9/19/2010

அரசி நகரத் தமிழர் எழுச்சி!!!

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒன்றான வட கரோலைனாவானது, அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, அமெரிக்கத் தலைநகருக்குத் தெற்கில் உள்ள ஒரு கரையோர மாகாணம். இம்மாகாணத்தின் பெரிய நகரமான சார்லட், அரசியார் சார்லட் அவர்களது பெயரைக் கொண்டுள்ளமையால் அரசி நகரம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக, சார்லட்டின் மக்கள் தொகை வெகுவாகப் பெருகிக் கொண்டே வருகிறது. சார்லட் பெருநகரத்தைப் பொறுத்த மட்டிலும், மக்கள் தொகையானது கிட்டத்தட்ட பதினேழு இலட்சம் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு ஒப்பிடுகையில், சுமார் 32 விழுக்காடுகள் மக்கள் தொகை பெருகி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

இந்நகரின் மக்கள் தொகை ஏற்றத்துக்கு என்ன காரணம்? உள்ளூர்ப் பொருளாதாரமே! நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக நியூயார்க் மற்றும் மிச்சிகன் மாகாண மக்கள் வெகுவாக இந்நகருக்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். இடம் பெயர்ந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

அரசி நகரின் பொருளாதார ஏற்றமானது, வெகுவாகத் தமிழர்களையும் தன்பால் ஈர்த்து இருக்கிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. வந்த இடத்தில், இத்தமிழர்கள் சமூகத்திற்குத் தன்னாலான பணிகளைச் செய்து, தங்கள் வாழ்க்கையையும் மேன்மைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும்.

பெரும்பாலான தமிழர்கள், தெற்கு சார்லட்டிலும் பல்கலைக் கழகத்தை ஒட்டியுள்ள வட சார்லட்டிலுமே வசிக்கிறார்கள். ஆங்காங்கே, குழுக்களாக இருந்து தமிழ் வகுப்புகளை நடத்தி வந்த தமிழர்கள், சங்கமமைத்து ஒருங்கிணைந்து நடத்திய எழுச்சி விழாதான், இவ்வருடத்திய சார்லட் நகரத் தமிழர் கோடைவிழா.

விழா ஏற்பாடுகளை, சார்லட் நகரத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். சார்லட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ரீடி கிரீக் பூங்காவின் குடில் ஒன்றில் தமிழர் கூட்டம் காலை பத்து மணியிலிருந்தே கூடத் துவங்கி, மணி பதினொரு மணிக்கெல்லாம் வாகன நிறுத்துமிடம் நிறைந்து, குடிலும் தமிழர்களால் நிரம்பியது.

நிகழ்ச்சி நடக்கவிருந்த வாயிலிலேயே சார்லட் நகரத் தமிழ்ச் சங்கத்தின் பதாகை அனைவரையும் வரவேற்கும்படியாக அமைந்திருந்தது. அருகில், விழா வரவேற்பாளர்கள் இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்றபடி இருந்தனர். அன்பர்கள் இதயச்சந்திரன், சுகுமார் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையையும் கவனித்தபடி இருந்தனர்.

விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, தமிழ்ச் சிறார்களுக்கான விளையாட்டுகள் நடைபெற்றன. கூடிக் களித்த சிறார்கள் இங்குமங்குமாய்ப் பூங்காவில் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். காலை பதினொன்று முப்பதுக்கு, சிறப்பு விருந்தினர்களாக தென் கரோலைனா மாகாணம் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் பூங்காவிற்கு வருகை அளித்தனர். அவர்களை, சங்கத் தலைவர் செந்தாமரை பிரபாகரன் மற்றும் பதிவர் பழமைபேசி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அருகண்மைப் புல்வெளிக்கு, பறையொலியுடன் கூடிய தமிழுணர்வோடு மக்கள் நடந்து சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையொட்டி, சிலம்பாட்டம் மற்றும் பறையாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த பனைநிலம் தமிழ்ச் சங்கத்தினரை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் உள்ளூர் ஆர்வலன் என்கிற முறையில் பதிவர் பழமைபேசி சிறப்பித்து மகிழ்ந்தார்.

