4/04/2009

’அமெரிக்கக் கொசு’க்கு எத்தனை பல்?

என்னோட வேலையிடத்துல உடன் வேலை செய்யுற அமெரிக்க வெள்ளைச்சாமி, அலுவலக நேரத்துல செய்யுற ஒரு நல்லகாரியம்ன்னா, அது அவன் அன்றாடம் ஆங்கில அகரமுதலியில பதிவாகிற புதுச் சொற்கள், மற்றும் அறிவியல் சுற்றறிக்கையில இடம் புடிக்கிற புதுக் கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.

அப்படி அவன் சமீபத்துல சொன்னது, உருப்பெருக்காடியில பார்த்து, கொசுக்கு 47 பல் இருக்குறதை உறுதிப்படுத்தின செய்திங்க. அமெரிக்கக் கொசுக்கு 47 பல்லுன்னா, நம்ம ஊர்லயும் அப்படித்தாங்க இருக்கும். ஆசுவாசப்படுத்திகுங்க, வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!

சரி, நேற்றைக்கு நீர்நிலையப் பாக்குறோம் பேர்வழின்னு, பாதிக்கடல்தான் தாண்டினோம். வாங்க, மிச்ச சொச்சத்தையும் பாத்துப்புடலாம்.


  • தளிக்குளம் (tank sorrounding a temple): கோவிலின் நாற்புறமும் சூழ்ந்த அகழி போன்றதொரு நீர்நிலை

  • தாங்கல் (Irrigationtank): தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏரியின் மறு பெயர்

  • திருக்குளம் (Temple tank): ’புட்கரணி’ எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். கோவிலுக்கு அணித்தாகிய குளம்.

  • தெப்பக்குளம் (Temple tank along with parapet walls): மக்கள் காண்பதற்கேற்ப உள்ள கோயிற்குளம்.

  • தொடுகிணறு (Digwell): ஆற்றின் ஊடகத் தோண்டிய கிணறு

  • நடைகேணி (Large well with steps): நடந்து சென்று தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு

  • பிள்ளைக்கிணறு (Well in middle of lake): குளம், ஏரி போன்றவற்றின் உள்ளமைந்த கிணறு

  • பொங்குகிணறு (Well with bubbling spring): கொப்புளித்து ஊற்றெடுக்கும் கிணறு

  • பொய்கை (Nature Lake): தாமரை முதலிய மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை

  • மடு (Deep place in a river): ஆற்றினிடையே உள்ள ஏதமான ஆழ் பகுதி

  • மடை(Small sluice with single ventway): ஒரு கண்ணுடைய சிறுமதகு

  • மதகு (Slice with many ventways): அடைப்புத் திறப்பு கொண்ட பல கண்களாய் அமைந்த மடை

  • மறுகால்(Surplus water channel): மிகைநீர் கழிக்கக் கூடிய கால்வாய்

  • வலயம்(Round tank): வட்டமாய் அமைந்த குளம்

  • வாய்க்கால் (Small water course): ஏரியிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறு கால்

  • வாவி (Stream): ஆற்று, ஊற்று நீர் வழிந்தோடு நிலை, நீரோடி

  • புனற்குளம் (Tank of rain water): அகத்தில், மழைநீரால் நிரம்பியுள்ள நீர்நிலை

  • பூட்டைக்கிணறு(Well with water lift): கம(வ/ப)லை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

இது போக, நீர்நிலையைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள்: அருநிலை, அலந்தை, இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா, குழி, கொண்டம், பள்ளம், கோட்டகம், சரசு, சலதரம், சலாசயம், சித்தேரி, சுண்டை, சூழி, தட்டம், தாங்கல், பயம்பு, வாரி, ஓருமம். இந்த சொற்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பனவாதலால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை மக்காள்.

24 comments:

  1. தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றி

    ReplyDelete
  2. கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.///

    ரொம்ப நல்லவரா இருக்காரே

    ReplyDelete
  3. எங்க இருந்துய்யா இந்த தகவல் எல்லாம் பிடிப்பீங்க.....வயசாயிடுச்சுல்ல...முடியலீல்ல

    ReplyDelete
  4. இது எழுதி முடிக்கிறதுக்குள்ள எத்தனை போத்தல் மினரல் வாட்டர் சாப்பிட்டீங்க. அவ்வ்வ். இந்த பழசுங்க இப்படி வக வகயா அனுபவிச்சி நம்மளுக்கு வைக்காம போய்ட்டாங்க. நம்ம பொழப்பு பிஸ்லெரி(டூப்ளிகேட்), பிஸ்லெரி(அசல்), சிறுவாணி, ஓயாசிஸ், நெக்டர்(போத்தல் 40ரூ) இப்படில்லா போகுது. தமிழிஷ் ஓட்டு போட விடுதில்ல. விடுறப்ப போடுறோம்.

    ReplyDelete
  5. தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...

    ReplyDelete
  6. வாக்களிச்சாச்சி.

    ReplyDelete
  7. ரொம்ப அறிவாளிங்கண்ணா நீங்க
    என்ன ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க
    சூப்பர் நீங்க.

    நிறைய வார்த்தைகள் இப்போதான் தெரிந்து கொண்டேன்.

