடி செய்வதிலோ எந்த வித்தியாசமும் இல்லை..இருவரும் எல்லா விதத்திலும் சமமானவர்களே...

    ஆனால், இதை சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மை தான்...ஆனால் இதற்கான மாற்றம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க்க வேண்டியது...அதை விடுத்து பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கொடுத்தால் நாட்டில் இருக்கும் 50 கோடி பெண்களும் முன்னேறிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய மோசடி!

    //
    எம்மைப் பொறுத்த மட்டிலும், மாநில முதல்வர், இந்தியாவின் பிரதமர், ஏன் அமெரிக்காவின் அதிபர் பதவியைக் காட்டிலும் சவாலான பதவி இந்த இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பதவி என்பது.
    //

    என்னது??? அக்கிரமமா பேசாதீங்க...சபையை அடக்க முடியாட்டி ஒத்திவைக்கப் படுகிறதுன்னு அறிவிச்சிட்டு பேசாம எழுந்து போயிடலாம்...ஆனா அதிபரோ, பிரதமரோ ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாட்டி ஒத்தி வைக்கப்படுகிறதுன்னு எந்திரிச்சி போயிட முடியாது...சபாநாயகர் அப்படிங்கறதே ஒரு டம்மி போஸ்ட்...ரிடையர் பார்டிங்களும், மந்திரி சபையில இடம் கிடைக்காதவங்களுக்கும் கடைசி புகலிடம் அது... பேரு பெத்த பேரு, தாகத்துக்கு நீலு லேது!

    இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்திய பார்லிமென்ட் மீதும் எனக்கு எந்த மரியாதையும் இல்லாததால் என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்... சபை நாயகரும், சபையின் முதலாளியுமான பழமையார் நல்ல தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...:0))

    ReplyDelete
  15. @@அது சரி

    வாங்க அண்ணாச்சி... நாலுவாட்டி படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு...வவுறு நோவுது... இப்ப்டி நடுச் சந்தியில வெச்சி, உண்மையப் போட்டு உடைக்கலாமா?

    சரி வாங்க விசயத்துக்கு....

    சபையை ச்சும்மா ஒத்தி வைத்துக் கொண்டே இருக்க முடியாது... எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் ஒரு பாலமாய் செயல்பட்டே தீர வேண்டும் அவர்.

    அடுத்து இட ஒதுக்கீடு... உங்கள் வாதம் சரியென்றே வைத்துக் கொண்டாலும், ஏன் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்கிறார்கள்?

    அடுத்து, உளவியல் மாற்றமே தீர்வு. பெண்களை ஒரு குறிப்பிட காலத்திற்காவது, பதவிகளில் நாம் அவர்களை அமர்த்தி ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

    50:50 விகிதாச்சாரம் இல்லைதானே? அதற்கு உரிய சூழல் எப்படி வரும்?? ஆட்சியாளர்கள்தான் ஏதாவது செய்தாக வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது சூழல் மேம்பட்டு உள்ளது. ஆனாலும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை... அது உறுதியானால், நிச்சயம் அவர்கள் மேலும் மேம்படுவார்கள்.

    //இன்றைக்கும் பல்வேறு பெண் நகராட்சி தலைவர்கள் வெறுமனே டம்மியாக தான் இருக்கிறார்கள்...அவர்கள் கணவர்களே நகராட்சியை நடத்துகிறார்கள்...இதற்கு அந்த பெண்களும் உடந்தையே...வேறு ஒரு தகுதியான பெண்ணுக்கு போக வேண்டியதை தட்டிப் பறித்த இவர்களும் பெண்களே!//

    அடச்சே, எதிர்மறையான முன்னுதாரணம்.... கணவனின் ஆளுமை அவளைக் கட்டிப் போட்டதுதான் காரணம்...

    //கல்லுடைக்கும் மாரியம்மாளும் பஞ்சு மில்லு எஸ்தரும் இன்னமும் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்...//

    திசை திருப்பும் வாதம்...மாரியப்பனும் மேத்யூசும் வேற மாதிரியா இருக்காங்களா என்ன? அது அடித்தட்டுக்கும் ஏதேச்சதிகாரத்துக்கும் உள்ள பிரச்சினை...அது ரெண்டு பேருக்கும் பொது.

    முத்தாய்ப்பா நான் சொல்லுறது, இதெல்லாத்துக்கும் அடிப்படைப் பிரச்சினையே மக்களின் மனோபாவம்தான்....

    அது மாறணும்ன்னா, மாற்றம் துவக்கப்பள்ளியில இருந்து வரணும்...

    சரி, சபாநாயகர் இதுல என்ன செய்திட முடியும்? கத்திக் கூச்சல் போடுற கூட்டத்தை, அடக்கியாளுறது நேரிடையான செயல்...அது வெற்றிகரமாக நடக்கும் போது, இயல்பாவே ஆண்களுக்குள் ஒரு மனமாற்றம் ஏற்படும். அதே மாதிரி பெண்களுக்கும் இரு ஊக்கம் பிறக்கும்...

    பெலோசி எழுந்து நின்னா, ஒபாமாவே அலறுறாரு இல்ல?!