புலம்பெயர்ந்த மண்ணில், தமிழனின் உணர்வுமிகு கலையான சிலம்பாட்டம் மற்றும் பறையொலியை நுகர்ந்து மகிழ்ந்த தமிழர் கூட்டம், குடிலுக்கு ஆவலோடு திரும்பினர். திரும்பியதும், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் அற்புதமான திருக்குறள் ஓது நிகழ்வு மற்றும், நாம் தமிழர் எனும் உணர்வுப் பெருமுழக்கம் ஆகியன இடம் பெற்றன.

தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவரும், பேரவையின் 2011ஆம் ஆண்டுக்கான தமிழ்ர் விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் அதன் பணி முதலானவற்றைக் குற்ப்பிட்டுப் பேசிய அவர், சார்லட் நகர தமிழ்ச் சங்கம் மென்மேலும் தழைத்தோங்க வேண்டும் என்றும், கூடி இருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு பெரிதும் அகமகிழ்வதாகவும் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அத்தோடு, அருகில் இருக்கும் மற்றொரு கரையோர நகரமான சார்ல்சுடனில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தமிழர் விழாவுக்கான அழைப்பையும் விடுத்து, வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் காலாண்டு இதழாக அருவி எனும் இதழ் தமிழரிடத்தில் பாயப் போவதையும், தமிழார்வலர்கள் மென்மேலும் முன் வந்து பேரவைக்கும் தொடர்ந்து பங்களிப்புச் செய்ய வேண்டுமென்கிற தன் பணிவான கருத்தைச் சொல்லி மகிழ்வதாகக் குறிப்பிட்டார் பதிவர் பழமைபேசி.

மதிய உணவுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழர்களின் அளவளாவலும் அரவணைப்பும் கூடிய விருந்தோம்பலும், உணவுப் பரிமாறலும் செவ்வனே நடந்து முடிந்தது. இதமான தட்ப வெப்பத்தில், மரங்களின் கனிதரு நிழலில், மெதுமெது புல்வெளியில் ஆங்காங்கே தமிழர் கூட்டம் கதைத்து மகிழ்ந்த காட்சி, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.

மதியம் ஒரு மணிக்குப் பிறகு, சார்லட் நகரில் பல ஆண்டு காலமாக வாழும் லலிதா ஜெயராம் அவர்கள், கடந்த காலங்களின் தமிழர் நினைவுகளை அசை போட்டு, இன்று புத்துணர்வோடும் எழுச்சியோடும் கூடிக் களிக்கும் சார்லட் நகர தமிழ்ச் சங்கம் மற்றும் நிர்வாகிகளைச் சிலாகித்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, சார்லட் நகர தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், நீதிக்கட்சிகளின் நிறுவனர்களில் ஒருவரான செட்டிகுளம் செ. தெய்வநாயகம் அவர்களின் கொட்பேர்த்தி செந்தாமரை பிரபாகர் அவர்கள் தலைவர் உரையாற்றினார். தமிழ்ச் சங்கமானது, எவ்விதச் சார்புமற்றுத் தமிழர்களின் பாசறையாகத் திகழ வேண்டும் எனவும், அமெரிக்கா தழுவிய தமிழ் நீரோட்டத்தில் பங்கு கொண்டு நமக்கு நாமே பணி செய்யும் களமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துப் பேசினார். அத்தோடு, உடன் பணியாற்றும் அத்துனை பேருக்கும் நன்றிகளை உரித்தாக்கித் தலைமை உரைக்கு அழகு சேர்த்தார்.

சார்லட் நகரத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் எழிலரசன் அவர்கள், பல ஆண்டு காலமாக தமிழ்க் கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர். சார்லட்டில் அமையவுள்ள தமிழ்ப் பள்ளி மற்றும் அதன் தேவையை வலியுறுத்தி, மொழியின் அத்தியாவசியத்தை உணர்த்திப் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து பேச வந்த, பொருளாளர் இதயச்சந்திரன் அவர்கள் மிக நேர்த்தியாக சங்கத்திற்கான பங்களிப்பின் அவசியம் மற்றும் எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, வந்திருந்தோரிடம் பங்களிப்பைக் கனிவாக நல்கினார்.