    நன்றி அண்ணா !!

    சரி கொசுவுக்கு எத்தனை பல்லு :))

    ReplyDelete
  8. இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இடுகை தள்ளி நான் 20 பல்லுன்னு சொன்னேன். எல்லாம் படிச்சிட்டு போய்ட்டாங்க. யாருமே கேக்கலைன்னு லொள்ளு பண்ணுவாங்க. தருமி நாம இருக்கோம்ல. கேக்க தெரியும். ஆமாம். கொசு ரத்தம் குடிக்கறது தானே. அதேன்னாத்த கடிச்சி தின்ன போகுதுன்னு பல்லு?

    ReplyDelete
  9. //ஆ.ஞானசேகரன் said...
    தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றி
    //

    வந்து போங்க, நிறைய சொல்லுக சொல்லாமக் கிடைக்கும்....இஃகிஃகி!

    ReplyDelete
  10. // பாலா... said...
    இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இடுகை தள்ளி நான் 20 பல்லுன்னு சொன்னேன். எல்லாம் படிச்சிட்டு போய்ட்டாங்க. யாருமே கேக்கலைன்னு லொள்ளு பண்ணுவாங்க. தருமி நாம இருக்கோம்ல. கேக்க தெரியும். ஆமாம். கொசு ரத்தம் குடிக்கறது தானே. அதேன்னாத்த கடிச்சி தின்ன போகுதுன்னு பல்லு?
    //

    47 பல்லுன்னு மாத்திட்டேன்... எதுக்கு இருக்குன்னு கேட்டா, நான் என்னா சொல்லுறது?அவ்வ்வ்.....

    ReplyDelete
  11. //
    இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா, குழி, கொண்டம், பள்ளம், கோட்டகம், சரசு, சலதரம், சலாசயம், சித்தேரி, சுண்டை, சூழி, தட்டம், தாங்கல், பயம்பு, வாரி, ஓருமம்
    //

    புதுசா நிறைய கிடச்சுதுங்க! ஆனா வருத்தம் இன்னும் அழகான சொற்களை அறிமுகப்ப‌டுத்தி விட்டு தெளிவாக்காம இடுக்கையை நிறைவு செஞ்சுட்டீங்களே! என்ன நியாயம்? ரொம்ப நல்லாயிருந்துச்சு!

    ReplyDelete
  12. //வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!//
    இப்ப‌டி சொல்லிட்டு இவ‌ங்க‌ வெந்திப்பாய்ட்டாங்க‌ போல‌. நான் விளாட்டுக்கு சொன்னேன்..அவ்வ்வ்:((

    ReplyDelete
  13. //கலகலப்ரியா said...
    தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...
    //

    வாங்க, இது கொஞ்சம், கொஞ்சம் அல்ல, நெம்பவே அதிகம். கத்துகிட்டு இருக்கோம், அதை மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுறோம்.... அவ்வளவுதான்!

    ReplyDelete
  14. அதைத்தானே நானும் சொன்னேன்.. (உங்கள தமிழ் மேதாவின்னு சொல்ல மாட்டோம்..).. என்னமோ ஆஹா ஓஹோன்னு பாராட்டின மாதிரி அவையடக்கம்..

    ReplyDelete
  15. //என்னமோ ஆஹா ஓஹோன்னு பாராட்டின மாதிரி அவையடக்கம்..//

    அட சாமிகளா, இப்பிடி வைகோ மாதிரி ஆக்கிப்புட்டீங்களே? அவ்வ்வ்....

    ReplyDelete
  16. //நிலாவும் அம்மாவும் said...
    கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.///

    ரொம்ப நல்லவரா இருக்காரே
    //

    வாங்க, நன்றிங்க!!

    ReplyDelete
  17. நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றி

    ReplyDelete
  18. அப்புறம், அமெரிக்காவில் கொசு இருக்கா?

    ReplyDelete
  19. ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவாரமாதிரி தெரிதே .உண்மைலே நீங்க சொந்தமா எழுதியதா?

    ReplyDelete
  20. //malar said...
    ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவாரமாதிரி தெரிதே .உண்மைலே நீங்க சொந்தமா எழுதியதா?
    //

    //கலகலப்ரியா said...
    தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...
    //

    வாங்க, இது கொஞ்சம், கொஞ்சம் அல்ல, நெம்பவே அதிகம். கத்துகிட்டு இருக்கோம், அதை மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுறோம்.... அவ்வளவுதான்!

    ReplyDelete
  21. நல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்கு

    ReplyDelete
  22. அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்கு"னு வருமா இல்ல "கொசுவுக்கு"ன்னு வருமா?

    ReplyDelete
  23. //SUREஷ் said...
    நல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்கு
    //

    நன்றிங்க!

    ReplyDelete
  24. //Mahesh said...
    அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்கு"னு வருமா இல்ல "கொசுவுக்கு"ன்னு வருமா?
    //

    கொசுக்குதான் சரிங்க அண்ணே!

    பசிக்கு பொரி! கொசுக்கு மருந்து!!

    கொசுவு...அது கெராமத்துல மலணு, கவுறு, மருதை...அந்த வகையறா! இஃகிஃகி!!

    ReplyDelete