    ReplyDelete
  16. //
    பெலோசி எழுந்து நின்னா, ஒபாமாவே அலறுறாரு இல்ல?!
    //

    ஆரு?? நம்ப நான்சி அக்காவுங்களா?? நெம்ப பிரச்சினை செஞ்சா பராக் அண்ணவிங்கள நம்மக்கிட்ட பேசச் சொல்லுங்க...எட்டுப்பட்டி பஞ்சாயத்தைக் கூட்டி நல்ல தீர்ப்பா சொல்லிடுவோம்....:0))

    ReplyDelete
  17. //
    திசை திருப்பும் வாதம்...மாரியப்பனும் மேத்யூசும் வேற மாதிரியா இருக்காங்களா என்ன? அது அடித்தட்டுக்கும் ஏதேச்சதிகாரத்துக்கும் உள்ள பிரச்சினை...அது ரெண்டு பேருக்கும் பொது.
    //

    அண்ணே,

    ரைட்டுல திரும்பி, அப்புறம் ரைட்டுல திரும்பி, அடுத்து ரைட்டுல திரும்பி, கடேசியா ஒரு ரைட் டர்ன் அடிச்சீங்கன்னு வைங்க, ஆரம்பிச்ச எடத்துக்கே வந்துருவிய..

    மாரியம்மா, மாரியப்பன், எஸ்தரு, மத்தியாசு (தமிழ் பைபிள்ல மேத்யூஸ் இல்ல...மத்தியாசு தான் இருக்காப்படி) மேட்டரு தான் நான் சொல்றதும்...ஆம்பள மந்திரியானாலும், பொம்பள மந்திரியானாலும் ஒடம்பு நோக ஒழைச்சாதான் எஸ்தருக்கும், மத்தியாசுக்கும் மதிய சோறு...இல்லாட்டி ஒரு டீயும், பீடியும் தான்...அப்புறம் எதுக்கு எட ஒதுக்கீடுன்னேன்?

    சுளுவா சொன்னா, நீங்க ரொம்ப பாஸிடிவ்வா பாக்கிறிய...நான் ப்ராக்டிகலா பார்க்கிறேன் :0))..குப்புற விழுந்தாலும் மண்ணு ஒட்ட விட மாட்டோம்ல..

    ReplyDelete
  18. //சுளுவா சொன்னா, நீங்க ரொம்ப பாஸிடிவ்வா பாக்கிறிய...நான் ப்ராக்டிகலா பார்க்கிறேன் :0))..குப்புற விழுந்தாலும் மண்ணு ஒட்ட விட மாட்டோம்ல..//

    அது சரி அண்ணாச்சி,

    வீட்ல ஆம்பிளைங்க இல்லாததுனாலத்தான் மாயாவதியும், வெற்றிகொள் அம்பிகை(J.J)யும், மம்தா பானர்ஜியும் ஒளிர முடிஞ்சதுன்னு சொன்னா, நீங்க ஒத்துக்கமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நானும் சொல்லலை... இஃகிஃகி!

    ReplyDelete
  19. @@ஸ்ரீதர்
    @@Raju
    @@ஆ.ஞானசேகரன்
    @@பதி
    @@வில்லன்

    திண்ணைக்கு வந்துட்டு போன உங்க எல்லாருக்கும் நன்றிங்கோ!

    ReplyDelete
  20. //அது மாறணும்ன்னா, மாற்றம் துவக்கப்பள்ளியில இருந்து வரணும்...//

    May be you are correct.. But with due respect I have a different opinion on this...

    I believe, the changes should start from Family..

    Again... Very good article..

    ReplyDelete
  21. //Renga said...
    //அது மாறணும்ன்னா, மாற்றம் துவக்கப்பள்ளியில இருந்து வரணும்...//

    May be you are correct.. But with due respect I have a different opinion on this...

    I believe, the changes should start from Family..

    Again... Very good article..//

    Greetings Renga Sir! The issue here is that parents are already set with different mind. Obviously they can't direct the kids with new direction.

    Hence, only the place we could do that is in school. Thats what they do in western countries. Whenever the wanna introduce some thing new conceptually, they start with primary school.

    In India, can we expect any change from home, that too in rural? Very hard I guess!!

    ReplyDelete
  22. மீரா குமார் ஜெகஜீவன் ராம் மகள் என்பது நான் அறியாத விசயம்.தகவலுக்கு நன்றி.

    ஆந்திர மாநிலத்திலும் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஒரு உள்துறை பெண் அமைச்சரை நியமனம் செய்துள்ளார்.

    ReplyDelete
  23. //ராஜ நடராஜன் said...
    மீரா குமார் ஜெகஜீவன் ராம் மகள் என்பது நான் அறியாத விசயம்.தகவலுக்கு நன்றி.

    ஆந்திர மாநிலத்திலும் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஒரு உள்துறை பெண் அமைச்சரை நியமனம் செய்துள்ளார்.
    //

    நன்றிங்க அண்ணா!

    ReplyDelete
  24. நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க பாஸ்..

    அதுசரி இத விவாத மேடையாக்கிட்டார் போல..

    //பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கொடுத்தால் நாட்டில் இருக்கும் 50 கோடி பெண்களும் முன்னேறிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய மோசடி//

    இது ஆரம்பம் தானுங்களே....
    இப்படியெல்லாம யோசிச்சு இருந்தா நாட்டுல எல்லாத்துக்கும் ஒட்டுரிமையே வந்திருக்காது..

    ReplyDelete