8/11/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-2

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, இரண்டாவது நாள் பற்றிய அனுபவக்கோவை இது.


ஞாயிறுஅன்று எழுஞாயிறு கண்டிட அய்யா
சண்முகநாதன் முன்னிலை வகிக்க ஆடவர்
அணி அணிவகுத்துச் சென்றது கடலின்தொடு
வானம் நோக்கி கிழக்கு வெளுத்த நேரத்தில்!
என்னே ஒரு காட்சி, சிறிதாய் ஒரு மின்னல்
கீற்று போல் இளஞ்ச் சிவப்பில் தகிக்க
ஏறு முகங்கண்ட கதிரவன் முழு வட்ட
முகங்காண, பரவசம் கண்ட கணத்தில்!!

காலைப் பலகாரம் அன்பு அருமையுடனும்,
ஆடவர் ஆடினர் நல்ல துடுப்பு ஆட்டம்;இளம்படை
கிளம்ப குழுமம் பிரவேசித்தது பிஞ்சுமணல்
நீலக்கடல் கரைக்கு, ஆர்ப்பரித்த அலைகள் அசந்து
கண்டது குழுமத்தின் 'போ போ' விளையாட்டை!
விளையாட்டில் உற்சாக வியர்வை சிந்திய
குழுமப்பெண்டிர் கைகோர்த்து எள்ளி நகை
கொண்டனர் துள்ளி வரும் அலைகளோடு!!

கொண்ட களிப்பின் களைப்புக்கு உக்கிரவேட்கையுடன்
அருமை உணவும் ஆழ்ந்த நித்திரையும்! தென்றல்
தவழ்ந்துவர முகில்கள் ஊர்கோலமிட பரந்த மணல்
பரப்பில் குழுமத்தின் பிரதிநிதிகளாய் மூன்று பட்டங்கள்
மேலே பவனிவர அண்ணாந்து பார்த்து பெருமிதம்
கொண்டார், பிள்ளைகளும் பெற்றவர்களும்!!
மாலைக் கருக்கலில் மணல் வீடு கட்டிய மகிழ்வுடன்
ஒருங்கே அமர்ந்து இனிமையாய் பாட்டுக்கள்!!!

கடல்தாயுடன் உறவாடியது காணுமென, நிலாமகள்
சிணுங்க திரும்பியது குழுமம் அழகிய அந்த
குடிலுக்கே! நல்ல சுவையாய் இராச் சாப்பாடு, பின்
சுகமாய் நல்ல கனிவுடன் பல்சுவை கதைப்பு
பெரிய வலு கொண்ட மேசையில் இருந்து!!
பின்னிரவில் ஆனந்தக் களிப்பின் நினைவுகளோடு
நித்திரை கொள்ளப் போனதுகுழுமம்; ஆக இந்த
இரண்டாவது நாளும் உல்லாசத் துள்ளல்களாய்!!!

2 comments:

  1. அழகான வரிகள் வாழ்த்துக்கள்
    வாசித்து வாசித்து இன்பம் கொண்டேன்
    anpudan
    rahini

    ReplyDelete
  2. // rahini said...
    அழகான வரிகள். வாழ்த்துக்கள்!
    வாசித்து வாசித்து இன்பம் கொண்டேன்
    anpudan
    rahini
    //
    தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி! வருகைக்கும் நன்றி!!

    ReplyDelete