தமிழறிஞர் அய்யா இராம.கி அவர்களின் இளவல், சுறுசுறுப்புக்கே சுறுசுறுப்பூட்டும் அன்பர், செயலாளர் இலக்குவன் அவர்கள், தமிழ்ச் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்வான, தமிழர் திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் யாவும் தமிழையும் தமிழ் பண்பாடு சார்ந்தும் இருக்கும்படியாகச் செய்து நடத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, சக தமிழர்களின் பங்களிப்பை நாடி உங்களிடம் பேசுகிறேன் எனக் குறிப்பிட்டுப் பேசினார் சங்கத்தின் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மீனா அவர்கள்.

சங்க நிர்வாகிகளின் உரையை அடுத்து, சைகைப் போட்டி, பிட்டுக்குப் பாட்டு, மற்றும் இதர விளையாட்டுகள் பூங்காவில் ஆங்காங்கே நடைபெற்றபடி இருந்தது. சார்லட் நகரத் தமிழர்களின் கோடைக் கொண்டாட்டம் சிறப்பாக மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

இறுதியில், நிகழ்ச்சிக்காக உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களும் அறுவடை முடிந்து நெற்குதிர் கண்ட உழவர்களாய் அகமகிழ்ந்து, அமரலானார்கள். தமிழ்க் கூட்டம் இல்லங்களுக்குத் திரும்பி இருந்த நேரமது. நகரந்தோறும், நாடு தோறும் தமிழ் வாழும்! தமிழ் தழைக்கும் எனும் ஊக்கம், இதை எழுதும் தமிழனுக்கு!!



தமிழால் இணைந்தோம்!

10 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி அண்ணா...

பவள சங்கரி said...

நல்ல பகிர்வுங்க. வாழ்த்துக்கள்.

Panainilam said...

சிறந்தவொரு வாய்ப்பினை நல்கி, வரவேற்று, அன்பாய் உபசரித்து, கலைஞர்களைப் போற்றி, பரிசில்களை வழங்கி, பெருமைகொள்ளுமாறு இன்மொழிகளைக் கூறி விருந்தோம்பலுக்கு இலக்கணமாய் நின்ற அரசி நகரத்து நண்பர்களுக்குப் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள் பல! தமிழ்போல் என்றும் வாழி நும் சங்கம்! வாழி நம் உறவு!
அன்புடன்
பனையேறி
(பனைநிலத்தின் சார்பில்)

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் தம்பி

ஆறாம்பூதம் said...

எங்கிருந்தாலும்,

மங்காத தமிழே நம் வாழ்வும் வளமும் .

வாழ்த்துகள் பழமையாரே.

ILA (a) இளா said...

கடமைக்கு வாக்களிச்சாச்சு.. அப்புறம் பதிவு எப்போ எழுதுவீங்க. இல்லை இப்படியாப்பட்ட விழா அறிவிப்பு மட்டும்தான் பதிவா வருமா? (கடுப்புடன்)

பழமைபேசி said...

//பதிவு எப்போ எழுதுவீங்க. இல்லை இப்படியாப்பட்ட விழா அறிவிப்பு மட்டும்தான் பதிவா வருமா? (கடுப்புடன்)
//

ஆகா.... நான் எப்ப எழுதுவேன்... படிக்கலாம்னு இருக்கீங்ளா? மனசெல்லாம் நெறஞ்சு போச்சுங்க....

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!!

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க.தமிழ் விழா பகிர்வுக்கு நன்றிங்க.வாழ்த்துக்கும் நன்றிங்க.

BaMa said...

நாங்க வந்தோம்ணா!!? நல்லா யோசிங்க! கண்டிப்பா சார்லஸ்டன் வாங்க, மறுபடியும் சந்திப்போம் :-)) நீங்க இல்லாம FeTNAவா.....